• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
21
பாலைவனத்து முல்லை❣️

பகுதி-5

மூன்று வருடத்திற்கு பிறகு சிலம்பம் மைதானத்தில் முதல் நாள் வகுப்பை மீண்டும் ஆரம்பித்து இருந்தார் கதிர்வேலன்.

நான்கு வயது குழந்தையில் இருந்து நடுநிலை வயதினர் வரை ஆண்கள் பெண்கள் என்று இருவருமே சிலம்பம் கற்றுக்கொள்ள வருகை தந்து இருந்தார்கள்.

மாலை வேளை என்பதால் தன் அண்ணனுக்கு தேநீரை எடுத்துக்கொண்டு மஞ்சள் நிற ஸ்கூட்டியில் ரோஜாவும் மைதானித்திற்கு வந்து இருந்தாள்.

'என்ன சின்னம்மா! கையில டீயா?' என குரல் கேக்கும் திசையை ரோஜா
திரும்பி பார்க்க, அங்கே கதிர்வேலனின் உயிர் தோழன் நாகராஜன் ரோஜாவை நோக்கி நடந்து வந்தான்.

நாகராஜனின் கேள்வியில் முகம் மாறிய ரோஜா,''என்னை சின்னம்மா, பொன்னமானு கூப்பிடக்கூடாதுன்னு தானே சொன்னேன்!' என கோபகனல் வீசினாள்.

ரோஜாவின் சிவந்த முகத்தை பார்த்து,''கதிர் மட்டும் உங்கள அம்மான்னு கூப்பிடலாமா' என அவன் கேட்டதும்,

'வாத்தியும் நீங்களும் ஒண்ணா!?' என கேட்ட ரோஜா,டீ பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு சிலம்பம் பயிற்சி நடக்கும் இடத்துக்கு சென்றாள்.

ரோஜாவை அங்கு பார்த்ததும்,'நீங்க ஏன் ம்மா இங்க வந்திங்க' என்று கதிர்வேலன் கேக்க,

'நீ ஒழுங்கா சிலம்பம் கத்து தரலைனா உன் மண்டையை உடைக்க தான் சின்னமா வந்து இருக்காங்க' என நகைப்புடன் சொன்னான் நாகராஜன்.

'ஏண்டா நாகா! அம்மாவை அப்படி கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்லுறது' என கதிர்வேலன் கேட்டப்படியே ரோஜா கையில் இருந்த பிளாஸ்க்கை வாங்கி ஓரமாக வைத்தவரை ரோஜா தன் கோவப்பர்வையால் முறைத்தாள்.

'என்ன ம்மா ஏன் முறைக்கிறிங்க?'என கதிர்வேலன் ஒன்றும் அறியாத பிள்ளையை போல கேக்க,

'இப்போ ஏன் வாத்தி டீயை குடிக்காம ஓரமா எடுத்து வைக்குறிங்க?' என கேட்டவள், சில மூலிகைகள் கலந்து தயாரித்த தேநீரை கதிர்வேலனிடம் மீண்டும் எடுத்து நீட்டினாள்.

தேநீரின் நிறத்தை பார்த்து முகம் மாறிய கதிர்வேலன்,'இது என்ன கஷாயமா!'என கேட்டதும்,'நீங்க குடிக்கிற விஷத்தை விட இந்த கஷாயாம் மேல் தான்' என்றாள் ரோஜா.

'ஹையோ அம்மா... இதெல்லாம் எனக்கு ஒத்தே வராது,நீங்க இத வீட்டுக்கு எடுத்துட்டு போங்க' என கதிர்வேலன் சொன்னதும்,

'அதெல்லாம் ஒத்து வரும், இன்டைக்கு மட்டும் நீங்க குடிச்சிட்டு வீட்ட பக்கம் வாங்க, அப்புறம் இந்த ரோஜா யாருன்னு தெரியும்' என கை விரலை மடக்கி கதிர்வேலனை குத்துவதை போல நடித்து கட்டினாள் ரோஜா.

