• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் – 17

“என்ன பயம் உனக்கு? நான் உன்னைய நல்லா பாத்துக்குவேன். முன்னாடிதான் என் வாழ்க்கை கஷ்டமா இருந்துச்சு. இப்போ என்கிட்ட ஒரளவுக்கு எல்லாம் இருக்கு. அதை வச்சு உனக்குத் தேவையான விஷயங்களை என்னால கொடுக்க முடியும்.”

“ம்ம்ம்.”

“நீ ஒன்னும் பயப்படாத சரியா? நான் உன்னைய வசதியா சந்தோஷமா பாத்துப்பேன்.”

“ம்ம் நீங்கள் என்னை நல்லா பாத்துக்கனும். நானும் உங்களை நல்லா பாத்துப்பேன். நம்மளோட வாழ்க்கைய சந்தோஷமா கொண்டு போகனும்.”

“ம்ம்ம் எனக்கும் இதே ஆசைதான்.”

“எனக்கு இத்தனை நாளாகப் பயங்கரமான மனவலி, வேதனை, வாழ்க்கை மேல அளவுக்கு அதிகமாகப் பயம் எல்லாமே இருந்தது. இப்போ உங்க கிட்ட பேசுனதுக்குப் பிறகு அதெல்லாம் சரியாகிரும்னு ஒரு உறுதியான நம்பிக்கை வந்திருக்கு.”

“உனக்குள்ள இருக்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். உனக்குள்ள இருக்க இந்தச் சந்தோஷத்தை நான் காலம் முழுக்க அப்படியே வச்சிருக்க என்னால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணுவேன்.”

“எனக்கு உங்களோட வெளிப்படையான மனசும் பேச்சும் ரொம்ப புடிச்சிருக்கு. அதே சமயம் ஆச்சர்யமாவும் இருக்கு. எப்படி இந்த அளவுக்கு ஒரு ஆள் வெள்ளந்தியா இருக்க முடியும்னு. தேவையில்லாத வார்த்தைகளைச் சொல்லிப் பொய்யான நம்பிக்கையை எனக்குள்ள உண்டாக்காமல் உள்ளதை உள்ளபடி பேசுற உங்களோட குணம் எனக்குள்ள இன்னும் அதிகப்படியான காதலைக் கூட்டுது.”

“அப்படியா? மனசுல உள்ளதை அப்படியே பேசிட்டு போறதுதான் நமக்கும் நல்லது மத்தவங்களுக்கும் நல்லது. உள்ள ஒன்னு வெளிய ஒன்னுனு இருந்தால் ஒரு கட்டத்துக்கு மேல நம்மளோட உண்மையான முகம் வெளிய தெரிய ஆரம்பிச்சிரும். அப்படி நடந்தால் அதுவரைக்கும் நம்ம சேர்த்து வச்ச எல்லா நல்ல பேரும் ஒரே அடியாய் காணமல் போயிரும்.”

“ம்ம்ம் மனுஷங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்.”

“அது மிகச் சரியானது.”

“நீங்கள் வெளிப்படையாக இருக்குறதுதான் சந்தோஷம்னு சொல்றீங்க. ஆனால் நான் அப்படி வெளிப்படையாக இருந்தால் என் வாழ்க்கையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தோஷத்தையும் இழக்கும்படி ஆகிரும். இங்க வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரி இல்லை.”

நான் இதைப் பேசும்போது அவனது பார்வை மேலும் கூர்மையானது. அவன் மனதில் எழுந்த சந்தேகம் நிறைந்த கேள்வி அவனது முகத்தை மாற்றியது. ஒரு வித சுழித்த முகத்தோடு, “ஏன் நீ ஆரம்பத்துல இருந்தே ஒரு மாதிரி பேசுற?” என்றான்.

“ஒரு மாதிரி பேசுறனா? அப்படியொன்னும் இல்லை. சொல்லப்போனால் உங்க கிட்டதான் நான் நல்லா தெளிவா பேசுறேன். நான் உங்க மேல முழு ஆசைய வச்சுகிட்டு காதலோட இருந்த போதும் நீங்கள் யார் என்று தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகுதான் வாய்திறந்து ஒப்புதலைச் சொன்னேன். அது ஒருவகையில் உங்களைச் சங்கடப்படுத்தியிருக்கும். ஒரு வகையில் என்மீது ஒரு துளி தப்பான அபிப்பிராயத்தைத் தெளித்திருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் இந்த அளவிற்கு யோசிப்பதற்கும் குழம்புவதற்கும் எனக்குள் இருந்த இப்போதும் இருந்து கொண்டிருக்கிற தீராத காயம்தான் காரணம். மற்ற பெண்களைப் போல எவ்வளவு கஷ்டமானாலும் நாம் சேர்ந்த வாழலாம் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால், நான் ஏற்கனவே வேணுமென்ற அளவிற்கு கஷ்டங்களைச் சந்தித்துவிட்டேன். இப்போது ஓரிரு வருடங்களாகத்தான் மனதில் இருந்த பாரம் சற்று குறைந்து இந்தப் பூமியில் வாழ நானும் தகுதியான ஆள்தான் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இனிமேலாவது என் வாழ்க்கை எந்தத் தடையும், பாதிப்பும் இல்லாமல் சீராக இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. இது உங்கள் பார்வையில் எனக்குள் இருக்கும் சுயநலமாகக் கூடத் தெரியலாம். ஆனால் அது அப்படியில்லை. எனக்கு வசதியான வாழ்க்கை வேண்டாம். எனக்கு நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை வேண்டும்.”

