• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
17


“அத்தை வேண்டாம். நான் பக்குவமா சொல்லிக்கிறேன்” என்ற ஸ்ரீனிவாசனைத் தடுத்த பாகீரதி, “ப்ச்... விடுங்க. எங்கம்மா என்னை ஏதோ சொல்றாங்க. உங்களுக்கென்ன?” என திமிராய்க் கேட்டு தாயிடம் திரும்பி, “ம்மா... நான்தான் அவரோட உயிர்னு இவங்க சொன்னாங்கள்ல” என பாரதியின் புறம் கைநீட்டி, “அவர் உயிர் நான்னா, நான் செத்துட்டேன்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். அதையே நீங்க சொன்னா... வேண்டாம்மா அப்பாக்கு எதுவும் ஆகாது. இப்படி பேசாதீங்க. என்னால ஜீரணிக்க முடியல” என்றாள் அழுகுரலில்.

பாகீரதியின் சமாதானத்தில் சந்திரா இளகாதது கண்டு, “கலா எதுவும் சொல்ல வேண்டாம்” என்று மேனகா தன்புறம் இழுத்தார்.

மகளின் பதிலில் உருகினாலும், அவளுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும், இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதையும் மூளை அறிவுறுத்த, “விடுங்க மயினி. எத்தனை வருஷம் இவளுக்காக மறைச்சி மறைச்சி வச்சிருக்கிறது. இப்ப அவரே இந்த நிலையில் இருக்கிறப்ப...” மேலே சொல்ல முடியாமல் நிறுத்தி, “இவளுக்கு கல்யாணமானதும் சொல்லணும்னு நினைச்சதுதான். அதான் கல்யாணமாகிருச்சில்ல. இதுக்குமேல மறைச்சி ராமை இழக்க நாங்க தயாராயில்ல” என்று மகளிடம் திரும்பி, “செத்துட்டார்னு சொன்னதையே ஜீரணிக்க முடியலையே. உண்மையே அதுதான்னு சொன்னா எப்படிடி ஜீரணிப்ப?”

“அம்மாஆஆ...” என பாகீரதி அலற,

“சந்திரா வேண்டாம். நான் எடுத்துச் சொல்லி புரியவைக்கிறேன். கல்யாண நாளன்னைக்கே இதெல்லாம் வேண்டாம். அம்முவால தாங்கிக்க முடியாது” என்றபடி பாரதி இடைபுகுந்தார்.

“கேட்டியாடி. எல்லாத்துக்கும் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்தே வாழ்ந்த தெய்வம் இவங்க. இப்பவும் உனக்காகன்னுதான் பார்க்கிறாங்களே தவிர, அவங்களைப் பற்றி யோசிக்கமாட்டேன்றாங்க.”

“ம்மா...” என்றவளின் குரல் பலகீனமாய் வந்தது. என்ன பேசுகிறார் என்பதே புரியா நிலை அவளது.

“உங்கப்பா செத்தது இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இல்லடி. உன்னோட இரண்டாவது வயசுல. பத்தொன்பது வருஷமாச்சிடி, நீ அப்பா இல்லாத பொண்ணாகி” என்றார் அழுகை குரலில்.

“ப்ளீஸ்மா. அப்படில்லாம் சொல்லாதீங்க?” என்று காதைப் பொத்தி கால்கள் தடுமாற, பிடிமானமாய் வந்து நின்ற கணவனை நிமிர்ந்து பார்த்து, “அம்மாகிட்ட சொல்லுங்க, இப்படில்லாம் பேச வேண்டாம்னு.” கண்கலங்க சொன்ன மனைவியை ஆதரவாய் பிடித்தவன், “உண்மையை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியாது ரதி. இதையும் ஜீரணிச்சிக்கோ” என்றான் தனக்கும் உண்மை தெரியுமென்பதை அவளுக்கு உணர்த்தி.

