- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
5
மறுவாரம் முதல் விடுமுறை என்பதால், இந்த ஞாயிறே தாரிணியை வணிகவளாகம் அழைத்து வந்திருந்தாள் பாகீரதி. தங்களுக்குத் தேவையான ப்ராஜெக்ட் பொருள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருள்கள் வாங்கி பில் போடுமிடத்தில் வரிசையில் நிற்கும்பொழுது, தங்களுக்கு பத்தடி தொலைவிலிருந்து, “ஸ்... அம்மாஆஆ” என்ற சப்தம் வர, அதைத் தொடர்ந்து, “என்னமா நீ பார்த்து வரக்கூடாதா? பாரு அடிபட்டிருச்சி. ரொம்ப வலிக்குதா?” என்று அடிபட்ட பெண்ணை அங்கிருந்த இருக்கையில் அமரவைத்து, காலை நீவிவிட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள் அப்படியே நின்றாள்.
‘அதே குரல்!’ அன்றுபோல் பக்கவாட்டாக அமர்ந்திருந்தவன் முகத்தில் தாடியில்லை. ‘அவன்தானா?’
‘எவனா இருந்தா உனக்கென்ன?’ மனம் கேட்டது..
‘ஏய்! சைலன்ட்டா இரு. அன்னைக்கு ஏதோ உளறிட்டுப் போனான். இப்ப ஒரு பொண்ணு காலை பல பேர் பார்க்கிற மாதிரி பிடிச்சிட்டிருக்கான்” என மனதைத் திட்டிகொண்டிருந்தாள்.
“ஹையோ அண்ணா! போதும் விடுங்க” என்ற அப்பெண்ணின் குரலில், ‘அச்சச்சோ அண்ணனா! சே... இது தெரியாம என்னென்னவோ பேசிட்டேனே.’
‘என்கிட்டதான பாக்ஸ் பேசின விடு’ என்றது மனம்.
‘இருந்தாலும், அடுத்தவங்களைப் பற்றி தப்பா நினைச்சது தப்புத்தானே’ என தத்துவம் பேசினாள்.
‘உன்னைத் திருத்தவே முடியாது போ’ என்று மனம் சொன்னதும் அவர்களிடம் தன் கவனத்தைத் திருப்பினாள்.
“எல்லாரும் பார்க்கிறாங்க அண்ணா. எழுந்திருங்க” என்றாள் அப்பெண்.
“எத்தனை பேர் பார்த்தா எனக்கென்ன. தங்கைக்கு செய்யுறதுல எதுக்கு கௌரவம் பார்க்கணும்.”
“ப்ளீஸ்ணா! கொஞ்சமே கொஞ்சம் கால் ஸ்லிப்பாகிருச்சி. அதுக்குள்ள என்னை பேஷண்ட் ஆக்கி பெட்ல சேர்த்திருவீங்க போல” என்றாலும் எப்படியாவது அண்ணனை எழுப்பிவிட வேண்டுமென்ற உந்துதலே அவளிடம் இருந்தது.
“என்னமா நீ இப்படிச் சொல்லிட்ட? உனக்கு எல்லாம் விளையாட்டுதான். உனக்கு எதாவது ஆகியிருந்தா மாப்பிள்ளை பார்க்க ரொம்ம்ம்ப... கஷ்டப்படணுமேன்னு ஒரு ஆதங்கத்துல கேட்டேன். அதுக்கு இத்தனை சீனா?” என்று வருந்துவது போல் செய்ய,
“அண்...ணாஆஆ...” என பல்லைக் கடித்தபடி அவனை விரட்ட, முதுகு காண்பித்து ஓடியவனை சிரித்த முகத்துடன் பார்த்திருந்தாள் பாகீரதி.
“என்ன பாக்கி சிரிப்பெல்லாம் அள்ளுது?”
“யார்றா இவ, அள்ளுது கொள்ளுதுன்னுட்டு” என திட்டி, “தர்ணி இங்க ஒரு பொண்ணுக்கு கால் ஸ்லிப்பாகிருச்சி பார்த்தியா?” இல்லையென தாரிணி உதடு பிதுக்க, “அந்த பொண்ணோட அண்ணன்காரன் துடிச்சான் பாரு. அப்படியே அடிபட்டதை மறக்க வைக்கிறதுக்காக, அவளை சிரிக்க வச்சி ஓட வச்சிட்டான்” எனும்போது அந்தக்குரல் மட்டும் காதில் ஒலித்தது. “என்ன ரதி இப்படி பண்ணிட்ட? இதை உன்கிட்ட எதிர்பார்க்கல. உனக்கு எப்பவும் நான் இருக்கிறேன்!”
