New member
- Joined
- Sep 12, 2024
- Messages
- 13
- Thread Author
- #1
வாழ்வியல்
மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகிலுள்ள சிறிய கிராமம் அவர்களது. தண்டபாணி, சுசீலா என்ற வயதான தம்பதியருக்கு நீண்ட நாள் ஆசையாய் இருப்பது தங்கள் பண்ணை இடத்தில் சொந்த வீடு கட்டி, அதில் குடியேறி தங்கள் கடைசி கால வாழ்வை அதில் கழிக்க வேண்டும் என்பது மட்டுமே. அதற்கென காத்திருந்தது போல் அவர்கள் இருந்த மண்சுவர் வீடும், இரண்டு வருடங்களுக்கு முன் அடித்த பலத்த காற்று மழையில் இடிந்து விழுந்துவிட்டது. அதில் தங்கள் இடத்தில் ஒரு சீட்டு வீடாவது போட்டு செல்வோம் என்ற ஆசை இன்னும் அதிகரிக்க, அதற்கான பணத்தைச் சேகரிக்க இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது அவர்களுக்கு. இப்பொழுது வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
பிள்ளை இல்லாத இருவருக்கும் அரசு கொடுக்கும் முதியோர் பணம் உதவியாக அமைந்தது. காட்டில் களை எடுக்கும் வேலை இருந்தால் அதையும் செய்வார்கள். அப்படி சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் வைத்து, வீடு கட்ட ஆசை கொண்டு, குறைந்த விலையில் வீடு கட்ட விசாரிக்க அவர்களின் நிதியளவை விட அதிகம் சொன்னார்கள். யாராவது குறைந்த விலையில் கட்டித்தர மாட்டார்களா என்று ஏங்கியிருந்த வேளையில், உறவினர் ஒருவர் தான் மேஸ்திரி என்றும் தானே அவர்களுக்குக் குறைந்த விலையில் கட்டித் தருவதாகவும் சொல்லி, வீடு கட்டும் வேலையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார். சொந்தக்காரன் என்பதால் சரியாக செய்வான் என்ற நம்பிக்கை தண்டபாணிக்கு.
மூன்று மாதங்களில் வீடு கட்டும் வேலை முடிந்துவிட, கையோடு பாலும் காய்த்துவிட்டார்கள். அதற்கே கையிருப்பு அனைத்தும் கரைந்து போயிருந்தது. மாதம் ஒருமுறை வரும் அந்த சொற்பமான ஓய்வூதியப் பணம் மட்டுமே இப்பொழுது அவர்களது ஆதாரம், அகாரம் எல்லாம். அதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது சந்தோசத்தில் வில்லங்கமாக வந்தது மின்சார இணைப்புப் பிரச்சனை.
சொந்த இடத்தில் சொந்தமாக வீடு கட்டியவர்களுக்கு மின்சாரம் இழுக்க அனுமதி மறுக்கப்பட, ஏனென்று விசாரிக்கையில் இடத்திற்கு பத்திரம், பட்டா இல்லை என்றனர்.
‘தாத்தா, அப்பா காலத்திலிருந்தே அது தங்கள் பரம்பரை இடம்’ என்று அவர்களிடம், மின்சார இணைப்பு வேண்டுமென்று கேட்டார்.
“அந்த இடம் உங்களுடையது என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரம் வேண்டும்” என்று அவரிடம் கேட்டனர் அவர்கள்.
‘அவர்கள் கேட்பதும் சரிதான். என்ன செய்வது’ என்ற யோசனையில் இருந்தவரிடம், வந்த துரை, ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம்’ பற்றி சொல்லி, “கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரளித்தால் நிலம் உங்களுக்குச் சொந்தமானது என்ற உறுதி கிடைக்கும். அதை வைத்து மின்சாரம் இழுக்கலாம்” என்றதும், மறுநாளே துரையையும் அழைத்துக் கொண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் புகாரளித்து வீடு வந்தார்.
வீடு கட்டி முடித்தும் இருண்டு கிடந்த வீட்டைக்கண்டு மனம் அழுது ஓலமிட்டது கணவன், மனைவிக்கு.