'என்னப்பா கதிரு, இன்னைக்கு நீ குடியை தொட்டா, அப்புறம் உங்க அம்மா ருத்ரதாண்டவம் ஆடுவாங்க போல!' என நாகராஜன் சொல்ல,

'கண்டிப்பா சொல்லுறேன்! நீங்க இன்டைக்கு குடிக்க கூடாது' என்ற ரோஜா, தன் கையால் டீயை ஊற்றி கதிர்வேலனுக்கும் நாகராஜனுக்கும் கொடுத்தாள்.

'உங்க அண்ணனை குடிக்கக்கூடாதுனு சொன்னால் அதுல ஒரு அர்த்தம் இருக்கு, நான் ஏன் குடிக்க கூடாது?' என்ற நாகராஜனின் காலை ஓங்கி மிதித்த ரோஜா,'வாத்தி குடிக்க நீங்க தான் காரணம்' என்றாள் கோபத்துடன்.

'என் நண்பன் குடிக்க நான் காரணம் இல்லைங்க, அதுக்கு காரணம் அவனோட ரவா லட்டு தான்' என்ற நாகராஜனின் இன்னோரு காலையும் மிதித்த ரோஜா,'சத்தமா பேசாதீங்க, பெரிய அண்ணன் காதுல விழ போகுது'
என்றாள்.

நாகராஜன் தாய் தந்தையை இழந்த இளைஞன்.
யாசகம் பெற்று பசியை போக்கிக்க மனமில்லாமல் படிக்கும் வயதில் பாண்டியனின் வீட்டில் எடுபுடி வேலைக்கு வந்தவனை, 'என்னை போலவே நாகாவையும் படிக்க வையுங்கள்' என்று கதிர்வேலன் கேட்டார்.

தன் இளைய மகனின் ஆசைப்படியே நாகராஜனை பனிரெண்டாம் வகுப்பு வரை பாண்டியன் படிக்க வைக்க, மேற்கொண்டு படிக்க பிடிக்காமல் நாகராஜன் சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்பட்டு வங்கியின் உதவியை நாடினான்.

நாகராஜனுக்கு பின்புலம் யாரும் இல்லாத காரணத்தால், கதிர்வேலனின் தூண்டுதலால் பாண்டியனின் சிபாரிசில் இன்று சொந்தமாக நல்லது கெட்டதுக்கு பாத்திரங்கள், இருக்கைகள்,பந்திக்கு தேவையான இதர பொருட்கள் அடங்கிய தேவைகளை எடுத்து செய்யும் தொழிலை தொடங்கி, அதில் லாபத்தையும் சம்பாரித்து வருகின்றான் நாகராஜன்.

என்னதான் பணம் சம்பாரித்தாலும் அவனுக்கேன்று சொந்தங்கள் யாரும் இல்லை என்ற வேஷனம் அவனுக்கு இருக்க தான் செய்தது.

தன் நண்பனின் மனதை அறிந்த கதிர்வேலனும் அவனை தன் குடும்பத்தில் ஒருவனாக பார்த்து வந்தவன் கடந்த மூன்று வருடங்களாக இந்த ஊரை விட்டு சென்றதால் நாகராஜன் தனிமையில் இருந்தவன் மதுவுக்கு அடிமையாகி இருந்தான்.

குடி குடியை கெடுக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, உன்னை பார்த்து நான் கெட்டேன் என்னை பார்த்து நீ கெட்டாய் என்பதை போல நண்பர்கள் இருவரும் இப்போதும் மாலை நேரம் வந்தால் மதுப்பானதுக்கு அடிமையாகி இருந்தார்கள்.

கதிர்வேலனுடன் சேர்த்து நாகராஜனையும் நல் வழி படுத்த வேண்டும் என்று முடிவு செய்த ரோஜா, சில மூலிகைகளை க்கொண்டு தேநீரை தயார் செய்து வந்து இருக்க, நண்பர்கள் இருவரும் அதை தொடாமல் அழுசாட்டியம் செய்துக்கொண்டு இருப்பவர்களை ஆத்திரத்துடன் முறைத்தாள் ரோஜா.

