• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Nov 23, 2024
Messages
3
பெண் மனசு

நல்லாயிருக்கியா..? கோவிலில் தீபம் ஏற்றிக்கொண்டிருந்த செல்வியின் பின்புறமாக நின்றபடி கேட்டான் செழியன்.

தனக்குப் பின்புறமாக கேட்ட குரலை உடனடியாக அடையாளம் கண்டு கொண்ட செல்வியின் கைகள் தானாக நடுங்க ஆரம்பித்தது முகத்தில் அரும்பரும்பாக வேர்த்துக்கொட்ட உணர்ச்சியின் பிடியில் உதடு துடிக்க கண்களில் நீர் நிறைந்தது திரும்பி கேள்வி கேட்டவனின் சட்டையை கொத்தாக பற்றி இன்னும் உனக்கு என்ன வேண்டும் என கத்தத் தோன்றியது. இருக்கும் சூழல் அறிந்து அதை உடனடியாக மாற்றிக்கொண்டாள். கோபத்தில் அவனை ஏதாவது பேசி காயப்படுத்தி விடுவோமோ என்ற பயத்தில் வேகமாக தீபம் போடும் இடத்தை விட்டு நகர்ந்து கோயிலை சுற்ற ஆரம்பித்தாள்.

பின்னோடு நடந்த செழியனும் சாமி கும்பிடுவது போல அவளை தொடர்ந்த படியே என் முகத்தை கூட திரும்பிப் பார்க்க மாட்டியா செல்வி அந்த அளவிற்கு நீ என்னை வெறுத்துட்டியா என்று கேட்க. திரும்பி அவனின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தவளுக்கு வார்த்தை துளியும் வரவில்லை அதற்கு பதிலாக கண்களில் இருந்து நீர் தாரைதாரையாக கொட்டியது. எப்படி மறப்பாள் செழிகளையும் அவன் அவளுக்கு செய்த துரோகத்தையும். பெரியதாக அப்படி என்ன பாவம் செய்தாளாம்.. அவளுக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை..?

உறவினன் என்ற முறையில் செழியனை காதலித்தாள்..அவளது காதலுக்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என நம்பி அவளது மனதையும் அவனிடத்தில் பறிகொடுத்தாள் அதைத்தவிர வேறு எந்தவொரு தவறையும் செய்யவில்லை. அதற்கு காலம் கொடுத்த கொடிய தண்டனை.. குடும்பத்தார் செய்து வைத்த நிரஞ்சனோடது மனம் ஒன்றி வாழ்வும் முடியாமல் பிரிந்து வரவும் முடியாமல் கடந்த பத்து ஆண்டுகளாக தவிக்கிறாள்.

தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே இரு குழந்தைகள் வேறு என்ன சொல்லியும் அவளுக்கு அவளே ஆறுதல் கூற முடியா நிலை.. சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டாள். திருமணம் முடிந்து ஊரை விட்டு சென்றவள் பத்து ஆண்டுகள் கழித்து இப்பொழுது தான் வந்திருக்கிறாள்.

வருடம் தவறாமல் அவளுடைய அண்ணன் பரசுராம் திருவிழாவிற்கு நேரில் வந்து அழைப்பதுண்டு செழியனை காண பயந்தவள் ஊர் வர மறுத்து விடுவாள். ஊரைப் பொறுத்த வரைக்கும் செழியனுக்காக செல்வியை பேசினார்கள் ஆனால் செல்விக்கு செழியனை பிடிக்கவில்லை அதனால் அத் திருமணம் நின்று விட்டது இதுதான் தெரியும். ஆனால் இரு குடும்பம் மட்டுமே அறிந்த உண்மையும் ஒன்று உள்ளது.

இருவருமே ஆங்காங்கே திருட்டுத்தனமாக சந்தித்துக்கொள்வது காதில் விழவுமே செல்வியின் அண்ணன் பொங்கி விட்டான். தாய் இல்லாத பிள்ளைன்னு உன்னை செல்லம் கொடுத்து வளர்த்தது இப்படி நம்ம குடும்பத்தோட பேயரை கெடுக்கறதுக்கு தானா..?. நல்லா கேட்டுக்கோ செழியன் எந்த வகையிலும் உனக்கு சரியானவன் கிடையாது என்று தங்கையை கண்டித்தவன் அத்தோடு தனது சித்தப்பா வீட்டிற்கு அவளை அனுப்பியும் வைத்து விட்டான்.

அழுது கரைந்தவள் சித்தியிடம்.. எனக்கு ஒரு அம்மா இருந்திருந்தா என் மனசு புரிஞ்சுக்காம இப்படி ஊர் கடத்தி இருப்பாங்களா..? நாளைக்கு உங்க பொண்ணு இப்படி யாரையாவது ஆசைப்படறேன்னு சொன்னா இப்படித்தான் வீட்டை விட்டு எங்காவது கொண்டு போய் விடுவீங்களா..? அவர் நம்ம சொந்தம் ஒரே ஊரு என்கிற தைரியத்தில் தான் காதலித்தேன் நீங்கெல்லாம் ஒத்துப்பீங்கன்னு நம்பினேன்..ஆனா எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்க. என்ன மிரட்டி கட்டாயப்படுத்தி வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு என்ன சாதிக்க போறீங்க என பலவாறாக பேசி சித்தியின் மனதை மாற்றி சித்தப்பாவிடம் பேச வைத்து ஒரு வழியாக அண்ணனிடமும் சம்மதம் பெற்றுவிட்டாள்.

செல்வியின் தந்தை தாயார் இறந்ததிலிருந்து மதுவிற்கு அடிமையாகி விட்டதால் வீட்டில் நடக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் அவரிடம் எதுவும் கேட்டுக் கொள்வதில்லை அதனால் முடிவு பரசுராமன் கைக்கே வந்தது. தங்கையை பற்றி யோசித்துப் பார்த்தவன் அவள் ஆசைப்பட்டவனுக்கே கட்டி வைத்து விடலாம் என மனசு மாறி செழியனிடம் முறையாக பெண் பார்க்க வரும்படி தூது அனுப்பி விட்டான்.

செழியனுக்கு செல்வியின் அண்ணனின் மனம் மாற்றம் சந்தோஷத்தை கொடுத்தாலும் விஷயத்தை தாயிடம் கூற மிகவும் பயந்தான். பரசுராமிற்கு விஷயம் தெரிவதற்கு முன்பாகவே செழியனின் தாயாருக்கு இவர்களின் காதல் விஷயம் தெரிந்து விட்டது தெரிந்த நாள் முதலே வீட்டில் பிரச்சனை தான் எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு ஏனோ ஆரம்பத்தில் இருந்தே பரசுராமின் குடும்பத்தை சுத்தமாக பிடிக்கவில்லை செழியனின் அத்தை மகள் ஓருத்தியை ஏற்கனவே அவனுக்காக பேசி வைத்திருக்கிறார் அதுவும் ஒரு காரணம். இப்படி இருக்கையில் தாயிடம் எப்படி விஷயத்தை கூறுவது என திணறியவன் ஓருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு செல்வியை தான் திருமணம் செய்வேன் என கூறிவிட்டான்.

அவன் எதிர்பார்த்தது போலவே அவனது தாயார் தற்கொலை செய்து கொள்வேன் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். பதிலுக்கு இவனும் செல்வியை மணம் முடிக்கவில்லை என்றால் நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று பதிலுக்கு மிரட்ட சற்று பயந்தவர் திருமணத்திற்கு தலையசைக்கும் படி ஆயிற்று. ஆனாலும் மனதிற்குள் இத்திருமணத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதிற்குள் குடி கொண்டிருந்தது. அதனால் முதலில் ஜாதகம் பார்க்க வேண்டும் என ஆரம்பித்தார்.

ஜாதகம் மிக அழகாக பொருந்திப் போக அவரால் அதைக் காரணம் காட்டி திருமணத்தை தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பெண் பார்க்கும் நிகழ்வு..அதில் எதையாவது காரணம் காட்டி நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்.அதிலும் படு தோல்வி. செல்வியை பலமுறை பார்த்திருக்கிறார் ஆனாலும் மணப்பெண் அலங்காரத்தில் பார்த்த பொழுது குறை கூற எதுவுமே இல்லை..கூடவே பரசுராமின் உபசரிப்பு வந்தவர்களை திருப்தி படுத்த செழியனின் தாயாரால் எதுவும் செய்ய முடியாத நிலை. அதற்கு அடுத்த அஸ்திவாரமாக வரதட்சனை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார்.

செழியனின் தாயார் கேட்ட வரதட்சணையை கண்டிப்பாக பரசுராமால் கொடுக்க முடியாது அப்படியே தங்கைக்காக அவன் கொடுக்க முன் வந்தாலும் கூட அவனது பரம்பரைச் சொத்துக்கள் அனைத்தையுமே விட்டுக் கொடுக்கும் படி இருக்கும் ஆனாலும் தங்கைக்காக அதையும் செய்ய முன்வந்தான். இப்படியாக திருமணப் பேச்சி பத்திரிகை, மண்டபம் என அடுத்த நகர்வுக்கு சென்றது. இந்த சமயத்தில் தான் செழியனுக்கு சிறிய அளவிலான விபத்து நேரிட்டது.
 
Last edited by a moderator:
Administrator
Joined
Sep 3, 2024
Messages
20
இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது குறுக்கே நாய் ஒன்று வர அதன் மீது மோதாமல் இருக்க வண்டியை சைடாக திருப்ப அது தோல்வியில் முடிந்ததால் கீழே விழுந்திருந்தான். சிறிய அளவிலான காயம் தான் ஆனால் அதை அவனது தாயார் பெறிது படுத்தினார். ராசி இல்லாத பெண்ணை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க பரசுராமன் திட்டம் தீட்டுவதாக நேரடியாகவே அவனிடம் கூறி சண்டையிட்டார் .

தங்கை மீது அபாண்டமாக பழி சுமத்துவதை தாங்கி கொள்ளாத பரசுராமன் திருப்பி அவனும் சில வார்த்தைகளை விட அது பெரிய பிரச்சனை ஆனது. முடிவில் திருமண பேச்சு அத்தோடு நின்றது. கூடவே செல்வி ராசி இல்லாத பெண் போல எல்லோருடைய மனதிலும் ஒரு மாயையை ஏற்படுத்த முயன்றார்.

இதில் கடும் கோபம் கொண்ட பரசுராமன் இனி நீங்களே என் தங்கையை மருமகளாக ஏற்றுக் கொள்வதற்கு முன் வந்தாலும் கூட நான் உங்கள் வீட்டிற்கு அனுப்ப முடியாது என உறுதியாக மறுத்துவிட்டான். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது செல்வி தான். இந்த சிறு இடைவெளியை பயன்படுத்துக்கொண்ட செழியனின் தாயார் உடனடியாகவே மகனுக்கு ஏற்கனவே பார்த்து வைத்திருந்த பெண்ணோடு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை மடமடவென செய்தார். இது செல்வியின் காதுகளுக்கு செல்ல மிகவும் துடித்து விட்டாள. அத்தோடு இல்லாமல் செழியனை தனிமையில் சந்தித்து எப்படியாவது தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மன்றாடி பார்த்தான்.ஆனால் செழியன் பிடிவாதமாக மறுத்து விட்டான். அவனது தாயார் இதுவரை தற்கொலை செய்து கொள்வேன் என்று மட்டுமே மிரட்டிக் கொண்டிருந்தார் .

திருமணம் தடைப்பட்டவுடன் செழியன் தாயிடம் சென்று சண்டையிட அவரும் கோபத்தில் நிஜமாகவே வயலுக்கு தெளிக்க வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடிக்க போய்விட்டார். அவரை தடுப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தாய்க்கு ஏற்கனவே பரசுராமின் குடும்பத்தை பிடிக்காது இப்பொழுது செல்வி ராசி இல்லாத பெண் என்று உறுதியாக நம்புவதால் மேற்கொண்டு அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை.. கூடவே அவனது இரு சகோதரிகளும் சேர்ந்து கொண்டனர்

திருமணம் பேசியதாலேயே தம்பிக்கு விபத்து நேர்ந்திருக்கிறது..தாய் தற்கொலை வரை சென்று விட்டார். மீறி அவளை தம்பிக்கு திருமணம் செய்து வைத்தால் இன்னும் என்னென்ன ஆகுமோ என மேலும் பயந்தனர். கூடவே செல்வியை திருமணம் செய்வதாக இருந்தால் தாங்கள் திருமணத்திற்கும் வரப்போவதில்லை அதன் பிறகு உன்னுடன் உறவு வைத்துக் கொள்ளப் போவதும் கிடையாது என்று உறுதிப்படக் கூறிவிட்டு சென்று விட்டனர்

செழியனுக்கு அவனது குடும்பம் மிக முக்கியம் செல்விக்காக அவனது தாயாரையும் சகோதரிகளையும் இழக்க விரும்பவில்லை. குடும்பமா இல்லை செல்வியா என்று வரும்பொழுது அவன் செல்வியை இழக்கத் துணிந்தான் அதனால் தான் செல்வி அவ்வளவு கெஞ்சியும் கூட அவனால் அவளுக்கு சாதகமான பதிலை கொடுக்க முடியவில்லை. செல்வியிடம் தன்னுடைய நிலைமையை கூறி சமாதானப்படுத்த முயன்றான்.

ஆனால் செல்வி அதை ஏற்றுக் கொள்ளவில்லை அதற்கு பதிலாக திருமணம் என்று நடந்தால் அது உன்னோடு மட்டும் தான் அப்படி இல்லை என்றால் யாரையும் திருமணம் செய்யப் போவதில்லை என்று உறுதிப்பட கூறிவிட்டுச் சென்றாள். அவ்வாறே அண்ணன் பார்க்கும் மாப்பிள்ளைகளையும் தட்டிக் கழித்தாள். செழியனும் அதே போலத்தான் அவனது அத்தை மகளை கட்டிக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்ததால் தாயாரால் எதுவும் செய்ய முடியவில்லை.

நான் செல்வியை திருமணம் செய்தால் தானே நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்கள் நான் அவளை திருமணம் செய்யவில்லை ஆனால் வேறொரு பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தால் நான் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்வேன் என்று தாயாரை மிரட்டி வைத்திருந்ததால் திருமணம் பற்றி பேச பயந்தார். செழியன் மிரட்டி வைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டான். தோட்டத்து வீட்டிலேயே தனியாக சமைத்து தனிமையில் வாழ ஆரம்பித்தான்.

