• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
22
பாதை மாறிய பயணங்கள் – சுதா ரவி

மண்டபத்தின் வாசலில் சரம்சரமாகத் தொங்கிக் கொண்டிருந்த மின் விளக்குகள் இலேசாக அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது. மறுநாள் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

மாப்பிள்ளையின் தந்தையான நாகராஜன் தனது கல்லூரிக் கால நண்பர்களுடன் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு. அதிலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்தில் இருப்பவர்கள். திருமணத்தைச் சாக்காக வைத்து முன்கூட்டியே முடிவு செய்து தங்கள் சந்திப்பிற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டனர்.

நாகராஜ், சந்திரசேகர், முருகேசன், பிரகாஷ், சுந்தரம் மற்றும் சைந்தவி இவர்கள் தான் நட்பு வட்டம். கல்லூரியில் இவர்கள் அறுவரின் நட்பைப் பற்றிப் பேசாதவர்களே இல்லை எனலாம். அந்தக் காலத்தில் ஆண் பெண் நட்பு என்பது மிகவும் அரிதானது. அதிலும் ஐந்து ஆண்களுடன் ஒரு பெண் நட்பாக இருக்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் இருந்த கால கட்டம்.

பலரின் பார்வைகள் வேறு விதமாக இருந்தது. ஆனால் சம்மந்தபட்டவர்களோ யாருமே அதை கண்டு கொள்ளவில்லை.

முதல் வருடத்தில் நட்பாக இருந்த பிரகாஷும் சைந்தவியும் மறுவருடத்தில் காதலர்களாக அடுத்த கட்டத்தை எட்டினர். அதை நண்பர்கள் அனைவரும் இயல்பாக ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இடையே இருந்த அந்தப் புரிந்துணர்வை கண்டு மற்ற தோழமைகள் அனைவரும் ரசித்தனர்.

காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் அனைத்தும் மாறிப் போயிருந்தாலும் நால்வரின் வீட்டில் மட்டும் காதல் என்கிற வார்த்தை வந்து விட்டால், அது பிரகாஷும், சைந்தவியும் தான் என்று பேசுவார்கள். அது அவர்களின் குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை. அந்த இருவரையும் பார்த்து விட வேண்டும் என்கிற ஆவல் அவர்களுக்கு இருந்தது.

நண்பர்களின் குடும்பங்களுடன் அலைப்பேசி வழி தொடர்பிருந்தது. ஆனால் நேரில் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனது . இதோ இப்போது கூட அனைவரும் வந்திருக்க, சைந்தவி மட்டும் மறுநாள் காலை தான் வர முடியும் என்று சொல்லி விட்டாள்.

பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் அந்த நினைவில் மூழ்கி இருக்க “சைந்தவி எப்படி இருக்கா நாகா?” என்றான் பிரகாஷ் மெல்லிய குரலில்.

அவன் அப்படிக் கேட்டதும் மற்றவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அன்று சைந்தவியை திருமணம் செய்து கொள்ள கேட்டு அவள் வீட்டிற்குச் சென்று அங்கு அவளது தந்தை மூர்க்கமாகப் பேசி விரட்டி அடித்ததை நினைவு கூர்ந்தார்கள். அதன் பின் அவளிடம் வீட்டை விட்டு வந்துவிடு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கெஞ்சிப் பார்க்க, அவளோ தந்தையின் சம்மதம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று சொல்லி மறுத்து விட்டாள்.

அவளின் எதிர்பார்ப்பை மொத்தமாக உடைத்து அவளைச் சிறை வைத்துத் தான் நினைத்தப் பையனுக்கு திருமணம் செய்து விட்டே ஓய்ந்தார் அந்தத் தந்தை. அதில் சுக்குநூறாக உடைந்து போனான் பிரகாஷ். அவனை மீட்டெடுக்கப் பெரும்பாடுபட்டார்கள் நண்பர்கள்.

அவளின் திருமணம் முடிந்து ஆறு மாதம் வரை அவனால் அதை ஏற்க முடியாமல் இருந்தது. வாழ்க்கையே முடிந்து போன உணர்வுடன் சுற்றிக் கொண்டிருந்தவனை மாற்றியது அந்த நண்பர் குழாம். அதன் பின்னர் யூ.எஸ்ஸில் வேலை கிடைத்து அங்கே சென்று விட்டான்.

மூன்று வருடங்களுக்குப் பின் அவனது திருமண அழைப்பிதழ் அனைவருக்கும் கிடைத்தது. அதைக் கண்டு அவன் மனம் மாறி விட்டது என்பதை எண்ணி நிம்மதி அடைந்தனர். ஆனால் சைந்தவியின் வாழ்க்கையோ சந்தேகப்படும் கணவனுடன் போராடி, ஒரு விபத்தில் இறந்தும் போயிருந்தான். பிரகாஷின் திருமண அழைப்பிதழைக் கண்டு மனதிற்குள் ஒரு நிம்மதி பிறந்தாலும், தன் நிலை கண்டு அவன் தடுமாறி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அதனால் நண்பர்களிடம் தான் வரவில்லை என்கிற செய்தியைத் தெரிவித்து எக்காரணம் கொண்டும் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை அவனுக்குத் தெரிவிக்கக் கூடாது என்றிருந்தாள். அவர்களும் அவள் சொன்ன மாதிரி அவளைப் பற்றிய விஷயங்களை அவனிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. அவள் தனது திருமணத்திற்கு வரவில்லை என்பதில் சிறு வருத்தம் இருந்தது பிரகாஷிற்கு.

அன்றைய நினைவுகளில் மூழ்கிய அனைவரும் பிரகாஷின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

“நான் கேட்டேனே சைந்தவி எப்படி இருக்கா? அவளுக்கு எத்தனை குழந்தைகள்?” என்றான் மீண்டும்.

முதலில் சுதாரித்துக் கொண்ட சந்திரசேகர் “நல்லா இருக்கா பிரகாஷ்” என்று மட்டும் சொல்லி விட்டு மற்றவர்களைத் தயக்கத்துடன் பார்த்தான்.

“அவளும் அவள் கணவரும் தானே வருவார்கள்”.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இதற்கு மேலும் அவனிடம் மறைத்து எந்த உபயோகமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு நாகராஜ் மெல்ல “சைந்தவி வாழ்க்கையில் நிறைய நடந்து போச்சு பிரகாஷ்” என்றான்.

அந்நேரம் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஷ்யாம் பிரகாஷின் இளைய மகன்.

அவனைக் கண்டதும் “டேய்! நீ எங்கே-டா இங்கே?” என்றார் அதிர்ந்து.

சிறு புன்னகையுடன் “நாகா உங்களுக்கு பிரெண்ட். மனோஜ் எனக்கு பிரெண்ட். அவன் என்னைக் கல்யாணத்துக்கு அழைத்திருந்தான். அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றான்.

நாகா எழுந்து வந்து அவனை அணைத்துக் கொண்டார்.

“மனோவைப் பார்த்தியா? எங்களுடைய நட்பு அடுத்த தலைமுறைக்குத் தொடர்வது சந்தோஷமா இருக்கு ஷ்யாம்”.

“அவனைப் பார்த்துவிட்டு தான் வந்தேன் அங்கிள்” என்றவனின் பார்வை அங்கிருந்தவர்களைச் சுற்றி வர “சைந்தவி ஆண்ட்டி வரலையா?” என்றான் .

“நாளைக்கு காலையில வரேன்னு சொல்லி இருக்கா”.

“ஒ...குட். நானும் இங்கே இருக்கலாமா? இல்ல எதாவது முக்கியமாகப் பேசுறீங்களா?”

அவனதுக் கேள்வியைக் கண்டு சிரித்த முருகேசன் “வா! வா! வந்து உட்கார். சும்மா பழையக் கதைகளை எல்லாம் பேசிகிட்டு இருந்தோம்” என்றார்.

பிரகாஷோ மகன் பேசிக் கொண்டிருந்ததைக் கவனிக்காமல் யோசனையுடனே அமர்ந்திருந்தான்.

நாகா அவன் முதுகில் தட்டி “என்ன தீவிர யோசனை?” என்றான் சிரிப்புடன்.

“இல்ல ஷ்யாம் வந்தப்போது சைந்தவிப் பற்றி என்னவோ சொன்னியே. அவள் வாழ்க்கையில் நிறைய நடந்துப் போச்சுன்னு. என்ன ஆச்சு?”

தந்தை தீவிர முக பாவத்துடன் கேட்டுக் கொண்டிருப்பதை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான் ஷ்யாம்.

அவனனுடையக் கேள்வியைக் கண்டு இலேசாக முகம் சுருங்கிய சுந்தர் “என்ன சொல்றது பிரகாஷ்? அவங்கப்பா உனக்குக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு ஒரு மெண்டலுக்குக் கட்டி வச்சிட்டார். அவளுக்கு ஒவ்வொரு நாளும் டார்ச்சர் தான். இரண்டு வருஷம் இப்படியேப் போச்சு. ஒரு நாள் செய்த பாவத்திற்கு ரோட் ஆக்சிடென்ட்லப் போய் சேர்ந்துட்டான்” என்றான் சலிப்பாக.

