• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
190
உன் விழியோடு நானாகிறேன் - 8


ஆதிரையும் அவளுடன் வந்த பெண்ணும் அவர்கள் செல்ல வேண்டிய நிறுவனத்திற்கு அருகில் ஆளுக்கொரு அடுத்தடுத்து அறையை விடுதியில் எடுத்து தயாராகி நேராக அந்த நிறுவனத்திற்குச் சென்றனர்.

அவர்கள் அனுப்பிய விவரங்களை அடங்கிய கோப்புகளை சரி பார்த்தப் போதும் அவர்களுக்கான சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.

இன்னும் பழைய கோப்புகளை பார்க்க வேண்டியது இருந்தது.அதனால் அந்நிறுவனத்தின் மேலாளரைப் பார்த்து மற்ற விவரங்களையும் பார்ப்பதற்கான அனுமதி வாங்குவதற்கு வெளிநாட்டில் இருந்து இரண்டு நாட்கள் கழித்து வருபவருக்காக காத்திருக்க வேண்டியதாக இருந்தது.

இதனால் மற்ற வேலைகளை தன் அறையில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள்.தன் அம்மாவிடம் கைப்பேசியில் அழைத்தவள் “அம்மா வேலை முடிய இன்னும் நாளாகும்னு நினைக்கிறேன்” என்றாள்.

அவரோ “சரிம்மா நீ வியன்காகிட்டே பேசு” என்று அவளிடம் கைப்பேசியைக் கொடுத்தாள்.

“ஹலோ அம்மா”

“சொல்லும்மா அம்மா மேல கோபமா? உன்னை தனியா விட்டுட்டு நான் வந்துட்டேன்ல” என்று கவலையாகக் கேட்டாள்.

வியன்கா “அம்மா எனக்கு கோபம்லாம் இல்லை நீங்க உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க நான் தாத்தா,பாட்டியோடு இருந்துப்பேன் நீங்க பத்திரமா இருங்க” என்று சொன்னாள்.

அதைக் கேட்ட ஆதிரை மனதினுள் ‘இரண்டு வயது குழந்தையாக தன்னோடு அழைத்து வந்தாள்.அப்பொழுது இருந்தே நடப்பதைப் பார்த்து குழந்தைகள் ஓரளவு உள் வாங்கிக் கொள்ளுமா? என்று அவளுக்கு தெரியவில்லை.

ஆனால் வியன்கா சூழ்நிலைக்கு ஏற்றார் போல் இருந்துக் கொண்டாள்.

ஆதிரையிடம் எதுவும் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக் கொள்ள மாட்டாள்.

ஆதிரையாக பொருட்கள் வாங்கி கொடுத்தாள் தன் விருப்பப்படி வாங்குவாள்.

அதனால் தன்னுடைய குழந்தை வியன்கா அவளுக்கு ஒரு உற்ற துணையாகத் தான் இருக்கிறாள்’ என்று நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள்.

ருத்ரனின் நிகழ்ச்சியும் நடைபெறவில்லை இத்தனை நாட்களாக நிறைய பேருடன் இருந்து தனிமையாக இருக்கவும் ஒரு அழுத்தம் வந்து ஒட்டிக் கொண்டது.

இரண்டு நாட்கள் கழித்து நிறுவனத்திற்கு மேலாளரை சந்திக்க வெளியே காத்திருந்தவள் அவர் அழைத்ததும் கதவை திறந்து உள்ளே சென்றவளுக்கு அங்கே இருப்பவனைப் பார்த்து பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.

யாரை தன் வாழ்வில் திரும்ப சந்திக்கவே கூடாது என்று நினைத்திருந்தாளோ அவனே அங்கு இவளைப் பார்த்து சிரித்தப்படி நின்றான்.அவனுக்கு பக்கத்தில் நின்றவர் “இவர் தான் எங்க கம்பெனியோட மேனஜர் அரவிந்த்” என்று அவனை அறிமுகம் செய்து வைத்தார்.