“எதாவது செய்து வீட்டுக்கு வெளிச்சம் கொண்டு வாங்க” என்ற மனைவியிடம்... “வார்டு மெம்பர் பெருமாள் நம்ம சொந்தக்கார பையன்தான் சுசீலா. வீட்டுக்கு வயரிங் வேலையும் பாக்கறான். நம்ம மேஸ்திரி துரைக்கும் அவனுக்கும் ஆகாததால வீட்டுக்கு வேற ஒருத்தனை வைத்து வயரிங் பண்ணிட்டான். பெருமாள் வயரிங் பண்ணிருந்தா அவன் வார்டு மெம்பர் என்பதால அவனே இழுத்துத் தந்திருப்பான். இப்ப என்ன சொல்வானோ? நான் அவனைப் பாத்துட்டு வரேன்” என்று சென்றார்.
“பட்டா, சிட்டானு எதுவும் இல்லனு சொல்லுறீங்க. அப்ப கஷ்டம் தான் மாமா” என்றார் பெருமாள்.
“ஏன் பெருமாளு அந்த இடம் எங்களோட பரம்பரை இடம்னு உனக்கு தெரியுமே. கிராமத்துல எல்லாரும் பத்திரம் பதிஞ்சிதான் கரண்ட் இழுத்தாங்களா? நீயே இப்படி சொன்னா எப்படிய்யா?”
“சரிதான் மாமா. ஆனாலும், ஒன்னும் செய்ய முடியாதே. வேணும்னா ஒன்னு செய்யலாம். என்னோட வீட்டு தீர்வை ரசீது வைத்து, என்னோட பெயரில் உங்க இடத்துக்கு தீர்வை ரசீது செய்தால், உடனே கரண்ட் இழுக்கலாம்” என்றார்.
“அது எப்படிய்யா சரியாயிருக்கும். அப்ப என் வீடு உனக்குச் சொந்தம்னு ஆகாதா?”
“என்ன மாமா இப்படி பேசிட்டீங்க? என்னை நம்பமாட்டீங்களா மாமா? நான் இங்க நிறைய பேருக்கு என் பெயரில் எடுத்துத் தந்திருக்கேன். அவங்க இடம் என்ன என் பெயரிலா இருக்கு? இப்பவரை அவங்க ஏன்னு கேள்வி கேட்டதில்லை. நீங்க என்னனா இப்படி பயப்படுறீங்க? ஊர்ல உள்ள ஒருத்தரோட தீர்வை ரசீது இருந்தாதான் கரண்ட் உடனே தருவாங்க. இல்லனா ரொம்ப கஷ்டம். சொல்லுங்க செய்திடலாம்” என்றார் பெருமாள்.
“ம்ம்ம்.. அது இல்லாம, வயசான எங்களுக்காக செய்ய முடியுமா பாருய்யா.”
“கேட்டுப் பாக்கறேன் மாமா” என்று முடித்துவிட்டார் பெருமாள்.
“கிடைச்சிருமாங்க?” எதிர்பார்ப்புடன் கேட்ட மனைவியிடம் பெருமாள் சொன்னதைச் சொல்ல, “அவன் பேர்ல தீர்வை போடனுமா? நல்ல கதையால்ல இருக்கு. என்ன பேசிருக்கான் அவன். தீர்வை போடுறதே நம்ம இடம்னு உறுதி செய்ய. அவன் பெயரில் போட்டா இடம் அவனோடதுனு உறுதியாகாதா? அவன் நல்லவனாவே இருக்கட்டுமே. அடுத்து வரும் அவன் பிள்ளைங்க நம்ம இடத்துக்கு உரிமை கொண்டாடாதுனு என்ன உறுதி? அவனை வைத்து வேலை பார்க்கலனு பழிவாங்குறானா? அவன் நினைச்சா நமக்கு இரண்டே நாளுல வழி செய்யலாம். உறவுக எல்லாம் கட்டியிருக்க கோவணத்தையும் உருவதான் காத்திருக்கு” என அங்கலாய்த்தார் சுசீலா.
“நான் இன்னொரு முறை போயி விஏஓவ பாத்துட்டு வரேன் சுசீலா. நம்ம இடம்னு தகவல் தெரிஞ்சா போதும். அப்படியே இலவசப் பட்டாவுக்கும் எழுதிக்குடுத்துட்டு வரேன்.”
