• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
207
உன் விழியோடு நானாகிறேன் -14

சட்டென்று அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.அவனது இந்தச் செய்கையினில் அதிர்ச்சியாகி இருந்தவளைப் பார்த்து சிரித்த தர்ஷன் “ப்ச் விடுங்க ஆதி ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன்”

அவளோ அவனை முறைத்தப்படி “திடீர்னு இப்படி” தயங்கியபடி சொன்னாள்.

அவனோ “நீங்க அழுறீங்க எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை அதான் சாரி” என்றான்.

அவளோ இதற்கு மேல் அந்த பேச்சை வளர்க்காமல் அமைதியாகிப் போனாள்.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் “இனிமேல் அரவிந்த் பார்த்தால் இப்படி ரியாக்ட் பண்ணக் கூடாது”

அவளோ “ம்ம்..” என்றாள்.

அவனோ “என்னைப் பார்த்து பதில் சொல்லுங்க”

அவளுக்கு ஏனோ ஒருவித தயக்கமாக இருந்தது.அதற்கு மேல் அவளை கட்டாயப்படுத்தாமல் அமைதியாக இருந்தான்.

“எங்கே போகலாம்?”

“வீட்டுக்கு போகலாம்”

“எதுவும் சாப்பிடலையே ஆதி எதாவது சாப்பிட்டுட்டு போகலாம்”

“எனக்கு எதுவும் வேண்டாம் நான் வீட்டுக்கு போகனும்”

“ரெண்டு பேரும் போறோம்னு நினைச்சேன்” என்றான்.

அவனைப் பார்த்து முறைத்தவள் திரும்பவும் திருப்பிக் கொண்டவள் தனது கைப்பேசியில் தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு தான் அங்கிருந்து அவசர வேலையாக சென்று விட்டதாக குறுஞ்செய்தி அனுப்பினாள்.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் சிரித்தப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் அவளை.அவளோ அவனை நிமிர்ந்தே பார்க்க மாட்டேன் என்று தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருந்தாள்.

அவனோ “என் மேல கோபமா?”

அவளிடம் பதிலில்லை.ஆமாம் என்று புரிந்துக் கொண்டான்.அவளது கரங்களைப் பிடித்துக் கொள்ள இப்பொழுது அவளால் தடுக்க முடியவில்லை.

சிறிது நேரத்திற்கு முன்னால் இதே கரங்கள் தானே அவளுக்கு ஆதரவு அளித்தது.அவளது விரல்களை தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டவன் “நான் இந்த மாதிரி இப்போ செய்யலைன்னா ஆதி நீ அழுதுட்டே இருப்பே அன்றைக்கு இப்படித் தானே பெங்களூர்ல தனியாக இருந்தே” என்று அவன் சொல்லவும் இவளோ அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.

அவனோ அதே புன்னகை மாறா பாவனையோடு நிமிர்ந்து அவள் முகத்திற்கு அருகே வந்தவன் “எப்போ மதனோட கல்யாணத்துல நீயும் சிந்தியாவும் பேசிட்டு இருந்தீங்கல்ல அப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு ஆதி.பேசி பழகி பிடித்தக் காதலை விட இன்னொருத்தர் மேல நீ காட்டுன அன்பும் அக்கறையும் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அதனால் அன்னையிலிருந்தே உன்னைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.என்னைப் பற்றியும் உன்னை தெரிந்துக் கொள்ள பேச வைச்சேன் இது ஒருவிதமான சுயநலமா இருக்கலாம் ஆனால் உண்மையான அன்பு கிடைக்க நான் செய்த சின்ன முயற்சி என்னைப் பற்றி முழுசா தெரிந்தால் என்னை அவாய்ட் பண்ணுடுவியோன்னு பயந்தேன் அதான் உன்னைச் சுற்றியே என்னையும் சேர்த்துக் கொண்டேன் அன்றைக்கே நீ நொருங்கிப் போன பொழுது ஆதரவாக இருக்க முயற்சித்தேன் முடிந்தததை செய்தேன் இப்போ என் கரங்களுக்குள்ளே பொத்தி வைச்சுக்கிட்டேன் இப்போ உன்னுடைய வீட்டுக்கு போக வேண்டாம் என்னுடைய வீட்டுக்கு போகலாம் என்னைப் பத்தி முழுசா சொல்லுறேன்” என்றான்.