சகோதரிகள் தந்தை என கெஞ்சி வீட்டுக்கு அழைத்து வந்தாலும் தாயின் கையால் சாப்பிட மறுத்தான். கடைசியாக செழியனின் தாயாரே மனம் வந்து திருமணத்திற்கு தலையசைக்கும் படி செய்து விட்டான். அவர் பரசுராமை சந்தித்து நிலைமையை கூறி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கெஞ்சினார். இங்கே செல்வியும் அதே பிடிவாதத்தோடு இருக்க வேறு வழியில்லாமல் பரசுவும் ஒத்துக் கொண்டான். ஆனால் ஏற்கனவே பேசியது போல வரதட்சணை தரவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார் செழியனின் தாயார். பேசியது தானே..நான் மறுக்காமல் செய்கிறேன் என பரசுவும் வாக்கு கொடுத்தான்.

திருமண நாள் நெருங்க நெருங்க பரசுவிற்கு பணம் கொடுத்து உதவுவதாக சொன்ன உறவினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருவராக காணாமல் போக ஆரம்பித்தார்கள் .ஒத்துக் கொண்டது போல வரதட்சனை கொடுக்க பணம் பற்றாக்குறையாக பரசுவின் பூர்வீக சொத்துக்களை விற்பதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தான். இந்த விஷயம் செல்விக்கு தெரியவும் மிகவும் அதிர்ச்சி அடைந்தாள். தன் அண்ணன் தனக்காக எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் அவனுடைய எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும். ஏற்கனவே தந்தை பொறுப்பில்லாதவர் அண்ணனுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை .

ஒன்றுமே இல்லாவிட்டால் எந்த பெண் அவரை கட்டிக்கொள்வாள் என வருத்தப்பட்டவள் அண்ணனிடமே நேரடியாக அதுபற்றி பேசினாள். நீ சின்ன பொண்ணு செல்வி இதெல்லாம் உனக்கு புரியாது பொண்ணுக்கு தாய்வீட்டில் சீர் செய்து அனுப்பறது காலம் காலமா நடக்கறது தான். அதுவுமில்லாமல் நான் யாருக்கு செய்யறேன் உனக்கு தானே இன்றைக்கு இல்லை என்றாலும் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இந்த சொத்துக்கள் எல்லாமே இரண்டா பிரியத்தான் போகுது இதில் உனக்கும் ஒரு பங்கு இருக்கத் தானே செய்யுது.

உன் பங்கோட சேர்ந்து இப்போ என்னோட பங்கையும் சேர்த்து கொடுக்கிறேன் அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்ல. நீ அங்க போய் சந்தோஷமா இருந்தா அதுவே இந்த அண்ணனுக்கு போதும் நீ இதுல எல்லாம் தலையிடாதே என தங்கையின் வாயை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தார். ஏற்றுக்கொள்ள முடியாத செல்வி செழியனிடம் சென்று முறையிட்டாள்.

நீங்களாவது என் அண்ணன் கிட்ட சொல்லுங்க சொத்துக்கள் எதையும் விற்க வேண்டாம்னு. என்கிட்ட இருக்கிற நகைகளே போதும் அதுவும் இல்லாம என் கல்யாணத்துக்குன்னு கொஞ்சம் பணத்தையும் அண்ணா சேர்த்து வச்சிருக்காரு அதுக்குள்ளேயே நம்ம திருமணம் முடியட்டும் ப்ளீஸ் உங்க அம்மா கிட்ட எனக்காக பேசுங்க என கெஞ்சினாள்.

செழியனும் தாய் திருமணத்திற்கு சம்மதித்ததே பெரிய விஷயம் இதில் ஒன்றுமில்லாத வரதட்சணையை பற்றி பேசி அதை தடை செய்ய வேண்டாம் எதுவா இருந்தாலும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறினார். அதை ஏற்க செல்வவியின் மனம் ஒப்பதில்லை. கண்டிப்பாக இவளுக்கு சீதனமாக கொடுக்கும் நகை நட்டுக்களையோ இல்லை பொருட்களையோ அண்ணன் திருப்பி வாங்கிக் கொள்ளப் போவதில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் செழியன் எப்படி பின்னால் பார்த்துக் கொள்வான் என அவனிடம் மீண்டும் வாதாடினாள். ஆனால் செழியன் வரதட்சனை பற்றி தாயிடம் சென்று பேச மறுத்துவிட்டான்.

நான் தான் பாத்துக்கறேன்னு சொல்லறேன்ல நீ இதையெல்லாம் உன் தலைக்குள்ள வச்சிக்காம கல்யாண பொண்ணா லட்சணமா இரு என அறிவுறுத்தி அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். கூடவே பரசுராமிற்கு ஏதாவது ஒரு வகையில் பண உதவி செய்ய முடியுமா எனவும் முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் இதை அறியாத செல்வி செழியனின் மீது சிறு கோபத்தோடு நீ தான் இருந்தாள்.

பரசுவின் அவசர தேவைக்கு யாருமே அவன் கேட்ட பணத்தை கொடுக்க முன் வரவில்லை அடிமாட்டு விலைக்கு தான் அவனுடைய நிலங்களை பேரம் பேசினர். அப்படியே நிலங்களைக் கொடுத்தாலும் கூட அவனுடைய தங்கையின் திருமணத்திற்கு அது போதாது. கடைசியாக திருமணத்திற்கான நாளும் நெருங்கி நெருங்கி விட்டது. ஆனால் அவனால் பேசியபடி தொகையை பிரட்ட முடியவில்லை. கடைசியாக செழியனின் தாயாரிடம் சிறிது காலம் அவகாசம் வேண்டும் என கேட்டான்.

அவரோ இது தான் சாக்கென்று அப்படி என்றால் திருமணமும் சிலகாலம் கழித்து செய்து வைக்கலாம் என கூறிவிட்டார்.

இதை பரசு செல்வியிடம் கூற செழியன் என்ன சொன்னாரு அண்ணா என்று மட்டும் கேட்டாள்.

அவர் பாவம் என்ன செய்வாரு அவங்க அம்மா பேசும்போது பக்கத்துல அமைதியா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தாரு.

ம்ம்.. என்றவள்.. சற்று நேர அமைதிக்கு பிறகு எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அண்ணா என்றாள்.

அதிர்ச்சியுற்ற பரசுராம் என்ன செல்வி உளர்றியா இந்த கல்யாணம் நடக்க எவ்வளவு பாடுபட்டு இருக்கோம் எத்தனை நாள் காத்திருந்த இப்போ எல்லாம் கூடி வர்ற நேரத்துல உனக்கு என்ன ஆச்சு என கோபப்பட்டான்.

கோபப்படாத அண்ணா யோசிச்சு தான் சொல்றேன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.. எப்போ செழியன் எங்க காதலுக்கு மரியாதை கொடுக்காம நான் கொண்டு போற வரதட்சணையை எதிர்பார்த்தாரோ அப்பவே எங்க காதல் செத்துப் போச்சு அது மட்டும் இல்லாம உன்னை இதுபோல ஒரு இக்கட்டில் தள்ளிட்டு நான் மட்டும் அங்க போய் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்.

உன்னால இந்த அவங்களுக்கு கொடுக்கிறதா சொன்ன பணத்தை கொடுக்க முடியாமல் போனா கடைசி வரைக்கும் செழியன் எனக்காக காத்திருப்பார் என்று நினைக்கிறாயா கண்டிப்பா அவர் காத்திருக்க மாட்டார். அப்படியே அவர் இருந்தாலும் அவங்க அம்மா அப்படி விட மாட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் பாப்பாங்க அதுக்கப்புறம் பழையபடி அவருக்கு வேறு ஒரு பொண்ணோட திருமணம் பண்றதுக்கு முயற்சி செய்வாங்க. அப்போ மறுபடியும் நீ போய் அவங்ககிட்ட கெஞ்சி கிட்டு நிக்கனும். இது சரிவராது..விட்டிடு..எனக்கு செழியன் வேணாம்.

முடிவா தான் சொல்றியா என பரசு தங்கையிடம் தயங்கியபடியே கேட்டான். ஏனென்றால் அவனுக்கு ஆரம்பம் முதலே இத்திருமணத்தில் உடன்பாடு இல்லை. தங்கையை ராசி இல்லாதவன் என்று கூறியது. கூடவே செழியனுக்கு வேறொரு பெண்ணை திருமணத்திற்காக பேசியது. வரதட்சனைக்காக அவனது தாயார் திருமணத்தை தள்ளி வைத்தது என காரணங்கள் ஏராளம். செழியன் கூட திருமணம் தள்ளி போனதற்கு வருத்தம் கொள்ளாமல் திரிவது மேலும் கோபத்தை கொடுத்திருந்தது.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
20
எதையும் தங்கைக்காக வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தான் பரசு. இப்பொழுது செல்வியே திருமணம் வேண்டாம் என்று கூறவும் அவனும் யோசிக்கத் தொடங்கி விட்டான். தங்கைக்கு திருமணம் செய்து வைத்த பிறகு செழியனின் தாயார் ஏதாவது செய்தாலும் கூட மனைவியை காக்க இவன் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு பரசுவிற்கு. அதனால் தங்கையின் அந்த ஒற்றை வார்த்தையே போதும் என முடிவெடுத்தான் மேற்க் கொண்டு எதுவும் பேசாமல் அவனுடைய வசதிக்கு ஏற்றது போல வெளியூர் மாப்பிள்ளையை உடனடியாக பார்த்து நிச்சயத்தை முடித்து விட்டான்.

இது செழியனின் குடும்பத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி என்றால் செழியனுக்கு ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடிந்து விட்டதாகவே எண்ணினான். சமீபகாலமாக பரசுவிற்காகத்தான் அவனும் அழைந்து கொண்டிருக்கிறான். எப்படியோ ஒரு வழியாக குறிப்பிட்ட தொகையை திரட்டியும் விட்டான். அதை பரசுவின் கையில் கொடுக்க வேண்டும் என்று தான் நேரம் காலம் பார்த்துக் கொண்டிருந்தான் அதற்குள் பரசு முந்திக்கொண்டு அவனுடைய தங்கைக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் முடித்துக் கொள்ள அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

செல்வியை பொறுத்தவரைக்கும் செழியன் அவர்களுடைய காதலுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்தி வைக்கவில்லை என்ற கோபம். செழியனுக்கு செல்வி தன்னையும் தன்னுடைய காதலையும் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு விட்டதாக வருத்தம். இருவரின் நிலை இப்படி இருக்க பரசுவின் மீது கடுங்கோபத்தில் இருந்த செழியனின் தாய் அவளுக்கு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி உனக்கு நான் கல்யாணம் பண்ணி காட்டுறேன் என்று ஏற்கனவே பேசி வைத்திருந்த அத்தை மகளை திருமணமும் செய்து வைத்துவிட்டார். செழியனால் தாயின் பேச்சை மீற முடியாத நிலை.

செல்வி உறுதியாக இருந்திருந்தால் அவனும் பதிலுக்கு தாயாரிடம்சண்டையிடலாம். செல்வியே அவனை விட்டுவிட்டு வேறொருவனை திருமணம் செய்ய துணிந்து விட்டதால் இவன் எப்படி தாயாரிடம் அவளுக்காக பேச முடியும் அதனால் மௌனமே பதிலாகக் கொடுக்க திருமணம் முடிந்து விட்டது. செழியனின் திருமணத்தையறிந்து செல்வி மிகவும் துடித்துவிட்டாள். எப்படியாவது தன்னிடம் வந்து செழியன் பேசுவான்.. அவளை சமாதானப்படுத்தி மீண்டும் நின்று போன திருமணத்தை நடத்திக் காட்டுவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு இது மிகப்பெரிய பேரடி. செழியன் துரோகம் இழைத்து விட்டதாகவே அவனை வெறுத்தாள்.

அவள் மற்றொருவனை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டது பின் சென்று விட்டது அவளுக்கு முன்பாக செழியன் திருமணம் செய்தது தான் மிகப்பெரிய துரோகமாக தெரிந்தது. பரசுவிற்கும் வேறுவிதமான குற்ற உணர்ச்சி‌.. தான் தங்கை விஷயத்தில் அவசரப்பட்டு விட்டோமோ என்று. செழியனின் தாயார் மீது இருந்த கோபத்தை செழியன் பக்கமாக திருப்பி அவனுடைய வாழ்க்கையை சீரழிந்து விட்டதாக மனதிற்குள் வேதனை கொண்டான்.

அதற்கும் ஓரு வலுவான காரணம் இருந்தது. அது என்னவென்றால் செல்விக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று தெரிந்த உடனேயே செழியன் பரசுவிடம் அவசரப்பட்டுடிங்க மச்சான். அவ தான் புரியாம உங்ககிட்ட வேற மாப்பிள்ளை பார்க்க சொன்னா உடனே நீங்களும் என்கிட்ட என்ன ஏதுன்னு விசாரிக்காம நிச்சயம் பண்ணிடுவீங்களா..அம்மா பேசினாங்க.. இனியும் பேசுவாங்க அதுக்காக நீங்க அவசரப்பட்டு இருக்கக் கூடாது. நான் பொறுமையா மௌனமா இல்லையா அந்த மௌனத்திற்கு பின்னாடி ஏதாவது ஒரு பெரிய காரணம் இருக்கும்னு ஏன் உங்களுக்கு தோன்றவில்லை. நேரடியா என்கிட்ட கேட்டு இருக்கலாமே ஏன் எல்லாத்துக்கும் மௌனமா இருக்கேன்னு. நான் உங்களுக்கு அந்த காரணத்தை புரிய வைத்திருப்பேன். சரி இனி உங்க கிட்ட பேசி எதுவும் மாறப் போறது இல்ல செல்வியே வேற ஒருத்தன திருமணம் செய்ய துணிஞ்சு பிறகு நான் பேசுறது முட்டாள்தனம் இனியாவது வாழ்க்கையில் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னாடி கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பார்த்து முடிவு எடுங்கள் அதுதான் எல்லாருக்கும் நல்லது என்றபடி சென்று விட்டான்.

அத்தோடு அவனுக்கு திருமணம் முடிந்தது என்ற கசப்பான செய்தியும் வர.. மனதளவில் தளர்ந்து விட்டான் பரசு. அடுத்து தங்கையை சமாதானப்படுத்தி அவளுக்கும் மனமுடித்து வைத்தான். ஏனோ அதன் பிறகு செல்விக்கு சொந்த ஊர் வர அவ்வளவாக பிடிக்கவில்லை முதல் காரணம் அங்கேதான் செழியன் மனைவியுடன் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். மற்றொன்று அவனது தாயார் அவர் மட்டும் வரதட்சணை விஷயத்தில் பிடிவாதம் காட்டாமல் இருந்திருந்தால் அவளது மனம் போல வாழ்க்கை அமைந்திருக்கும்.

