Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 207
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன் - 15
மறுநாள் மாலை வேளையில் சிந்தியா ஆதிரையின் வீட்டின் பக்கம் வந்தவளுக்கு அவள் வசிக்கும் தெருவைப் பற்றி தெரியவில்லை.வருடங்கள் சென்று இருப்பதால் தெரியாமல் போக உடனே ஆதிரையின் கைப்பேசியில் அழைத்து விலாசம் கேட்கலாம் என்று நினைக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்தான் தர்ஷன்.
அவனைப் பார்த்து மதனும் சிந்தியாவும் “ஹேய் தர்ஷன் நல்லா இருக்கியா?” என்று நலம் விசாரித்தார்கள்.
அவனும் “ம்ம்… நல்லா இருக்கேன் நீங்க ரெண்டுபேரும் எப்படி சண்டை போடாத கப்பிள்ஸ்ஸா தானே இருக்கீங்க” என்றதற்கு இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
தர்ஷன் “நீங்க ரெண்டுபேரும் பார்க்கிற பார்வையிலேயே தெரியுது என்ன இங்கேயே நிற்கிறீங்க?”
சிந்தியா “ஆதிரை வீடு சரியா தெரியலை” என்றாள்.
“அப்படியா! சரி என் பின்னாடியே வாங்க நான் அழைச்சிட்டு போறேன்” என்று வண்டியை ஓட்ட அவன் பின்னாலேயே இருவரும் காரில் சென்றனர்.
அப்போது மதன் சிந்தியாவிடம் “இவனுக்கு இருக்கிற வசதிக்கு ஏன் இப்படி பைக்ல சுத்துறான் என்னன்னே இவனை புரிஞ்சிக்க முடியலை” என்று புலம்பியவாறே வந்தான் மதன்.
பத்துநிமிட தொலைவில் ஆதிரையின் வீட்டிற்கு வந்தனர்.முதலில் தனது வண்டியை வாகனம் நிறுத்துமிடத்தில் விட்டவன் இவர்களது வாகனத்தை நிறுத்தும் இடத்தையும் காட்டினான்.மதனுக்கும் சிந்தியாவிற்கும் ஒரு சந்தேகம் வந்தது.தர்ஷனை அழைத்தது இவர்களாக இருக்க அவன் நடந்துக் கொள்ளும் முறையோ ஏதோ அந்த குடியிருப்பில் இருப்பவனைப் போல் இருந்தது.
“வாங்க”என்று தன் கையில் இரண்டு பைகளையும் தூங்கிக் கொண்டு வந்தவனை இருவரும் வித்தியாசமாக பார்த்தனர்.அவனோ அவர்களைப் பார்த்து புன்னகைத்தான்.
மூவரும் மின்தூக்கியில் ஏறியதும் மதன் மெதுவாக தர்ஷன் காதில் “என்னடா ரெண்டு கவரு கையில வைச்சு இருக்கே”
“அதுவா ஆதிரையோட வீட்டிற்குத் தான் யூஸ் ஆகுமேன்னு வாங்கினேன்”
“சரி சரி உன்னோட கார் எங்கே?” என்று கேட்கவும் அவர்கள் இறங்க வேண்டிய தளம் வரவும் வெளியே வந்தவர்களை “இதோ இந்த வீடு தான் வாங்க” என்று அவர்களை அழைத்துச் சென்று அழைப்பு மணியை அழுத்தவும் கதவை திறந்த வியன்கா “தர்ஷன் நான் சொன்னதை வாங்கிட்டு வந்தீங்களா?” என்று வாசலிலேயே விசாரணை நடத்தினாள்.அவனும் பொறுப்பாக “இதோ இந்த பையில் இருக்கு” என்று கொடுக்கவும் வாங்கிக் கொண்ட வியன்கா எட்டிப் பார்த்தாள்.