அவன் சொல்லச் சொல்ல அவளால் எதையும் முழுதாக நம்ப முடியவில்லை.எல்லாம் எதிர்பாராமல் நடந்தது என்று மனம் சொன்னாலும் ஏதோ ஒரு நெருடல் அவள் செல்லும் இடங்களில் எல்லாம் அவனும் ஆதரவாக இருந்தான்.

அவளோ எதுவும் பேசாமல் அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் இருந்தாள்.

ஒரு பெரிய வாயிலைக் கொண்ட அந்த வாசலை திறக்கவும் வீட்டின் முன்னால் இருந்த பாதையே அவ்வளவு நீண்டதாக இருக்க இவர்கள் போய் இறங்கவும் காரின் கதவை திறக்க ஒருவர் வந்தார்.

அவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.அந்தப் பெரிய கட்டிடத்தின் உள்ளே எல்லா வசதிகளும் நிரம்பிய பெரிய நீண்ட வரவேற்பறை அங்கே விலையுயர்ந்த இருக்கைகள் அழகு சார்ந்த பொருட்கள் பெரிய அளவிலான படுக்கைககள் என்று எல்லாவற்றையும் சுத்திக் காட்டினான்.

அவன் வாழும் வாழ்க்கை முறையும் இவள் வாழும் வாழ்க்கை முறைக்கு வானத்திற்கும் பூமிக்குமான இடைவெளியாக இருந்தது.

அவனுடைய நிறுவனத்தைப் பற்றி எல்லாம் சொன்னான்.இவன் எல்லாத் துறைகளிலும் கணிசமான தொகையை முதலீடாக போட்டு அதில் வரும் லாபத்தை இன்னொரு தொழிலில் முதலீடாக்குவான்.

இப்பொழுது எந்த தொழிலில் நல்ல வளர்ச்சி என்பதை புள்ளி விவரங்களுடன் அவனுக்கு அதைப் பற்றிய விவரங்களை தயார் செய்து அனுப்பும் பணிக்கான நிறுவனத்தை தான் தர்ஷன் பெங்களூரில் வைத்திருந்தான்.அதில் தான் நேஹாவும் முக்கியமான பொறுப்பில் இருக்கிறாள்.

இவர்கள் அனுப்பும் எல்லாவற்றிருக்கும் இவன் மூதலீடு செய்வதில்லை.

அதில் ஒன்று தேர்வு செய்வதே பெரிய விஷயம். சில நேரங்களில் எந்த துறையும் தேர்ந்தெடுக்காமல் சம்பந்தமே இல்லாத இன்னொரு தொழிலில் தன் முதலீடுகளை போடுவான்.இப்படி எல்லாவற்றிலும் இவன் ஒரு பங்குதாரனாக இருப்பதால் வெளியே தெரியாத வளர்ச்சியும் செல்வாக்கும் அவனுள் இருந்தது.

காண்பது எல்லாம் கனவா? இல்லை நினைவா? என்ற நிலைமையில் இருந்தாள் ஆதிரை.எந்தவொரு பணத்திற்காக அரவிந்த் அவளை விட்டுப் பிரிந்தானோ? இன்று எல்லாம் இங்கே கொட்டி கிடந்தது தர்ஷனிடம்.

முதலில் எல்லாவற்றையும் வியப்பாக பார்த்தவள் பிறகு யோசிக்கத் தொடங்கினாள்.