“சந்திரா அம்மு பாவம்” பாரதி கவலையாய் சொல்ல,

“அக்கா போதும். நீங்களும், உங்க புருஷனும் இவளுக்காகன்னு செஞ்சதெல்லாம். அவ உயிரைக் காப்பாத்திய ராம், இன்னைக்கு இவளாலயே தன் உயிரை கையில பிடிச்சிட்டிருக்காங்க. நீங்க இழந்தது போதும். போதும்க்கா” என தரையில் மடிந்தமர்ந்து அழ ஆரம்பித்தார்.

தாய் சொன்ன, ‘உங்கப்பா இறந்து பத்தொன்பது வருஷமாகிருச்சி’ என்பதிலேயே அதிர்ந்து சிலையாகி நின்றிருந்தவளுக்கு, அவர்கள் பேசிய எதுவும் காதில் விழவில்லை. ஸ்ரீனிவாசன் மனைவியின் தோள்தட்ட, அதில் நினைவு வந்தவள், தாயின் அருகிலமர்ந்து, “ம்மா நீங்க சொல்றதெல்லாம் பொய்தான? அப்பாதான் நம்மளோடவே இருக்காங்கள்லம்மா. இல்லன்னு சொல்லிராதீங்கம்மா?” என கண்ணீருடன் கெஞ்சிய மகளை நோக்கி ஒரு விரக்தி பார்வை பார்த்தவர், மடைதிறந்த வெள்ளமாய் அனைத்தையும் சொல்லி முடித்தார்.

மருத்துவமனையில் தகப்பனைக் காணச்செல்ல, அங்கு அமர்ந்திருந்த நவீன் பாகீரதியைப் பார்க்க, முன்தினம் ‘உங்கப்பாவா?’ என ஏளனமாகப் பார்த்தது நினைவு வர, ‘எங்கப்பா எனக்கில்லையா?’ என்ற நினைவே கசப்புடன் கண்ணீரை வரவழைக்க, அவனை கை கூப்பி, “சாரி! அ...அவர் உங்கப்பாதான்” என வலுக்கட்டாயமாக வார்த்தையை வெளியிட்டாள்.

அவளின் கைகளை இறக்கி, “உங்கப்பா இல்லக்கா. நம்ம அப்பா” என்றான் தெளிவாய்.

“எனக்கும் அப்பாதான?” ஏக்கத்துடன் கேட்டவளுக்கு ‘ஆம்’ என்று கண்மூடி ஆமோதிக்க, “தேங்க்ஸ்” என்றாள்.

“தம்பிக்கு தேங்க்ஸ் சொல்லக்கூடாதுக்கா” என்றான் மென்மையாக.

“இல்ல. என்னால நீதான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்க. என் வயசுதான உனக்கும். உன்னோட உரிமையை தட்டிப்பறிச்சிட்டு உன்னை அழவச்சி, நான் சந்தோஷமா இருந்திருக்கேன்னு நினைக்கும்போதே, என்மேலேயே எனக்கு கோவம் வருது. என்னோட நிலைக்காக ஒரு குடும்பத்தையே பிரிச்சிருக்கேன். அது எவ்வளவு பெரிய தப்பு. அது புரியாம நான் எல்லாரையும் காயப்படுத்தி...”

“ரதி அதுக்கு நீ பொறுப்பில்லமா. குழந்தையில நடந்தது உனக்கே தெரியாதே. அப்புறம் எப்படி நீ பொறுப்பாவ?” என்றான் ஸ்ரீனிவாசன்.

“எதாவது காரணம் சொல்லி பொறுப்பைத் தட்டிக்கழிக்க நான் தயாராயில்ல. ப்ரவீண் அண்ணா பாவம்லயா? என் மேல வச்ச பாசத்திற்காக” என விசும்ப ஆரம்பித்தாள்.

அவளை மெல்ல தோள்சாய்த்து, “சரியாகிரும் ரதி. சரி பண்ணிரலாம்” என்றான் ஆறுதலாய்.