“ம்ம்ம் உனக்குள் அப்படியென்ன வலியும் வேதனையும் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை மறக்க வைத்து உன்னைச் சந்தோஷப்படுத்த என்னால் முடியும். உடனே சரிப்படுத்துவேனா என்று எனக்குத் தெரியாது. கொஞ்ச காலமும் நேரமும் கழிந்தாலும்கூட மெல்ல மெல்ல அதை மறக்க வைப்பேன்.”

“நீங்கள் அதைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்று எனக்கும் தெரியும்.”

நான் எப்படி அவனைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேனோ அதே போல அவனும் என்னைப் பற்றிக் கேட்பான் அப்போது முழுவதையும் சொல்லிப் பின் உறவை நல்லபடியாகத் தொடங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவன் என்மீது ஒரு கேள்வியைக்கூட எழுப்பவில்லை. நானாகச் சொல்ல வந்தாலும் அதை முழுமையாகக் கேட்காமல் அதற்கான தீர்வை மட்டுமே பேசினான்.

அவனும் என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் எனக்கும் நிம்மதி. அதனால் அவன் தடுத்தாலும் நிறுத்தாமல் நானாகவே சொல்லி முடிக்க வேண்டும் என்று தொடங்கினேன்.
“என்னைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க்கத் தோனலையா? என்னோட வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையில்லையா?”

“இருந்தது. நான் கேட்பதற்கு முன்பாகவே நீ சோகம், கவலை, வலி, பயம் என்று பேசினாயா அதனால்தான் மேலும் கேள்வி கேட்டு அதே சோகத்திற்குள் உன்னைத் தள்ள வேண்டாம் என்று நினைத்தேன். அதோடு உன்னைப் பற்றி நீ சொல்லும்போது உன் முகமே சரியில்லை. எதையோ இழந்ததைப் போலக் கலையற்றுப் போனது. அதை நீடித்தால் இன்றைய நாள் ஒரு வலி நிறைந்த நாளாகத்தான் நம் இருவருக்கும் நினைவிருக்கும்.”

“அப்படியல்ல ஒருவரை ஒருவர் முழுதாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒளிவுமறைவும் நமக்கிடையே இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம்.”

“அப்படியானால் நீ உன்னைப் பற்றி இப்பொழுது என்னிடம் சொல்லத் தயாராகிவிட்டாய். சரி உன் விரும்பம்போலச் சொல். ஆனால் முகத்தை மாற்றாதே, அழதே, குரலை நசுக்காதே. நீ அப்படிச் செய்தால் என் மனம் பதைபதைக்கும்.”

“சரி. நான் அப்படியொன்றும் செய்யமாட்டேன். சந்தோஷமாகப் பகிர்கிறேன்.”

“சரி.”

அவன் ஒப்புக் கொண்டதும் நான் என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அவனிடம் சொன்னேன். என்னுடைய ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து தொடங்கி அவனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிற நாள்வரை அத்தனையையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தேன்.

அவனுக்கு உறுதியளித்ததைப் போல நான் சிரித்தபடியேதான் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அவன் முகத்தை மாற்றினான், அழுதான், சோகமானான் என்னவெல்லாம் என்னைச் செய்யக் கூடாது என்று சொன்னானோ அதையெல்லாம் அவன் செய்தான். என் கைகள் இரண்டினையும் சேர்த்துப் பிடித்துத் தலை சாய்ந்து குழந்தையைப் போலக் குறுகினான்.
அவனைச் சமாதானம் செய்ய என்னென்னவோ பேசினேன். ஆனால் அதெல்லாம் அவன் காதில் விழவில்லை. அவன் கண்ணீரின் சூட்டை என் கைகள் அறிந்ததும் நானும் நிலை குழைந்து போனேன். அதற்கு மேல் என்னாலும் பேச முடியவில்லை. இருவரும் சொல்லாமலே புரிந்துகொண்டோம் இருவரின் மனக்குமுறலையும்.
நொடிக்கு நொடி இந்தப் பிரபஞ்சத்தின் நிலையே மாறும்போது நம் உணர்வுகள் எம்மாதிரம். அழுகையும் சோகமும் அடர்த்தி குறைந்து லேசானது.

“நடந்து முடிந்த விஷயங்களை நினைத்துப் பார்ப்பது இப்போது நன்றாக இருக்கும் மனநிலையையும் பாதிக்கும். நீ எதை நினைத்தும் இனிமேல் கவலைப்படாதே. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ சரித்து சந்தோஷமாக இருந்தால்தான் என்னால் தைரியமாக நடமாட முடியும்.”

