• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
16


மருதமலை முருகன் கோவிலில் முக்கியமான பொறுப்பிலிருக்கும் ஒருவரைப் பிடித்து, மறுநாள் திருமணத்திற்கு தயார் செய்தார்கள். சந்திரா, மேனகாவிடம் சொல்லி தன் அண்ணணிடமும் கேட்கச் சொல்ல, முதலில் கணவனை நினைத்துத் தயங்கியவர், வருவதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தார்.

மகளிடம் எப்படி சொல்வது, ‘மறுநாள் திருமணம் என்றால் எந்த பெண்ணினாலுமே ஒத்துக்கொள்ள முடியாது. அதிலும் தன் பெண்... என்ன செய்யலாம்?’ என யோசித்தவருக்கு தன் அண்ணன் குடும்பத்தை இன்னும் மகளுக்கு அறிமுகப்படுத்தவில்லை என்று தோன்ற, அப்படியே விஷயத்தை சொல்லிவிடலாம் என்று மகளை அழைத்து வந்து, “அம்மு இதுவரை நீ கேட்டு, நான் சொல்லாமல் விட்ட என்னோட உறவுகள். எங்க அண்ணி மேனகா” என்றார்.

“கலா! பாப்பா அழகாயிருக்கா. நீ சொன்னமாதிரி என் தம்பி மாதிரிதான் இருக்கா” என்றார் மேனகா.

‘நான் அப்பா மாதிரியா? கிடையாதே? ப்ரவீண் அண்ணாதான அப்பா மாதிரியிருக்கிறதா எல்லாரும் சொல்வாங்க. இவங்களுக்கு கண்ணு தெரியாதா என்ன?’ மனதினுள் கேள்வி கேட்க,

“பாப்பா இது உன் அம்மாவைப் பெத்த தாத்தா” என்றார் சந்திராவிற்கு தகப்பனை அறிமுகப்படுத்தும் தர்மசங்கடத்தை தவிர்க்கும் விதமாய்.

பேந்தப் பேந்த விழித்தவளிடம், “என்ன பாகீ பார்க்கிற? உன்னோட, நீ ஆசைப்பட்ட ரெத்த உறவுகள்தான். நான் உன்னோட தாய்மாமா பொண்ணு” என்று சுகந்தி சொல்ல,

விவரம் தெரிந்த நாள்தொட்டு இரத்த உறவுகளென்று யாரையும் சந்தித்ததில்லை. உறவுகளிடம் தன் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துவதென்றும் தெரியவில்லை பாகீரதிக்கு. ‘உரிமையாய் அழைப்பதா? எந்த உரிமையில் அழைப்பது?’ ஒன்றும் புரியவில்லை. தன்னிடம் அத்தையென்று வந்து கொஞ்சிய பெண்மணியை உரிமையாய் அழைக்க மனம் வரவில்லை.

புரியாதொரு மொழி பேசி நின்ற மருமகளைப் பார்த்த மேனகா, “என்னலே கொழப்பமா இருக்கா? இத்தனை வருஷமா எங்கன இருந்தாவன்னு தான நெனைக்கா. நம்ம வீட்டுக்கு வந்ததும் ஒவ்வொரு கதையா சொல்றேன்” என்றார் அன்பாக.

புரியாவிட்டாலும் ‘ம்’ என சம்மதித்தாள் அவரின் தென்காசித் தமிழில் மயங்கி.

“அப்புறம் அம்மு. இவங்க பையனுக்கும், உனக்கும் நாளைக்கு காலையில கல்யாணம்.” மகளின் அதிர்ச்சியைப் பார்த்தபடி, “கல்யாண ஏற்பாடெல்லாம் நடந்திட்டிருக்கு” என்றார்.

“அத்தை என்ன சொல்றீங்க? ஏன் இந்த அவசரக் கல்யாணம்?” என்றபடி வந்தாள் தாரிணி.

“நடக்கப்போறதை சொல்றேன்மா. அவசியம் வந்ததால, இந்த கல்யாணம் அவசரமாகிருச்சி.”