“சரி பண்ணிரலாம்தான?” என முகம் உயர்த்தி கணவன் கண் பார்த்துக் கேட்க, அவளின் முகத்தை தன் மார்போடு சேர்த்தணைத்து தலைகோதியபடி, “ப்ராமிஸா” என்றான்.

“ஆமா அம்மு. சீக்கிரம் சரியாகிரும்” என்ற ப்ரவீணின் குரலில் தன் சுயம் உணர்ந்து பார்த்தவள், ‘அச்சோ! இவங்களை இத்தனை பேர் முன்னாடியா கட்டியணைச்சோம். அதுக்குள்ளயா தாலிக்கயிறு வேலை செய்யுது?’ என புரியாமல் விழித்தாலும், கணவனின் கரத்தை நாசூக்காக விலக்கியடி, “நான் அப்பாவைப் பார்க்கணும்” என்றாள்.

மருத்துவரிடம் கேட்டு அவளை உள்ளே அனுப்ப, ஒரே நாளில் ஓய்ந்து போயிருந்த மனிதனைப் பார்த்தவள் கண்ணீர் கன்னம் தொட அருகில் அமர்ந்தாள். அவரையே பார்த்தபடி, “அப்பா நான் உங்க ரதி. உங்க பொண்ணு வந்திருக்கேன். பாருங்கப்பா. நான் உங்க பொண்ணுதானப்பா? என்னை வெறுத்து ஒதுக்கிற மாட்டீங்ளே? இப்ப அடுத்தவங்க பார்வையில நான்தான் இல்லீகல் சைல்ட் இல்லையாப்பா?” எனும்போது அவர் உடலில் ஒரு அதிர்வு வந்ததை பாகீரதி அறியவில்லை. அறிந்துகொள்ளும் நிலையிலும் அவளில்லை.

“என்னைவிட்டு போயிராதீங்கப்பா. வந்திருங்கப்பா ப்ளீஸ்! நீங்க ஒரு அற்புதமான பொக்கிஷம்ப்பா. நீங்க எனக்கு காலத்துக்கும் கூடவே வேணும்ப்பா!” மெல்லிய குரலில் அரற்றிக் கொண்டிருந்தவள் எண்ணங்கள் மண்டபத்தில் நடந்த விஷயத்தையே சுற்ற, தாய் சொன்னது மனதில் ஆடியது.

“கணபதி உன் அப்பா பெயர். மேனகா மயினியோட கூடப்பிறந்த தம்பி. இப்ப உன் அப்பாவா இருக்கிறது ராம். முழுப்பெயர் ராமகிருஷ்ணன். உன் அப்பாவோட சித்தப்பா பையன். ரெண்டு பேருக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சப்பதான் எனக்கு எல்லாரும் அறிமுகம். ராமகிருஷ்ணன் என்ற பெயரை ராமுன்னு சொல்லி, குரங்கோட இணைச்சிப் பேச ஆரம்பிச்ச பழக்கம். அத்தனை பேரும் பெயர் சொல்லிக் கூப்பிடுறதுக்கு பயங்கரமா திட்டுவாங்க. இருந்தாலும் கிண்டலா கூப்பிட ஆரம்பிச்சது. அப்படியே நிலைச்சிருச்சி. யார்கிட்டேயும் அதிகமா பேசாட்டியும் ராம்கிட்ட வம்பு பண்ணுவேன். ஏன்னா, எங்க அண்ணனுக்கும், ராம்கும் வித்தியாசம் பார்த்ததில்லை நான். அதே நேரம், கல்யாணம் முடியுறது வரை உன் அப்பாகிட்ட ஒருவார்த்தை கூடப் பேசினதில்லை.”

