Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 207
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன் -13
வானொலி நிகழ்ச்சியில் நேரலையில் கலந்துக் கொண்டு பேச ஆரம்பித்தான் ருத்ரன்.அவளுடான முதல் சந்திப்பை அழகாகச் சொன்னான்.
எதிர்பாராத சந்திப்பை இனிக்க பேசினான்.
அவனுக்கான எண்ணங்களைப் பற்றி தான்.இருவரும் ஒருவரையொருவர் நினைக்கத் தொடங்கினார்கள்.
மறுநாள் வேலைக்கு தயாராகிக் கொண்டவள் கரங்களில் வளையல் அணிந்துக் கொண்டாள்.எப்போதும் கைக்கடிகாரத்தை மட்டும் போட்டுக் கொள்பவள் இன்று நாலைந்து வளையல்களை போட்டுக் கொண்டவளின் முகத்தில் சின்னதாய் புன்னகையும் சேர்ந்துக் கொண்டது.
நேரில் சந்திக்காமல் இருந்தாலும் கைப்பேசியில் இருவரும் பேசியதோடு குறுஞ்செய்தியும் அனுப்பிக் கொண்டனர்.சில விஷயங்களைப் பற்றி பகிர்ந்தும் தங்களைப் பற்றி தெரிந்தும் கொண்டனர்.வியன்காவையும் பற்றி பேசாத நாளும் இல்லை.அவளிடமும் பேசுவான்.ஒரு வாரம் சென்ற நிலையில் ஆதிரையின் எண்ணிற்கு அழைத்தான் தர்ஷன்.
“ஹலோ”
“ம்ம்… சொல்லுங்க”
“ஆதி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”
“சொல்லுங்க என்ன விஷயம்?”
“ஒரு வாரம் கழிச்சு என்னோட ப்ரெண்ட்டுக்கு ரிஷப்ஷன் இருக்கு உங்களால வர முடியுமா?”
அவளோ யோசனையோக “தேதி என்னைக்கு?”
“அடுத்த வாரம் இதே நாள்”
“அடுத்த வாரம் இதே நாள்ல எனக்கும் ஒரு பங்ஷனுக்கு போக வேண்டி இருக்கு”
“அப்படியா! எங்கே?”
இடத்தைச் சொன்னாள். அதைக் கேட்டவனோ “அந்த இடத்துக்கு தான் நானும் போறேன்” என்றான்.
இவளும் ஆச்சயரியமாக “அப்படியா! நீங்க மிஸ்டர் சிவா அவரோட மகனுக்கு நடக்கிற ரிசப்ஷன் பத்தியா சொல்லுறீங்க”
அவனும் அதே அதிர்ச்சியோடு “ம்ம்… ஆமாம் கல்யாணம் நடக்குறதே என் ப்ரெண்ட்டுக்குத் தான்”
“அப்படியா! எங்க கம்பெனியோட க்ளைண்ட் சிவா சார் அவரு வரவேற்புக்கு அழைச்சு இருக்காரு என்னோட ஹெட்டுக்கு அன்னைக்கு அவரு குடும்பத்துல முக்கியமான கல்யாணம் அதனால என்னையும் மற்றவங்களையும் போகச் சொல்லி இருக்காங்க என்னோடு ரெண்டு வொர்க்கர்ஸ் வராங்க”
“அப்படியா! நானே உன்னை வந்து பிக்அப் பண்ணிக்கிட்டுமா?”
“அதான் என்னோடு ரெண்டுபேரு வராங்கன்னு சொன்னேன்ல”
“அதனால என்ன? அவங்களையும் ஒன்னா அழைச்சுட்டு போகலாம்”
“எதுக்காக இவ்வளவும் செய்றீங்க?”
“ஏன் நான் செய்யக் கூடாதா?”
“அப்படி சொல்ல வரலை திடீர்னு எதுக்கு தான்னு கேட்கிறேன்”
“அங்கே எனக்கு தெரிஞ்சவங்களோடு உன்னோடு போகனும்னு ஆசை உன்னையும் அறிமுகப்படுத்தலாம் தான்”
“ஏன் இப்பவே”
“இன்னும் தாமதப்படுத்த விருப்பம் இல்லை ஆதி நீயும் வீட்ல நம்மளைப் பத்திச் சொல்லு” என்றான்.
அதற்கு மேல் அவனிடம் அவள் எந்த கேள்வியும் கேட்கவில்லை.திருமணம் முடிந்ததோடு அரவிந்த் அவளை எங்கேயும் அழைத்துச் சென்றதும் இல்லை.மற்றவர்களுக்கு இவளை அறிமுகப்படுத்தியதும் இல்லை.விருப்பம் இருந்தால் தானே எல்லாம் நடக்கும்.தேவையே இல்லை என்றான பிறகு முக்கியத்துவமும் இல்லை என்றானது.
ஆனால் அதற்கு மாறாக தர்ஷன் இருக்கிறான்.
