• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
2


நடந்து வந்த வழியில் கேட்ட தமிழ் வார்த்தையில் என்னவென்று தெரியாமலேயே இருவரும் தேங்கினர்.

“என்னமா நீ? மனசு கஷ்டப்பட்டியேன்னு தான் கூட்டிட்டு வந்தேன். நீ அழுதா என்னால பார்த்திட்டிருக்க முடியாது. தயவுசெய்து அழுகையை நிறுத்தேன்” என்றான் தவிப்புடன்.

“திரும்பவும் என்னால அந்த நரகத்துக்கு போக முடியாது. ப்ளீஸ்ங்க. என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா?” என்றாள் அந்தப்பெண் ஏக்கக்குரலில்.

“உன்னை விட்டு வேற யாரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்? ஆனா, அதுக்கான நேரம் இது இல்லமா” என்றான் பணிவாகவே.

“ப்ளீஸ்ங்க. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா? இப்படியே வீட்டுக்குப் போகச் சொல்றீங்களா? என்னால அங்க நடக்கிறதைப் பார்த்துட்டு, பார்க்காத மாதிரியிருக்க முடியாது. அவங்க எதாவது அவசர முடிவெடுத்தாங்கன்னா, அப்புறம் நீங்க என்னை உயிரோடவே பார்க்க முடியாது” என்றாள் அதை செய்வேனென்ற குரலில்.

“ராஜீஈஈ” என அதிர்ந்து அடிக்க கை ஓங்கியவன், கைமூடி நிதானித்து, ‘ஏன்மா இப்படிப் பேசுற?’ என்றான் குரல் இறக்கி.

“அப்ப என் சூழ்நிலையைப் பற்றித் தெரிந்திருந்தும், நீங்க இப்படி பேசலாமா? நான் இப்படி இருக்கிறதால அந்த நாற்பத்தைந்து வயசு மனுஷன் வந்து பொண்ணு கேட்கிறான். எங்க வீட்லயும் எப்படா தள்ளிவிடுவோம்னு இருந்தவங்க, சந்தர்ப்பம் கிடைச்சதும் சரின்னுட்டாங்க. அடுத்த வாரம் நிச்சயதார்த்தமாம். என்னால எப்படி ஜெகன்?” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

அவளின் தோள் தொட்டு “நீ அழக்கூடாது சொல்லிருக்கேன்ல. இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கணும். அவ்வளவுதான? பண்ணிக்கலாம்” என்றதும் ராஜியின் முகம் மலர, “கல்யாணம் முடிஞ்சதும் என்ன செய்யலாம்ன்றதையும் நீயே சொல்லிரு”” என்று கைகட்டியபடி அவளையே பார்த்திருந்தான்.

“அ..அது உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க.”

“சரிமா. இந்த கல்யாணத்தை ஒத்துக்க முடியாது நீங்க வெளியே போயிருங்கன்னு எங்க வீட்ல சொன்னா, நெக்ஸ்ட் நம்மளோட அடுத்த நடவடிக்கை என்னவாயிருக்கும்?” பதிலை அவளிடமே கேட்டான்.

“அ..அது தெரியலங்க” என்றாள் பாவமாய்.

“தெரிஞ்சிருக்கணும் ராஜி. வாழ்க்கையை புரிஞ்சிருக்கணும். எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யுறதுக்கு, இது ஒண்ணும் வெறும் மணல் கிடையாது. நாம கட்டப்போற வீடு. கடைசிவரை ஸ்ட்ராங்கா இருக்கணும். இப்ப நான் எம்.எஸ்.சி செகண்ட் இயர். நீ பி.எஸ்.சி பர்ஸ்ட் இயர். ரெண்டு பேரும் மிடில்கிளாஸ் பேமிலி. பொண்ணுக்கே இருபத்தோரு வயசுதான் திருமணத்திற்கு எனும்போது, ஆண் எனக்கு குறைஞ்சது இருபத்தைந்தாவது வேண்டாமா? அப்படியே வீட்ல சேர்த்துக்கிட்டாலும், எங்கப்பா சம்பாத்தியத்துல நாம உட்கார்ந்து சாப்பிடுறதை விட, நான் சம்பாதிச்சி உங்களைக் காப்பாத்தினேன்னு வையி, அது எனக்கும் ஏன் உனக்குமே பெருமைதான? இப்ப நாம விளையாட்டுத்தனமா செய்யுற காரியம், நம்மளை நம்ம ஃப்யூச்சரை பாதிக்க கூடாது. நமக்கு குழந்தை பிறந்தா அதோட ஃப்யூச்சரை யோசிச்சியா? நீ எங்க யோசிக்கப்போற? நம்மளைப் பற்றியே யோசிக்கல” என்றான் அவளுக்கு புரியவைக்கும் நோக்குடன்.