“ப்ச்... தர்ணி சைலன்ட்டாயிரு. நடக்காத ஒண்ணுக்கு எதுக்கு இந்த வாக்குவாதம்?” முதலில் தாய் சொன்னதும் திகைத்து விழித்துதான் நின்றிருந்தாள். பின் சுதாரித்து, “எந்த அவசியமா இருந்தாலும் நான் மேரேஜ் பண்ணிக்கிறதா இல்லம்மா. நான் மேல படிக்கப்போறேன். அதுவும் சீக்கிரமே” என்று முடித்தாள்.

“நீ வெளிநாட்டுக்குப் போவியோ, இல்ல வெளிமாநிலத்துக்குப் போவியோ, எனக்குத் தெரியாது. கல்யாணத்தை முடிச்சிட்டுப் போ. உன்னை யாரும் தடுக்கமாட்டாங்க” என்றார் முடிவாக.

“அம்மாஆஆ...” என அலறி ஆத்திரத்தில் விழிக்க,

“சும்மா கத்ததாதடி. இதான் என் முடிவு. சீனுதான் உனக்கு நான் பார்த்த மாப்பிள்ளை” என்றார் அழுத்தமாக.

“இல்ல என்னால முடியாது.”

“ஏம்மா எம்பையன ஒனக்குப் பிடிக்கலையா? அவன் ரொம்ப நல்ல புள்ளமா. ஒன்ன நல்லா பாத்துக்குவான்” என்றார் மேனகா.

“இங்க பாருங்...” அதற்குள் என்ன சொல்லியிருப்பாளோ,

“நீங்க விடுங்க மயினி. அவளுக்கு சீனு பத்தி நல்லாவே தெரியும்” என்று அவரை சமாதானம் செய்து மகளிடம் திரும்பி, “உனக்கான வாழ்க்கை என் கையிலன்னு சொன்னியே. உனக்கான வாழ்க்கைத் துணை சீனுதான்னு முடிவு பண்ணியாச்சி. இல்ல முடியாது நான் வெளிநாடுதான் போவேன்னா, ஓகே உன் விருப்பம். போகும்போது அம்மான்னு ஒருத்தி உனக்கு இல்லன்றதையும் நினைவில் வச்சிட்டுப் போ. ஏன்னா? நீ திரும்பி வரும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன்” என்றார் தீர்க்கமான பாவனையுடன்.

“அம்மாஆஆ” என பதறி அவர் வாய்பொத்தி, “ஏன்மா இப்படியெல்லாம் பேசுறீங்க? இப்ப என்ன, நான் கல்யாணம் பண்ணிக்கனும் அவ்வளவுதான. பண்ணிக்கிறேன். ஆனா, மாப்பிள்ளையா இவங்க பையன் வேண்டாம். வேற பையன் பாருங்க” என்றாள்.

“அம்மு, பாப்பா, பாக்கி” என சுத்தியுள்ள அனைவரும் கத்த,

“கலா அவளுக்குப் பிடிக்கலன்னா விட்டுட்டு வேற பையன் பாருமா” என்றார் மேனகா.

“இல்ல மயினி. இவளுக்கு சீனுவைப் பிடிச்சிருக்கு” எனும்போது பாகீரதி தலைகுனிய, மகளைப் பார்த்தவாறே, “ஒத்துக்கதான் மனசில்லாம ஏதோ தடுக்குது” என்றபடி அவளருகில் வந்து, “உன் பலவீனத்தை அவன் தெரிஞ்சிக்கிட்டதுதான், உனக்குப் பிரச்சனையில்லையா?” என்று மகளின் மனதைப் படித்து சரியாகச் சொன்னதும், மகளின் உடல் அதிர்வே அதை உண்மையென்று உரைத்தது.

“அம்மா உங்களுக்கெப்படி?”

“தெரியும். அவன் எந்த காலத்திலும் அதைப்பற்றிப் பேசமாட்டான். ஏன்னா? அவன் என்னோட மருமகன். என்னோட குணம். தவறியும் தவறு செய்யமாட்டான். ம்... இப்ப டைம் இல்ல, என்ன முடிவெடுத்திருக்கன்னு சொல்லு?” என்று அவசரப்படுத்தினார்.

“அதான் முடிவு பண்ணிட்டீங்களே. அப்புறம் என்கிட்ட கேட்டு என்ன ப்ரயோஜனம்.” என ஆழ மூச்செடுத்து, “ஓகே நான் சம்மதிக்கிறேன். பட், ஒன் கண்டிஷன், மேரேஜ் அப்புறம் நான் எது பண்ணினாலும் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என் இஷ்டத்துக்கு விடனும்” என்றாள்.