“வியன் தனியா இருப்பாளா?”
“அம்மாகிட்டே விட்டுட்டு வரேன்”
“ம்ம்… சரி இன்னும் தயாராக இரு அடுத்து அம்மா,அப்பா எல்லோரையும் பார்க்கனும்”
“எதுக்கு இவ்வளவு அவசரம்?”
என்று அவள் கேட்டதும் அவனிடம் பதிலில்லை.அமைதியாக இருந்தான்.
“ஹலோ தர்ஷன்”
“ம்ம்… சொல்லுங்க”
“என்னாச்சு?”
“ஒன்னுமில்லை”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே!”
“என்ன சொல்ல முடியும்? அதான் அமைதியா இருந்துட்டேன்”
“நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலை”
“உங்களுக்கு இன்னும் என் மேல நம்பிக்கை வரலைன்னு நினைக்கிறேன் என்னுடைய தப்பு தான் கட்டாயப்படுத்தி இருக்கக் கூடாது” என்றான் தர்ஷன்.
அவள் பதில் சொல்லவில்லை.அமைதியாக இருந்தாள்.சட்டென்று எல்லாவற்றையும் வேகமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவளிடம் இல்லை.அவனும் வேகமாக பேசி விட்டான்.
இரண்டு பக்கமும் பெருத்த அமைதி.நேரம் கடந்தது.சட்டென்று அணைப்பை துண்டிக்க இருவருக்கும் விருப்பமில்லை.ஏதோ ஒரு இணக்கம் இருவரையும் தடுத்தது.ஐந்து நிமிடங்கள் கரைந்தது.இருவரின் மூச்சுச் சத்தம் மட்டும் கேட்டது.
ஒரே நேரத்தில் இருவரும் “சாரி” என்றனர்.இருவருக்கும் வியப்பு.இரண்டு பேரின் முகத்திலும் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
ஆதிரை “சாரி தர்ஷன் என் நிலைமையை உங்ககிட்ட சொல்லி இருக்கனும் என்னால…” என்று அவள் பேசுவதற்கு முன்பே அவனோ இடையினில் வந்து “சாரி ஆதி உன்னையும் என் பொண்ணையும் சீக்கிரமா பத்திரமா என்கிட்டயே வைச்சுக்கனும்னு நினைச்சுட்டேன் அதனாலத் தான் உன்னைப் பத்தி யோசிக்கலை” என்று அவள் சொல்ல வருவதற்கு முன் நிலைமையைப் புரிந்து தன் நிலையைச் சொன்னான்.
அவனைப் பற்றி புரிந்துக் கொண்டவள் “கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிக்கலாம் தர்ஷன் டைம் வேணும்”
“சரி அவசரம் இல்லை விருப்பம் இருந்தால் போகலாம்” என்றான்.
அன்பை பரிமாறி வெற்றிப் பெறுவதை விட சில நேரங்களில் அங்கே நமக்கானவர்களுக்காக தோற்பதிலும் அவர்கள் வெற்றிப் பெறுவதிலேயே இந்த அன்பு இன்னும் ஆழமாகிறது.
ஆதிரையும் தர்ஷனும் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வின் நிதர்சனத்தை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.யாரையும் எதிலும் கட்டாயப்படுத்துவதை அவர்களின் போக்கிலே விட்டு விடுவதும் ஒரு அன்பு தான் என்பதை புரிந்துக் கொள்ள தொடங்கினார்கள்.
அந்த விஷயத்தைப் பற்றி திரும்ப இருவரும் பேசவில்லை. ஒரு வாரம் கடந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் அன்று ஆதிரையின் அழைப்பிற்காக தர்ஷன் காத்துக் கொண்டிருந்தான்.
அவளோ அவனுக்கு அழைக்கவில்லை.மாறாக இவனும் தனது நண்பனின் திருமண நிகழ்வு என்பதால் அவனே தயாராகி சென்றான்.
மிகப்பெரிய மண்டபத்தில் முக்கியமான பிரமுகர்கள் அழைத்திருந்த அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வந்திருந்தனர்.
தர்ஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகினில் வாசலுக்கு வரும் போது ஆதிரை அவனுடைய கைப்பேசி எண்ணிற்கு அழைத்தாள்.இவனும் யோசனையோடு அழைப்பை எடுத்தவன் “ஹலோ”
“தர்ஷன் பங்ஷனுக்கு வந்துட்டீங்களா?”
“ஆமாம்”
“நானும் அங்கே தான் வந்துட்டு இருக்கேன் நாம நேர்ல சந்திக்கும் போது என்கூட வொர்க் பண்ணுற கோ வொர்க்கர்ஸ்ஸையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தனும்”
அவள் அப்படிச் சொன்னதும் அவன் முகத்தில் புன்னகை பரவியது.
“பிஸியா?”