அதில்தான் இன்னொருத்தியும் வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறாள் என்பது தெரியாமலேயே!

“நீங்க சொல்றது எனக்குப் புரியுதுங்க. ஆனா, வீட்ல திடீர்னு மேரேஜ்ன்றாங்களே. அதை எப்படி நிறுத்துறது?” கலக்கமாய் கேட்டாள்.

“இது. இப்ப கேட்டியே இது எப்படியிருக்கு? மேரேஜை நிறுத்துறது எப்படின்னு என்கிட்ட ஐடியா கேளு. இல்லையா, பொறுப்பை என்கிட்ட விட்ரு. நான் பார்த்துக்கறேன். நீ நிம்மதியா இரு. அதை விட்டுட்டு இதுக்கு தீர்வு கல்யாணம் தான்னு முடிவு பண்ணினா எப்படிமா?”

“இந்த பிரச்சனையை சால்வ் பண்ணிருவீங்களா?” என்றாள் எதிர்பார்ப்போடு.

“கண்டிப்பா. என் ஃப்ரண்ட்ஸ் எதுக்கு இருக்காங்க. சும்மா சுத்துறதுக்கும் தண்ணியடிக்கிறதுக்குமா? இல்லமா. இந்த விஷயத்தை சொன்னா ஒரே நாள்ல நம்ம பிரச்சனையை தீர்த்திருவாங்க. ஸோ, உன் கவலையை என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போ. உனக்கு நான் இருக்கேன் எப்பவும் எல்லாமாகவும். என்னை நம்புறதான?”

‘ம்..’ என தலையசைத்ததும், அவளின் தலையை மெல்ல வருடி, “இந்த நம்பிக்கையை காலத்துக்கும் என் மேல வை. உன்னை நான் பார்த்துக்கறேன்” என்றான்.

“ஐ லவ் யூ ஜெகன். என்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு, கல்யாண லைஃபே கனவுன்னு நினைச்சிட்டிருந்தேன். நீங்க எனக்கு கடவுள் அனுப்பிய கிஃப்ட் ஜெகன். லவ் யூ” என்றாள் உணர்ச்சிப்பூர்வமாக.

“மீ டூ ராஜி. இனிமேல் படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணு. சரிமா போகலாமா” என்று அவளருகிலிருந்த ஸ்டிக்கை எடுத்துக்கொடுத்து, அவள் நின்றிருந்த இடத்திலிருந்து நகரும் பொழுதுதான் பாகீரதியும், தாரிணியும் பார்த்தார்கள் அப்பெண்ணிற்கு கால் ஊனமென்று.

அதுவரை அவர்களின் பேச்சை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த தோழிகள் இருவரும், அதிர்ந்துதான் போனார்கள் அவளின் நிலையைப் பார்த்து. பையனுடன் சேர்த்துப் பார்க்கும் பொழுது அவனில் பாதி கூட அழகிலும் ஈடில்லை. அவளின் குணம் பார்த்து விரும்பியிருக்கிறான் என்றே தோன்றியது. இவ்வளவு நேரம் பேசியவன் முகத்தில் பேருக்குக் கூட புன்னகை மறையவில்லை. ‘லக்கி கேர்ள்’ என்ற எண்ணம் இருவருக்குள்ளும். “ஜெகன்-ராஜி” என்ற பெயர்கள் பாகீரதி மனதில் கல்வெட்டாய் பதிந்தது. பிற்காலத்தில் அவர்களும் தன் வாழ்க்கையில் இடம் பிடிப்பார்கள் என்பது தெரியாது பாகீரதிக்கு.

