• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
20


திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம்:

அந்தக் காலை வேளையில் வாடகை வாகனத்தில் இருந்து இறங்கியவளுக்குள் ஒருவித சிலிர்ப்பு வந்தது. இதுதான் என் சொந்தம். இதைவிட்டு இத்தனை ஆண்டுகள் தனித்திருந்தது மிகுந்த வேதனையைத் தந்தது என்றால், தெரியாமலேயே இருந்தது எவ்வளவு பிழை என்று உணர்ந்தாள். மனதில் பல எழ, அதை மறைத்து சிரித்த முகமாகவே தான் வந்து நின்றிருந்த வீட்டடுக் கதவைத் தட்டி, தன் கையிலுள்ள கைபேசியை எடுத்து “ஆலங்குளம் வந்தாச்சி” என தகவல் அனுப்பிக் காத்திருந்தாள்.

கதவைத் திறந்த முதிய பெண்மணி, “யார்லே நீ? காலங்காத்தால இங்கன என்ன பண்றா?” கேட்ட அவரை வைத்த கண் வாங்காது பார்த்தவள் நொடியில், “பாட்டிஈஈஈ...” என்று கட்டியணைத்தாள்.

“ஏ புள்ளா... விடு. விடு சொல்றேன்ல. யார்லே நீ? அசிங்கமா கட்டிலாம் புடிக்கா?” என்றார் கூச்சத்துடன்.

“உரிமை உள்ளவங்களைத் தான் கட்டிப்பிடிப்பாங்க பாட்டி. சரி இந்த தாத்தா எங்க? இவ்வளவு பெரிய வீட்ல ஓல்ட்ஸ் மட்டும் ஜாலியா என்ஜாய் பண்றீங்களா? இனி எப்படிப் பண்றீங்கன்னு பார்க்கிறேன்” என்றபடி வீட்டினுள் செல்ல,

“எவள்லே இவா? சொல்லச்சொல்ல கேக்காம உள்ள வாரா. ஏய்யா! இங்கன வந்து பாரும். எவளோ ஒருத்தி நடு வீட்டுல நின்னுட்டு நாட்டாமை பண்ணுறா?” என்று கணவனுக்கு வார்த்தைத் தூதனுப்பினார்.

“ஏன்லே கத்திட்டே இருக்கா? விடிஞ்சதுல இருந்து அடையுற வரைக்கும் ஒரே கத்துதான். அதத் தவித்து ஒண்ணுந் தெரியாது” என்றபடி வந்த மூர்த்தியையும் விடாது, “ஹாய் தாத்தா! இந்த பாட்டி வெரி பேட்” என்று கைபிடித்து, “உங்க ரொமான்ஸ்கு நடுவுல நான் வந்துட்டேன்னு பொறாமையில பொங்குறாங்க” என்றாள் சிரிப்பை அடக்கி.

அவளின் ரொமான்ஸ்கு அர்த்தம் தெரியாதவர்கள், “அதென்னமா டொமாசு?” என்றார் அப்பாவியாய்.

சட்டென்று சிரித்தவள், “அது டொமாசு இல்ல தாத்தா. ரொமான்ஸ்.”

“சரி அந்தக் கழுதையத்தான் சொல்லேன் கேப்போம்” என்றார்.

ரொமான்ஸுக்கு தமிழின் அர்த்தம் புரியாமல் விழித்து, ‘இது கூடத்தெரியாம ஆலங்குளம் பொண்ணுன்னு பெருமை வேற அடிக்கிறேன். யோசி யோசி’ என மூளையை விரட்டி, “ஹான்! தனியா இருக்கிற ஜோடிங்க ஒருத்தரையொருத்தர் பார்வையிலேயே புரிஞ்சிக்கிறது. தெளிவா சொல்லணும்னா காதல் பண்றாங்கள்ல அது” என்று விளக்கி, ‘ஷப்பா ஒருவழியா சொல்லிட்டேன்’ என ஆசுவாச மூச்சுவிட்டாள்.