கடைசியாக அவனிடம்

“இதைப் பத்தி எல்லாம் இப்போ என்கிட்ட சொல்லுறீங்க தர்ஷன்? இதை நாம விரும்ப ஆரம்பித்த போதே நீங்க சொல்லி இருக்கலாம் எல்லாம் மலைப்பாகவும் இருக்கு ஏதோ ஏமாற்றமாகவும் இருக்கு எப்படி நமக்குள்ளே ஒத்துப் போகும்னு எனக்குத் தெரியலை ஏற்கனவே ஒரு வாழ்க்கையில் தோல்வி கண்டவள் திரும்பவும் அதே தவறை செய்ய நான் விரும்பலை தர்ஷன் வியன்காவிற்கு இதுல எந்த உரிமையும் இருக்காதே! என்ன இருந்தாலும் அவள் இன்னொருவனின் குழந்தை தானே” என்று அவள் மனதில் உள்ளதை அப்படியே அப்பட்டமாகச் சொன்னாள் ஆதிரை.

இதற்கு மேலும் மறைத்து பயனில்லை என்ற நிலைமையில் அவள் இருந்தாள்.அவள் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டவன் நீண்ட பெருமூச்சு விட்டவன் அவளை பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர வைத்தவன் அவளுக்கு அருகில் உட்கார்ந்து “ஆதி ஏன் எல்லாத்தையும் தப்பாவே நினைக்கிறே நல்ல விஷயங்களும் இருக்கு வியன்காவை நான் முறைப்படி தத்து எடுத்துக்கிறேன் அப்போ அவ என்னோட முதல் பொண்ணாக மாறிடுவா அப்புறம் அவளுக்கும் எல்லாவற்றிலும் உரிமையாகிடும் நமக்கான வித்தியாசம் பொருளாதாரத்தில் பெரிதாக இருக்கலாம் ஆனால் மனது ரெண்டும் ஒத்துப் போகுதுல்ல இந்த உலக வாழ்க்கையில் எல்லாமே சரியா இருக்கிற பொருத்தத்தை நம்மாள பார்க்கவும் முடியாது அப்படியே இருந்தாலும் அது கலைந்து போற மேகங்களாகத் தான் இருக்கும் நான் அப்படி இருக்க விரும்பலை மண்ணுக்குள்ளே ஊடுருவி போற வேராக மரமாக நிலைச்சு இருக்கனும் தான் விரும்புறேன் உன்னுடைய வாழ்க்கையை மொத்தமா விட்டுட்டு என்னோடு வரச் சொல்லலை என் வாழ்க்கை முறையில நீயும் உன் வாழ்க்கை முறையில நானும் பாதி பாதியாக வாழலாம்.அப்போ ரெண்டுபேரையும் புரிந்துக் கொள்ளுற வாழ்க்கை சரியாகும் ஏற்கனவே நாம ஆரம்பிக்க போற இந்த வாழ்க்கை ரொம்ப தாமதம் இன்னும் தாமதப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன் பிறகு உன் முடிவை யோசிச்சு சொல்லு இப்பவும் சொல்றேன் நீ முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி என்னைப் பத்தியும் வியன்காவையும் நல்லா யோசி” என்று அவள் கரங்களில் சின்னதாக முத்தம் கொடுத்து அனுப்பினான்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு அமைதியாக இருந்தாள்.

இந்த முறை அவளுடன் அவன் செல்லவில்லை.தனியாகவே தனது காரில் அவளை அனுப்பி வைத்தான்.அவளுக்கான நேரத்தை இன்னும் கொடுத்தான்.

வீட்டின் வாசலில் போய் இறங்கியவள் தனது வீட்டிற்கு செல்லவும் பின்னால் ஒருவன் அவளுடைய கையில் சாப்பாடு பையை ஒன்றை கொடுத்தான்.இவளோ என்னவென்று கேட்பதற்குள் அவளுடைய கைப்பேசி அழைத்தது.

தர்ஷன் தான் அழைத்திருந்தான்.அழைப்பினை எடுத்து “ஹலோ” என்றதும்

“நீ இன்னும் எதுவும் சாப்பிடலை அதான் ஆர்டர் போட்டேன் சாப்பிட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் யோசி வியன்காவுக்கு பிடிச்சதும் சேர்த்து ஆர்டர் செய்து இருக்கேன் மறக்காமல் கொடுத்துரு” என்றான்.

சரியென்று அழைப்பை துண்டித்தாள் ஆதிரை.அவன் அனுப்பி வைத்த பையை கையில் ஏந்தியபடி உள்ளே சென்றாள்.அப்படியே போய் யோசனையோடு மெத்தையில் சரிந்தவளுக்கு பசி எடுத்தது.

