New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 13
கரை சேர துடிக்கும் அலையாகிறேன்.
என் காதல் கரை
நீ என்று அறிந்ததிலிருந்து.
மறுநாள் அவள் வந்த போது அந்த இடம் தரைமட்டமாக இருந்தது. மெத்தை தலையணை அங்கிருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து கிடந்தது. அவன் தனது கையாலேயே கடப்பாரை கொண்டு இடித்திருப்பான் போல இப்போது கூட இடித்து கொண்டிருந்தான். “என்ன ஆச்சு” அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் அதே செயலை தொடர்ந்தான் வாசு.
“உங்களை தான் கேட்கிறேன், என்ன இதெல்லாம் எதுக்காக இப்படி பண்றீங்க”
“என்னை எதுவும் செய்ய முடியலையே அதான் இதையாவது” எங்கோ வெறித்த பார்வையுடன் அவன் சொல்ல, அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
“இது வெறும் கட்டிடம் தான், நீங்க நடந்துகிட்டதுக்கு..” அதற்கு மேல் சொல்ல முடியாதவளாக ஒரு நிமிடம் நிறுத்தியவள் “எப்படியோ போங்க” என உள்ளே சென்றாள். மீண்டும் இடிக்கும் சத்தம் மொத்தமாய் உடைந்திருந்த இடத்தை வெறி கொண்டவன் போல தூளாக்கி கொண்டு இருந்தான் அவன். என்ன இதெல்லாம் மீண்டும் வெளியே வந்து அவனிடம் நின்றாள்.
அவன் திரும்பி பார்க்க, “எனக்கு நீங்க செய்யறது எல்லாமே பைத்தியக்காரத்தனமா தெரியுது. இதை இடிச்சுட்டா எல்லாம் சரியாகிடுமா சொல்லுங்க” என கேட்டாள்.
இல்லை என இடவலமாக தலையாட்டினான் அவன், “அப்பறம் அப்பறம் ஏன் இதெல்லாம் செய்யறீங்க”
“ஆமா தப்பு செஞ்சது நான் தானே, இந்த செங்கல் சிமெண்ட் கட்டிடத்தை இடிச்சுட்டா எப்படி சரியாகும். இந்த கையால யார் யாரையோ தொட்டு” அவன் கையை உயர்த்தி பார்த்தவன் ஆவேசம் வந்தவனாக கடப்பாறையின் கூர் முனையில் கையை குத்த போக, பதறி போய் ஓடி வந்து அவன் கையை பற்றிக்கொண்டாள் தேவி.
“என்ன பண்றீங்க நீங்க அறிவில்லையா உங்களுக்கு” ஆத்திரமும் அழுகையுமாக ஆர்ப்பரித்தாள்.
“எனக்கு தெரியலைம்மா, எனக்கு என் மேலேயே வெறுப்பு அதை எப்படி சரி பண்றதுன்னு தெரியலை. அதான் இப்படி ஏதேதோ செய்யறேன். உன்னோட குணத்துக்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன்னு மூளைக்கு தெரியுது. ஆனா மனசு உன்னை மட்டும் தானே சுத்தி சுத்தி வருது. நீ இல்லாம நீ கிடைக்க மாட்டியோன்னு கொஞ்சம் சந்தேகம் வந்தா கூட என்னை நானே ஏதாவது செஞ்சு உனக்கு ஏத்தவனா மாத்த முயற்ச்சி பண்றேன். ஆனா எப்படின்னு தான் தெரியலை” முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு இயலைமையோடு கூறினான்.
இந்நேரம் அவள் மட்டும் இல்லை என்றால் என்ன நடந்திருக்குமோ. அந்த கடப்பாறையின் கூர் தன்மைக்கும் அவன் கையை ஓங்கிய வேகத்திற்கும் நினைக்கவே பயமாக இருந்தது. என்ன இவன் எப்படி கூறினாலும் புரிந்து கொள்ள மறுக்கிறானே என்று கோபம் தான் வந்தது அவளுக்கு. ம்ச் சலித்து கொண்டவள், “இங்கே பாருங்க உங்களை விரும்ப ஆரம்பிச்சுட்டா இதெல்லாம் ஒரு பொருட்டாவே தெரியாது. மனசு மட்டும் தான் முக்கியமா தெரியும், அதுக்கான அவகாசம் கொடுக்காம இப்படி பண்ணா எப்படி. எப்போ எது நடக்கும்னு தெரியாம மனசு படபடக்குது. இப்படி அவசரப்பட்டு நீங்க ஏதாவது செஞ்சிடுவீங்களோன்னு எனக்கு பயமா இருக்கு. இந்த பயத்தோடவே என்னை வச்சிருக்க நினைக்கறீங்களா. நான் நிம்மதியா இருக்கவே கூடாதா. நீங்க இப்படி ஏதாவது பண்ணிக்கிட்டே இருந்தா என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்” அவள் படபடத்து பேசிக்கொண்டே போக அவன் இமைக்காமல் அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான்.
