Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 190
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன் - 9
இருவரும் ஒன்றாக நடக்க ஆரம்பித்தனர்.தர்ஷன் ஆதிரையிடம் “ஆட்டோல போகலாமா? இல்லை நடந்தா?”
அவனைப் பார்த்து முறைத்தவள் “வெளியே சாப்பிட கூடிட்டு போறேன்னு சொல்லிட்டு இப்போ நடராஜா சர்வீஸா?” கிண்டலாகக் கேட்டாள்.
உடனே அவனோ சிரித்துக் கொண்டே “வேகமாக போய் என்னச் செய்யப் போறோம் அப்படியே வெளியே வேடிக்கைப் பார்த்துட்டு நடந்து போகலாமே இங்கிருந்து இருபது நிமிசம் தான் போயிடலாம்” என்று வேடிக்கைப் பார்த்தபடியே நடந்தனர்.
அமைதியாக நடந்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று நின்றவன் “ஆதி இந்த கடைக்கு போய் ஒரு பொருள் வாங்கனும் வாங்க போலாம்” என்று உள்ளே சென்றான்.இவளும் அவன் பின்னாலேயே சென்றாள்.
அது ஒரு நகைக்கடை.ஆதிரை சுற்றிப் பார்த்த படியே “யாருக்கு என்ன வாங்கப் போறீங்க?” விழிகளை அங்கும் இங்கும் சூழல விட்டப்படி கேட்டாள்.
அவனோ “என்னோட ப்ரெண்ட்டுக்கு சின்னதா ஒரு கிப்ட் வாங்கனும் செலக்ஷன் பண்ண ஹெல்ப் பண்ணுறீங்களா?”
“ம்ம்… சரி” என்று அவளை மோதிரம் இருக்கும் பக்கம் அழைத்துச் சென்றான்.
அங்கிருந்தவரிடம் “ஜோடியாக போடுற மாதிரி மோதிரம் காட்டுங்க” என்று சொன்னான் தர்ஷன்.
ஆதி மெதுவாக “வெட்டிங் ரிங்கா வாங்க போறீங்க?”
“அந்தளவுக்கு காஸ்லியா இல்லை ஆனால் வெட்டிங் மோதிரம் தான்” என்றான்.
அங்கே நிறைய வகையான சேகரிப்பு மாதிரிகள் இருந்தன.அதைப் பார்த்த தர்ஷன் “நல்ல அழகா ஒன்னு பார்த்து செலக்ட் பண்ணுங்க ஆதி” என்றதும் “அளவுக்கு என்ன பண்ணுறது?”
“பிரச்சினை இல்லை நானும் நீங்களும் போட்டு பார்த்து வாங்கலாம்” என்றான்.இவளும் யோசனையோடு சரியென்று ஒவ்வொன்றாக பார்த்தவள் இன்னும் சில வித்தியாசமான மாடல்களை கொண்டு வரச் சொன்னாள்.
அதில் ஒன்றை பார்த்ததும் அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய அதை எடுத்து தன் விரல்களில் போட்டு பார்த்தவள் “ரொம்ப அழகா இருக்குல்ல தர்ஷன் இங்கே பாருங்க” என்று தன் கையை திருப்பி அவனிடம் காட்டினாள்.
அவனோ “ரொம்ப அழகா இருக்கு” என்றவன் அதனுடைய ஜோடி மோதிரத்தை தன் விரல்களில் அணிந்தவன் “ம்ம்… நல்லா இருக்கா?” அவளோ கைவிரலை மடக்கி “சூப்பர்” என்றாள்.
உடனே தர்ஷன் “இந்த மோதிரம் எவ்வளவு?” என்றதற்கு அதை விற்பவர் “இதுல டைமண்ட் கல் பதிக்கப்பட்டு இருக்கு கொஞ்சம் காஸ்ட்லி சார்” என்றார்.
உடனே தர்ஷன் “வேண்டாம் நம்ம பட்ஜெட்டுக்கு வராது போல” என்றவன் ஆதிரையிடம் “வேற எதாவது நல்ல டிசைனா செலக்ட் பண்ணுங்க” என்றதும் வேறு ஒன்றை அவள் தேர்வு செய்து கொடுத்தாள். அது அவனின் நினைத்த அளவிற்கான பணமதிப்பில் அதையே வாங்கிக் கொண்டான்.
இருவரும் திரும்பவும் கொஞ்ச தூரம் நடக்கவும் அங்கே சாலையோரத்தில் அழகான பொம்மைகள் இருப்பதைக் கண்டவள் “தர்ஷன் இங்கே என் பொண்ணுக்கு எதாவது வாங்கிட்டு வரேன்” என்று ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு எது எடுக்கவென்று திணறிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த தர்ஷன் “மற்றவர்களுக்காக உடனே செலக்ட் பண்ணுறீங்க ஆனால் உங்களுக்காக அப்படின்னா முடிவெடுக்க முடியலை இருங்க “ என்று கடைக்கு சென்று இரண்டு அழகிய பொம்மைகளை எடுத்து வந்து ஆதிரையிடம் கொடுத்தவன் “வியன்கைவுக்கு இது என்னோட பரிசு” என்றான்.
ஆதிரையோ “எதுக்கு தர்ஷன் தேவையில்லாத செலவு?” என்றாள்.
