- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
17
“அத்தை வேண்டாம். நான் பக்குவமா சொல்லிக்கிறேன்” என்ற ஸ்ரீனிவாசனைத் தடுத்த பாகீரதி, “ப்ச்... விடுங்க. எங்கம்மா என்னை ஏதோ சொல்றாங்க. உங்களுக்கென்ன?” என திமிராய்க் கேட்டு தாயிடம் திரும்பி, “ம்மா... நான்தான் அவரோட உயிர்னு இவங்க சொன்னாங்கள்ல” என பாரதியின் புறம் கைநீட்டி, “அவர் உயிர் நான்னா, நான் செத்துட்டேன்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். அதையே நீங்க சொன்னா... வேண்டாம்மா அப்பாக்கு எதுவும் ஆகாது. இப்படி பேசாதீங்க. என்னால ஜீரணிக்க முடியல” என்றாள் அழுகுரலில்.
பாகீரதியின் சமாதானத்தில் சந்திரா இளகாதது கண்டு, “கலா எதுவும் சொல்ல வேண்டாம்” என்று மேனகா தன்புறம் இழுத்தார்.
மகளின் பதிலில் உருகினாலும், அவளுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும், இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதையும் மூளை அறிவுறுத்த, “விடுங்க மயினி. எத்தனை வருஷம் இவளுக்காக மறைச்சி மறைச்சி வச்சிருக்கிறது. இப்ப அவரே இந்த நிலையில் இருக்கிறப்ப...” மேலே சொல்ல முடியாமல் நிறுத்தி, “இவளுக்கு கல்யாணமானதும் சொல்லணும்னு நினைச்சதுதான். அதான் கல்யாணமாகிருச்சில்ல. இதுக்குமேல மறைச்சி ராமை இழக்க நாங்க தயாராயில்ல” என்று மகளிடம் திரும்பி, “செத்துட்டார்னு சொன்னதையே ஜீரணிக்க முடியலையே. உண்மையே அதுதான்னு சொன்னா எப்படிடி ஜீரணிப்ப?”
“அம்மாஆஆ...” என பாகீரதி அலற,
“சந்திரா வேண்டாம். நான் எடுத்துச் சொல்லி புரியவைக்கிறேன். கல்யாண நாளன்னைக்கே இதெல்லாம் வேண்டாம். அம்முவால தாங்கிக்க முடியாது” என்றபடி பாரதி இடைபுகுந்தார்.
“கேட்டியாடி. எல்லாத்துக்கும் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்தே வாழ்ந்த தெய்வம் இவங்க. இப்பவும் உனக்காகன்னுதான் பார்க்கிறாங்களே தவிர, அவங்களைப் பற்றி யோசிக்கமாட்டேன்றாங்க.”
“ம்மா...” என்றவளின் குரல் பலகீனமாய் வந்தது. என்ன பேசுகிறார் என்பதே புரியா நிலை அவளது.
“உங்கப்பா செத்தது இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இல்லடி. உன்னோட இரண்டாவது வயசுல. பத்தொன்பது வருஷமாச்சிடி, நீ அப்பா இல்லாத பொண்ணாகி” என்றார் அழுகை குரலில்.
“ப்ளீஸ்மா. அப்படில்லாம் சொல்லாதீங்க?” என்று காதைப் பொத்தி கால்கள் தடுமாற, பிடிமானமாய் வந்து நின்ற கணவனை நிமிர்ந்து பார்த்து, “அம்மாகிட்ட சொல்லுங்க, இப்படில்லாம் பேச வேண்டாம்னு.” கண்கலங்க சொன்ன மனைவியை ஆதரவாய் பிடித்தவன், “உண்மையை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியாது ரதி. இதையும் ஜீரணிச்சிக்கோ” என்றான் தனக்கும் உண்மை தெரியுமென்பதை அவளுக்கு உணர்த்தி.