“ஐய என்னல நீ? இப்புடி பேசுத?” என வெட்கப்பட்ட பாட்டியை, தன்னுடன் சேர்ந்து தாத்தாவும் ரசிக்க, “இப்ப உங்களைத் தாத்தா ரசிக்கிறாங்கள்ல. அதான் ரொமான்ஸ்” என்று பாட்டியிடம் கூறினாள்.

அதில் வெட்கத்தில் பாட்டி தலைகவிழ்ந்து பின் நிமிர்ந்து, “ஆமா. யாரு மவ நீ? எங்கள எப்படித் தெரியும்?”

“என்னை இன்னுமா தெரியல? என்னை நல்லா பாருங்க” என்று சிரித்தபடி நின்றவளை, சில வினாடிகள் கூர்ந்து கவனித்தவர்கள், “பாப்பா!” என ஆச்சர்யமாய் அதிசயித்து, “என் பேத்தியாலே நீ. ஐயோ! ஒன்னைய அடையாளம் தெரியாம போயிட்டோமேல. குழந்தையில ஒன்ன பாத்தது” என கண்கலங்கி, “எங்களால நம்பவே முடியலை. எப்புடிலா இருக்கா? அப்படியே எங்கய்யாவப் பாத்தமாதிரி இருக்கு. என்னமா வளந்துட்ட நீ. ஆயுசுக்கும் நல்லாயிருக்கணும்லே. எங்களாலதான் அன்னைக்கு...”

பாட்டியின் வாய்மூடி கண்ணீர் துடைத்து, “அதான் நான் வந்துட்டேன்ல. இனிமேல் அதை நினைக்கக்கூடாது.”

“ஏய் ராசம்மா! எதுக்கு வராது வந்த புள்ளகிட்ட கண்ணக் கசக்கிட்டு நிக்கா. போ போயி பாப்பாக்கு காப்பித்தண்ணி எதாவது தா” என்று மனைவியை விரட்டியவர், “உக்காரு பாப்பா” என்றார்.

சில வினாடிகளில் அவளருகில் வந்த பாட்டி பேத்தியின் கைபற்றி வெளியே இழுத்து வந்து விட்டுவிட, அவரின் செயலில் பயந்து, “பாட்டி” என அலறி கண்களில் நீர் கோர்க்க நிற்க, அடுத்து அவர் எடுத்த ஆரத்தியில் சந்தோஷத்தில் கண்கள் மிதந்தது.

உப்பு மிளகாய் சுற்றி அடுப்பில் போட அது வெடிக்காமல் இருப்பதைப் பார்த்து, “பாருங்கப்பு புள்ள மேல எம்புட்டு திருஷ்டினு.” வாய் புலம்பலுடன் அடுப்படி சென்று பால்காப்பியுடன் வர, அதை மறுக்காமல் வாங்கிக் குடித்து, அருகிலமர்த்தி பாட்டியின் தோள்சாய்ந்து, தாத்தாவின் கைபிடித்துக் கொண்டாள்.

நீண்ட பல வருடங்கள் கழித்து வந்த தன் சொந்தத்தை, தன்னுள்ளே வைத்துக்கொள்வது போல் பிடித்துக்கொண்டார் ராசம்மாள்.

“ரெண்டு பேரும் தனியாவா இருக்கீங்க? தெரிஞ்சிருந்தா நான் என்னோடவே வச்சிருப்பேன் தாத்தா” என வருத்தப்பட்டவளிடம், “முடிஞ்சதப் போட்டுப் பேசி என்னலே செய்யமுடியும் சொல்லு. நடக்குறதுதான்லே நடக்கும். யாராலயும் எதையும் மாத்தமுடியாது. விதியை மதியால வெல்லலாம்னு வார்த்தைக்கு சொல்ல நல்லாயிருக்கும் பாப்பா. ஆனா, என்னைக்குமே விதியை வெல்ல விதியால மட்டும்தான் முடியும். எதையும் போட்டு கொழப்பிக்காம கொஞ்ச நேரம் படுத்து எந்திரி” என்று தத்துவார்த்தமாய் பேசி, “ராசம் புள்ளய மேல கூட்டிட்டுப்போ” என்றார்.

