New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 12
எப்போது வந்தாலும்
உனக்காய் துடித்திருக்கும்
என் இதயம்.
சீக்கிரம் வந்துவிடு.
இல்லையெனில்,
இதயம் துடிப்பதை
நிறுத்தி விடப்போகிறது.
காலையில் அவள் வரும்போது எல்லாரும் அவனிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்று கொண்டிருந்தனர். இரண்டு மூன்று பைகள் சூட்கேஸ்களுடன் முகம் கொள்ளா புன்னகையோடு உற்சாகமாக அவர்கள் எல்லாரும் கிளம்புவதை பார்க்க சந்தோஷமாக இருந்தது அவளுக்கு. ஊர் விட்டு ஊர் வந்து உறவுகளை பிரிந்து வாழ்ந்தவர்கள். சம்பாதித்ததை எடுத்து கொண்டு மகிழ்வுடன் கூடு திரும்புகின்றனர், பார்க்க நன்றாகத்தான் இருந்தது.
பார்த்து கொண்டே இருந்தவள் அவர்களுக்கு கையசைத்து விடை கொடுத்து விட்டு திரும்பி பார்க்க, அந்த இடமே வெறிச்சோடி கிடந்தது. அதை பார்த்தவளுக்கு திக்கென்று ஆனது. எல்லாரும் சென்றுவிட்டால் இங்கே இத்தனை பெரிய இடத்தில் அவன் மட்டும் தனியே எப்படி இருப்பான். அவன் ஒன்றும் எல்லாருடனும் கலந்து பேசி சிரித்து மகிழும் ஆள் இல்லை தான். ஆனால் மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க ஏதாவது வேலை செய்தபடி அதை கவனித்து கொண்டே இருப்பான். சில நேரங்களில் அவர்களுக்குள் நடக்கும் கேலி கிண்டலுக்கு இதழ் விரியாமல் சிரித்திடுவான். ஏதேனும் காரசாரமான சம்பவம் நிகழ்ந்தால் அதை கவனித்து கொண்டே இருந்து விலக்கி விடுவான். இப்படி அவர்களோடு தொடர்பில்லாத போதும் அவனை சுற்றி நடப்பதை கவனித்து கொண்டே இருப்பவன், இனி இந்த கால இடைவெளியை எப்படி கடந்து வருவான். அதுவும் மாலை வரை மட்டுமே அவள் இருப்பாள் பிறகு அவளும் கூட சென்று விடுவாள். ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடத்தில் எப்படி அவனால் தனியாக இருக்க முடியும். மனதிற்குள் அனுதாப அலைகள் பொங்கி எழ ஏனோ கண்கள் தானாக அவனை நோக்கி சென்றது. ஆனால் அவன் என்னவோ வழக்கம் போல சாதாரணமாகவே இருந்தான்.
இது இவனுக்கு பழகிய ஒன்றாக இருக்கும் என்று நினைத்து கொண்டவள் தனது வேலையை பார்க்க துவங்கினாள். சிறிது நேரத்தில் அவள் எதிரே வந்து நின்றவன், “தேவா கல்லு எவ்வளவு இருப்பு இருக்குன்னு சொல்றியா ஒரு பார்ட்டி கேக்கறாங்க” என்றான்.
“ஒரு நிமிஷம்” என அவள் பார்த்து கூறினாள்.
அப்படியா என நெற்றியை தேய்த்து கொண்டவன், போனை எடுத்து யாருக்கோ அழைத்து பேசினான். “சார் ஒரு நானூறு கல்லு குறையுது நாளைக்கு மொத்தமா எடுத்துக்கறீங்களா” என கேட்டான்.
“அப்படின்னா சரி இருக்கறதை இன்னைக்கு லோடு ஏத்தி விட்டுடறேன் நாளைக்கு மீதியை எடுத்துகோங்க” என வைத்து விட்டான்.
திரும்ப அவன் மொபைல் போனை பார்த்து கொண்டே வெளியே செல்லவும், ஒரு நிமிஷம் என்றாள் அவள்.
சலிப்புடன் திரும்பியவன், “இப்படியே எத்தனை ஒரு நிமிஷம் தான் கேட்ப, சொல்லும்மா” என்றான். அவனுக்கு அவள் அவனை பெயர் சொல்லியோ அல்லது தனிப்பட்ட முறையிலோ அழைக்க வேண்டும் என்று ஆசை. அவன் ஆசை பட்டால் மட்டும் போதுமா அது அவளுக்கும் இருக்க வேண்டுமே.
“இல்லை நாளைக்கு எப்படி நானூறு கல்லு ரெடி ஆகும், அதான் ஆளுங்க எல்லாம் போய்ட்டாங்களே” என கேட்டாள்.
“அது ஒண்ணும் பிரெச்சனை இல்லை வேற டெம்பரரி ஆளுங்க வச்சு பண்ணிக்கலாம், இல்லைன்னா நானே செஞ்சிடுவேன்” என்றான் சாதாரணமாக.