கோபமும் கண்ணீரும் இயலாமையும் அவளை மொத்தமாய் ஆட்டி வைத்தது.எதையும் வெளிக்காட்டாமல் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நின்றவளை பார்த்து “வாங்க மிஸ் ஆர் மிஸஸ்” என்ற போது “மிஸ் ஆதிரை” என்று பதில் சொல்லி அவனுக்கு கைக்குலுக்காமல் வணக்கம் சொல்லி உட்கார்ந்தாள்.

மேலிருந்து கீழ்வரை அவளை முறைத்து பார்த்தவன் ஏளனமாக சிரித்தப்படி “என்ன விஷயம் சொல்லுங்க மிஸ் ஆதிரை ரெண்டுநாளா வெயிட் பண்ணுறீங்களாமே என்றான்.

அவளோ சிறிதும் தயங்காமல் “சார் நாங்க அனுப்பின அக்கவுண்ட்ஸ் டீடெய்ஸ்ல ஐம்பதுலட்சத்திற்கு மேல் அதிகமாக கணக்கு காட்டி இருக்கோம்னு பதில் அனுப்பி இருக்காங்க ஆனால் எங்க அக்கவுண்ட்ஸ் செக்ஷன் நீங்க அனுப்பின டீடெய்ஸ் வைச்சு தான் பைல் ரெடி பண்ணோம்” என்றாள்.

உடனே அவனோ “அப்போ நாங்க அனுப்பின பைல்ஸ்ல செக் பண்ண வேண்டியது தானே” என்றான் அசட்டையாக…

உடனே அவளோ “அந்த பைல்ஸ் செக் பண்ணியாச்சு சார் ஆனால் அதைப் பத்தி எதுவும் இல்லை”

“அப்போ உங்க வேலையில் கவனக்குறைவாக இருந்திருக்கீங்க அது தப்பு தானே” என்று அவளை குற்றம் சாட்டினான்.

அவளோ அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் “ நாங்க எல்லாத்தையும் சரியாக பார்த்து தான் பைலை ரெடி பண்ணோம் ஆனால் எப்படின்னு தெரியலை உங்க பழைய கணக்குவழக்கையும் இதில் சேர்த்து இருந்திருந்தால் இந்த மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு அதனால நாங்க ரெடி பண்ணுறதுக்கு முன்னாடி நீங்க ஏற்கனவே முடித்திருந்த லெச்சர்ஸையும் பார்த்தால் தான் சரியாக பார்க்க முடியும்

எங்க மேல எந்த தப்பும் இல்லை சார் நீங்க பழைய பைல்ஸ் பார்க்கிறதுக்கு பர்மிஷன் தாங்க” என்று அவள் வந்த வேலையிலேயே கவனமாக இருந்தாள்.

அவளின் பேச்சில் இருந்த உறுதியை அவனால் மறுத்து பேச முடியவில்லை.இந்த நாலைந்து வருடங்களில் ஆதிரை நன்றாகவே மாறிப் போய் இருக்கிறாள் என்பது அவனைக் கண்டும் அவள் சிறிதளவு கூட தடுமாற்றம் இல்லாமல் பேசியது ஆதிரையைப் பற்றி யோசிக்க வைத்தது.

“ம்ம்… சரி உங்க ஐ.டிக்கு எல்லா பைல்ஸ்ஸும் அனுப்ப சொல்றேன்” என்றான்.

உடனே அவளோ “தாங்க்யூ சார் கூடவே நீங்க முக்கியமான பைல்ஸ்ஸ பேப்பர் வொர்க்கா வைச்சி இருப்பீங்க அந்த விவரங்களையும் கொடுங்க” என்றாள்.

