- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
22
காலை ஆறு மணிக்கெல்லாம் விழித்த பாகீரதி எழுந்து குளித்து வர, கால் தரையில் படாமல் அந்தரத்தில் மிதப்பதுபோல் தோன்ற, என்னவென்று பார்த்தவள் அதிர்ந்தே போனாள் இன்பமாய். ‘இவங்க எப்படி இங்க?’ மனம் சந்தோஷக் கூச்சலிட, என்னவென்று யோசிக்கும் முன் கட்டிலில் கணவன் அருகிலிருந்தாள். நிறைய கேள்விகள் இருந்தாலும், அமைதியாக கணவனாகிய மன்மதனை ரசித்துக் கொண்டிருந்தாள் அவனின் ரதி.
“என்ன அப்படி ஒரு பார்வை? என்னடா மும்பைன்னு சொல்லிட்டு வந்தோமே. இங்க இருக்கிறது எப்படி தெரிஞ்சதுன்னு பார்க்கிறியா? நான் ஸ்ரீனிவாசன்! கடவுள் ஸ்ரீனிவாசனுக்கு உலகத்தையே தனக்குள்ள அடக்க முடியும் போது, இந்த ஸ்ரீனிவாசனால பொண்டாட்டி இருக்கிற இடம் தேடிப் பிடிச்சி எனக்குள்ள அடக்கவா முடியாது. தூக்க முடியுமா கேட்டதான? இப்ப உன்னைத் தூக்கிட்டேன். என்ன செய்யலாம். சொல்லு?” என்றான் குறும்போடு.
“அ...அது நீங்க கண்டுபிடிப்பீங்க தெரியாது. மும்பை அட்ரஸ் எதுவும் சொல்லலையா. அதான் அசால்டா சொன்னேன்” என்றாள் உள்ளே போன குரலில்.
மனைவியின் கைவிரல்களுள் தன் விரல்களைக் கோர்த்தபடி விளையாடியவன், “மும்பை போன அன்னைக்கு இல்லாம, மறுநாள் மெசேஜ் வரும்போதே யோசிச்சிருக்கணும். உன்னோட மெசேஜ் வந்ததே பெரிய விஷயம்னு இருந்துட்டேன். அப்புறம் ரெண்டு நாள் கான்டாக்ட் பண்ணாம, மூணாவது நாள் போன் செய்தியா, அதுவும் ஜாலியா” என்றான் முகம் கடுக்க, அதில் அவள் சிரித்தாள்.
“ஆமா இப்ப சிரி. எப்படா உன்னை நேர்ல பார்ப்போம்னு இருந்தது. நான் போனை வச்சிட்டதா நினைச்சி, நீ கட் பண்ணாம இருந்த. எங்க வளத்தம்மா, ஏலே பாப்பா நேரமாயிட்டிருக்கு சாப்பிடாம என்ன பண்ணுறான்னு கேட்டது, என் காதுல தேனா வந்து விழுந்தது. சோ, நேத்தே எல்லா வேலையும் முடிச்சிட்டு, நைட்டோட நைட்டா கிளம்பிட்டேன், என் முறைப்பெண்ணைப் பார்க்க” என்றான் கண்ணடித்து.
“யாரோ நீ என்ன மூணு முத்தம் கொடுக்கிறது. நான் முன்னூறு கொடுக்கிறேன்னு சொன்னாங்க. இப்போதைக்கு மூணு மட்டும் கொடுக்கச் சொல்லு ரதிமா. அதுக்காகவே நைட்டோட நைட்டா வந்திருக்கேன்” என்றான் கிசுகிசுப்பாய்.
“அச்சோ! நான் உங்களோட பேசக்கூடாதுங்களே!” என்று கோவை பாஷையில் அலறினாள்.
“ஹா...ஹா... அப்புறம்!”
“நெசந்தானுங்க. நான் உங்க கூட பேசக்கூடாது. நாமதான் பிரிஞ்சிருக்கோம்லங்க” என்றாள் அப்பாவியாய்.
“ஹ்ம்... ஆமாம்ல. சீக்கிரமே ஒரு நல்லநாள் பார்க்கச் சொல்லணும்” என்றான் தீவிரமாய்.
“எதுக்கு?” என்று புரியாமல் விழித்தாள்.