பின்னால் சிந்தியாவும் மதனும் நிற்க அவர்களோ ஒருவரையொருவர் பார்த்தப்படி ‘’இங்கே என்ன நடக்கிறது?’’ என்று திகைத்துப் போய் நிற்க வியன்கா “உள்ளே வாங்க ஆன்ட்டி அங்கிள் வாங்க நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க அவங்க உள்ளே வரட்டும்”என்று வியன்கா தர்ஷனை தன் பக்கமாக நிறுத்தி அவனது கரங்களைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
சத்தம் கேட்டு ஆதிரை அவளது அம்மா,அப்பா எல்லோரும் வந்து அவர்கள் இருவரையும் வரவேற்றனர்.முதலில் நல விசாரிப்புகள் இருந்தன.அவர்களுக்கு குடிப்பதற்கு பாலைக் கொடுத்தனர்.
இவர்கள் இரண்டு பேரும் நடக்கும் நிகழ்வினைப் பார்த்து தலையே வெடித்து விடும் நிலைமையில் நின்றனர்.
அஞ்சலி தர்ஷனின் கையில் இருந்த இன்னொரு பையைப் பார்த்து “வாங்கிட்டு வந்துட்டீங்களா? என்கிட்ட கொடுங்க” என்று வாங்கிக் கொண்டார்.
சிந்தியா பொறுக்க முடியாமல் “ஆதிரை இங்கே என்ன நடக்குதுன்னு முதல்ல தெளிவா சொல்லுறியா? தர்ஷனை என்கிட்ட வரச் சொல்லி அழைப்பு வைக்கச் சொல்லிட்டு நாங்க வந்து அறிமுகப் படுத்தனும்னு நினைச்சா இங்கே எல்லோருக்கும் தர்ஷனை நல்லா தெரிந்த மாதிரி நடந்துட்டு இருக்கு” என்றாள்.
ஆதிரையோ சிரித்துக் கொண்டே “ம்ம்… உன்கிட்டே நான் சொல்ல வேண்டிய விஷயம் நிறைய இருக்கு” என்றாள்.
மதன் தர்ஷனை தன்னோடு அழைத்து தனியாக பேசினான்.ஆதிரை இதுவரை நடந்ததை எல்லாவற்றையும் சொன்னாள்.
சிந்தியா அஞ்சலியிடம் “அம்மா நீங்க எப்படி ஒத்துக்கிட்டீங்க?” என்று கேட்கவும் அன்றைய நிகழ்வினைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார் அஞ்சலி.
அன்று இவர்கள் மூவருக்கு இடையே பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட வியன்கா “அம்மா தர்ஷனை நான் வீட்டுக்கு வரச் சொல்லட்டுமா?” என்று அப்பாவியாக கேட்டாள்.
உடனே அஞ்சலி “ஆதி அந்தளவுக்கு உங்களுக்குள்ளே என்ன நடந்தது? இவ்வளவு உரிமை வியன்கா வீட்டுக்கு வரச் சொல்லுறா?” என்றார் சற்றே கடுமையாக…
ஆதிரை “அம்மா முதல்ல நடந்தது என்னன்னு தெரிஞ்சிட்டு பேசுங்க” என்று நடந்து முடிந்த எல்லாவற்றையும் சொன்னாள்.அவனது வானொலி நிகழ்ச்சியைப் பற்றிய இரகசியம் அது அவனுக்கான உரிமை என்பதால் அதை தவிர்த்து மற்ற விஷயங்களைச் சொன்னாள்.தர்ஷன் அவளை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதையும் சேர்த்து சொன்னாள்.
ஆதிரையின் தந்தை மூர்த்தி ஆர்வமாக “நீ ஓகேன்னு சொல்லிட்டியாம்மா” என்று கேட்க அஞ்சலியோ “அவ ஓகேன்னு சொன்னதுனாலத் தானே ரெண்டுபேரும் பங்ஷனுக்கும் போயி வீட்டுக்கு போனதும் அவரைப் பத்தி தெரிஞ்சு இருக்கு” என்று தன் மகளைப் பற்றி புரிந்துக் கொண்டவராகச் சொன்னார்.
