- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
23
அந்நேரம் பாகீரதியின் கைபேசி சப்தமிட்டு அனைவரின் கவனத்தையும் கலைக்க, அவளின் முகம் பிரகாசமாக அழைப்பை ஏற்று , “சொல்லு. இல்ல வேண்டாம். நிஜமாவா? என்ன திடீர்னு? ஓ... சரி சரி மெசேஜ் பண்றேன். பை” என்று போனை அணைத்து, மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டு கணவனைப் பார்க்க, என்னவென்று பார்வையால் கேட்டவனுக்கு பதிலளிக்காமல், “ஆன்ட்டி என்னோட ஹேண்ட்பேக் கார்ல இருக்கு. எடுத்துட்டு வர்றேன். நீங்க பாயசம் எடுத்து வையுங்க” என்று வேகமாக வெளியே வந்து காரின் மறுபுறம் ஏறி உள்ளே அமர்ந்து, கைப்பையைத் தேடுவது போல் பாவ்லா செய்தாள்.
நாகலட்சுமி உள்ளே சென்றதைப் பார்த்தவன், தன் பக்க கார் ஜன்னலுக்குள் தலையைவிட்டு, “என் செல்லம்டி நீ” என்று கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியபடி, “யார் போன்ல? பல்ப் பிரகாசமா எரிஞ்சது.”
“ச்சோ! கையை எடுங்க. ஓவர் பொறாமை உடம்புக்கு ஆகாது. நவீன் வந்திருக்கான்.”
“என்னது? நவீன் இங்கேயா?” என்ற அலறலில் அவன் வாய்மூடி, “எதுக்கு இந்த சௌண்ட் கொடுக்குறீங்க? நவீன் வந்திருக்கான் அவ்வளவுதான்.”
வாய்மூடிய கையை தன் கையால் அழுந்தப்பிடித்து முத்தமிட்டான். வாங்கிய முத்தம் வஞ்சனையில்லாமல் தன் வேலையைக் காட்டியது. அவளின் உடலெங்கும் மென் அதிர்வு தோன்ற கண்மூடியவள், இருக்குமிடம் உணர்ந்து கையை இழுத்து, “ப்ச்... எங்க வச்சி என்ன பண்றீங்க. பக்கத்துல அத்தை இருக்காங்க” என கீச்சிக்குரலில் கிசுகிசுக்க,
“ஹ்ம்... தெரியும்” என்றான் அதே குரலில் கண்களால் அவளையும், அவளின் அவஸ்தையை ரசித்தபடி.
“ம்கூம் இது சரிவராது. நான் உள்ளே போறேன் அத்தைகிட்ட பேசிட்டிருங்க” என்றவள் மறந்தும் கணவனை உள்ளே அழைக்கவில்லை. அவளுக்குத் தெரியும் தன் கணவன் வீட்டினுள் வரமாட்டான் என்று. அவன் கௌரவத்தைக் கெடுக்கும் எதையும் செய்ய விழையவில்லை அவனின் மனைவி.
“ச்சோ... ஸ்வீட் அம்மு” என்று கன்னம் தொட்டு முத்தமிட்டு கொஞ்ச,
“ம்க்கும்...” என தொண்டை கனைத்து, “ஏலேய் இது ரோடு. கொஞ்சலை ஆலங்குளத்துல போயி வச்சிக்கோங்க. இந்த இடம் செட்டாகாது” என்ற தாயின் பேச்சில், அசடுவழிய நிமிர, அவளுக்கோ வெட்கம் தின்ன அதை மறைத்து வேகமாக உள்ளே நுழைந்தாள்.
அதைப் பார்த்த தாய்க்கு மனம் நிறைந்திருந்தது. மறுநாள் கல்யாணம் மாப்பிள்ளை இவன் என்றதும், முடியாது! எனக்குப் பிடிக்கலை! வேற பையன் பாருங்க என்று தன்முன்னே சொன்னவளாயிற்றே. அவளின் மனமாற்றம் எப்பொழுதோ என காத்திருந்தவருக்கு, அவர்களின் இந்த அன்னியோன்யம் பார்த்து ஒருவித நிம்மதியே.
அத்துடன் கணவனின் இந்த புதிய பரிணாமத்தில் அவருள்ளும் எதோ இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். நல்லவர்தான் இருந்தாலும் இந்த கௌரவப் பிடிவாதம் எப்பொழுதும் பிடிக்காது மேனகாவுக்கு. காதல் கணவனாய் பின் சுற்றவில்லை என்றாலும், மனைவிக்காக அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்பவர்தான். தங்கை விஷயத்தில் செய்த தப்பையே மகன் விஷயத்திலும் செய்ய, அவரிடம் இருந்த பேச்சுவார்த்தை என்ன என்பதுடன் முடிந்துவிட்டது. அண்ணாமலையும் மனைவியிடம் எதையும் பகிரவில்லை. மேனகாவும் அவரைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. இனிமேல் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்து மகனிடம் பேச ஆரம்பித்தார்.
