• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
15


“உண்மையைச் சொல்லுங்கப்பா? யார் அந்த லேடி?”

நெற்றியில் முடிச்சுடன், “வாட் டூ யூ மீன்?” என்றார்.

“ஐ மீன், அந்த லேடி அங்கதான இருக்காங்க” என்று மருத்துவமனையைக் காண்பித்தாள்.

“அம்மு உனக்கெப்படி தெரியும்?” என்றவருக்கு பிரச்சனையின் விபரீதம் புரிய, நிறுவனப் பிரச்சனையிலும், பாரதியின் பிரச்சனையிலும் உழன்றிருந்த மனம் சோர்ந்து போக, கண்ணைக் கட்டியது அவருக்கு. “பாரதியை உனக்கெப்படி தெரியும்?” என்றார் வராத குரலில்.

“ம்... தெரியும் ரெண்டு வருஷம் முன்னாடியே. நீங்க, அவங்க, ஒரு பையன், மூணுபேரும் சென்னையில ஒரு மால்ல சுத்துனீங்கள்ல. அப்ப தெரியும்” என்றாள் கோவம் குறையாது.

தன்னை இன்னொரு குடும்பத்துடன் பார்த்தேன் என்றதும், “ரதிமாஆஆ...” என்றார் பயந்த குரலில்.

“ஆமா ரதிதான். அதை உங்ககிட்ட நேர்ல கேட்க தைரியமில்லாமல்தான், யாரையாவது கல்யாணம் பண்ணினா வீட்டைவிட்டுப் போயிரலாம்னு போயிட்டேன். கடைசி நேரத்துல அது தப்புன்னு தோணினதால திரும்ப வந்துட்டேன்.”

மகள் இப்படியொரு குண்டைத் தூக்கிப்போடுவாள் என்று அறிந்திராத அந்த தகப்பனிற்கு அதிர்ச்சி. தன்னைக் காரணமாக வைத்து இரண்டு வருடம் முன்பே திருமணம் செய்யப் போயிருக்கிறாள் என நினைக்கும்போதே, அன்று நவீனின் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கேப்டன் என்ற முறையில், சென்னையில் நடந்த தமிழ்நாடு அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அவன் வந்தது மட்டுமில்லாமல், கூடவே தன் தாயையும் அழைத்து வந்து, ‘உங்களைப் பார்க்கணும் போலயிருக்குப்பா’ என்றதும் மறுக்க மனமில்லாமல் சென்றதும் நினைவு வந்தது. தன் வாழ்நாளிலே அன்றுதான் பாரதி சென்னை வந்தது. அன்றே மகளின் கண்ணில் பட்டிருக்கிறோம். அங்கு செல்வதற்கு முன் பெரிய மகனின் எச்சரிக்கை நினைவு வந்தது.

கைமீறிப்போன விஷயத்தை என்னவென்று சொல்வது. அதற்காக தன்னைவிட்டு விலகியிருக்க திருமணம்தான் சரியான வழியென்று அவள் தேர்ந்தெடுத்ததை அவரால் தாங்க முடியவில்லை. கடைசி நேர மனமாற்றம் இல்லாமல் போயிருந்தால், அந்த நினைவே அவருக்கு மரண வலியைக் கொத்தது. அதை மறைத்தபடி, “இ..இது சந்திராவுக்குத் தெரியுமா?” என கேட்டார்.

“ம்... எல்லாருக்கும் தெரியும். ஆனா, என்ன காரணம்னுதான் தெரியாது” என்று விட்டேற்றியாக சொன்னாள்.

‘என்கிட்ட ஏன் சொல்லலை?’ என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

“அம்மாவை விட அவங்க எந்த வகையிலப்பா உசத்தி?”

‘எல்லா வகையிலும் உசத்திமா.’ மனம் சொன்னது ஊமையாய்.

“நான் உங்களை இந்தளவுக்கு நினைக்கலப்பா. இந்த உலகத்துல எல்லாரையும் விடவும் பெஸ்ட் நீங்கதான்னு பெருமைப்பட்டேன்ப்பா. ஆனா, முடியலைப்பா. என்னை நீங்க ஏமாத்திட்டீங்க. ஐ ஹேட் யூப்பா! ஐ ஹேட் யூ!” என கதறி அழுதவள் நிமிர்ந்து கண்ணீர் துடைத்து, “இனி நீங்க அங்க போகமாட்டீங்க சொல்லிட்டேன்பா. அவங்களும் சரி சொல்லிட்டாங்க” என்றாள்.

