• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
80

மகனது செயலுக்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ள விரும்பிய ராஜலெட்சுமிக்கு, மகன் காதலில் விழுந்து இருப்பான் என்ற எண்ணம் துளியும் வரவில்லை.

அதனால் அவனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை அறிய 'ஏன் அப்படி செய்தாய்?' என்று கேட்கவும், இதுவரை சகோதரியிடம் மட்டும் பகிர்ந்த தன் காதல் விசயத்தை " அது வந்தும்மா," என தயக்கத்துடன் சொல்லத் தொடங்கினான்.

சரியாக அதேசமயம் நர்ஸ் உள்ளே வரவும் அவன் பேச்சை நிறுத்திவிட, நேராக அவனிடம் வந்தவர் அவனது கையில் இருந்த கேதீட்டரில் ஒரு ஊசியை போட்டுவிட்டு,

"இந்த மெடிசின் கொஞ்சம் ட்ரௌஸியா இருக்கும். அதனால் அப்படியே கண்ணை மூடி ரெஸ்ட் எடுங்க ஸார்." என்றவர்,"கொஞ்சம் அவரை ரெஸ்ட் எடுக்க விடுங்கம்மா." ராஜலட்சுமியிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்.

மகனை திரும்பிப் பார்த்த ராஜலட்சுமி, "சரிடா ராஜா. நாம வீட்டுக்கு போய் பேசிக்கலாம். நீ தூங்குடா." என்றபடி அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

மருந்தின் வீரியத்தில் அவனும் உறங்கி விட, அதன்பிறகு அவனிடம் ஆறஅமர பேசுவதற்கு அவருக்கு நேரம் வாய்க்கவில்லை. மறுநாள் டிஸ்சார்ஜாகி வீட்டிற்கு வந்து விட்டான் யுவ்ராஜ்.

அவனது அறையில் படுக்க வைத்து விட்டு அவனுக்கான ஜூஸ் தயாரிக்க அவர் செல்ல விழைய, "யுவனி எங்கம்மா?" எனக் கேட்டான் யுவா. அவனை அடித்து திட்டி விட்டு சென்றவள் தான். அதன்பின் அவனைக் காண வரவேயில்லை யுவர்ணிதா.

"அவளோட ரூம்ல இருக்கா யுவா. அநேகமா உம்மேல ரொம்ப கோபமா இருக்கான்னு நினைக்கிறேன். அதான் நீ வந்த பிறகும் இன்னமும் உன்னைப் பார்க்க வரல." மகளது முகத்தை வைத்தே சரியாகக் கூறினார்.

" அவளை கொஞ்சம் இங்க வரச் சொல்றீங்களாம்மா? ப்ளீஸ்!" என்ற மகனுக்கு சரியென தலையசைத்து விட்டு அவர் வெளியேறிட, சிறிது நேரத்தில் உள்ளே வந்தாள் உடன்பிறப்பு.

அறைக்குள் வந்தவள் அவனை திரும்பியும் பார்க்காமல், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பால்கனியை பார்த்தபடி நின்று கொள்ள, "யுவனி!" என்றழைத்து அவன்தான் பேச்சை ஆரம்பிக்க வேண்டி இருந்தது.

அப்போதும் காது கேளாதவள் போல் அவள் நிற்க, " ப்ளீஸ் யுவனி, என்ட்ட பேச மாட்டியா?" கேட்டவனை திரும்பி முறைத்தவள், "நீ செய்து வைச்ச காரியத்துக்கு உன்கிட்ட சிரிச்சு பேசி நலம் விசாரிக்கச் சொல்றியா?." காட்டமாகக் கேட்டாள்.

" ஸாரிடி. என்னால முடில. அதான் அப்டி செய்துட்டேன்." வலி நிறைந்த குரலில் குற்ற உணர்வுடன் அவன் சொல்ல, "கண்ணுல தண்ணி விட்ட, அவ்ளோ தான் சொல்லிட்டேன். நானே உன்னை கொன்னுடுவேன்." விரல் நீட்டி மிரட்டினாள்.

அவன் தடுமாறும் பல சமயங்களில் எல்லாம் தைரியம் கொடுத்து அவனை திடமாக நிறுத்துபவளால் அவனது கோழைத்தனமான அந்த முடிவை ஏற்க முடியவில்லை.

