- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
21
காரிலிருந்து இறங்கியதுமே அந்த வீட்டின் சொந்தம் அவளை உணர்ச்சிவசப்பட வைத்தது. சுற்றிலும் வீடுகள் எள்ள ஏரியாவில், சற்று பழமையான பெரிய வீடு. வரும்பொழுதுதான் நாகலட்சுமி அவர்கள் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று சொன்னதுமே தெரிந்தது, தன் தாய் பிறந்து வளர்ந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருப்பது.
அதன்பின் தான் சின்ன மாமாவை முழுமையாகப் பார்க்க, அவரைப்பற்றி தப்பான எண்ணமெல்லாம் வரவில்லை. மாறாக பாரதியை முதலில் பார்த்தபொழுது தோன்றிய அதே உணர்வு ஏற்பட்டது. அவர்கள் பேசியதைக் கேட்டிருந்ததாலும், தன் முகப்போக்கை பார்த்திருந்ததாலும் ஜெகனிடம் விஷயத்தை சொன்னாள்.
‘இவர்கள் தன் உறவுகள். அதுவும் பிடிக்காத உறவுகள்’ என்ற எண்ணமும் வந்தது. தன்னைப் பெற்ற அப்பாவின் பெயரைக் கேட்டதுமே ரொம்ப நெருக்கமான உறவாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள்தான். ஆனால், தான் பார்க்க, கேள்விகள் கேட்க வேண்டிய முக்கியமான ஆளே இவர்தான் என தெரியும்போது, அவளால் சில நிமிடங்கள் தன் கோவ உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முயன்று தன்னை நிதானித்துக் கொண்டிருந்தாள்.
கார் சத்தம் கேட்டதும், வாசல் வந்த மேனகா கண்ணில் முதலில் பாகீரதி பட, “பாப்பா” என அழைக்கப் போனவர், மருமகளின் அவசரமான கண்ணசைவில் நின்று, மற்றவர்களை கவனித்து, “என்னாச்சி நாகுவுக்கு?” என மச்சினரிடம் கேட்டார்.
அவரும் தகுந்த விளக்கம் சொல்ல, நாகலட்சுமியோ “நீ வா வளர்மதி” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.
“வளர்மதியா!” என வாய் பிளந்து நின்றிருந்த மேனகா அருகில் வந்தவன், “ஆமா ஆன்ட்டி வளர்மதிதான். நான் அவளோட கூடப்பிறந்த அண்ணன் ஜெகன்” என்றான் சிரிக்காது.
‘இது எப்போதிருந்து?’ என அவன் விட்ட லுக்கையே அவரும் விட, “இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான்” என்று சிரித்தபடி சொன்னான்.
“நீ யாருப்பா?” என்று விசாரிக்க, “இங்க வரும்போதுதான் இது அவங்க வீடுன்னே தெரியும்” என்று நடந்ததைச் சொல்ல, “இப்போதைக்கு அவங்க உங்க சொந்த மருமகள்ன்ற உண்மை தெரிய வேண்டாம் ஆன்ட்டி. அப்புறம் அவங்க எதுக்காக வந்திருக்காங்களோ, அதுக்கு அதிக தடங்கலாகிரும்” என்றான்.
அவரும் சம்மதித்து அவனை உள்ளே அழைத்துச்செல்ல, அங்கே அவர் கண்ட காட்சியில் திறந்தவாய் மூடவில்லை. ‘நாகலட்சுமியா இது! இவளுக்கு பாசமாகக் கூட இருக்கத் தெரியுமா?’ என்றுதான் தோன்றியது. அவ்வளவு பாசமாய் பாகீரதியின் தலைவருடி, வேலைக்காரப் பெண்ணிடம் குடிக்க எடுத்துவரச் சொல்லி, அவரே அவளுக்கு கொடுத்தது என்பது எட்டாவது, இல்லை பத்தாவது அதிசயமாகவேப் பட்டது மேனகாவிற்கு.