“அம்மு பாரதியை நேர்ல பார்த்தியா?” மகள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்க கொஞ்சம் சத்தமாகவே கேட்டார்.

அவரை சற்று அலட்சியமாக பார்த்துவிட்டு, “ஆமா பார்த்தேன்தான். முகூர்த்தத்துக்கு கொஞ்சநேரம் முன்னாடி. எங்கப்பா எனக்கு வேணும் கேட்டேன். உங்கப்பா எப்பவும் உனக்கு மட்டும்தான்னு சொல்லிட்டாங்க. பழகினா நல்லவங்களா தெரியுறாங்க. அப்புறம் எப்படி...?” இரண்டாம் தாரமாக வந்தார் என்பதை முடிக்காமல் முடித்தாள்.

ஒரு கசந்த முறுவல் ஒன்று அவருள் தோன்றியது. ‘ஏன் சொல்லமாட்டா. எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தே பழக்கப்பட்டவளாச்சே! புருஷன், பிள்ளைன்னு!’ நெஞ்சினோரம் எழுந்த வலி மூளையைச் சென்றடைய கண்ணைக்கட்டி வந்ததைப் பிடித்து நிறுத்தியவர், “அம்மு பத்து நிமிஷம் நிதானமா பேசலாமா? இதைக் கூட உன் மேரேஜ் அப்புறம் சொல்றதாதான் இருந்தோம். என்ன நடந்ததுன்னு நீ கட்டாயம் தெரிஞ்சிக்கணும்மா.”

“ஏன்ப்பா? ஏற்கனவே கதை ரெடி பண்ணிட்டீங்களா என்ன?” சற்று ஏளனத்தோடு கேட்டாள்.

“ரதிமா அவ்வளவுதான் என்மேலுள்ள நம்பிக்கையா?”

“உங்க மேலிருந்த நம்பிக்கைதான் மால்ல தூள் தூளா உடைஞ்சிருச்சேப்பா. இருந்தாலும் சரியாகிரும்னு இந்த இரண்டு வருஷமா நினைச்சேன். நேத்து நைட் அவசர அவசரமா அவங்களைப் பார்க்க நீங்க போகும் போதுதான்ப்பா தெரிஞ்சது, என்னோட நம்பிக்கை லெவல் என்னன்னு. நீங்களா இப்படின்னு சுத்தமா உடைஞ்சிட்டேன்ப்பா!” கண்ணில் வழிந்த நீரை துடைக்கக் கூட மனமின்றி, “இது அம்மாவுக்கும், அண்ணனுக்கும் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு தான், அந்த கஷ்டத்தை அவங்களுக்கு கொடுக்கலை. மொத்தமா நானே தாங்கிக்கிட்டேன். இப்பக்கூட மனசு ரணமா வலிச்சதாலதான் உங்ககிட்ட கேட்கிறேன். ஏன்ப்பா? ஏன்? ஐயோ! என்னால தாங்க முடியலப்பா. அப்படியே செத்துரமாட்டோமான்னு இருக்குப்பா” என்றாள் தலையைப் பிடித்தபடி.

“அம்மூஊஊ...” என அவளின் வாய்பொத்தி, “என்னை வார்த்தையாலயே கொல்றடா. இந்த மாதிரி பேசாதம்மா. நீ...நீ என் தேவதைடா! எனக்கே எனக்காக கடவுள் கொடுத்த குட்டி தேவதை! ஒருமுறை உன்னை மீட்டெடுக்கவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம். இன்னொரு முறை இந்த வார்த்தையை சொல்லாதம்மா. உன்னைவிட எனக்கு இருக்கிற வலியோட அளவு அதிகம்னு உனக்குத் தெரியாது அம்மு.”

“தேவதையைத்தான் எல்லாரும் கஷ்டப்படுத்துவாங்களாப்பா?” என்றாள் மற்றதை கவனிக்காது.