“நீங்க இருக்கும்போது இனிமேல் எனக்கு என்ன கவலை? இதுக்கப்புறம் இனிமேல் எல்லா நாளும் நான் சந்தோஷமாக இருப்பேன். என்னுடைய வாழ்க்கையில் முதன் முதலாக ரொம்ப அதிர்ஷ்டமானவளைப் போல உணர்கிறேன். எனக்குள் இருக்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.”

“சரி ரொம்ப நேரமாக இதே மனநிலையே தொடர்கிறது. இதை மாற்ற வேண்டும். இன்றைக்கு உனக்குப் பிறந்த நாள். உனக்கு என்ன வேண்டுமே அதை என்னிடம் கேள். நீ கேட்ப்பது எதுவாயினும் வாங்கித் தருகிறேன்.”

“எதைக் கேட்டாலும் வாங்கித் தருவீங்களா?”

“எதைக் கேட்டாலும் வாங்கித்தர நான் தயாராகத்தான் இருக்கேன். ஆனால் என் சட்டைப்பையில் இப்போதைக்கு ஒரே ஒரு ஐநூறு ரூபாய்த் தாள்தான் இருக்கிறது. அதற்குள் அடங்கும் பொருள் ஏதுவாக இருந்தாலும் கேள்.”

அவன் இப்படிச் சொன்னதும் வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை. இன்றைய நாளை மறக்க முடியாத நியபகமாக்க இப்போது அவன் வாங்கித் தரப்போகும் பரிசும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் அவனிடமிருந்து எதையாவது கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

பெரிய கடைகளுக்குக் கூட்டிச் சென்று இதை வாங்கிக் கொடு அதை வாங்கிக் கொடு என்று அவனது சட்டைப்பையைத் துடைத்து எடுக்க எனக்கு மனம் வரவில்லை. அதனால் கோயில் கடை வீதியிலேயே எதையாவது வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

சின்னச் சின்னத் தள்ளு வண்டிகளிலும் அந்தத் தெருக்களில் இருந்த திண்ணைகளிலும் முளைத்திருந்த கடைகள் அத்தனையும் பெண்களுக்காவே படைக்கப்பட்டது போல இருந்தது.
அழகு பொருட்களும், அழகுக்கு அழகு சேர்க்கும் அலங்காரப் பொருட்களும் வாய்விட்டு எண்ணவியலா எண்ணிக்கையிலிருந்து. அந்தக் கோவிலுக்கு அதற்கு முன் பல முறை சென்றிருக்கிறேன். அதே கடைவீதி வழிதான் போவதும் வருவதுமாய் இருந்தேன். அப்போதெல்லாம் அந்தக் கடைகளை நான் பார்த்திருக்கிறேனா என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. அந்த அளவிற்கு கண்கள் முழுக்க ஆச்சர்யமும் சந்தோஷமும் நிரம்பி வழிய, ஒரு கடையை நெருங்கினேன்.

“என்ன ரூபா? என்ன வாங்கப் போற?”

“அதுதான் எனக்கும் தெரியலை. சரி நீங்களே சொல்லுங்களேன்.”

“நான் உன்னை முதல் நாள் பார்த்திலிருந்து கவனித்ததை வைத்துச் சில பொருட்கள் வாங்கித் தரலாம் என்று நினைக்குறேன்.”

“அப்படியா? சரி வாங்குங்கள் நீங்கள் அப்படி என்ன கவனித்திருக்கிறீர்கள் என்று நானும் பார்க்கிறேன்.”

அப்படி என்ன கவனித்திருக்கிறான்? எனக்காக என்ன வாங்கப் போகிறான்? அதன் பின்னாலிருக்கும் அவனது புரிதல் என்னவாக இருக்கும்? என்கிற கேள்விகள் என் பார்வையை மறைத்தது. அங்கிருந்து அனைவரும் திடீரென்று காணாமல் போனார்கள். நாங்கள் இருவரும் அங்கிருந்த இருபதுக்கும் மேற்பட்ட கடைகளும் மட்டுமே இருந்தோம். அவன் நான் கைநீட்டி காட்டும் அத்தனைப் பொருட்களையும் கைவைத்துத் தூக்குவது போலவும், அதை நான் ஆசையாக வாங்கி என் தோள் பையில் வைப்பது போலும், நாங்கள் அங்காடி முழுவதும் அலைந்த களைப்பில் ஆர அமர உட்கார்ந்து சூடான தேநீரைக் குடித்து உறைந்து போய்ச் சிலிர்ப்பது போலவும், அழகான, இயல்பிற்கு அப்பார்ப்பட்ட சில காதல் வார்த்தைகளைப் பேசிச் சிரிப்பது போலவும் சில நிகழ்வுகள் என் மனதில் தண்ணீர் கோலமாய்த் தோன்றி மறைந்தது.
எனக்குள் தோன்றிய உலகிற்குள் நான் உல்லாசமாகப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஏதோ ஒரு குறுக்கீடு வந்து தொம்சம் செய்ததும் திடுக்கிற்றுத் திரும்பினேன் அதிர்ச்சியில்.


...தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top