உள்ளே வந்த பாகீரதி, “உடம்புக்கு இப்ப எப்படியிருக்கு ஆன்ட்டி? வலி பரவாயில்லையா?”
“இப்ப வலி தேவல. கொஞ்சம் அசதியா இருக்கு அவ்வளவுதான். ஆமா, நீ எத்தன வரை படிச்சிருக்கா?”
“ஏன் ஆன்ட்டி கேட்குறீங்க? எதாவது வேலைபோட்டுத் தரப்போறீங்களா என்ன?”
“உனக்கு வேலை வேணுமா நான் ரெடிபண்ணித் தர்றேன். இப்ப சொல்லு?” என்றார்.
“நான் காலேஜ் முடிச்சிருக்கேன்” என்றாள் நாகலட்சுமிக்கு இது போதுமென்று.
“பரவாயில்லை அதேன் டீசன்டா இருக்கா. வெளில ஒருத்தன் இருக்கானே அவன் பன்னெண்டாம் வகுப்புதேன். என்ன அலட்டலா வந்துருக்கான் பாரு.”
“ஏன் ஆன்ட்டி? அவங்க உங்களுக்கும் பையன் முறைதான. உங்களுக்கு அவங்களைப் பிடிக்காதா?” என்று மெல்ல கொக்கிபோட்டாள். அந்த கொக்கி திரும்ப தன்னையே மாட்டும் என்பதை அறியாமல்.
“ம்க்கும்... அவனும் அவன் மூஞ்சியும். எனக்கு இவனை மாதிரி ஒரு பையன் வேண்டவே வேண்டாம். சின்ன வயசுலயே ஒரு கல்யாணத்தை முடிச்சி வச்சிட்டு ஓடிட்டான் ஓடுகாலிப் பய. திமிர் உடம்பெல்லாம் அவன் அத்தைக்காரி மாதிரி.”
‘இவங்க பிரச்சனையில எங்கம்மாவை ஏன் இழுக்கிறாங்க?’ என்று தோன்றினாலும், “யார் அவங்க அத்தை?” என்ற அடுத்த கேள்வியைக் கேட்க, ஏன்டா தாயை இழுத்தோமென்று ஆகிவிட்டது பாகீரதிக்கு.
“ம்... இருக்கா சந்...தி...ர...கலா” என கழுத்து ஒடியுமளவு இழுத்து, “தான்தான் பெரிய அழகின்ற நெனப்போட. புருஷன் செத்த பின்னாடியும் அவ புருஷனோட சித்தப்பா பையனோட...” அதற்கு மேல் எதுவும் பேசவிடாமல், “ஆன்ட்டி ப்ளீஸ் நிறுத்துங்க” என்றாள் சத்தமாக.
“என்னாச்சி வளர்? அவளைச் சொன்னா உனக்கேன் கோபம் வருது?” என்ற நாகலட்சுமியின் வித்தியாசமான பார்வையில்,
‘வளர்’ என்ற பெயர் மனதில் நடிக்க வந்ததை உணர்த்த, “சாரி ஆன்ட்டி. அ...அது எனக்கு இந்த மாதிரிப் பேசுறது பிடிக்கல. இதான்னு எனக்கு தெரியாத விஷயத்தை தப்பா யார் சொன்னாலும் கேட்டுக்கமாட்டேன். சரியோ, தப்போ, பெண்களை பெண்களே இழிவா பேசுறது ஐ டோண்ட் லைக் இட்” என்றாள் தன்மையாக தன் கோபத்தை தன்னுள்ளே புதைத்து.
“அதைவிடுமா. நீ உக்காரு நான் பாயசம் தர்றேன்” என்று எடுத்து வந்து தந்த பாயசம் பாய்சன் போல் தொண்டையில் எரிந்தது. தாயையும் கணவனையும் தரக்குறைவாக பேசியவள் கையினாலேயே இனிப்பு சாப்பிடுவது விஷம்போல் கழுத்தைப் பிடிக்க, தன் கண்களின் வலியைக் வெளிக்காட்டாமல் இருக்கப் பெரும்பாடுபட்டாள்.