அவர்கள் சென்றதும் நண்பர்கள் வர, அவர்களுடன் நடந்தபடியே யோசனையிலாழ்ந்தாள். ‘நிதிஷ்! அவனுக்கு காதல் தன் அழகின் மேல். அது காதலா? இல்லை சலனம். சலனம்தான்.. இன்பாசுவேஷன்! நானும் அவனை விருப்பப்பட்டா சம்மதிச்சேன். அந்தப்பெண் சொன்னது போல், பிரச்சனையிலிருந்து தப்பிக்க எனக்கான வழி என்று தேர்ந்தெடுத்ததுதானே. இன்னும் மீசை கூட முழுவதும் வராத பையனுடன் திருமணமா? இப்பொழுது நினைக்கையில் தனக்கே தன்மேல் கோவம் வந்தது. என்ன பண்ணிட்டிருக்கேன் நான்? பிரச்சனையை எதிர்கொள்ள முடியாம கோழைத்தனமா, என்னால நிதிஷோட லைஃபும் கேள்விக்குறியாகிராதா? இப்ப அழகிற்காக வர்றவன், என்னைவிட அழகான பெண்ணைப் பார்த்ததும் வரலாறு திரும்பிருச்சின்னா, என்ன பண்ண முடியும் என்னால்?’

‘இல்ல வேண்டாம். எனக்கே எனக்குன்னு, இதோ இந்த ஜெகன் மாதிரி பக்குவப்பட்டவனா, எந்த சூழ்நிலையையும் நிதானமா கையாளுற பக்குவமுள்ளவனா, அதைவிட என் குணம் தெரிஞ்சி, என் குடும்ப நிலை புரிஞ்சி அதை கண்டுக்காம, என்னை எனக்காக விரும்புற ஒருத்தன் வேண்டும்’ என்று தெளிவாக முடிவெடுக்க கருடசேவை வந்திருந்தார்கள்.

“என்ன பாக்கி மனசு தெளிவாகிருச்சா?”

“ஆமா தர்ணி. நீ சொல்லும் போதெல்லாம் காதுல ஏறவேயில்லை. ஆனா, அந்த ஜோடியைப் பார்த்ததும் தான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணயிருந்தேன்னு தெரியுது. இனிமேல் படிப்பு மட்டும்தான் என்னோட எண்ணம். வேற எதையும் உள்ளே நுழைய விடுறதாயில்ல’ என மனதினுள் முடிவெடுத்தால்.

அவளின் நினைப்பை பொய்யாக்குவானா நம் ஹீரோ!

“வீட்டுப் பிரச்சனையையும் நானே சமாளிக்கிறேன். முடிஞ்சா படிப்பு முடியுறது வரை உன்னோட ஹாஸ்டல் வந்து, வீட்டை விட்டு விலகியிருக்கேன். என்ன அம்மாவை மிஸ் பண்ணுவேன். அப்... அப்பா ஏன் இப்படிப் பண்ணினாங்க தர்ணி? என்னால அம்மாகிட்டயும் சொல்ல முடியல. அவர்கிட்டேயும் நேரடியா கேட்க முடியல. மொத்தத்துல என்னால சகிச்சிக்க முடியலை தர்ணி. எப்படி மனசு வந்தது அம்மாவை விட்டுட்டு...” என தோழியின் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

தோழியைத் தட்டிக் கொடுத்து, “இதுவும் கடந்து போகும் பாக்கி. உங்கப்பா விஷயத்துக்கு எதாவது காரணம் இருக்கலாம்” என்றதும், சட்டென்று நிமிர்ந்தவள், “என்ன காரணம்னு சொல்லு? நானே என் கண்ணால பார்த்து காதால கேட்டேன். அதை பொய்யின்றியா?” கண்கள் கோபத்தில் சிவக்க கேட்டாள்.

தோழியை நேரடியாக பார்த்து, “கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். இதுக்கு அர்த்தம் தெரியுமா பாக்கி?”

“தெரியும் தீர விசாரிக்கணும்னு. நானும் அங்கேயே அப்பாகிட்ட பேசினவர்கிட்ட விசாரிச்சேன். ரெண்டு பேரும் அன்னியோன்யமான புருஷன் பொண்டாட்டியாம். சென்னைக்கு ஒய்ஃபோட முதல்முறை வந்திருக்கிறாராம். அவங்களுக்கு இரண்டு பசங்க இருக்காங்களாம். இதுக்கு என்னடி சொல்ற?” என்றாள் தன் வலியை மறைக்க முடியாமல் வேதனையாய்.