ஓரமாக வைத்திருந்த அந்த சாப்பாட்டு பையிலிருந்து தனக்கான சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டவள் திரும்பவும் தன் மெத்தையில் படுத்தவள் யோசனையில் இருந்தவளுக்கு எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிப் போனாள் ஆதிரை.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
207
வீட்டின் அழைப்பு மணி சத்தத்தைக் கேட்டு எழுந்தவள் கதவைத் திறந்தாள்.அவளின் பெற்றோரும் வியன்காவும் வந்திருந்தனர்.

“வாங்க அம்மா” என்று அழைத்தாள்.

அவளோடு இருப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று அவளுக்கு புரிந்தது.

அவளது முகத்தை பார்த்த அஞ்சலி “என்னாச்சு முகமே சரியில்லை”

“தூங்கிட்டேன் அம்மா வேற ஒன்னும் இல்லை”

அங்கே இருந்த சாப்பாட்டு பையைப் பார்த்தவர் “எங்கேயோ ரிஷப்ஷனுக்கோ போறேன்னு சொன்னே அங்கே சாப்பிடலையா?”

“இல்லை அம்மா”

“ஏன்?” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த பையை திறந்து பார்த்த வியன்கா அதில் இருந்த கேக்கைப் பார்த்தவள் “அம்மா தர்ஷன் வாங்கி கொடுத்தாரா?” என்று அதை வெளியே எடுத்தப்படியே கேட்டாள்.

ஆதிரையின் பெற்றோர் அவளை கேள்வியாகப் பார்த்தனர்.ஆதிரை அவசரமாக “யார் சொன்னாங்க?” என்று வேகமாக கேட்கும் பொழுது வியன்கா “அம்மா இரண்டு நாள் முன்னாடித் தான் தர்ஷன்கிட்டே போன்ல பேசும் போது புதுசா இந்த கேக் வந்திருக்கு சாப்பிட்டு பார்க்கனும்னு சொன்னேன் கரெக்டா வாங்கித் தந்துட்டாங்களே இதோ ஸ்வீட்டின்னு கூட மென்ஷன் செய்து இருக்காங்க” என்று அந்த அட்டைப் பெட்டியைக் காட்டினாள்.

ஆதிரை திருதிருவென்று விழித்தாள்.ஆதிரையின் அம்மா வியன்காவிடம் “தர்ஷன் யாரும்மா?” என்று கேட்டதற்கு “பாட்டி உங்களுக்கு தெரியாதா அவரு அம்மா பெஸ்ட் ப்ரெண்ட் நாங்க அவரோட பீச்சுக்கு போனோம் இதோ எனக்கு வளையல் எல்லாம் வாங்கித் தந்தாங்க” என்று எல்லாவற்றையும் காட்டியவள் கடைசியாக ஆதிரையின் கைப்பேசியில் அவர்கள் எடுத்த புகைப்படத்தையும் காட்டினாள்.ஆதிரையின் பெற்றோர் இருவரும் அதைப் பார்த்து அமைதியாக இருந்தனர்.

அஞ்சலி ஆதிரையைப் பார்த்து என்னவென்று விசாரிக்காமல் அமைதியாக தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.அவளது அப்பா வியன்காவோடு இருந்தார்.

இருவரும் எதுவும் கேட்காமல் போனதும் ஆதிரைக்கு என்னச் செய்வதென்று தெரியாமல் திணறிப் போனாள்.

அவள் அப்பாவின் அருகில் சென்று “அப்பா என்னன்னு கேட்க மாட்டீங்களா?”

அவரோ இல்லை என்பது போல் தலையாட்டினார்.அவளோ விடாமல் “அப்பா உங்களுக்கு என் மேல அக்கறை இல்லையா?” என்று கோபப்பட்டாள்.அவன் மேல் உள்ள கோபம் யார்மீது காட்டுவது தெரியாமல் செய்துக் கொண்டிருந்தாள்.