“ஏன் பாட்டி? துணைக்கு ஆளில்லாம எப்படி சமாளிக்கிறீங்க?” என்று நடந்தபடியே கேட்டாள்.

“ஹ்ம்...” என பெருமூச்சிவிட்டவர், “இத்தன காலம் தனியாத்தான்ல இருந்தோம். ஆறு மாசத்துக்கு முன்னாடி பொழைப்புக்குனு புருஷன் பொண்டாட்டி வந்தாக. அப்படியே பக்கத்துல நம்ம பழைய ஓட்டு வீடு இருந்துச்சி. அவியளுக்கு வாடகைக்கு விட்டேன். பழகுறதுக்கு நல்ல புள்ளைக. நமக்கும் யாரும் இல்லன்னதும் கொஞ்சம் பாசம் ஜாஸ்தி. எங்களுக்கு ஒண்ணுன்னா துடிக்கிதுங்க புள்ளைங்க. இதுபோதும்னு இருந்துட்டோம்.”

“செலவுக்கெல்லாம் என்ன பண்றீங்க பாட்டி?”

“நல்லா கேட்ட போ. இதை எம்புள்ள கேட்டான். உன்னைத் தொலைச்சிருவான். அவன் இருக்கும் போது எங்களுக்கு என்ன ராசா வீட்டுப் புள்ளைய மாதிரி இருக்கோம். பத்தாததுக்கு உங்கம்மாளும் பணம் அனுப்புறா. ரெண்டு பேரும் அங்கன வரச்சொல்லி அலுத்துப் போயிட்டாவ. என்ன பண்றது வயசானதும் சொந்த மண்ணை விட்டுப்போக மனசேயில்லை. இதான்ல ஒன் ரூமு. அப்பவே பொண்டாட்டிக்காக எல்லாம் உள்ளயே வச்சிக் கட்டிப்புட்டான் உங்கப்பன். ரெண்டு பேரும் வாழ்ந்த இடம் பாப்பா. நீயும் இங்கனயே தங்கிக்க. நான் காலைக்கு சாப்பாடு செய்றேன்” என்று கீழே சென்றார்.

தன் தாய், தகப்பன் வாழ்ந்த அறை என்றதுமே கண்கலங்கியது. ஏன் எதற்கென்று சொல்லத் தெரியவில்லை அவளுக்கு.

ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்து அமர்ந்திருந்த பேத்தியிடம், “செல்லையா தாத்தாவ பாக்கப் போகலையாலே?” என்றதும்,

“யாரு செல்லையா?” என கேட்டாள்.

“கெட்டது போ. என்னலே நீ? உங்கப்பனப் பெத்தவன்.”

“ஓ... சாரி பாட்டி. பெயர் தெரியாதுல்ல. அதான் குழம்பிட்டேன். கண்டிப்பா அவங்களையும் பார்க்கணும். எப்ப போகலாம்?”

“வெயில் தாள போகலாம். இப்ப போனா வெயில்ல வெந்து போயிருவோம்” என்றார்.

“உங்க நிறைய வார்த்தைகள் புரியல பாட்டி. ஆனா, இழுத்துப் பேசுற உங்க பாஷை எனக்குப் பிடிச்சிருக்கு.”

“பிடிக்காம போனாத்தான்லே தப்பு” என்றார் உன் இரத்தத்தில் ஊறிய மொழியாகிற்றே என்ற அர்த்தத்தில்.

மாலையில் தாத்தாவுடன் கிளம்பி அருகிலுள்ள நல்லூருக்குச் சென்று, செல்லையாவையும் பார்த்து பாசமழை பொழிந்து, சில விஷயங்களுக்கு கோவப்பட்டு திரும்பி வீட்டிற்கு வர இரவானது.

இரவு வீட்டிற்குள் நுழைய, “இதோ என் பேத்தி வந்துட்டாயா?” என்றார்.

அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. ‘தான் காண்பது கனவா! நனவா!’ என்றிருந்தது. அவர்கள், ‘ஹாய்’ சொல்லுமுன் சந்தோஷத்தில், “ஹாய்! ஜெகன் அன்ட் ராஜி!” என்ற அழைப்புடன் அவர்கள் எதிரிலுள்ள கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தாள் பாகீரதி.