தாரிணியோ, “உங்கண்ணனை விடவா” என்றதில் நினைவு கலைந்து,
“ம்... எனக்கு எங்கண்ணா மாதிரி. அந்தப் பொண்ணுக்கும்” என்று வாங்கிய பொருள்களுக்குப் பணம் செலுத்தி, “உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு வர்றேன்” என்ற பாகீரதியிடம், “வேண்டாம் பாக்கி. இதுக்காக டிராபிக்லாம் தாண்டி ஓஎம்ஆர் ரோடு வந்து, திரும்பவும் திருவான்மியூர் வரணும். தேவையா? நான் ஆட்டோல போறேன்” என்றாள்.
“ஹ்ம்... இனி சொன்னா கேட்கமாட்ட.” சலித்தபடி தாரிணிக்கு ஆட்டோ பிடித்து அனுப்பிவிட்டு காருக்கு வந்தாள்.
தங்கை துரத்தவும் ஓடிய ஸ்ரீனிவாசன் சில நிமிடங்களில் சமாதானக்கொடி பறக்கவிட்டான்.
“போங்கண்ணா அங்க ஒரு பொண்ணு பில் பே பண்ண நின்னுட்டிருந்தா. பார்க்க அழகா வேற இருந்தாளா, கொஞ்சமே கொஞ்சம் சைட்டடிக்கலாம்னு பார்த்தா, அதுக்குள்ள இந்தக் கால் ஸ்லிப்பாகிருச்சி.”
“ஹா...ஹா... பெண்ணே இன்னொரு பெண்ணை சைட்டடிச்சியா? யார் அந்த ப்யூட்டி?” என்றான் சத்தமாக சிரித்தபடி.
‘ம்...’ சுற்றிலும் பார்த்தவள் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே கைநீட்டி, “அண்ணா அந்த க்ரே கலர்ல எல்லோ பார்டர் வந்த டாப்பும், எல்லோ பேண்ட்டும், எல்லோ அன்ட் க்ரே மிக்ஸிங் சால் பாருங்க. அந்த பொண்ணுதான்” என்றாள்.
‘ஷப்பா! ஒரு ட்ரெஸ்கு இவ்வளவு பெரிய இன்ட்ரோவா’ என்று சலித்தவாறு அவளைப் பார்க்க, ‘அட நம்ம முறைப்பொண்ணு!’ மனதில் சந்தோஷமாய் நினைக்க, இதழ்கள் அதைப் புன்னகையாய் வெளிக்காட்டியது.
“என்னங்கண்ணா பொண்ணு ப்யூட்டிதானுங்களே?”
“ம்... ப்யூட்டிதான்” என்றவனை தங்கை ஆராய்ச்சியாய்ப் பார்க்க, அவன் கண்களின் ரசனையும், உதட்டின் சிரிப்பும் அவள் கண்ணுக்குத் தப்பவில்லை.
“பார்த்து சைட்டடிங்கண்ணா. அவங்கப்பா போலீஸா இருக்கப்போறாரு” என்றாள் அண்ணனின் ரசனைக்குத் தடையிட்டு கேலியாய்.
“போலீஸ் இல்லமா. நம்ம தொழில்தான்” என்றான் அதே தோரணையில்.
“அண்ணா அவங்களைத் தெரியுமா?” என்றதும் உஷாரானவன், “இல்லமா. நம்ம தொழிலா கூட இருக்கலாமேன்னு சொல்ல வந்தேன். ஆமா. எதுக்கு உனக்கு இந்த ஆராய்ச்சி? நம்ம ஆஃபீஸைப் பார்க்கிறதுக்காக உன்னை வரவழைச்சா இங்க நீ சைட்டடிச்சிட்டிருக்க. ம்...” என்றான் மிரட்டலாக.
“அண்ணா! பையனையா சைட்டடிச்சேன். நான் பொண்ணைத்தான சைட்டடிச்சேன்” என்று சிணுங்கினாள்.
அவளின் சிணுங்கலைப் பார்த்துக்கொண்டே அருகில் வந்த சுதர்ஷன், “வந்து ரொம்ப நேரமாகிருச்சா ஸ்ரீ?” என்றான்.
“ஆமாடா. கடையை மூடிட்டு கிளம்பும் போது வந்து கேளு.”
“சாரிடா. டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். சரி இவங்க யாரு?”
“திருப்பூர்ல இருக்கும்போது இவளை உனக்கு அறிமுகப்படுத்தலையா?”