மூன்றாவது பரசு. இவள் தான் ஏதோ ஒரு கோபத்தில் செழியன் வேண்டாம் என்று கூறி விட்டாள். அதற்கு நல்ல அண்ணன் என்ன செய்ய வேண்டும் தங்கையை சமாதானப்படுத்தி அவளது மனதை மாற்றுவதை விட்டுவிட்டு உடனடியாக வேறொரு மாப்பிள்ளையை தேடிப்பிடித்து கட்டி வைத்து வெளியூருக்கு அனுப்பி விட்டான். எல்லோருமே சுயநலவாதிகள் பாதிக்கப்பட்டது அவள் மட்டுமே என்று எண்ணியதால் தான் பத்தாண்டு காலமாக ஊர் பக்கமே வராமல் இருந்தது.



இப்பொழுது நேர்த்திக்கடன்‌ ஓன்று இருப்பதாகவும் அதை செய்தே ஆகவேண்டும் என்று பரசு நடையாய் நடந்ததால் தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறாள். ஆனாலும் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தாளோ அவனே கண் முன் வந்து நின்று என்னை அந்த அளவிற்கு வெறுத்துட்டியா என கேட்டுக் கொண்டிருக்கிறான் என்ன பதில் கூறுவாள். ஆம் என்றா..?

போயிடு செழியா தயவுசெய்து என்னை பேச வைக்காத.. உன் மேல் எனக்கு கோபம் என்கிறத விட வெறுப்பு தான் அதிகமா இருக்கு.உன் முகத்தை பார்த்தாலே அருவெறுப்பா இருக்கு .. உன்னை பார்க்க பிடிக்காம தான் இத்தனை வருஷமா இந்த பக்கமே வராம இருந்தேன்..இப்போவும் ஏன் வந்தேன்னு ஃபீல் பண்ண வைக்காத.

நல்லா பேச கத்துகிட்ட செல்வி..இந்த கோபம் எதற்காக..? உன்கிட்ட இருக்கற குற்ற உணர்ச்சியை போக்கிக்கவா..?

ஓஹோ..கதை இப்படி போகுதா..?உன் தப்பை மறைக்க பழியை என்மேல போடற இல்லையா செழியா.

என் தப்பு என்ன செல்வி.நீயும் உன் அண்ணனும் கொஞ்சம் அமைதியா இருந்திருந்தா எல்லாத்தையும் சரி செய்திருப்பேன் ரெண்டு பேரும் அவசரப்பட்டுட்டீங்க.

சரி நாங்க அவசரப்பட்டு விட்டோம்ன்னே வச்சுக்கலாம் ஆனா நீ என்ன பண்ணி இருக்கணும் என்னை வந்து பார்த்திருக்கணும் சமாதானப்படுத்தி இருக்கணும்..உன் அம்மா வாயை மூடியிருக்கனும் எதையாவது செஞ்சியா நீ.?

ஏன் செய்யணும் செல்வி ..?எப்போ என் இடத்துல இன்னொருத்தனை வச்சு பார்த்தியோ அதன் பிறகு உனக்கும் எனக்கும் என்ன இருக்கு உன்னோட அவசர புத்தியால இன்னைக்கு வாழ்க்கையை தொலைச்சிட்டு.. என்றவன் அதெல்லாம் சொன்ன உனக்கு புரியாது.. உன்ன பார்த்ததும் ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் மறந்துட்டேன் நீயாவது சந்தோஷமா இருக்கற என்கிற சின்ன ஆறுதல் எனக்கு போதும். திருவிழாவை நல்லபடியாக கொண்டாடிட்டு ஊர் போய் சேர் இங்க என்னை பார்த்ததையோ நான் உன்னோட பேசியதையோ மனசுல வச்சுக்காத என்றபடி வெடு வெடுவென சென்று விட்டான்.

செல்விக்கு எதுவுமே புரியவில்லை என்ன சொல்லிட்டு போறான்..?அப்போ நான் தான் அவசரப்பட்டேனா..? இவன் எதுவுமே செய்யலியா..? அவன் அம்மா பேச்சை கேட்டுகிட்டு நின்னது நானா இல்ல அவனா என அவளுக்கு அவளாக கோபமாக கேட்டுக்கொண்டாள் அப்பொழுது பரமுவின் மனைவி செல்வி இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க எனக்கேட்டவர் செல்வியின் பார்வை சென்ற இடத்தை அவரும் பார்த்தார்.

ஓஓ.. செழியன் வந்தானா என்ன பேசினான்..? சூதுவாது இல்லாமல் கேட்டார்.

அண்ணி அது.

பாவம் செல்வி தெரிஞ்சோ தெரியாமலோ உன்னை பொண்ணு கேட்டிருக்கான்..உனக்கு வேற அவனை பிடிக்கலையா..அதனால அவன் அம்மா சொந்தத்துல ஒருத்தியை புடிச்சி கட்டி வச்சிட்டாங்க போல..வந்தவ ராட்சஸி. அவன் அம்மாகாரிக்கு ஏத்தவ தான் பாவம் இவன் மாட்டிகிட்டான். பொழுது விடிஞ்சு பொழுது அடைஞ்சாபோதும் அவ‌ சத்தம் இல்லாம இந்த ஊர் விடியாது பாவம் வீட்டுக்குள்ள என்ன பாடுபடறானோ என பரிதாபப் பட்டார்.

ஏன் அந்த பொண்ணு அப்படி நடந்துக்குது.

யாருக்கு தெரியும்.. உங்க அண்ணன் உன்னை பொண்ணு கேட்ட விஷயத்தை மட்டும் தான் என்கிட்ட சொன்னாரு மேற்படி எதுவும் எனக்கு தெரியாது நீ வேற ரொம்ப வருஷம் கழிச்சு இப்போ தான் முதல் முறை ஊருக்கு வந்திருக்க எதுக்கு அவனை பத்தி எல்லாம் பேசி நம்மளோட நேரத்தை வீணாக்கனும் வா, உன் அண்ணன் ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்காரு.

ரெண்டு மருமகபிள்ளைகளையும் கூட்டிட்டு டவுனுக்கு போணுமாம் உனக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டாரு என அழைத்துச் சென்றார்.

ஏனோ செல்விக்கு ஆரம்பத்தில் செழியன் மீது இருந்த கோபம் இப்பொழுது இல்லாதது போல தான் தோன்றுகிறது அவனது வாழ்க்கை சரி இல்லையா..?அதுவும் என்னாலா என்ற கேள்வியும் தோன்றியது.

மறுநாள் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருக்க செழியனை மட்டும் எங்கேயும் பார்க்க முடியவில்லை.. செல்விக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அவன் மீது இப்பொழுது காதலும் இல்லை வெறுப்புமில்லை கோபமும் இல்லை ஆனாலும் மனம் அவனை எதிர்பார்த்தது. என்ன இருந்தாலும் விவரம் தெரிந்த நாள் முதலாக அவனை பார்த்திருக்கிறாள் பேசியிருக்கிறாள் பழகியிருக்கிறாள் திருமணம் வரை அவர்களின் உறவு சென்றிருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவளது மனதில் அவனைப் பற்றி எந்த ஒரு நினைப்புமே இல்லை என்று பச்சையாக பொய் பேசிட முடியாது. அவனுடன் பழகிய நாட்கள் இன்றும் பசுமையாக மனதில் ஒரு ஓரத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது அதனால் தான் அவளால் இன்று வரை கணவனுடன் ஒன்றி வாழ முடியவில்ல. பத்தாண்டு காலமாக சொந்த ஊருக்கும் வராமல் இருந்தது.

எங்கே செழியனை சந்தித்து விடுவோமோ என்கிற பயத்தில் தான் ஓவ்வொரு முறை அண்ணன் அழைக்கும் பொழுதெல்லாம் ஏதாவது காரணத்தை சொல்லி ஓதுங்கி விடுவாள். இப்பொழுது அப்படியல்ல துணிந்து வந்தாகி விட்டது அவனை பார்த்தும் விட்டாள். இனி பயந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நிதர்சனத்தை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் திருமணத்திற்கு முன்பான காதல் அதை முற்றிலும் ஒதுக்க முடியாவிட்டாலும் கணவனுக்கு உண்மையாகத்தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இனியும் வாழ்வாள் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. செழியனின் முகத்தில் தெரிந்த வேதனை கூடவே அவனது விரக்தி பேச்சி அது தான் அவளை நிம்மதியிழக்க செய்தது. ஊரைவிட்டு செல்லும் முன் அவனிடம் மீண்டும் ஒருமுறை பேசிவிட வேண்டும் என முடிவெடுத்து அவனது தோட்டத்தை நோக்கி சென்றாள்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
20
ஊரைவிட்டு செல்லும் முன் அவனிடம் மீண்டும் ஒருமுறை பேசிவிட வேண்டும் என முடிவெடுத்து அவனது தோட்டத்தை நோக்கி சென்றாள். இந்த சமயத்தில் சென்றால் தான் யாருக்கும் அவள் மீது எந்த ஒரு சந்தேகமும் இருக்காது ஊரே கோவிலில் திரண்டு இருக்க இவள் மட்டும் செழியனைத் தேடிச் சென்றாள்.

டிராக்டரில் உழுது கொண்டு இருந்தவனை பார்த்ததும் அதுவரை இருந்த தைரியம் காணாமல் போயிற்று. திரும்பி சென்றுவிடலாம் என நினைத்த வேளையில் செழியன் அவளைப்பார்த்து விட்டான்.

செல்வி என்ன இந்த பக்கம் ஏதாவது பிரச்சனையா என கேட்டபடியே வண்டியை விட்டு வேகமாக இறங்கினான். இனி சாக்கு சொல்லி தப்பிக்க முடியாது.

அது..உங்களை பாக்கத்தான்.. மெதுவாகத்தான் கூறினாள்.

ஏதோ மனதிற்குள் ஓரு சஞ்சலம் கணவனுக்கு துரோகம் இழைப்பதாக மனம் பதறியது. வாய்க்காலில் கை கால்களை அலம்பி விட்டு அங்கிருந்த துண்டு கொண்டு உடலை துடைத்தவாறே வேகமாக அவளிடத்தில் ஓடி வந்தான்.

என்ன செல்வி என சுற்றும் முற்றும் பார்த்தவன் தனியாவா வந்த..?

ம்ம்.

ஏன்..?சரி இப்படி வெயில்ல நிக்க வேண்டாம் நிழலா பார்த்து போகலாம் என அழைத்துச் சென்றவன் அங்கிருந்த கொய்யா மரத்தில் இருந்த கனி ஒன்றை பறித்து உனக்கு ரொம்ப பிடிக்கும்ல என்றபடி அவள் கையில் கொடுத்தான்.

இல்ல வேணாம் என வாய் கூறினாலும் அவளது கை அதை பெற்றுக் கொண்டது.

சாப்பிடு என உரிமையாக கூறினான்.

அவள் தயக்கவும் என் முன்னாடி என்ன கூச்சம் என்றபடி சற்று தள்ளி நின்றுகொண்டவன் அப்படியே நடந்துக்கிட்டே பேசலாமா நீ இந்த நேரத்துக்கு இப்படி தனியா வந்தது சரியில்ல உன் கணவரோ இல்ல என் மனைவியோ பார்த்தா தேவையில்லாத பிரச்சினைகள் வரும் நமக்குள்ள ஒன்னும் இல்லங்குற விஷயம் நமக்கு தெரியும் ஆனா அவங்களுக்கு தெரியாது இல்லையா அதுவும் இல்லாம உனக்கு ஒரு அமைதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு அதை தேவையில்லாம பிரச்சனையானதா மாத்திக்காத.

எனக்கு அமைதியான வாழ்க்கை கிடைச்சிருக்குன்னா..?உனக்கு கிடைக்கலையா..?கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

பதில் கூறாமல் மூச்சை இழுத்து விட்டவன் வீட்டுக்கு போ செல்வி யாராவது தேடிக்கிட்டு வரப்போறாங்க.

நான் போறது இருக்கட்டும் நீ ஏன் கோயிலுக்கு வரல திருவிழான்னு ஊரே அங்க இருக்கு ஆனா நீ மட்டும் தோட்டத்தில் வேலை பார்த்துட்டு இருக்க.

எனக்கு கடவுள் மேல இருந்த நம்பிக்கை போய் ரொம்ப நாள் ஆச்சி செல்வி.

விரக்தில பேசறது போல இருக்கே செழியா.

வாழ்க்கையில நமக்குன்னு எதுவுமே இல்லாதப்போ விரக்தி வர்றது இயல்பு தானே சரி என்னை விடு நீ எப்படி இருக்க உன்னை அவர் நல்லா பாத்துக்கிறாரு தானே‌

கண்டிப்பா நீ சந்தோஷமா இருக்க அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும் இல்லனா லட்டு மாதிரி ரெண்டு குழந்தைங்க அதுவும் உன் கணவரை உரித்து வைத்தது போல பார்க்கவே ரொம்ப சந்தோஷமாவும் நிறைவாகவும் இருக்கு.

நீ என் குழந்தைகளை பார்த்தியா.

குழந்தைகளை மட்டும் இல்லை, உன் கணவரை கூட பார்த்தேன்.. ஒருமுறை சென்னை கூட வந்தேன் உனக்கே தெரியாமல் உன்னை பார்த்துட்டு திரும்பி வந்தேன் என்ன தான் நீ என்னை வேணான்னுட்டு போனாலும் நான் உனக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நம்ம காதல் இல்லைன்னு போகாது அது நமக்கே தெரியாம ஒருத்தரை ஒருத்தர் தேடறதையும் நாம கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

என்ன குழப்பற செழியா..இப்போ இதையெல்லாம் பேசி எதுவும் ஆகப்போறது இல்ல ஓழுங்கா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன் மனைவியோட சந்தோஷமா வாழப்பாரு.. இன்னைக்கு நைட் கோவில்ல உன்னை குடும்பம் சகிதமா பாக்கனும் அவ்ளோ தான் சரி நான் கிளம்பறேன் என்ற படி நடக்க ஆரம்பித்தாள்.

தனியாவா போற இரு துணைக்கு வரேன்.

தனியா தானே வந்தேன் இப்போவும் அப்படியே போறேன்.. என்றவள் சிறிது தூரம் நடந்தபிறகு அப்படியே நின்றாள் தனக்குள்ளாக எதையோ கேட்டுக்கொண்டவள் திரும்பி செழியா என அழைத்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பெயர் சொல்லி அழைக்கவும் வேகமாக அவளின் பக்கமாக சென்றான்.

என்ன செல்வி..?