“என்ன நீங்களா தனி ஆளா அது எப்படி செய்ய முடியும்” என்றாள் அவள்.
“வேற வழி இல்லை கமிட் பண்ணிட்டு பின் வாங்க முடியாதே. பார்க்கலாம்” என்றுவிட்டு வேறு யாருக்கோ போன் செய்து ஆள் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஆள் கிடைக்க வேண்டுமே என்று இவளுக்குமே தவிப்பாகத்தான் இருந்தது. இது அவன் தொழில் அவன் பாடு என்று விட்டு விட்டு ஒதுங்கி நிற்க முடியவில்லை அவளால். ஒற்றை ஆளாக அவன் மட்டும் தனியே செய்வது என்றால் மிகவுமே கடினம். அந்த நிலை வந்து விட கூடாது என்பதில் பரிதவித்து கொண்டிருந்தாள்.
அதான் ஆள் இல்லைன்னு தெரியுமே அப்பறம் எதுக்கு ஆர்டர் ஏத்துக்கனும். இது தான் முடியும்னு சொல்லிட வேண்டியது தானே என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.
மதியம் போல வேகமாக வந்தவன் ஒரு ஹோட்டலின் விசிட்டிங் கார்ட் எடுத்து அவளிடம் நீட்டினான், என்னவென அவள் பார்க்க... “நைட் வேலை இருக்கு ஒரு பத்து பேருக்கு டிபன் ஆர்டர் பண்ணிடு, அப்படியே டீ கேன்க்கும் சொல்லிடு” என்றான்.
“என்ன டிபன் சொல்லட்டும்”, போனை அழுத்திக்கொண்டே இவள் கேட்டாள்.
அவன் நெற்றியை தேய்த்து யோசிக்க, “ரொட்டி ஐட்டம் ஏதாவது சொல்லவா இல்லை இட்லி தோசையா”. அவளே சாய்ஸ் கொடுத்தாள்.
“அவங்க நார்த் இந்தியன்ஸ் தான் சப்பாத்தி மாதிரியே சொல்லிடு” என்றான்.
சொல்லி முடித்து போனை வைத்தவள் “ஒன்பது மணிக்கு ரெடியா இருக்குமாம், வந்து எடுத்துக்க சொன்னாங்க”
“சரிம்மா நீ கிளம்பு” என்றான்.
மணியை பார்த்தாள் இன்னும் ஆறு ஆகவில்லை, அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும். அவள் பார்வைக்கே இவனுக்கு அர்த்தம் புரிகிறதா என்ன, “இல்லம்மா எல்லாரும் தெரியாத ஆளுங்க நீ இங்கே இருக்க வேண்டாம் அதான்” என்றான்.
அவன் சொல்வது சரி என்றே பட, அவள் கிளம்பினாள். “காலையிலே கொஞ்சம் சீக்கிரம் வந்து என்னை எழுப்பி விடறியா, இல்லை போன் பண்ணா கூட போதும்” அவன் கேட்க, “போன் நம்பர்” என தயங்கினாள் அவள்.
சட்டென அறைக்கு சென்றவன் ஒரு ஃபோனை எடுத்து கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தான். அவனையும் அவன் கொடுத்த போனையும் மாறி மாறி பார்த்தவள்,
“நான் போன் நம்பர் தான் கேட்டேன், போன் இல்லை” என்றாள் திருத்தமாக.
“உன்கிட்ட போன் இல்லைன்னு எனக்கு தெரியும், வச்சுக்கோ” என்றான்.
“இது தேவை இல்லை, நான் கோபால் அண்ணா வொய்ஃப் நம்பர்ல இருந்து கூப்பிட்டுக்கறேன்”
“தேவா சொன்னா புரிஞ்சுக்கோ, காலையில அஞ்சு மணிக்கு அடுத்த வீட்டு வாசல்ல போய் நிப்பியா” என்றான் சற்றே அதட்டலாக.
“அப்போ நீங்களே அலாரம் வச்சுட்டு எழுந்துகோங்க” என கூறி விட்டு அவள் வந்து விட்டாள்.
“ம்ச் இவளை” என நெற்றியை தேய்த்து கொண்டவன் வேலையை பார்க்க சென்றான்.
இவர்கிட்ட நான் போன் கேட்டேனா, ஒரு நாள் கூத்துக்கு எதுக்கு இதெல்லாம் என்று தான் தோன்றியது. வீடு வந்து சேர்ந்தவள் காலையில் அவன் எழுந்து கொள்வானா மாட்டானா என்ற எண்ணத்துடனேயே விடிய விடிய இவள் உறங்காமல் இருந்தாள். இதற்கு அவன் தந்த போனை வாங்கி வந்து விட்டு மறுநாளே திருப்பி கொடுத்திருக்கலாம் என்று அவளுக்கே அறிவுரை சொல்லிக்கொண்டாள்.
Last edited by a moderator: