• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
27


“ம்மா, உங்க மருமகனைப் பாருங்கம்மா. ஊருக்குப் போய்ட்டு வர்றேன் சொல்றாங்க?” என தாயிடம் புலம்ப, இவ்வளவு நேரம் வெளியே பண்ணிய வாக்குவாதங்கள் முற்றுப்பெறாமல், வீட்டு முற்றம் தாண்டி ஹாலுக்கு வந்திருந்தது. “அப்பா என்னன்னு கேளுங்கப்பா?” என தகப்பனையும் இழுத்தாள்.

“ஏன்டி நீ அடங்கவே மாட்டியா? இப்ப எதுக்காக ரப்சையைக் கூட்டுற?” என்றாள் தாரணி.

“ஏய் தர்ணி இல்ல அண்ணி வேண்டாம். எங்கண்ணன் தாலிகட்டின ஒரே காரணத்துக்காக உன்னை அண்ணின்னு கூப்பிடுறதே பெருசு. இடையில வந்த தொலைச்சிருவேன்” என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்டினாள்.

“என்னங்க இவளைப் பாருங்க?” தாரணி ப்ரவீணிடம் வந்து முறையிடவும், “பிறந்ததுல இருந்து பார்த்துட்டுத்தான இருக்கேன்” என தங்கைக்கு ஹைபை கொடுத்தான் அவன்.

“போயும் போயும் உங்களைப் போயி கூப்பிட்டேன் பாருங்க” என தலையிலடித்து, அதே கேள்விப் பார்வையைச் சிந்துவிடம் செலுத்த, அவளின் தோளில் கைபோட்டு, “என்ன இருந்தாலும் அவ என்னோட அண்ணன் மனைவி. ஆக்சுவலி நான் அவளை அண்ணின்னு கூப்பிடணும். ஏதோ ஃபோர் இயர்ஸ் பெரியவளா போயிட்டேன். இல்லண்ணா?” என்று ஸ்ரீநிவாசனிடம் கேட்கவும் அவனோ மண்டையை ஆட்ட, “சோ, இப்ப அண்ணி லெவல்ல இருக்கேன். உனக்கு சப்போர்ட் பண்ணி அண்ணியில் இருந்து நாத்தனாரானா, என்னைப் பிரிச்சி மேய்ஞ்சிறமாட்டாளா!” என தாரிணியுடன் பேசுவதுபோல் பாகீரதியின் கால்வாரினாள்.

அவளோ “அண்ணி” என்று பல்லைக்கடிக்க,

“ஒய் ஆர் யூ க்ரையிங்? என்னைவிட ஐந்து மாதம் பெருசா போன அக்கா?” என்றபடி நவீன் அவளை கேலி செய்தபடி வர, “குசும்புடா உனக்கு. உங்க மச்சான் டூ டேஸ் சென்னை போயிட்டு வர்றாங்களாம்” என்றவள் முகம் சோகத்தை காட்டியது.

“ஓ... முக்கியமான வேலைன்னா, நான் வேணும்னா போயிட்டு வரவா?” என்றான் விளையாட்டைக் கைவிட்டு.

“அதெல்லாம் இல்ல நவீ. சீனுதான் போகணும்” என இடைபுகுந்த ராமகிருஷ்ணன், பெரிய ஆர்டர் கிடைச்சதை நான் ஊர்ல இருக்கேன்னு சொல்லி தள்ளிப்போடவா முடியும். மற்ற விஷயம்னா வீடியோ கால்ல கூட பேசிக்கலாம். இப்ப போறது ப்ராஜக்ட் சைன் பண்றதுக்கு” என்றார்.

“ஓ... அப்ப சரி” என தந்தையிடம் பதிலளித்து, அக்காவிடம் திரும்பி “அக்கா டூ டேஸ் இல்ல. வெறும் இரண்டு நாள்தான். வேணும்னா சொல்லுங்க, நான் இங்கயிருந்து கோலி விடுறது, பம்பரம் சுத்துறதெல்லாம் சொல்லித்தர்றேன்” என்றான்.

“பாரதிம்மா பாருங்க இந்த நவீ என்னைக் கிண்டலடிக்கிறான்” என தன்னுடைய சிணுங்கலை விடாமல் பிடிக்க, “ஆமா. சின்னக்குழந்தை இப்பத்தான் சிணுங்குது.” சந்திரா கேலி செய்தார்.

“அம்மு வேணும்னா நீங்களும் போயிட்டு வாங்களேன்.”

“நோ! நோ! நான் இங்க ரொம்ப என்ஜாய் பண்றேன். பட், அவங்களையும் மிஸ் பண்ணுவேன்.” கணவனை கள்ளப்பார்வை பார்த்து தலைகுனிந்தவாறு மெல்லிய குரலில் சொன்னாள்.

ஸ்ரீயின் மனம் எல்லையில்லா சந்தோஷத்தில், தலை கவிழ்ந்திருந்த மனைவியின் அழகை காதலுடன் காண, “சீனு அநியாயமா ஒரு குழந்தையை உன் தலையில கட்டிட்டேனேடா?” சந்திரா வருத்தப்படுவதுபோல் முகத்தை வைத்து அவன் ரசனைக்கு தடைபோட்டார்.

“ம்மா... நான் மெச்சூர்ட் கேர்ள்” என நிமிர்வாய் சொல்ல, பாகீரதி மெச்சூர்ட் கேர்ள் என்றதும் ப்ரவீணும், தாரிணியும் ஒருவரையொருவர் பார்த்து வாய்விட்டு சிரித்தனர்.

“என்ன? என்னைப் பார்த்தா மெச்சூர்டா தெரியலையா?” என உதட்டைக் கடித்தபடி ‘எழுந்து வந்தேன்’ என்பதுபோல் சைகை செய்தாள்.

“ஹேய்! பாகீ கூல்மா. தண்ணிக்கு எதோ ப்ளாஷ்பேக் இருக்கும் போலிருக்கு. அதான் சொல்லி வச்ச மாதிரி ரெண்டுபேரும் சிரிக்கிறாங்க” என்றதும் தாரிணி வெட்கத்தில் கணவன் பின்புறம் ஒழிந்தாள்.

“ரதிமா மருமகன் போய்ட்டு வரட்டும். ஆனா, ஒருநாள்தான் லீவு சொல்லிரலாம். பக்கத்துலதான் திருவனந்தபுரம் ப்ளைட் பிடிச்சி சென்னை போயிட்டு அடுத்த ப்ளைட் பிடிச்சி இங்க வந்திரட்டும் ஈஸி” என்றார் ராமகிருஷ்ணன்.

“மாமா அங்க வேலையெல்லாம் அப்படியே இருக்கு. இவ கூட படிச்சதும் இல்லாம, அண்ணின்னு கூப்பிட்ட பாவத்துக்கு, மதன் க்ரூப்பை டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்னு தனித்தனியா பிரிச்சி விட்டிருக்கேன். கலாரதி டெக்ஸ்டைல்ஸ்ல நம்பிக்கையான ஆளை அத்தை விட்டுட்டு வந்தாலும் நாமளும் போய் பார்க்கணும்ல?”

“சரி. அதென்ன உன்னோட கார்மெண்ட்ஸ்கு எ.எஸ் என்றும், உன்னோட டெக்ஸ்டைல்ஸ்கு எ.எஸ்.ஆர் என்றும் நேம் வச்சிருக்க?” தன் நீண்டநாள் சந்தேகத்தைக் கேட்டார் ராமகிருஷ்ணன்.

மாமனாரின் கேள்விக்கு முதலில் மழுப்பியவன், அனைவருமே ஒருவித சுவாரசியத்துடன் அவனின் பதிலுக்காய் காத்திருக்கவும் மறைக்க வழியில்லாது, “அ...அது கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்கும்போது ரதியை எனக்குத் தெரியாது. சென்னையில டெக்ஸ்டைல்ஸ் ஆரம்பிக்கிற டைம்ல ரதியை எனக்குத் தெரியும். எ.எஸ் போடணும்னு நினைச்சி பெயர் எழுதும்போது கூட ஒரு ஆர்-ம் வந்திருச்சி” என்றான் அசடுவழிய சிரித்தபடி.

கணவனையே ஆச்சர்யமாய் நோக்கி, ‘யாரென்றே தெரியுமுன்னே என்னை அவ்வளவு பிடிக்குமா? எந்த நம்பிக்கையில் நான் அவங்களுக்கு கிடைப்பேன் என்று என் பெயர் வைத்தாங்க? நான் கிடைக்காமல் போயிருந்தா என்ன பண்ணியிருப்பாங்க? தேடி வந்து என்னைத் தூக்கியிருப்பாங்களோ?’ கேள்வியாய் அவனை உள்வாங்க, அப்பொழுதுதான் திறப்புவிழா அன்று, “ஆர் ஃபார் ரதி” என்று காதில் சொன்னது நினைவு வந்தது பாகீரதிக்கு. சந்தோஷத்தில் கணவனைக் கண்ணுக்குள் நிறைத்து காதலுடன் கண்டாள்.

‘ஹேய் பாக்ஸ்! இதையே நான் சொன்னா ஏத்துக்கமாட்டியே. என்ன லவ்ஸ் ஓவராகிருச்சா?’

“ஹ்ம்பா... லவ்வோ லவ்வு. என் முறைப்பையன் என்னை ரொம்ப ரொம்ப இம்ப்ரஸ் பண்றான்.”

‘ஹா...ஹா... என்ஜாய்’ என்று சிரித்தது மனம்.

தன்னைப் பார்த்தவளின் உணர்வு புரிந்து, “நியாபகம் வந்திருச்சா?” என்று தோள்குலுக்கி புருவம் தூக்க, அதில் புது ரெத்தம் உடலெங்கும் ஓட, வெட்கம் வந்தவள் அவசரமாக தலைகவிழ,

‘ஓஹ்ஹோ!’ என கோரஸ் குரல்கள் இசைந்தாடியது.

“வாவ் சூப்பர்! ஏன்டா ஸ்ரீ நான் எத்தனை தடவை கேட்டிருக்கேன். சொன்னியா பாரு?” என சுதர்ஷன் அவனை வார, அதற்கும் அசட்டுச் சிரிப்பே பதிலாய் வர, “மச்சான் சிரிக்காதீங்க பார்க்க சகிக்கலை” என்றான் நவீன்.

பாகீரதி வேகமாக கைபேசியை எடுத்து நம்பர் அடிக்க, எதிரில் கேட்ட, “சொல்லுங்க அண்ணி”யில், “ஏய் வேண்டாம். அண்ணின்னு நிஜத்துல கூப்பிடுறியா, கலாய்க்குறியான்னே தெரியமாட்டேன்னுது” என்றாள்.

“ஹி...ஹி... நம்ம புகழை அண்ணா பாடிட்டாங்க போல?”

“ஆமா. நீ தர்ணி கல்யாணத்துல அவங்களை வரவச்சது. சிந்து அண்ணி நிச்சயத்துல அவங்களை மாட்டிவிட்டது எல்லாம். அதான் சந்தேகத்துல கேட்டேன்.”

“அ...அது வாலிப வயசு அண்ணி.”

“இப்ப என்ன நீ கிழவனாவா போயிட்ட? நேர்ல நின்னுருக்கணும் அப்ப தெரியும். ம்... உன்கிட்ட பேச வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு. அங்க ஒர்க்லாம் எப்படியிருக்கு? அர்ஜென்டா இவங்க வரவேண்டியது இருக்கா?” என கேட்டாள்.

“இல்லண்ணி. அண்ணா ஒன் வீக் தேவையான ஆர்டர் கொடுத்தது, பே பண்றது எல்லாம் முடிச்சிட்டுத்தான் அங்க வந்தாங்க. தேவைன்னா நான் போன்ல கூப்பிட்டுக்குறேன். இங்கன்னு இல்ல கார்மெண்ட்ஸ்ல கூட அப்படித்தான்னு நிதிஷ் சொன்னான். இப்போதைக்கு நோ ப்ராப்ளம் அண்ணி.”

அவன் சொன்னதை உள்வாங்கியவள், “தேங்க்ஸ் மதன்” என போனை வைத்து கணவனை முறைத்தாள். “என்னயிருந்தாலும்...” என்று கணவனவன் இழுக்க, “இல்லாதத இருக்கிறதா காட்டுறீங்களா?” என காட்டமாக கேட்டாள்.

“பாப்பா அவனுக்கு ஒருநாள் லீவே ஜாஸ்தி” என்றபடி அடுப்படியில் இருந்த மேனகா, தாயுடன் வந்தார்.

“அப்படி சொல்லுங்கத்தை. பொண்டாட்டியை கவர் பண்ற டைம்ல, துணியைக் கவர் பண்ணப் போறாங்களாம். இதெல்லாம் ஓவராயில்ல” என நக்கலடித்தாள்.

அவளருகில் வந்து “ஏன் நீ என்னைக் கவர் பண்ணிக்கோ! கொஞ்சம் டைட்டா பண்ணிக்கிட்டா கூட ஓகேமா. நான் என்ன தடுக்கவா போறேன்” என்றான்.

“உங்களை... போங்க!” என்று மாமியாரிடம் சென்று அவரின் தோள்சாய்ந்தபடி, “ஆமா ஜெகன் அண்ணா ராஜி எங்க காணோம். இருங்க நான் சாப்பிட கூப்பிட்டு வர்றேன்” என்று நகர்ந்து வாசல் நோக்கிச் சென்று வெளியே கால்வைக்க, அங்கு இருந்தவரைப் பார்த்து அதிர்ந்து ஸ்தம்பித்தபடி நின்றாள். அவளைத் தொடர்ந்து வந்தனும் அப்படியே நின்றான். “சித்தப்பா! மாமா” என்ற வடிவமில்லாத வார்த்தைகள் மட்டுமே அவ்விடத்தில்.

மகனையும், மருமகளையும் மட்டுமே எதிர்பார்த்து வந்த ஐயப்பனுக்கு மருமகளின், ‘ம்மா... உங்க மருமகன் ஊருக்குப் போய்ட்டு வர்றேன்றாங்க’ என்ற கொஞ்சல் வார்த்தை கேட்க, ‘அக்கா வந்திருக்காளா?’ என நினைக்கையிலேயே, ‘அப்பா பாருங்கப்பா!’ எனவும், ‘அப்பாவா யாரது?’ என்றெண்ணும் போதே, ‘ஓ... ராம் மச்சானாகத்தான் இருக்கும்’ என மனம் சொல்ல, தொடர்ந்து இளவயது ஆண்கள் பெண்கள் என ஒரு பட்டாளமே இருந்தது.

ராம், பாரதி மற்றையவர்கள் பேசியவற்றைக் கேட்டதும், அனைவரையும் சந்திக்கப்போகும் ஆவலுடனும், சின்ன உறுத்தலுடனும் உள்ளே நுழைய போனவரை, தன் அண்ணன் மனைவியின் குரல் தடுத்தது. ‘இவங்களுக்கும் தெரியுமா? அப்ப அப்பாவுக்கும் தெரியுமா’ என்ற நினைப்பைப் பொய்யாக்காமல் அவரும் வந்தமர, ‘இவ்வளவு காலையில எப்படி வந்தார்கள்?’ என்று யோசிக்க வழியில்லாமல் போனது, அண்ணியின் தாய்வீடு இதுதானே என்பதில். ‘ஆக, உண்மை தெரியாதவங்க நாங்க மூணுபேர் தானா?’ யோசனையுடன் நுழையப்போக எதிரில் பாகீரதியும், அவள் பின்னே ஸ்ரீயும் வந்தார்கள்.

