• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
18

“நாலு வருஷம் ஒருத்தருக்காக காத்திருந்து, கரம்பிடிச்சி, ஆறுவருஷம் சேர்ந்து வாழ்ந்துன்னு, பத்துவருஷம் அவங்களோட மனசால வாழ்ந்திருக்கேன். நான் தப்பு பண்ணுவேனா? தப்பு பண்ணுவேன்னு எப்படி நினைக்கலாம்?”

கோவத்தில் கண் சிவந்த தாயையே பார்த்திருந்தாள் மகள். அவரின் மனநிலையை புரிந்துகொள்ள முடிந்தது அவளால். அவளோடு சேர்ந்து மற்றவர்களும்.

“என் மேல நம்பிக்கையில்லாவங்க எனக்கு வேண்டாம்ன்ற எண்ணத்தினால, இப்பவரைக்கும் அவங்களை மன்னிக்கத் தோணலை. பாரதி அக்கா குழந்தைக்காகன்னு சூழ்நிலையை எடுத்துச் சொன்னப்ப, வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணின நீங்க யோக்யம்னு நாங்க என்ன நினைக்கிறதுன்னு கேட்கவும், அக்காக்கு அதிர்ச்சிதான்னாலும், அவங்க குணம் அப்படித்தான்னு வாய் மூடிக்கிட்டாங்க. என்னால முடியல திருப்பிக்கேட்டேன். மீதமிருந்த மானமும் பறந்துதே தவிர வேற எதுவும் பண்ண முடியலை.”

“எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால, பிள்ளைங்களையும் இன்னொருத்தர் பொறுப்புல விட்டுட்டே வந்திருந்தாங்க மயினி. எங்கம்மா இருந்திருந்தா இந்தளவு பேசுறதுக்கு தைரியம் வந்திருக்குமா தெரியாது. ஆம்பளைங்களுக்கு வார்த்தைகளோட வீரியம் புரியல. எங்கண்ணன் அப்பவும் என் கூட வான்னு மட்டும் சொன்னான். ஆனா, இதையெல்லாம் நான் நம்பலமான்னு ஒரு வார்த்தை சொல்லல. என் மேல சேற்றை வாரி இறைச்சதை வேடிக்கைதான் பார்த்தாங்க எங்க வீட்டு ஆம்பளைங்க. கடைசியா என்ன சொல்றன்னு கேட்ட எங்கண்ணனுக்கு, சென்னையைவிட்டு நான் வர்றதாயில்ல. அப்பப்ப ஊருக்கு வர்றேன்னு சொன்னேன்.”

“அப்ப இவங்கள்லாம் சொல்றதை உண்மையாக்கப் போறேன்றியான்னு கேட்கவும், என்ன பேச்சி பேசுறன்னு சத்தம் போட்டேன். உண்மையிலேயே சொல்றேன், நீ இப்ப என்கூட வந்தா உன்னை நம்புவேன். இல்லைன்னானு நிறுத்தவும், இல்லைன்னா என்ன சொல்ல வர்றன்னு திரும்பக் கேட்டேன். நம்பிக்கையில்லா தீர்மானத்தோட ஊரைப்பார்த்து போய்ட்டே இருப்பேன்னான்.”

“ஓ... இப்ப உங்ககூட வந்தா நல்லவ இல்லன்னா தப்பானவ இல்ல. நீங்க என்னப்பா சைலன்டாயிருக்கீங்க? உங்க மனசுல உள்ளதையும் சொல்லிடுங்கன்னு இவர்கிட்ட கேட்டேன். நான் சொல்ல என்ன இருக்கு. அண்ணன் சொல்றதைக் கேளுன்னு சொல்லிட்டார் இந்த பெரிய மனுஷன்” என்றார் தந்தையை குற்றம்சாட்டி, “என்னை நம்பாத நீங்க எனக்கு எப்பவும் வேண்டாம். வெளில போங்கன்னு சொல்லிட்டேன். அன்னைக்குப் பார்த்ததுதான் என் பிறந்த வீட்டுப் புகுந்த வீட்டுச் சொந்தம்லாம்.”

“அப்புறம் பாரதி அக்கா சொன்னது, எந்த பொண்ணுமே செய்ய யோசிக்காதது. ஆமா. அம்முவுக்காக அவங்க காதலிச்சி கைபிடிச்ச, அவங்க புருஷனைப் பிரிய முடிவெடுத்தாங்க. அப்ப பிரவீண் பத்து வயசுப் பையன்றதால ஓரளவு விஷயம் புரிஞ்சது. அக்கா, ராம அம்முவுக்கு அப்பாவா எங்களோட இருக்கச்சொல்ல, ராம்கு தன் பொண்டாட்டி இந்த முடிவுதான் எடுப்பாள்னு தெரிஞ்சதால, அவங்களையேதான் ஒருவித ஏக்கத்தோட பார்த்திருந்தாங்க.”