நான் உன்னை பாக்க வந்த விஷயமே வேற ஆனா அதை தவிர்த்து மீதி எல்லாத்தையும் பேசிட்டு இருக்கேன் இப்போ நான் உன்கிட்ட கேட்காம போயிட்டேன்னு வச்சுக்கோயேன் என்னால நிம்மதியா இருக்க முடியாது.

மறுபடியும் நான் எப்போ இந்த ஊருக்கு வருவேன்னு எனக்கு தெரியாது ஏற்கனவே பத்து வருஷம் ஆயிடுச்சு இனியும் பத்து வருஷம் எல்லாம் என்னால மனசுக்குள்ள வச்சு புழுங்கிக்க முடியாது.

நீயேன் செழியா உங்க அம்மா பேசும் போது எங்க அண்ணனுக்கு ஆதரவா பேசல நான்தான் ஏதோ கோவத்துல ஒரு முடிவு எடுத்தேன். நீயும் அப்படியே விட்டுட்ட? என்னை வந்து நீ பார்த்து இருக்கணும் சமாதானப்படுத்தி இருக்கணும் ஏன் செய்யல அப்போ என் மேல வச்சிருந்த காதல் அவ்ளோ தான் இல்லையா..? எவனோ ஒருத்தனை கட்டிக்கிட்டு போறியா போன்னு விட்டுட்டல்ல. அதை மட்டும் செய்யல என்னை மேலும் வேதனை படுத்தறது போல எனக்கு முன்னாடியே கல்யாணம் வேற பண்ணிகிட்ட. என் மனசுல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் ஒட்டுமொத்தமா உடைச்சிட்டியே. ஏன் செழியா அப்படி செஞ்ச..?

முடிஞ்சதை பத்தி பேசி இப்போ என்ன ஆகப்போகுது செல்வி இப்போ நீயும் சரி நானும் சரி வேற வேற வாழ்க்கையில இருக்கோம்.

இந்த சமயத்தில் நாம இதை பத்தி பேசுறதே தப்பு அப்படி இருக்கும் பொழுது இதுக்கு பதில் சொல்றதும் தப்பாகியிடும்..நீ என் மேல வச்சிருக்கற அந்த வெறுப்பை அப்படியே வச்சுக்கோ அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.

இல்ல செழியா அது என்னால முடியாது நீ நேற்று கோவில்ல வச்சி சொன்ன பாத்தியா அதான் உண்மை. இது வெறுப்பு இல்ல என்னோட குற்ற உணர்ச்சி அதைத்தான் வெறுப்பாவும் கோபமாவும் வெளிய காமிச்சிட்டு இருக்கேன் சத்தியமா சொல்றேன் செழியா உன்னை நான் மிஸ் பண்ணிட்டேன்னு பலமுறை எனக்குள்ள சொல்லி இருக்கேன்.

கண்டிப்பா இப்படி பேசுறது தப்புதான் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு ரெண்டு குழந்தை இருக்கு முன்னால் காதலனை தேடி வந்ததே தப்பு எல்லாம் தெரியுது. ஆனாலும் இந்த விஷயத்தை நீ எனக்கு தெளிவுபடுத்தலைன்னா என்னால மீதி வாழ்க்கையை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கழிக்க முடியாது செழியா, உனக்கு எப்படி மனசு வந்தது என்னை விட்டுக் கொடுக்க..?

யார் விட்டு கொடுத்தா இப்போ வரைக்கும் என் மனசுக்குள்ள இருக்கிற என் காதலி செல்வியை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை. அன்னைக்கு என் அம்மா பேசும்போது அவங்களை மீறி பேசுற தைரியம் எனக்கு இல்லை.

ஏற்கனவே தற்கொலை பண்ணிப்பேன்னு அடிக்கடி மிரட்டுவாங்க அப்படி இருக்கும் போது நான் பேசி பிரச்சனை வேற மாதிரி போயிருந்தா என்னால சமாளிக்க முடியாது அதனால மௌனமா‌ இருந்தேன். ஆனா கண்டிப்பா உங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணனும்னு நெனச்சேன் அதுக்குள்ள நீ வேற மாதிரி முடிவு எடுத்துட்ட.

எப்போ உன் நெத்தில பொட்டு வைக்கற உரிமையை வேற ஓருத்தனுக்கு குடுத்தியோ அதுக்கு அப்புறம் உன்னை வந்து பாக்குறதும் உன்னை வந்து சமாதானப்படுத்துவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

அதான் அம்மா அழகியை கல்யாணம் பண்ண சொன்னதும் உடனே பண்ணிகிட்டேன். அழகி எனக்காக ரொம்ப வருஷமா காத்துட்டு இருந்தவ. ஒவ்வொரு முறையும் அம்மா அவளுக்கும் எனக்கும் கல்யாணம்னு அவ மனசுல ஆசையை காமிச்சி காமிச்சி ஏமாத்திட்டு இருந்தாங்க கடைசில உனக்கு நிச்சயமாகவும் இதுதான் சாக்குனு எங்க அம்மா எனக்கு அழகியை கட்டி வச்சுட்டாங்க.

நானும் விருப்பம் இல்லாம அவளைக் கட்டிக்கல..முழு சம்மதத்தோட தான் கட்டி கிட்டேன். ஆரம்பத்துல ஏமாற்றத்தோட வலி எனக்கு தெரியலை..நீ என்னை வேணாம்னு சொல்லவும் தான் அழகியோட காத்திருப்பு புரிஞ்சது. ஆனா அது தப்புன்னு பலமுறை நினைக்க வச்சிடுச்சி என் வாழ்க்கை. ஆமா செல்வி நான் ஒன்னும் அழகியை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழல

பலமுறை அவளை வேணாம் வேணாம்னு உதறி தள்ளுனதுனால அவளுக்குள் ஒரு வைராக்கியமே வந்துடுச்சு கல்யாணம் பண்ணினா என்னத்தான் பண்ணனும்னு. அவ நினைச்சதை சாதிச்சிட்டா, நான் தான் காதல்லேயும் தோற்று..வாழ்க்கையிலேயும் தோற்றுப்போய் நிற்கிறேன்.

அழகி என்னை கல்யாணம் பண்ணனும் நினைச்சாலே தவிர அவளும் சந்தோஷமா இருக்கணும் என்னையும் சந்தோஷமா வச்சுக்கணும்னு என்னைக்குமே நினைக்கல. அவளை பொறுத்த வரைக்கும் அந்த கல்யாணமே என்னை பழிவாங்குறதுக்காக தான் இப்போ வரைக்கும் அதை அவ சரியா செஞ்சிக்கிட்டு இருக்கா. அதுக்காக நான் எப்போவும் வருத்தப்படவில்லை. நீ சொன்ன பாத்தியா என் அம்மா பேசும்போது நான் மௌனமா இருந்தேன்னு.. அந்த மௌனத்துக்காக கிடைச்ச தண்டனையா தான் நான் பார்க்கிறேன். ஆனா ஓரு விஷயத்துல அழகி தினம் தினம் என்கிட்ட தோற்றுப்போறா.

என்ன அப்படி பார்க்கற செல்வி..உண்மைதான் அழகி எவ்வளவு முயற்சி செஞ்சாலும் என் மனசுக்குள்ள இருக்கிற செல்வியை மட்டும் அவளால விரட்டி அடிக்க முடியல. எந்த அளவுக்கு அவ என்ன பாடாப் படுத்துகிறாளோ அந்த அளவுக்கு என் காதலி செல்வியோட நான் மானசீகமான தினமும் பேசிட்டு இருக்கேன்.

சத்தியமா சொல்றேன் அந்த செல்விக்கும் உனக்கும் ஒன்னும் ஒரு சம்மந்தமும் கிடையாது.. அவ தேவதை. இப்போ என் முன்னாடி நிக்கற செல்வி மிஸ்டர் கார்த்திகேயனோட மனைவி. என்னைக்குமே கார்த்திகேயனோட மனைவி என் செல்வி ஆக முடியாது. இப்போ மட்டும் இல்ல எப்போவும் அவளை தொல்லை செய்ய மாட்டேன்.

ஆனால் செழியனோட செல்வியை தினமும் தொல்லை பண்ணிக்கிட்டு தான் இருப்பேன். சரி நீ கிளம்பு இதுக்கு மேல இங்க நின்னா தேவையில்லாத பிரச்சினை வரும் என்றவன் ஒரு நிமிஷம் நில்லு என சில கொய்யா பழங்களை பறித்து அவளது கையில் கொ டுத்து உன் குழந்தைகளுக்கு கொடு என அனுப்பி வைத்தான்.

கண்களில் நீருடனே அதைப் பெற்றுக் கொண்டவளுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கி விட்டது. இருவரின் ஈகோவால் மட்டுமே அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆகியிருக்கிறது. அவனும் சந்தோஷமாக இல்லை.. அவளும் சந்தோஷமாக இல்லை அடுத்து என்ன செய்வது.

இருவருமே அவர்களின் வாழ்க்கையை உதறிவிட்டு தனிப்பட்ட முறையில் சேர்ந்து வாழ்வதா இல்லை அவரவர்களுக்கான வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றிக் கொள்வதா என்ற கேள்வி அவளுக்குள் பெரியதாக எழுந்தது. தயக்கத்துடனே அங்கிருந்து செல்லும் செல்வியை பார்த்து கொண்டிருந்த செழியனுக்குள் நெடுநாளைக்கு பிறகு சிறு நிம்மதி பிறந்தது.

நெடுநாளைக்குப் பிறகு உதட்டில் தவழ்ந்த புன்னகையை மறைக்கத் தோன்றாமலே திரும்பியவனின் முகம் சற்றென்று மாறியது. அவனுக்கு முன்னால் ஆங்காரமாக அழகி நின்று கொண்டிருந்தாள்.

அவிழ்ந்த கூந்தலை கொண்டை போட்டு கொண்டே ஓஹோ இதுக்காகத்தான் மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு வான்னு விரட்டி விட்டியா‌..?நல்லாயிருக்கியா நீ பண்ணற கூத்து. கட்டிகிட்ட நான் இங்க முழுசா குத்துக்கல்லு மாதிரி இருக்கேன் என்னைப்பார்த்து இந்த பத்து வருஷத்துல ஒருமுறை சிரிச்சிருப்பியா.. பக்கத்துல வந்தாலே அப்படியே சிலுப்பி கிட்டு போவ. ஆனா இப்போ அவளை பாத்து பேசறது என்ன..! கொஞ்சறது என்ன..! வாய் கொள்ளாமல் சிரிப்பது என்ன..?அப்படி என்ன சொக்குப்பொடி போட்டன்னு அவகிட்டயே கேட்டுட்டு வர்றேன். பட்டணத்துல இருந்துகிட்டு எப்படியம்மா என் புருஷனை இப்போ வரைக்கும் மயக்கி வச்சிருக்கன்னு கேட்காம விடப்போறதில்லை. இருடி இந்தா வர்றேன்..நீ குமரியா இருக்கற வரைக்கும்தான் என்னை ஏங்க வச்சன்னு பார்த்தா இப்போவும் இல்ல என்னை புலம்பவிடற..அந்த ரகசியத்தை நான் தெரிஞ்சிக்க வேணாம் என வாய் ஓயாமல் பேசியபடி வேகமாக நடந்தாள். ஏதோ கோபத்தில் அழகி பேசுகிறாள் என்று தான் நினைத்தான்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
20
வழமையாக இது நடப்பது தான் அவளைப் பார்த்தாலோ இல்லை அருகே சென்றாலோ என்ன உன் காதலி ஞாபகம் வந்திருச்சா? என குத்திக்காட்டி பேசும் மனைவி அதே போல் இப்பொழுதும் பேசுகிறாள் என எதார்த்தமாக விட்டான்.

ஆனால் அவள் செல்லும் வேகத்தை பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என உணர்ந்தவன் ஓடிப்போய் அவளது கையை பிடித்து நிறுத்தி எங்கப்போற அழகி.

ம்ம்..பட்டணத்துல இருந்து வந்திருக்கால்ல என் சக்களத்தி அவளைப் போயி நலம் விசாரிச்சிட்டு வர்றதுக்கு.

இங்க பாரு அழகி என்னை என்ன வேணாலும் சொல்லு திட்டு ரெண்டு அடி வேணாலும் அடிச்சுக்கோ தயவுசெஞ்சு செல்வியை ஏதும் பேசிடாத பாவம் ஏதோ பழகின பாவத்திற்காக என்னை பார்த்துட்டு போறா மத்தபடி நீ நினைக்கற மாதிரி எதுவும் இல்லை.

அதைத்தான்யா நானும் கேட்க போறேன் உண்மையிலேயே சும்மாதான் பார்த்துட்டு போனியா இல்ல ரெண்டு பேருக்கும் நடுவுல வேற எதுவும் இருக்குதான்னு அவகிட்டயே போய் நேர்ல கேட்டுட்டு வந்துடறேன்.

வேணாம் அழகி.

இங்க பாருய்யா இப்போ என்னை போக விட்டா காதும் காதும் வெச்ச மாதிரி அவகிட்ட மட்டும் தான் கேட்பேன் அப்படி இல்லைன்னு வச்சுக்கோ

உன்னையும் சேர்த்து இழுத்துட்டு போய் திருவிழா கூட்டத்தில் ரெண்டு பேரையும் நிக்க வச்சு சந்தி சிரிக்க வெச்சிடுவேன்.. என்றதும் அவளது கையை விட்டவன் கையால் ஆகாதவனாக சோர்ந்து போய் அப்படியே அமர்ந்தான்.

கையில் இருந்த கொய்யாக்கனி ஒன்றை எடுத்து மெல்ல கடித்து ருசி பார்த்தபடியே தோட்டத்தை விட்டு வெளியே வந்த செல்வி எதிரில் வந்துகொண்டிருந்த கணவனைக் கண்டதும் கையில் இருந்த மொத்த பழத்தையும் கீழே விட்டாள்.

வேகமாக அவளருகில் ஓடி வந்தவன் என்ன செல்வி இது பழத்தை எல்லாம் கீழ போட்டுட்ட..உனக்கு ரொம்ப பிடிச்சதை இப்படியா தவற விடறது என இயல்பாக கேட்டபடி குனிந்து அதை பொறுக்கினான்.

அதிர்ச்சியில் கணவனைப் பார்க்க கீழே கிடந்த மொத்த பலத்தையும் கையில் எடுத்தவன் இதை கையில வச்சுகிட்டா மறுபடியும் தவற விடுவ அதனால புடவை முந்தானைல பத்திரப்படுத்திக்கோ.