“ரெண்டு மாசத்தை வேஸ்ட் பண்ணியாச்சி. அப்புறம் நாம எப்ப அப்பா, அம்மா ஆகுறது?” என தோள்குலுக்க,
“ச்சீ...” என்று முகம் சிவந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு, “ஐ மிஸ் யூ ரதி. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். நைட் முழிச்சிருந்தது அப்படியே அசத்துது” என்றதும்தான் தாமதம், “ஓ.. சாரிங்க. நீங்க தூங்குங்க. நான் கீழ போறேன்” என்று எழப்போனாள்.
“ப்ச்... இப்ப நீ ஏன் எழுந்திருக்க? பக்கத்துலயே இரு” என அவளை அணைத்தபடி சில நிமிடங்களில் உறங்கிப்போனான்.
கணவனையே பார்த்திருந்தவளுக்கு, ‘நானா இது! எப்படி மாறிப்போனேன் நான். கணவனைக் காதலிக்கும் அளவு. என்று தோன்றிய நேசம்’ என்பது அவளுக்கே புரியவில்லை. ஏதேதோ காரணம் சொல்லி இவனை ஒதுக்க நினைத்தாலும், மனம் சண்டித்தனம் செய்து அவனை அடைந்துவிட்டதே.
‘ஹா...ஹா...’ என்று மனசாட்சி சத்தம் போட்டுக் குதித்தது. ஹேய் பாக்ஸ் டூடூ லேட்யா. அதோட உனக்கு ஒரு தேங்க்ஸ்பா!’ என்றது எகத்தாளமாய்.
‘உன்னை யார் கூப்பிட்டாங்கன்னு. இங்க வந்து குதிக்கிற? இந்த வேலையெல்லாம் வேண்டாம் ஓடிரு சொல்லிட்டேன்.’
‘பாக்ஸ் இப்பவும் நடிக்கிற பார்த்தியா. வான்ட்டடா என்னைய கூப்பிட்டு, என்னோடவே பேசிட்டிருந்துட்டு, இல்லவே இல்லன்ற மாதிரி சொல்ற?’
‘ஸ்ஸ்...’ என தன் தலையிலேயே தட்டிக்கொண்டு, ‘ஓகே ஓகே ஒத்துக்கறேன். நான் மனசு மாறிட்டேன் போதுமா!’
‘அதுவும் ரொம்ப நாள் முன்னாடியே. அதைச்சொல்லு?’
‘ஆமா. அதுக்கு இப்ப என்ன பண்ணனும்ன்ற? நீ கிளம்புறியா. என் புருஷனை ரசிக்க விடமாட்டேன்ற. இத்தனை நாள்ல இவ்வளவு நெருக்கமா இருக்க சந்தர்ப்பம் கிடைக்கல. கிடைச்சாலும் நான் விடல. ப்ளீஸ்’ என்ற கெஞ்சலில் மனம் ஓரம்கட்ட, அமைதியாக ரசித்தாள் கணவனை.
ஸ்ரீனிவாசன் தூங்கி எழ இரண்டு மணியானது. காலையில் பாட்டி தந்த காப்பியில் படுத்தவன்தான். இடையில் மனைவி எழுப்பியும் எழவில்லை. நிம்மதியான ஒரு தூக்கம். நிறைய நாள் தூங்கவில்லையோ என்று எண்ணும்படியான தூக்கம்.
உண்மையும் தானே. திருமணம் முடிந்து மாமனாரின் மருத்துவமனை வாசத்தில் மனைவியின் கவனமெல்லாம் அங்கிருக்க, அவளின் மன நிம்மதிதான் தேவையென்று அவளை நெருங்காமல் விட்டுவிட்டான். வீடு வந்த பின்பும் திருப்பூரிலேயே இருக்க, சென்னை வரமறுத்தாள். அதையும் தந்தை மேலுள்ள பாசம் என்றுவிட, சென்னை வந்தவள் நேரே ‘மும்பைக்கு வேலைக்கு கிளம்புறேன்’ என்றதும்தான் உண்மையிலேயே மனைவிக்குத் தன்மேல் எந்த எண்ணமும் இல்லையோ என்று பரிதவித்தான்.
