• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
28

அன்றிரவு ஐயப்பன் அங்கேயே இருப்பதாக பிடிவாதமாக சொல்லிவிட, மேனகா மாமனாருடன் தென்காசி சென்றார். வீட்டிற்கு வந்ததிலிருந்து மனைவியையே கூர்ந்து பார்க்க, கணவனின் பார்வை உணர்ந்த மேனகா கேள்வியாய் நிமிர்ந்து பார்க்க, சட்டென்று தலையைத் திருப்பிக் கொண்டார்.

‘இப்ப என்னவாம் இவியளுக்கு. பையனைப் பத்திக் கேக்கணும்னா நேரடியா கேக்க வேண்டியதுதான? இதுல என்ன கௌரவம் வேண்டிக்கெடக்கு.’ மனதினுள் கணவனை நொடிக்க,

நீண்ட யோசனைக்கு பிறகு மனைவியன் அருகில் அமர்ந்து மெல்ல கையைச் சுரண்ட, கவனியாதது போல் கவனித்த மேனகா, என்னவோ ஏதோவென்று பயந்தவர் போல் கையைத் தட்டிவிட்டு அவரைப் பார்த்து, “ஓ... நீங்களா? நான் எதோ அரிப்(கம்பளி)பூச்சின்னுல்லா நெனச்சேன்” என்று பிண்ணனி இசை இல்லாமலேயே அப்படியொரு நடிப்பைக் கொடுத்து, “என்னங்க எதாவது வேணுமா?” என்றார் எதுவும் அறியாதவராய்.

இது எதையும் உணரும் நிலையில் இல்லாத அண்ணாமலையோ, “இல்ல ஒண்ணுமில்ல” என நகர்ந்து சென்று திரும்ப வந்து, “ உன் பையன் எங்கன இருக்கான்?” என்று கேட்க வந்த கேள்வியைக் கேட்டேவிட்டார்.

‘உன் பையன்’ என்றதில் கோவம் வந்த மேனகா, “என் பையனா? அப்ப ஒங்களுக்கு அவன் யாராம்?” முடிந்த மட்டும் கணவனை முறைக்க,

“இல்ல வாய் தவறி வந்திருச்சி. நம்ம பையன் எங்கன இருக்கான்? இத்தனை வருஷமா எங்கன இருந்தானாம்?” என்றவர் குரலில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் இருந்தது.

“இதையெல்லாம் நீங்க ஏன் கேக்கிய? ஒங்களுக்குத்தேன் அவனைக் கண்டா ஆவாதே? என்ன ஏதுன்னு முழுசா கேக்காமையே புள்ளைய வெளிய வெரட்டிட்டிய. அவன் எப்படிலாம் கஷ்டப்பட்டு மேல வந்திருக்கான் தெரியுமா?” என்று அழுதபடி முந்தானையால் கண்ணீர் துடைத்தார்.

“ஏன்லே என்னை படுத்துறா? நான் கோவத்துல ஏதோ பேசினேந்தான். புள்ள தப்பு செஞ்சா கொஞ்சி வளக்கவா முடியும். கண்டிச்சி வளக்காத புள்ள கரை சேருமாலே. நீயே சொல்லு, ஒரு தகப்பனா எம்பையன கண்டிக்க எனக்கு உரிமையில்லையா?” என்றவரின் குரலில் மிதமிஞ்சிய வருந்தமே இருந்தது. “நீ அழுது ஒப்பாரி வச்சி என்னய திட்டி உன் சோகத்தை ஆத்திக்கிட்ட. நான் பாரு யார்கிட்டேயும் சொல்லி ஆறுதல் தேட முடியாம உள்ளுக்குள்ளயே அல்லாடுறேன்” என்று கண்கலங்க பேசிய கணவனை முதல்முறையாக காண்கிறார் மேனகா.

தாய் இறந்தபொழுது கூட, தன் பெரிய மனுஷத் தோரணையை கைவிடாது சோகத்தை மனதினுள் புதைத்த மனிதன். பெத்த பிள்ளைக்காக கண்கலங்குவதைக் கண்ட மேனகாவிற்கு, ‘என் புருஷனும் நல்லவர்தானோ!’ என்று மனம் கிண்டலாகச் சொன்னதை உதறினாலும், அவருக்குமே, ‘தன் நிலையை மட்டும் பார்த்து கணவனை புரிந்துகொள்ளாமல் போய்விட்டோமோ!’ என்ற குற்றவுணர்ச்சி வந்தது. எப்படி ஆறுதல் சொல்வதென்று அறியாமல், “நீங்க சொல்றது நிஜமா?” என்ற மனைவியை சோகமாக ஒரு பார்வை பார்க்க, அந்தப் பார்வையில் மேனகா உருகித்தான் போனார்.

“கலாவை விட்டுட்டு வந்தப்ப என்கிட்ட இருந்து பாதி விலகிட்ட. பையன் போனபிறகு முக்கால்வாசி விலகிட்ட. மீதி கால்வாசியும் நான் கட்டின தாலிக்காக பொறுத்திட்டிருக்க” என்றதும் மேனகாவிற்கு கண்கள் கலங்க பார்க்க, “நீயும் என்னைப் புரிஞ்சிக்கலை. நானும் உனக்குப் புரிய வைக்கலை. இப்பவாவது சொல்லுமா சீனிவாசனை எங்கன, எப்பப் பார்த்த?” என்றவரின் குரலில், அவ்வளவு மென்மையை மேனகாவே கேட்டிராதது.

“அ...அது திருப்பூர்ல. அவன் தங்கச்சி கல்யாணத்துல பார்த்தோம்.”

“தங்கச்சியா? அவனுக்கு ஏது தங்கச்சி?” என்று கேள்வியுடன் பார்த்தார்.

இங்கிருந்து சென்றதில் இருந்து மகேந்திரன் மகனுக்கு அடைக்கலம் கொடுத்தது, மகளின் பண உதவி என்று சொல்லியவர் மறந்தும் சந்திரா, பாகீரதி பற்றி சொல்லவில்லை. அதை மறைப்பது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், கலாவின் கோவம் குறையாததால் நாமாக எதுவும் சொல்ல வேண்டாமென்று விட்டுவிட்டார்.

“இப்பத்தேன் கொஞ்சம் நிம்மதியாயிருக்கு. எங்க பையன் தப்பான வழிக்குப் போயிருவானோன்னு பயந்துட்டு இருந்தேன். எங்கப்பன் முருகன் நம்மள கைவிடல.” மனம் முழுவதும் நிம்மதி பரவியது.

அந்த சந்தோஷ மனநிலையிலேயே, “இன்னைக்கு என் தம்பி பொண்டாட்டி எங்கிட்ட வந்து பேசினா” என்றார்.

“என்னவாம் அவளுக்கு?” என்று கணவனை நேராகப் பார்க்க,

“அது நம்ம பையனுக்கும், அன்னைக்கு வந்த வளர்மதி பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு...” கணவன் முடிக்குமுன், “என்னது?” என அதிர்ந்து பார்த்தவருக்கும் இது புதிய செய்தி.

மேனகா ஆலங்குளத்தில் இருந்தவரை ஐயப்பன் அவர்களுடன் சந்தோசமாகப் பொழுதைக் கழித்ததால் சொல்ல மறந்திருந்தார்.

மனைவியின் அதிர்ச்சி புரியாமல், “எனக்கென்னவோ நம்ம சம்மதத்துக்காக அந்தப்பொண்ண ஒம்பையன்... இல்லல்ல நம்ம பையன்தான் கூட்டிட்டு வந்திருப்பான்னு தோணுது” என்றார்.

“எ...என்ன சொல்றீய?” ‘உண்மை தெரிந்துவிட்டதோ’ என்று மேனகா திணற,

“முந்தாநாள் கார்ல இருந்து எறங்கும்போது பாத்தேன். அவங்க பார்வை திடீர்னு பாத்தவங்க மாதிரியில்ல. அந்தப் பொண்ண சீனு விரும்புறான்னு நெனைக்கேன். மொத தடவை பாக்கும்போது கலாவோட பொண்ணுன்னு தோணிச்சி. அந்தப் பையன் கூடப்பிறந்த தங்கச்சின்னு சொன்னதும்தான் மேல யோசிக்கல. ஆனாலும், மனசென்னவோ நெருடலாயிருக்கு. தம்பி பொண்டாட்டிக்கு அந்தப்பொண்ணு ரெத்தம் குடுத்ததால தனி பாசம். கூடவே வச்சிக்கணும்னு தோணுது போல. அவ மருமகளா வந்தா எந்த பிரச்சனையும் இருக்காது. நீ பையன்கிட்ட பேசுறியா? அவன் ஒங்கம்மா வீட்லதான் இருப்பான்.”

“ம்... பேசுறேங்க” என்றவருக்கு பெத்த பையனின் திருமணத்தை மறைத்தது என்னவோ போலிருந்தது. இத்தனை நாட்கள் இல்லாத குற்றவுணர்வு அதிகமானது மேனகாவிற்கு. “ஆனா, உங்கமேல உள்ள கோவம் குறையலை. பேசிப் பாக்கேன். கல்யாணத்துக்கு சம்மதிச்ச பிறகு நீங்க அவனை சந்திச்சிப் பேசணும்” என்றார்.

மேனகா வீடு சென்றபின் ஜெகன் அங்கு வர, அவனைப் பார்த்த பின்னரே நினைவு வந்தவராக, நாகு பேசியதையும் தன் சந்தேகத்தால் தெரிந்த உண்மையில் இருவருக்கும் முடிச்சிப்போட பேசி சம்மதிக்க வைத்ததையும் சொல்லி, ஜெகன் உளறியதில் திருமணம் பற்றித் தெரிந்ததையும் சொன்னார்.

“அதனாலென்ன ஐயப்பா. க்ராண்டா ஒரு ரிசப்ஷன் வச்சிருவோம். சொந்தக்காரங்களுக்கு கோவில்ல கல்யாணம் முடிஞ்சிருச்சின்றதை ரிசப்ஷன் முந்தின தினம் நடந்த மாதிரி சொல்லிரலாம்.”

“சரி வருமா மச்சான்?” என ராமிடம் கேட்க,

“அதெல்லாம் சரிவரும் சித்தப்பா. வரலன்னாலும் என்னோட முறைப்பொண்ணுக்கு இன்னொரு டைம் தாலிகட்ட நான் ரெடி. உனக்கு ஓகேதான ரதிமா?” என்றான் புன்னகையுடன்.

“ய...யா... நானும் ரெடி மச்சான்.”

“என்ன சொன்ன?” என கண்கள் பளிச்சிட கேட்ட கணவனிடம், “நானும் ரெடி மச்சான் சொன்னேன்றது, எனக்கு மறந்திருச்சி மச்சான்” என குறும்பாக கண்சிமிட்டி, “நீங்க எங்கன வருவியன்னு தெரியும்லா. அதான்... வாவ் நெல்லைத்தமிழ் நானும் பேசிட்டேன்” என சந்தோஷக்கூச்சலிட்டாள்.

“ஆனாலும் ஸ்ரீ அண்ணாவுக்கு ரொம்ப பல்ப் கொடுக்கிற பாக்கி.”

“உனக்கு வேணும்னா சொல்லுடி. டஜன் டஜனா எங்கண்ணாவை கொடுக்கச் சொல்றேன்.”

“சேச்சே அதெல்லாம் நானே நிறைய கொடுப்பேன். எனக்கு கொடுத்துத்தான் பழக்கம். வாங்கி இல்லை” என காலர் தூக்க,

“அதான் தெரியுமே மெச்சூரிட்டி கேர்ள்” என்று சிந்து அவளின் கால்வாரினாள்.

“யூ டூ சிந்துக்கா?”

“ஹி...ஹி நாங்களும் ஸ்பாட்ல இருக்கோம்னு காட்டணும்லா. ஆனா, இந்த சுகந்தி அக்காதான் ஸ்கூலைக் காரணம் காட்டி குடும்பத்தோட எஸ்ஸாகிட்டாங்க.”

சில நிமிட வழக்கடிப்பிற்குப் பின் மறுநாள் அனைவரும் அவரவர் இடத்திற்கு கிளம்புவதாகச் சொல்ல, ஜெகனையும் தன்னுடன் வரச்சொன்னான் ஸ்ரீனிவாசன். ஏனென்று கேட்டதற்கு, “அது சஸ்பென்ஸ்” என்று முடித்தான்.

“இல்லண்ணா நான் சென்னை வரல. நீங்க எதோ ப்ளான் பண்றீங்கன்னு தெரியுது. அது வேண்டாம். இங்க ரெண்டுபேரும் சந்தோஷமா நிம்மதியா இருக்கோம்.”

“நிம்மதியா சந்தோஷமாவே இருங்க திருப்பூர்ல. உங்களோட புல் செக்யூரிட்டி நாங்கதான்னு ரதி முடிவெடுத்துட்டா. இதுல நான் தலையிட முடியாது” என்றதும் ஜெகன் அப்பாவியாகப் பாகீரதியைப் பார்க்க, அவளோ சம்மதம் சொல்லச் சொன்னாள்.

ஜெகன் சரியென்று தலையாட்டியதும், “நான் இங்க இருக்கிறதுவரை ராஜி என்னோடவே இருக்கட்டும். நான் பார்த்துக்கறேன். அங்க செட்டிலானபிறகு கூட்டிட்டுப் போங்க” என்றாள் பாகீரதி.

நன்றியாய் அவளைப் பார்த்தார்கள், ஜெகனும்! ராஜியும்!

மறுநாள் அனைவரும் காரில் செல்ல, ஸ்ரீனிவாசன் மட்டும் திருவனந்தபுரம் சென்று விமானத்தில் சென்றான். அவனை வழி அனுப்பிவிட்டு சந்திரா, பாரதி, ராமகிருஷ்ணன், பாகீரதி நால்வரும் திரும்பும் வழியில், “திருச்செந்தூர் பக்கத்துலதான இருக்கு நாம போகலாமா?” என பாரதி கேட்டார்.

வண்டி திருச்செந்தூர் நோக்கிப் பயணித்தது. அது சஷ்டி நாள் என்பதால், மதியம் பனிரெண்டு மணிக்கு கோவிலை சற்று நேரம் சாத்தியிருந்து பிறகு திறந்துவிட்டார்கள். அப்பன் முருகனை தரிசித்து, கோவிலைச் சுற்றி, கடலோரம் காற்று வாங்க நேரங்கள் விரைந்தோடியது. மாலை நான்கு மணியளவில் நாழிக்கிணறு பகுதியிலிருந்து காரை எடுத்து ஒரு அரை கிலோமீட்டர் தொலைவுதான் வந்திருப்பார்கள், “பாகீ அங்க பார் உங்க மாமா கடை” என்று ராமகிருஷ்ணன் காண்பித்தார்.

“அண்ணாமலை டெக்ஸ்டைல்ஸ்” என்றிருந்த பெயர்ப்பலகையைப் பார்த்ததும் உள்ளே செல்ல ஆசை எழ, ஓட்டுனரை வண்டியை நிறுத்தச்சொல்லி, “அம்மா உள்ள போய் பார்த்துட்டு வரவா?” என ஆர்வமாய் கேட்ட மகளிடம் வேண்டாமென்று மனம் மறுக்கப்போக, வாய், “போய்ட்டு வா” என்றது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
பாகீரதி துள்ளலுடன் எதிரில் இருந்த கடைக்குள் நுழைந்தாள். ரொம்பப் பெரிய கடையெல்லாம் இல்லை. இரண்டு மாடிகள் மட்டுமே கொண்டது. வெளியில் இருப்பதை விட உள்ளே அனைத்தும் மனதைக் கவரும் வகையில் இருந்தது.