கை தானாக புடவை முந்தியை விரிக்க அதில் பழங்களை வைத்தவன் தானும் ஒன்றை எடுத்து தனது கர்ச்சீப்பால் துடைத்துவிட்டு கடித்தவன் ம்ம்..நல்ல ருசி இதுக்காக எவ்ளோ தூரம் வேணாலும் வரலாம்.

அதுங்க..என்னை மன்னிச்சிடுங்க.

எதுக்கு..?

அது..அது.

காரணத்தை தைரியமா சொல்லக்கூட உன்னால முடியல.. அப்புறம் ஏன் வரனும்..?என கேள்வியாக அவளைப் பார்க்கவும் ஓடிவந்து கணவனின் காலில் விழுந்தாள்.

தப்புதான்.. யார்கிட்டேயும் சொல்லாம வந்தது என் தப்பு தான்..ஆனா என் மனசுல எந்த விகல்பமும் இல்லைங்க..மனசு கேட்கல வந்துட்டேன்.

புரியுது செல்வி..உனக்கு கொய்யாப்பழம்ன்னா ரொம்ப புடிக்கும் அதான் யார்கிட்டேயும் சொல்லாம நீயே தோட்டத்தை தேடி வந்துட்ட.. என்ன இருந்தாலும் இது உன் ஊரு.. இங்க என்னென்ன எங்கெங்கு கிடைக்கும்னு உனக்கு தானே தெரியும்… ஆமா பழத்தை கேட்காம எடுத்தியா இல்ல தோட்டக்காரன்கிட்ட சொல்லிட்டு எடுத்துட்டு வந்தியா என கேட்கவும் .

அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை அது..?

கேட்காம பறிச்சியா?தப்பில்லையா என்னதான் உங்க சொந்தக்காரங்க வீட்டு தோட்டமா இருந்தாலும் கேட்டுட்டு பொறிக்கணும் அதான் நல்ல பழக்கம் சரி நீ வீட்டுக்கு போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன் என மனைவியை அனுப்பியவன் அவள் கண் மறைந்ததும் செழியனின் தோட்டத்தை நோக்கி சென்றான் அப்பொழுது கடுங்கோபத்தில் கத்தியபடியே எதிரில் வந்த அழகி அவனைத் தாண்டி சென்றாள்.

கணவனிடத்தில் இருந்து தப்பித்த செல்வி பின்னால் வரும் ஆபத்தை உணராமல் நேராக கோவிலை நோக்கிச் சென்றாள்.

என்னாச்சு மிஸ்டர் செழியன் தலைல கைவைத்து உக்கார்ந்துட்டீங்க தீடிரென்று கேட்ட அந்நியத் குரலைக் கேட்டு தலைநிமிர்ந்தவன் எதிரில் செழியனைக் கண்டதும் உட்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளானான்.

அழகி அதுக்குள்ள போய் இவர் கிட்ட செல்வியைப் பற்றி தப்பா சொல்லி வச்சிட்டாளா அதான் விசாரிச்சிட்டு போக வந்திருக்கிறாரா என்ன சொல்லி சமாளிப்பது மனதிற்குள் வேகவேகமாக காரணங்களை தேடினான்.

என்னது நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீங்க ஏதேதோ முகத்தில அபிநயம் பிடிக்கிறீர்களே தவிர பதில் சொல்ல மாட்டேங்கறீங்க என சிரித்தபடியே கேட்டவன் அங்கிருந்த மாமரத்தில் இருத்து ஓரு காயை பறித்து கடித்தான்.

இல்ல முதமுறையா என்னைத் தேடி வந்திருக்கீங்களா அதான் என்ன பேசறதுன்னு தெரியாம கடைசி வாக்கியம் அவனது வாய்க்குள்ளேயே நின்றது.

என்ன இருந்தாலும் மாற்றான் தோட்டத்து காயோட ருசியை தனி தான் இல்ல என மீண்டும் மாங்காயை சுவைத்தபடியே செழியனிடம் கேட்டான்.

செழியனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை நீங்க எதையோ மனசுல வச்சுட்டு பேசுறீங்கன்னு நினைக்கிறேன் தயவு செய்து எதா இருந்தாலும் வெளிப்படையா கேட்டுருங்க நான் கிராமத்தான் எனக்கு உங்க பேச்சு வழக்கு புரியல என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

ஆமா நீங்க ஏன் இப்படி திணறீங்க..இடமே ரொம்ப குளுமையா இருக்கு காத்து வேற அடிக்கிது.. அப்படி இருந்தும் உங்களுக்கு வேர்க்கிது.. என்னைப் பார்த்து பயப்படறீங்களா என்ன.?

நான் ஏன் சார் உங்களை பார்த்து பயப்படப் போறேன் .. தீடிர்னு வந்தீருக்கீங்களா அதான்.

நன்றி சொல்லிட்டு போக வந்தேன் செழியன்.

நன்றியா.. அதுவும் எனக்கா..?

ஆமா உங்களுக்கு தான் என்னோட விலை உயர்ந்த காரை இந்த ஊருக்குள்ள நிறுத்துவதற்கு வசதி இல்லைன்னு உங்க வீட்டு பக்கத்துல இருந்த இடத்துல தான் நிறுத்தினேன் ஆனா நீங்க வெயில்ல நிக்குதுன்னு ஒரே நாள்ல டெம்ப்ரவரியா ஒரு பந்தல் போட்டு வச்சிருக்கீங்க அதை பார்த்துட்டு எப்படி நன்றி சொல்லாமல் இருக்க முடியும் இந்த காலத்துல யாருக்கு இப்படி சொந்தக்காரங்க மேல அக்கறை எல்லாம் இருக்கு சொல்லுங்க என் மச்சான் கூட அதை செய்யல ஆனா நீங்க செஞ்சு இருக்கீங்க என்ற கார்த்திகேயன் மெதுவாக செழியன் பக்கமாக வந்து கார்மேல‌ மட்டும் உங்களோட அக்கறையை காட்டுங்க என் மனைவி மேல வேண்டாம்..என மிரட்டும் தோணியில் கூறினான்.

பிறகு சிரித்தபடியே எனக்கு எல்லா விஷயமும் தெரியும் அப்படி இருந்தும் நான் ஏன் அமைதியா இருக்கேன்னா உங்க ரெண்டு பேரோட கடந்த காலத்தை மதிக்கிறதால தான் .

பருவத்தில் எல்லாரும் சந்திக்கற விஷயத்தை தான் நீங்களும் சந்திச்சீங்க அதை நான் தப்பு சொல்லல ஆனா ரெண்டு பேருக்கும் தனித்தனியா ஒரு வாழ்க்கை அமைந்து பிறகு மறுபடியும் அதை புதுப்பிக்கணும்னு நினைக்கிறது தப்புன்னு சொல்ல வர்றேன்.

சார் அப்படி எல்லாம் எதுவும் இல்லை செல்வியும் சரி நானும் சரி அந்த மாதிரி எண்ணத்துல பேசிக்கல நீங்களும் என் மனைவி மாதிரியே எங்களோட கடந்தகாலத்தை மனசுல வச்சிகிட்டு பேசறீங்க.. தயவு செய்து செல்வி கிட்ட இதுபோல பேசிவைக்காதீங்க அவ தாங்கமாட்டா என்றபடி கையெடுத்து கூப்பிட்டான்.

சில வினாடிகள் அசைவற்று செழியனைக் கண்ட கார்த்திகேயன் கும்பிட்டுக் கொண்டிருந்த கைகளை இறக்கிவிட்டு படி நான் நம்புறேன் முழுசா நம்புறேன் உங்களை மட்டும் இல்ல என் மனைவியையும் சேர்த்து தான்..உங்களை சந்தேகப்பட்டு இங்க வரலை..அப்படி வந்திருந்தா இந்த பத்து வருஷம் என் மனைவியோட வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாம போயிடும். நான் இப்போ வந்தது..என் மனைவியோட நீங்க என்ன பேசனீங்க ‌.எதற்காக பேசனீங்கன்னு கேட்க இல்ல.. உங்க மனசுக்குள்ள நீங்க தினம் தினம் வச்சு பூஜை பண்ணிட்டு இருக்கீங்களே உங்களோட காதலி செல்வி அவளை நிரந்தரமா தூக்கி வீச சொல்லத்தான் வந்தேன்.

என்னதான் அவ உங்க காதலியா இருந்தாலும் இப்போ அவ என்னோட மனைவி என் மனைவியோட பிம்பம் கூட இன்னோர்த்தரோட மனசுல இருக்கிறதை நான் விரும்ப மாட்டேன் உண்மையிலேயே செல்வி குற்ற உணர்ச்சி இல்லாம வாழனும்னு நினைச்சீங்கன்னா உங்க மனசுல இருக்குற செல்வியை தூக்கி வீசிட்டு உங்க மனைவியோட சந்தோஷமா குடும்பம் நடத்த பாருங்க.

கார்த்திகேயனோட மனைவி உங்க காதலியாக முடியாது தான்..ஆனா உங்க செல்வி தான் கார்த்திகேயனோட மனைவியா இருக்காங்க. அவங்களோட திருமதி கார்த்திகேயன் என்கிற பெயருக்கு மரியாதை கொடுப்பீங்கன்னு நினைக்கிறேன். உங்க மனசுலயும் சரி செல்வி மனசிலும் சரி எந்த விகல்பமும் கிடையாது நீங்க எப்போ வேணாலும் சந்திக்கலாம் பேசிக்கலாம் ஆனா திருட்டுத்தனமா இல்ல புரியும்னு நினைக்கறேன் என்றபடி வேகமாக வெளியேறினான்.

அப்பொழுதுதான் செழியனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அதுவரை மனதில் இருந்த பெரும்பாரமும் இறங்கியது. இனி அழகி போய் செல்வியைப் பற்றி என்ன சொன்னாலும் அவளுடைய கணவன் நம்ப போவதில்லை அது போதும். இனி கார்த்திகேயன் சொன்னது போல செல்வி தன்னுடைய முன்னாள் காதலி கூட கிடையாது கார்த்திகேயனுடைய மனைவி அவ்வளவுதான் என மனதிற்குள் திடம்பட கூறிக் கொண்டான். ஆனாலும் ஆர்ப்பாட்டமாக சென்ற அழகி என்ன செய்து வைத்திருக்கிறாளோ என்ற பயமும் கூடவே வந்ததது.

கார்த்திகேயன் தங்களை பற்றி புரிந்து கொண்டதே போதும்..அதுவே அவனுக்கு மிகப்பெரிய சக்தியை கொடுத்தது. அழகியை இனி சமாளிக்க முடியும் என்று நினைத்தபடி அவனும் அழகியைத் தேடிச் சென்றான்.

வீட்டுக்கு செல்லாமல் கோயிலுக்கு வந்த செல்விக்கு மனது சஞ்சல பட்டுக்கொண்டே இருந்தது. என்னவென்று காரணம் தெரியவில்லை ஆனால் ஏதோ ஒன்று தனக்கு நடக்கப் போகிறது என்று மட்டும் மனது எச்சரிக்கை மணியை ஒலிக்க விட்டது.

கோவிலில் முற்றிலும் பூஜை முடிந்து விட ஒரு பக்கம் அன்னதானம் போய்க்கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் பசியாற்ற அங்கு சென்று விட கோயில் வெறிச்சோடி இருந்தது. மடியில் இருந்த கொய்யாக்கணி காரணமே இல்லாமல் சுமையாகத் தெரிந்தது. இதைத்தான் மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் என்று சொல்வார்களோ..?

செழியினை தான் சென்று பார்த்திருக்கக் கூடாது பேசியிருக்கக் கூடாது.. துணிந்து செய்துவிட்டாள்..அதை மாற்ற‌முடியாது. ஆனால் கணவனைக் கண்டவுடன் எல்லாவற்றையும் சொல்லியிருக்க வேண்டும். கணவனிடத்தில் மறைத்தது ஏதோ செய்யக்கூடாத தவறொன்றை செய்துவிட்டதாக தோன்றியது

என்னவானாலும் சரி இன்று இரவு கணவனிடத்தில் எல்லா உண்மைகளையும் கூறிவிட வேண்டும். தான் செழியனை காதலித்தது தங்களுக்குள் இருந்த நீயா நானா என்ற போட்டியில் வெவ்வேறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டது.

அந்த சஞ்சலத்துடனே தற்பொழுது வரை வாழ்ந்து கொண்டிருப்பது அது மட்டும் இன்றி இப்பொழுது செழியனின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இல்லை என்று தெரியவும் தனிமையில் சென்று அவனை‌நலம் விசாரித்துவிட்டு ஆறுதல் கூறியது என எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிவிட வேண்டும் அதன் பிறகு இந்த தெய்வம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை முழு மனதாக ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தபடியே கண்மூடி அமர்ந்திருந்தாள்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
20
அப்பொழுது கோவிலின் வாசலுக்கு வந்த அழகி ஓஹோ வீட்டுக்கு போனா உன் குட்டு உடைஞ்சிடும்னு பயந்து போய் கோயில்ல வந்து ஒளிஞ்சிகிட்டியா எனக் கேட்டாள்.

திடீரென்று தான் முன் கேட்ட குரலை கேட்டு கண்விழித்து சுற்றும் முற்றும் பார்த்த செல்வி என்கிட்டயா பேசினீங்க எனக் கேட்டாள்.

இங்க உன்னையும் என்னையும் விட்டா வேற யாரு இருக்கறது.

ஓஓ.. என்கிட்ட தான் பேசறீங்களா.. நான் சாமிகிட்ட பேசறீங்களோன்னு நினைச்சிகிட்டேன்.

அடடா என்ன ஒரு நடிப்பு.. இதைப்பார்த்து தானே என் புருஷன் மயங்கி கிடக்கறாரு.

ஏய் யார் நீ உனக்கு என்ன வேணும் எதுக்கு சம்மந்தா சம்மந்தம் இல்லாம என்கிட்ட வந்து பேசிட்டு இருக்க என்று குரலில் எரிச்சலை காட்டினாள் செல்வி.

நான் யாருன்னு உனக்கு தெரியாது இந்த நடிப்பெல்லாம் என் புருஷனோட நிறுத்திக்கோ என்கிட்ட வச்சுக்காத குடுமியை பிடித்து ஆஞ்சி புடுவேன்.

யாரு உன் புருஷன் என கேள்வியாக பார்த்த செல்விக்கு அப்பொழுதுதான் அடையாளம் தெரிந்தது.

அழகியை நன்றாக உத்துப் பார்த்தவள் இது செழியனோட மனைவி அழகி தானே..? திருமணம் முடித்தபொழுது பொண்ணும் மாப்பிள்ளையுமாக கோயிலை சுற்றி வரும்போது மறைவில் இருந்து எட்டிப் பார்த்த ஞாபகம்.