அவளைத் தடுக்கப் பார்த்து முடியாமல், தன் அத்தையையும் அனுப்பி முடியாமல் போக, ஊருக்குச் செல்லும் அன்றுதானே அவளை நெருங்கினான். அவளின் மனமும் தன்னை நாடுவதை உணர்ந்தாலும், அதை ஒத்துக்கொள்ளாமல் வீம்பில் செல்லும் மனைவியை எப்படி நிறுத்துவதென்று தெரியவில்லை. ஆனால், விரைவில் சரிபடுத்திவிடலாம் என்று மட்டும் தோன்றினாலும், அவளில்லாத வீட்டில் உறக்கம் அவனை அண்ட மறுத்தது. தற்பொழுது மனைவி தன் அணைப்பினுள் என்ற எண்ணமே மேலோங்க தூக்கம் சடுதியில் வந்தது.
அவனையே பார்த்திருந்தவள் மனம் கனிய, ‘இனியொரு தரம் இந்த தவறு நடக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று மனதினுள் முடிவெடுத்தாள்.
மாலை நான்கு மணிக்கெல்லாம் தாயைப் பார்க்கவென ஸ்ரீனிவாசன் கிளம்ப, “நானும் வரட்டுமா?” என்ற மனைவியை ஆச்சர்யமாக பார்த்தான்.
“என்ன ஆச்சர்யம்? எங்க அத்தையைப் பார்க்க நான் வரவா கேட்டேன்?” என்றவள் குரல் வெளியே வரவில்லை. கணவனின் நம்பாத பார்வை உணர்ந்து முன்தினம் நடந்ததைச் சொன்னாள்.
“ஓ... இவ்வளவு நடந்திருக்கா? ஆமா. இப்ப எதுக்கு மும்பை போறேன்னு இங்க வந்திருக்க? வீட்ல உள்ளவங்களைப் பார்க்கணும்னு சொல்லியிருந்தா, நானே கூப்பிட்டு வந்திருப்பேன்ல.”
“அ...அது” என தடுமாற, மனைவியின் தடுமாற்றத்தில் எதோ விஷயமிருப்பதை உணர்ந்தவன் என்னவென்று கேட்க, “ஸ்ஸ்... சஸ்பென்ஸ்” என்று கண்சிமிட்டினாள்.
“ரதின்னு சொல்றதுக்காக இந்த மாதிரிலாம் செஞ்சி என்னை மயக்கி சோதிக்கக்கூடாது” என்றபடி அவளை நெருங்க, சட்டென்று விலகியவள், “ம்ம்... சும்மாலாம் சொல்லக்கூடாது. இங்க உங்களை யாரும் சோதிக்கலை. நீங்கதான்...”
“ம்... நான்தான்” என்றான் உற்சாகமான குரலில்.
‘சே... லூசு பாகி. நீயே வாய்கொடுத்து மாட்டிக்கிற’ என்று உஷாரானவள், “ம்... நீங்கதான் புலம்பிட்டு இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன். இப்ப என்ன தெரியணும்? கூடவே வர்றேன்ல அங்க வாங்க எல்லாமே தெரியும்” என்றாள்.
“நமக்கு கல்யாணம் ஆனது அப்பாவுக்கு தெரியாதே? அப்புறம் எப்படி நீ என்னோட வருவ?”
“நீங்க என்ன வீட்டுக்குள்ளயா வரப்போறீங்க? அத்தை, தாத்தா சொல்லமாட்டாங்க. அப்புறம் எப்படி நமக்கு கல்யாணமானது தெரியும். அதெல்லாம் நான் சமாளிச்சிக்கறேன்” என்றபடி காரில் ஏறி, தென்காசியிலுள்ள தங்களின் வீட்டின் முன் ரோட்டில் வண்டியை நிறுத்தி ஹாரன் அடித்தான். ஆள் யாரும் வரவில்லை என்றதும் அடுத்த முறை ஹாரன் அடிக்க, மேனகா உள்ளேயிருந்து, “யாரது?” என்றபடி வந்தார்.