“இல்லை சொல்லுங்க”
“அப்புறம் திரும்ப வரும் போது நான் உங்களோடு தான் வருவேன்” என்றாள்.அதைக் கேட்டதும் தர்ஷனுக்கு ஆதிரையின் இந்த அணுகுமுறை பிடித்திருந்தது.ஒன்றாக வராமல் நிகழ்ச்சியில் வைத்து எல்லோரிடமும் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்துவதான யோசனை சரியாக இருந்தது.
தர்ஷன் தன் நண்பர்கள் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே ஆதிரை தன்னுடன் வேலைச் செய்பவர்களோடு வந்தாள்.அங்கே அவள் முதலில் பார்த்தது அரவிந்த் மற்றும் அவனது மனைவி.
அங்கே அவனைப் பார்க்கவும் ஆதிரைக்கு முகமே மாறிப்போனது.அவளைப் பார்த்த அரவிந்த் தன் மனைவியின் காதருகே ஏதோ மெதுவாகச் சொன்னான்.
உடனே அவள் நேராக ஆதிரையின் அருகே வந்தவள் சிரித்துக் கொண்டே தன் கரங்களை முன்னால் நீட்டியவள் “ஹாய் ஐ எம் நேஹா நீங்க அரவிந்த்தோட எக்ஸ் வைப்பா எப்படி இருக்கீங்க?” என்றதும் அவளோடு வந்தவர்கள் எல்லாம் அவளை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.ஆதிரைக்கு அவனைப் பார்த்ததுமே கைகள் நடுங்க ஆரம்பிக்கவும் அப்படியே நின்றாள்.
அரவிந்த்தின் திட்டமே எந்த வேலையை வைத்து அவள் தன்னை அவமதித்தாலோ அந்த வேலையில் இருக்கும் போதே அவமானப்படுத்த வேண்டும் என்பது தான்.
ஆதிரையுடன் வேலைச் செய்பவர்களுக்கு அவள் விவகாரத்தானவள் என்பது மட்டும் தான் தெரியும்.தனிப்பட்ட. விஷயங்களை எல்லாம் அவள் தெரியப்படுத்துவது இல்லை.ஆனால் எல்லாம் தலைகீழாகிப் போனது.
ஆதிரை அமைதியாக நிற்கவும் நேஹா விடாமல் “ஏன் என்கிட்ட பேச விருப்பம் இல்லை நானே எந்த ஈகோவும் இல்லாமல் பேசுறேன் ரொம்ப திமிரோ? அதான் அரவிந்த் உன்னை வேணாம்னு விட்டுட்டு வந்துட்டாங்களா?” என்றதும் அவனைப் பற்றிப் பேசினாலே ஆதிரைக்கு பயம் பற்றிக் கொள்ளும் அப்படி இருக்க திடீரென்று அவனுடைய மனைவி பேசவும் என்னச் சொல்வதென்று தெரியாமல் திணறிப் போய் நின்றாள் ஆதிரை.சுற்றியிருந்தவர்கள் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்த்தனர்.
அப்பொழுது திடீரென்று ஏற்பட்ட சலசலப்பை கவனித்த தர்ஷன் என்னவென்று பார்த்தான்.அங்கே ஆதிரை நிற்பதை பார்த்தவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் “ஆதி ஆதி இங்கே என்ன செய்றே” என்று அழைத்தவாறே அவளருகில் போய் நின்றான்.
அதுவரை யாருமில்லாத இடத்தில் தனியாக இருப்பதைப் போல் உணர்ந்த ஆதிரை தர்ஷனின் குரலைக் கேட்கவும் அவனைப் பார்த்தாள்.அவனோ எந்த தயக்கமும் இல்லாமல் ஆதிரையின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டபடி நிற்கவும் இதைப் பார்த்து நேஹா மற்றும் அரவிந்த் மட்டுமல்லாது எல்லோருக்கும் பெருத்த அதிர்ச்சியாகிப் போனது.
ஆதிரை திணறலாக தர்ஷனைப் பார்த்தாள்.அவனோ நேஹாவை முறைத்தப்படி “மிஸஸ் நேஹா என்னோட பியான்ஸீகிட்டே என்ன விளக்கம் கேட்கனும்னு நினைக்கிறீங்க?” என்றான் சற்றே கோபமாக.
அவளோ இந்த கேள்வியை எதிர்பாராததால் “சா…சார் சார் அது வந்து”
“இனிமேல் எதுவாக இருந்தாலும் என்கிட்ட கேளுங்க இப்போ முடியலைன்னா பிரச்சினை இல்லை அப்புறமா நாளைக்கு கம்பெனில வைச்சு பேசிக்கலாம்” என்றான்.
நேஹா தலையைக் குனிந்துக் கொண்டு “சாரி சார் எந்த கேள்வியும் இல்லை சாரி மேம்” என்று நேராக அரவிந்த் அருகில் போய் நின்றுக் கொண்டாள்.தர்ஷன் சொன்ன பதிலைக் கேட்டு இப்போது ஆதிரை அதிர்ச்சியாகி அவனைப் பார்த்தாள்.