சம்மதமாய் தலையசைத்த சந்திராவுக்குத் தெரியும். தன் பெண் தன்னுடைய தன்மையை மீறி எதுவும் செய்யமாட்டாள். அவளே நினைத்தாலும் சீனு விடமாட்டான் என்று.

“அப்ப சரி பண்ணிக்கிறேன். ஒரு சின்ன ரெக்வஸ்ட்?”

‘சொல்லு’ என்று தாய் சைகை செய்ய,

“உங்க அந்த ஸ்பெஷல் மருமகன்கிட்ட கொஞ்சம் தனியா பேசமுடியுமா?” என்றாள் தன்மையாக.

“சொன்னாலும் சொல்லட்டியும் அவன் ஸ்பெஷல்தான். தாராளமா பேசிக்கோ. நீயாவது என் பேச்சை மீற சான்ஸ் இருக்கு. அவன் மீறமாட்டான். அவன் மூலமா கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைச்சா, வேஸ்ட் ஆஃப் யுவர் டைம்” என்றார் ஸ்திரமாக.

‘என்னைவிட அவன்தான் பெருசா போயிட்டான்ல.’ மனம் கனன்றது வெளியிட முடியாமல்.

“தாரிணி நீ சீனு எங்கேயிருக்கான் பாரு?”

“சரிங்கத்தை” என்றவள் சில நிமிடங்களில் திரும்பி வந்து, “அண்ணா எங்கேயும் இல்லத்தை” என்றாள்.

“ஓ... நான்தான் நாளைக்கு வரை மண்டபம் தேவைப்படுறதால, வேற எதாவது பங்க்ஷன் இல்லாமல் இருந்தா, நாமளே எடுத்துக்கலாம்னுதான் கேட்டுட்டு வரச்சொன்னேன். சரி நான் அப்புறமா அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

சுதர்ஷன் வீட்டினரிடமும், சிந்து வீட்டினரிடமும் மட்டும் உண்மையைச் சொல்ல, திருமணத்தின் மற்ற சடங்குகளை நிறுத்திவிட்டு, ஸ்ரீனிவாசன்-பாகீரதி திருமணத்திற்கு தயாரானார்கள்.

அன்றைய இரவு ஏற்பாட்டை சுதர்ஷன், சிந்து நிறுத்த, ஏனோ அவர்களின் ஒத்த மனதை நினைத்து அனைவருக்கும் சந்தோஷமே!

அன்று இரவு பத்துமணியளவில் அனைத்து வேலையையும் முடித்து வந்தவ ஸ்ரீனிவாசனை தாரிணி வழிமறித்து, “என்கிட்ட உங்க முறைப்பொண்ணைப் பற்றித்தான் சொல்லல. உங்க கல்யாணத்தைக் கூட சொல்லாம விட்டுட்டீங்களேண்ணா?” என கோவமாக முகத்தை வைத்தபடி கேட்டாள்.

“ஓ... சாரிமா. உன் கல்யாணத்துல அவ பட்டுன்னு கேட்ட மாதிரி, உன் நாத்தனாரை எனக்கு தர்றியான்னு கேட்க முடியல. அதான் சைலண்டாகிட்டேன்” என்றான் புன்னகையுடன்.

“ஓகே. உங்காளு மாடியில பால்கனியில் நின்னு, பால் நிலாவுல டூயட் ஆடுறதுக்குப் பதில், அதையே முழுங்கிட்டிருக்கா. போய்ப் பாருங்க.” என்றாள் கிண்டலாக.

“தேங்க்யூமா” என்று மாடியேறினான்.

அங்கோ, அவளை அவளின் மனசாட்சி குத்திக் குதறி குத்தாட்டம் போட்டது. ‘ஹேய்! டன்டனக்கா னக்கா னக்கா னக்கா டன்டனக்கா!’

“என்ன மனசாட்சி ஆட்டம் ஓவரா இருக்கு? என்ன நீ சொன்ன மாதிரி எங்கம்மா அவனையே செலக்ட் பண்ணிட்டாங்கன்னு ஆடுறியா? அடக்கிவாசி ரொம்ப வாசிச்சன்னு வையி, அடக்கிருவேன்” என்று பல்லைக்கடித்தாள்.