“பாக்கி” என்று தோழியை தோள்தட்டி சமன்படுத்த முயற்சிக்க, “அம்மாவுக்கு என்ன குறை தர்ணி. அம்மாவை விட அந்த லேடி எந்த வகையில் உசத்தி? இதை மனசுல போட்டு புழுங்குறேன் தர்ணி. என்னால முடியல” என்றவள் கண்களில் சென்ற வாரம் தந்தையை பெரிய ஷாப்பிங் மாலில் இன்னொரு பெண்ணுடன் பார்த்தது நினைவு வந்தது.

ஷாப்பிங் போக தாரிணியை பாகீரதி அழைக்க, விடுதியில் இருப்பதால் நினைத்த நேரத்தில் வரமுடியாதென்று அவள் சொன்னதும், தன் பள்ளித்தோழி கீதாவை அழைத்துச் சென்றாள். ஸ்கூட்டியை வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில், முன்னே செல்வது தன் அப்பா போல் தோன்ற, “ஹை.. அப்பா” என்றபடி அவர் பின்னே சென்றாள்.

அங்கிருந்த பரிசுப் பொருள் வாங்கும் கடைக்குள் அவர் நுழைந்ததும், ‘அப்பா’ என்றழைக்க வாய் திறக்கையில்,

“வாங்க சார். இது யாரு உங்க பையனா?” என்றார் அந்த கடைக்காரர் அதிக நாள் பழகியவர் போல். “பையனா!?” என்று அதிர்ச்சியானவள் அப்பொழுது தான் கவனித்தாள், அவரருகில் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணியும், தன்னுடைய வயசு மதிக்கத்தக்க ஒரு பையனும் நின்று கொண்டிருந்தார்கள். ‘அப்ப அம்மாவை கல்யாணம் முடிச்சதிலிருந்தா?’ தன் அப்பாவின் பதில் இல்லையென்று வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு செகண்டும் பாகீரதி கடவுளை வேண்டினாள்.

அவள் வேண்டுதலைப் பொய்யாக்கி, “ஆமா ஜெயந்தன். இது என் ஒய்ஃப் ரதி. இல்லை பாரதி. இவன் என்னோட சின்ன பையன் நவீன். இவனுக்குதான் எதோ வேணுமாம். முதல் டைம் சென்னைக்கு வந்ததால, ஒரே தொல்லை பண்ணியெடுத்துட்டான்” என்று முகம் முழுக்க புன்னகையுடன் கூறியவரைப் பார்த்து, அதிர்ச்சியில் பேச முடியாதிருந்தாள் பாகீரதி.

“ரதி-பாரதியா! அப்ப கலாரதி? கலா அம்மா பெயர். ரதி நானா? இல்லை இவங்களா? கார்மெண்ட்ஸ், டெக்ஸ்டைல்ஸ் பெயர் என்னுடையது இல்லையா? இவங்களோடதா? எனக்கும் அவங்க பெயர் வர்ற மாதிரி செஞ்சிருக்காங்களா? அதுவும் இத்தனை வருஷமா?” மனம் குழம்பினாள் பெண்ணவள்..

“அதான சார். இத்தனை வருஷம் கழிச்சி உங்களை இப்பத்தான் குடும்பத்தோட வெளியில பார்க்கிறேன்.”

“அட நீங்க வேற சார்” என்றபடி அவர்கள் பேச்சித் தொடர நடுவில் அந்தப் பெண்மணியின் தோள்மேல் கைபோட்டு, ஒவ்வொன்றாக காண்பித்து தேவையானதை எடுத்துக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பையனும் அவரிடம் உரிமையாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை இவளால்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
சில வினாடிகளில் வாழ்க்கையே வெறுத்துப்போனாற் போலிருந்தது பாகீரதிக்கு. ‘இவ்வளவு தான் என்னோட அப்பாவா?’ அவளுக்கு அப்பாதான் எல்லாமே! எல்லாமாகவுமே இருப்பவர். பாசத்தை அள்ளி அள்ளிக் கொடுத்த தந்தையின், இன்னொரு முகம் பார்த்தவள் கண்களில் வழிந்த நீரைத் துடைக்க வழியில்லாமல் நின்றிருந்தாள்.