சில வினாடி அதிர்ச்சிக்குப் பின், உணர்வு வந்து பழையவை நினைவு வர, ஸ்ரீனிவாசன் வேகமாக உள்ளே திரும்பிப் போவதைப் பார்த்தவருக்கு, ‘இவன் இன்னும் எதையும் மறக்கவில்லையா?’ என்ற நினைவில் மனம் கசிந்தது.

“வா...வாங்க அங்... சாரி மாமா” என தடுமாற்றத்துடன் வரவேற்றாள்.

“ஹ்ம்... இப்பவாவது மாமான்னு கூப்பிடத் தோணிச்சே” என்றபடி அவளைத் தாண்டி உள்ளே வந்தார்.

“ஐயப்பா நீ எப்படி இங்கன?” என கேள்வியாய் இழுத்த தகப்பனை முறைத்தவன் தன் அக்காவையே பார்த்திருக்க, சந்திராவின் முகத்திருப்பலே அவரின் கோவத்தின் அளவைச் சொல்ல, அது எதையும் கண்டுகொள்ளாமல் “அக்கா” என்றழைத்தார்.

“அக்காவா? நானா? உங்கக்கா செத்து பத்தொன்பது வருஷமாகிருச்சி தெரியும்தான?” என்ற சூடான கேள்வியில்,

“என்னக்கா இப்டிலாம் பேசுறா? நீ எப்பவும் நல்லா இருக்கணும்னு நெனைக்கிறவன்கா நான்.”

“ஓ... அதான் அண்ணன் போட்ட ராமர் கோட்டை தம்பி லட்சுமணன் நீங்க தாண்டலையோ?” என்றவரின் குரலில் வருத்தத்துடன் சேர்ந்த கேலி இருந்தாலும், கணவனும் இல்லாமல் அவர்களும் தன்னை விட்டுச் சென்றபின், உள்ளத்து வலியை மறைக்க மறக்கப் போராடியது அவரல்லவா!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“அக்கா... அது...” என சுற்றிலும் பார்த்து அக்காவைப் பார்த்தார்.

அதைப் புரிந்து, “இங்க என் விஷயம் எல்லாமே எல்லாருக்கும் தெரியும். எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லிட்டுக் கிளம்பு” என்றார் படபடப்பாக. ‘இத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்த தம்பியின் மேல் தன்னையும் மீறி பாசம் வெளிப்பட்டுவிடுமோ’ என்ற பயமே அவரின் படபடப்பிற்கான காரணம்.

“மச்சானுக்கு பதினாறுக்கு வந்தப்ப நாகு உன்கிட்ட பேசினதைக் கேட்டேன்க்கா” என்று தலை கவிழ்ந்தவர் குரலில் அளவில்லாத வருத்தமும், வேதனையும் இருந்தது.

“ஐயப்பா!” அதிர்ச்சியில் சந்திரா சத்தமாக அழைக்க, அதே அதிர்ச்சிதான் விவரம் தெரிந்த அனைவருக்கும்.

“உண்மைதான்க்கா. அதைக் கேட்டதுக்கு அப்புறம் ஒன்னைய கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்து, இவகிட்ட கொடுமைப்பட வைக்கிற அளவுக்கு நான் மனசில்லாதவன் இல்லையேக்கா. நாகுவோட வார்த்தைன்ற விஷத்தை பொறுத்துட்டு இருன்னு சொல்ல, எப்படிக்கா மனசு வரும்? நான் உன் தம்பிக்கா!” என்று கண்ணீர் வழிய தன்முன் நின்ற தம்பியின் நிலை அவரை குழந்தையாய் காட்டியது.