சில நிமிடங்கள் சுற்றியவளுக்கு அங்குள்ளவர்கள் பேசிய, “ஏடே, என்னடே! ஏப, என்னப நீ” என தோழிகளுக்குள் பேசிய தமிழ் தென்காசித் தமிழில் இருந்து வித்தியாசப்பட்டது.

தென்காசிக்கும், திருச்செந்தூருக்கும் நடுவிலுள்ள திருநெல்வேலித் தமிழும் இதைப்போல் வேறுபடும் என்பது அவளுக்குத் தெரியாது. மதுரை, கோவை மாதிரி பகுதிகளில் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் அந்தத் தமிழ் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால், மதுரையைத் தாண்டினால் தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, நாகர்கோவில் என ஒரே பாஷைகள் விதவிதமான உச்சரிப்புகளில் கேட்டு ரசிக்க வைக்கும். மொத்தத்தில் அனைத்தும் நெல்லைத்தமிழ் என்ற ஒன்றில் அடங்கிவிடும் பெருமை வாய்ந்தது.

“ஏபே நான் சொன்னது கேக்கலியா? அவிய கேட்ட சீலைய எடுத்துக் குடுப” என்று ஒரு பெண் பேசியது பாகீரதியை ஆராய்ச்சியில் தள்ளியது. ‘டே-னா? டாவா? அப்ப பே-னா? அதுக்கும் டா-தானா. லே எந்த மீனிங்ல வருது? மைகாட் வெரைட்டி வெரைட்டியான தமிழ். தமிழுக்கே தமிழ் டிக்ஷனரி நிறைய போடணும் போலிருக்கே. ஹ்ம்.. புரியலன்னாலும் கேட்க நல்லாயிருக்கு’ என்றாள் மனதினுள்.

‘அடிப்பாவி பாக்ஸ்! அவங்களும் தமிழ்தான் பேசுறாங்க. புரியாத மொழி பேசுற மாதிரி பீலைக் கொடுக்கிற. நீயெல்லாம் ஒரு தமிழச்சியா?” மனம் கேலி செய்தது.

“விடு விடு நமக்கு தெரிஞ்சதை ஒத்துக்கிட்டுத்தான ஆகணும்” என்றாள் அதனிடம்.

கீழ்தளம் முடித்து மேல்தளம் போக, அவளை அடையாளம் கண்டுகொண்ட அண்ணாமலை, ‘வருங்கால மருமகளாயிற்றே’ என்ற எண்ணமும் சேர புன்னகையுடன், “வாம்மா” என்றழைத்தபடி வேகமாக வர, அங்கிருந்த கம்பியில் கால் இடித்து “ஆ” என்று சத்தமிட்டார்.

“மாமாஆஆ...” என்று அலறியடித்து அருகில் ஓடி வந்தவள், அங்கிருந்த ஸ்டூலை எடுத்துப்போட்டு உட்காரவைத்து, “பார்த்து வர்றதில்லையா மாமா? கால்ல ரெத்தம் பாருங்க. ஹேய்! கேர்ள்ஸ் மெடிக்கல் கிட் இருந்தா எடுத்துட்டு வாங்க” என்று அவசரப்படுத்த, புரியாமல் நின்றிருந்த பெண்களிடம் “ டிஞ்சரும், பஞ்சும் எடுத்துட்டு வாங்க” என விரட்டினாள்.

அவர்கள் எடுத்து வரும்வரை ஒருவித படபடப்பிலேயே இருந்தவள், அப்பொழுதுதான் நினைவு வந்து, தன் கைக்குட்டையை எடுத்து இறுக்கிக் கட்டினாள்.