“நான் உன்னைக் கஷ்டப்படுத்துவேன்னு நினைக்கிறியா? இல்லமா. என்னால எந்த நிலையிலும் உன்னைக் கஷ்டப்படுத்த முடியாது.”

“ப்ச்... முன்னாடி இதிலிருந்து தப்பிக்க கல்யாணம்தான் பெஸ்ட்னு நினைச்சேன். இப்ப உங்க இரண்டு குடும்பத்தை பார்த்த பிறகு கல்யாணமே பண்ணிக்ககூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்ப்பா” என்றாள் விரக்தியாய்.

‘என்னம்மா இப்படியெல்லாம் பேசுற? உன்னோட கல்யாணத்துக்காகத்தானே இவ்வளவும்’ என்பதை வெளியில் சொல்லாமல், “அம்மு! எனக்கு நீ இப்படி இருக்கிறது பேசுறது பிடிக்கல. நான் உனக்காக எதையும் செய்வேன்மா” என்றார் குரலில் வேதனையைக் காட்டி.

“அப்ப அந்த இல்லீகல் காண்டாக்டை மொத்தமா விட்டுருங்கப்பா” என்றாள் பட்டென்று.

‘இல்லீகலா? ஐயோ!’ என்றிருந்தது அவருக்கு. ’நீ யாருக்காக இத்தனை கஷ்டப்பட்டியோ, அவளே உன்னை என்ன வார்த்தை சொல்லிட்டா பாருமா. இதுவே வேற யாராவதா இருந்தா நடக்கிறதே வேற. ஆனா, என் உயிரான பொண்ணா போயிட்டாளே.’ மகளின் வார்த்தையில் முழுவதும் உடைந்தவர் கண்கள் உடைப்பெடுக்க,

அவரின் பதிலில்லா தன்மையை தவறாகக் கணித்தவள், “உங்களால விடமுடியாதுன்னு தெரியுதுப்பா. இனிமேல் உங்களுக்கு மகள்னு ஒருத்தி இல்லவே இல்லைன்னு நினைச்சிக்கோங்கப்பா. நான் வர்றேன். இல்ல போறேன்ப்பா. இனி நீங்க எனக்கு வேண்டவே வேண்டாம்ப்பா!”

கண்கலங்க சென்றவளையே கண்ணீருடன் பார்த்திருந்தவர், “இவ்வளவு வெறுப்புலயும் வார்த்தைக்கு வார்த்தை அப்பா சொல்றியே ரதிமா. எப்படி உன்னை விட்டுட்டுப் போவேன். அப்படிப் போகணும்னா என்னோட உயிர்தான் போகும். நீங்க ரெண்டு பேருமே என்னோட தேவதைகள்மா. ஒருத்தி மனைவியா வந்தவள்னா! நீ மகளாய் வந்தவள்! தேவை எந்தன் தேவதைகள்!” என்றார் உயிர் உருகும் குரலில்.

இவர்கள் பேசிக்கொண்டிருந்தது கார் நிறுத்துமிடத்தில் இருந்த ராமின் காரினருகில். ஏற்கனவே ஸ்ரீனிவாசனுக்கு அனைத்தும் தெரியுமாதலால், முந்தின தினம் இருந்த கலகலப்பு இல்லாமலிருக்க, மதன் குழுவுடன் சேர்ந்து அந்த சூழ்நிலையை மாற்ற சின்னச்சின்ன கேலிகள் என ஆரம்பித்து அந்த இடத்தையே கலகலப்பாக்கினான்.

அவ்வப்பொழுது தன் முறைப் பெண்ணையும், முறையில்லாமல் திருட்டுத்தனமாக ரசித்திருக்க, ஒருவித இறுக்கத்துடனே நின்றிருந்தவளின் முகத்திலுள்ள உணர்ச்சிகளை அறியமுடியவில்லை அவனால். திருமணம் முடிந்ததும் ராம் வெளியே செல்ல, அவர் பின்னே பாகீரதியும் செல்வதைப் பார்த்தவன், பின்னாலேயே வந்து கொஞ்சம் தள்ளியே நின்றான். இருவரும் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போலிருந்தது. அவளின் கோபம், தவிப்பு, கெஞ்சல், கண்ணீர் என பார்த்தாலும், அவளால் அதிகம் காயப்படுவது தன் மாமாதான் என்பது தெரிந்தது.