“பிளீஸ் தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க, எனக்காக. செஞ்சது தப்புன்னு உணர்ந்திட்டாலே பாதி தப்பு சரியாகிடும். நீங்க மனசார அதை உணர்ந்தாலே போதும். யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை. தவிர குற்றவுணர்ச்சி ஒரு மனுஷனை நிம்மதியா வாழ விடாது. அதை வளரத்துக்காதீங்க, அது கொஞ்சம் கொஞ்சமா உங்களை அழிச்சிடும். நீங்க உங்களோட மனசாட்சிக்கு நேர்மையா இருந்தா போதும். மத்தவங்க யாருக்கும்”.. அவள் சொல்லிக்கொண்டே போக ஒற்றை விரலால் அவள் நாடி தொட்டவன் “நீ என்னை நம்புறியா தேவா” என்று கேட்டான்.
“என்னை விடுங்க உங்க மனசுக்கு தெரியும் தானே நீங்க மாறிட்டீங்கன்னு” அவள் தொடர, அவள் பேச்சை இடைமறித்தவன் “ம்ச் வேண்டாம் நீ என்னை நம்புறியா சொல்லும்மா” என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து கொண்டே.
அவன் முகத்தை தவிர்த்து வேறு எங்கோ பார்த்தவள், கீழுதட்டை பற்களால் அழுந்த பற்றிகொண்டு ஆமாம் என தலையசைத்தாள்.
“அது போதும்மா” என்றான் அவன். பக்கவாட்டில் அவனைத்தான் பார்த்தாள். அவன் கண்கள் அத்தனை பிரகாசமாய் மின்னியது கடப்பாறையை ஓரமாக வீசினான். அப்போது தான் அவன் கையை பார்த்தாள். சிவந்து ஆங்காங்கே கொப்புளங்கள் வந்திருந்தது.
அய்யோ என பதறியவள் அவன் கையை பற்றி அலுவல் அறைக்கு இழுத்து கொண்டு வந்தாள். அவனை இருக்கையில் அமர்த்தி ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்து மருந்திட்டாள். அவன் அவள் முகத்தை தான் பார்த்து கொண்டிருந்தான்.
வாய் எதையோ முணுமுணுவென பேசிக்கொண்டிருக்க கர்ம சிரத்தையாக அவன் கைக்கு மருந்திட்டு கொண்டிருந்தாள். கண்கள் சுருக்கி காதை கூர்மையாக்கி கவனித்தான், அவனைத்தான் திட்டி கொண்டிருக்கிறாள் போல வலியின் வீரியம் கூட உணராமல் அவள் முகத்தை ஏதோ காண கிடைக்காத பொக்கிஷம் போல பார்த்து கொண்டிருந்தான் அவன்.
மருந்திட்டு முடித்தவள், அவனை பார்க்க கண்களில் காதல் பொங்க பார்த்து கொண்டிருந்தவனை முறைத்தாள். “எப்போதில் இருந்து இந்த வேலையை பார்க்கறீங்க”
“உன்னை பார்த்த முதல் நாள்ல இருந்து” அவள் எதை கேட்டாள் இவன் எதை சொல்கிறான்.
“ம்ச், இங்கே பாருங்க”
அவன் பெயரை சொல்லி அழைக்காததை கொண்டு “வாசு” அவன் திருத்த, மலரிதழ் போல மடங்கி இருந்த இமை குடைகளை மூடி திறந்தவள், “வாசு நான் ஒண்ணும் அதிசயமானவ இல்லை, நீங்க ஏதோ என்னை தேவலோக கன்னி மாதிரி பார்த்து வைக்க. சரி தவறு ரெண்டும் கலந்த சாதாரண பொண்ணு தான். எல்லா மனுஷங்ககிட்ட இருக்கறது போல என்கிட்டயும் நிறை குறை இருக்கு. அதனால இந்த அளவுக்கு நீங்க என்னை”.. எப்படி சொல்வது என தெரியாமல் அவள் தடுமாற, “நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம் தான் தேவா” என்றான் அவன்.