இளங்கலை முதல் இருவரும் ஒரே கல்லூரியில் தான் பயின்றனர். அதன்பிறகு ஃபுட் டெக்னாலஜி படித்த யுவர்ணிதா அதன் முதுகலைப் பட்டப்படிப்பிற்காக கான்பூரில் இருக்கும் ஐஐடி சென்று விட்டாள்.

புது இடத்திற்கு செல்லத் தயங்கிய யுவராஜ் இங்கேயே தனது எம்பிஏவை தொடர, அப்போது தான் யுஜி வந்து சேர்ந்தாள் மதுரா.

அவளை கண்டது முதல் காதலில் விழுந்த யுவ்ராஜ், தன் சகோதரியிடம் காணொளியில் பேசும்போது அதைப்பற்றிக் கூறினான். யுவனிக்கு இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லை. அந்தநேர அட்ராக்ஷன் தான் இது என்பாள்.

காதலிப்பது தவறில்லை தான் ஆனால் இவனது சுபாவத்திற்கு ஒருவேளை இவனது காதலை அவள் நிராகரித்தால் உடைந்து போவானே என்று மட்டும் தான் யோசித்தாள். அவனிடம் அதை எச்சரிக்கவும் செய்தாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, சகோதரியின் இடைவிடாத எச்சரிக்கையால் மதுராவிடம் சென்று யுவா தன் காதலை சொல்ல அவள் மறுக்கவில்லை. தயக்கம் மட்டுமே காட்டினாள். அவளுக்குமே அவன்மீது ஏதோ ஒருவித ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.

ஆனால் தனது வீட்டை நினைத்து ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தவித்தவளால் யுவாவை காயப்படுத்த முடியவில்லை. அதனால் அதுவரை அவளது மனதில் பூட்டி வைத்த அவன் மீதான காதலை வெளிப்படுத்தினாள்.

அதில் யுவா வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறைதான். அவனது மகிழ்ச்சியை அறிந்த யுவனிக்கும் மகிழ்வாக இருந்தாலும் "ரொம்ப ஆடாதடா." சிரிப்போடு அடக்கி வைத்தாள்.

யுவனி கல்லூரி விடுமுறையில் ஓரிரு முறை வந்தபோது, மதுராவை யுவனிக்கு அறிமுகம் செய்து வைத்தான் யுவா.

மதுராவை பார்த்த கணத்தில் கள்ளம் கபடமில்லாத அவளிடம் தன் சகோதரன் விழுந்ததில் தவறே இல்லை என்று தான் தோன்றியது யுவனிக்கு.

படிப்பை முடித்து வந்த யுவனி உடனே தன் தந்தையின் ஃபுட் இன்டஸ்ட்ரியை கவனிக்கத் தொடங்க, யுவ்ராஜை அவனது படிப்பிற்கு தகுந்த ஐடி கம்பெனி தொடங்கச் சொல்லி ஆதிகேசவன் கூறினார்.

முதலில் அனுபவத்தை பெற்ற பிறகு கம்பெனியை பற்றி யோசிக்கிறேன் என்று கூறிய யுவா, சிறிது காலம் தொழிலாளியாக இருக்க விரும்பவும் அவனது விருப்பத்திற்கே விட்டு விட்டார்.

அதன்பிறகு மூவருமே வெகு சில சமயங்களில் சந்தித்து கொண்டது உண்டு. அதெல்லாம் நினைவில் நின்றவை போல அத்தனை இனிமையான தருணங்கள்!.

யுவா பணியில் இருந்தாலும், கல்லூரி இறுதியாண்டு பயிலும் மதுராவுடனான அவனது காதல் அலைபேசியிலும், சில சமயங்களில் நேரடி சந்திப்புகளிலும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

யுவனிக்கு வீட்டில் திருமணப் பேச்சை எடுத்த சமயத்தில், இருவருக்கும் சேர்த்தே திருமணத்தை முடிக்க வேண்டும் என்று பெற்றோர் பேசிக் கொண்டிருக்க அந்த வாய்ப்பை தவற விடாமல் யுவாவின் காதலைப் பற்றி பெற்றோரிடம் கூறிவிடலாம் என்றாள் யுவனி.

ஆனால் சகோதரியிடம் அதற்கு மறுப்பு தெரிவித்த யுவா, மதுராவின் படிப்பு இந்த ஆண்டு முடிந்து விடும் அத்துடன் தானும் புதிதாக கம்பெனி துவங்கிய பிறகு தங்களது பெற்றோரிடம் அவளை பற்றிக்கூறி திருமணத்தைப் பேசி முடிக்கலாம் என்று இருந்தான்.

