- Joined
- Aug 31, 2024
- Messages
- 11
- Thread Author
- #1
அத்தியாயம் - 2
உதயன் உணவகத்தில் தனக்குத் தேவையான காலைச் சிற்றுண்டிப் பொட்டலத்தை வாங்கிய பிறகுத் தன் இரண்டு சக்கர வாகனத்தை நோக்கி மெல்ல நடை போட்டுச் சென்று வாகனத்தை இயக்கியவன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.
சிறிது நேரம் யோசித்தபடி நின்றவன் தன் வாகனம் தடதடக்கப் புறப்பட்டுச் சென்று தெருவின் முனையில் உள்ள வீட்டின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு, தன் முதுகுப் பகுதியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் தன் கண்களை மட்டும் சுழல விட்டுச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே சென்றான். எவருக்கும் சந்தேகம் வராதபடி தன் முகத்தை முகமூடி அணிந்து மறைத்திருந்தான். கருப்புக் கண்ணாடியும் தலையில் தொப்பியும் அணிந்து சென்றவனை அவ்வளவு எளிதில் யாரும் அடையாளம் கண்டுவிட முடியாது.
தெருவின் மறு முனைக்கு வந்து ஒரு வீட்டின் முன் நின்று மீண்டும் கண்களைச் சுழல விட்டு வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று, அழைப்பான் மணி பொத்தானை அழுத்தினான்.
மணி ஒலித்து இரண்டு நிமிடங்கள் கழித்தே கதவைத் தாரிணி திறக்க, “சிற்றுண்டி ஆர்டர் போட்டிருந்தீங்களா மேம்?”
தாரிணி சந்தேகமா உதயனை மேலும் கீழும் பார்க்க, “ஆமா போட்டிருந்தேன். ஆனால், வர முப்பது நிமிடம் ஆகும்னு மொபைலில் காட்டுது. நீங்க எப்படி?” எனக் கைப்பேசியைப் பார்த்தவாறே கேட்டாள்.
“ஏதாவது சிக்னல் பிரச்சனை இருந்திருக்கலாம் மேம். அதனால், உங்களுக்கு அப்டேட் ஆகாம இருந்திருக்கும்.” என்றான்.
“ம்ம், சரி இருங்க பணம் எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்றாள்.
தாரிணி உள்ளே செல்லும் வரை காத்திருந்த உதயன் சத்தம் இல்லாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துச் சென்று, தாரிணி சென்ற அறைக்குள் தானும் நுழைந்து, தன் முதுகில் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கையில் எடுத்துத் தயாராக நிற்க, தாரிணி திரும்பி அவள் எதிர்பாரா அடுத்த நொடி அவள் இதயத்தில் கத்தியைச் சொருகினான். முழு பலத்தோடு குத்தியதில் தாரிணி நெஞ்சைப் பிடித்தபடிச் சத்தம் இல்லாமல் சுருண்டு விழுந்து தன் உயிரை விட்டிருந்தாள்.
மெதுவாக நடந்து வரவேற்பு அறைக்கு வந்தவன், ஒவ்வொரு அறையாக நோட்டமிட்டுக் கொண்டே வந்தவன் குளியலறையினுள் சென்று தன் கைகளைக் கழுவிய பிறகு குளியலறை முழுவதையும் சுற்றிச் சுற்றிப் பார்க்க, அலமாரியில் அடுக்கி வைத்திருந்த சோப்பு, ஷாம்புவை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு, ‘ப்பா என்ன வாசனை! ஒரு குளியல் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்’ என்று தன் காரியத்தில் இறங்கினான்.
குளித்து முடித்து வெளியில் வந்து தனது கைப்பையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சோப்பு, ஷாம்புவை எடுத்து வைக்கத் தொடங்கினான். மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டைவிட்டு வெளியே வர, சிறிது யோசனைக்குப் பிறகு உள்ளே சென்று தான் எடுத்த சோப்பு, ஷாம்புவை தன் கைக்குட்டையால் துடைத்த பிறகு எடுத்த இடத்திலே வைத்துவிட்டு அவசரமாக வெளியேறிச் சென்றான்.
