Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 207
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன்
விடியற்காலையில் எழுந்தவள் காலை வேலைகளை முடித்து விட்டு வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தவள் வியன்காவிடம் “இன்னைக்கு க்ளாஸ்க்கு போறியா?”
“இல்லைம்மா”
“நான் வேலைக்கு போகனுமே!”
“அம்மா இன்னைக்கு எங்கேயாவது வெளியே போகலாமே!”
“சரிம்மா” என்று அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்த எல்லாப் பொருட்களையும் முதலில் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.
காலையிலேயே ஆதிரையின் பெற்றோர் இருவரும் மகனுடைய வீட்டிற்குச் சென்று இருந்தனர்.அதனால் அவர்களே வேலைகளை முடித்து பக்கத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு ஆதிரை தன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாள்.
கொஞ்ச நேரம் இருவரும் சுற்றிப் பார்த்து விட்டு எதாவது சாப்பிடலாம் என்று அமர்ந்தனர்.அங்கே இவர்களுக்கு அருகில் அடுத்தடுத்து என்று சில பேர் தங்களின் குடும்பத்தோடு வந்திருந்தனர்.
அவர்களை வியன்கா எதாவது யோசனையோடு பார்க்கிறாளா? என்று கவனித்தாள்.ஆனால் அது எதுவும் இல்லை.அவள் தான் வந்த வேலையைப் பார்த்தாள்.
இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தனர்.ஆதிரைக்கு வியன்காவை நினைத்து குழப்பமாகவே இருந்தது.
தர்ஷனிடமிருந்து எந்தவொரு குறுஞ்செய்தியும் இல்லை.அவளும் அவனிடம் பேசவில்லை.இதற்கிடையில் சிந்தியாவிடம் கைப்பேசியில் பேசி நலம் விசாரித்தவள் பெங்களூர் சென்றதும் அங்கே நடந்த விவரங்களை எல்லாம் சொன்னாள்.சிந்தியாவோ “கவலைப்படாதே ஆதி அவனை இனிமேல் சந்திக்கிற நிலைமை வராது” என்று அவளால் ஆறுதல் வார்த்தைகள் தான் சொல்ல முடிந்தது.
வியன்காவுக்கு பள்ளியும் திறந்ததால் அவள் அங்கே செல்லவும் ஆதிரை வேலைக்குச் செல்ல என இருவருக்கும் அதிலே நேரம் சென்றது.
தினமும் தர்ஷனின் எண்ணை எடுத்து அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று நினைப்பவள் ஏனோ ஒருவித தயக்கம் அவளுள் இருந்துக் கொண்டே இருந்தது.
நான்கு நாட்கள் சென்றிருந்த நிலையில் எப்போதும் போல் இரவு வானொலி நிகழ்ச்சியைப் போட்டாள் ஆதிரை.
அந்த நிகழ்ச்சியில் “ஹலோ மக்களே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் உங்கள் ருத்ரா திரும்ப வந்துட்டேன் நீங்க என்னை மிஸ் செய்தீங்களா? நான் உங்களை மிஸ் செய்யு இந்த முறை நிறைய பயணம் அதே போல் நிறைந்த அனுபவங்களும் இருக்கு இன்னும் பேசலாம்” என்றான் குதூகலமாய்…
அவனைப் போலவே அவளுக்குள்ளும் ஒரு புத்துணர்ச்சி.சிரித்தப்படியே கேட்க ஆரம்பித்தாள்.அங்கே திருமணத்தில் நடந்த சில நிகழ்வுகளைப் பற்றி சுவாரஸ்யமாகச் சொன்னான்.
அதைக் கேட்கவும் அன்றைய தினத்திற்கு சென்றது போலவே இருந்தது.
சின்னச் சின்ன நிகழ்வுகள் தான் அதை அவன் கூறுவதில் தான் அத்தனை சுவாரஸ்யம் நிறைந்து இருந்தது.முகம் முழுக்க புன்னகையோடு மனதிலே புது தேடுதலோடு அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
நிகழ்ச்சியின் நிறைவுக்கு முன்னர் ருத்ரா வானொலியில் “மனிதர்கள் எல்லோரையும் நேசியுங்கள் ஆனால் மனதார இரசிப்பது பெண்களைத் தான் அவர்கள் எப்போதும் புதிராத புதிர் தான் கண்கள் பேசும் வார்த்தை ஜாலங்களை அவர்களிடமே கற்றுக் கொள்ளலாம் மனம் கவர்ந்தவளை அப்படி பேசும் பெண்ணை சந்தித்து பேசிய பெண்” என்று அவன் நிறுத்தவும் ஆதிரைக்கு மனது திக் திக் என்று இருந்தது.