ஆம். பாகீரதிதான். சில உறவுகளைக் காண, சில உறவுகளிடம் சிலவற்றைப் புரியவைக்க, தாயிடமும், கணவனிடமும் கூட சொல்லாது வந்திருந்தாள் தகப்பன் ராமகிருஷ்ணனின் உதவியுடன்.

எதிரிலிருந்தவர்கள் முழிப்பதைப் பார்த்தவள், “என்னடா இப்பத்தான் முதல்முறையா பார்க்கிற பொண்ணு நம்ம பெயர் சொல்லுதேன்னு பார்க்கறீங்களா? ஆனா, நான் உங்களை ரெண்டரை வருஷம் முன்னாடி பார்த்திருக்கேன்.” அவர்களின் அதிர்ச்சி முகம் பார்த்து, “எங்கன்னு யோசிக்கிறீங்களா? திருமலையில்” என்றாள்.

“ஒரு டைம் பார்த்த எங்களை எப்படி அடையாளம் தெரிஞ்சது? அதுவும் அத்தனை ஜனங்கள் இருந்த கூட்டத்துல?”

“லட்சம் பேருக்கு நடுவுல நீங்க ரெண்டுபேரும் நின்றிருந்தாலும் கண்டுபிடிச்சிருவேன். என் வாழ்க்கையில ஒருத்தருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்னா, அது உங்களுக்கு மட்டும்தான்” என்றாள் மனதார.

“‘நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலங்க?” என்றார்கள் இருவரும்.

“என் வாழ்க்கையில நடக்கவிருந்த அசம்பாவிதத்தை, நீங்க ராஜிக்கு பண்ணின அட்வைஸை கேட்டதாலதான் திருத்திக்கிட்டேன். அந்த டைம் உங்களைப் பார்க்காமல் போயிருந்தேன்னா, நான் என்னவாகிருப்பேன்னு எனக்கே தெரியாது. எப்படியாவது ஒரு டைம் உங்களை மீட் பண்ணி நன்றி சொல்லணும். அடுத்து உங்க மேரேஜ் நடந்துதா தெரிஞ்சிக்கணும்னு ஆசை.”

என்ன காரணம் என்பது புரிந்ததும் வெளிக்காட்டாமல், “சாரி எங்களுக்கு என்ன பேசினோம்னு நினைவில்லை. இருந்தாலும் நன்றி சொல்றதுக்கு எல்லாம் சென்னையிலிருந்து ஆலங்குளம் தேடி வந்திருக்க வேண்டாம்” என்றான் கிண்டலாக.

“ஹல்ல்லோ! ப்ரதர்! என்ன நக்கலா? எங்க வீட்டு ஓல்ட்ஸ் எல்லாம் இந்த ஏரியாவிட்டு வரமாட்டேன்னு ஒரே பிடிவாதமாம். அதான் அந்த மூஞ்சிகளை நாமளும் பார்த்துட்டு, அப்படியே கொஞ்சநாள் இருந்துட்டு வருவோமேன்னு வந்தோம். முதல்ல தூக்கிடலாம்னுதான் ப்ளான் போட்டேன். ஆனா, பாருங்க நாலுபேரைத் தூக்குற அளவுக்கு என்கிட்ட பலம் இல்ல. சோ, ப்ளான் சேஞ்ச் பண்ணிட்டேன்” என பதிலுரைத்து, “என்ன உங்க மிஸஸ் பேசமாட்டாங்களா?” என்றாள் அதே கேலியுடன்.

“பேசாம இருக்கிறது வரை நல்லதுன்னு நினைச்சிக்கோங்க சிஸ்டர். ஆரம்பிச்சா நிறுத்தமாட்டா” என்ற கணவனை கைமுட்டியால் இடித்து, “இவங்க இப்படித்தான்கா. என் காலை வாருரதே வேலையா வச்சிருக்காங்க.”