அவனோ “நீங்க வாங்கி கொடுக்கும் போது நான் அதை அன்பான பரிசாகத் தானே பார்த்தேன் அதையே நான் வாங்கிக் கொடுக்க போது எதுக்கு அவாய்ட் பண்ணுறீங்க?” என்று நேரிடையாகவே கேட்டு அவள் கையில் திணித்து விட்டு வேகமாக முன்னால் நடந்தான்.
இவளோ “தர்ஷன் தர்ஷன் ப்ளீஸ் நில்லுங்க” என்றதற்கு அவனோ திரும்பிப் பார்க்காமல் முன்னால் நடந்துச் சென்றான்.
ஆதிரை கொஞ்சம் பதற்றமாகி “தர்ஷன் ருத்ரா” என்று வேகமாக சென்றவள் சட்டென்று நின்றவனின் தோளில் வேகமாக வந்ததில் மூச்சு வாங்க அவன் மேல் கைவைத்தவள் “சாரி ருத்ரா ப்ளீஸ் சாரி நான் உங்களை ஹேர் பண்ணனும் சொல்லலை சாரி” என்றாள்.
அவனோ அமைதியாக நிற்கவும் இவளோ அவளையும் அறியாமல் அவனின் தோள் மீது அழுத்தம் கொடுத்தவாறே “ரொம்ப கோவப்படுறீங்க ருத்ரன் சாரி” என்றாள்.
அவனோ சரியென்பது அவளைப் பார்த்தான்.
அவனின் தோளின் மீது இன்னும் கைவைத்திருந்தாள். அதை அவளும் கவனிக்க பதறிப்போய் கரங்களை விலக்கிக் கொண்டாள்.
“சரி வாங்க போகலாம் ஆதி இது தான் கடைசி முறை” என்று அவள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு நடந்தான். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஹோட்டல் வந்தது. இருபது நிமிடத்தில் வர வேண்டிய இடத்திற்கு இரண்டு மணி நேரம் கழித்து வந்தனர்இருவரும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்தார்கள்.
முதலில் மசாலா தோசை அடுத்து தந்தூரி சிக்கன், ரொட்டி என்று அவனே வேண்டிய உணவைச் சொன்னான். எல்லாம் வந்ததும் இவ்வளவு நேரம் சென்றதால் நன்றாக பசியாக இருக்கவே பலகதைகள் பேசி இருவரும் ஒருவொருக்கொருவர் உணவை பரிமாறிய படி சாப்பிட்டனர்.
நேரம் போனதே தெரியவில்லை.இரவு பதினொரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
சாப்பிட்டு வெளியே வந்ததும் ஆட்டோ ஒன்றை பிடித்தவன் “ஆதி உங்களை நான் டிராப் பண்ணிட்டே போறேன்” என்று அவள் இருக்கும் விடுதியின் விலாசத்தைக் கேட்டான்.
இவனும் அவளுமாக ஒன்றாக பயணம்.இதற்கு முன்னால் காரில் பயணம் செய்த போது இருவருக்குமான இடைவெளி அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது ஒருவரையொருவர் உரசிக் கொண்டு வருவதற்கான நெருக்கமாக இருந்தது.
ஆதிரை தன் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள்.அது பதினொன்றை தாண்டி இருந்தது. அதைப் பார்த்த அதிர்ச்சியில் “ஐய்யய்யோ” என்று பதற தர்ஷன் “என்னாச்சு?” என்று கேட்டான்.
“தர்ஷன் இவ்வளவு லேட்டாகலாம் நான் வெளியே போனதே இல்லை இது தான் முதல் தடவை அதான்” என்றாள் அதிர்ச்சியோடு…
அவனோ “பரவாயில்லை பழகிக்கலாம் விடுங்க ஆதி எப்பவும் இப்படின்னா தப்பு எப்போதாவது தானே ஒன்னுமில்லை” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
விடுதியின் வாசலில் இறக்கி விட்டவன் “ஆதி நாளைக்கு நான் டெல்லிக்கு போறேன் இனி எப்போ நம்ம சந்திப்புன்னு தெரியலை பார்க்கலாம்” என்றான்.
அவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி அப்படியே வடிந்தது போல் இருந்தது.அவள் விழிகளில் அது தெரிந்தது. அவனும் அதை கண்டுக் கொண்டான் தான்.
ஆதிரை “என்ன திடீர்னு?”
அவனோ சிரித்துக் கொண்டே “அடுத்து அங்கே போறதாகத் தான் ப்ளான்”
“ஓ அப்படியா!” என்றவளுக்கு ‘திரும்ப எப்போது சந்திக்கலாம்’ என்று கேட்க ஏதோ ஒன்று அவளை தடுத்தது. அதனால் “திரும்ப எப்.எம்க்கு எப்போ வருவீங்க?அப்பவே கேட்கனும்னு இருந்தேன்” என்று சமாளித்தாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “தெரியலை கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கு போகனும்” என்றான்.
அந்த பதில் அவளுக்கு திருப்திகரமானதாக இல்லை. எப்போது? என்று அவனுக்கே தெரியாத போது இவள் எப்படி? பல யோசனையில் நின்றாள். இரண்டு பக்கமும் ஒரே அமைதி நிலவியது.