தன் பக்கத்தில் உள்ளவரிடம் அரவிந்த் “அவங்க கேட்கிற டீடெய்ஸ் கொடுங்க” என்றதும் ஆதிரை தன்னுடன் வந்த பெண்ணிடம் “அவங்க கொடுக்கிற பைல்ஸ்ஸ வாங்கிட்டு வாங்க நமக்குன்னு கொடுத்து இருக்கிற கேபினுக்கு வாங்க” என்று ஆதிரை அந்தப் பெண்ணை அனுப்பி விட்டு இவள் எழுந்திருக்கும் போது ஆகாஷ் “தனியா இருந்தும் உன் திமிரு குறையலை அதான் இன்னும் இப்படியே இருக்கே” என்றான்.

அவனைப் பார்த்து முறைத்தவள் எதுவும் பேசாமல் நகரப் போக அவனோ “என் பொண்ணு உன்னை மாதிரி தான் இருக்காளா? இப்படி திமிர் புடிச்சவ நடந்துக்கிற போல” என்றதும் அவனை நேருக்கு நேராக பார்த்தவள் “ஆமாம் என் பொண்ணு என்னை மாதிரித் தான் இருப்பா கண்டவனை மாதிரி இல்லை”என்று வார்த்தையை வீரியமாக பேசினாள்.

அவனோ “எனக்கு இப்போ குழந்தை இருக்கு இந்த மாதிரி கேவலமாக நடந்து மாட்டான்.ஏன்னா அவனோட அம்மா ரொம்ப க்ளாஸி” என்று ஆதிரையை விட அவன் சந்தோஷமாக இருப்பதாக பதில் சொன்னான் அரவிந்த் அவளின் முன்னாள் கணவன்.

அதை எல்லாம் காதில் வாங்காது நேராக தன் இருப்பிடத்தில் போய் அமர்ந்தவள் படபடவென துடித்த இதயத்தியத்தை நீண்ட பெருமூச்சு விட்டு தண்ணீரை குடித்து ஆசுவாசப்படுத்தினாள்.

அரவிந்த் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆதிரை தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

மாலையில் வேலை முடியும் நேரம் அரவிந்த்யைப் பார்க்க மாடர்ன் உடையணிந்து ஒருத்தி கையில் ஒன்றரை வயது ஆண்குழந்தையை கையில் பிடித்தப்படி வந்தாள்.

நேராக அவள் சென்றதும் அரவிந்த் அந்தப் பெண்ணின் தோள் மீது கைப்போட்டு அணைத்துக் கொண்டவன் தன் பிள்ளையை கையில் ஏந்திக் கொண்டான்.

இதை எல்லாம் ஆதிரை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்தவன் அவளை பார்க்க அவளோ கோப்புகளை எடுத்துக் கொண்டு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள்.

அவள் பார்த்து இருப்பாள் என்ற துணிவோடு அந்தப் பெண்ணோடு நடந்தான்.இவளோ எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் இருந்துக் கொண்டாள்.இவளோடு வந்த பெண் “மேம் நான் இன்னைக்கு கொஞ்ச நேரம் வெளியே போறேன் பர்ஸ்னல் வொர்க் இருக்கு நீங்களும் ஒரே இடத்துல தானே இருக்கீங்க வெளியேவும் போகலாமே மேம்” என்றாள்.

அவளைப் பார்த்து சிரித்தவள் “தாங்ஸ் இது ஒரு நல்ல யோசனை அப்புறம் நைட் எப்படியும் ரூம்க்கு வந்ததும் ரீச் ஆகிட்டேன்னு மெஸேஜ் ஒன்னு அனுப்பிடுங்க ஏன்னா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம்” என்று மறைமுகமாக சொல்லிக் கொண்டுச் சென்றாள்.

அந்தப் பெண்ணோ சரியென்று தலையசைத்தாள்.

கோப்புகளை எல்லாம் அறையில் வைத்து விட்டு புடவையிலிருந்து உடை மாற்றி கொஞ்சம் தளர்வான ஆடையை அணிந்தவள் அப்படியே மெத்தையில் சரிந்தாள்.

அரவிந்த் வந்து அவளை பார்த்த பார்வையே கண்முன்னால் வந்து போனது.இன்னும் எத்தனை நாட்களுக்கு இவனின் முகத்தை பார்க்க வேண்டுமோ என்பதை நினைத்து கோபமும் ஆற்றாமையும் வந்தது.