பேசி முடித்து உள்ளே செல்லும்பொழுது, எதிரில் வந்த சந்திராவிற்கு பெண்ணின் அழுகை முகம் தெரிய ஏனென்று விசாரித்தவரிடம், “நான் வெளிநாடு போய் படிக்கலாம்னு இருக்கேன்ம்மா. இங்க இருந்தா அப்பா முகத்துல முழிக்க வேண்டியிருக்கும். அதை நான் விரும்பல எப்பவும்” என்றாள் விட்டேற்றியாக.

“அம்மு என்ன சொல்ற? அப்பா முகத்துல முழிக்கமாட்டியா? என்ன உளறல் இது?” என்றவாரு அவரைப் பார்க்க, கண்களில் தவிப்புடன் மொத்த வேதனையையும் முகத்தில் காட்டி நின்றிருந்தவரைப் பார்த்து மகளிடம் திரும்பி, “என்னடி சொன்ன? பாவம் அவர் முகம் இப்படியிருக்கு? தப்பு பாப்பா” என்று கண்டித்தார்.

“உண்மையைச் சொன்னா முகம் அப்படித்தான் போகும். பாவமா? யாரு அவரா? அட போங்கம்மா” என்று நிற்காமல் உள்ளே சென்றாள்.

மகள் சென்றதும், “ராம் என்னாச்சி? அவ வெளிநாடு போறேன்னு ஏதேதோ உளறிட்டுப் போறா?” என்றபடி சந்திரா வர, அதேநேரம் ஸ்ரீனிவாசனும் அவர்களருகில் வர,

“அவளுக்கு எது தெரிய வேண்டாம்னு இத்தனைக் காலம் மறைச்சோமோ, அது தெரிஞ்சிருச்சி சந்திரா” என்றதும் மற்றவர்கள் முகம் அதிர்ந்தாலும், அவளின் பேச்சினால் வந்த சந்தேகமும் நம்ப வைத்தது. “தெரிஞ்ச நேரமும் தெரிஞ்ச விதமும், அதை அவள் புரிஞ்ச விதமும்தான் சரி கிடையாது” என்றவர் குரல் அடைக்க முகம் வியர்க்க ஆரம்பித்ததும், காரில் அமரவைத்து ஏசி போட்டுவிட்டான் அவரின் மருமகன்.

“எப்படி ராம்? நாம ஜாக்கிரதையாகத்தான இருந்தோம்.”

“அவ பாரதியையும், என்னையும் சேர்த்து ரெண்டு வருஷம் முன்னாடி சென்னை வந்தப்பவே பார்த்திருக்கா சந்திரா. அதோட விளைவு கல்யாணம் பண்ணிக்கப் போனது. இதை நீ என்கிட்ட சொல்லலையே சந்திரா? தெரிஞ்சிருந்தா எதனாலன்னு கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாமே. இப்ப எல்லாமே கைமீறிப் போயிருச்சி. காலையில பாரதியை பார்த்துட்டு வந்திருக்கா. என்ன பேசினாள்னு தெரியல. அவளும் இதுவரை போன் பண்ணிச் சொல்லல. ரொம்ப பேசிட்டா சந்திரா. என்னால தாங்கிக்க முடியல” என்றவரின் முகத்திலுள்ள வேதனை அளவிட முடியாததாக இருந்தது.

“என்னை மன்னிச்சிக்கோங்க ராம் எல்லாத்துக்கும். எனக்கு அவ கல்யாணம் பண்ணிக்க போனது தெரியும். ஆனா, காரணம் நீங்க சொல்லித்தான் தெரியுது. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப் ராம். அவ எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பா. நான் பேசுறேன்” என்றார் கவலையாக.

“மாமா கவலைப்படாதீங்க. அவ புரிஞ்சிக்கிற கேரக்டர்தான்” என்றான் தன் பங்கிற்கு.