‘என்ன சொல்லு பாக்ஸ், ஐம் ஜாலி டான்ஸ்’ என்று ஆட்டத்தைத் தொடர்ந்தது.

“உன்னையெல்லாம் என்ன செய்யுறது. இரு முடிஞ்சா இன்னைக்குள்ள விலக்கி விட்டுருறேன். விதிவசம் எனக்கு புருஷனாகிட்டா அவன் செத்தான். உன்கிட்ட அனுப்பமாட்டேன் பி கேர்ஃபுல்” என்றாள் மனசாட்சியிடம்.

“யாரை எச்சரிக்கிற ரதி?” என்று வந்தான் ஸ்ரீனிவாசன்.

அந்த குரலுக்குச் சொந்தக்காரன் யாரென்று அறிந்தவள், “ம்.. என்னைத்தான். யாரையும் மனசுக்குள்ள நுழையவிடக் கூடாதுன்ற என்னோட நினைப்பை, நானே மறந்திடக் கூடாதில்லையா?” கொஞ்சம் திமிராகப் பதில் கொடுக்க,

“ஓ... அப்ப ரொம்ப தெளிவா இருக்கன்னு சொல்லு?”

“ஆமா. எப்படியும் நீங்க கல்யாணத்தை நிறுத்தப்போறதில்ல. அதான் என் மனசாட்சிகிட்ட வார்ன் பண்ணி வைக்கிறேன்.”

“ம்... பண்ணு பண்ணு. எல்லாம் பயம் படுத்தும்பாடு” என்றான் உச்சுக்கொட்டி.

“ஓய் எனக்கென்ன பயம்?” என்றாள் குரலை உயர்த்தி.

“எங்க உன்னையும் அறியாம என்னைக் காதலிச்சிருவியோன்னு பயம். அது எனக்குத் தெரிஞ்சிட்டா, என்ன பண்றதுன்னு அடுத்த பயம். அதுக்குதான இந்த வார்னிங்” என்றான் கிண்டலாக.

“அப்படில்லாம் எதுவும் கிடையாது. நீங்களா கற்பனை பண்ணி சீன் போடாதீங்க” என்றாள் கடுப்புடன்.

“ஹா...ஹா சீனா, போட்டுட்டா போச்சி” என்று அவளருகில் நெருங்க,

“ஏய்! என்ன பண்றீங்க? முதல்ல வெளிய போங்க” என பதற்றத்தில் சத்தமிட்டாள்.

“ப்ச்... ரதிமா சீன் போட விடு” என்று அவளை நெருங்கி, அவளின் இதயத்துடிப்பை எகிற வைத்து, அவளின் விழிகளையே பார்த்திருக்க, பாகீரதியின் இதயத்துடிப்பு விகிதம் சரமாரியாக உயர்ந்து, விழிகள் தெறித்து விடுவதுபோல் அவனையே பார்த்திருந்தாள். அவளை நெருங்கி நெற்றியில் முட்டிவிட்டு, “இந்த சீன் இன்னைக்குப் போதும். மீதி சீனை மேரேஜ்கு அப்புறம் போடலாம். இப்ப பை!” என்று கிளம்பினான்.

“ஷப்பா! ஒரு நிமிஷம் என்னை அரள வச்சிட்டானே!” சற்று ஆசுவாச மூச்சுவிட, வெளியே சென்றவன் திரும்பி வந்து அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு ஓடியேவிட்டான்.

இப்ப என்ன நடந்தது என்பதுபோல் அதிர்ந்து விழித்தவள், “இவனை...! சே... இவங்களை..!” மெல்ல நெற்றியை தொட்டு பார்க்க, ஏதோ ஒன்று அவளைவிட்டு அவனிடம் சென்றது. அது என்னவென்று சொல்லவும் வேண்டுமா? அவள் மனம்தான். அவளின் சம்மதம் இல்லாமலேயே ஸ்ரீனிவாசனைச் சரணடைய, மனமோ அவளறியாமல் அவனை கமுக்கமாக வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தது.