“அப்ப இவங்களுக்கு திருப்பூரா? எங்கடா நான் சேர்ந்ததே லாஸ்ட் இயர்தான். உன்னை ஃப்ரண்ட் பிடிக்கவே ஆறு மாசத்துக்கு மேலாகிருச்சி. அதுக்கப்புறம் ப்ராஜெக்ட், ட்ரெய்னிங்னு போயிருச்சி.”
“ஓ... சாரிடா! இவ என் தங்கை. சித்தப்பா பொண்ணு. திருப்பூர் கார்மெண்ட்ஸை போன வருஷத்திலிருந்து இவதான் பார்த்துக்கறா. நான் வீட்டுக்கு ஃப்ரண்ட்ஸ் யாரையும் கூட்டிட்டு போகாததால உனக்கு தெரிய வாய்ப்பில்லை.”
“ஓ... குட்” என்றவன் ‘தங்கைன்னு சொன்னானே. தங்கைக்கு பெயர் இருக்குமே அதைச் சொல்வோம்னு நினைச்சானா பாரு.’ பொங்கிய மனதை மூடிபோட்டு மூடினான்.
“இவன் சுதர்ஷன்மா” என்றான் தங்கையிடம்.
சுதர்ஷனைப் பார்த்து லேசாக தலையை மட்டும் அசைத்தவள், “சு... உங்க இன்ஷியல்னு தெரியுது. தர்ஷன் உங்க பேரா” என்றாள் புரியாதவள் போல்.
‘உண்மையிலேயே புரியலையோ!’ என நினைத்த தர்ஷன் நண்பனைப் பார்க்க அவனின் அடக்கிய சிரிப்பில், ‘அடிப்பாவி என்னை கலாய்க்கிறியா. உன்னை...’ என்று மனதினுள் திட்டி, “ஹையோ! எப்படிங்க இப்படி ஒரு அறிவாளியா இருக்கீங்க?” என்றான் பதிலுக்கு நக்கலை மறைத்து.
அவனின் கிண்டலைப் புரிந்து, “அதுக்கெல்லாம் மூளை இருந்தால் போதும் சார்” என்றாள் சிரிக்காமல்.
“ஓ... உங்களுக்கு ஓவர் வளர்ச்சியா இருக்கே. இதுக்கு மேல வளர வேண்டாம்னு சொல்லுங்க.”
“ஏங்க வளர்ந்தா என்ன?” பதிலுக்குப் பதில் இருவரும் வாயாட, இதுவரை யாரிடமும் அதுவும் ஆண்களிடம் இப்படி வம்படியாகப் பேசியிராத தங்கையை வினோதமாகப் பார்த்தான் ஸ்ரீனிவாசன்.
“பாவம்ங்க உங்களோட வருங்கால கணவர். இப்பவே சுதர்ஷனை சுட்டு பீஸ்பீஸாக்குறீங்க. அவர் ஆதர்ஷனா வந்திட்டா, ஆ... தர்ஷான்னு கூப்பிடப் போயி, எல்லாரும் நீங்க அலறுறீங்க நினைச்சி ஓடி வந்திரப்போறாங்க” என்றான்.
அவளோ சற்று அசடு வழிய சிரித்து, “பரவாயில்லை. நான் ஆ..ஆ தர்ஷான்னே கூப்பிடுறேன்” என்றாள் கிண்டலை விடாமல்.
“போதும் டைமாகுது வாங்க கிளம்பலாம்” என்று ஸ்ரீனிவாசன் அவர்களின் பேச்சை கத்தரித்து கிளம்பி, எ.எஸ்.ஆர் வந்து இன்டீரியர் வேலையை பார்வையிட்டபடியே, அவர்களிடம் தங்களுக்குத் தோன்றிய சின்னச்சின்ன மாற்றங்களைச் சொல்லி, ஒரு சில வேலைகளே முழுதாக வேலை முடிந்திருந்த. வெளிப்புற அலுவலகத்தில் வந்து அமர்ந்தார்கள்.
“வேலை கிட்டத்தட்ட பினிஷ்ட் ஆகிருச்சி. என்னைக்கு ஓபன் பண்ணலாம்னு ஐடியாண்ணா?”
“இன்னும் பத்து நாள்ல சித்ரா பௌர்ணமி வருது. நாள் நல்லாயிருக்கு அன்னைக்கே வச்சிக்கலாம். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விளம்பரம் எடுத்து இங்க உள்ள லோக்கல் சானல்ல போடக் கொடுத்திருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல அந்த ஆட் டிவியில வரும். பத்திரிக்கையும் வந்திரும்” என்றவன் ‘தன் வளர்ச்சியை அவர்களுக்கு சொல்லலாமா?’ என்ற எண்ணம் தோன்ற, மறுவினாடியே அதை அழித்து, ‘என்னை நம்பாதவர்களுக்கு நான் ஏன் சொல்ல வேண்டும்’ என்ற ரோஷத்துடன் கைவிட்டான்.