“இல்ல கோவத்தில் இருக்கும்போது நாம எது பேசினாலும் அது தப்பா, தப்பான அர்த்தத்துலதான் எடுத்துக்கத் தோணும். இந்த உண்மையை ஏத்துக்கமாட்டா. உங்களைப் பார்த்து கல்யாணமே பண்ணிக்கிறதாயில்ல சொல்றா. எனக்கு பயமாயிருக்கு சந்திரா? எதுக்காக இத்தனை வருஷம் காத்திருந்தோமோ, அதையே வேண்டாம்னு சொல்றா. எங்க இப்படியே இருந்திருவாளோ பயமாயிருக்கு” என்றவருக்கு மனம் படபடத்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“பார்த்துக்கலாம் மாமா. நான் சரிபண்றேன். நீங்க எமோஷனலாகாதீங்க. உடம்புக்கு ஆகாது” என்றான் அக்கறையாய்.

கண்கலங்கியபடி, “உடம்புக்கு என்ன ஆனா என்ன? என் அம்மு என்னை வேண்டாம்னு சொல்லிட்டா சீனு.” வார்த்தைகளை வெளிவராமல் தடுத்துத் தொண்டையை சரிசெய்து, “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா சீனு?” என கேட்டார்.

“என்ன மாமா ஹெல்ப்னு சொல்லிட்டு. என்ன செய்யணும் சொல்லுங்க?”

“என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா? அதுவும் சீக்கிரமே. எனக்கு நெஞ்செல்லாம் ஒருமாதிரி வலிக்குது. அவளை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவளோட பிறப்பு ரகசியம் ப்யூச்சரை பாதிக்காது. நாங்களும் அவளைப்பற்றி கவலைப்படாம இருப்போம். எனக்கு எதாவதுன்னாலும் நிம்மதியா போவேன்” என்றவர் வாயை மூடி, “நான் பண்ணிக்கிறேன் மாமா. இப்ப உங்க ஹெல்த் சரியில்ல. வாங்க ஹாஸ்பிடல் போகலாம்.” என்றழைத்தான்.

“இல்ல எனக்கு எதாவது ஆகுறதுக்குள்ள என் பொண்ணோட கல்யாணம் நடக்கணும்.” நெஞ்சுவலி என்றதும், ‘தனக்கு எதுவோ ஆகப்போகிறது, ஒருவேளை ஹார்ட் அட்டாக் வரப்போகிறதோ!’ என பலவற்றையும் குழப்பி மகளின் வாழ்வு நன்றாக அமைய வேண்டுமென்று அந்த நிலையிலும் போராடினார்.

“ராம் உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. கல்யாணம்தான நாளைக்கு காலையில நடக்கும். நான் நடத்தி வைக்கிறேன். ப்ளீஸ் கிளம்புங்க” என்றார் சந்திரா.

“நிஜமாவா?”

கண்மூடி நிஜம் என்பதாய் தலையசைத்து, “சீனு அவ ஏற்கனவே கல்யாணம் முடிக்கப் போனான்றது நாங்க பேசுனதுல புரிஞ்சிருக்கும். முழுசா தெரியாது. அவ காதலிச்சில்லா...”

அவரின் பேச்சை கைதூக்கி நிறுத்தியவன், “எனக்குத் தெரியும் அத்தை. நான் அந்த ஸ்பாட்லதான் இருந்தேன். எனக்கும் காரணம் இதுன்னு தெரியாது. ஆனா, அவங்க திருப்பதி போனதிலிருந்து எல்லாமே தெரியும். நான் அவளை தப்பா எப்பவும் சந்தேகப்படவோ, பேசவோ மாட்டேன். என்னை நீங்க நம்பலாம்” என்றான்.

“எனக்காக சொல்லலையே? என் பொண்ணு கல்யாணம் பண்ணிப்பாளா?” என்றார் எதிர்பார்ப்புடன்.

“உங்க பொண்ணு வேண்டாம்னு சொன்னா, கடத்திட்டுப் போயாவது கல்யாணம் பண்ணிப்பேன் மாமா” என்றான் அவரை இதமாக்க.

“அவ என் தேவதை சீனு. கண்கலங்காம பார்த்துக்கோ.”

‘எனக்கும்தான் மாமா!’ மனதினுள் சொல்லி அவரைப் பார்க்க, நினைவு மங்கி மூளை தன் வேலையை நிறுத்த, மயக்கம் அவரைக் கீழே தள்ளியது.