அதற்கு முன்பும் அழகி சிறு பெண்ணாக இருக்கும் பொழுது ஊருக்குள் வந்து சென்றிருக்கிறாள் அப்பொழுது சில முறை பார்த்திருக்கிறாள்.. அந்த அழகிக்கும் இந்த அழகிக்கும் நூறு வித்தியாசங்கள் கூறலாம் அந்த அளவிற்கு உருவத்தில் அத்தனை வேற்றுமை இருந்தது.

இந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு மாறிவிட்டாள் அழகி அப்பொழுது கருப்பாக இருந்தாலும் துருதுருவென இருப்பாள்.. பெயருக்கு ஏற்றது போல் தோற்றத்திலும் அழகி தான் அவள். ஆனால் இப்பொழுது மிகவும் கருத்து உடல் ஒட்டிப் போய் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தாள்.

இவளுக்கு என்ன குறை சொத்து சுகம் எல்லாம் இருக்கிறது நன்கு சாப்பிட்டு தன்னை கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டாள் இந்த ஊருக்கே ராணி போல இருக்கலாமே எதற்கு இப்படி ஒரு வறுமையான தோற்றத்தை செயற்கையாக கொடுக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவளுக்கு அதற்கான காரணமும் உடனடியாகவே பிடிப்பட்டது.

செழியனையும் தன்னையும் எப்பொழுதுமே சந்தேக கண்ணோடு பார்க்கிறவள். அதுமட்டுமின்றி செழியனுக்கும் தனக்கும் இன்று வரை ஏதோ ஒரு ரகசிய தொடர்பு இருப்பதாக நம்புபவள்.

செழியனை பழி வாங்குவதற்காகவே திருமணம் செய்து கொண்டு அவனையும் சந்தோஷமாக இருக்க விடாமல் இவளும் சந்தோஷமாக இல்லாமல் நித்தம் நித்தம் சண்டையிட்டு தன்னைத்தானே ஒரு மனநோயாளியாக மாற்றிக் கொண்டிருக்கும் கிராமத்துப் பெண்.

இவளுக்கு இந்த சமயத்தில் வைத்தியம் பார்க்கா விட்டால் என்றுமே வைத்தியம் பார்க்க முடியாது..என்று உணர்ந்த செல்வி அடுத்த நொடியே சூதாறித்துக் கொண்டு நக்கலாக ஓ செழியனோட பொண்டாட்டியா அப்படி தெளிவா சொல்லு என்ன விஷயம் என அதட்டலாகவே கேட்டாள்.

என்ன தப்பெல்லாம் நீ பண்ணிட்டு என்னை மிரட்டற..?

ஏய் முதல்ல வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு உன்கிட்ட பேச எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என முகத்தில் ஒரு அசௌகரிமான பாவத்தைக் கொண்டு வந்து அப்படியே பிடிக்காதது போல திருப்பிக் கொண்டாள்‌ செல்வி‌

அது அழகியை மிகவும் பாதித்துவிட்டது. என்ன இருந்தாலும் கிராமத்து பெண் அல்லவா அவளுக்கு இந்த ஊதாசீனம் எல்லாம் புதுசு சண்டையிட்டால் திருப்பி சண்டையிடுவாள் ஆனால் இப்படிப்பட்ட அவமானங்களை அவளால் ஏற்க முடியாது.

தொண்டை விக்க குரல் கரகரக்க நீ எதுக்கு என் புருஷனை வந்து பார்த்த அவர்கிட்ட அப்படி என்ன பேச்சு வேண்டி கிடக்குது அதும் யாருக்கும் தெரியாமல் தனியா என பட்டென்று கேட்டு விட்டாள்.

அதுவா அந்த தோட்டத்துல கொய்யாப்பழம் எப்போவும் நல்லா இருக்கும்.. ரொம்ப வருஷம் கழிச்சு ஊருக்கு வரவும் நாலு காய் புடுங்கலாம்னு வந்தேன். பார்த்தா உன் புருஷன் உழுதுட்டு இருந்தான் பாத்துட்டு பேசாம வர முடியுமா என்ன இருந்தாலும் சொந்தக்காரன் ஆச்சே அதுவுமில்லாமல் ஒரு காலத்தில் என்னை கட்டிக்கணும்னு ஒத்த காலில் நின்னவன் அதனால எப்படி இருக்குன்னு கேட்டுட்டு வந்தேன்..மத்தபடி அவன்கிட்ட பேச எனக்கென்ன இருக்கு.

அப்போ நீ அவரை ஆசைப்படலையா.

யாரு செழியனையா..உவ்வே.. பாக்கவே அழுக்கா கருப்பா அய்யனார் மாதிரி இருக்கான் அவன் மேல யாராவது ஆசைப்படுவாங்களா என் புருஷனை பாத்தல்ல அவரைப் பாத்துமா நீ இப்படியொரு கேள்வியை கேக்குற உன்னை மாதிரி என் டேஸ்ட் அவ்ளோ மட்டம் கிடையாது.

ஏய் வார்த்தையை அளந்து பேசு இல்ல நாக்க வெட்டுப்புடுவேன் நீ என்ன பெரிய பேரழகியா? என் புருஷனை குறை சொல்ற.

ஓஓ.. இப்படி இருந்துக்கிட்டே உன் புருஷனுக்கு சப்போர்ட் பண்றியா என் புருஷன் மாதிரி உனக்கும் பட்டும் மணியும் பூட்டிவிட்டா உன்னை எல்லாம் கையிலேயே பிடிக்க முடியாது போல அதான் ஆட்டுக்கு வாலை அளந்து வச்சிருக்கான். என நக்கலாக கூறியபடியே கொய்யாக்காயை எடுத்து சாப்பிட தொடங்கினாள்.

அழகி கிட்டத்தட்ட அழும் நிலைக்கு தள்ளப்பட்டால்.. ஆனாலும் செல்விக்கு நன்கு கொடுத்துவிட்டே செல்ல வேண்டும் என முடிவெடுத்தவள் நீ பார்த்தியா என்கிட்ட பட்டும் மணியும் இல்லன்னு அதெல்லாம் நிறையவே இருக்கு வீட்டுக்குள்ள பத்திரமா வெச்சி இருக்கேன்.

தோட்டத்து வேலை செய்யும்போது அதெல்லாம் போட முடியுமா நானும் நல்லது கெட்டதுன்னா எல்லாத்தையும் போட்டுக்கத் தான் செய்வேன் உன் புருஷன் மட்டும் இல்ல என் புருஷனும் எனக்கு எல்லாமே செய்வார் என செழியனை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

ம்ம்..இதுக்கொன்னும் குறைச்சலில்லை.

ஆமா ஊர் பூரா சொல்லிட்டு திரியிறியாம்ல உன் மாமியாக்காரி கேட்ட நகையை போட வக்கில்லாம தான் நான் செழியனை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டேன்னு என் அண்ணி சொன்னாங்க அதான் உன்கிட்டயே நேரடியா கேட்டுடலாம்னு நேரம் பாத்துட்டு இருந்தேன் நீயே வந்து வாய் கொடுத்துட்ட..ஏன் அப்படி சொல்லற..நீ பாத்தியா அதை என இம்முறை அழகியின் வார்த்தையை பிடித்து அவள் பக்கமாகவே திருப்பினாள்.

ஆமா அது உண்மை தான..என் மாமியாகாரி என்கிட்ட அப்படித்தான் சொன்னா.

ஓஓ..அவ புள்ளையை வேணாம்னு சொன்னதுக்கு இப்படிவேற கதை சொல்லி வச்சிருக்காளா..நல்லது..சரி தெரியாம தான் கேட்கறேன் அவ கேட்டது போலவே நகை நட்டு போட்டு இருந்தா கூட இப்போ நான் வாழற பகட்டான வாழ்க்கை எனக்கு கிடைச்சிருக்குமா சொல்லு. நீ அவனை கட்டிட்டு வந்து என்ன பெருசா வாழ்ந்துட்ட. தினமும் சாணி அள்ளற இல்லன்னா மாட்டுக்கு தண்ணி காட்டற..அது தெரிஞ்சே எவளாவது கட்டிப்பாளா. என்னை பாத்தல்ல..பட்டு கட்டிருக்கேன் ..இதை டிரை கிளீன் தான் கொடுப்பேன்.

அதோட செலவு நீ கட்டிருக்க பாரு இந்த சேலையோட விலையை விட அதிகம். நான் வந்த காரை பாத்தல்ல பென்ஸ் காரு..விலை ஐம்பது லட்சம்..உன் மொத்த தோட்டத்தை வித்தாலும் அப்படியொரு காரை வாங்க முடியாது..அதை ஊருக்குள்ள நிறுத்துறதுக்கு கூட இடமில்லை.. வழியில்லாமல் உன் வீட்டுபக்கத்துல நிறுத்திருக்கோம்.

வெயில்ல நிக்குதுன்னு அதுக்கு கூட உன் புருஷன் தான் பந்தல் போட்டுட்டு இருந்தான். நீ சொன்னது போல நான் நகை போட்டு அவனை கட்டிக்கிட்டு இருந்தா அடுத்தவன் காருக்கு பந்தல் தான் போட்டுட்டு இருக்கணும் கார்ல வந்திருக்க முடியாது…இனியாவது உன் மாமியா சொல்லறதை நம்பிகிட்டு இப்படி ஊருக்குள்ள உளறி கிட்டு திரியாத.. எனக்குத்தான் அசிங்கம்.

கருகருன்னு கருங்காலி மரம் மாதிரி இருக்கிற உன் புருஷனுக்கு வேணும்னா வெளிய சொல்லிக்க பெருமையா இருக்கலாம் என்னை மாதிரி ஒருத்தியோட கல்யாணம் பேசினாங்கன்னு ஆனா எனக்கு அப்பப்பா என்று அருவருப்பில் உடம்பை சிலிர்த்தாள்.. அத்தோடு விடாமல் ஆளுதான் அப்படி இருக்கான்னு பார்த்தா விவரமும் அவ்ளோ பத்தாது போல.. கல்யாணம் ஆகி பத்து வருஷம் இருக்கும்ல..என நக்கலாக கேட்டவள் அழகியின் அடிவயிற்றைப் பார்க்கவும் சுளிர் என்று வலித்தது.

அதை கண்டு கொள்ளாத செல்வி நீயும் படிக்காத தற்குறி அவனும் படிக்காத தற்குறி.. ரெண்டு பேரும் நல்ல ஜோடி பொருத்தம்..இதுல அந்த முகர கட்டைக்கு நான் கேக்குதா அதை இதுவும் நம்பிகிட்டு ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரியுது..பே..பே.. என மீதம் இருந்த கொய்யா காயை உண்ண ஆரம்பித்தாள் செல்வி

இந்த அவமானத்தை அழகியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. அதுவரை கண்ணீரை வெளியே விடலாமா வேண்டாமா என்று கேட்டுக் கொண்டிருந்த நீர் கண்களை விட்டு தாண்டியது மனமும் முற்றிலும் நொறுங்கியது தானாகவே அழுகை பொங்க

ச்சீ நீ இவ்ளோ மட்டமான பொம்பளையா உன்னை ஆசைப்பட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக அவரை எந்த அளவுக்கு கேவலமா பேசுற.. ஜாடையா அவரை ஆம்பளையே இல்லங்குற மாதிரி பேசுற தைரியமான பொம்பளையா இருந்தா அடுத்த வருஷம் ஊருக்கு வாடி ஒன்னுக்கு ரெண்டா ஒரே நேரத்தில் பெத்து உனக்கு காமிக்கிறேன் அப்பா தெரியும் அவரு ஆம்பளையா? இல்லையான்னு எனக்கேவியவள்

கலர் என்னடி கலரு..அவரோட குணத்துக்கு கால் தூசி வராது. அவர் சொக்க தங்கம் தெரியுமா இப்போ வரைக்கும் உன்னை பற்றி உயர்வா நெனச்சிட்டு இருக்காரு ஆனா நீ அவரை பத்தி இவ்ளோ கேவலமா தரக்குறைவா நினைச்சுட்டு இருக்க. இது தெரியாம அந்த மனுஷனை நான் என்ன பாடு படுத்திட்டேன்.

தோட்டத்துல வேலை செய்கிறதால கொஞ்சம் அழுக்கா இருக்காரு அவ்வளவுதான் அவரும் குளிச்சிட்டு புதுசு உடுத்தினா உன் புருஷன் எல்லாம் பத்தடி தள்ளி நிக்கணும் பெருசா பேசறா என் புருஷனை பத்தி.. வாந்தி வருதாம்ல்ல அருவருப்பா இருக்காம்ல.. என்னடி பெருசா பொல்லாத காரு என் புருஷன் ஓட்டற டிராக்டருக்கு ஈடாகுமா..ஏதோ பாவம்னு பந்தல் போட்டு குடுத்தா வக்கத்தவன்னு நினைச்சில்ல பேசற.

நீ இந்த ஊரைவிட்டு போறதுக்குள்ள அதைவிட பெரிய கார் வாங்கி காட்டறேன் .. அப்புறம் உன்னை வெச்சுக்குறேன் என அழுதுபடியே சிறுபிள்ளையாய் வீரல் நீட்டி நீட்டி பேசிக்கொண்டே சென்றாள்.

அழகி அழுதபடியே செல்வதை பார்க்கும் பொழுது செல்விக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அழகியிடம் இப்படி பேசாவிட்டால் செழியனின் வாழ்க்கையில் என்றுமே வசந்தம் வராது. அதனால் தான் மனதை கல்லாக்கி கொண்டு செழியனை எவ்வளவு மட்டமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு மட்டமாக பேசி அழகியை தூண்டி விட்டிருக்கிறாள் .

இனி அழகி சந்தேகப்பட்டு செழியனை வாட்டி வதைக்க மாட்டாள்..பழையதை நினைத்து பழிவாங்கும் மாட்டாள். கூடிய விரைவில் அவனுக்கு நல்லதொரு வாழ்க்கையையும் கொடுப்பாள் என்ற நிம்மதியில் மீண்டும் கண் மூடி அமர்ந்தாள்.

மனைவி செல்வியிடத்தில் கோபமாக சண்டையிடுவதை பார்த்து பதறிய செழியன் வேகமாக ஓடி வந்தான். கண்கலங்கியபடி எதிரில் வந்த அழகியைக் கண்டு ஆணியடித்தது போல அப்படியே நின்று விட்டான்.

கணவனை எதிரில் கண்டதும் அடக்கி வைத்த அழுகையெல்லாம் பொங்கியெழ மாமா..என ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டாள்.

ஏய் என்னாச்சி ஏன் அழற என பதறியபடி கேட்கவும்.