அவளின் ஆர்ப்பாட்டத்தை அண்ணாமலை ஆராய்ச்சியாய்ப் பார்த்ததைக் கவனிக்கவில்லை பாகீரதி.

“வாட் கேர்ள்ஸ்? இவ்வளவு நேரமா எடுத்துட்டு வர? ரெத்தம் வருது பாருங்க. என்ன மாமா ஆள் வச்சிருக்கீங்க? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல்” என்று அவரையும் திட்ட, ஒரு பெண் கொண்டு வந்ததை வாங்கி டிஞ்சரை பஞ்சில் வைத்தபடி இரத்தக் கறையைத் துடைக்க, “ஸ்...” என்ற சத்தம் அவரிடமிருந்து வந்தது.

“ஒண்ணுமில்ல மாமா. சின்னக் காயம்தான். லைட்டாதான் எரிச்சல் இருக்கும். சரியாகிரும்” என அவரை சமாதானப்படுத்தினாள்.

அவளின் செய்கையில் சிரிப்பு வந்தாலும், அதைவிட அவளின் அக்கறையே மனதில் நின்றது. ஏனோ அந்த சமயம் கணபதியின் நினைவுகள்தான் வந்தது. அவரின் இரக்க சுபாவமும், பொறுப்பான செயல்களுமே, தன் தங்கையை அவருக்குக் கொடுக்கச் சொல்லியது. இன்றளவும் அதை தவறென்று எண்ணியதில்லை. ‘அதே குணம் இந்தப் பெண்ணிற்கும்...’ நினைக்கையிலேயே சட்டென்று புரிந்தது அவருக்கு அவள் யாரென்று. சந்தோஷத்தில் அவளின் தலை வருடப்போன கைகள் தன்னாலேயே நின்றது. ஆனால், கண்கள்! அது கலங்கியதை அவரால் தடுக்க இயலவில்லை.”

தோள் விலகிய காயத்திற்கு பேண்டேஜ் போட்டு நிமிர்ந்தவள், மாமனின் முகம் பார்க்க, அதிலிருந்த கலக்கம், ‘அடிபட்டதால் வந்ததல்ல’ என்று அடித்துச் சொல்லியது.

‘பாக்ஸ்! ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்ட. உங்க மாமா கண்டுபிடிச்சிட்டாங்க போல. இதான் தானாடாவிட்டாலும் தன் தசையாடும்ன்றதா?’

“ப்ச்... இருக்காது மனமே. அது வலியினால வந்ததுதான்” என பூசி மொழுக, ‘என்னவோ போ. நான் சொல்லி என்னைக்கு நீ கேட்டிருக்க. உன் இஷ்டத்துக்குத்தான செய்யுற’ என பொரிந்து அடங்கியது.

“கட்டுப்போட்டாச்சி மா... அங்கிள். நான் வர்றேன்” என விட்டால் போதுமென்று நடந்தவளை, “வளர்மதி” என்று அண்ணாமலை அழைக்க, அதற்கு அவளிடம் பதிலில்லை என்றதும் “பாகீரதி” என்றார்.

சடாரென்று திரும்பியவளைப் புன்னகையோடு பார்த்து, “அம்மு” என்று கைநீட்ட, ஓடிச்சென்று அந்தக் கைகளுள் பாதுகாப்பாக ஒன்ற ஆசைதான். ஆனால், போகவில்லை. அவரையே வெறித்தபடி பார்த்தவள், “நான் பாகீரதியும் இல்ல. நீங்க என் மாமாவும் இல்ல. நீங்க ஒரு கௌரவம் பிடிச்சவர்! கௌரவத்துக்காக சொந்த தங்கையையே தவிக்கவிட்டு வந்தவர். எனக்கு மாமா வேண்டாம். எங்கம்மாவை வேண்டாம்னு சொன்னவங்க எனக்கும் வேண்டாம்” என்று கண்கலங்க நின்றிருந்தாள்.