அஞ்சலி நேராக “ஆதி என்னத் தான் முடிவு செய்து இருக்கே?”
அவளோ அவரைப் பார்த்து “தெரியலைம்மா பயமா இருக்கு இவ்வளவு அன்பையும் அக்கறையையும் மொத்தமா காட்டவும் ஏனோ ஒரு விதமான கவலையில் இருக்கேன்” என்றாள்.
அவளைக் கட்டிப் பிடித்து சமாதானம் செய்தவர் “சில விஷயங்கள் நமக்கு நல்லதாக இருக்கும் போதே நேரத்தோடு அதை பயன்படுத்திக்கனும் இல்லைன்னா தேவையில்லாததாக ஆகிடும் அப்படித் தான் இந்த வாழ்க்கையும் ஏன் முதல்ல இருந்த மாதிரியே ஆகிடும்னு நினைக்கிறே அப்படிப் பார்த்தால் இந்த உலகத்துல பழைய நினைவுகளோடு யாராலையும் வாழ முடியாது” என்றார்.
அம்மா சொல்வது எல்லாம் சரியாகப் படவும் அமைதியாக இருந்தாள்.மூர்த்தி ஆதரவாக ஆதிரையின் தோள்களில் கைவைத்தவர் “ஆதி நான் தர்ஷன்கிட்டே பேசட்டுமா?” ஆர்வமாக கேட்டார்.
“ப்பா என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டுடீங்க? உங்க மனசு நிறைந்த சம்மதமும் ஆசிர்வாதமும் வேணும் ப்பா” என்றாள் கண்ணீரோடு.
“இந்த முறை என் பொண்ணை நல்லா பார்த்துப்பானான்னு நானே நேர்ல கேட்டா திருப்தியா இருக்கும் போதும்மா பட்ட வேதனை எல்லாம் இனிமேல் நீ சந்தோஷமா இருந்ததை பார்த்தாலே நாங்க ரெண்டுபேரும் நிம்மதி கண்ணை மூடிடுவோம்” என்றார் கண்ணீரோடு….
“அப்பா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?” என்று அவள் வேதனையோடு சொன்னாள்.இருவரையும் சமதானம் செய்துக் கொண்டிருந்தார் அஞ்சலி.
தர்ஷனின் கைப்பேசி எண்ணிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.இவனும் யோசனையோடு அழைப்பை எடுத்தவன் “ஹலோ” என்றதும்
மறுமுனையில் “ஹலோ நான் ஆதிரையோட அப்பா மூர்த்தி பேசுறேன்”
“சொல்லுங்க அங்கிள் நானே உங்களை நேர்ல பார்த்து பேசனும்னு நினைச்சுட்டு இருந்தேன் நீங்களே கால் பண்ணிட்டீங்க” என்று அவனே ஆரம்பித்தான்.
அவனாக நேராக பேசவும் நிம்மதியடைந்தவர் “நாளைக்கு சாயங்காலம் பேசலாமா?” என்றதற்கு அவனோ “ஏன் அவ்வளவு நேரம்? காலையில் வந்து பேசட்டுமா? நீங்க பிஸியா அங்கிள்?” அவன் இன்னும் வேகப்படுத்தினான்.
அவன் சொன்ன பதிலைக் கேட்டு சிரித்தவர் “சரி வாங்க உங்களுக்கு வேலை இருக்குமேன்னு தான் மாலையில் வரச் சொன்னேன்” என்றார்.
“இப்போ எனக்கு ஆதியும் வியனும் தான் முக்கியம் அப்புறம் தான் மற்ற விஷயங்கள் எல்லாம்” என்றான்.
அவனுடைய ஒற்றை பதிலில் நிறைவடைந்தவர் “சரி வாங்க” என்று கைப்பேசியை வைத்து விட்டார்.பக்கத்தில் இருந்த அஞ்சலியும் அவரும் அவன் பேசுவதைக் கேட்டு திருப்தி அடைந்தவர் இதை விட வேறென்ன வேண்டும்? என்ற நிலைமையில் இருந்தனர்.