“அச்சோ ப்ரதர்! அப்ப நீங்க ரெண்டுபேரும் வேற வேலைக்குப் போகலையா? காலை வாரிட்டே இருந்தா சம்பளம் தர்றாங்களா? யார் தர்றாங்கன்னு சொல்லுங்க. நானும் ஒருத்தரை ரொம்ப வாரணும்” என்று கணவனை எண்ணி சொல்லி அவர்களை கிண்டலடிக்க,

“என்னங்க காதுல ரெத்தம் வருதான்னு பாருங்களேன்” என்ற ராஜியை முறைத்து, “ப்ரதர் உங்க ஒய்ஃப் கொஞ்சம் டேஞ்சரஸ் பெல்லோதான். நான் ஒத்துக்கறேன்” என்று பாகீரதி ஜகா வாங்கினாள்.


சிறியவர்களின் கலாட்டா பேச்சுக்களில் வீடே புதிதாகத் தெரிய, பெரியவர்களும் மகிழ்ந்தனர்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
காலை பத்துமணியளவில் சென்னையில் எ.எஸ்.ஆரில் குறுக்கும் நெருக்குமாக நடைபயின்று கொண்டிருந்தான் ஸ்ரீனிவாசன். சென்று இரண்டு நாளாகியும் அழைத்துப் பேசவில்லை. மெசேஜ் மட்டும் வரவேண்டிய இடம் வந்து சேர்ந்ததாக அனுப்பியிருந்தாள். அதுவும் மறுநாள் காலை.

‘விமானம் மும்பையில் இறங்க அத்தனை மணிநேரங்கள் ஆகுமா?’ என்பதை ஏனோ கவனிக்க மறந்திருந்தான். அதன்பின் எந்த தகவலும் இல்லை. கைபேசிக்கு அழைத்தால் அணைத்து வைத்திருப்பதாக கணிணிக் குரல் வந்தது. ‘இடியட்! ஒரு போன் பண்றதுக்கென்ன’ என மனதிற்குள் போராடியவனைக் கலைக்கவென்று வந்தது அந்த அழைப்பு.

எடுத்ததுமே, “என்கிட்ட என்ன சொல்லிட்டுப் போன. இப்ப என்ன பண்ணிட்டிருக்க? இப்ப மட்டும் போன் வரல, நேரா மும்பை கிளம்பியிருப்பேன். எங்க இருக்க? தங்குறதுக்கு இடவசதி இருக்கா? வேலை பிடிச்சிருக்கா? எதுவுமே கேட்க வழியில்லாம தவிச்சிட்டிருக்கேன். நீ சாவகாசமா ரெண்டு நாள் கழிச்சி போன் பண்ற?” என்று பட்டாசாய் வெடித்த கணவனின் அன்பில் கனிந்தவள்,

“சாரிங்க. நான் வேணும்னு பண்ணலை. இங்க உள்ளவங்களைப் பார்த்ததுல மறந்துட்டேன்.”

‘மறந்துவிட்டேன்’ என்பதிலேயே மனதில் சிறியதாக அடிவாங்கியவன், “ஓ... அப்ப ஒரு வேலை கிடைச்சதும் புருஷனை மறந்துட்ட. உங்கம்மா அதான் எங்கத்தை அவங்களாவது நினைவுல இருக்காங்களா? இல்ல அவங்களையும் என்னை மாதிரி மறந்துட்டியா?”

கணவனின் குரலிலுள்ள வேதனை அவளையும் வாட்ட, “சாரிங்க. நான் எதோ சொல்ல வந்து ஏதோ உளறிட்டேன். உங்களை எப்படி மறப்பேன் சொல்லுங்க” என்றாள், ‘நான் வந்ததே உங்களுக்காகத்தானே’ என மனதினுள் நினைத்து.

“மனசுல உள்ளதுதான் ரதி உளறலா வரும்னு சொல்வாங்க” என்றான் மரத்த குரலில்.