மறுநாள் காலை மருதமலை முருகன் சன்னதியில், பெரியவர்களின் ஆசியில் ‘ஸ்ரீனிவாசன்-பாகீரதி’யின் கழுத்தில் தாலியைக் கட்டி தன்னுடையவளாக்கிக் கொண்டான்.

ஏனோ பாகீரதிக்கு அந்த நிமிடங்கள் தன் தந்தையையே மனம் தேடியது. எங்கே அவரைக் காணவில்லையென்று மனம் பரிதவித்தது என்னவோ உண்மைதான். திருமணம் முடிந்து மண்டபத்திற்கு வந்தும் அவளின் தேடல் தொடர்ந்தது. ‘என்மேல அவ்வளவு கோவமாப்பா? அப்படிப் பார்த்தா நான்தானப்பா கோவப்படணும்.’ திட்டினாலும் மனம் அவரைத் தேடித் தவித்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
ஆரத்தி எடுத்து முடித்து உள்ளே நுழைகையில், “வாங்கம்ணி போகலாம்!” என்ற திடீர் குரலில் பாகீரதி நிமிர்ந்து பார்க்க, எதிரில் யாசிக்கும் பாவனையில் நின்றிருந்தார் பாரதி.

முந்தின தினம் காலை அனைவரும் திருமண பரபரப்பில் இருக்க, அவர்களின் கண்ணில்படாது தப்பி மருத்துவமனை போனவள், பெயர் சொல்லி பாரதியின் அறைக்குச் சென்றாள்.

நவீன் அவளைத் தெரிந்தே தெரியாதது போல், “யார் நீங்க? இங்க எதுக்கு வந்தீங்க?” என மறித்து உள்ளே அனுப்பவில்லை.

“நான் யார், என்னன்னு உன்கிட்ட விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் அவங்களைப் பார்க்கணும்.”

“அதெல்லாம் அவங்களைப் பார்க்க முடியாது. போங்க” என்றான் பட்டென்று.

“நீ என்னை விரட்டினாலும் போக முடியாது. எங்கப்பாவைப் பத்தி அவங்ககிட்ட பேசணும். என்னை உள்ளே விடு?” என்றாள் சத்தமாக.

“என்ன உங்கப்பா பத்தியா?” சற்றே ஏளனக்குரலில் அவன் பேச,

அதில் கோவத்தில் கொதித்தவள் அவனுக்கு பதிலடி தரப்போக அதற்குள், “நவீ யாரது?” என்று உள்ளிருந்து வந்த தாயின் குரலில், “யாரும் இல்லம்மா” என கதவிற்கு வெளியிலிருந்து தாயின்புறம் திரும்பிச் சொன்னான்.

அந்த சின்ன இடைவெளியில் ஊசியாய் உள்ளே நுழைந்தவள் சட்டென்று நின்றாள். “ஹேய்! நில்லுங்க” என்றவன் குரல் காதில் விழவில்லை. ட்ரிப்ஸ் போடப்பட்டு படுத்தபடி ஆளுமையான தோற்றத்தில் இருந்தவரை, ஏனோ அவரைத் தவறாகப் பேசத் தூண்டவில்லை மனம்.

“அம்மு!” என்றவரின் குரலில் ஆச்சர்யமிருக்க, “வா வா எப்படியிருக்க? உன்னைத்தான் உள்ள விடாம தடுத்தானா?” என்று பையனை முறைத்தார்.

சட்டென்று அவரருகில் அமர்ந்தவள், “உடம்புக்கென்ன? இப்ப பரவாயில்லையா? ஊசி ரொம்ப வலிக்கும்தான?” என்று பரிவாகக் கேட்டாள்.

அவளின் குணத்தை தெரிந்த பாரதி சிரிக்க, அதைக் கண்டு வியந்த நவீனுக்கு பேச்சே இல்லை.

‘எப்படி என்ர பொண்ணு?’ என பார்வையாலேயே மகனிடம் கேட்டார்.

கண்களில் துளிர்த்த நீரைத் தட்டிவிட்டு, ‘நீங்க இதுவரை சொன்னாற்போல் சூப்பர்!’ என்றான் விரல் வைத்து தெளிந்த மனதுடன்.

‘நீ வெளியில் போ’ என கண்ணால் அவனை வெளியேற்றி, “ப்ரஷர்னால வந்த மயக்கம்தானுங் அம்மு. நீங்க சொல்லுங், என்ன விஷயமா வந்தீங்க?”