“ராம் படிப்பு முடிஞ்சதும், அவர் நண்பன் மூலமா கோவைக்கு வேலைக்கு போனவங்களுக்கு, அங்க அக்காவைப் பார்த்ததும் பிடிச்சிருச்சி. நல்ல பாரம்பரியமான குடும்பத்துல பிறந்தவங்க பாரதி அக்கா. அது அவங்க பேச்சிலயும் பழக்க வழக்கத்துலயுமே தெரியும். வீட்டுக்கு ஒரே பொண்ணு அவங்க. வசதின்னு பார்த்தாலும் ரொம்பவே உயரம். மனப்பொருத்தத்துல வசதி எங்க வந்திச்சி. எங்க பக்கத்துல உள்ள பெரியவங்க மறுக்க, அக்கா வீட்டுப் பெரியவங்களுக்கு ராம் குணம் பிடிச்சி, தன்னோட ஒரே பொண்ணை கட்டிக்கொடுக்க சம்மதிச்சாங்க. ஆனா, அக்கா, ராம் பெத்தவங்க சம்மதம் முக்கியம்னு சொல்லவும், உன் அப்பா, ராம், அப்புறம் இன்னும் சிலர் பேசி சம்மதிக்க வச்சி அவங்க கல்யாணம் நடந்தது.”

“நிறைய பேர் பிழைப்புக்காக சென்னை பக்கம் ஒதுங்கின சமயம், உன் அப்பா திருப்பூர் பக்கம் போயி கார்மெண்ட்ஸ் ஆரம்பிச்சி, ராமையும் பார்ட்னரா சேர்த்தார். எங்க அண்ணனுக்கு, ராம் பார்ட்னரா சேர்ந்தது பிடிக்கலை. சின்ன வயசிலிருந்தே நிறைய கௌரவம் பார்ப்பான். எங்க வீட்லயும் விவசாயமும், ஜவுளிக்கடையும்தான் தொழில். உன் அப்பாவும் அதுக்கேத்த மாதிரி திருப்பூர்ல தொழில் தொடங்க, எங்க ராம் மாதிரி சொந்த மச்சினனும் கல்யாணம் பண்ணிக்குவானோன்னு, மயினி மூலமா அவங்க அப்பா, அம்மாவுக்கு தகவல் சொல்லி வரவழைச்சி, என்னை அவங்களுக்கு பேசி முடிக்கத் தயாரானாங்க.”

“உன் அப்பாவை வரவழைச்சி என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டப்ப, என்னோட வாழ்க்கையில் பெரிய நிலைக்கு வந்த பிறகு, நானே வந்து சொல்றேன். அதுவரை உங்க தங்கை என்னை நம்பி காத்திருந்தா இருக்கட்டும். இல்லன்னா வேற இடம் பார்த்து முடிச்சிக்கோங்கன்னு சொல்லிட்டார். ஊருக்குப் போறதுக்கு முன்னாடி என்கிட்ட வந்து, என்னை நம்புறியா? நம்பினா எனக்காக காத்திரு! கண்டிப்பா வருவேன்னு சொல்லி என் பதிலைக் கூட எதிர்பார்க்காம போயிட்டாங்க.”

“அந்த வார்த்தை கொடுத்த நம்பிக்கையிலதான் உன் அப்பாவுக்காக நாலு வருஷம் காத்திருந்தேன். அந்த காத்திருப்புக்கு பெயர்தான் காதல்னா! ஆம். எங்களது காதல் கல்யாணம்தான்” என்று நிமிர்வாக சொல்லி, “எனக்கு கொடுத்த நம்பிக்கையை காப்பாற்றி, அவங்க அவங்களாவே திரும்பி வந்தாங்க. எங்க கல்யாணம் முடிஞ்சதும் ராமை தொழில்ல இருந்து விலக்கச்சொல்லி எங்கண்ணன், தம்பி, ஏன் எங்க அப்பாவுமே குதிச்சாங்க” என்றபோது தகப்பனைப் பார்க்க அவர் தலைதாழ்ந்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“தொழில் வேற. உறவு வேற. அவனை என் சித்தப்பா பையனா பார்க்கல. ப்ரண்டாதான் பார்க்கிறேன். இப்பக்கூட அவன் மாமனார் சப்போர்டோட தனியா ஆரம்பிக்க முடியும். ஆனா, அவன் செய்யலை. என்னை நம்புறான். அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தியே தீருவேன்னு எல்லாருடைய வாயையும் அடைச்சிட்டாங்க உன் அப்பா.”