'கதிரு...உங்க அம்மாவை போக சொல்லு, நம்ம அப்புறமா குடிக்கலாம்' என்று நாகராஜன் சொல்ல,

'என்னது அப்புறமா குடிக்க போறிங்களா' என ரோஜா கேக்க,'இல்ல இல்ல டீயை அப்புறம் குடிக்கிறோம்' என்றான் நாகராஜன்.

'நீங்க குடிக்குற வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன்' என்ற ரோஜா, அங்கே இருந்த கல் மேடையில் அமர்ந்தவள் அவளின் அலைபேசியை எடுத்து,
'என்ன முல்லை வீட்டுக்கு போயிட்டியா!ஏன் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணல!' என்ற குறுஞ்செய்தியை முல்லையின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைக்க, எதிர்முனையில் இருந்து ரோஜாவிற்கு எந்த பதிலும் கிட்டாமல் போனது.

***********

சிவகங்கையில் உள்ள முல்லையின் வீட்டு வாசலில் நின்றப்படியே பக்கத்து வீட்டு பத்மினி பாட்டி பேசியதை கேட்டு முல்லைக்கு மூச்சைடைத்து போனது.

'என்ன முல்ல... எப்படி இருக்க' என நலம் விசாரித்த பார்வதி, அருகே நின்று இருந்த வேலைக்கார பெண்மணியிடம் கண்களால் கட்டளையிட, அந்த பெண்ணோ முல்லையின் பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.

'போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு'என்ற பார்வதியின் வார்த்தையை காதில் வாங்கிய முல்லையின் கண்ணுக்கு எதிரே அவள் வீட்டில் தெரியாத முகங்கள் சிலர் அமர்ந்து இருந்தார்கள்.

'என்ன முல்ல... ஏன் வாசல்ல நிக்குற, உள்ள வா' என்ற பார்வதி முல்லையின் கைபிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.

'அம்மா... நாளைக்கு பந்திக்கு தேவையான மளிகை சாமான்கள் எல்லாம் லிஸ்ட் போட்டுட்டேன், திடிர்னு விஷேஷம் ஏற்பாடு பண்ணதால பாத்திரம் பண்டங்கள் எல்லாம் பக்கத்து ஊருல தான் கேக்கணும்' என்ற மீசைக்கார பெரியவரின் கையில் ஒரு கட்டு பணத்தை திணித்தார் பார்வதி.

'நீங்க எங்க இருந்து வேணும்னாலும் ஆளை அழைச்சிட்டு வாங்க, நாளைக்கு என் தம்பிக்கும் முல்லைக்கும் இந்தே ஊரே உச்சு கொட்டுற மாதிரி நிச்சியம் நடந்தே ஆகணும்' என்றார் பார்வதி.

பார்வதியின் வார்த்தையைக் கேட்டு முல்லைக்கு நெஞ்சே அடைத்து போனது.

பாண்டியனின் மகனை காதலிக்கிறேன் என்று சொன்னால் தன் திருமணத்தில் பிரச்சனை வரும் என்று முல்லை எதிர்பார்த்தது தான்.

ஆனால் அந்த பிரச்சனை இவ்வளவு சீக்கிரம் வருமென்று முல்லை நினைத்து பார்க்கவில்லை.

சற்று முன் காரில் வரும் தருணம் கூட முருகன் முல்லையிடம் முகம் கொடுத்து பேசாததை எண்ணி பார்த்தவளுக்கு, தன் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து இருக்கக்கூடும் என்று புரிந்துக்கொண்டாள்.

முருகன் திட்டமிட்டு தன் அலைபேசியை அவரோடு எடுத்து சென்றதை அறிந்துகொண்ட முல்லைக்கு, இவர்கள் நாளை பண்ண இருக்கும் நிச்சியத்தை பற்றி எப்படியாவது ஜீவானந்தத்துக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற அவசரம் இருந்தது.

இந்த முறை தவறாவிட்டால் மீண்டும் முல்லைக்கும் தன் தம்பிக்கும் திருமண ஏற்பாடு நடக்க வாய்ப்பில்லை என்று அறிந்திருந்த பார்வதி, சரியாக காயை நகர்த்தி முல்லை வெளியே யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு அவளை கிட்டத்தட்ட வீட்டில் சிறை பிடித்து வைத்தார்.

என் சம்மதம் இல்லாமல் எப்படி என் கல்யாணத்தை நீங்கள் தீர்மானிப்பிர்கள் என்று தைரியமாக தன் தந்தையை கேட்க துணிவில்லாத முல்லைக்கு எப்படியாவது ஜீவானந்தத்திடம் பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது.

வந்ததில் இருந்து யாரிடமும் ஒரு வார்த்தைக்கூட பேசாத முல்லையின் நடவடிக்கையை கவனிக்கும் விதமாக பார்வதி தன் இமைகளுக்கு கட்டளையிட்டு கண்கள் மூடாமல் முல்லையை கண் கணித்துக்கொண்டு இருந்தார்.

முல்லை தன் அறைக்குள் நுழைந்தவள், இதயத்தின் பாரம் தாங்காமல் தன் கட்டிலில் அமர்ந்தவளுக்கு,தன் தந்தை மீது இருந்த பாசமே பகையாக மாறிப்போனதை போல உணர்ந்து இருந்தாள்.

இரவு நேரம் கடந்தும் முல்லை தன் அறையில் இருந்து வெளியே வராமல் இருக்க,' முல்ல... முல்ல கதவை திற' என்ற முருகனின் கனீர் குரலில் முல்லை கதவை திறந்தவளின் கண்கள் இரண்டும் ரத்தசிவப்பாக இருந்தது.

தன் மகள் அழுது இருக்கிறாள் என்று முருகனும் அறிந்து இருந்தார்.

ஆனால் அவரின் பகட்டு கௌரவம் தன் மகள் மீது அவர் வைத்து இருந்த அன்பை அடியோடு அழித்து இருந்தது.

'இந்தா... இதுல பட்டு புடவை நகையெல்லாம் இருக்கு, நாளைக்கு உனக்கும் கேசவனுக்கும் நிச்சியம், அடுத்த வாரம் உங்க ரெண்டு பேருக்கும் கேசவனோட குலதெய்வ கோவில்ல கல்யாணம்' என்ற முருகன் தன் மகளின் முன்னே விலை உயர்ந்த புடவை நகைகளை நீட்டினார்.

முருகன் தந்த எதையும் தொட்டு கூட பார்க்க மனமில்லாத முல்லை,'எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை' என்று தைரியமாக முருகனிடம் சொன்னாள்.

தரையை பார்த்து பேசும் முல்லையின் வார்த்தையை கேட்ட முருகன் தன் அருகே நின்று இருந்த வேலைக்காரரை கன்னம் சிவக்கும்ப்படி அடித்ததும், அந்த அடியில் முல்லையின் கண்களில் கண்ணீர் வந்தது.

' ஏங்க... ஏன் கோவப்படுறிங்க, ஏன் உங்க பொண்ணு மேல இருக்குற கோவத்தை இவன் மேல காட்டுறிங்க' என்று பார்வதி கேக்க,

'இங்க பாரு முல்ல... நாளைக்கு உனக்கும் கேசவனுக்கும் நிச்சயம் நடக்குறது உறுதி.
நடுவுல நீ அந்த குன்னக்குடி குடும்பத்தோட சேர்ந்து என்னை அசிங்கப்படுத்த நினைச்ச, உன் அம்மா போன இடத்துக்கே உன்னையும் அனுப்பி வச்சிடுவேன் சொல்லிட்டேன் பார்த்துக்கோ' என்ற முருகனின் கோவத்தை கண்டு முல்லைக்கு உள் ஜுரமே வந்திருந்தது.

'ஏங்க... நீங்க கோவப்படாதிங்க, அதெல்லாம் முல்லைக்கு உங்கள பற்றி நல்லாவே தெரியும், முல்லை முரண்டு பண்ணால் நீங்க அவளை உயிரோட புதைச்சுடுவீங்கன்னு உங்க மகளுக்கு தெரியாதா என்ன!?' என்று பார்வதி பட்டும் படாமல் முருகனை கொம்பு சீவி விட,
முல்லையோ தன் தந்தையின் கோவமான முகத்தை பார்த்த அச்சத்தில் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

'ஏய் பார்வதி... எதுக்கும் அவளை சூசகமா பார்த்துக்கோ, இது என் கௌரவ பிரச்சனை' என்று எச்சரித்த முருகனுக்கு எக்காரணத்தைக் கொண்டும் தனக்கு பாண்டியன் சம்மந்தியாக வந்து விடவேக்கூடாதென எண்ணம் மட்டுமே இருந்தது.
 