“சாரிங்க. நிஜமாவே மனசுல இருந்து சொல்லலை. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க. நீங்க என்னோட...” என முடிக்காமல் நிறுத்த,

மனைவியின் ப்ளீஸில் மனம் சமாதானமடைந்தவன், “நான் உன்னோட...” என்றான் உருகலாய். கணவனின் உருகல் குரலில், அவள் சொல்ல வந்தது மறந்து, “அ...அது...” என குரல் தந்தியடிக்க, “எதுமா?” என்று எதிர்கேள்வி கேட்டு, “சொல்லு ரதி. நான் உன்னோட...” என்று நிறுத்தினான்..

“ப்ளீஸ்ங்க. நான் பாவம்ல விட்டுருங்களேன்” என்ற மனைவியின் கெஞ்சலில்,

“சரி விடு. நான் சொல்றேன். நீ என்னோட தேவதை! உன்னோட தேவன் நான்தான்!” என்றான் அவளின் கவிதையின் நாயகன் தான்தான் என்ற அர்த்தத்தில்.

அவனின் கவிதை வரியினை கவனிக்காமல், அந்த வார்த்தை தந்த சுகத்தில், “ம்... நீங்க மட்டும்தான்” என்றாள் ஒருவித மயக்கத்தில்.

“ரதி! எனக்காக ஒண்ணே ஒண்ணு ப்ளீஸ்?” என்றதும், “எ..என்ன?” என்று மயக்கத்திலிருந்து வெளியே வர,

“உன் ஸ்கின் தொட்டுப்பார்க்க ஆசை. என் முறைப்பொண்ணை எப்ப தொடலாம்?”

“ம்ம்ம்... என்ன இப்படிலாம் பேசுறீங்க?” என்றபடி சிணுங்கினாள்.

“உன் சிணுங்கலில் என்மனம் கள்வெறி கொள்ளுதடி. உடனே மும்பை வந்து உன்னைப் பார்க்கணும்போல இருக்கு ரதி” என்றான் கிறங்கலாய்.

‘மும்பைக்கு வருகிறேன்’ என்றதும் மயக்கம்! சிணுங்கல்! கொஞ்சல்! கெஞ்சல்! எல்லாம் மறைய, “நோ. இப்ப வேண்டாம். நான் சொல்லும்போது வாங்க” என்று வேகமாக சொன்னாள்.

‘ஏனிந்த பதற்றம்?’ என்று தான் அவனுக்கு தோன்றியது. “ரதி எப்ப சொல்லுவ?”

“கண்டிப்பா சொல்றேன். அப்பப்ப நானே உங்களுக்கு கால் பண்றேன். நீங்க போனை வைங்க” என்றாள்.

“சரி அப்ப ஒரு கிஸ் கொடு. நான் வச்சிருறேன்” என்று மனைவியிடம் வம்பிழுக்க,

“அச்சோ முடியாது. நீங்க போங்க” என்று போன சிணுங்கல் திரும்ப, “சரி நான் கொடுக்குறேன்” என்று போனில் இதழ் முத்தம் அனுப்ப, அது சேருமிடம் சரியாக சென்றடைந்து, அவளறியாமல் பதிலுக்கு கொடுக்க வைத்தது.

“யாஹூ” என்று எதிரில் கணவனின் சந்தோஷக்குரல் கேட்ட பின்னரே, தன்னை உணர்ந்தவள், வெட்கத்தில் பேச்சு வராமல் நிற்க, “தேங்க்ஸ் ரதி. பை. அப்பப்ப கால் பண்ணு” என்று அழைப்பை வைக்க, கைபேசியை கையிலேயே வைத்தபடி கண்களில் கனவுடன் நின்றாள் பாகீரதி.

சற்றுநேரத்தில் கனவிலிருந்து வெளிவந்தவள், காலை உணவை முடித்து நேரமானதற்கு பாட்டியிடம் உரிமையான திட்டும் வாங்கி, ஜெகனை அழைத்துக்கொண்டு தென்காசி சென்றாள், தன் தாய்மாமனைச் சந்திக்க.

“அண்ணா முதல்முறை எங்கம்மா பிறந்த வீட்டுக்குப் போறேன். எதாவது வாங்கிட்டுப் போகலாமா?”