“அப்படி என்கிட்ட எதுவுமே இல்லை வாசு. நான் ஒரு சாதரணமானவ அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது”.
“நல்லா புரிஞ்சதால தான் சொல்றேன், நீ என்னோட சோல் மேட்” என்றான்.
அவள் புருவம் சுருக்கி அவனை பார்க்க, “டிவின் எனர்ஜி பத்தி கேள்வி பட்டிருக்கியா” என்றான் அவள் மருந்திட்ட கரத்தை பார்த்து கொண்டே.
அவள் இல்லை என இடவலமாக தலையசைக்க, “ஒரு நெருப்போட இரு வேறு மூலக்கூறு போலத்தான் அது. ரெண்டும் தனி தனியா இருந்தா இருக்கற பவரை விட சேர்ந்து இருக்கும்போது கிடைக்கிற எனர்ஜி இட்ஸ் அன்பிலீவபிள்” என்றான்.
“அப்படித்தான் உன்னை பார்த்த நாள்ல இருந்து நான் பீல் பண்றேன். இத்தனை நாள் ஏன் எதுக்காக வாழறேன்னு காரணகாரியம் இல்லாம வாழ்ந்த நான் உன்னை பார்த்ததுக்கு பிறகு தான் தெரிஞ்சது. உனக்காகத்தான் நான் பிறந்ததேன்னு” என்றான் பிசிரில்லாத குரலில்.
“நாம எங்கே வேணும்னா எப்படி வேணும்னா இருந்திருக்கலாம் ஆனா காலம் நம்மை சேர்த்து வைக்க காத்திட்டு இருந்திருக்கு. இதுக்கு முன்னாடி நாம வாழ்ந்தது எல்லாம் ஒரு வாழ்க்கையே இல்லை. இனி தான் நாம வாழ போறோம்” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, “நீங்க என்ன படிச்சிருக்கீங்க” என கேட்டாள்.
“எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்”
சட்டென ஓரடி விலகி நின்றவள் அவனை மேலிருந்து கீழாக பார்த்தாள். இவனை பார்த்தால் படித்தவன் போலவா இருக்கிறான். இன்றாவது பரவாயில்லை ஷார்ட்ஸ் பனியன் தான் ஆனால் வேலை நாட்களில் சிமெண்ட் பூசிய ஒரு லுங்கியும், கலைந்த தலையுமாக இருப்பான். அதற்காக பார்க்க நன்றாக இருக்க மாட்டான் என்று அர்த்தம் இல்லை. சுருள் சுருளாக கேசம், திடமான உடல், திருத்தமான முகம், முறுக்கு மீசை, வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரம் எல்லாம் பளிச்சென்று தான் இருப்பான். மொத்ததில் சொல்ல போனால் அக்மார்க் நாட்டுகட்டை போல ஒரு தோற்றம்தான். ஆனால் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்ஸூடன் இவனை தொடர்பு படுத்தி பார்க்கவே முடியவில்லை அவளால்.
“எம்எஸ்சி படிச்சுட்டு இந்த வேலையை ஏன்” பாதியோடு அவள் நிறுத்தி விட, லேசாக இதழ் பிரித்து புன்னகைத்தவன் “அந்த எம்எஸ்சி படிப்பை தந்ததே இந்த வேலை தானே. இதை பிடிச்சு தான் செய்யறேன்” என்றான் தெளிவான குரலில்.
என்னதான் படித்தாலும் கூட பிடித்த வேலையை செய்கிறேன் என்று கூறும் அவன் நேர்மை அவளுக்கு பிடித்திருந்தது. எத்தனை பேர் பணத்திற்காக கிடைத்த வேலையை செய்கிறார்கள். ஆனால் இவன் பிடித்த வேலையை செய்கிறான். கேட்கவே நன்றாக இருந்தது.
“அப்படி என்ன இந்த வேலை உங்களுக்கு பிடிச்சிருக்கு”
“சோறு போட்டு படிப்பு தந்த வேலையாச்சே மா” என்றான் கனிவாக.
ம்ம் அவள் யோசனையாக இருக்க, “உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு ஏதாவது ஒயிட் காலர் ஜாப்க்கு வேணும்னா போறேன்” என்றான் குறும்டன் அவசரமாக.
நான் சொன்னேனா என்பது போல அவள் முறைத்து வைக்க, அவன் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்.