அவளருகில் வந்த கீதாவோ, “என்ன பாகீ இங்க வந்து நிற்கிற? நான் உன்னைத் தேடிட்டு வர்றேன். நாம வாங்க வந்த கடை அங்கே இருக்கு பாரு.”

அவளுக்கு தெரியாமல் அவசர அவசரமாக கண்ணீர் துடைத்து, “தூசி விழுந்திருச்சிடி. அதான் அப்படியே நின்னுட்டேன்” என்றாள் அவள் கேள்வி எதுவும் கேட்கும் முன்பே.

“சரி வா போகலாம். நீ கேட்ட ஃபேஷன் ஐடம்ஸ் எல்லாம் அங்கதான் இருக்கு” என்று தோழியை அழைத்துச் செல்ல, தடம் மாறிப்போன தந்தையையே வெறித்திருந்தவள், அந்தப் பெண்மணியிடம் அவர் உருகி உருகிப் பேசியதைப் பார்த்து தன் தாயை எண்ணி உருகினாள். தன் தாயிடம் இந்தளவு நெருக்கமாகவோ, உருகலாகவோ பேசி பார்த்ததில்லை இதுவரை. எதுவென்றாலும் அப்பா அம்மாவிடமும், அம்மா அப்பாவிடமும் கேட்டே செய்வார்கள். அப்படிப்பட்ட அம்மாவை ஏமாற்ற எப்படி மனம் வந்தது? அம்மாவை விட அப்பாதான் முக்கியமென்று வாழ்ந்தவளுக்கு, அவர் கொடுத்த இந்த மரண அடியை தாங்க முடியவில்லை. என்ன ஒரு துரோகம் மனம் கொதித்தது

சற்று நேரம் கழித்து அந்த கடைக்கு வந்து அவரின் பெயர் சொல்லி விசாரிக்க, அவரோ தன் தந்தையுடைய இத்தனை வருஷத்து வாழ்க்கையை இரண்டே வரியில் சொல்லி முடித்தார். எப்படி வீடு வந்தாள் என்றே தெரியாது. அன்று முழுவதும் பலவித யோசனையினூடே சுழன்றவளுக்கு தாயின் அழைப்புகள் காதில் விழாமல் போக, சாப்பிட அழைத்த தாயிடம் கண்ணீரை மறைத்து உடல் சரியில்லையென்று ஏதோ ஒரு மாத்திரையைப் போட்டு தூங்கப்போவதாகச் சொன்னாள்.

“என்னமா அப்பா உனக்கு போன் பண்ணினாங்களாம் எடுத்துப் பேசலையாமே? பேசுடா உன்மேல உயிரையே வச்சிருக்காங்க” என்றார் வெகுளியாய். கலாரதி டெக்ஸ்டைல்ஸையும், அதன் கிளைப்பகுதிகளையும் சேர்த்து பொறுப்பெடுத்து பார்க்கும் தைரியமான பெண் சந்திரா. கணவன் பெயரில் இருந்த டெக்ஸ்டைல்ஸ், பாகீரதி பிறந்த பின் ‘கலாரதி’ என மாற்றியிருந்தார் கணபதி.

‘இன்னொரு குடும்பத்தில் உள்ளவர்களிடமும் தான் உயிரையே வச்சிருக்கிறார். அதற்கென்ன பண்ணமுடியும்?’ மனதினுள் நினைத்து, “ப்ளீஸ்மா. என்னால இப்ப முடியாது. நான் காலையில பேசிக்கிறேன்மா” என்று தடை விதித்தாள்.

மகளின் கண்களில் உள்ள வலி தாய்க்கும் தெரிய, “அம்மு எதாவது பிரச்சனையாடா? ஏன் ரொம்ப டல்லா இருக்க. உன்னைப் பார்த்தா வாழ்க்கையில எதையோ இழந்தவங்க இருக்கிற மாதிரி தெரியுது” என்றார் ஒரு காலத்தில் தன் நிலைமையும் இப்படித்தான் இருந்தது என நினைத்து.