இருக்காதா பின்னே, பாசம் என்றால் கிலோ என்ன விலையென்று கேட்கும் ரகமாகிற்றே! ‘இந்தப் பாசம் அவளைக் காப்பாற்றியதால் வந்தது. இதே என் தம்பி பெண் என்று தெரிந்தால், அடுத்த நிமிடம் நாகமாகவே மாறிவிடுவாள். எதற்கும் மருமகள் எவ்வழியோ மாமியாரும் அவ்வழியே இருந்துவிட்டுப் போயிரலாம்” என்ற முடிவுக்கு வந்தார்.
சிறிது நேரத்தில் மேனகாவின் கணவர் அண்ணாமலை வர, அவருக்குமே பாகீரதியைப் பார்க்கையில் சந்தேகம் வந்தது. அதுவும் ஜெகனை உடன்பிறந்த சகோதரன் என்றதும் மறைந்தும் போயிற்று. எதையும் பகுத்தறியும் நிலையில் அவரில்லை.
“வீடு எங்கு இருக்கிறது?” என்று நாகலட்சுமி விசாரிக்க, “ஆலங்குளம்” என்றாள். மேனகா, ‘அம்மா வீட்லயா இருக்கிற?’ என்பதுபோல் மருமகளைப் பார்க்க, “ஆமாம்” என்றது அவளின் சம்மதமான வாயசைப்பு.
அங்கு இருந்த நேரம் வரை அவர்களிடம் நல்ல தோழமையுடனும், பாசத்துடனும் பழகவும், வீட்டில் மற்ற உறுப்பினர்களுக்குமே அவளை மிகவும் பிடித்துவிட, வீட்டில் ஒருத்தியாக எண்ண ஆரம்பித்தனர்..
நாகலட்சுமிக்கு அவள்மேல் அளவிட முடியாத பாசம் வந்து ஒட்டிக்கொண்டது. ஒருவேளை அவளின் முகத்தோற்றம்தான் காரணமோ!
இரவு வீட்டிற்கு வந்து நடந்ததை மற்றவர்களிடம் சொல்லி முடித்து, தான் ஓய்வெடுக்கப்போவதாகக் கிளம்பி, தன் அறைக்குச் சென்றவளுக்கு உறக்கம்தான் வரமறுத்தது.
யாரைப் பழிவாங்க வேண்டுமென்று கிளம்பி வந்தாளோ அவளையே இன்று இரத்தம் கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறாள். அதற்கு பிரதிபலன் சின்ன மாமனின் மனைவியின் அபரிமிதமான அன்பு. இதுவரை யாரிடமும் அன்பு செலுத்தியே வாழாதவள், தன்னை அன்பால் குளிப்பாட்டுகிறாள். இப்பொழுது தான் என்ன செய்வதென்று அவளுக்கே குழப்பம் வந்தது.
திருமணம் முடிந்து தாய் தன் கதையைச் சொல்லியிருக்க, தந்தை குணமாகி வரும் வரை எதையும் கவனிக்கும் சூழ்நிலையில் பாகீரதி இல்லை. அதே நேரம் தனக்குத் திருமணமானதையோ! கணவன் என்று ஒருவன் இருப்பதையோ மறந்திருந்தாள். அந்தளவு அப்பாவின் பாசம் அவளை மூழ்கடித்திருந்தது.
ஒரு மாதத்திற்குள் சரியாகி, மறுமாசம் சிகிச்சையில் அனைத்தும் நலம் என்று வந்தபின்பே நிம்மதி மூச்சிவிட்டாள். வீட்டிற்கு வந்ததும் தாயைச் சுற்றிய நினைவுகள், அவருடைய மருமகனையும் சுற்ற, வேகமாக யோசித்தவள் சுகந்திக்கு அழைத்துவிட்டாள்.
“அண்ணி எதுக்காக உங்க தம்பியை வீட்டைவிட்டு அனுப்பினாங்க?” என்று காரணம் கேட்க, சுகந்தி சொன்ன காரணத்தை ஒரு விஷயமாகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘சே... ஒரு காரணமே இல்லாத காரணத்திற்காக தண்டனையா?’ என்றுதான் தோன்றியது.