“வாட்!” என்று அதிர்ந்தே விட்டான் பிரகாஷ்.

“ம்ம்...உன்னுடைய கல்யாண சமயத்தில் அவள் வாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் இது எதையுமே உன்னிடம் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டா” என்றான் முருகேசன்.

அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்ட பிரகாஷின் முகம் இருண்டு போனது. மனமோ உள்ளுக்குள் வலித்தது. அவளின் வாழ்க்கை முடிந்ததை அறியாது தன் வாழ்வுத் தொடங்கியதை எண்ணி மனம் வருந்தினான். ஷ்யாம் தந்தையின் முகத்தில் வந்து போன உணர்வுகளைக்ள் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவரின் கையைப் பற்றிக் கொண்டவன் “இதுல உங்க தவறு எங்கேயும் இல்லப்பா. அவங்களை நினைத்துக் கவலைப்படாதீங்க. நிச்சயமாக ஆண்ட்டி நல்லா இருப்பாங்க” என்றான்.

கரகரத்த குரலில் “குழந்தை இருக்கா?”

“இல்ல...”

அவனது இதயம் உருகிப் போனது. அவளது வாழ்க்கையின் கடினமான நேரங்களில் ஒரு தோழனாகக் கூட தான் இல்லாமல் போனதை எண்ணி மனம் ரத்தக் கண்ணீர் வடித்தது.

“அவளுடையத் துயரத்தைத் தைரியமாகக் கடந்து வந்திருக்கிறாள். அதனால் நாங்கள் யாரும் அதைப் பற்றிய விவரங்களை அவளுடன் பேசுவதில்லை பிரகாஷ். நாளை நீயும் பார்க்கும் போது அப்படியே இரு. அவளுக்குத் தேவை பச்சாதாபம் இல்லை நம்முடைய நட்பு தான்”.

யார் என்னப் பேசினாலும் அந்த வார்த்தைகள் அனைத்தும் அவனது வருத்தத்திற்குத் தீர்வாக அமையவில்லை. ஷ்யாம் தான் தந்தையின் கரங்களை வருடிக் கொண்டே இருந்தான்.

“உன்னுடைய மனைவி இறந்தச் செய்திக் கேட்டு அவளுக்கு வருத்தம். ஆனால் தன்னுடைய உணர்வுகள் எதையுமே அவள் வெளிப்படுதிக்கொள்ள மாட்டாள் எப்பொழுதும் போல” என்றான் நாகா.

“நா...நான் எப்படி அவளை எதிர்கொள்வேன் நாகா? அவள் அவ்வளவு கஷ்டத்தில் இருக்கும் போது என்னுடைய வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்திருக்கேன்” என்றார் கலங்கியக் கண்களுடன்.

“அப்பா!” என்றழைத்துத் தந்தையை அணைத்துக் கொண்டான்.

அவனுக்குத் தந்தையின் இந்தக் கலக்கம் புதிது. தாய் இறந்த போது கூட அக்காவையும், தன்னையும் அரவணைத்துத் தனது கலக்கத்தைக் காட்டாமல் இருந்து கொண்டவர். சைந்தவியின் நிலையைக் கேட்டதில் இருந்துத் தவிக்கும் இந்தத் தவிப்பு புதிது. இது தான் காதலின் பரிமானமோ என்று எண்ணினான்.

நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவனைச் சமாதானப்படுத்திவிட்டு உறங்கச் சென்றனர். தந்தையும், மகனும் மட்டும் உறங்காமல் விழித்திருந்தனர். அவனுக்கு சைந்தவியின் வாழ்க்கையைப் பற்றிய அனைத்தும் மனோஜ் மூலமாக முன்பே தெரியும். இந்தத் திருமணத்திற்கு வந்ததே ஒரு முடிவோடு தான் வந்திருந்தான். அதிலும் தந்தையின் தவிப்பையும், துடிப்பையும் பார்த்தவனுக்குத் தனது முடிவு சரி தான் என்று உறுதிபடுத்திக் கொண்டான்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
22
மறுநாள் காலைப் பரபரப்புடன் விடிந்தது. திருமணத்திற்கானச் சடங்குகள் ஆரம்பித்திருக்க, சொந்தங்களும், நட்புகளும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். நாகாவின் தோழர்கள் அனைவரும் குளித்துத் தயாராகி மண்டபத்தில் வந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் மனைவியரும் நாகாவின் மனைவியோடு பேசியபடி பெண்ணிற்காகக் காத்திருந்தனர்.