வெளியில் நிற்கும் கணவனைப் பார்க்க வேண்டும் போலிருக்க, வாசல் வந்து வேடிக்கை பார்ப்பதுபோல் நின்றாள். தாத்தாவும், அத்தையும் அவனை வீட்டினுள் வரக் கெஞ்சுவது கேட்டது. உள்ளே சென்று தன் கைபேசியை எடுத்து கணவனுக்கு அழைத்து அவன் எடுத்ததும் மாமியாரிடம் கொடுக்கச் சொன்னாள்.
“அத்தை அவங்களை உள்ள வரச்சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு கேள்விப்பட்டதில்லையா? அவங்க அப்பாவா என்னைக்கு வந்து கூப்பிடுறாங்களோ, அன்னைக்கு இந்த வீட்டுக்குள்ள வருவாங்க. அப்படியே பேசிட்டிருங்க, நான் ஐந்து நிமிஷத்துல வந்திருறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
“என்னமா சொல்றா உங்க மருமக?”
“ம்... ஒன்ன உள்ள வரச்சொல்லி கூப்பிடுறா” என்றார் ஆதங்கமாக.
“இல்லையே. அப்படி கூப்பிட்டிருக்க மாட்டாளே. எங்கேயோ இடிக்குதே” என்றான் மனைவியை உணர்ந்து.
“ஆமா. நல்லா இடிக்குது. உள்ள கூப்பிடக்கூடாதாம். ஒங்கப்பா வந்து கூப்பிட்ட பின்னாலதேன் உள்ள வரணும்னு சொல்றா.”
“அம்மா இது நீங்களே சொல்லியிருக்க வேண்டியது. நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு என்னை உள்ள கூப்பிடுறீங்க?” என்றான் சற்று வருத்தமாக.
“என்னலே பண்ணச் சொல்லுத என்னய? தன்மானத்தை மீறி பெத்த பாசம் அழைக்குது. எம்புள்ளய யாரோ ஒரு வழிப்போக்கன் மாதிரி தெருவுல நின்னு பேசி அனுப்புறது, எவ்வளவு மனக்கஷ்டம் தெரியுதா. ஒங்கப்பா ஒன்னய உள்ள கூப்பிடுவாவன்னு தெரியல. நீயாவும் வரமாட்ட” என்றவர் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“அம்மா அழாதீங்க. தெரிஞ்சே கேட்டா எப்படிம்மா? நீங்க உள்ள போங்க. ரதி தனியா இருக்கா. நான் இந்த கார்னர்ல வெய்ட் பண்றேன். நாளைக்கு உங்கம்மா வீட்டுக்கு வாங்க. அங்க பேசிக்கலாம்” என்று கிளம்பினான்.
அண்ணாமலையோ தங்களின் அறையினுள் குறுக்கும் நெடுக்குமாக கோவத்துடன் நடை பயின்றிருந்தார். நினைவுகள் என்னவோ தங்கையையும், மகனையுமே சுற்றியது. கௌரவத்தைக் காரணம் காண்பித்து தங்கையை சென்னையிலேயே விட்டு வந்தாலும், தங்கை தவறானவள் என்று ஒரு வினாடி கூட நினைத்ததில்லை அவர். சமாதானமாகப் பேசி அழைத்து வரலாம் என நினைத்தவர் தான். தம்பி மனைவியின் அடாவடித்தனமான பேச்சில், அங்கிருந்தவர் முன் தங்களின் குடும்ப கௌரவம் போவதை விரும்பாமல், தங்கையிடம் வந்து மென்மையாகத்தான் கேட்டார். அதற்குள் நாகலட்சுமியின் பேச்சில் இன்னும் அசிங்கம் ஓட, அதற்கு ஏற்றார்போல் சந்திராவும் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவும், தங்கையின் பிடிவாதத்திற்கான காரணம் புரிந்தது, ‘கணவனுடன் வாழ்ந்த வீட்டைவிட்டு வர மனமில்லையென்று.’
தம்பி மனைவி பேசியதை வைத்து தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தாலும், எதோ ஒரு வகையில் அவள் மூலம், தங்கை கொடுமையை அனுபவிப்பாள் என்பது புரிந்தது அந்த அனுபவப்பட்டவருக்கு. மச்சினனின் தொழிலும் இங்கிருக்க, தன்னுடைய ஸ்தானத்திலிருந்து ராம் தங்கையை பார்த்துக்கொள்வான் என்ற முழு நம்பிக்கை இருந்தது அண்ணாமலைக்கு.