ஸ்ரீ(சீ)னிவாசன் பனிரெண்டு முடித்து விடுமுறையில் இருந்த தருணம். தேர்வு முடிவு பார்த்து மேற்படிப்பு என்ன படிக்கலாம் என்ற நினைவுகளில் இருந்த சமயத்தில், தூரத்து உறவான பழனிவேல் தன்னுடைய மெக்கானிக் செட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வேண்டுமென்று அழைத்து, “அம்மாகிட்ட ஃப்ரண்டோட போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வா” என்றான்.
“ஏன் உங்களோட வர்றதாவே சொல்றேன். அம்மா எதுவும் சொல்லமாட்டாங்க” என்று கிளம்பியவனைத் தடுத்து, “நான் சொன்னதைச் செய்டா?” என்றான் கெஞ்சுதலாய். ஏனோ அவனுக்கு அந்நேரம் மறுக்கத் தோன்றவில்லை. தாயிடம் பொய் சொல்லி பழனியுடன் செல்ல, அதை வழியில் நாகலட்சுமி கண்டதை அறியவில்லை ஸ்ரீனிவாசன்.
அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நின்ற இடத்தைக் கண்டவன் அதிர்ந்து பழனியைப் பார்க்க, “எனக்கும் எங்க தெருக்கடைசில இருக்கிற சாந்தாவுக்கும் கல்யாணம்டா தம்பி. என் சார்புல கையெழுத்துப்போடன்னு யாரும் இல்லை. அதான் உன்னைப் பார்த்ததும் கூட்டிட்டு வந்துட்டேன்.”
“இல்ல நான் மாட்டேன்” என்றவனிடம், “ப்ளீஸ்டா தம்பி. இப்ப விட்டா இவளைப் பார்க்க முடியாது.” ஏனென்பது போல் அவன் பார்க்க, “அ...அது அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. நான் இல்லன்னா செத்துருவேன்றா” என கெஞ்சிக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வந்த பெண்ணையும், அவளின் தோழிகளையும் பார்த்தவன், “அதான் இத்தனை சாட்சியிருக்கே. நான் எதுக்கு? நான் இங்க வந்தது அப்பாவுக்குத் தெரிஞ்சிது, ஐயனார் மாதிரி அருவாளைத் தூக்கிருவார். நான் வரேன்” என்று வெளியேற,
“தம்பி” என்றழைத்த கல்யாணப்பெண்ணின் குரலில், அவன் நிற்க. “எங்களுக்கு வேற வழியில்லாமல்தான் இப்படி செய்றோம். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.” அவளின் கெஞ்சலில் மனமிறங்கியவன் சம்மதித்து கையெழுத்திடப் போனான்.
“உனக்கு பதினெட்டு வயசு முடிஞ்சிருச்சா?” என்ற பதிவாளரின் கேள்விக்கு, இல்லையென்று சொல்லுமுன், “என் தம்பிக்கு இருவது வயசு சார்” என்றான் பழனி. அண்ணனை முறைத்து கையெழுத்திட, அன்றே வீட்டிலும் பூகம்பம் வெடித்தது.
பழனி திருட்டுக் கல்யாணம் பண்ணியதைக் கேள்விப்பட்டதும், நாகலட்சுமி அவனிடம், “இதுக்குத்தான் அவனோட போனியா?” என்று நேருக்குநேர் கேட்க, தாயும், ‘நண்பனைப் பார்க்கப் போவதாகத்தான சொன்னான். இதென்ன?’ என்பதுபோல் மகனைப் பார்க்கவும், அவனின் தலைகுனிவு, ‘பொய் சொல்லியிருக்கிறான்’ என்பதை சொல்லாமல் சொன்னது. இருந்தாலும் இந்த வேலையை செய்திருப்பான் என்பதில் நம்பிக்கையில்லை மேனகாவுக்கு.
முதலில் திணறியவன் அதன்பின் நடந்த உண்மையைச் சொல்லுமுன், உள்ளே வந்த அண்ணாமலை மகனை என்ன ஏதென்று விசாரிக்காது அடி விளாசித்தள்ளி, “என்ன காரியம்லே பண்ணிட்டு வந்திருக்கா? படிக்கிற வயசுல சோடி சேர்த்து வைக்கியலோ” என்றார் ஆத்திரமாக.