ஷ்யாம் தான் ஒருவித படபடப்புடன் வாசலை அடிக்கடிப் பார்த்தவண்ணம் இருந்தான். சுமார் ஒரு மணி நேரம் சென்ற நிலையில், அவன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவரைக் கண்டான்.

மெல்லிய சரிகை வைத்த பட்டுபுடவையில் தலையில் ஆங்காங்கே வெள்ளி நரை தெரிய, ஒருவித கம்பீரத்தோடு நடந்து வந்த சைந்தவியைக் கண்டான். மற்றவர்கள் கவனிக்கும் முன்பு தானே முன்னேச் சென்று “ஹாய் ஆண்ட்டி! நான் ஷ்யாம். பிரகாஷயுடைய மகன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அவனைப் பார்த்ததுமே அவள் கண்களில் ஒரு திகைப்பு. ஷ்யாம் பிரகாஷின் சிறு வயது செராக்ஸ் காப்பிப் போல இருப்பான். அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவள் இதழில் மெல்லியப் புன்னகை.

அவன் கரங்களைப் பற்றிக் கொண்டவள் “அப்படியே பிரகாஷ் மாதிரியே இருக்க ஷ்யாம்” என்றாள் விழிகள் விரிய.

“வாங்க ஆண்ட்டி உங்கள் பிரெண்ட்ஸ் எல்லாம் அங்கே இருக்காங்க” என்று அழைத்துக் கொண்டுச் சென்றான்.

“நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்ல ஷ்யாம். உன்னைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்” என்றாள் மகிழ்ச்சியோடு.

அவளை அழைத்துச் சென்று நண்பர்களின் கூட்டத்தில் விட்டு விட்டு ஓரமாக ஒதுங்கி அமர்ந்தவன் தந்தையின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வந்ததில் இருந்து அவர் முகத்தில் வந்துப் போன உணர்வுகளை எல்லாம் குறித்துக் கொண்டான். அதில் தெரிந்தவை அவனுக்குத் தன்னுடைய முடிவு சரி என்றே எண்ண வைத்தது.

திருமண நிகழ்வு நடக்க, எல்லோரும் அதில் கவனத்தை வைக்க ஆரம்பித்தனர். பிரகாஷ் அப்போது மெல்லியக் குரலில் அவளிடம் பேசினான். சைந்தவி பிரகாஷைப் பார்த்து மிக இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் பிரகாஷால் அப்படி இருக்க முடியவில்லை. அவனுள் குற்ற உணர்வு வந்து உறுத்திக் கொண்டே இருந்தது.

திருமணம் முடிந்து அனைவரும் உணவருந்த செல்ல ஆரம்பிக்க, மற்றவர்களை எல்லாம் அனுப்பி விட்டு அவர்கள் இருவரையும் தன்னுடன் நிறுத்தி வைத்தான் ஷ்யாம்.

“உங்க ரெண்டு பேர் கிட்டேயும் நான் கொஞ்சம் பேசணும்”.

மெல்லியச் சிரிப்போடு “என்ன ஷ்யாம் பேசப் போறே? எனக்கு உன்னை பார்க்கிறப்ப கல்லூரிக் காலத்துக்கே போன மாதிரி இருக்கு” என்றாள் சைந்தவி.

பிரகாஷோ எதுவும் பேசாமல் ஒருவிதமானத் தவிப்புடனே அமர்ந்திருந்தார்.

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த சைந்தவி “என்ன பேசணும் ஷ்யாம்?”

சற்று நேரம் அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டு யோசித்தவன் சட்டென்று நிமிர்ந்து “நீங்க இரண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?” என்று நேரடியாகக் கேட்டு விட்டான்.

அவன் கேள்வியைக் கண்டு இருவரும் அதிர்ந்து அவனைப் பார்த்தனர்.

பிரகாஷோ “என்னப் பேசுற ஷ்யாம்” என்று பல்லைக் கடித்தார்.

“இல்லப்பா நான் நல்லா யோசிச்சுத் தான் கேட்டேன்” என்றான் அழுத்தமாக.

அதற்குள் அதிர்ச்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் “உனக்கு ஏன் இப்படியொரு எண்ணம் வந்தது ஷ்யாம்?” என்றாள் கூர்மையானப் பார்வையுடன்.

நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டவன் “வாழ்க்கையின் ஒரு காலக் கட்டத்தில் நீங்கள் இருவரும் விரும்பி இருக்கீங்க. விதியின் சதியால உங்களால சேர முடியல. உங்கள் வாழ்க்கை வேறு வேறு திசையில் போயிடுச்சு. ஆனால் இப்போ நீங்க இரண்டு பேருமே மீண்டும் அந்தக் கால கட்டத்துக்கு திரும்பி இருக்கீங்க. உங்கள் வாழ்க்கைத் தொடரவே இல்லாமல் பாதியிலேயே முடிஞ்சு போச்சு. எங்கப்பாவுக்குத் தன்னுடையக் கடமைகளை எல்லாம் முடித்துத் தனிமையில் மீதி வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிலையில் இருக்காங்க. அதோடு எங்கப்பாவின் மனதில் சிறு குற்ற உணர்ச்சி இருக்கு. தான் இன்னும் சற்றுப் பொறுமையாக இருந்திருக்கக் கூடாதா என்று. அப்படி இருக்கும் போது ஏன் நீங்க இரண்டு பேரும் சேரக் கூடாது என்பது தான் என் ஆசை” என்றான்.

பிரகாஷ் பயத்துடன் சைந்தவியைப் பார்க்க, அவளோ நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு சற்றே நிமிர்ந்து அமர்ந்தவள் “நீ சொல்றது எல்லாம் சரி தான் ஷ்யாம். எங்களுடைய இளமைக் காலத்தில் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அளவில்லாதக் காதலை வைத்திருந்தோம். எப்போது எனக்குத் திருமணம் ஆனதோ அப்போவே என்னுடையப் பாதை மாறிப் போச்சு. உங்கப்பாவின் குற்ற உணர்ச்சி தேவையில்லாதது. யாருடைய வாழ்க்கையும் யாரையும் நம்பி இல்லை. என் வாழ்வில் நடந்தது எனக்கு விதிக்கப்பட்டது. அதோடு உன் தந்தை உன் அம்மாவை மணந்து அழகானதொரு குடும்பத்தை உருவாக்கியப் போது, முற்றிலுமாக அந்தக் காதல் அத்தியாயம் முடிவை ஏற்றுக் கொண்டது. முப்பது வருட திருமண வாழ்வில் உன் அப்பா உன் அம்மாவிற்கு நேர்மையாக வாழ்ந்திருக்கிறார். அதற்குக் காரணம் என்னத் தெரியுமா? அவர் மனதில் இருந்த முதல் காதல் மரணித்திருந்தது. இப்போது இங்கே இருக்கிறது என் தோழர் பிரகாஷ் மட்டுமே” என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு ஏற்றுக் கொள்ள முடியாமல் “அப்போ அப்பா உங்களைப் பற்றி தெரிந்துக் கொண்டப் போது தவித்த அந்தத் தவிப்பிற்குப் பெயர் என்ன ஆண்ட்டி?”

குறுஞ்சிரிப்புடன் அவனைப் பார்த்தவள் “நெருங்கிப் பழகிய ஒரு நட்பிற்கு நடக்கும் துயரம் அனைத்தும் அவர்களைத் தவிக்க வைக்கும் ஷ்யாம். இவருடைய வருத்தம் அந்த வகையைச் சேர்ந்தது”.

ஷ்யாமிற்கு ஏமாற்றம் எழ “உங்கள் முடிவு தான் என்ன ஆண்ட்டி?” என்றான்.

இப்போது சத்தமாகவேச் சிரித்து “என்னைக் கேட்கிறியே உன் அப்பாவைக் கேளு” என்றாள்.

அவன் பிரகாஷை நோக்கத் தெளிந்த முகத்துடன் ஷ்யாமைப் பார்த்துச் சிரித்து “நான் தனிமையில் கஷ்டப்பட்டேன்னா முதல் ஆளாக எனக்கு உதவ வருவது என் தோழி சைந்தவி தான் ஷ்யாம். நாங்கள் காதல் என்கிற கட்டத்தைத் தாண்டி மீண்டும் நட்பென்னும் வட்டத்துக்குள் வந்துட்டோம். எனக்கு சைந்தவி மற்ற எல்லோர் மாதிரியும் ஒரு நல்ல தோழி மட்டுமே. எங்கள் பாதைகள் பிரிந்து பல காலம் ஆச்சு. நட்பென்னும் அந்தத் திசையில் பயணிக்க ஆரம்பிச்சிட்டோம். அதனால தேவையில்லாம குழப்பிக்காதே”.

அவர்கள் இருவரின் அந்தத் தெளிவானச் சிந்தனை அவன் இதழில் மெல்லியப் புன்னகையை எழச் செய்தது.

பாதை மாறிய பயணங்கள்!
 
Top