அவள் அருகில் சென்று, “என் கண்ணைப் பார்த்துச் சொல்லு உன்னோட குற்றச்சாட்டு உண்மைதானான்னு. நான் கௌரவம் பார்க்கிறவன்தான் அது வெளியில. சொந்த தங்கைகிட்ட பார்க்கிற அளவுக்கு வெறி பிடிச்சவன் இல்லமா. அப்பவும், இப்பவும், எப்பவும் அவ நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஜீவன்மா நான்” என்றார் கலங்கிய குரலில்.

அவரையே புரியாமல் அவள் பார்த்திருக்க, ‘ஹேய் பாக்ஸ்! இவர் நல்லவரா? கெட்டவரா? ஒண்ணும் புரியலையே? உனக்குப் புரியுது?’

‘ஷட் அப். அதுக்கு பதில் தெரியாமல்தான ‘பே’ன்னு முழிச்சிட்டிருக்கேன். இரு நான் அவரையே கேட்கிறேன்’ என்று, “இப்ப என்ன சொல்ல வர்றீங்க? எங்கம்மாவை நீங்க எதுவுமே சொல்லல சொல்றீங்களா?” என எரிச்சலாக கேட்டாள்.

“சொன்னேன்தான். மனசுல இருந்து இல்லை. வெறும் உதட்டளவு வார்த்தைகள். வேணும்னே சொன்னது” என அன்றைய சூழ்நிலையைச் சொன்னார்.

அனைத்தையும் அமைதியாக கேட்டவள், “அப்ப நீங்க வில்லன் இல்லையா பழைய ஹீரோவா?” என்றதும் சத்தமாகச் சிரித்து, “இப்பவும் நான்தான் ஹீரோ” என்றார் மருமகளின் தோளணைத்து.

அவரிடம் இருந்து விலகியவள், “நோ நோ நீங்க ஓல்ட் ஹீரோ மாமா. நியூ ஹீரோ என்னோட சீனு முறைப் பையன்தான்” என்ற மருமகளின் குரலிலும் கண்களிலும் தெரிந்த நேசம் அவருக்கும் புரிய,

“சீனுவை உனக்கெப்படித் தெரியும்?” என்ற கேள்வி அவரிடமிருந்து வர சற்று திணறி, “அதெல்லாம் சொல்ல முடியாது மாமா. உங்க தங்கச்சிகிட்டயோ, பையன்கிட்டயோ கேட்டுக்கோங்க. சே... ஒருத்தி ஹீரோயின் ரோல் முழுசா பண்ணனும்னு நினைச்சா விடமாட்டீங்களே?” என்றாள் சலிப்பாக.

அதில் சிரித்தவர், “என் பையன் ஹீரோன்னா, நீதானலே ஹீரோயின்.”

“மாமா!” என ஆச்சர்யத்தில் விழிவிரிக்க,

“கன்பார்மா நீதான்லே” என உறுதியளித்து, “இப்ப உன் ஹீரோயின் ரோல்க்கு என்ன பிரச்சனை?” பேச்சினூடே இருவரும் கீழ உள்ள அறைக்குப் பக்கத்தில் வந்தார்கள்.

“ம்... வில்லனான உங்களைத் திருத்தி எங்கம்மாகிட்டேயும், புருஷன்கிட்டேயும் மன்னிப்பு கேட்க வைக்கணும்னு நினைச்சேன். எங்க நாம ஒண்ணு நினைச்சா, தெய்வம் ஓராயிரம் நினைக்குது” என்று பேசி முடித்து அவர் முகம் காண, அவர் அவ்விடத்தில் இல்லை.
 
Active member
Joined
May 9, 2025
Messages
110
Tamil language in Thirunelveli is so grate. Awesome accents.anguna peanuts tamilla addichukka onumeella. Their love,language even arguments are grate.Thiruchandur temple location has changed a lot.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
Than
Tamil language in Thirunelveli is so grate. Awesome accents.anguna peanuts tamilla addichukka onumeella. Their love,language even arguments are grate.Thiruchandur temple location has changed a lot.
Thank You so much
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top