“ரா...ராம் எழுந்திரிங்க. ஐயோ நான் தப்பு பண்ணிட்டேன் ராம். அப்பவே விலகி வந்திருக்கணும். அதை விட்டுட்டு என்னோட சுயநலத்துக்காக உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டேனே. ராம் கண் முழிச்சிப்பாருங்க. ப்ளீஸ்” என்ற சந்திராவின் அழுகை அதிகரித்தது.

ஸ்ரீனிவாசனுக்கு பாகீரதியின் மேல் கோவமாக வந்தது. அதே நேரம் ராஜேஷும், நிதிஷும் வர, அவர்களின் உதவியுடன் அவரை நேராக படுக்கவைத்து காரை எடுக்க, அதற்குள் அங்கு வந்த மதன், உஸ்மானிடம் அருகிலிருக்கும் மருத்துவமனை வரச்சொல்லி, முதலில் சென்று அவசரப்பிரிவில் சேர்த்து சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்ரீனிவாசன், ப்ரவீணுக்கு அழைத்து விஷயம் சொல்ல, அதேநேரம் பாரதியும் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்குக் கிளம்ப ஆரம்பிக்க, ப்ரவீண் நவீனுக்கு போன் செய்து சொன்னதும், அலறியடித்துக் கொண்டு ஐசியூ சென்றார்கள்.

“என்னாச்சி சந்திரா? ஹாஸ்பிடல் சேர்க்கிற அளவுக்கு அவங்களுக்கு என்னாச்சி? சொல்லு சந்திரா? ஏன் அமைதியாயிருக்க பேசு?” அழுகையில் அவரை உலுக்கினார் பாரதி.

“அக்கா! ராம் நல்லவங்க. அவங்களுக்கு எதுவும் ஆகாது. டாக்டர் பார்த்திட்டிருக்காங்க அக்கா. நீங்க அழாதீங்க? நான் உங்க லைஃப்ல குறுக்கிடாம இருந்திருந்தா, இந்த மாதிரி எந்த பிரச்சனையுமே வந்திருக்காது. என்னை மன்னிச்சிருங்கக்கா” என காலில் விழ,

சந்திராவின் கதறலில் அவரைத் தூக்கி தன்னுடன் சேர்த்தணைத்து, தன் கவலையை ஒதுக்கி, “ச்சீ.. பைத்தியம் அவங்களுக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்குத் தெரியும். விசயம் கேள்விப்பட்டும் நான் உயிரோட இருக்கேன்ல, அப்ப அவங்களுக்கு ஒண்ணுமில்லைன்னு அர்த்தம். ஸ்ட்ராங் மேன் அவங்க. சரி என்ன நடந்ததுன்னு சொல்லு?” என்றார்.

பாரதியின் பேச்சில் வியக்கத்தான் தோன்றியது அங்கிருந்தவர்களுக்கு. எத்தனை அன்பிருந்தால் அவர் இல்லையென்றால் அதற்கு முன் தான் இல்லையென்பதை சொல்வார். ஏனோ மறைக்க மனமில்லாமல் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் சந்திரா சொன்னார்.

“அம்முவை பொறுமையா இருக்கச் சொன்னேனே” என்ற வார்த்தையை சொன்ன பாரதி அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

நவீன்தான் மனதினுள் பாகீரதியை பாய்லருக்குள் போட்டு கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். தான் திட்டிய வார்த்தைகளை வெளியிட்டால், தன் தாயிடம் அடி நிச்சயம் என்று தெரிந்ததால் அமைதியாக நின்றிருந்தான்.

அவனையே பார்த்திருந்த ஸ்ரீனிவாசனுக்கு அவன் மனம் புரிந்ததால், ‘என் முறைப்பொண்ணைத் திட்ட இவனுக்கு ரைட்ஸ் கிடையாது’ என்றாலும், ‘உன்னைவிட அவனுக்குத்தான் அதிக ரைட்ஸ்’ என்று மனம் இடித்தது. மெல்ல அவனருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்தி, “நீ கோவப்படுறது நியாயம்தான். அது உன்னோட அக்காவா இருக்கிறதுவரை. இப்ப என் ஒய்ஃபாக போகிறவ. சோ, கோவத்தைக் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ மாப்ள” என்றான்.

“வாட்!” என அதிர்ந்தவனிடம்,

“ட்ரூ. இவ்வளவு நேரம் அத்தை சொன்னதை முழுசா கவனிக்கலையா?” என்று நகர்ந்தான்.