“சந்திரா அம்மு பாவம்” பாரதி கவலையாய் சொல்ல,
“அக்கா போதும். நீங்களும், உங்க புருஷனும் இவளுக்காகன்னு செஞ்சதெல்லாம். அவ உயிரைக் காப்பாத்திய ராம், இன்னைக்கு இவளாலயே தன் உயிரை கையில பிடிச்சிட்டிருக்காங்க. நீங்க இழந்தது போதும். போதும்க்கா” என தரையில் மடிந்தமர்ந்து அழ ஆரம்பித்தார்.
தாய் சொன்ன, ‘உங்கப்பா இறந்து பத்தொன்பது வருஷமாகிருச்சி’ என்பதிலேயே அதிர்ந்து சிலையாகி நின்றிருந்தவளுக்கு, அவர்கள் பேசிய எதுவும் காதில் விழவில்லை. ஸ்ரீனிவாசன் மனைவியின் தோள்தட்ட, அதில் நினைவு வந்தவள், தாயின் அருகிலமர்ந்து, “ம்மா நீங்க சொல்றதெல்லாம் பொய்தான? அப்பாதான் நம்மளோடவே இருக்காங்கள்லம்மா. இல்லன்னு சொல்லிராதீங்கம்மா?” என கண்ணீருடன் கெஞ்சிய மகளை நோக்கி ஒரு விரக்தி பார்வை பார்த்தவர், மடைதிறந்த வெள்ளமாய் அனைத்தையும் சொல்லி முடித்தார்.
மருத்துவமனையில் தகப்பனைக் காணச்செல்ல, அங்கு அமர்ந்திருந்த நவீன் பாகீரதியைப் பார்க்க, முன்தினம் ‘உங்கப்பாவா?’ என ஏளனமாகப் பார்த்தது நினைவு வர, ‘எங்கப்பா எனக்கில்லையா?’ என்ற நினைவே கசப்புடன் கண்ணீரை வரவழைக்க, அவனை கை கூப்பி, “சாரி! அ...அவர் உங்கப்பாதான்” என வலுக்கட்டாயமாக வார்த்தையை வெளியிட்டாள்.
அவளின் கைகளை இறக்கி, “உங்கப்பா இல்லக்கா. நம்ம அப்பா” என்றான் தெளிவாய்.
“எனக்கும் அப்பாதான?” ஏக்கத்துடன் கேட்டவளுக்கு ‘ஆம்’ என்று கண்மூடி ஆமோதிக்க, “தேங்க்ஸ்” என்றாள்.
“தம்பிக்கு தேங்க்ஸ் சொல்லக்கூடாதுக்கா” என்றான் மென்மையாக.
“இல்ல. என்னால நீதான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்க. என் வயசுதான உனக்கும். உன்னோட உரிமையை தட்டிப்பறிச்சிட்டு உன்னை அழவச்சி, நான் சந்தோஷமா இருந்திருக்கேன்னு நினைக்கும்போதே, என்மேலேயே எனக்கு கோவம் வருது. என்னோட நிலைக்காக ஒரு குடும்பத்தையே பிரிச்சிருக்கேன். அது எவ்வளவு பெரிய தப்பு. அது புரியாம நான் எல்லாரையும் காயப்படுத்தி...”
“ரதி அதுக்கு நீ பொறுப்பில்லமா. குழந்தையில நடந்தது உனக்கே தெரியாதே. அப்புறம் எப்படி நீ பொறுப்பாவ?” என்றான் ஸ்ரீனிவாசன்.
“எதாவது காரணம் சொல்லி பொறுப்பைத் தட்டிக்கழிக்க நான் தயாராயில்ல. ப்ரவீண் அண்ணா பாவம்லயா? என் மேல வச்ச பாசத்திற்காக” என விசும்ப ஆரம்பித்தாள்.
அவளை மெல்ல தோள்சாய்த்து, “சரியாகிரும் ரதி. சரி பண்ணிரலாம்” என்றான் ஆறுதலாய்.