என்னை மன்னிச்சிடு மாமா உன் அருமை தெரியாம இத்தனை நாள் உன்னை பாடா படுத்திட்டேன்.. எனக்கெல்லாம் நல்ல சாவே வராது.. வரவும் கூடாது என கதறினாள்.

லூசு மாதிரி உளறாத..இப்போ எதுக்கு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசற.

முதல்ல நீ என்னை மன்னிச்சேன்னு சொல்லு..என்னால தானே எவ எவளோ எல்லாம் உன்னை.. என பேச்சை பாதியில் நிறுத்தியவள்.. மன்னிச்சேன்னு சொல்லிடுமாமா என கெஞ்சுவது போல கேட்டாள்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
20
சரி முதல்ல வீட்டுக்கு வா மீதி அங்க போய் பேசிக்கலாம்.

இல்ல முதல்ல இத்தனை வருஷம் உன்னை கஷ்டப்படுத்தினதுக்கு மன்னிச்சேன்னு சொல்லு.

சரி மன்னிச்சிட்டேன் வா போகலாம்.

கோபம் இல்லையே.

இல்ல.

இனி எப்போவும் உன்னை மரியாதை இல்லாம தரக்குறைவா பேசவே மாட்டேன் மாமா நீ சொக்க தங்கம்.. அந்த அய்யனார் சிலை போல கம்பீரமானவன்.. உன்னை இத்தனை வருஷமா தனியா தவிக்கவிட்டுட்டேன்..என் கையால வாய்க்கு ருசியா ஆக்கிப்போட்டது கூட இல்ல.. நான் பாவி மாமா..பாவி.. உனக்குப் பின்னாடி கல்யாணமானவளுக ரெண்டு பிள்ளை மூணு பிள்ளைன்னு பெத்துட்டு சுத்திட்டு இருக்காங்க ஆனா நான் பத்து வருஷம் ஆகியும் உனக்கு ஓத்த பிள்ளையை பெத்து குடுக்காம அப்படியே வச்சிருக்கேன் மாமா.

நீ எந்த அளவுக்கு என் மேல பாசம் வச்சிருந்தா என் விருப்பத்துக்கு கட்டுப்பட்டு என்னைவிட்டு ஓதுங்கி இருப்ப.

நீ என்ன பண்ணுவன்னு தெரியாது மாமா அடுத்த வருஷம் திருவிழா அப்போ எனக்கு ரெண்டு புள்ளைக வேணும்.

ஏய்..ஊர்ல திருவிழா நடக்குது டி..ஏன் இப்படி கவுச்சியா பேசற.

அப்படி தான் பேசுவேன்..நீ என்னை உண்மையிலேயே மன்னிச்சிட்டா உடனே எனக்கு ரெண்டு புள்ள வேணும்.. அதும் உன்னை மாதிரியே கருப்பா..கருங்காலி மரம் மாதிரி.

சரி வா டவுனுக்கு போய் நீ கேட்டது போல கருங்காலி மரத்துல செஞ்ச ரெண்டு புள்ளையை வாங்கிட்டு வந்திடலாம்.

ஹான் என அவனுடன் நடந்தவள் தீடிரென்று நின்று என்னை நீயும் கேலி செய்யறியா மாமா என கோபமாக கேட்டாள்.

பின்ன என்னடி புள்ள வேணும்னு கேட்டா உடனே எப்படி கொடுக்க முடியும் அதுக்கு எல்லாம் நிறைய வேலை செய்யணும் அதுவும் கருங்காலி மரம் மாதிரி எல்லாம் புள்ள கொடுக்க முடியாது.

என்னை மாதிரியோ இல்ல உன்னை மாதிரியோ தான் கொடுக்க முடியும் நீ கேட்டது மாதிரி கருங்காலி மரம் மாதிரி வேணும்னா கடைக்கு தான் போகணும் என்று சிரிக்காமல் கூற மறுபடியும் என்னை கேலி செய்றியா என அவனை துரத்திக் கொண்டு ஓடினாள்.

அன்றைய பொழுதே ஊரே பார்ப்பது போல கணவனை அழைத்துக்கொண்டு டவுன் சென்று வந்தாள். அத்தோடு விடாமல் மாமா நமக்கு தான் ஏகப்பட்ட நிலபுலம் இருக்குல்ல ..இனி நீ தனியா வேலை செய்ய வேணாம். எல்லாத்துக்கும் ஆள் போடு இனிமே நீ தோட்டத்து வேலை பார்க்க வேண்டாம் வேலை செய்றவங்களை மேற்பார்வை பாரு.

அப்புறம் உனக்கு பிடிக்குதோ இல்லையோ பகட்டுக்காகவாவது இந்த நகை எல்லாம் எப்போவும் போட்டுக்கோ இனிமே இந்த அழுக்கு லுங்கியை‌ கட்டறது கிழிஞ்ச பனியனை‌ போடறதெல்லாம் வச்சுக்காத டவுன்ல இருந்து வாங்கிட்டு வந்த வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைதான் போடனும்.

ஏய் அழகி..உனக்கு யாரு வேப்பிலை அடிச்சி விட்டது..ஓரே நாள்ல இத்தனை அதிர்ச்சியை‌ குடுக்காத என்னால தாங்க முடியாது..முதல்ல நகை எடுத்து உள்ள வை.. நான் இப்போ தோட்டத்துக்கு போகனும்.

நீ போகவேண்டாம் மாமா ஊர் கங்கானிகிட்ட சொல்லியிருக்கேன் நாளைல இருந்து ஆள் அனுப்பி விடுவாங்க..நீ இனிமே தோட்டத்து வேலை செய்ய வேணாம்.

அழகி இது வியாபாரம் இல்ல ஆள் போட்டு பார்க்க..விவசாயம் நீ சொல்லறது போல மேல் பார்வை பார்த்தால் இருக்கிறதும் கொஞ்ச நாள்ல காணாம போயிடும். மாறு அழகி வேணாம்னு சொல்லல அதுக்காக ஒரேடியா மாறாத எனக்கு ரொம்ப பயமா இருக்கு என கேலி போல கூறினான். ஆனாலும் மறக்காமல் மனைவி கொடுத்த ஆடைகளையும் நகைகளையும் போட்டுக் கொள்ள மறுக்கவில்லை.

அடுத்தடுத்து நாட்களிலேயே அழகியிடத்தில் மிகப்பெரியதொரு மாற்றம் இருந்தது. செழியனுக்கு அது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தாலும் கூட அவளாக தானாக மாறவில்லை கண்டிப்பாக செல்வி பின்னால் இருக்கிறாள் என்பதை உணர்ந்தான் கூடவே அவளுக்கு மானசீகமாக நன்றியையும் தெருவித்தான்.

திருவிழா முடித்து ஊர் மெதுவாக காலியாகிக் கொண்டிருந்தது வெளியூர் காரர்கள் அனைவருமே அவரவர் கூடு தேடிச் செல்ல செல்வியும் அவளது குடும்பத்திடம் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள். பின்புறம் இரு குழந்தைகளும் ஏறிக்கொள்ள கணவன் காரை இயக்கவும் எதார்த்தமாக பார்ப்பது போல செழியனின் வீட்டை எட்டிப் பார்த்தாள்.

காலையிலேயே குளித்து ஈரத்துண்டை தலையில் சுற்றிக் கொண்டிருந்த அழகி துவைத்த துணிகை கொடியில் காய வைத்துக் கொண்டிருந்தாள்.முகம் பூரிப்புடன் காணப்பட்டது அவளின் இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக தொடங்கிவிட்டது என்பதை அது சொல்லாமல் சொல்லியது.

கழுத்தில் கனமாக இரு சங்கிலி..கூடவே மென்பட்டு ஓன்றை அணிந்திருந்தவள் செல்வியின் கண்களுக்கு பேரழகியாக தெரிந்தாள். இப்படி பார்க்க ஆசைப்பட்டு தானே அவளை தூண்டிவிட்டது..நன்றாகவே வேலை செய்திருக்கிறது என சந்தோஷம் கொண்டவள் கண்களால் செழியனைத் தேடினாள்.

வாசற்படியில் அமர்ந்திருந்தவன் ஃகாபி குடித்துக்கொண்டே கண்களால் மனைவியை பருகிக்கொண்டிருந்தான். பளிச்சென்ற வெள்ளை வேட்டியும் கையில்லா வெள்ளை பனியன் அணிந்திருந்தவனின் கழுத்திலும் கைகளிலும் தங்கம் மின்னியது.

ஊர் மெச்சும் மனிதன் போல கம்பீரமாக இருந்தான் அதை பார்க்கவே செல்விக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது. மனைவியை கவனித்த கார்த்திகேயன் என்ன செல்வி உன் சொந்தக்கார பையனும் அவர் மனைவியும் இருக்காங்க சொல்லிட்டு போகணும்னு தோணலையா வா ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடுவோம் என்றவன் செல்வியின் பதிலுக்காக காத்திருக்காமல் காரை விட்டு இறங்கினான்.

ஏங்க அதெல்லாம் ஒன்னும் வேணாம் முதல்ல வண்டியை எடுங்க.

செல்வி கார் வெயில்ல நிக்குதுன்னு சொந்த செலவில் பந்தல் எல்லாம் போட்டுக் கொடுத்து இருக்காங்க போகும் போது சொல்லாம போனா நல்லாயிருக்காது.. இறங்கி வா சொல்லிட்டே போகலாம் என்ற படியே அவள் பக்கமாக கதவை திறந்து விட்டான்.

மறுக்க முடியாமல் இறங்கியவள் தயங்கியபடியே கணவனின் பின் நடந்தாள்.

என்ன செழியன் சூரியனோட ஓட்டுமொத்த பிரகாசத்தையும் நீங்க ஓருத்தரே வாங்கிகிட்டா நாங்கல்லாம் என்ன செய்யறது என கேலிபோல செழியனை பாராட்டியபடி உள்நுழைந்தான் கார்த்திகேயன்.

அவர்களைக் கண்டதுமே அழகி முகத்தை திருப்பிக் கொண்டு உள் செல்ல செழியனோட சிறு கூச்சத்துடனே வாங்க வாங்க என சந்தோஷமாக வரவேற்றான். கூடவே செல்வியைப் பார்த்து கண்களிலேயே நன்றியையும் தெரிவித்தான்.

அவனது நன்றியை உள்வாங்கிய செல்வியும் கண்களை மூடி தலையசைத்தபடியே அதை ஏற்றுக் கொண்டாள். இதை கவனித்தும் கவனிக்காதது போல உள் சென்ற கார்த்திகேயன் வீடு ரொம்ப அழகா இருக்கு பட்டணத்தில் இந்த மாதிரி எல்லாம் காத்தோட்டமான வீட்டை பார்க்கவே முடியாது என்னதான் இங்க நாங்க பெருசா அலட்டிகிட்டாலும் பட்டணத்தில் புறா கூண்டு மாதிரி இருக்கற சின்ன வீட்டுக்குள்ள தான் அடைஞ்சிக்கணும் என்ன இருந்தாலும் கிராமத்து வாழ்க்கை வாழ்க்கை தான் என சிலாகித்து பேசியவன்.

அழகியைப் பார்த்து என்னம்மா முதல் முதல்ல வீட்டுக்கு வந்திருக்கோம் எங்களுக்கு குடிக்கவெல்லாம் எதுவும் தர மாட்டியா எனக் கேட்க.. இதோ கொண்டு வர்றேன் என செல்வியை பார்த்து பற்களை கடித்துக் கொண்டே கூறியவள் முறைத்தபடியே உள் சென்றவள் சற்று நேரத்தில் தண்ணீர் எடுத்து வந்து கார்த்திகேயனிடம் கொடுத்தாள்.

நன்றிம்மா எனக்கூறி விட்டு அதை வாங்கி பருகியவன் மீதியை செல்வியிடம் கொடுத்தான். அதை அவள் வாங்கும் முன் கார்த்திகேயன் கையில் இருந்த சொம்பை வாங்கிக்கொண்ட அழகி செல்விக்கு தண்ணீர் கொடுக்காமலே உள் சென்றாள்.

இதை பார்த்ததும் கார்த்திகேயனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை மனைவியை சைடு கண்ணின் பார்க்க அவளோ உள் செல்லும் அழகியை முறைத்துக் கொண்டிருந்தாள்.

கொழுப்பு மட்டும் அடங்காது என வாய்க்குள் முனுமுனுத்தவள் கணவனைப் பார்த்து கிளம்பலாம் என்பது போல ஜாடை செய்தாள்.

ஒரு நிமிஷம் இரு வீட்டை நல்லா சுத்தி பாத்துட்டு வரேன் அதுவரைக்கும் செழியனோட பேசிட்டு இரு என்ற பின்கட்டிற்கு சென்றான். கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டிருந்த அழகியைப் பார்த்து

என்னம்மா.. வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது.

எங்களுக்கு என்ன உங்களை மாதிரி பகட்டான வாழ்க்கை இல்லனாலும் நாங்களும் கௌரவமா தான் ஊருக்குள்ள வாழ்ந்துட்டு இருக்கோம் என திரும்பி பார்த்தவள் ஆமா இந்த மாதிரி துணி எல்லாம் எங்க கிடைக்குது பட்டணத்தில் மட்டும்தான் கிடைக்குமா என்ன..? என கேட்டாள்

தன்னை ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டவன்.. இங்கேயும் டவுன்ல கிடைக்கும் இது செல்வியோட அண்ணன் வாங்கித் தந்தது தான்.

ம்ம்.. எங்க ஊரு துணியெல்லாம் நீங்க போடுவீங்களா..!!! பட்டணத்துக்காரர் ஆச்சே அதனால பட்டணத்தில் இருந்து தான் வாங்கிருப்பீங்கன்னு நினைச்சு கேட்டுகிட்டேன் என நொடித்துக் கொண்டவள் திடீரென்று நிஜமாலுமே அந்த கார் அம்புட்டு விலையா என சம்பந்தமே இல்லாமல் கேட்டாள்.

அவள் என்ன கேட்க வருகிறாள் என்பது ஒரு நிமிடம் கார்த்திகேயனுக்கு புரியவில்லை புரிந்ததுமே பட்டென்று முத்துப்பல் தெரிய சிரித்தான் கூடவே ஐய்யோ அழகி உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உன் பேச்சு உன் வெகுளித்தனம் சான்சே இல்ல தெரியுமா.

உண்மையிலேயே என்று பேச்சை நிறுத்தியவன்..இப்போ இதை நான் சொல்லக்கூடாது எனக்கு ரெண்டு குழந்தைக வந்தட்டாஙக என்றான். கேள்வியாக அவனைப் பார்த்தவளிடம். போன வாரம் பார்த்த அழகிக்கும் இந்த வாரம் பார்க்கற அழகிக்கும் நிறையவே வித்தியாசம் தெரியுது.