******
“காலை நேரம் கொலை நடந்திருக்கு. பால் வாங்க, நடைப்பயிற்சி போறவங்கன்னு நிறைய பேர் நடமாடும் நேரம், இதில் ஒருத்தர் கூடக் கொலைகாரனைப் பார்க்கலையா? பாடியை முதலில் பார்த்தது யாரு?” என்று கவின் கேட்டுக் கொண்டே தாரிணியின் உடலைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
“ஸ்விக்கியிலிருந்து சிற்றுண்டி டெலிவிரி பண்ண வந்த பையன்தான் பார்த்திருக்கான்” என்ற ஆய்வாளர் தான்யா, விநியோகிக்க வந்த பையனைக் கையை அசைத்து அருகில் வரும்படி அழைத்தாள்.
“நீ எதுக்கு அறைக்குள் வந்த? வெளியில் நின்றுதானே டெலிவிரி பண்ணனும்?” சந்தேகமாக அவனைக் கூர்ந்து பார்த்துக் கேட்டான் கவின்.
“ரொம்ப நேரமா கால் செய்தேன் எடுக்கவே இல்லை. உள்ள வந்து காலிங் பெல் அடித்தேன். கதவைத் தட்டிப் பார்த்தேன். அவங்க வெளியில் வரவும் இல்லை. எந்தச் சத்தமும் இல்லை. வேற பொருளா இருந்தா திரும்பக் கொண்டு போயிருப்பேன். இட்லியும் தோசையும் திரும்பக் கொண்டு போக முடியாது. அதனால், வேகமா கதவைத் தட்டவும் கதவு திறந்துருச்சு. உள்ளே எட்டிப் பார்த்தா, இவங்க கால் மட்டும் தெரிந்தது. பயந்து போலீஸ்க்குத் தகவல் சொல்லிவிட்டேன்” தான்யாவிடம் சொன்னதைப் பிசிறாமல், குரல் நடுங்கக் கவினிடமும் சொன்னான்.
“சார், கொலையைச் செய்துவிட்டு நிதானமா குளிச்சிட்டு, உட்கார்ந்து சாப்பிட்டுப் போயிருக்கான்.” எனத் தான்யா சொல்ல,
“இவர்தானே சிற்றுண்டி கொண்டு வந்தார், அப்போ எப்படி?” தான்யா முகம் பார்த்தான் கவின்.
“அவன் வரும் போதே வாங்கிட்டு வந்திருப்பான் போல. பொட்டலம் கட்டிய காகிதம் குப்பைக் கூடையில் இருக்கு” என்றாள்.
“பொட்டலத்தில் கடை பெயர் எதுவும் இருக்கா?”
“பழைய செய்தித்தாளில் கட்டி வாங்கிட்டு வந்திருக்கான். அதை வைத்து ஒன்னும் பண்ண முடியாது சார்.”
“ம்ம்… பத்து நாள் முன்னாடி நடந்த கொலை மாதிரியே இதையும் பண்ணியிருக்கான். இவன் தொடர் கில்லரா? இல்லை, சைக்கோவா?” எனக் கேட்டபடியே வீட்டிற்குள் ஒவ்வொரு இடமாகச் சென்று தடயம் எதுவும் விட்டுப் போயிருக்கிறானா எனக் கூர்ந்து பார்த்தபடி இருந்தான் கவின்.
“சார், ஒரே மாதிரிக் கொலை பண்ணி இருக்கிறதைப் பார்த்தா தொடர் கில்லர் மாதிரி தெரியுது. கொலை பண்ணிட்டுக் குளித்து முடித்துச் சாப்பிட்டுட்டுப் போறதைப் பார்த்தா சைக்கோவா இருப்பான் போலிருக்கு” என்றாள் தான்யா.