“தம்பி ஃப்ரூட்ஸ் கடை பார்த்து நிறுத்துங்க” என்றதும் அருகிலிருந்த ஒரு கடை முன் நிறுத்த, பழங்கள் வாங்கி காரை நோக்கி வரும் வழியில், ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியை இருசக்கர வாகனம் ஒன்று இடித்துவிட்டுச் சென்றது. பாகீரதி பதற்றத்தில் வேகமாக அந்தப் பெண்மணியை நோக்கிச்செல்ல, அதற்குள் ஜெகனும், ஓட்டுநரும் வர, ஆள்கள் கூடத்தொடங்கவும், “அண்ணா தலையில அடிபட்டிருக்கு. கார்ல கொண்டுபோய் ஹாஸ்பிடல்ல சேர்க்கலாம்” என்றாள்.

“ஆக்சிடெண்ட் கேஸ்” என ஓட்டுநர் பயப்பட, “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்று அந்தப் பெண்மணியிடம் செல்ல, தலையில் அடிபட்டு ரெத்தம் வழிந்து கொண்டேயிருந்தது. ஓட்டுநரிடம் துணி கேட்க இல்லையென்றதும், சற்றும் யோசிக்காமல் தன் துப்பட்டாவைக் கழற்றி தண்ணீர் கேட்டு, அதில் சாலை நனைத்து அவரின் நெற்றியில் கட்டி இறுக்கிப்பிடித்தவாரு வண்டியில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தாள்.

முதலுதவி செய்த மருத்துவர், “ப்ளட் லாஸ் அதிகம் இருக்கு. ப்ளட் ஏற்ற வேண்டும்” என்று அவரின் இரத்தம் எடுத்து உடனே இரத்தவகை கண்டுபிடித்துச் சொல்ல, தனக்கும் அதே வகை இரத்தம் தான் என்று தானே இரத்தம் கொடுத்து வெளியே காத்திருந்தாள்.

அதுவரை வண்டி ஓட்டுநரும் உடனிருக்க, “நீங்க கிளம்பலையா? ஓ... சாரி பணம் தரலதான” என்று பர்ஸை எடுத்தாள்.

“வேண்டாம் நானும் மனுஷன்தான். அந்தம்மாவுக்கு சரியாகிறது வரை இருந்து பார்த்துட்டு கிளம்பறேன்கா” என்றான்.

அவன் சின்னப்பையன் என்பது பார்த்ததும் தெரிந்ததால், “சரி தம்பி” என்றாள்.

தன் கையிலிருந்த பழச்சாறைக் கொடுத்தவன் குடிக்கச்சொல்ல, மறுக்காமல் வாங்கிப் பருகினாள். மருந்து மாத்திரை வாங்கி வந்த ஜெகன் அதை மருத்துவரிடம் கொடுத்துவிட்டு வர காத்திருந்தார்கள்.

இரண்டு மணி நேரங்கழித்து நினைவு வந்த பெண்மணி முதலில் தடுமாறி, பின் தன்னை யார் அழைத்து வந்ததென அருகிலிருந்த செவிலியிடம் விசாரிக்க,

“நீங்க மாடிப்படியில தவறி விழுந்துட்டீங்கன்னு, உங்க மருமக கூட்டிட்டு வந்தாங்க. தக்க சமயத்துல உங்க மருமகள் கொடுத்த ரெத்தம்தான் உங்க உயிரைக் காப்பாத்திச்சி. நல்ல பொண்ணுங்க. வெளியிலதான் இருக்காங்க நான் போயி வரச்சொல்றேன்” என்று பாகீரதியிடம் வந்து சொல்லிச் செல்ல,

“ஹாய் ஆன்ட்டி எப்படியிருக்கீங்க? வலியெல்லாம் குறைஞ்சிருக்கா?” என்றபடி வந்தாள்.

“ம்... குறைஞ்சிருக்குமா. நீதான் ரெத்தம் கொடுத்து காப்பாத்தினியாம். நர்ஸ் சொன்னாங்க. ரொம்ப நன்றிமா.”

“அச்சோ என்ன ஆன்ட்டி நீங்க? இது எல்லாரும் செய்ற ஹெல்ப்தான். ரெத்தம் கொடுக்கிறது உடலுக்கும் நல்லதுன்னு சைன்ஸ் சொல்லுது.”