New member
Joined
Dec 5, 2025
Messages
21
இரவு பத்து மணியும் ஆனது.
குன்னக்குடியில் இருக்கும் பாண்டியனின் வீட்டிற்கு இன்னும் கதிர்வேலன் வந்த பாடு இல்லை.

அடுப்பணையில் இருந்து சோற்றையும் குழம்பையும் ஒரே பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, கூடவே கோழி வறுவளை வாழையிலையில் மடித்து வைத்தாள் ரோஜா.

'என்ன ரோஜா! இன்னும் கதிர் வீட்டுக்கு வரலையா?' என கேட்டுக்கொண்டே ஜீவானந்தம் அடுப்பணைக்குள் நுழைய, அவர் வாயை எட்டி அடைத்தாள் ரோஜா.

'கத்தாதீங்க பெரியவரே! ஐயன் காதுல விழுந்தா சாமி ஆடிடுவாரு' என்ற ரோஜா சாப்பாட்டு பையில் ஒரு துண்டு இரும்பை எடுத்து வைத்தாள்.

'சாப்பாடு யாருக்கு!?' என ஜீவானந்தம் கேக்க,'வாத்திக்கு தான், நான் போய் கொடுத்துட்டு வரேன், நீங்க ஐயன் கேட்டா நான் தூங்க போயிட்டேன்னு சொல்லுங்க' என்றவள் சிவப்பு நிற கூடையை எடுத்துக்கொண்டு தன் வீட்டின் பின் புறத்தில் இருக்கும் தென்னை தோப்பில் அமைந்துள்ள நாகராஜனின் ஓட்டு வீட்டிற்கு சென்றாள்.

'கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நில..வா இது ஒரு கன..வா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா'

என்ற பாடலை பாடிக்கொண்டே ஒரு கையில் பீர் பாட்டிலுடனும் இன்னோரு கையில் முல்லையின் கண்ணீரை உள்வாங்கிக் கொண்ட கைக்குட்டையுடனும் ஆடிக்கொண்டு இருந்தார் கதிர்வேலன்.

நாகராஜனின் வாசல் கதவு பூட்டாமல் இருக்க, வந்த வேகத்தில் கையில் இருந்த கூடையை ஓரம் வைத்த ரோஜா, கீழே இருந்த காய்ந்து போன தென்னம் பட்டையை எடுத்து போதையில் ஆடிக்கொண்டு இருந்த தன் அண்ணனை விடுத்து,அருகே அமர்ந்து தன் அலைபேசியை பார்த்துக்கொண்டு இருந்த நாகராஜனை அடித்தாள் ரோஜா.

'ஹையோ சின்னமா என்னை ஏன் அடிக்கிறீங்க' என பதறிய நாகராஜன் தன் கையில் இருந்த அலைப்பேசியை மேசை மேல் வைத்தவன், வலி தாங்காமல் தன் தோள் பட்டையை தடவிக் கொடுக்க,
'என்னது!? மறுபடியும் சின்னம்மா வா?' என்று கேட்ட ரோஜா மேலும் இரண்டு அடி வைத்தாள்.

'சரி சரி...இனி நான் சின்னம்மான்னு கூப்பிடல! ஆனா ஏன் என்னை அடிக்கிறீங்க' என நாகராஜன் கேட்க,

'நான் அவ்வளவு சொல்லியும் வாத்தியை குடிக்க வச்சு வேடிக்கை பாக்குறீங்களா?' என்ற ரோஜா தன் அருகே நின்றிருந்த கதிர்வேலனை முறைத்து பார்த்தாள்.