இரவு வானொலியில் தனது நிகழ்ச்சியில் காதலைப் பற்றி நிறைய பேசியவன் கடைசியில் “நேசிக்க இங்கே எவ்வளவோ இருந்தும் உலகத்தையே மறந்து உன்னை மட்டும் நேசிக்கும் மனதை என்னச் சொல்லி ஆற்றுவேன் என்னருகே நீ இல்லை” என்ற கவிதையை அவனின் காந்தக் குரலில் சொல்லியது அவளுக்கானது என்று அறிந்திருந்தாள் ஆதிரை.
அந்த வார்த்தையை மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டவளின் நெஞ்சம் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தது.தன் அப்பா பேசும் வரை அவனிடம் பேசாமல் காத்திருந்தாலும் முடியாமல் “நாளைக்கு அப்பாகிட்டே நல்லபடியா பேசுங்க” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.
அவளின் குறுஞ்செய்தி கண்டவனுக்கு நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்தது.ஆதிரைக்கு தன்னை திருமணம் செய்துக் கொள்வதில் சம்மதம் என்பதை புரிந்துக் கொண்டவன் “நன்றி” என்ற ஒரு வார்த்தையோடு முடித்துக் கொண்டான்.
மறுநாள் காலை மூர்த்தி சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடம் முன்னதாக வந்தவன் அழைப்பு மணியை அழுத்தினான்.கதவை திறந்தவர் “உள்ளே வாங்க” என்று அழைத்ததும் கையை நீட்டி “அங்கிள் நான் ருத்ரதர்ஷன்” என்று அறிமுகப்படுத்தியவனிடம் “நான் மூர்த்தி இவங்க என்னோட மனைவி அஞ்சலி” என்று அறிமுகப்படுத்த அஞ்சலியைப் பார்த்து “வணக்கம் அத்தை” என்றதற்கு சரியென்பது போல் தலையசைக்க அவனை இருக்கையில் உட்கார சொன்னார் மூர்த்தி.
அஞ்சலியும் மூர்த்தியும் தர்ஷனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் எதுவும் பேசாமல் இருப்பது அவனுக்கு அசவுகரியமாக இருக்க அவனே தயக்கத்தோடு முதலில் “ஆ… ஆதி” என்று இழுக்க…
“எங்களுக்கு எல்லாமே தெரியும் தர்ஷன் அதே மாதிரி ஆதிரையையும் அவ பொண்ணைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்ச போலவே உங்க குடும்பத்துல இருக்கிறவங்களுக்கும் தெரியுமா?” என்றார்.
“இன்றைக்கு என்னோடு சேர்ந்து அம்மாவும் வரேன்னு சொன்னாங்க ஆனால் அப்பாத் தான் முதல்ல உங்களை என்னைச் சந்திச்சு வரச் சொன்னாங்க நீங்க எப்போ வரச் சொல்லுறீங்களோ நம்ம ரெண்டு குடும்பமும் சந்திச்சு பேசலாம் ஆதிரையோட அண்ணனையும் அவங்க குடும்பத்தையும் வரச் சொல்லுங்க ஏன்னா எனக்கு உடன் பிறந்தவங்க யாரும் இல்லை” என்று தன்னைப் பற்றிய மற்ற விவரங்களையும் சொன்னான்.
அவனின் முன்னேற்பாடான பேச்சில் நிறைவடைந்தவர்கள் “எங்களுக்கும் முழு சம்மதம்” என்றதும் அவர்கள் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கியவன் அவளை தேடியவன் “அத்தை வியன் எங்கே?”
அவரோ சிரித்துக் கொண்டே “வியன் ஸ்கூல் போயி இருக்கா ஆதி அங்கே உள்ளே பால்கனில வெயிட் பண்ணுற” என்றார்.
அவனும் லேசாக தலையை பின்னால் தடவியபடி சிரித்துக் கொண்டே “தாங்ஸ் அத்தை அங்கிள்” என்று கதவை திறந்து உள்ளே சென்றான்.