“ஐயப்பா நான் எதிர்பார்க்கலைடா. அதை நீ கேட்டியா? கேட்டுமா...” என்றவர் வார்த்தையை நிறுத்த,

“ம்... கேட்டும் வேற எதுவும் செய்ய முடியாதவன் தான் நான். அவ என்னோட பொண்டாட்டியா போயிட்டாளே.”

“சாரிடா. நா...ன் உன்னைப் புரிஞ்சிக்கவே இல்லை” என்று தம்பியிடம் மன்னிப்பை வேண்டினார்.

“ப்ச்... விடுக்கா நீயேன் சாரி கேக்கா” என்றவர் ராமிடம், “மச்சான் என்னைய மன்னிச்சிருங்க. நான் சந்தேகப்பட்டெல்லாம் வரல. எங்கக்கா அங்கன இருந்தாதான் சுதந்திரமா எந்தவித உறுத்தலும், கட்டுப்பாடும் இல்லாம இருப்பான்னு தோணிச்சி. அண்ணன் பேசினது கூட இதுமாதிரியான காரணமாத்தான் இருக்கும். மத்தபடி அக்கான்னா அவனுக்கு உயிர். இருந்தாலும் எங்களை மன்னிச்சிருங்க மச்சான்” என்று கைபிடிக்க,

“உங்க யார் மேலயும் கோவம் இல்ல ஐயப்பா. அன்றைய சூழ்நிலை அப்படியாகிருச்சி.”

“என்ன பெரிய சூழ்நிலை?” என்ற குரல் ஸ்ரீனிவாசனிடமிருந்து வந்தது. “மன்னிச்சிருங்கன்னு ஒரு வார்த்தையில முடிச்சிட்டீங்க. மன்னிக்கிற மாதிரியா நடந்திருக்கீங்க? பொண்டாட்டி தப்பு பண்ணினா, அவங்களை அடக்கி அத்தைக்கு சப்போர்டா இருந்திருக்கணும். அதை விட்டுட்டு...” கோவத்தில் முடிக்காமல் நிறுத்தினான்.

“ம்... கண்டிச்சிருக்கலாம்தான். ஆனா, அவளுக்கு இருந்த கண்மூடித்தனமான ஆத்திரம் இன்னுமின்னும் பேசத்தூண்டுமே தவிர, ஆத்திரத்தைக் குறைக்காது. நானும் பேச, அவளும் பேசன்னு யாரோ ஒருத்தர் அசிங்கப்பட்டு நிற்கணும். அது தேவையான்னு சொல்லு” என்றவர் சற்று நிதானித்து, “ஏன்லே எங்கப்பாவை ஏத்துக்க முடிஞ்ச ஒன்னால, என்ன மன்னிக்க முடியலையாலே?” என்றவரின் கண்களிலுள்ள வலியைப் பார்த்தவன் கோவம் குறைந்துதான் போனது.

அவருக்குமே இவர்களை விட்டால் யார் இருக்கிறார்கள். ‘சித்தப்பாவும் அப்பாவிற்கு சமானம்தானே!’ மனம் நினைக்க, அவனின் திருவாயோ, “தாத்தா வயசானவங்க. குழந்தைக்குச் சமம். அதான் மன்னிச்சேன்” என்றது.

“நானும் குழந்தைதான்டா. நல்லா பாரு” என்றார்.

பல்லைக் கடித்தபடி “சித்தப்பா உங்க பையனுக்கு குழந்தை பிறக்கிற வயசுல நீங்க குழந்தையா?” என்றான்.

“என் பையனுக்கு முன்னாடி பொண்ணுக்கு குழந்தை பிறந்து, என்னை அவங்க தாத்தா சொல்றாங்க. அப்ப நான் குழந்தைதான?”