உன் முகத்தில் இருக்கற சந்தோஷம் பூரிப்பு இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எப்போவும் இப்படியே இரு.. அதுவும் உனக்காக மட்டும் மத்தவங்களுக்காக இல்ல என்றவன். என்ன அப்படி பார்க்கற அழகி இந்த தீடிர் மாற்றம் செல்வியால வந்தது தானே என்று கேட்கவும்.

அப்படின்னு முழுசா சொல்ல முடியாது..ஆனா அவளும் ஓரு காரணம் அதையும் மறுக்க மாட்டேன்.. கோபம் கொப்பளித்தது அவளது குரலில்.

இதான்.. இதைத்தான் நான் சொன்னது..நீ மாறல அழகி இப்போ உன்னோட இந்த மாற்றம் தற்காலிகமானது.. இது தப்பு உன்னை நீ மாத்திக்கோ சந்தோஷமா இரு செழியனையும் சந்தோஷமா வச்சுக்கோ.

உங்களுக்கு என்ன அண்ணா சுளுவா சொல்லிட்டீங்க..என்னால சட்டுன்னு மாற முடியல.. கோபம் எனக்கு இயல்பு அதை மாத்திக்க முடியாது.

சரிதான் உன் கோபம் இயல்புன்னு சட்டுன்னு முறையவே மாத்திட்ட.

இங்க பாருங்க அண்ணா எனக்கு நடிக்க எல்லாம் வராது அந்நிய ஆம்பளன்னா எனக்கு அண்ணன் தான் மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியாது என் வீட்டில் அப்படித்தான் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்காங்க என்று கூறவும்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
20
இம்முறை மென்புன்னகை சிந்தியவன் அதான் அழகி நீ ..அதனால தான் பேரழகியா என் கண்ணுக்கு தெரியற..உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கனும்னு நானும் ஆசைப்படறேன்.

எல்லா செல்வங்களும் உனக்கு கிடைக்கும்..அப்படியே செழியனோட முழு மனசும்.

அது கஷ்டம் தான் அண்ணா.. கடைசி வரைக்கும் அவர் மனசுல எனக்கு முழு இடம் கிடைக்காது.

ஏன் அப்படி சொல்லற.

அதெல்லாம் அப்படித்தான் அண்ணா.. உங்க கிட்ட வெளிப்படையா சொல்லவும் முடியாது சொன்னாலும் அது தப்பாயிடும் விடுங்க இப்போ சாப்பிடறீங்களா மாவு இருக்கு ரெண்டே நிமிஷத்துல கிட்னி ஊத்திடுவேன் குழந்தைங்க ரொம்ப நேரமா கார்ல விளையாடுறாங்க கூப்பிடுங்க என்றபடி அடுப்பை பற்ற வைத்தாள்.

பின்னோடு வந்து அதை அணைத்தவன்

செழியனை முழுசா நம்பு அழகி..அவரோட மொத்த அன்பும் உனக்குத்தான் நான் நம்பல என் செல்வியை என்று சொல்லவும். அண்ணா என அதிர்ச்சியை காட்டினாள்.

ஏன் ஷாக் ஆகற அழகி.. எந்த காதலை நினைச்சு உன்னோட பத்து வருஷ வாழ்க்கையை நரகம் ஆக்கி கிட்டியோ அதே காதலை வச்சு தான் நான் என் வாழ்க்கையை வசந்தமாக்கிட்டேன்.

நீ உன் கணவன் இன்னொருத்தியை நினைச்சுக்கிட்டே உன் பக்கத்துல வர்றான் உன்னை தொடரான்னு நினைச்சு அவரை உன் பக்கத்திலேயே சேர்த்துக்கல. ஆனா நான் அவ மனசுல இருக்கறவனை மறந்து போற அளவுக்கு திகட்ட திகட்ட காதலை கொடுத்து அவளோட சந்தோஷமா வாழனும்னு முயற்சி எடுத்தேன் நான் ஜெயிச்சுட்டேன். இன்னைக்கு எங்க இல்வாழ்க்கையோட அடையாளமா இரண்டு குழந்தைங்க இருக்காங்க.

கண்டிப்பா செல்வி மனசுல பழைய காதல் இல்லன்னு உறுதியா சொல்லமாட்டேன். இருக்கலாம் ..ஆனா அதை மறக்க வைக்கற அளவிற்கு என் காதலை ஓவ்வொரு முறையும் நான் அவளுக்கு உணர்த்தியிருக்கேன். அதனாலதான் இப்போ அவங்களை தனிமைல பேச விட்டிருக்கேன்.. பாரேன் எவ்ளோ அழகா இருக்கு அதைப்பார்க்க இப்போ அவங்களைப்பார்த்து உனக்கு சந்தேகப்பட தோணுதா..?

இல்ல என்பது போல தலையசைத்தவள் எப்படி அண்ணா உங்களால இவ்ளோ சுலபமா இந்த விஷயத்தை எடுத்துக்க முடியுது.

அதுதான் அழகி நம்பிக்கை நம்ம துணையை நாம முழுமனசா நம்பினா அவங்களை அவங்களா இருக்க விட்டா எல்லாமே சுலபமா ஆகிடும்.

உங்களுக்கு எப்போ அவங்க ரெண்டு பேர் பத்தியும் தெரியும்.

என் கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாளிலேயே எனக்கு எல்லா விஷயத்தையும் செல்வியோட அண்ணனை சொல்லிட்டாங்க. என் கல்யாணத்துக்கு முன்னாடி அவளோட திருமணம் தடை பட்டுடிச்சின்னு சொல்லித்தான் எனக்கு செல்வியோட போட்டோ காமிச்சாங்க எனக்கு அது ஒரு பெரிய விஷயமா தெரியல சரின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

ஆனா செல்வி என்னோட அன்யோனியமா இருந்த மாதிரி எனக்கு தெரியல.. நான் பக்கத்துல போனால பயந்து நடுங்குவா..எதையோ மறைக்கறான்னு புரிஞ்சது அது மட்டும் இல்லாம ஊர பத்தி பேசினாலே ரொம்ப கோபமாயிடுவா..அவ அண்ணன் பலமுறை கூப்பிட்டும் வரவே இல்லை அவ்வளவு ஏன் அவளோட அண்ணன் கல்யாணத்துக்கு கூட வரலைன்னா பார்த்துக்கோ. அப்போ தான் காரணம் என்னவா இருக்கும்னு தேட ஆரம்பிச்சேன்.

ஏன் என் மனைவியைப்பற்றி யார் யார்கிட்டயோ விசாரிக்கணும்னு நேரடியா அவகிட்டயே கேட்கலாம்னு ஒரு நாள் பேச்சு கொடுத்தேன் ஆனா அவ ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு அழ ஆரம்பிச்சிட்டா அதனால அவ கிட்ட கேட்கிறத விட அவன் அண்ணன் கிட்ட கேட்கலாம்ன்னு‌ அவர்கிட்ட நிலமையை சொல்லி கெஞ்சி கேட்கவும் அவர் உண்மை எல்லாத்தையும் மறைக்காம சொன்னார் அதன் பிறகு தான் எனக்கு செல்வி மேல் காதலே அதிகமாச்சு.

அவளோட கடந்த காலத்தைப்பற்றி இப்போ வரைக்கும் நான் கேட்டதே கிடையாது.. அவளும் எனக்கு தெரியாதுன்னு நினைத்துதான் என்னோட வாழ்ந்துட்டு இருக்கா அவ நம்பிக்கையை ஏன் கெடுக்கணும்னு இப்போ வரைக்கும் நானும் காமிச்சுக்கிட்டதே கிடையாது.

செல்வி அப்பப்போ தனிமையில அழுவா என்ன காரணம்னு அவ நடவடிக்கை கவனிச்சப்போ தான் தெரிஞ்சது. அவ குற்ற உணர்ச்சியில் குமையறது. செழியனுக்கு பெருசா அநியாயம் செஞ்சிட்டதா அவ நம்பினா.

அது அவளை விட்டு போகனும்னா அவ கண்டிப்பா ஒருமுறை இந்த ஊருக்கு வரணும் செழியனோட மனம் விட்டு பேசணும்னு நினைச்சேன் அதனாலதான் அவங்க அண்ணன் மூலமாவே ஊருக்கு வர வெச்சேன்.

நான் நெனச்சதும் நடந்துருச்சு இப்போ அவ மனசுல இருந்த பழைம காதலும் போயிடுச்சி குற்ற உணர்ச்சியும் போயிருச்சு.செழியனோட வாழ்க்கையையும் சரி பண்ணிட்டா அப்படின்னு நம்புறேன்

இப்போ அவங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல நட்பு மட்டும்தான் இருக்கு. இனிமே செல்வியோட மனசு புல்லா நான் மட்டும் தான் இருப்பேன்.. அவளுக்குள்ள இருந்த சஞ்சலம் காணாம போயிடும் அது போதும். அதே போவ செழியனோட வாழ்க்கையையும் மாற்ற வேண்டியது உன் கடமை அதை பண்ணுவ என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.

சினிமாவுல காட்டறது போல முதல் காதல் மாறாது..மறையாதுன்னு சொன்னாலும் கூட எனக்கு கவலையில்லை. அவங்களோட காதல் அப்படியே அவங்களுக்குள்ள வாழ்ந்துட்டு போகட்டும் அதனால நமக்கு என்ன நம்மகிட்ட உண்மையா இருக்காங்களா அது போதும்.

அதனால் நீயும் செழியனோட கடந்த காலத்தை கிண்டி கிளறாமல் காலத்து கிட்ட ஓப்படைச்சிட்டு அதன் போக்கிலேயே வாழப் பாரு கண்டிப்பா உன்னோட அன்பு உண்மையாவும் நேர்மையாக இருந்தா கண்டிப்பா செல்வியை மறந்துட்டு உன்னை முழு மனசோட ஏத்திக்கிட்டு உன்னோட குடும்பம் நடத்துவான். இதை ஒரு அண்ணனா உனக்கு நான் சொல்றேன் .

சரி அழகி நாங்க கிளம்பறோம் நேரம் ஆகிடுச்சி குழந்தைங்க ரொம்ப நேரமா கார்ல தனியா இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரம் போகாம விட்டா ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சுக்குவாங்க எப்போ எதுனாலும் அண்ணனை கூப்பிடு..அடுத்த நிமிஷம் உனக்காக இங்க இருப்பேன் என்றபடி அவனது விசிட்டிங் கார்டை எடுத்து அவளது கையில் கொடுத்துவிட்டு முன் பக்கமாக வந்தான்.

செல்வியும் செழியனும் அவர்களுக்குள் இருந்த காதல்,ஈகோ அனைத்தையும் ஓதுக்கு வைத்துவிட்டு பழையகதைகளை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்ததும் இருவருமே எழுந்து நிற்க என்ன செல்வி பழைய கதைகள் எல்லாத்தையும் பேசிட்டியா இல்ல இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா என கார்த்திகேயன் கேட்டான்.

இருவருமே எதுவும் பேசாமல் மௌனமாக தலைக்குனிய அப்படியே மிச்சம் இருந்தால் அடுத்த வருஷம் திருவிழாக்கு வந்து பேசிக்கலாம் என்றவன் செல்வியை பார்த்து இனி என் மாமியார் ஊருக்கு அடிக்கடி வரலாம்தானே என்று கேட்கவும் ம்ம் என சம்மதம் தெரிவித்தாள்.

அப்புறம் ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்க..மீதிகதையை ரெண்டு பேரும் அடுத்த முறை பேசிக்கோங்க என்றவன் அழகியைப் பார்த்து என்ன தங்கச்சி நான் சொல்லறது சரிதானே.

சரிதான் என அழகியும் புன்னகைத்தபடியே ஆமோதித்தாள்.

இம்முறை செல்வியை அதே புன்னகையுடன் எதிர்கொண்டவள் இனி வருஷம் தவறாமல் திருவிழாக்கு வந்துடனும் நான் உங்களை எதிர்பார்த்துட்டு இருப்பேன் என்றாள்.

செல்வியும் நீங்க ரெண்டு பேரும் சென்னைல இருக்கற என்வீட்டுக்கு வரணும் உங்களை நானும் எதிர்பார்ப்பேன் என பதிலுக்கு கூறினாள்.

அதன் பிறகு பரஸ்பரம் இரு ஜோடிகளும் தலையசைத்துப்படி விடை பெற காரில் ஏறிய கார்த்திகேயன் சிரித்த முகமாக நின்ற அழகியையும் செழியனையும் பார்த்து விட்டு நாம கொஞ்சம் முன்னாடியே இந்த ஊருக்கு வந்திருக்கனுமோ எனக்கேட்டான்.

கணவனை காதலுடன் பார்த்தவள் ம்ம் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம் என்றவள் அர்த்தம் பொதித்த புன்னகையுடன் கணவனின் கையை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனது தோளிலேயே நிம்மதியுடன் சாய்ந்தாள்.

இனி அவளது மனதில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் கிடையாது அவளுடைய காதல் விழிப்பு வந்த பிறகு மறந்து போகும் கனவாகி போனது. அத்தோடு இல்லாமல் செழியனின் கரடுமுரடான வாழ்க்கையையும் சரி செய்துவிட்டாள் அந்த நிம்மதியுடன் அவளது இல்லம் தேடி பயணமானாள்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கார்த்திகேயன் மனைவியின் கடந்த காலத்தை பற்றி கேட்கப் போவதும் கிடையாது அவனுக்குத் தெரிந்ததாக காட்டிக் கொள்ளப் போவதும் கிடையாது.

மனைவியின் குற்ற உணர்ச்சியை போக்கி விட்டான் அது போதும் அவனுக்கு..இனி அவள் அவனுக்காக மட்டுமே வாழ்வாள்.. இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இருக்காது செல்விக்கு. அவளது சந்தோஷமே அவனது சந்தோஷம் தன் தோளில் சாய்ந்திருந்த மனைவியின் உச்சியில் முத்தமிட்டு காரை மிதமான வேகத்தில் இயக்கினான். இனி அவனுடைய வாழ்க்கையும் அந்த பயணம் போல இனிமையானதாகவே இருக்கும்.

முற்றும்.
 
New member
Joined
Nov 23, 2024
Messages
3
சூப்பர். மனசுக்கு நிறைவான கதை. நன்றி அகிலா
நன்றி எதற்காக அக்கா படித்ததற்கும் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கும் நான் தான் கா நன்றி சொல்லனும்கா.

மிக்க நன்றி கா
 
Top