“ஏற்கனவே அடிமேல அடிபட்ட என்னால அதை சுத்தமா ஏத்துக்க முடியல. ஒரு குடும்பத்தை என் பொண்ணுக்காக பிரிக்கிறது பாவம்னு தோணிச்சி! ஒரேடியா மறுத்தேன்” என்று ப்ரவீணின் அருகில் வந்த சந்திரா அவனின் தலைகோதி, “அப்பப் ப்ரவீண், நவீனை தூக்கிட்டு வந்து அவங்கம்மா கையில் கொடுத்துட்டு, உன்னை தூக்கிட்டு வந்து நேரே ராம்கிட்ட போனான். அப்பா அம்முவுக்காக நாம இங்கேயே இருக்கலாம்ப்பா. என்னால அம்முவை விட்டுட்டு ஊருக்கு வர முடியாது. யார் வேணும்னா என்ன வேணும்னா சொல்லட்டும் நமக்கு அம்முதான்ப்பா முக்கியம். நீங்களும் அம்முவுக்காக இருங்கப்பா. அம்மா சமாளிச்சிப்பாங்க.. இல்லம்மா?” என்ற மகனின் கேள்விக்கு,

‘ஆம்’ என்ற தாயின் பதில்தான் வந்தது. “நான் பெருசானதும் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்ப்பா. அம்முக்கு இன்னொரு டைம் பிட்ஸ் வந்தா, அவளைப் பார்க்கவே முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்கள்ல. நாம போயிட்டா அம்மு அழுவா. காய்ச்சல் வரும். சந்திராம்மாவுக்கு அம்முவைவிட்டா யார் இருக்காங்க?” என்று தாயிடம் சென்றவன், “அம்மா வெரி ஸ்ட்ராங்க்பா!” என்றான் தாயைப் பார்த்து. “அம்முவுக்கு விவரம் தெரிஞ்சதும் புரியவைக்கலாம்பா நம்ம உறவு முறைகளை.” தாயின் கண்ணீருடன் சேர்ந்த புன்னகையைப் பார்த்தவன் தாயை கட்டிக்கொண்டான்.

“நான் மனசுல நினைச்சத என்ர புள்ள சொல்லியாச்சி. இனிமேல் பேசுறதுக்கில்லைனு அக்கா சொன்னதும், வேற வழியும் தெரியல. அப்ப நீ! உன்னோட உயிர்! உன்னோட எதிர்காலம் மட்டும்தான் எங்க கண்ணுக்கு தெரிஞ்சது.“

இதையெல்லாம் கேட்டிருந்த தாரிணி கணவனைத்தான் பார்த்தாள். ஏற்கனவே அவனைத் தெரியும்தான். ஆனால், குழந்தையிலேயே அவன் செய்த தியாகங்கள் அவன்மேல் அளவு கடந்த அன்பை! காதலை! அவளுள் அள்ளித் தெளித்தது.

“உனக்கு ஸ்கூல்ல சேர்க்கணும் என்ற போதுதான் திரும்பவும் பிரச்சனை ஆரம்பிச்சது. அப்பா பெயர் போடுறதுக்காக, ராமகிருஷ்ணன்ற பெயரைக் கணபதின்னு போட்டு, தன்னோட சுயத்தையே உனக்காக விட்டுக்கொடுத்தாங்க. நான் கடை மேனேஜர்ஸ் மூலமா டெக்ஸ்டைல்ஸ் பார்த்துக்கிட்டாலும், ராம் நம்ம டெக்ஸ்டைல்ஸ் சேர்த்து தன்னோட தொழிலையும் பார்த்துகிட்டாங்க. இப்ப வரைக்கும் ஓய்வா உட்கார்ந்ததில்லை. நமக்கும் சேர்த்துத்தான் ஓடிட்டிருக்காங்க. படிச்சி முடிச்சதும் ப்ரவீணும் இங்கேயும், அங்கேயுமா சேர்த்து பார்த்துக்கிட்டான்.”