“அப்புறம் நாங்க திருப்பூர்லயும், ராம் குடும்பம் கோவையிலும் இருந்தாங்க. நீ எங்களுக்கு நாலு வருஷம் கழிச்சி பிறந்தவ. உனக்குத் தெரியாது அம்மு. எனக்கு உன்னோட அப்பாதான் உலகமே! படிச்சிருந்தாலும் தைரியம் என்கிட்ட ரொம்பவேக் கம்மி. அதுக்காக வருத்தப்பட்டப்ப, படிப்பு உலகத்தைத் தெரிஞ்சிக்கத்தான். வேலைக்கு போனால்தான் தைரியம்னு இல்லை. ஒவ்வொரு குடும்பத்தலைவியும் பத்து நபர்களுக்குச் சமம்னு என்னை சமாதானம் பண்ணுவாங்க.”

கணவனைப் பற்றிப் பேசுகையில், கண்களில் தோன்றிய கனிவுடன் சேர்ந்த கண்ணீர், காலங்கள் கடந்தும் அவரின் காதலைச் சொல்லியது. “நீ பேச ஆரம்பிச்சப்ப பெரியப்பான்ற வார்த்தை வராம, ராமை அப்பான்னுதான் கூப்பிடுவ. பொண்ணு இல்லாத அவங்களுக்கு நீதான் பொண்ணு. அவங்க குடும்பமும் திருப்பூர் வந்து செட்டிலானாங்க. அந்த நேரத்தில் ஒரு ஆக்ஸிடெண்ட் ராம்கும், பிரவீணுக்கும். அடி கொஞ்சம் பலம்தான். அவங்களை பார்க்க வந்தப்ப, நீ அவங்களைவிட்டு நகரவேயில்ல. அடிபட்டது அவங்களுக்கு. அழுதது நீ.”

“ப்ரவீண் அடிபட்டிருந்த நேரம் அவனைப் பார்த்து அண்ணான்னு கூப்பிட்டதுதான், அவன் உன்னைத் தலையில வச்சி கொண்டாட வச்சிது. ஏன்னா அப்ப உனக்கு ஒரு வயசுதான். எந்த இடத்தில் இருந்தாலும் உனக்கு அவன் வேணும். அவன் ஒண்ணு சொன்னா தட்டாம நீ எப்படி கேட்பியோ, அதேமாதிரி நீ சொல்றது அவனுக்கு வேதவாக்கு. அதுக்கப்புறம் ப்ரவீண் உன்னோடவே இருப்பேன்னு ஒரே அடம். வேற வழியில்லாம சென்னையில் ஸ்கூல் சேர்த்திரலாம்னு முடிவு பண்ணிருந்தோம்.”

“பாரதி அக்கா! ப்ச் சொல்லவே வேண்டாம். நான் வியந்து பார்க்கிற ஆள். சாதாரண குடும்பத்தலைவியா இருந்த என்னை, எனக்கே தெரியாம கொஞ்சம் கொஞ்சமா பக்குவப்படுத்தினாங்க. உன் அப்பாதான் உலகம்னு இருந்த நான் டெக்ஸ்டைல்ஸ் பார்த்துக்கிற அளவிற்கு மாறினேன்னா, அது அக்காவாலதான். எக்ஸ்போர்ட் ஆர்டருக்காக அடிக்கடி வெளிமாநிலம், வெளிநாடுன்னு போய்ட்டு வருவது உங்கப்பாவோட வழக்கம்.”