“ஐ ஆக்ரீ மாமா. நீங்க குழந்தைதான்” என்று அவரை தன்னருகில் அமரவைத்து கணவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

“எப்ப உங்க கல்யாணம் நடந்தது? திடீர் கல்யாணத்துக்கு அவசியமென்ன? முதல்ல சீனுவுக்கும், உங்களுக்கும் எப்படி அறிமுகம்?” என்று கேள்விமேல் கேள்வி கேட்க, பதிலை அவரவர் சார்பில் சொல்லவும், அமைதியாக கேட்டிருந்த ஐயப்பனுக்கு தாங்கள் வந்த பிறகு நடந்த அனைத்தும் புதிய செய்திகள். நேரே பாரதியிடம் சென்று சற்றும் யோசிக்காமல் காலில் விழுந்தார்.

சில கணங்கள் அங்கு என்ன நடந்தது என்று யாராலும் கணிக்க முடியவில்லை. அவரின் இந்த முடிவு அனைவரையும் உலுக்கியெடுத்தது என்றால், பாரதிக்கு சொல்லவே வேண்டாம் பதற்றத்தில் என்ன செய்வதென்று அறியாமல் பதறி பின் தெளிந்து, “ஏனுங் தம்பி இப்படிப் பண்ணிப்போட்டீங்? முதல்ல எழுந்திருங்?” என்றார்.

“ரொம்ப நன்றிக்கா. மச்சான் எங்களுக்கு நெருக்கமான சொந்தம் கூட. ஆனா, நீங்க? என் வாழ்நாளுக்கும் மறக்கமாட்டேன்கா. நீங்க எங்க குலசாமிக்கா” என்றார்.

உணர்ச்சிவேகத்தில் பாரதியிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம், “மாமா நீங்க இவ்ளோஓஓ நல்லவர்னு தெரியாம போச்சே” என்ற மருமகளிடம், “தெரிஞ்சிருந்தா என்ன பண்றதா உத்தேசம்?” சிரித்தபடி கேட்டார்.

“இது தெரிஞ்சினாங்காட்டி, மொத்தோ தபா பாத்தப்போ சைடுக்கா இட்டுகினு போயி அல்லாத்தையும் சொல்லிக்கினுருப்பேன்ல.”

“அடிப்பாவி! லோக்கல் சென்னை பாஷை பேசுற?” சிரித்தபடியே மனைவியை கடிந்தான் ஸ்ரீனிவாசன்.

“அஹ்ஹான்பா!” என்றவளை ஸ்ரீனிவாசன் விரட்ட, “இன்னாமே கலா. ஒம் மர்மவன் என்ன வெரட்டுறான். கண்டுக்கினு சொம்மா கீற?” என தாயையும் வம்பிழுத்தாள்.

“எங்கடி கத்துக்கிட்ட இந்த பாஷையை? சீனு அவ வாய்லயே ரெண்டு அடி போடு” என்று மருமகனை ஏவினார் சந்திரா.

“கலா எதுவாயிருந்தாலும் வாயாலயே போடச் சொல்லு. அப்பத்தான் வலிக்காது. கையிலன்னா வலிக்கும்ல” என்று கண்ணடித்தாள் பாகீரதி.

“அம்மு முன்னேறிட்டீங்க” என்று பாரதி சிரிக்க, “பாக்கி ம்... கலக்குற போ!” என தர்ணி ஒருபுறமும், “செல்லம் ஐ லவ் யூடி” என சிந்து ஒருபுறமும் கத்தினார்கள்.

“டேங்க்யூ டேங்க்யூ” என்று அனைத்தையும் குனிந்து நிமிர்ந்து ஏற்றவள், “நான் கடிக்கிறதை சொன்னேன். நீங்க எதுவும் தப்பா நினைக்கலையே?” என்றாள் குறும்பாக.

“இல்லவே இல்லையே” என்றார்கள் கோரஸாக.

“அத்தை! கடை திறப்புக்கு வந்த அன்னைக்கு இவ வாலுன்னு சொன்னப்ப, சே...சே இருக்காதுன்னு நினைச்சேன். ஆனா, இப்ப முழு மனசோட ஒத்துக்கறேன்” என தன் பங்கிற்கு ஸ்ரீனிவாசன் சொல்ல, அந்த இடமே கலகலப்பானது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top