'உங்க அண்ணன் என்ன ரெண்டு வயசு குழந்தையா! நான் கொடுத்தா அவரு வாங்கி குடிக்க? அங்க பாருங்க நான் சொல்ல சொல்ல கேட்காம ரெண்டு பாட்டில் பீரை ஒரே ஆளா குடிச்சு தீர்த்துட்டான், இதுல என்னுடைய சரக்கையும் சேர்த்து குடித்துட்டான்' என்று நாகராஜன் ரோஜாவிடம் தர்க்கம் செய்ய,
'டேய் மச்சி...இன்னொரு பாட்டில் சொல்லு மாமு' என்றார் கதிர்வேலன்.

'வாத்தி... எத்தனை முறை சொன்னாலும் நீங்க கேட்கவே மாட்டீங்களா? இப்போ எதனால நீங்க குடிக்கிறீங்க? குடிக்கிறதால என்ன மாறப் போகுது?' என்ற ரோஜாவை பார்த்து,நாகராஜன் சிரித்தான்.

'ஹலோ...ஏன் காரணமே இல்லாமல் இப்போ சிரிக்கிறீங்க' என்று ரோஜா கேட்க,'உங்க அண்ணன் எந்த காரணத்துக்காகவும் குடிக்கல, குடிக்கிறதுக்காக ஒரு காரணத்தை தேடுகிறான்' என்று நாகராஜன் சொன்னதும்,

இந்த முறை கதிர்வேலன் அவர் அருகே இருந்த காய்ந்த மட்டையை எடுத்து தன் நண்பன் என்று பாராமல் நாகராஜனை அடி வேளுத்து வாங்கினார்.

'டேய் என்னடா அண்ணனும் தங்கச்சியும் மாறி மாறி என்னை அடிச்சுக்கிட்டு இருக்கீங்க! நானே நாளைக்கு சிவகங்கைக்கு அவசர விசேஷத்திற்காக போகணும்னு சரக்க கையில தொடாம கடமையே கர்மான்னு வேலை பார்த்துகிட்டு இருக்குறவனை இப்படி அடிக்கிறியே உனக்கு மனசாட்சி இல்லையா' என்று நாகராஜன் கேட்க,அதே தருணம் ஜீவானந்தம் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்.

'ஏன் கதிர்... எதனால இப்படி குடிச்சு குடிச்சு உன்னை நீயே கெடுத்துக்குற' என்று ஜீவானந்தம் தன் தம்பியின் அருகே சென்று கதிர்வேலனின் கையில் இருந்த மதுபானத்தை வாங்கி கீழே வைத்தார்.

'காதல் அண்ணா காதல்... என்னை காதல் படுத்துற பாடு இருக்கே! ஐயோ முடியல! நான் அதனாலதான் குடிக்கிறேன்' என்று கதிர்வேலன் சொல்ல,

'டேய்...அதான் உன் காதல பத்தி அப்பா எதிரிலேயே நான் சொல்லிட்டேனே! கவலைப்படாத, மீனாவுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு' என்றார் ஜீவானந்தம்.

'அண்ணா... நான் மீனாவை காதலிக்கிறேன்னு உனக்கு யாரு சொன்னாங்க?' என்று கதிர்வேலன் கேட்க, ஜீவானந்தத்தின் முகம் கேள்வியாக மாறியது.

' என்ன கதிர் சொல்ற! அப்போ நீ மீனாவை காதலிக்கலையா?' என்று ஜீவானந்தம் புரியாமல் கேட்க,' நான் மீனாவை காதலிக்கல, என்னோட காதலியின் பெயர்' என்று கதிர்வேலன் தன் மனதில் உள்ள காதலை சொல்லும் முன்னே.

'வாத்தி... குடிச்சிட்டு எதையாவது உலராம ஒழுங்கா வந்து இப்படி உட்காருங்க. நீங்க இன்னும் சாப்பிடல.அதனால நானும் சாப்பிடல. எனக்கு பசிக்குது' என்ற ரோஜா பேச்சை மாற்றும் விதமாக கதிர்வேலனின் கையைப் பிடித்து கட்டிலில் அமர வைத்தாள்.