“நீ ப்ளஸ்டூ முடிச்சதும், உண்மையை உன்கிட்ட சொல்லிரலாம்னு நினைச்சப்ப, ரெண்டுங்கெட்டான் வயசுல நம்ம உறவை தப்பா புரிஞ்சிக்கவும் சான்ஸ் இருக்கு. தப்பா புரிஞ்சிக்கலன்னாலும் மெண்டலி நீ டிஸ்டர்பாக சான்ஸ் இருந்தது. அப்படி ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாது. அதே டைம் கல்யாணம்னு வரும்போது நம்ம உறவுமுறை பிரச்சனையாகும். அவளைப் புரிஞ்சிக்கிட்ட பையனா பார்த்து கல்யாணம் முடிஞ்சதும் உண்மையை சொல்லிக்கலாம்னு எல்லாரும் சொல்லிட்டாங்க.”

“ஒண்ணு கவனிச்சிருக்கியா அம்மு? நான் வச்சிருக்கிற பொட்டு என்ன கலர்னு இதுவரை நீ பார்த்ததில்லைல்ல? கருப்புக் கலர். இந்த செயின் உங்கப்பா முதன்முதலா எனக்காக வாங்கி, எப்பவும் உன் கழுத்துலயே இருக்கணும்னு போட்டது. இது தாலி கிடையாது.”

“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில, உனக்காக தியாகம் செஞ்சிருக்காங்க. அக்கா அவங்க புருஷனை! ராம் அவங்க குடும்பத்தை! ப்ரவீண் அம்மா, தம்பி பாசத்தை! நவீன் சொல்லவே வேண்டாம், உன்னோட சின்னவன்தான். அப்பா, அண்ணன் பாசம்னா என்னன்னு கூட தெரியாம வளர்ந்தவன். மத்தவங்க இழப்பாவது தெரிஞ்சி நடந்தது. அவனுக்கு நாம கொடுமைதான் செஞ்சிருக்கோம். அவனுக்கு இந்த விஷயமே போன வருஷம்தான் தெரியும். இருந்தாலும் ராம் பாரதியோட பையனாச்சே! அதான் வீட்ல வந்து நிற்கலை. இதுல நீ ராம் உனக்குத்தான் வேணும்னு கேட்கிற. இப்பவும் உனக்கு மட்டும்தான் வச்சிக்கோன்னு விட்டுக்கொடுக்கிறாங்க. யாருக்கு வரும் இந்த மனசு சொல்லு” என்றபடி தன் மனதிலுள்ள பாரத்தை இறக்கினார் சந்திரகலா.

யாரும் எதிர்பாரா நேரத்தில் தாயிடமிருந்து விலகி வேகமாக பாரதியின் காலில் விழுந்தவள், “என்னை மன்னிச்சிருங்கம்மா. நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். நான் ரொம்ப மோசம்மா. குழந்தையிலேயே எவ்வளவு சுயநலமா இருந்திருக்கேன். என்னை நினைச்சா எனக்கே அசிங்கமாயிருக்கும்மா. என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க” என்று அழுத மகளை தூக்கி நிறுத்தி தோளணைத்து,

“நீங்க மோசம்னா, மோசமானவங்களை என்னன்னு சொல்றதுங் அம்மு. நீங்க குழந்தை அம்மு. குழந்தைகளுக்கு தான் செய்யுறது சரியா, தப்பா தெரியாது. ஆனா, நீங்க எதுவும் தப்பா செய்யலீங்ளே.”

“நான் உங்களுக்குன்னு கஷ்டத்தை மட்டும்தான கொடுத்திருக்கேன். ஏன் விட்டுக்கொடுத்தீங்க? செத்தா சாகட்டும்னு விட்டிருக்கலாமே. என்னால உங்க எல்லார் லைஃபும் கேள்விக்குறியா இருக்கு. ஐம் சாரிம்மா. என்னால இதைத்தவிர வேறெதுவும் சொல்ல முடியல. சொல்ல வார்த்தைகளும் இல்லை” என்றாள்.

“உங்களோட குணத்துக்கு இதெல்லாம் தாராளமா செய்யலாமுங்கம்ணி.”

“என்ன பெரிய குணம். குழந்தையிலேயே சரியான சுயநலவாதியா இருந்திருக்கேன். இது நல்ல குணமா? இருக்கிறதிலேயே மோசமான குணம் இது” என்றாள் அழுகையினூடே.

தன் அண்ணனிடம் சென்றவள், “அண்ணா! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது தெரியல. நீங்க என்மேல வச்ச பாசத்துக்கு முன்னாடி நான்லாம் ஒண்ணுமே இல்லண்ணா!” என்றாள் அவன் கைபிடித்து.