இந்நிலையில் யுவனி தங்களது ஃபுட் இன்டஸ்ட்ரிக்கு புதிதாக மிஷின் வாங்கும் விசயமாக ஒரு மாத காலம் வரை ஜெர்மனி சென்று விட,

திடுமென ஓர்நாள் அவளுக்கு அழைத்த யுவா, "ஹனி இன்னிக்கு கால் பண்ணி, 'என்னை மறந்துடுங்க யுவன். நாம ஒன்னு சேர முடியாது. நீங்க வேற நல்ல பொண்ணா பார்த்து மேரேஜ் செய்துக்கோங்க'னு சொல்லிட்டு வைச்சுட்டா யுவனி." கலங்கிய குரலில் கூறினான்.

"முதல்ல கண்ணுல தண்ணி விட்றத நிறுத்துடா. அவ ஏன் திடீர்னு அப்படி சொல்றா? என்ன காரணம்னு விசாரிச்சியா?" அவனை அதட்டி, என்ன நடந்தது என்று விசாரித்தாள்.

காரணம் கேட்டாயா என்று கேட்ட யுவனியிடம், அவன் கேட்டதற்கு மதுவின் மௌனம் மட்டுமே பதிலாக வந்ததாக சொன்ன யுவா, "எப்படி அவளால என்னை விட்டுப் போக முடியும் யுவனி? இட்ஸ் ஹர்ட்டிங் மீ எ லாட்." வலிமிகுந்த குரலில் உரைத்தான்.

அதன்பின் அவனை சிறிது நேரம் புலம்பவிட்ட யுவனி, 'இதுக்கு தான் இதெல்லாம் உனக்கு வேணாம்னு அப்பவே சொன்னேன் கேட்டியா?' என்று அவனை குற்றஞ்சாட்டி நோகடிக்காமல், மதுராவின் தோழி அபர்ணா மூலமாக என்னவென்று விசாரிக்கச் சொன்னாள்.

மதுராவை இயல்பாக சந்திப்பது போல சென்ற அபர்ணாவிடமும், "நான் யுவனை ஹர்ட் பண்ணிட்டேன். நான் அவரை காதலிச்சிருக்கவே கூடாது." எனக் கூறி அழுதாளே தவிர காரணத்தை மட்டும் கூறவில்லை.

செய்வதறியாது யுவா தவிக்க,'நான் இந்தியா வந்தபிறகு மதுராவை நேரில் சந்தித்து பேசலாம். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு.'என்று அவனுக்கு ஆறுதலாக தொடர்ந்து பேசி அவனை மாற்ற முயன்றாள் சகோதரி.

அதற்கு பலனாக அவனும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தேற்றிக் கொண்டு பொறுமையாகத் தானே இருந்தான். தன்னால் அவனிடம் பேச இயலாத இந்த இரு தினங்களில் அப்படி என்ன நடந்தது!? என்ற கேள்வி அவளுள் முரண்டியது.

"உன்னை சுத்தி இருக்கற எங்களை பற்றி எல்லாம் கூட யோசிக்க தோணாத அளவுக்கு அப்படி என்னடா காதல்? ஊர் உலகத்துல யாருக்குமே லவ் ஃபெயிலர் இல்லையா? இல்ல அவங்க தான் லைஃப்ல மூவ்ஆன் ஆகறதில்லயா?"

" சரி. அப்படி என்ன நடந்ததுனு அந்த லைலாக்காக இந்த மஜ்னு உயிரை விட துணிஞ்சுட்டீங்க? அவ உன்னை ப்ரேக் அப் பண்ணிட்டா, அவ்ளோ தானே?." கைகளை கட்டிக் கொண்டு முறைத்த வண்ணம் நின்று கேட்டவளிடம்,

" அது மட்டும் காரணமில்ல யுவனி." என்றவன், அன்று அவனுக்கு தெரியவந்த விசயத்தை ஜீரணித்துக் கொண்டு, "அவளுக்கு நாளைக்கு காலையில மேரேஜ்." என்று மரத்த குரலில் வலியோடு கூற, யுவர்ணிதா அதைக்கேட்டு திகைத்தாள்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top