மனதினுள் ‘தர்ஷன் என்னைப் பத்தி தான் சொல்லுறாங்களா?’ என்று செவியை கூர்மையாக்கி கேட்கும் போது “மணப்பெண்ணை பற்றி பார்க்கலாம்” என்று முடித்து வைத்தான்.
அவள் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கும் போது அவளின் கைப்பேசியிலிருந்து ஒரு சத்தம் குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்று.யாரென்றுப் பார்க்க தர்ஷன் தான் அனுப்பி இருக்கிறான்.
“ஆதி நிகழ்ச்சியை கேட்டீங்களா? எப்படி இருந்துச்சு” என்று அனுப்பியிருந்தான்.
உடனே ஆதிரை “ரொம்ப நாள் கழிச்சு உங்க குரலை கேட்கிறதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” என்ற செய்தியை அனுப்பினாள்.
அவனோ “அவ்வளவு தானா?”
ஆதிரை “வேற என்ன?”
தர்ஷன் “என்னை மிஸ் பண்ணலையா????” கேள்விக் குறிகளோடு அனுப்பினான்.
“அதனாலத் தானே ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொன்னேன்” என்றாள்.
தர்ஷன் “புரியலை” என்றான்.
இவளோ என்ன பதில் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் அவனே கைப்பேசியில் அழைத்தான்.
கைப்பேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க விரல்களின் நடுக்கத்தோடு முடியும் தருவாயினில் அழைப்பினை எடுத்தாள்.
மறுமுனையில் “ஹலோ”
இங்கே ஆதிரைக்கோ எச்சிலை விழுங்குவதே கடினமாக இருந்தது.அமைதியாக இருக்க “நான் பேசுறது கேட்குதா?”
“ம்ம்… சொல்லுங்க”
“நான் ஏன் இன்னும் ரேடியா ப்ரோகிராமுக்கு வரலைன்னு கேட்டீங்களே!”
“ம்ம்… ஆமாம் கேட்டேன்”“அதான் மிஸ் பண்ணிங்களான்னு கேட்டேன்”
“ம்ம்… ஆமாம்”
அவள் அப்படிச் சொன்னதும் மனதிற்குள் அப்படி ஒரு சில்லிட்ட குளிர்ச்சி அவனுக்குள்.மெல்லிய புன்னகை கரைந்தோட “அதுக்கு மட்டும் தானா இல்லை” என்று அவன் நிறுத்தினான்.தர்ஷனின் கேள்வியில் இதயம் படபடவென்று துடித்தது.
என்னசொல்வதென்று தமிழ் மொழியில் எழுத்துக்களை தேடியவள் “அ…துக்கா…க மட்டும் இல்லை” என்று வார்த்தைகளை கோர்வையாக்கிச் சொன்னாள்.
அவன் எதிர்பார்த்த பதிலை அவள் சொன்னதைக் கேட்டவன் “நாளைக்கு சாயங்காலம் வெளியே வியன்காவோடு சந்திக்கலாமா?” என்று தர்ஷன் நேரிடையாக கேட்டான்.
“எதுக்கு” தயக்கத்தோடு கேட்டாள்.
“வியன்கா கேட்ட வளையல் வாங்கிட்டு வந்து இருக்கேன் நேர்ல பார்த்து கொடுக்கலாம்னு எனக்கு விருப்பமாக இருக்கு அனுமதி இருக்கா?”
“ம்ம்… கூடிட்டு வரேன்”
“சரி டைம் என்னன்னு சொல்லிடுங்க."
“ம்ம்…”
“சரி நல்லா தூங்குங்க குட் நைட்” என்றான் நிறைவாய்…
“குட் நைட்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவள் கையில் இருந்த கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இளம் வயதில் காதல் படங்களையும் பாடல்களையும் இரசித்து இருக்கிறாள்.கல்லூரியில் காதல் வயப்பட்டு பேசும் பெண்களை 'என்ன இவள் இப்படி பிதற்றுகிறாள்’ என்று தான் யோசித்து இருக்கிறாள்.
ஆதிரையைப் பொறுத்தவரை காதல் என்பது இருமனங்கள் இணைவது என்பது தான்.பெற்றோர்களின் சம்மதத்தோடு நடக்கும் திருமணத்தில் எல்லோரின் அன்பும் ஆசிர்வாதத்தோடு திருமணம் முடிந்து தன் கணவனை காதல் செய்து வாழ்வது.அப்படி பெரிய கனவுகளோடு திருமணத்தை முடித்தவளுக்கு முழுதாக இரண்டு மாதங்கள் கூட அந்த அன்பு பொய்யானது என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.