அதுவே அவளை இன்னுமாய் தொந்தரவு செய்ய எழுந்து அமர்ந்தவள் சிறிது நேரம் வெளியே செல்லலாம் என்று அறையிலிருந்து வெளியே வந்தாள் ஆதிரை.

இணையத்தின் உதவியால் யு.பி சிட்டி மால் வணிக வளாகத்திற்கு சென்றாள்.அங்கே கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்து விட்டு தாகமாக இருப்பதால் எதாவது குடிக்கலாம் என்று ஒரு கடையில் அமர்ந்தவள் மாதுளம் பழச்சாற்றை கொண்டு வரச் சொன்னாள்.

எல்லோரும் எதாவது ஒரு நபருடன் வந்திருப்பதை கவனித்தாள்.இந்த உலகில் யாராவது ஒருவரின் இணக்கம் மனிதனுக்கு தேவையாகத் தானே இருக்கிறது.யாரையும் சார்ந்து வாழவில்லை என்பது எல்லாம் ஒரு குருட்டுப் பேச்சு. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே! என்று தன் மனத்திற்கு ஆறுதல் நினைத்தாலும் அரவிந்த் அவன் மனைவியோடு செல்வது நினைவுக்கு வந்தது.

அப்போது தன் பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள்.அரவிந்த்தோடு எப்போது வெளியே சென்றாலும் ஆதிரையிடம் “உனக்கு டிரெஸ்ஸிங் சென்சே இல்லை” என்று குறைப்பட்டுக் கொள்வான்.அதோடு அவ்வளவாக ஒப்பனை இல்லாமல் இருப்பதால் மற்ற பெண்களைப் பற்றி புகழ்வதோடு அவர்களின் அந்தரங்களைப் பற்றி தன் மனைவியான ஆதிரையிடம் புகழ்ந்து பேசுவான்.

இதெல்லாமே அவளுக்கு அருவருப்பாக இருக்கும்.ஆனால் இப்போது இன்னொருவளுடன் அவனால் எப்படி இவ்வளவு இணக்கமாக வாழ முடிகிறது? என்ற யோசனையில் அப்படியே அமர்ந்திருக்கும் போது “ஹாய் ஸ்லிப்பிங் பியூட்டி” என்ற குரல் அதுவும் ஆதிரை இத்தனை நாட்களாக தேடிக் கொண்டிருந்த குரல் அவளுக்கு அருகே கேட்டது.

யோசனையோடு திரும்பிப் பார்த்தாள்.முகம் முழுக்க புன்னகையோடு அவளை நோக்கி வந்தான் தர்ஷன்.அவன் தானா? என்று எழுந்து நிற்க அவனோ “ஹாய் ஆதி எப்படி இருக்கீங்க?” என்று அவள் கேட்காமலேயே எதிரே வந்து உட்கார்ந்தான்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
190
அவள் அப்படியே நின்றுக் கொண்டிருக்க அவனோ “மரியாதை மனசுல இருந்தா போதும் உட்காருங்க ஆதி” என்று சொல்லி சிரித்தான்.

இவளோ அவன் சொன்ன பதிலைக் கேட்டு முறைத்தப்படி “நல்லா இருகேன் நீங்க என்ன இந்தப்பக்கம் வந்து இருக்கீங்க” என்றதற்கு தலையை சாய்த்து சிரித்தப்படி அவளையே பார்த்தவன் “ரொம்ப ஆழ்ந்த யோசனை போல” என்றான்.

அவன் அப்படிக் கேட்டதும் கண்ணின் கருவிழிகள் இரண்டையும் அப்படி இப்படி அசைத்தவள் “ஒன்னுமில்லை” என்றாள்.

அவனோ விடாப்பிடியாக “சரி சொல்ல விருப்பம் இல்லை போல என்ன திடீர்னு பெங்களூருக்கு வந்து இருக்கீங்க?”