அப்பொழுதுதான் தான் எதற்கு வந்தோம் என்ற பிரக்ஞையே வர தன்னையே நொந்து, “எனக்கு எங்கப்பா வேணும்” என்றாள் பட்டென்று. நிறைய பேச எண்ணியவள், பாரதியை எப்படியெல்லாம் திட்டி விரட்டலாம் என ஒத்திகை பார்த்து வந்தவள், அந்தோ பரிதாபம் எதுவுமே நினைவில் இல்லை.

“ஹ்ம்... அப்புறம்.” என பாரதி சிரிப்பு மாறாமல் கேட்க,

“என்ன அப்புறம்? அதான் சொல்றேன்ல எங்கப்பா எனக்கு வேணும். ஐ லவ் ஹிம். எனக்கு எங்கப்பாதான் எல்லாமே! ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்களை அப்பாவோட பார்த்தேன். அதிலிருந்து ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன். அப்பாவை வேண்டாம்னு ஒதுக்கவும் முடியல. வேணும்னு கூட இருக்கவும் முடியலை. அதான் உங்ககிட்டயே கேட்கலாம்னு வந்துட்டேன்” என படபடவென்று சொல்லி முடித்தாள்.

இருவரையும் சேர்த்துப் பார்த்தேன் எனும்போது, சின்னதாக ஒரு அதிர்ச்சி பாரதியினுள். அதை மறைத்து, “உங்கப்பா உங்களுக்கு மட்டுமே இருந்தா அவரை சந்தோஷமா பார்த்துப்பீங்களாம்ணி?” என்றார் அவளின் மனநிலையை தெரிந்துகொள்ள.

“எங்கப்பாவை என்னை விட யார் நல்லா பார்த்துப்பாங்க.” என்றவள் குரலில் அத்தனை வேகம்.

சிரித்தபடி, “அப்ப சரிங்க. நீங்களே வச்சிக்கோங்க. நான் இந்த ஊரைவிட்டுப் போயிருறேன்” என்றார்.

“அச்சோ! அதுக்காக ஊரைவிட்டு ஏன் போறீங்க? அப்படில்லாம் போக வேண்டாம் எங்கப்பாவை சேர்த்துக்காதீங்க. அப்புறம் எப்படி வருவாங்க?” என்றாள் மேதாவியாய்.

“உலகம் புரியாத பொண்ணா இருக்கீங் அம்மு. உங்களை இன்னும் பக்குவப்படுத்திக்கோங். இந்த உலகம் ரொம்ப பொல்லாததுங் அம்மு. நல்லவனை வாழவே விடாது. நீங்க ரொம்ப நல்ல பொண்ணாயிருக்கீங்” என்று மகளைப் பற்றி பெருமைப்பட்டாலும், உலக நடப்பையும் சொன்னார்.

“உங்களைப் பார்த்தாலும் நல்லவங்களாதான் தெரியுறீங்க. அப்புறம் எப்படி எங்கப்...” ‘எங்கப்பா கூட எப்படி இரண்டாந்தாரமா வாழ்றீங்க?’ என கேட்க வந்தவள் அதை முடிக்க முடியாமல் நிறுத்தினாள்.

அவரின் முகத்திலுள்ள புன்னகை இன்னும் அதிகரிக்க, பாரதியையே பார்த்திருந்த பாகீரதி, “நீங்க சிரிச்சா அழகாயிருக்கீங்க. எப்பவும் இப்படியே இருங்க” என்றாள் மனதார.

‘அதுக்கு உங்கப்பா என் கூட இருக்கணுமே!’ மனதில் நினைத்ததை வெளியிடாமல் சிரித்த முகத்துடனேயே, “நீங்க சொல்லிட்டீங்கள்லங் அம்மணி. இனிமேல் இப்படித்தானுங் இருப்பேன்.”

பாகீரதி கவனிக்காத ஒன்று வந்ததிலிருந்து பாரதி, ‘அம்மு’ என்று உரிமையாய் அழைப்பதை கவனத்திலேயே எடுக்கவில்லை.