“எல்லாம் அவங்கம்மா குடுக்கிற இடம் மச்சான். உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டுத்தான் போனான்” என அவன் தாயையும் போட்டுக்கொடுக்க, கோவத்தில் இருந்த அண்ணாமலைக்கோ இன்னும் உச்சிக்கு ஏறியது. மனைவியை எரிக்கிறார்போல் நோக்க, “அம்மாவுக்கு எதுவும் தெரியாதுப்பா. ஏன் எனக்கே தெரியாதுப்பா. வேணும்னா பழனி அண்ணனைக் கேட்டுக்கோங்க” என்று உண்மையைச் சொல்ல வர,
“பார்த்தீங்களா மச்சான். சந்தடி சாக்குல நான் கையெழுத்தே போடல சொல்லிருவான் போல. இதுக்கு அந்த பயலும்ல துணை. இப்பவே இத்தனை பொய்யா?” என ஆச்சர்யபடுபவளாய் வாயில் கைவைத்து சொல்ல,
“நீ அங்க போயி கையெழுத்துப் போட்டதை நேர்ல பார்த்தவங்க சொன்னாங்க. அதை இல்லைன்னு சொல்லப்போறியா? சொல்லுடா?” என்றவரின் மனதிற்குத்தான் தெரியும் பார்த்தது யாரென்று.
“நான் வேணும்னே பண்ணலப்பா. அங்க போன பின்னாடிதான்...”
“நிறுத்துடா. அங்க போன பின்னாடிதான் தெரியும்ன்றியா? அப்படித் தெரிஞ்சிருந்தா அந்த நிமிஷமே அங்க இருந்து வந்திருக்கலாம்ல” எனும்போது ஸ்ரீனிவாசன் தலைகவிழ, அது அவரை உச்சக்கட்ட கோவத்தில் ஆழ்த்தி, விசாரணை இல்லாமலே தண்டனை கொடுக்கத் தயாரானார் அண்ணாமலை. தன் மகன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதிலேயே, அவனை புரிந்துகொள்ள மறந்து வார்த்தைகளை விட்டார்.
தாயின் வார்த்தைகளோ, மனைவியின் கெஞ்சல்களோ, அவரின் காதில் விழவில்லை. தன் மகன் தவறான வழிக்குச் செல்கிறான் என்பதே அவரின் மனதில் நின்றது.
தாத்தாவும், சின்ன மகனான ஐயப்பனும் அதை என்ன ஏதென்று கேட்காமல், “ஏன்லே இப்படிப் பண்ணிட்டா? எல்லாரும் புள்ளய வளர்த்திருக்கான் பாருன்னு காரித்துப்புறாங்க. இப்படி ஒரு அவமானத்தைத் தேடிக் குடுத்திட்டியேடா?” என்றனர்.
அவர்களின் ஆதரவும் தனக்கில்லை என்றதில் பாவமாகத் தாயைப் பார்க்க, தாயின் கண்களில் கண்ணீரைக் கண்டவன், ‘அழ வேண்டாம்’ என்று தலையசைத்த நொடி, தகப்பனின் “வீட்டைவிட்டுப் போ” என்ற வார்த்தை இடியாக விழுந்தது.
விசாரிக்காமலே தீர்ப்பெழுதிய அனைவரின் மேலும் கோவமே அவனுக்கு. அந்தக் கோவமே ரோஷமாக மாறி, “என்மேல நம்பிக்கை இல்லாதவங்க எனக்கு எப்பவும் வேண்டாம்” என்று கத்திச்சொல்லி வீட்டைவிட்டு வெளியேற வைத்தது.
தடுத்தத் தாயையும், மறித்தபடி நின்ற அப்பம்மாவையும் விலக்கி, தன் சட்டைப் பையில் வைத்திருந்த, அதாவது எதோ வாங்க பாட்டி தந்திருந்த நூற்றைம்பது ரூபாய் பணத்துடன் வெளியேறினான்.