'என்னம்மா சொல்றீங்க! நீங்க சாப்பிடலையா? ஐயோ என் அம்மாவுக்கு பசிக்குதா?இருங்க இருங்க நானே ஊட்டி விடுறேன்' என கதிர்வேலன் கையால் அவர் தங்கை ரோஜாவிற்கு சாப்பாட்டை ஊட்டியவர்,

'அண்ணா... நீ சாப்டியா? நீதான் சாப்பிட்டு சந்தோஷமா இருக்கும்.
உன் சந்தோஷத்துக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்.
யார வேணாலும் விட்டுக் கொடுப்பேன். நீ சந்தோஷமா இரு. எனக்கு அது போதும் அண்ணா' என்று தன்னை மீறி உளறிய கதிர்வேலன் ஜீவானந்தத்திற்கு தன் கரங்களால் உணவை ஊட்டி விட்டார்.

அண்ணன்,தம்பி,தங்கை என்று மூவரும் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்க,'டேய் எனக்கும் தான்டா பசிக்குது, எனக்கு ஒரு உருண்டை சோறு கொடுக்க மாட்டியா? ' என்று கேட்டான் நாகராஜன்.

'உங்களுக்கும் சேர்த்து தான் சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன். இந்தாங்க' என்று ரோஜா ஒரு சாப்பாடு கிண்ணத்தை நாகராஜன் இடம்நீட்ட,'ரொம்ப தேங்க்ஸ் சின்னம்மா' என்றவனை மேலும் முறைத்தாள் ரோஜா.

'சரி சரி முறைக்காதீங்க ரொம்ப நன்றி உங்க சப்பாட்டுக்கு, எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. அத முடிச்சிட்டு நான் சாப்பிடுறேன்' என்று நாகராஜன் சொல்ல,' இந்த நேரத்துல என்ன வேலை' என்று கேட்டாள் ரோஜா.

'எப்பவும் கல்யாணம் காட்சி நல்லது கெட்டதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே பொருட்கள் வேணும்னு ஆர்டர் கொடுப்பாங்க, ஆனா இங்கே என்னன்னா ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி தான் ஏதோ நிச்சயதார்த்தத்துக்கு பந்தி போடணும், பொருட்கள் வேணும்னு ஆர்டர் வந்துச்சு. பணம் வேற எவ்வளவு வேணும்னாலும் கொடுக்கிறேன்னு சொன்னாங்களா! அதான் நாளைக்கு ஆறு மணிக்கு எல்லாம் நான் சிவகங்கைக்கு போக போகிறேன்' என்றான் நாகராஜன்.

'பெரியவரே... சிவகங்கை என்றதும்தான் நினைவுக்கு வருது, முல்லை ஊருக்கு போய் சேர்ந்துட்டேன்னு உங்களுக்கு மெசேஜ் ஏதாவது பண்ணாங்களா'என்று ரோஜா கேட்க,

'முல்லையா! எங்க முல்ல... எங்க முல்ல..' என்று கதிர்வேலன் வாசலை நோக்கி ஓடியவரை,'டேய் இங்க வாடா, ரோஜா சொன்னது முல்லையை, மீனாவை இல்லை' என்ற ஜீவானந்தம் கதிர்வேலனை அமர வைத்து, கையில் தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்.

'ரோஜா... நானும் முல்லைக்கு நிறைய முறை மெசேஜ் அனுப்பிட்டேன், போன் பண்ணியும் பாத்துட்டேன், ஆனா முல்லை போனையும் எடுக்கல என் மெசேஜ்க்கு ரிப்ளையும் பண்ணல' என்று ஜீவானந்தம் சொல்ல,

'என்ன அண்ணா சொல்ற! முல்லை போனதும் நான் மெசேஜ் பண்ண சொன்னேனே, ஒருவேளை அங்க ஏதாவது பிரச்சனையா இருக்குமா?' என்று ரோஜா கேட்க,
' யாருக்கு பிரச்சனை!? என்ன பிரச்சனை!?' என்று மதுபோதையில் கேட்டார் கதிர்வேலன்.