“நர்ஸ் எதோ மருமகள்னு சொன்னாங்க?’ ஏன்மா அப்படிச் சொன்ன?”

“அது நான்தான் ஆன்ட்டி சொன்னேன். இல்லன்னா போலீஸ் கேஸ் அது இதுன்னு இழுத்தடிச்சி, ட்ரீட்மெண்ட் எடுக்கவே மாட்டாங்க. இது உயிர்ப்பிரச்சனை இல்லையா, அதான் பொய் சொல்லிட்டேன். தப்பிருந்தா மன்னிச்சிருங்க. உங்களுக்கு அந்த பைக்காரன் மேல கேஸ் போடணும்னா போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுங்க” என்றாள்.

அவளின் நிதானமான முன்யோசனையை பார்த்து ஆச்சர்யப்பட்டு, பாகீரதியையே நெடுநேரம் பார்த்திருந்த பெண்மணிக்கு எதோ தோன்ற, “நீ... நீ கணபதியோட பொண்ணா?” என்றார் சந்தேகமாய்.

ஒரு வினாடி உடல் அதிர்ந்தாலும் அதை மறைத்து உஷாரானவள், “ம்கூம் இல்லைங்க” என மறுத்து உள்ளே வருமுன் யாரோ, ‘வளர்மதி’ என்றழைத்த பெயர் நினைவுவர அதையே சொன்னாள்.

“அண்ணன் வெளியில போயிருக்காங்க” எனும்போதே, “என்னமா கண்விழிச்சிட்டாங்களா?” என ஜெகன் வர. “இவங்க ஜெகன். என்னோட கூடப்பிறந்த அண்ணன் மா...”

“ஓ..கூடப்பிறந்த அண்ணனா. நீங்க ரெண்டுபேரும் ரொம்ப நல்லாயிருக்கணும் தம்பி” என்றார் அவள் ‘அண்ணன் மாதிரி’ என்று சொல்ல வந்ததை கவனிக்காமல் விட்டு.

‘இது எப்போ!’ என்பதுபோல் அவன் பார்க்க, அவளோ, ‘விடுங்க ப்ரதர். அப்படியே இருந்துட்டுப் போகட்டும்’ என்று ஜாடை செய்ய, அவளின் பதிலில் சற்று மனம் தெளிவுற்றது அந்தப் பெண்மணியான நாகலட்சுமிக்கு.

ஆம். பாகீரதி ரெத்தம் கொடுத்துக் காப்பாற்றியது, தன் தாயை தரக்குறைவாகப் பேசி, தன் கணவன் வீட்டைவிட்டுச் செல்லக் காரணமாக இருந்த அதே நாகலட்சுமிக்குத்தான்.

நாகலட்சுமிக்கு பாகீரதி பார்த்ததும் கணபதியின் நினைவு வர கேட்டும்விட்டார். கணபதிக்கு ஒரு பெண் என்பது தெரியும். அவள் எதற்கு தென்காசி வந்தாள் என்பது புரியவில்லை. மறைத்து வைக்க விருப்பமில்லாமல் கேட்க, அவளுக்கு அண்ணன் இருக்கிறான் என்ற பதில் கணபதியின் பெண்ணில்லை என்ற முடிவுக்கு வரவைத்தது.

மாலை வெளியேற்றம் செய்யச் சொன்னதும் தன் கணவனுக்கு அழைத்து வரவழைத்தார் நாகலட்சுமி. பாகீரதியை வளர்மதியாக அறிமுகப்படுத்த, சந்தேகமாகப் பார்த்தாலும் எதுவும் கேட்கவில்லை அவர்.

மருத்துவமனையில் பணம் கட்டி வீட்டிற்குச் செல்லக் கிளம்பும்போது அவர்களையும் அழைக்க, “இன்னொரு நாள் வர்றோம்” என்றவர்களை இருவரும் வலுக்கட்டாயமாக அழைத்து, அதே வண்டியிலேயே அவர்களின் வீடு சென்றார்கள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top