எத்தனை நேரம் தான் இப்படி குறுகுறுவென பார்ப்பான், அவன் கவனத்தை மாற்றும் பொருட்டு ஒரு கவரை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அது ஒரு லீகல் நோட்டீஸ், வெளியே மட்டுமே பார்த்து இருந்தாள். அதை வாங்கி பார்த்தவன் சலிப்பாக மேசை மீதே போட்டான்.
“என்ன ஏதுன்னு பார்க்கவே இல்லை”
“என்ன இருக்கும்னு தான் தெரியுமே”
“என்ன”
“இந்த இடத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க”
“யாரு”
“எங்கப்பாவோட பொண்டாட்டி”
“உங்கம்மாவா” விழி விரித்தாள் அவள்.
இல்லை என்றான் தலையசைத்து, “புரியலை உங்கப்பாவோட வொய்ஃப்ன்னா உங்க சித்தி மாதிரி யாராவது”... அவள் இழுக்க, "இல்லை இல்லை, அவங்க அவருக்கு முதல் பொண்டாட்டி தான் ஆனா எனக்கு தான் அம்மா கிடையாது” என்றான்.
“சுத்தமா புரியலை ஏன் இப்படி குழப்பறீங்கா”
“இங்கே உட்காரு” என அவளை எதிரே அமர சொன்னான்.
கதை கேட்கும் ஆர்வத்தில் அவளும் அமர்ந்து கொண்டாள். அவன் கூற துவங்கினான்.
இந்த இடத்தோட சொந்தகாரர் முத்து வேல், அவர் மனைவி மேனகா. ரெண்டு பேருக்கும் குழந்தை இல்லை அப்போ எங்கேயோ போகும்போது ரோட்டோரம் மூணு வயசு குழந்தையா நான் பசியில கிடந்திருக்கேன். பசியில நினைவு தப்பி மயங்கி கிடந்த என்னை பார்த்து முத்து வேல் அப்பா தான் தூக்கிட்டு வந்திருக்காரு. பிள்ளை இல்லாத அவங்களுக்கு பிள்ளையா என்னை வளர்த்து இருக்காங்க. நல்லா தான் வளர்த்தாங்க நான் ஒரு அநாதைன்னு எனக்கு தெரியவே தெரியாது அப்படி என்னை வளர்த்தாங்க. எனக்கு பத்து வயசு இருக்கும், அப்போ அப்பா பைக்ல போகும்போது ஒரு ஆக்சிடென்ட் இடுப்பு எலும்பு உடைஞ்சு போச்சு. எழுந்து நடமாட முடியாது படுக்கை தான் எல்லாமேன்னு ஆகிடுச்சு. ரொம்பவே உடைஞ்சு போய்ட்டாரு. அவங்களும் ரொம்பவே அழுதாங்க, அப்பாவால அவங்க கஷ்டத்தை தாங்கிக்க முடியலை. ஆனாலும் வேற வழி இல்லையே அப்படியே வாழ்க்கை போய்ட்டு இருந்தது.
கொஞ்சம் நாள்ல அவங்க நடவடிக்கைல நிறைய மாற்றம், அப்பாவை சரியா கவனிக்கறது இல்லை. என்னை கூட பார்த்துக்கறது இல்லை இப்படி இருந்தாங்க. அப்போ எல்லாம் நான் தான் அப்பாவுக்கு எல்லா உதவியும் செய்வேன். சின்ன பையன் தானே என்னால சிலதை செய்ய முடியாத போது அவங்ககிட்ட செய்ய சொல்வேன். அவங்க முகத்தை சுளிச்சுட்டு அலட்சியமா மறுத்துடுவாங்க. ஆனா ஒரு நாள் இங்கே கல்லு வாங்க வந்திருந்த ஒரு காண்ட்ராக்டர் கூட அவங்களை பார்த்தப்ப எனக்கு ஒண்ணுமே புரியலை. ஏன் இப்படி எதுக்காக யாரோ ஒருத்தர் கூட இருக்காங்க இப்படி எதுவுமே புரியலை. இதுக்கு முன்னாடி அப்பாவும் அவங்களும் ரொம்ப அன்யோன்யமா சந்தோஷமா பாசமா இருந்ததை பார்த்த எனக்கு இப்படி வேற ஒருத்தரோட அவங்களை பார்க்கவே முடியலை. அப்பாகிட்ட போய் என்னன்னு சொல்றதுன்னும் தெரியலை. இப்படியே மனசில வச்சிட்டு இருந்தேன்.