'இல்லடா கதிர், முல்லைய நீ பஸ் ஏத்திவிட்ட ல்ல! அவ போனதுல இருந்து ஒரு மெசேஜ் ஒரு போன் கூட பண்ணல, நாமலே பண்ணாலும் எந்த பதிலும் இல்லை, அதை பற்றி தான் நானும் ரோஜாவும் பேசிக்கிட்டு இருக்கோம்' என்று ஜீவானந்தம் சொன்னதும்,

'ஏன்!? அந்த ரவா லட்டுக்கு போன் பண்றத விட வேற என்ன வேலை? நீ வா நம்ம போய் என்ன எதுன்னு கேட்கலாம், டேய் நாகா என் புல்லட்? எங்க புல்லட்?ஸ்டார்ட் பண்ணு நம்ப அந்த மீசைக்கார முருகன் கிட்ட போய் ரவா லட்டு எங்கன்னு கேட்போம்' என்று அலப்பறையை கூட்டினார் கதிர்வேலன்.

தன் இளைய அண்ணனை இப்படியே உலரவிட்டால் கதிர்வேலன் மனதில் உள்ள ஆசைகள் எல்லாம் வார்த்தைகளாக வெளியே வந்துவிடும் என்று அச்சம் கொண்ட ரோஜா,
'நாகா... நீங்க வாத்தியை இங்கேயே படுக்க வச்சுக்கோங்க, நாங்க கிளம்புறோம். இங்க பாருங்க! இதுக்கு மேல நீங்க குடிக்க கூடாது' என்று கண்டிப்புடன் ரோஜா சொல்ல,

'நான் காலையில 5 மணிக்கு எல்லாம் சிவகங்கைக்கு கிளம்பிடுவேன், கதிரும் என் கூட வரேன்னு சொல்லி இருக்கான்' என்று சொன்னான் நாகராஜன்.

'ரொம்ப நல்லதா போச்சு! வாத்தியை இந்த மாதிரி நீங்க நாலு இடத்துக்கு அழைச்சிட்டு போங்க. அப்பதான் இந்த குடிப்பழக்கத்தை அறவே அவரு மறப்பாரு. ஆமா! சிவகங்கைக்கு எதுக்காக போறேன்னு சொன்னீங்க?' என்று ரோஜா கேட்க

'அதான் சொன்னேனே! யாருக்கோ உடனே நிச்சயதார்த்தமாம்.அதனால அங்க இருக்குற முருகன் கோவில்ல பாத்திரம் பொருட்களையும், பந்தி, மைக் செட் எல்லாம் ஆர்டர் தந்து இருக்காங்க' என்றான் நாகராஜன்.

' ஓ! அப்போ வாத்தியும் நாளைக்கு உங்க கூட சிவகங்கைக்கு வராரா?' என்று ரோஜா கேட்க, 'ஆமா... வரேன்னு தான் கதிரும் சொல்லி இருக்கான்' என்றார் நாகராஜன்.

'ரோஜா... எனக்கும் அப்பாவுக்கும் நாளைக்கு திருச்சியில பஞ்சாயத்து விஷயமா முக்கியமான மீட்டிங் இருக்கு. நாங்க போயிட்டு வீட்டுக்கு வர தாமதமாக ஆயிடும். நாளைக்கு காலைல பேசாம நாகராஜனும் கதிரும் சிவகங்கைக்கு போகும்போது நீயும் இவங்க கூட முடிஞ்சா சிவகங்கையில முல்லைய பார்த்து பேச முடியுமான்னு ட்ரை பண்ணு' என்று ஜீவானந்தம் சொல்ல,

'அண்ணா...நீ கவலைப்படாத! ரவா லட்ட பார்த்து நான் பேசுறேன் ' என்று கதிர்வேலன் மது போதையில் சொன்னதும்,

'பாத்தியா...தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்ற ஜீவானந்தத்தை பார்த்து,
'அவன் பேசுவான்... உங்களுக்காக பேசுவானா!!' என்று பொறுமையாக நாகராஜன் கேட்டதும்,
ரோஜா நாகராஜன் காலை ஓங்கி மிதித்தவளுக்கு, கதிர்வேலன் மனதில் உள்ள ரகசியம் கடைசி வரை ஜீவானந்ததிற்கு தெரிய வேண்டாம் என்று மனதார எண்ணினாள் ரோஜா.

தொடரும் 🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top