தன் முகமே தன் நிலையை காட்டிக் கொடுக்கிறதே என்றெண்ணி, தன்னை மீட்டுக்கொண்டவள், “ஹையோ கலா! உங்களுக்கு என்னாச்சி? இந்த மாதிரி கேள்வில்லாம் கேட்கறீங்க? என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது? ஒரு நிமிஷம் இருங்க” என்றவள் கண்ணாடி முன் நின்று முகத்தை அங்குமிங்கும் திருப்பி, “சோ சேட் பாகீ. அம்மா சொல்ற மாதிரிதான் இருக்கு” என்றாள் தனக்குத்தானே பேசுவதுபோல் தாய்க்கும் பதிலளித்து.

இடுப்பில் கைவைத்து மகளை முறைத்தவர், “நான் கேள்வி கேட்டா நீ பதில் கேள்வி கேட்கிற? உன்னை ரொம்ப கெடுத்து வச்சிருக்காங்க உங்கப்பா." பின் எதையோ நினைத்து, "நீ கலான்னு கூப்பிட்டதும் உங்கப்பா நியாபகம்தான் வந்திச்சி” என்றவர் சற்று குரல் இறங்கி. “உங்கப்பா என்னை கலான்னு தான்டா கூப்பிடுவாங்க. அவங்க மட்டுமா...” என்பதை மனதினுள் மறைத்தாலும் சற்று உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

“நிஜமாவாம்மா? நான் பார்த்தவரை சந்திரான்னுதான கூப்பிடுவாங்க?” என்றாள் கேள்வியாய்.

“அ...அது உனக்கு தெரிஞ்சி இல்ல அம்மு” என்று வேகக்குரலில் ஆரம்பித்து, “அவர் அந்த நேம் சொல்லும்போது இருக்கிற அன்பு... ப்ச்... சான்ஸேயில்ல.” கண்களில் கனிவுடன் சொன்னவர் திடீரென்று சோகமானார். அதில் அதிக வருத்தம் இருந்ததோ!

இத்தனை ஆண்டுகளில் கலா என்று தந்தை அழைத்துப் பார்த்ததில்லை. ‘ஒருவேளை பணத்திற்காக மணமுடித்து, மனைவியை தாஜா செய்து பணம் கிடைத்ததும், தாயின் மேலிருந்த பாசம் போய்விட்டதோ? இருக்கலாம். இப்பொழுதுதான் மொத்த பாசமும் அங்கு இருக்கிறதே. எங்கம்மா ஒவ்வொரு நிமிஷமும் அவரை எண்ணியிருக்க, அவரோ... சே...’ என வெறுத்தபடி நினைத்தாள்.

அதன்பின் அந்த வீட்டில் அவரின் முகம் பார்த்து சிரித்துப் பேசி நடிக்க முடியவில்லை பாகீரதியால். தனக்குள்ளேயே குமைந்தவளுக்கு எங்கே மூச்சு முட்டி செத்துவிடுவோமோ என்றிருந்தது. அதிலிருந்து வெளிவர கல்லூரி கிளம்பி வந்து, தாரிணியிடம் மேலோட்டமாக சொல்லி தன் நிலையையும் கூறி’ அங்கிருந்து வெளியேற வழி கேட்டாள்.

தோழியின் பாதிப்பு அதிகம் என்பதை உணர்ந்தவளும் அவளுக்காக யோசித்து, “பாக்கி இதுக்கு ரெண்டு வழியிருக்கு” என்றாள்.

“சொல்லு சொல்லு என்ன வழி?” என அவசரப்படுத்த, தாரிணியின் அமைதி தொடரவும், “தயவு செஞ்சி சொல்லு தர்ணி? எனக்கு அங்கேயிருந்து, இந்த பிரச்சனையிலிருந்து ரிலீஃப் வேணும்” என்றாள் கண்களில் வேண்டுதலுடன்.