“கார்மெண்ட்ஸ் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ராம்தான். அதை அவங்களுக்கே கொடுத்துட்டு, நாங்க டெக்ஸ்டைல்ஸ் மட்டும் பார்த்து அதையே டெவலப் பண்ணிக்கலாம்னு நினைச்சி, அவங்ககிட்ட சொன்னப்ப அவங்க மறுக்க, நாங்க பிடிவாதமா வாங்கிக்கச் சொன்னோம். அக்கா பணம் நாங்க கொடுத்திருவோம்னு சொல்ல, அவங்களை கஷ்டப்படுத்த வேண்டாம்னு ஒத்துக்கிட்டு எழுதி கொடுத்துட்டாங்க.”

“ரதி கார்மெண்ட்ஸ் மேலோட்டமா பார்த்தா இது பாரதி அக்கால பாதியாத்தான் தோணும். அதையும் விட உன்மேல உள்ள அன்பினால வச்ச பெயர்னு நெருங்கினவங்களுக்குத்தான் தெரியும். நம்ம ரெண்டு பேரோட பெயரையும் சேர்த்து ஆரம்பிச்சதுதான் கலாரதி. உங்கப்பாவோட உழைப்புதான் அத்தனை ப்ராஞ்சஸ். உன்னோட இரண்டாவது பிறந்தநாள் முடிஞ்சி மூணாவது மாசத்துல ஒரு ஃப்ளைட் ஆக்சிடெண்ட்ல உ...உன்...அப்பா...” பேச முடியாது கதறி அழுதுவிட்டார்.

“ம்மா...” என தோள் சாய்த்தவளுக்கும் கண்ணீர் வழிந்தது.

“சாம்பலா கூட கிடைக்கலமா. அந்த நல்ல மனுசனுக்கு இந்த சாவு கொடுமைல்ல. அந்த நேரம் அவங்க உடல் எப்படி எரிஞ்சிருக்கும். அந்த வலியை அனுபவிக்கிறது சாவை விடக் கொடுமையில்லையா. யாருக்கும் மனசால கூட தீங்கு நினைக்காதவங்க” எனும்போது மேனகாவும் சந்திராவை சேர்த்தணைத்து அழுதார்.

பாரதி சமாதானப்படுத்த, கண்ணீர் துடைத்து, “அப்புறம் ஊருக்கே வரச்சொல்லி அண்ணன் கூப்பிடவும், நான் முடியாது சொன்னேன். அந்த நேரம் சாவுக்கு வந்த ராம் குடும்பத்தோட எங்க வீட்லதான் இருந்தாங்க. என் தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சி குழந்தை இல்லாமல் இருந்தான். இப்ப வரைக்குமே இல்லதான். அவன் மனைவி பெயர் நாகலட்சுமி. பெயர்தான் லட்சுமிகரமா இருக்கும். சரியான ராஜநாகம் அவ. அவளோட ஒவ்வொரு வார்த்தையும் மனுசனை உயிரோட சாகடிக்கும். என்மேல எதோ கோவம்னு அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் புரிய வைக்கும்.”

“பதினாறுக்கு வரும்போது என்னைத் தன்னோடவே அழைச்சிட்டுப் போறதா அண்ணன் சொன்னதும், நான் உங்கப்பா கூட வாழ்ந்த வீட்டை, தொழிலை விட்டுட்டு வரமாட்டேன்னு சொன்னேன். அதுல அப்பாவுக்கும், அண்ணனுக்கும் கோவம்னா, அவங்க துணைகளுக்கு எதிர்த்து பேச பயம். எங்கம்மாவுக்கு என்னைப் பிடிச்சி அழ மட்டும்தான் தைரியம் இருந்திச்சி. பேச தைரியமில்லை. அன்னைக்கே ராம் திருப்பூர் போயாச்சி. அதுவரை என் பொண்ணை நான் கவனிக்கல.”