நானும் இதைத்தானே சொன்னேன் என்று நினைத்தவன் கவின் திரும்பித் தான்யாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “கொலையான பெண்ணைப் பற்றி விபரங்கள் எதுவும் விசாரிச்சீங்களா? இந்த வீட்டில் அவ மட்டும்தான் இருந்தாளா?”
“அவ மட்டும்தான் இருந்திருக்கா. அவ மொபைலில் இருந்த விபரங்களை வைத்து அவ வீட்டுக்குத் தகவல் கொடுத்துட்டோம்.”
“ம்ம்… அக்கம் பக்கம் விசாரிச்சீங்களா? யார் வீட்டிலும் சிசிடிவி இருக்கான்னு பார்த்து ஃபுட்டேஜ் வாங்கிப் பாருங்க.”
“சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாவும் ஹெட்-கான்ஸ்டபிள் சரணும் விசாரிக்கப் போயிருக்காங்க சார்” என்ற தான்யா அலமாரியில் பார்த்தபடி வந்தவள் அதிலிருந்த நாட்குறிப்பேட்டை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்.
தான்யா குறிப்பேட்டில் இருப்பதை ஆர்வமாகப் படிப்பதைக் கண்ட கவின், “அந்த நாட்குறிப்பில் என்ன இருக்கு?” என்றபடி அவள்பின் நின்று குறிப்பேட்டைப் பார்க்க, அதைக் கவனிக்காத தான்யா சட்டென்று திரும்ப, அவன்மீது மோதி நிற்க முடியாமல் தடுமாறினாள். உடனே சுதாரித்த கவின் அவளைத் தன் கைகளில் தாங்கிப் பிடித்தான்.
கவினின் தொடுதலில் தேகம் குளிர்ந்து சில்லென்று இரத்த ஓட்டங்களில் நரம்புகள் சுண்டி இழுக்க, தன்னை மறந்து கவினின் நெஞ்சில் தலை சாய்க்க, சட்டென்று தான்யாவை தள்ளி நிறுத்தினான் கவின்.
சில நொடிகள் கண்களை மூடித் திறந்தவள், “இந்த நாட்குறிப்பில் இருப்பது காதல் கவிதைகள். அதைப் பற்றி உங்களுக்கு எங்கே புரியப் போகுது? உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் கொலை, கஞ்சா, ரேப் கேஸ்தான்” என்றவள் கவினின் கண்களை ஆராய்ந்து ஒன்றும் தேறாதென்று, அவன் கையில் குறிப்பேட்டைக் கொடுத்தபிறகு அலமாரியை மீண்டும் சோதனைப் போடத் தொடங்கினாள்.
அலமாரியில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றதும் தாரிணியின் கைப்பேசியை ஆராய்வதில் மும்முரமானாள் தான்யா. சில புகைப்படங்கள் சந்தேகமாக இருக்க, கவினிடம் காண்பித்து, சார், இந்தப் புகைப்படங்களைப் பாருங்க. நாட்குறிப்பில் உள்ள காதல் கவிதையைப் படிச்சிட்டு யாரையோ காதலிக்கிறா போலன்னு நினைச்சா, இவ பல பேருடன் விதவிதமா புகைப்படம் எடுத்திருக்கா. அப்படின்னா இவ எப்படிப்பட்டப் பொண்ணு?” என்ற சந்தேகம் தான்யாவிற்கு எழ,
கவின் கைப்பேசியை வாங்கி புகைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்க, “ரொம்ப நெருக்கமா கட்டிப் பிடித்தபடி இருக்கிறதைப் பார்த்தா, யாருமே ஃப்ரெண்ட்ஸ் மாதிரி தெரியலையே. காதலிக்கிறதா சொல்லி ஏமாற்றி இருக்கலாம். அதனால், இதில் யாரோ இவளைக் கொலை பண்ணி இருக்கலாம்” என்று யூகத்தில் சொன்னான் கவின்.