அவரோ அவளை ஒரு பார்வை பார்த்தவர் “அன்றைக்கு நீ விவகாரத்து பண்ணும் போது எங்க யார்கிட்டயும்
கேட்கலை அப்போவே நாங்க உன்கிட்ட ஏன் செஞ்சேன்னு கேள்வி கேட்கலை இப்போ என்னன்னு கேட்கப் போறோம் நாங்க காட்டித் தந்த வழி உனக்கு சரியா அமையலை ஆனால் நீ தேர்ந்தெடுக்கிற வாழ்க்கை இப்போ சரியாகத் தானே போய்ட்டு இருக்கு அதனால இனிமேல் நீ எடுக்கிற முடிவும் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றார்.

“அப்பா என்னன்னு என்கிட்டே கேட்காமல் நீங்களாவே முடிவு பண்ணா அது சரியில்லை” என்று மீண்டும் பிரச்சினை செய்தாள்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட அஞ்சலி இருவருக்கும் அருகில் வந்தவர் “என்ன முடிவு எடுத்து அந்த நடத்தனும்னு வம்பு பண்ணிட்டு இருக்கே”

“ம்மா… என்னம்மா நீங்க? நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன் நீங்க என்னன்னா இப்படி சொல்லுறீங்க?”

அதற்கு இருவரும் அவளை பார்த்து முறைத்தபடி ஆதிரையின் அப்பா “உனக்கு பிடிச்ச விஷயத்தை நடத்தனும்னா நீ என்ன பண்ணுவேன்னு எங்களுக்கு தெரியும்” என்றார்.

பத்து நாட்கள் கடந்த நிலையில் சிந்தியா ஆதிரையின் கைப்பேசியில் அழைத்தாள்.

“ஹலோ ஆதி எப்படி இருக்கே?போன் பண்ணவே மாட்டேங்கிறே?”

அவளோ சோர்வோடு “ம்ம்… நல்லா இருக்கேன் நீ நல்லா இருக்கியா? ரொம்ப வேலையா இருந்துச்சு அதான் கால் பண்ண முடியலை சிந்தியா அப்புறம் என்ன விஷயம்?”

அவளோ சிரித்துக் கொண்டே “மதனோட சென்னைக்கு வரேன்”

அவளோ மகிழ்ச்சியாக “எப்போ வர்றே?”

“நாளைக்கு காலையில் அம்மா வீட்டுக்கு வரேன் உன்னைப் பார்க்கனும் போல இருக்கு”

“நைட் என் வீட்டுல தான் சாப்பிட வரனும் சரியா?”

“ம்ம்… அம்மாவும் அப்பாவும் வீட்ல இருக்காங்க?”

“ஆமாம் இருக்காங்க நான் மதன்கிட்டே சொல்லட்டுமா?”

“வேண்டாம் நான் சொல்லுறேன் அப்படியே தர்ஷனையும் வரச் சொல்லட்டுமா? அவரை பார்த்தும் ரொம்ப நாள் ஆகுது”

இவளோ பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“என்ன தர்ஷனை வரச் சொல்லுறது உனக்கு பிடிக்கலையா?”

“அப்படி இல்லை இருந்தாலும்” என்று நிறுத்தினாள்.

“உனக்கு விருப்பம் இல்லைன்னா பரவாயில்லை விடு” என்றாள்.

ஆதிரை “சரி வரச் சொல்லு ஆனால் தேவையில்லாமல் பேசக் கூடாதுன்னு சொல்லிடு சிந்தியா”

அவளோ “ஹேய் அதெல்லாம் நான் எப்படி சொல்ல முடியும்? அப்புறம் தர்ஷன் வருத்தப்படுவாறு அவர் வரட்டும் மதன்கிட்டே சொல்லி பார்த்துக்கலாம்” என்று இருவரும் கைப்பேசியில் பேசி வைத்து விட்டார்கள்.

ஆதிரை தன் பெற்றோர்களிடம் சிந்தியாவும் அவள் கணவனும் வருவதைச் சொன்னாள்.மூவருமாக என்ன விதமான உணவு சமைக்கலாம் என்று பேசி முடிவெடுத்தனர்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top