மகன் காரைவிட்டு இறங்கியதைப் பார்த்தவர் சந்தோசத்தில், “ஏலேய் சீனு வாயா. எப்படியா இருக்கா? அத்தை மாமால்லாம் நல்லா இருக்காவளா?” என்று மேனகா மகனை விசாரிக்க, மறுபுறமிருந்து மருமகள் இறங்கியதைப் பார்த்தவர் கண்கள் மலர்ந்து, அவளிடம் போக இருந்த தாயைக் கைப்பிடித்து இழுத்தவன், “அம்மா, இப்போதைக்கு அவ உங்க தம்பி பொண்ணு மட்டும்தான். கொஞ்சம் அமைதியா இருங்க. உங்க தங்கச்சி வர்றாங்க” என்றான் முன்னறிவிப்பாக.
முகத்திலுள்ள சந்தோஷத்தை மறைத்து, “வாம்மா நீ நேத்து நாகுவோட வந்த பொண்ணுதான? என்ன இவனோட வந்திருக்கா? இவன எப்படி ஒனக்குத் தெரியும்?” என மூன்றாம் நபராய் விசாரிக்க,
‘அத்தை உங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் கன்பார்ம்!’ என மனதினுள் எண்ணி வெளியே லேசாக தலையசைத்தாள்.
சத்தம் கேட்டு வந்த நாகலட்சுமி, ‘யார் இவன்’? என்று அவன் முகம் காண, அடுத்த வினாடி புரிந்தது. தன் மச்சான் மகனென்று. ‘ஆனா, இவள் எப்படி இவனோட கார்ல வந்து இறங்குறா?’ என்ற சந்தேகத்தில் பாகீரதியை நோக்கி வர,
அதற்குள் சுதாரித்த பாகீரதி மேனகாவிடம், “ஆன்ட்டி இவர் உங்க பையனா?” என்று அவனிடம் திரும்பி, “ரொம்ப நன்றி சார்” என்று கைகுவித்து நாகலட்சுமி அறியாமல் கணவனைப் பார்த்து கேலியாக கண்சிமிட்டினாள்.
“அடிப்பாவி!” என்று சத்தமில்லாமல் உதடசைத்துச் சொல்லி, “இட்ஸ் ஓகே. நீங்க என்ன வேணும்னா என் கார்ல ஏறுனீங்க. அட்ரஸ் தெரியாம திருதிருன்னு முழிச்சிட்டிருந்தீங்க. என்ன ஏதுன்னு கேட்டு நானும் இங்கே வர்றதாலதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் அவளை குழந்தையாக்கி.
‘உங்களை.! நான் திருதிருன்னு முழிச்சிட்டிருந்தேனா? வீட்டுக்கு வாங்க பார்த்துக்கறேன்’ என பல்லைக்கடித்து கணவனை கண்களால் மிரட்ட, அவனோ அதை ரசிக்க, “ஆமா ஆன்ட்டி. நேத்து கார்ல வந்தோம்ல. இன்னைக்கு பஸ்ல வந்தேன். பஸ்ஸ்டாண்ட் தாண்டி எந்த தெருன்னு மறந்திருச்சி. சார்கிட்டத்தான் விசாரிச்சேன். தனியா நிற்கிறது நல்லதுக்கு இல்லைன்னு அழைச்சிட்டு வந்தார்” என்றாள் பவ்யமாய்.
“அதுக்காக நீ இவனோட வருவியா? வேற காரே கெடைக்கலயா ஒனக்கு. சரி இனிமேல் கண்டவங்க கூப்பிட்டா வண்டியில ஏறிராத. சரியான ஏமாத்துக்காரங்க” என முகம் சுழித்தபடி சொன்னாள்.
‘யார் கண்டவங்க? என் புருஷனா?’ என்ற வார்த்தை பாகீரதியின் வாய்க்குள்ளேயே நின்றது. அதை கண்கள் காட்டியதை நாகலட்சுமி கவனிக்கவில்லை.
கண்டவன் என்றதும் கோபத்தில் திமிறிய மகனின் கைபிடித்து, “அவ கொணந்தேன் ஒனக்குத் தெரியுமேயா. கொஞ்சம் அமைதியாயிரு. எனக்காக” என்றார் கெஞ்சலாக.
“அம்மா இருந்தாலும் அவங்க ஓவராதான் போயிட்டு இருக்காங்க. அவங்க பேசுறதையெல்லாம் கேட்டுட்டு இருக்க நான் குழந்தையும் இல்லை. சந்திரகலாவும் இல்லை” என்றான் சித்திக்கும் கேட்க வேண்டுமென்று அழுத்தமாக.