“ப்ச்... பாக்கி இப்படி கெஞ்சுதலா பார்க்காத. உன்னை இப்படி பார்க்கிறது எனக்கு கஷ்டமாயிருக்கு. பர்ஸ்ட் ஆப்ஷன்.. நீ வீட்டைவிட்டு வெளியேறி ஹாஸ்டல் வரணும். ஹாஸ்டல் வந்தாலும் திரும்பவும் நீ வீட்டுக்குத்தான் போக வேண்டியிருக்கும்ன்றதும் இருக்கு. செகண்ட் ஆப்ஷன்.. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் ஹஸ்பண்டோட போயிரலாம். திரும்ப வீட்டுக்கு வரணும்ன்ற அவசியம் இருக்காது. நமக்கு தேவைப்பட்டா வீட்டுக்கு வந்து போகலாம்” என்றவளுக்குத் தெரியாது அவளறியாமல் செய்த தவறு.

“எனக்கு இந்த செகண்ட் ஆப்ஷன் ஓகே தர்ணி. கல்யாணம் பண்ணினா வீட்டுக்கு வர தேவையில்லை. எப்பவும் அப்பா முகத்துல முழிக்கத் தேவையில்லை” என்றாள் வேகமாக.

“ஹேய் என்னடி உளர்ற? நீ படிக்கிற பொண்ணுன்னு இப்ப உனக்கு கல்யாணம் பண்ணமாட்டாங்க.”

“அப்ப நானே யாரையாவது லவ் பண்ணி ரெண்டே நாள்ல கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள் எதோ கடைச்சரக்கு வாங்குவது போல்.

“பாக்கீ!” என அதிர்ந்தவள் “கல்யாணம் என்ன கடையில வாங்குற பொருள்னு நினைச்சியா? நினைச்சவுடனே காதலிச்சி அடுத்த நாளே கல்யாணம் பண்ணிக்க. இது வாழ்க்கை! விளையாட்டு வேண்டாம் பாக்கி” என்றாள் கறாராக.

“ப்ச்... தர்ணி நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு என் பிரச்சனையிலிருந்து வெளில வரணும். அதுக்கு இதுதான் வழின்னும் போது செய்யுறதுல தப்பில்லைன்னு தோணுது.”

“தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாக்கி. இதை நான் உனக்கு சொல்லியிருக்கக்கூடாது. உனக்கு நல்லது செய்யுறதா நினைச்சி நானே...” என கண்கலங்கியவளிடம்,

“ஹேய் தர்ணிமா. இது என்னோட முடிவு. உன்னாலதான்னு நினைச்சி நீ ஃபீல் பண்ணாத. ஓகே” என்றவள் கண்கள் ஓரிடத்தில் நிலைத்திருக்க, “அங்க என்ன பார்க்கிற பாக்கி?” கேட்டபடி அவளும் திரும்பினாள்.

“தர்ணி என்னோட வா” என்று நான்கு இளைஞர் இருந்த கும்பலுக்கு அழைத்துச் சென்று, “நீதான லாஸ்ட் இயர் பங்ஷன் அன்னைக்கு என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணின? இப்பவும் என்னை லவ் பண்றியா?” என்று நேரடியாக கேட்க அவளிடம் ப்ரபோஸ் செய்திருந்த நிதிஷ் என்பவன் திருதிருவென விழித்தான்.

“அ..அது இல்ல. நான் அ..அன்னைக்கு தெரியாம..” என்று உளறினான்.

“அப்ப நீ என்னை லவ் பண்ணலையா?” என்று சோகமானவள், ப்”ச்.. நீ என்னை லவ் பண்றதால உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கலாம் நினைச்சேன். சரி விடு. நான் வேற யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ வா தர்ணி போகலாம்” என்றாள் தோழியிடம்.

அதற்குள் நண்பர்கள் அனைவரும் கூடிப்பேசி சிலபல வாக்குவாதத்திற்குப் பின், “பாகீரதி இவன் உன்னைத்தான் லவ் பண்றானாம்” என்றான் மதன்.

“நிஜமாவா? அப்ப நானும் லவ் பண்ண ஆரம்பிக்கிறேன். நாம என்னைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்? நாளைக்கா? நாளை மறுநாளா?” என்றாள் அடுத்த கேள்வியாய்.

“பாக்கி என்ன பேசிட்டிருக்கன்னு புரிஞ்சிதான் பேசுறியா. இது உன் வாழ்க்கை புரிஞ்சிக்கோ” என தோழியைக் கடிய,

“என்னது கல்யாணமா?” என்றனர் நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியில்.