“இலவசப்பட்டா மூனு வருஷத்துக்கு ஒருமுறை வந்து எழுதுவாங்களாம். ஆறுமாசம் முன்ன எழுதி குடுத்துட்டு போனாங்களாம். அடுத்து ரெண்டரை வருஷம் கழிச்சிதான் வருவாங்களாம். இப்படினு தெரிஞ்சிருந்தா அப்பவே எழுதிருக்கலாம். மக்காவே இருந்துட்டோம். இப்ப எவன் எவனோ நம்ம இடத்தை அபகரிக்க பாக்கறான்” என்று புலம்பினார் சுசீலா.
“புலம்பாம இரு. எதாவது செய்யலாம்” என்று நம்பிக்கையுடன் பேருந்து நிலையம் நோக்கிச் செல்ல, “மாமா” என்ற பெருமாளின் குரலில் நின்றார்.
“மாமா கரண்ட் ஆபீஸ்ல உங்களை வர சொல்லுறாங்க. போயி பாருங்க.”
“சரிய்யா” என்று மின்சார வாரிய அலுவலகம் சென்று நிற்கவும், அவரை அடையாளம் கண்ட மூவர், அவரை தனியே அழைத்துச் சென்று திட்ட ஆரம்பித்தனர்.
“எதுக்காக பேசுறீங்கனு சொல்லிட்டு பேசும்மா. கூப்பிட்டு வச்சி திட்டினா என்ன செய்ய?” என்றார் அவர்கள் பேசுவது புரியாது.
“ஓ.. உங்களுக்கு ஏன் திட்டுறோம்னு தெரியாது. இங்க பாருங்கய்யா வயசான காலத்துல உண்டோமா, உறங்கினோமானு இருக்கனும். அதை விட்டுட்டு எங்க மேல புகார் குடுத்து வச்சிருக்கீங்க? என்ன நினைச்சிட்டிருக்கீங்க? எல்லா டாக்குமென்டும் சரியா இருந்தா நாங்க ஏன் கரண்ட் தரமாட்டோம்னு சொல்லுறோம். எதுவுமே இல்லாம வந்து கரண்ட் தாங்கன்னா?” கோபத்தில் கொந்தளித்தாள் ஊழியை ஒருவர்.
“என்னம்மா சொல்லுற? நான் எங்கயும் புகாரளிக்கலையே. கரண்டுக்காக அலையுறவன் எதுக்காக உங்க மேல புகாரளிக்கிறேன்? யாரோ தப்பா சொல்லிருக்காங்கம்மா” என்றார் பணிவாய்.
“அப்ப தாலுகா ஆஃபீஸ்ல செஞ்சது என்ன?”
“அது இடம் என்னோடதுனு தகவல் தெரிஞ்சிக்கிற சட்டத்துல போட்டது. அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்?”
“அங்க இருந்து எங்களை காய்ச்சி எடுக்குறாங்க” என்றவருக்கு கிராம நிர்வாக அலுவலர் பேசியது மனதில் ஒலித்தது. “அங்கேயே பேசி முடிக்க வேண்டியதுதான? கரண்ட் தரமாட்றாங்க. எனக்கு எங்க இடம் இதுதான் என்பதற்கு சான்று வேணும். சீக்கிரமே பார்த்து குடுங்கனு நிற்கிறார். கரண்ட்தான எத்தனை பேருக்கு எதுவுமில்லாம செய்து குடுத்திருக்கீங்க. வயசானவருக்கு குடுக்குறதுல என்ன பிரச்சனை? பணத்தை மட்டுமே பார்க்காதீங்கய்யா. வயசான மனுசன அலைய வச்சிட்டு. இன்னொரு முறை அவர் இங்க வரக்கூடாது” என்று அந்த மூவரையும் திட்டியிருந்தார்.
“இனிமேல் கரண்ட் வேணும் அது இதுனு வந்தீங்க அவ்வளவுதான். முறைப்படி வாங்க தரோம்” என்றார் ஒருவர்.
“எங்க வீட்டு பக்கத்துல ஒருத்தருக்கு எதுவும் கேட்காம பணம் மட்டும் வாங்கிட்டு குடுத்திருக்கீங்க? என்னிடம் கேட்டிருந்தா கடன்பட்டாவது தந்திருப்பேனே” என்றார் ஆதங்கத்துடன்.