“காலையில கல்யாணத்துக்கு ரெடி பண்ணு சந்திரா.”

“அக்கா இப்ப எப்படி? ராம்கு சரியாகி வரட்டும். இப்ப வேண்டாம். அம்மு கல்யாணத்தைப் பற்றி ராம் நிறைய கனவு கண்டாங்க. அவங்க இல்லாம எப்படிக்கா?”

“அவங்க உன்கிட்ட சொன்னதைத்தான் நான் சொல்றேன். இந்த கல்யாணம் நடந்தே தீரணும்! அதுவும் நாளைக்கே! இவங்க ஹாஸ்பிடல்ல இருக்கிறது இங்க இருக்கிறவங்களைத் தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது. என்ன சொல்லி சம்மதிக்க வைப்பியோ தெரியாது. இவங்க குணமான பிறகு ரிசப்ஷன் வச்சிக்கலாம்” என்று உறுதியாகச் சொன்னார் பாரதி.

“அக்கா இருந்தாலும்...” என சந்திரா தயங்க,

“சொன்னதைச் செய் போ” என்ற கட்டளையான வார்த்தைக்கு கட்டுப்பட்டு, “சரிங்கக்கா” என்றவர், “சீனு நீ என்ன சொல்ற? உனக்கு எதுவும் பிரச்சனையில்லையே?”

“அதெல்லாம் அண்ணாவுக்கு இஷ்டம்தான் ஆன்ட்டி. நீங்களே வழிய வந்து பொண்ணு தர்றீங்க. கசக்குமா என்ன?” என்று இடைபுகுந்தான் உஸ்மான்.

“அவனுங்க உளர்றானுங்க அத்தை. நான் கல்யாணத்துக்கு ரெடி பண்றேன். நீங்க உங்க பொண்ணை சம்மதிக்க வைங்க” என்றவனின் முகத்தில் நொடியில் வந்து சென்ற வெட்கத்தை சந்திரா புரியாமல் பார்த்து, புரிந்ததும் சந்தோஷத்தில் பாரதியைப் பார்க்க, அவரின் புன்னகையிலேயே புரிந்தது சீனுவைத் தெரிந்துகொண்டார் என்பது.

பாரதியிடம் வந்தவன், “எனக்கு எப்படி சொல்றது தெரியலை. சிம்ப்ளி க்ரேட் அத்தை நீங்க. ஹேட்ஸ் ஆஃப்” என்று சல்யூட் வைத்தான்.

“அச்சோ! ஏனுங் இப்படிப் பண்றீங்க. நீங்க என்ர மருமகனுங். உங்களுக்கு நாங்க மரியாதை செலுத்துறதை விட்டுப்போட்டு, போங்க போய் கல்யாணத்துக்கு தயாராகுங். உண்மையைச் சொல்லணும்னா, உங்க மாமா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்களைப் பாத்தப்பவே, எங்க பொண்ணுக்கு நீங்தானு முடிவு பண்ணிட்டாங். படிப்பு முடியட்டும்னுதான் காத்திருந்தோமுங். என்ன சூழ்நிலைதானுங் மாறிப்போச்சி” என்றவர் கண்களில் நீர்படலமிட அதைத் துடைத்து, “எக்காரணம் கொண்டும், கல்யாணத்துக்கு முன்னாடி அவளுக்கு எந்த உண்மையும் தெரியாம கவனமா பார்த்துக்கோங் தம்பி” என்றார்.

“சரிங்க அத்தை” என்றான் மரியாதையாய்.

“என்ன சொல்லி கூப்பிட்டீங்?” என்றார் எதையோ தெரிந்து, அதை திரும்பவும் அவன் வாயால் கேட்கும் ஆவலில்.

“அத்தை சொன்னேன். அத்தைதான நீங்க?” என தீர்க்கமாய் கேட்டவனைப் பார்த்து, “ரொம்ப நல்லாயிருப்பீங் தம்பி” என மனதார வாழ்த்தினார்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
Rathi is so emotional and has anxiety . Waiting for kalyana virudhu
கல்யாண விருந்து நமக்குத் தருவாங்களா? நானும் காத்திருக்கேன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top