“அண்ணா சூப்பர். செம ஸ்பீடுதான் போங்க” என்றாள் சந்தோஷமாய்.
“சரிடா. திறப்பு விழாவிற்கு அரசியல்வாதியைப் பிடிக்கலாமா? இல்லன்னா போலீஸ் ஆஃபீஸர்ஸ் யாராவது பார்க்கலாமா?”
“யாருமே வேண்டாம்டா. ரதி கார்மெண்ட்ஸ் அன்ட் கலாரதி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் திரு.கணபதியை சீஃப் கெஸ்டா போடப்போறேன்” என்றான் ஸ்ரீனிவாசன்.
“அவரா! அவர் பெரிய ஆளாச்சேடா. அதுவுமில்லாம இந்த குறுகிய காலத்துல அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்கிறதே பெரிய விஷயம். அதிலும் நம்ம திறக்கிற அன்னைக்கு கிடைக்குமான்னு தெரியலையே?” என்றான் நல்ல நண்பனாய்.
“யார் மூலமாவது ட்ரை பண்ணலாம் தர்ஷா.”
முயற்சி செய்து இரண்டு நாட்களில் அவரைப் பார்க்க அனுமதி கிடைத்து அவர் முன் நின்று, “வணக்கம் சார்” என்றவன் பார்த்தபடி அப்படியே நின்றான். ஏழு வருடங்களுக்கு முன் எப்படிப் பார்த்தானோ அப்படியே இருந்தார்.
“வாங்க மிஸ்டர்.ஸ்ரீனிவாசன். ஏன் நிற்கிறீங்க? உட்காருங்க” என்றார் கணபதி.
“இத்தனை வருஷமாகியும் அப்படியே இருக்கீங்க சார்” என்றான் மனதிற்குள் உள்ளதை வெளியில் கொட்டி.
“நாம நேர்ல மீட் பண்ணியிருக்கோமா?” நிமிர்ந்து அவன் முகத்தை நன்றாக பார்க்க, ரொம்ப நெருக்கமான முகமாகத் தெரிந்தது.
“திருப்பூர்ல உங்க ரதி கார்மெண்ட்ஸ்ல சார். என்னோட இந்த படிப்பு உங்க கார்மெண்ட்ஸ்ல வேலை பார்த்ததால வந்தது. என்னோட இந்த வளர்ச்சி உங்களைப் பார்த்ததால வந்தது.”
“நானா? நானெப்படி?” என்றார் ஆச்சர்யமும் கேள்வியுமாய்.
எப்படி என்று சொன்னவன், “உங்க ஸ்டைல்! பழகும் விதம்! உங்க ஹேண்ட்சம் லுக்! எல்லாமே உங்ககிட்டப் பிடிச்சது” என்றான் வெளிப்படையாகவே.
சட்டென்று சிரித்த கணபதி, “பொண்ணுங்களை வர்ணிக்கிற வயசுல இருந்துட்டு, என்னை வர்ணிக்கிறது கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் தேங்க்ஸ்” என்றார்.
“சார். என்னோட ரோல் மாடல் நீங்கன்னு சொன்னேனே. அப்படின்னா அவங்களோட மூவ்மெண்ட்சும் நமக்குப் பிடிச்சிருக்குன்னு அர்த்தம். அதான் உங்களையே வச்சி என்னோட டெக்ஸ்டைல்ஸ் காம்ப்ளக்ஸைத் திறக்கலாம்னு வந்தேன். நீங்க கன்பார்ம் பண்ணினா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.”
அவனையே பார்த்திருந்தவர் “எந்த ஊர் உங்களுக்கு?” என கேட்டார்.
“திருப்பூர் சார்.”
“ம்கூம்... நான் உங்க பிறந்த ஊர் கேட்டேன்?”
“அ...அது தென்காசி சார்” என்றதும் சட்டென்று அவர் முகம் மலர்ந்து அதன்பின் வந்த நிகழ்வுகளை எண்ணி வாடி, அவனுக்கு பதில் தர வேண்டி, “சரிப்பா. கண்டிப்பா நான் வர்றேன்” என்று பத்திரிக்கையை வாங்கி, தன் தனிப்பட்ட நம்பருள்ள அடையாள அட்டைக் கொடுத்து, “எந்த உதவினாலும் தயங்காம கேளுங்க” என்றனுப்பினார்.