முகம் மற்றும் உடல் முழுக்க காயங்களோடும் செவி முழுவதும் காதலனாய் நினைத்த கணவனின் கெட்ட வார்த்தைகளும் இன்னொரு அம்மாவாக நினைத்தவரின் வசவு மொழிகளும் ஆரம்பத்தில் இருப்பது இருக்கும் போகப் போக சரியாகும் என்று ஆலோசனைகளும் நிறைந்து விழிகளில் கண்ணீர் வழிந்தோடியபடியே மனம் முழுவதும் ஏகப்பட்ட வடுக்களும் ரணங்களும் நிறைந்து உதடுகள் புன்னகையை தொலைத்து வாழ்ந்தவளின் வாழ்க்கையில் இப்போது இந்த முப்பது வயதைத் தொட்டுக் கொண்டு இருப்பவளுக்கு சொல்லா முடியாத நிறைந்த மகிழ்ச்சியோடு ஒரு ஆடவனின் மேல் ஒரு உணர்வு.
என்னதென்று தெரியாமல் தவித்தபடி நெற்றியில் வியர்த்த வியர்வையும் மனதில் தோன்றிய பதற்றத்தோடு கூடிய மகிழ்ச்சியை சுமந்தபடி நெஞ்சினில் இரண்டு கைகளையும் வைத்தவள் அப்படியே கண்மூடி மெத்தையில் சாய்ந்தாள்.
தன் வீட்டின் நீண்ட வரவேற்பறையின் நடுவில் கையில் கைப்பேசியில் வைத்துக் கொண்டு அதில் இருந்த திரையில் இருந்த ஆதிரையின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் தர்ஷன்.
அவளின் புன்னகை முகமாய் இருந்த புகைப்படத்தின் முன்னே விழிகள் இரண்டும் சிவந்து கண்ணீரோடு நின்று இவனை அஞ்சுவது போல் பார்த்த பார்வையும் நினைவிற்கு வந்து போனது.
பெண்கள் என்றாலே ஏமாற்றுபவர்கள் என்று நம்பி வாழ்ந்தவனுக்கு ஒரு பெண்ணின் அதீத வலியை கண்களால் அதைக் காட்ட முடியும் என்று ஆதிரையைப் பார்த்து தான் அவன் தெரிந்துக் கொண்டான்.
என்றும் மறவாத விழிகளை இனிமேல் அன்பும் ததும்ப காணப் போவதை எண்ணி அவன் நெஞ்சில் ஒரு ஏதோ இனம் புரியாத இன்பம் நிறைந்துக் கொண்டது.
மறுநாள் தயக்கத்தோடு வேலைகளை முடித்தவள் வியன்காவிடம் “தர்ஷன் உனக்கு வளையல் வாங்கிட்டு வந்து இருக்காங்களாம் உன்கிட்டே கொடுக்கனும்னு சொன்னாங்க வெளியே எங்கேயாவது போய் சந்திக்கலாமா?” என்று கேட்டாள்.
வியன்கா “சரிங்க அம்மா அடுத்த முறை தர்ஷனை இங்கே வீட்டுக்கு வரச் சொல்லுங்க” என்றாள் சாதாரணமாக…
இவளோ “வீட்டுக்கா?”
வியன்கா “ம்ம்… நமக்குன்னு கிப்ட் வாங்கி தர்றாங்க அப்போ வீட்டுக்கு தானே கூப்பிடனும் நீங்க தானே அம்மா ஏற்கனவே சொல்லி இருக்கீங்க நமக்காக மெனக்கெடல் செய்றவங்களுக்கு நாமளும் கொஞ்சமாவது நேரத்தை செலவிடனும்னு அவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு வராங்க ஸ்பெஷலா எதாவது சமைச்சு வைங்க அவங்களும் சாப்பிட்டுட்டு போவங்கல்ல” என்றாள் தன் பையில் புத்தகங்களை அடுக்கியபடி…
தான் சொல்லி வைத்ததை தனக்கே நினைவுப் படுத்தினாள் மகள்.சரியென்று தலையசைத்தவள் மகளிடம் “சரி இன்னைக்கு சாயங்காலம் வரச் சொல்றேன்” என்றவள் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
தர்ஷன் “எங்கே சந்திக்கலாம்?”
என்று பதில் கேட்டான்.
ஆதிரை“பக்கத்தில் இருக்கிற மால்ல சந்திக்கலாமா?”
“இல்லை வேண்டாம் பீச்சுல பார்க்கலாமா? உங்களுக்கு ஓகே தானே” தர்ஷன் கேட்டான்.
இவளும் யோசித்துக் கொண்டே “ம்ம்… சரி அங்கேயே பார்க்கலாம் வியன்கா என்னை பீச்சுக்கு அழைச்சுட்டு போக சொல்லிட்டே இருந்தா சரி வரோம்” என்று பதில் அனுப்பி முடித்தாள்.