“எனக்காக! என் வாழ்க்கையில் ஒரு பிடிப்புக்காகன்னு, என் புருஷன் கொடுத்துட்டுப் போன பரிசு பாகீரதி. ஒருவேளை பொண்டாட்டியை தனியா விட்டுட்டுப் போயிட்டா, அவளும் இருக்கமாட்டாள்னு நினைச்சோ என்னவோ, நாலு வருஷம் கழிச்சி இவளைக் கொடுத்துட்டாங்க.” மகளின் முகம் வருடி, “அப்படியே அவங்கப்பா சாயல் என் பொண்ணு. என்னைக்குமே வெறுத்து ஒதுக்க முடியாத ஒரு முகம். அதனாலதான் நீ சின்னதா தப்பு பண்ணினாக் கூட என்னால பொறுத்துக்க முடியாது. ஏன்னா உங்கப்பாவுக்கும் தப்புக்கும் ரொம்ப தூரம்.”

“ம்மா...” என்ற கேவலுடன் தாயை அணைக்க, மகளின் கண்ணீர் துடைத்து, “மூன்று நாள் கூட இருக்காது உங்கப்பா நம்மளை விட்டுப்போயி. அப்பா அப்பான்னு ஒரே புலம்பல். சாதாரண காய்ச்சல்தான் வந்தது. உங்கப்பா இழப்பும், தனியா இருந்ததாலயும் நான் அழுதுட்டே இருந்ததால உன்னை சரிவர கவனிக்காம போயிட்டேன். நான் சுதாரிக்கிறதுக்குள்ள காய்ச்சல் அதிகமாகி பெட்ல சேர்க்கிற அளவுக்குப் போயிருச்சி. அக்கா தினமும் போன் செய்றதால, விஷயம் தெரிஞ்சி சென்னை வந்தாங்க. நீ ராமைப் பார்த்ததும், அப்பா எங்க போனீங்க? அண்ணா என்னை விட்டுட்டுப் போகாதன்னு ஒரே அழுகை. அதுல பிட்ஸ் வர, செக்கப் பண்ணின டாக்டர் மூளைக்காய்ச்சல், பிழைக்கிறது ரொம்ப கஷ்டம். மீறி பிழைச்சா மறுபிறவின்னு சொல்லிட்டார்.”

“அப்பத்தான் ஒரு இழப்பை சந்திச்ச எனக்கு, என் பொண்ணுக்கும் அதே நிலைன்னும்போது என்னால தாங்கிக்க முடியல. நான் நானாவே இல்லைன்றதுதான் நிஜம். உன்னை காப்பாத்தச் சொல்லி டாக்டர்கிட்ட சண்டை போட்டேன். அவரும் அனுபவசாலி பயப்பட வேண்டாம்னு முடிஞ்சளவு நல்ல ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க. உன்னோட வாய்ல வந்த வார்த்தை ‘அப்பா’ கனவுலயும், நினைவுலயும் அப்பா மட்டும்தான். ராம்தான், அப்பா உன் பக்கத்துல இருக்கேன் பாருன்னு சொல்லி உன்னை சமாதானப்படுத்த, கண்முழிச்சி பார்த்தவ, என் கூடவே இருப்பீங்களா? என்னைவிட்டுப் போயிர மாட்டீங்களேன்னு சொன்னதும்... நீ சொன்னதோட அர்த்தம் புரிஞ்ச எனக்கு அதிர்ச்சி.”

“ராம் அக்காவைப் பார்த்தார். இதே சிரித்த பாவனையில சம்மதமா தலையசைத்ததும், உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன்மா. உன் அப்பா உனக்குத்தான். நீ சீக்கிரம் ஹாஸ்பிடல் விட்டு வந்திருடா ரதிமான்னு சொநார். நான் இப்பவே ரெடிப்பான்னு நீ சொன்னாலும், அபாயக்கட்டம் தாண்டி வர ஒரு வாரமாகிருச்சி. ஹாஸ்பிடல்ல ட்ரீட்மெண்ட் முடிச்சி நீ க்யூராகி வர, கிட்டத்தட்ட மூணு மாசமாகிருச்சி. அந்த நாள்கள்லாம் எவ்வளவு கொடுமை தெரியுமாடா அம்மு. ராம் பாரதியக்கா தவிர வேறு யாரோட துணையும் இல்லாம, உங்கப்பாவை இழந்த இழப்பு மறையாம, அந்த கணங்கள் ரொம்பக் கொடுமைடா.”