“சரி பண்ணிரலாம்தான?” என முகம் உயர்த்தி கணவன் கண் பார்த்துக் கேட்க, அவளின் முகத்தை தன் மார்போடு சேர்த்தணைத்து தலைகோதியபடி, “ப்ராமிஸா” என்றான்.
“ஆமா அம்மு. சீக்கிரம் சரியாகிரும்” என்ற ப்ரவீணின் குரலில் தன் சுயம் உணர்ந்து பார்த்தவள், ‘அச்சோ! இவங்களை இத்தனை பேர் முன்னாடியா கட்டியணைச்சோம். அதுக்குள்ளயா தாலிக்கயிறு வேலை செய்யுது?’ என புரியாமல் விழித்தாலும், கணவனின் கரத்தை நாசூக்காக விலக்கியடி, “நான் அப்பாவைப் பார்க்கணும்” என்றாள்.
மருத்துவரிடம் கேட்டு அவளை உள்ளே அனுப்ப, ஒரே நாளில் ஓய்ந்து போயிருந்த மனிதனைப் பார்த்தவள் கண்ணீர் கன்னம் தொட அருகில் அமர்ந்தாள். அவரையே பார்த்தபடி, “அப்பா நான் உங்க ரதி. உங்க பொண்ணு வந்திருக்கேன். பாருங்கப்பா. நான் உங்க பொண்ணுதானப்பா? என்னை வெறுத்து ஒதுக்கிற மாட்டீங்ளே? இப்ப அடுத்தவங்க பார்வையில நான்தான் இல்லீகல் சைல்ட் இல்லையாப்பா?” எனும்போது அவர் உடலில் ஒரு அதிர்வு வந்ததை பாகீரதி அறியவில்லை. அறிந்துகொள்ளும் நிலையிலும் அவளில்லை.
“என்னைவிட்டு போயிராதீங்கப்பா. வந்திருங்கப்பா ப்ளீஸ்! நீங்க ஒரு அற்புதமான பொக்கிஷம்ப்பா. நீங்க எனக்கு காலத்துக்கும் கூடவே வேணும்ப்பா!” மெல்லிய குரலில் அரற்றிக் கொண்டிருந்தவள் எண்ணங்கள் மண்டபத்தில் நடந்த விஷயத்தையே சுற்ற, தாய் சொன்னது மனதில் ஆடியது.
“கணபதி உன் அப்பா பெயர். மேனகா மயினியோட கூடப்பிறந்த தம்பி. இப்ப உன் அப்பாவா இருக்கிறது ராம். முழுப்பெயர் ராமகிருஷ்ணன். உன் அப்பாவோட சித்தப்பா பையன். ரெண்டு பேருக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சப்பதான் எனக்கு எல்லாரும் அறிமுகம். ராமகிருஷ்ணன் என்ற பெயரை ராமுன்னு சொல்லி, குரங்கோட இணைச்சிப் பேச ஆரம்பிச்ச பழக்கம். அத்தனை பேரும் பெயர் சொல்லிக் கூப்பிடுறதுக்கு பயங்கரமா திட்டுவாங்க. இருந்தாலும் கிண்டலா கூப்பிட ஆரம்பிச்சது. அப்படியே நிலைச்சிருச்சி. யார்கிட்டேயும் அதிகமா பேசாட்டியும் ராம்கிட்ட வம்பு பண்ணுவேன். ஏன்னா, எங்க அண்ணனுக்கும், ராம்கும் வித்தியாசம் பார்த்ததில்லை நான். அதே நேரம், கல்யாணம் முடியுறது வரை உன் அப்பாகிட்ட ஒருவார்த்தை கூடப் பேசினதில்லை.”