உடனே தங்கையை விட்டுச்செல்ல முடிவெடுத்து, அவளை உசுப்பேற்றி அவள் வாயாலேயே வெளியேறச் சொல்லவைத்து, தன் கௌரவத்திற்காகத்தான் என மற்றவர்களையும் எண்ண வைத்தார், மனைவியையும் சேர்த்து. சென்னை வரும்பொழுதெல்லாம் ரதி டெக்ஸ்டைல்ஸ் வந்து, யாரும் அறியாமல் தங்கையைப் பார்த்துவிட்டு செல்வார். அவளின் பெண்ணை பத்து வயதில் பார்த்தது அதன்பின் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அவருக்கு.
அடுத்து மகன் விஷயம், கோவத்தில் நடந்ததுதான் என்றாலும், நில விஷயமாக சார்பதிவாளர் அலுவலகம் சென்றவருக்கு, அங்கு சாட்சி கையெழுத்து போடும் மகன் கண்ணில்பட்டான். வயது இருபதென்று பழனி சொன்னதும் எதுவும் சொல்லாமல் கையெழுத்திட்ட மகனிடம் கேள்வி கேட்க முடியாமல், உடன் ஆட்கள் இருந்ததால் கோவத்தை அடக்கி வந்துவிட்டார். அந்த நேரம் வந்தது கண்மூடித்தனமான கோவம். இந்த வயதில் தன் மகன் தவறுவதை அவரால் தாங்க முடியவில்லை. பார்த்துப்பார்த்து வளர்த்த மகனின், பிற்கால வாழ்க்கையை நினைத்தவருக்கு உடலெல்லாம் எரிய, அத்தனையும் கோவமாக வெடித்து அவன் சொல்ல வந்ததை காதுகொடுத்து கேட்கவிடாமல் செய்தது.
ஆனால், மற்றவர்கள் பார்வைக்கு நாகலட்சுமியின் தூண்டுதலால் பேசியதாகத்தான் தோன்றும். உண்மை அதுவல்ல என்பது அவருக்கு மட்டும்தானே தெரியும். கோபத்தில் அனைத்து தகப்பனும் சொல்லும் வார்த்தைதான் ‘வீட்டைவிட்டு வெளியே போ’ என்பது. ஆனால், அந்த வார்த்தை தப்பான நேரத்தில் தப்பே செய்யாதவனைத் தண்டித்ததுதான் கொடுமை.
சற்று நேரம் கழித்து மகன் எதோ சொல்ல வந்ததை நினைத்து, ‘என்னவாயிருக்கும்? நான் அவனை நம்பி ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமோ?’ என மனம் புலம்ப, வண்டியை எடுத்து பழனியின் வீட்டிற்கேச் சென்று விவரம் கேட்டு, அவனையும் குடும்பத்துடன் சேர்த்து வைத்து, பையனைத் தேட ஆரம்பித்தவர் தான். பையன் கிடைக்கவில்லை. பையனைக் காணாமல் அண்ணாமலை மனதால் மிகவும் நொடிந்துபோன தருணங்கள் அது.
வீட்டில் மனைவியின் புலம்பல் ஒருபுறமென்றால், தாயின் சாபம் அதைவிடக் கொடுமையானது. சாகும்வரை பேரனை எண்ணியே செத்தவர். அதன்பின் யாரும் அறியாமல் மகனைத் தேடுவதே வேலையாய் வைத்திருந்தார். ஏன் சென்ற மாதம் நண்பனின் வீட்டு விசேஷமென்று திருச்சி சென்று, அங்கு இரண்டு நாள்கள் தங்கி மகனை தேடிக்கொண்டிருந்தவர், இன்று அனைவரின் பார்வையிலும் வில்லனாய்.
இதோ இன்று மகனைக் கண்டதும் அவனின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். தகப்பனாரும், மனைவியும் அவனிடம் பேசும்பொழுது, கைபிடித்து மன்னிப்பு கேட்டு, தோழனாய் தோளணைத்து அழத் தோன்றியது அத்தந்தைக்கு. ஆனாலும், ஏதோ தடுக்க நாகலட்சுமியைத் திட்டிவிட்டு, வந்த கண்ணீரை மறைக்க உள்ளே சென்றுவிட்டார்.
வளர்மதி என்ற பெயரில் வந்திருந்த பெண்ணை மகனுக்கு பிடித்திருக்கிறது என்பதை அவன் பார்வையே சொல்லியது. அவள் வீட்டினுள் வந்த பின்பும், மகனின் கண்கள் வாசலைத் தொட்டு நின்றிருந்ததை அறை ஜன்னலிலிருந்தே கவனித்தவராயிற்றே.
‘நல்ல ஜோடிப்பொருத்தம்’ என மனம் சொன்னது. எந்தத்தடை வந்தாலும் சேர்த்து வைத்துவிட வேண்டுமென்று முடிவெடுத்தார் அண்ணாமலை.