“நன்றியைத்தான் உன் ப்ரண்ட் மூலமா தீர்த்துட்டியேடா அம்மு” என்று தங்கையின் தலைகோதி மனைவியைப் பார்த்து சிரித்தான்.

அந்த சிரிப்பே யானை பலம் தர, வெட்கம் கலந்த புன்னகை ஒன்றை வெளியிட்டாள் அவனின் மனைவி.

அந்த பதிலில் சகஜமான பாகீரதி, “இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, வேற ஒரு நல்ல கிஃப்ட் கொடுத்திருப்பேன்” என வருத்தப்படுவது போல் நடித்தாள்.

“ஏய்! என்னடி சொன்ன? என்னை விட நல்ல கிஃப்ட் உங்கண்ணனுக்கு கொடுப்பியா? உன்னை கொன்னுருவேன்டி” என்று தாரணி அவளை அடிக்க வர,

“ஏய்! தர்ணி வேண்டாம். கல்யாணம் முடிஞ்ச பொண்ணு மேல கை வைக்கிற உரிமை உனக்கில்ல.”

“அப்ப எனக்கு மட்டும்தான் இருக்குன்றியா ரதி?” காதருகில் கேட்ட கணவனின் கிசுகிசுப்பான குரலில், ‘என்ன சொல்கிறான்?’ என்பதுபோல் கணவனைப் பார்க்க, ‘என்ன பார்வைடி இது?’ என நினைத்தவன், “உன்மேல கை வைக்கிற உரிமை எனக்குத்தான் இருக்குன்னு நீ சொன்னதைச் சொன்னேன்” என்றான்.

“நான் எப்ப...?” என்றவளுக்கு தோழியிடம் விளையாட்டாகப் பேசியது நினைவு வர, அனைவரின் முன் தன்னிடம் நெருக்கமாக நின்றவனை விட்டு விலக நினைக்கையில்,

“நான் என் நாத்தனார் மேல கை வைக்க எந்தச் சட்டமும் வராது” என்ற தாரிணியின் குரலில் விலகி, “ஐயோடா! ரொம்பத்தான்” என இழுக்க, அவ்வளவு துக்கத்தையும் மீறி சந்தோஷம் அவர்களிடத்தில்.

“ஆமா அப்பா எங்க? என்னதான் பிரச்சனைனாலும், அப்பாவை தாலி கட்டுற நேரம் ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா? நான் திட்டிட்டேன்னு எங்கயாவது ஒழிஞ்சிருந்து பார்க்கிறாங்களா என்ன?” என்று தந்தையைத் தேட ஆரம்பித்தாள் பாகீரதி.

‘ஆமாம். ஏன் வரவில்லை?’ என்ற கேள்விதான் ராம் பற்றிய விவரம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவதும்.

தனக்குத் திடீர் திருமணம் என்றதும், தன்னையே மறந்து ஆயிரத்தெட்டு கேள்விகளுடன் இருந்தவளுக்கு தன் தந்தையை பற்றி பாரதியோ, தாயோ சொன்னது எதுவும் நினைவிலில்லை.

உண்மை சொல்ல வந்த சந்திராவைத் தடுத்து, “இருந்தாலும் இருக்கலாமுங் அம்மு” என்ற பாரதியிடம், “என்னை அம்மு சொல்றீங்க? ஆனா, நீங்கதான் அமுல் பேபி மாதிரியிருக்கீங்க” என்றதும் சட்டென்று சிரித்து, “நீங்களும்தான் அம்மு. இருந்தாலும் உங்கமேல ஒரு வருத்தமுங் அம்மு?” என்றார்.

“என்மேலயா? ஓ... அப்பாவைத் திட்டிட்டேனே அதனாலயா. அது தப்புத்தான். அதனாலதான் வரலையா? அப்பா நான் எதுவும் நினைக்கலை ஒளிஞ்சிருந்தது போதும். முன்னாடி வந்து பாரதி அம்மா கூட சேர்ந்து நின்னு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சத்தமாக அழைத்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“உங்கப்பா வர்ற நிலையில் இல்லீங்கம்ணி.” குரல் கரகரத்தது அவருக்கு.

அவர் குரலின் வேற்றுமை ஏதோ விபரீதத்தை உணர்த்த, “வர்ற நிலையில் இல்லைன்னா? அ...அப்பாக்கு என்னாச்சி?” தெரிந்தவர்கள் தலைகவிழ, “யாராவது சொல்லுங்க? அப்பாக்கு என்னாச்சி? கேட்குறேன்ல சொல்லுங்க” என கத்தியவள், கணவனிடம் வந்து, “உங்களுக்கு தெரியாம இருக்காது. சொல்லுங்க எங்க என் அப்பா?” என்றாள்.