“சரி நான் கிளம்பறேன்” என எழுந்தவள் கைபிடித்து நிறுத்தி, “உங்களோட கோபத்தை உங்கப்பாகிட்ட காட்டாதீங்கம்மு. பாவம் தாங்கிக்க மாட்டாங்.”

“அவங்க என் அப்பா!” என்றாள் நிமிர்வாகவும் சற்று திமிராகவும்.

“அதானுங்க உங்ககிட்ட சொல்றேன்” என்றார் சிரித்த முகமாக.

“இப்பதான் எனக்கு மட்டும்னு சொன்னீங்க?” என குறுக்கு விசாரணை ஆரம்பித்தாள்.

“நெசந்தானுங்கம்ணி. உங்களுக்குக் கொடுத்ததை சந்தோஷமா வச்சிப்பீங்கன்னு தெரியும். ஆனாலும், உங்க கோவத்தையோ, ஒதுக்கத்தையோ தாங்கிக்கிற தைரியம் அவங்களுக்கு இல்லீங்ளே! அதான் சொன்னேனுங். ஜாக்கிரதையா பார்த்துக்கோங்கம்ணி!”

‘அவ்வளவு லவ்வா அவர்மேல’ என நினைத்தாலும் தன் தாயை எண்ணி, “நான் முடிஞ்சளவு அப்பாவை நல்லவிதமாவே பார்த்துக்குறேன். நீங்க உடம்பைப் பார்த்துக்கோங்க” என்று திரும்பிவிட்டாள்.

பாகீரதி செல்வதையே சிரிப்பு மாறாமல் பார்த்திருந்த பாரதி மனம் சொன்னது, ‘இன்னும் நீங்க மாறவேயில்லை அம்மு.’

“வாங்க அம்மு போகலாம்” என்ற பாரதியை பார்த்தவள், “உங்களுக்கு உடம்புக்கு எப்படியிருக்கு? இப்ப பரவாயில்லையா? டிஸ்சார்ஜ் ஆகிட்டீங்களா?” என அக்கறையாக கேட்க, விவரம் தெரிந்த அனைவரும் வாயடைத்துப் போனார்கள் அவளின் பேச்சில்.

“எனக்கென்னங் அம்மு. நான் நல்லாயிருக்கேனுங். ஆனா, உங்கப்பா நல்லாயில்லீங்ளே. நீங்க வந்தா சரியாகிருமுங்கம்ணி.”

பாரதி பேசிய எதையும் காதில் வாங்காமல், அவரின் பதற்றத்தை உணராமல், “நீங்க அப்பாகிட்ட பேசமாட்டேன் சொன்னீங்க. இப்ப ஏன் கூப்பிடுறீங்க? ஓ... என்கிட்ட சொன்னமாதிரி நீங்கதான் முக்கியம்னு வந்துட்டாங்களா. அப்ப நான்தான் லூசுமாதிரி என் கல்யாணத்துக்கு வரலன்னு எதிர்பார்த்திட்டிருக்கேனா?” என்றவளுக்குள் எதையோ முழுதாக இழந்த தவிப்பு. கண்கள் கண்ணீரைப் பொழிவேனோ என்றிருக்க கோவத்தில், “இப்ப என்ன திடீர்னு பொண்ணு நினைப்பு?” என்றவளுக்கு அவரின் உடல்நிலை பற்றி சிறிதளவும் சந்தேகம் வரவில்லை.

“அவங்க உயிர் நீங்கதானுங் அம்மு.”

‘அவரின் உயிர் தான்தான்’ என்றதும் வந்த கோவத்தை அடக்க முடியாமல், “எப்ப இன்னொரு குடும்பத்தோட சேர்த்துப் பார்த்தேனோ அப்பவே அவர் செத்துட்டார்” என சொல்லி முடிக்க ‘ஆ’ என்றலறினாள்.

“என்ன பேசுறோம்னு யோசிச்சித்தான் பேசுறியா?” என்ற பொழுதுதான் தாய் அடித்திருப்பது உரைக்க, “அம்மாஆஆ...” என அதிர்ந்து பின் கோவத்தில், “உங்க...” என்றவள் குரல் வெளிவரும் முன்னே, “ஆமாடி. நிஜமாகவே உன் அப்பா செத்துட்டார்தான்” என்று ஆத்திரத்தில் சந்திரகலா கத்தினார்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top