“ராம் படிப்பு முடிஞ்சதும், அவர் நண்பன் மூலமா கோவைக்கு வேலைக்கு போனவங்களுக்கு, அங்க அக்காவைப் பார்த்ததும் பிடிச்சிருச்சி. நல்ல பாரம்பரியமான குடும்பத்துல பிறந்தவங்க பாரதி அக்கா. அது அவங்க பேச்சிலயும் பழக்க வழக்கத்துலயுமே தெரியும். வீட்டுக்கு ஒரே பொண்ணு அவங்க. வசதின்னு பார்த்தாலும் ரொம்பவே உயரம். மனப்பொருத்தத்துல வசதி எங்க வந்திச்சி. எங்க பக்கத்துல உள்ள பெரியவங்க மறுக்க, அக்கா வீட்டுப் பெரியவங்களுக்கு ராம் குணம் பிடிச்சி, தன்னோட ஒரே பொண்ணை கட்டிக்கொடுக்க சம்மதிச்சாங்க. ஆனா, அக்கா, ராம் பெத்தவங்க சம்மதம் முக்கியம்னு சொல்லவும், உன் அப்பா, ராம், அப்புறம் இன்னும் சிலர் பேசி சம்மதிக்க வச்சி அவங்க கல்யாணம் நடந்தது.”
“நிறைய பேர் பிழைப்புக்காக சென்னை பக்கம் ஒதுங்கின சமயம், உன் அப்பா திருப்பூர் பக்கம் போயி கார்மெண்ட்ஸ் ஆரம்பிச்சி, ராமையும் பார்ட்னரா சேர்த்தார். எங்க அண்ணனுக்கு, ராம் பார்ட்னரா சேர்ந்தது பிடிக்கலை. சின்ன வயசிலிருந்தே நிறைய கௌரவம் பார்ப்பான். எங்க வீட்லயும் விவசாயமும், ஜவுளிக்கடையும்தான் தொழில். உன் அப்பாவும் அதுக்கேத்த மாதிரி திருப்பூர்ல தொழில் தொடங்க, எங்க ராம் மாதிரி சொந்த மச்சினனும் கல்யாணம் பண்ணிக்குவானோன்னு, மயினி மூலமா அவங்க அப்பா, அம்மாவுக்கு தகவல் சொல்லி வரவழைச்சி, என்னை அவங்களுக்கு பேசி முடிக்கத் தயாரானாங்க.”
“உன் அப்பாவை வரவழைச்சி என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டப்ப, என்னோட வாழ்க்கையில் பெரிய நிலைக்கு வந்த பிறகு, நானே வந்து சொல்றேன். அதுவரை உங்க தங்கை என்னை நம்பி காத்திருந்தா இருக்கட்டும். இல்லன்னா வேற இடம் பார்த்து முடிச்சிக்கோங்கன்னு சொல்லிட்டார். ஊருக்குப் போறதுக்கு முன்னாடி என்கிட்ட வந்து, என்னை நம்புறியா? நம்பினா எனக்காக காத்திரு! கண்டிப்பா வருவேன்னு சொல்லி என் பதிலைக் கூட எதிர்பார்க்காம போயிட்டாங்க.”
“அந்த வார்த்தை கொடுத்த நம்பிக்கையிலதான் உன் அப்பாவுக்காக நாலு வருஷம் காத்திருந்தேன். அந்த காத்திருப்புக்கு பெயர்தான் காதல்னா! ஆம். எங்களது காதல் கல்யாணம்தான்” என்று நிமிர்வாக சொல்லி, “எனக்கு கொடுத்த நம்பிக்கையை காப்பாற்றி, அவங்க அவங்களாவே திரும்பி வந்தாங்க. எங்க கல்யாணம் முடிஞ்சதும் ராமை தொழில்ல இருந்து விலக்கச்சொல்லி எங்கண்ணன், தம்பி, ஏன் எங்க அப்பாவுமே குதிச்சாங்க” என்றபோது தகப்பனைப் பார்க்க அவர் தலைதாழ்ந்தது.