நீ உடல் சுகமில்லாமல் இருந்ததை என் பிறந்த வீட்டுக்காரங்களுக்கு தெரியப்படுத்தலை. பதினாறுக்கு வந்த எங்க குடும்பத்தாளுங்க விஷயம் சொன்னதும், மானம் போச்சி, மரியாதை போச்சின்னு கத்தினாங்க. எங்கண்ணன் நீ என்னோடவே வந்திரு. இந்த அசிங்கமெல்லாம் வேண்டாம்னு சொன்னான். தம்பி எப்பவும்போல் அமைதியாவே அண்ணனுக்கு ஆதரவு கொடுத்தான். தம்பி ஒஃய்ப் பேசினப்பதான் இப்படியெல்லாம் சகமனுஷியை பேசுவாங்களான்னு தோணிச்சி. ஆமா. அவ சொந்தக்காரவங்க முன்னாடி என்னையும், ராமையும் சேர்த்து வச்சி எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, வார்த்தைகளால எப்படி அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவையும் பண்ணினா.”

“அத்தனை வருஷமா அடக்கி வச்சிருந்த கோவத்திற்கான காரணத்தை நான் தனியா இருக்கும் போது கொட்ட ஆரம்பிச்சா. அப்பதான் அவ பேச்சில தெரிஞ்சது. உங்கப்பாவுக்கு அவளை பெண் கேட்டிருந்தது. உன் அப்பாவுக்கேத் தெரியாம பேசி கல்யாணத்துக்கு கேட்டப்ப, மயினிதான் என் நாத்தனாரை பேசியிருக்குன்னு சொல்லிட்டாங்க. அதை பொய்யின்னு நினைச்சி உங்கப்பாகிட்ட அவங்கப்பா நேரடியா கேட்க, என்னை நம்பி என் கலா இருக்கிறா. நான் அவளைத்தான் முடிப்பேன்னு சொல்லியிருக்காங்க. இந்த விஷயம் எனக்குத் தெரியாதுன்றது வேற.”


“இன்னொருத்திக்காக! அதாவது எனக்காக! அவளை புறக்கணித்த கோவம். எந்த உறவுமுறையும் இல்லாததால, என் தம்பிக்கு பொண்ணு பார்த்ததும் அதே சம்பந்தத்தை உங்கப்பாவோட பேரண்ட்ஸ் சொல்ல, மறுபேச்சில்லாம் வீட்ல அந்த பொண்ணையே முடிச்சிட்டாங்க. இந்த விஷயம் எங்க வீட்ல யாருக்கும் இப்ப நான் சொல்றதுவரை தெரியாது” என்றபோது அனைவருக்கும் அது புது செய்திதான்.

அவளோட கோவம் விஷமா மாறி என்னை கடிக்க காத்திட்டிருந்தப்ப, கிடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணிக்கிட்டா. அதுவரை சாதாரண விஷயமா இருந்ததை பெரிய இஷ்யூவாக்கிட்டா. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கோணத்துல யோசிச்சிப் பேசினதுல, யாருமே சரியான கோணத்துல யோசிக்கலைன்றதுதான் நிஜம். அதான் மனுசங்க புத்தின்றது. மத்தவங்களை என்ன சொல்றது என்னைப் பெத்த அப்பாவே மறுத்து பேசலன்னும்போது...” என்று தந்தையை சற்று இளக்காரமாகப் பார்த்தார்.

அவரின் தலை நிமிரவேயில்லை தன் தவறை எண்ணி. காலம் கடந்து என்னவென்று சமாதானப்படுத்துவார் மகளை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top