“தெரியலை. யாருக்கும் தெரியலை. மெத்தப்படிச்ச டாக்டருக்கும் கூட தெரியலை. நீ திட்டிட்டுப் போனதும் அந்த அதிர்ச்சியில, நமக்கு கல்யாணம் முடிக்கச்சொல்லி மயங்கினவங்கதான், இன்னும் எழுந்திரிக்கல ரதி” என்றான் தொண்டை அடைக்க,

“என்னது? அ...அப்பாக்கு என்னாச்சி? என்னாலயா? என்னாலதான் எல்லாம். ஏ...ஏன் என்கிட்டயிருந்து மறைச்சீங்க? இதை ஏன் நேத்தே சொல்லல?” என்று கணவனிடம் சண்டையிட்டு, “ம்மா எ...எனக்கு எங்கப்பா வேணும். நா...நான் அப்பாவைப் பார்க்கணும். நான் தப்பு பண்ணிட்டேன்ம்மா. நிறைய தப்புப் பண்ணிட்டேன். கடவுள் கூட என்னை மன்னிக்கமாட்டார்” என்றவள் அதன்பின் சில வினாடிகள் கூட அங்கு நின்றிருக்கவில்லை.

“அப்பா நான் உங்க அம்மு வந்திருக்கேன். எழுந்திருங்கப்பா. என்னாலதான எல்லாமே. ப்ளீஸ் செக்கப்கு கோஆபரேட் பண்ணுங்கப்பா. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். ஜென்மத்துக்கும் சந்தேகம்ன்றதே என் வாழ்க்கையில வராதுப்பா. உங்க உயிர் நான்தானப்பா? நீங்க இல்லன்னா இந்த உயிர் இருந்தும் இல்லாத மாதிரிப்பா. நீங்க எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் சொன்னீங்களாம்? பாருங்கப்பா நீங்க இல்லாமலே என்னோட கல்யாணம் நடந்திருச்சி. அப்பா எழுந்திருச்சிப் பாருங்கப்பா” என்று அழுதவள் தன்னருகில் நின்றிருந்த கணவனை உணர்ந்து, எழுந்து அவனின் கரம்பிடித்து அப்பாவின் அருகில் வந்து, “இங்க பாருங்கப்பா, நீங்க ஆசைப்பட்ட உங்க மருமகன்தான் என் புருஷன். கண்முழிச்சிப் பாருங்கப்பா. அப்பா நீங்க வேணும்ப்பா. வாங்கப்பா பிளீஸ்” என அழுதாள்.

‘என் புருஷன்’ என்றதில் மனம் மகிழ, அழுதவளை ஆறுதலாக அணைத்து, “ரதிமா மாமாவுக்கு எதுவும் ஆகாது. அவருக்கு டானிக்கே நீதான். வேற எந்த மருந்தும், மாத்திரையும் அவரை மீட்காது. அழாம அவரை எழுப்பு. சீக்கிரமே சரியாகிருவாங்க பாரு.”

“சரியாகலன்னா, அந்த நினைப்பிலேயே மூச்சி முட்டி செத்திருவேன்ங்க” என முகம்மூடி அழுதாள்.

வேகமாக அவளை தன்னுடன் சேர்த்தணைத்து, ‘ரதீஈஈ வாயைமூடு. என்ன பேசுற?’ என அதட்ட அவன் வாய்திறக்க,

“அம்மூ வேண்டாம்” என்ற வார்த்தை கேட்டு இருவரும் திரும்பி ராமைப் பார்க்க, அவரோ பழையபடி மயக்கத்தில் இருந்தார்.

“அப்பா! நீங்க பேசுனீங்கதான? எழுந்திருங்கப்பா. நீங்க பேசினது எனக்கும் கேட்டுச்சி. அப்பா பேசினாங்கதானங்க” என்று கணவனிடமும் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“ஆமாடா பேசினாங்க” என்றான் சந்தோசமாக.

“அப்புறம் ஏன் கண் மூடிட்டாங்க?” என்று கவலையாகக் கேட்க,

“உன்னோட வார்த்தையின் தாக்கம் அவரோட மூளைக்குப் போய்ச் சேர்ந்திருக்கு. அப்படின்னா, அவருக்கு நினைவு திரும்புது. சீக்கிரம் குணமாகிருவாங்க” என்று மனைவிக்கு நம்பிக்கையளித்து, மருத்துவரை அழைத்து வந்து காண்பித்தான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top