“ஆமா. லவ் பண்றது எதுக்கு? கல்யாணத்துக்குத்தான. அதான் இன்னைக்கு லவ் பண்ணுவோம். நாளைக்கு கல்யாணம் பண்ணிப்போம்னு சொன்னேன்” என்றாள் அதிரடியாய்.

“ஏய் என்ன பேசுற?” என்று ராஜேஷ் கத்தினான்.

“அப்ப இவன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டானா? அப்புறம் என்னத்துக்கு லவ். நான் கிளம்பறேன். வா தர்ணி நாம போகலாம்” என்று திரும்பவும் தோழியின் கைபிடிக்க,

“ஹேய் பாகீரதி! ப்ளீஸ் நில்லு. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று நிதிஷ் சொல்ல, எகிறிய நண்பர்களிடம் பேசி திருமணத்திற்கு என்ன செய்வதென்று அனைவரும் முடிவு செய்து, நான்காவது நாள் காலையில் திருப்பதியில் இருந்தார்கள்.

“சரிமா அமைதியாயிரு” என தாரிணி ஆறுதல் சொன்னபோது, பாகீரதி நினைவு கலைந்து வெளியே வர, “எந்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளின்னு ஒண்ணு இருக்கு பாக்கி. இப்ப நாம வீட்டுக்குப் போகலாமா? இல்ல வெங்கடாஜலபதியை நேரில் மீட் பண்ணலாமா? திடீரென்று அச்சச்சோ! பாக்கி கையில அமௌண்ட் இல்லடி. எல்லாத்தையும் சேர்த்துதான் ராஜேஷ்கிட்ட குடுத்திருந்தோமே. இப்ப என்ன பண்றது? கூட்டிட்டுப் போறேன்னு சொன்னவங்களையும் விரட்டியாச்சி” என்றாள் பதற்றத்துடன்.

அமைதியாக போனை எடுத்து தாயை அழைத்தவள், “அம்மா நாங்க திருப்பதியில இருக்கோம். ரிடர்ன் வர பணம் இல்ல. கார் அனுப்பி விடுங்கம்மா” என்றாள்.

“அம்மு” என ஆரம்பித்தவரை மறித்து, “அம்மா ப்ளீஸ் என்னை எதுவும் கேட்காதீங்க. எல்லாத்தையும் வந்து சொல்றேன்.”

அதற்கு மேல் எதையும் கேட்கவிடாமல் செய்தது மகளின் கலக்ககுரல். “சரிம்மா அண்ணன் வந்திருக்கான் அவனை அனுப்புறேன்” என்றதும்... “ம் அனுப்புங்க. அதுக்குள்ள நாங்களும் சாமி பார்த்துட்டு வந்திருறோம்” என்றாள் அமைதியாகவே.

“இங்கேயே இரு பாக்கி. நான் உள்ள போறதுக்கு வழி கேட்டுட்டு வர்றேன்” என்று தாரிணி எழ, “ம் சரி” என்று எதிரிலிருக்கும் வேங்கடவனின் சந்நிதானத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்... ‘என் வாழ்க்கையில் உன் விளையாட்டு முடிந்ததா? இல்லை இன்னும் இருக்கிறதா?’ எனும்படியாக.

“என்ன ரதி இப்படிப் பண்ணிட்ட? உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல ரதி. எங்க மாலையைப் போட்டிருவியோன்னு ஒரு செகண்ட் பயந்துட்டேன். என் உயிரே என்கிட்ட இல்ல தெரியுமா? என்ன பிரச்சனையா இருந்தாலும் நிதானமா முடிவெடு. அவசரத்துல எடுக்கிற முடிவு என்னைக்கும் சரிவராது. நீ பேசுறதுக்கும் உன்னோட செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்குமா. எமோஷனலா எதையும் பார்க்காம நிதானமா முடிவெடு. கல்யாணத்துக்கான வயசும் இப்ப உனக்கில்ல” என்று ஒரு ஆண் குரல் அவளருகில் கேட்டதும் தூக்கிவாரிப்போட அவன்புறம் திரும்பினாள் பாகீரதி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top