அவளோ “இந்த கேள்வியை நான் தான் முதல்ல கேட்டேன் பதில் சொல்லுங்க” என்றதும் அவனோ “பிஸ்னஸ் விஷயமா வந்து இருந்தேன் சரி அப்படியே சுத்திப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றான்.

“ம்ம்… ஓகே நானும் கம்பெனி விஷயமாத் தான் வந்தேன்” என்றாள்.

“என்னாச்சு?”

ஆதிரை தன் பிரச்சினையைப் பற்றி சொன்னாள்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டான்.பதில் சொல்லாமல் யோசனையோடு அமைதியாக இருந்தான்.

அதைப் பார்த்தவள் “என்னோட பிரச்சினையை விடுங்க அன்னைக்கு ஏன் சொல்லாமல் போயிட்டீங்க?” என்று கேட்டாள்.

“ஏன் ரொம்ப பிலிங்கா இருந்துச்சா?”

அவளோ முறைத்துப் பார்த்து “எனக்கு இல்லை சிந்தியா ரொம்ப கவலைப்பட்டா அதனாலத் தான் கேட்டேன்” என்றாள்.

அவள் சொன்னதும் மெலிதாக புன்னகைத்தவன் “ நான் மதனுக்கு மெஸேஜ் அனுப்பிட்டு தானே போனேன்” என்று குறுகுறு பார்வையோடு ஆதிரையைப் பார்த்தான்.

‘'மாட்டிக் கொண்டோம்’ என்று நினைத்தவள் “அதெல்லாம் தெரியாது சிந்தியா நீங்க உடனே கிளம்பிட்டீங்கன்னு சொன்னாள்” என்று மறுபடியும் பொய் சொல்கிறோம் என்று நினைத்து உண்மையைச் சொன்னாள்.

அவள் சொல்லியிருந்த பழச்சாறும் வந்திருக்க அதைப் பார்த்தவன் அதைக் கொண்டு வந்தவரிடம் “இன்னொரு க்ளாஸ் கொண்டு வாங்க என்றவன் ஆதிரையிடம் “இந்த மாதுளம் பழ ஜீசை முழுவதும் குடிச்சா வயிறு நிரம்பிடும் அதனால நீங்க பாதி நான் பாதி குடிச்சிட்டு வெளியே எனக்கு தெரிஞ்ச ஒரு கடை அங்கே போய் சாப்பிடலாம்” என்றான்.

அவளிடம் அனுமதி கேட்காமலேயே தர்ஷன் முடிவெடுத்துச் சொன்னான்.உடனே ஆதிரை “நான் எங்கேயும் வரலை” என்றதும் மனதினுள் நினைத்து சிரித்தவன் “ஆதி தனியாகத் தானே வந்து இருக்கீங்க இங்கே நான் அடிக்கடி வந்து இருக்கேன் ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாமா? ப்ளீஸ்” என்றாள்.

அவளோ “நாளைக்கு சீக்கிரமா கம்பெனிக்கு போகனுமே!” என்று பொய்யாக நடித்தாள்.’அவளுக்கும் சுற்றிப் பார்க்க வேண்டும் ஆசை தான் தனியாக வந்தவளுக்கு எங்கே செல்ல வேண்டும் என்று தெரியவில்லை.ஆனால் சட்டென்று ஒத்துக் கொண்டாள் தவறாக எண்ணிக் கொள்வானோ?’ என்ற எண்ணம் தடுத்தது.

உடனே அவளோ அமைதியாக இருந்தாள்.”ப்ச் வாங்க ஆதி டைம் இப்போவே லேட் ஆகிடுச்சு” என்று அவள் வாங்கிய பழச்சாற்றை பருகியபடி சொல்லவும் “சரி ரொம்ப லேட் ஆகிடாதீங்க தர்ஷன் சீக்கிரம் போகனும்” என்றதற்கு சரியென்பது தலையசைத்து விட்டு இருவரும் பழச்சாற்றை குடித்து விட்டு சென்றனர்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top