• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 9

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
அத்தியாயம் - 9

"தெய்வா, உள்ள இருக்கிற பாத்ரூம் பைப்ல தண்ணி வரலை. பிளம்பர்க்கு கால் பண்ணா அவன் வர ரெண்டு நாளாகும்னு சொல்லிட்டான். அதனால், ரெண்டு நாள் வெளியில் இருக்கிற பாத்ரூமை பயன்படுத்திக்கோங்க” சரியெனத் தலையை ஆட்டிய தெய்வானை, வள்ளியம்மையுடன் சமையலில் மும்முரமாக இருந்தார்.

வினோத்தும் சந்துருவும் சங்கவியின் தோழிகள் வீட்டிற்குச் ஆளுக்கொரு பக்கம் சென்று அவர்களுடன் தொடர்பில் இருந்தாளா என விசாரித்து, அலைந்து ஓய்ந்து வரவும், சாப்பாடும் தயாராக இருக்க, ஏற்கனவே இருந்த அசதி உண்ட மயக்கம் வரவேற்பு அறையிலே படுத்துவிட்டனர்.

திவ்யாவும் இலக்கியாவும் சங்கவி பற்றி ஏதாவது விபரம் கிடைக்குமா என்று அவளின் நாட்குறிப்பேடு, புத்தகங்களில் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, இலக்கியாவுக்கும் கண்கள் சுழற்ற உட்கார்ந்த இடத்திலே உறங்கிப் போனாள்.

நேரம் போனது தெரியாமல் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிக் கொண்டிருந்தாள் திவ்யா. தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் அவள் கவனத்தில் இல்லை. ஊரே அடங்கிவிட, ‘க்ர்ர்ர்…’ என மின் விசிறிச் சுழலும் சத்தம் மட்டும் கேட்க, திவ்யாவின் காதுகளில் அதுவும் கேட்டதாகத் தெரியவில்லை.

இளந் தென்றல் வீசப் பறந்த முடிகள் கன்னம் தொட்டு விளையாட, ஒற்றை விரலால் தள்ளியவளின் முகம் மின்கல விளக்கில் நிலவாகப் பிரகாசிக்க, திரும்பிப் படுத்த வினோத்தின் கண்களில் ஆசை ஊற்றெடுக்க, தன்னை மறந்து எழுந்தவன், தன்னைச் சுற்றி எல்லோரும் படுத்திருப்பதைக் கண்டு இதழ்கள் வலிக்காமல் சிரித்து மீண்டும் கண்ணை மூடினான்.

சன்னலின் திரைச் சீலைகள் படபடவென்று அடித்து விலகி வழிவிட, குளிர்ந்த தென்றல் திவ்யாவை வருடி, அவள் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியது.

குளிர்ந்த காற்றின் உணர்வில் மெல்ல சன்னல் பக்கம் திரும்பியவளின் கண்களில் முழுப் பௌர்ணமி நிலவு மின்ன, அதன் அழகில் மயங்கித் தன்னை மறந்து வெளியில் சென்று சுற்றுச் சுவரில் சாய்ந்து அதன் அழகை ரசித்து நின்றாள்.

தன் பின்னால் இருக்கும் ஆபத்தை உணராமல் மதியின் மயக்கத்தில் நின்றிருந்தவளின் அருகில் உருவம் வர, ஏதோ அசைவது போல் தெரிய திரும்பியவளின் கண்களுக்கு, இருண்ட கழிவறை தெரிய, மின் விளக்கை எறியவிட்டு உள்ளே நுழைந்தாள்.

திவ்யாவின் சரீரத்தை ஆட்கொள்ள வந்த சங்கவியின் ஆன்மா ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல, கழிவறையிலிருந்து வெளியில் வந்த திவ்யா நிலவின் ஒளியில் நின்று விட, அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சங்கவி தன் கொடூர முகத்தைக் காட்டியவாறு வந்தாள்.

தன்னை யாரோ தொடர்வது போல் உணர்ந்த திவ்யா திரும்பிப் பார்க்க, ஒய்யாரமாக நின்ற தென்னை மரத்தின் அடியில் யாரோ அமர்ந்திருப்பது போல் தெரியவும், கண்களைக் கசக்கிவிட்டு கூர்ந்து பார்த்தவளுக்குத் தெளிவாக எதுவும் தெரியவில்லை.

‘வினோத்’ எனக் கூப்பிட நினைக்கையில் வெள்ளையான உருவம் நகர்ந்து செல்வதைக் கண்டு, திருடன் யாரோ பதுங்கிச் செல்கிறானெனப் பதற்றத்துடன் உற்று கவனித்தவளுக்கு அது செல்லவில்லை தன்னை நோக்கி வருகிறது என்பது அப்போதுதான் புரிந்தது.

திவ்யா மெல்ல மெல்ல பின்னாடி நகர்ந்தாள். அவள்பின் செல்வதைக் கண்டதும் சங்கவி பறந்து வர, அதைக் கண்டு அதிர்ந்து, ‘வீல்’ என்று கத்தி ஓடி வினோத்தின் மீது மோதி மயங்கிச் சரிந்தாள்.

அலறல் சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்த வினோ திவ்யாவை தன் கைகளில் தாங்கினான். அரக்க பறக்க வந்தவர்களிடம் அவளை ஒப்படைத்துவிட்டுத் தென்னை மரத்தை நோக்கி ஓடினான். அவன் பின்னால் ஓடிய சந்துரு அவனைத் தடுத்து நிறுத்தினான்.

“வினோ, நில்லு! நீ போய் என்ன பண்ண போற? பேச்சு வார்த்தை நடத்துறத்துக்கு அவ ஒன்னும் மனித பிறவியா இல்லை. பேயா அலைஞ்சிட்டு இருக்கா.”

“நாம என்ன பண்ணோம். இல்லை, திவ்யா என்ன பண்ணா? அவளை எதுக்குக் கொல்ல நினைக்கிறா?”

“அவளுக்கு ஒன்னுன்னா இவ்ளோ துடிக்கிற, கூடப் பிறந்த தங்கச்சி உங்களால செத்தேனே அந்த வலி உனக்குத் தெரியலையா?” சங்கவி கட்டைக் குரலில் உறுமியது வினோத், சந்துரு இருவருக்கும் நன்றாகக் கேட்டது.

“ஏய்! நீ செத்ததையே மறைச்சு எங்கயோ ஒளிஞ்சி இருக்கவனை நம்பி ஏமாந்து போனது நீ. அதுக்கு எங்களை ஏன் பாடாய் படுத்துற. உன்னால நாங்க பட்ட கஷ்டம் போதாதா?”

“சும்மா நடிக்காத. நகுல் ரொம்ப நல்லவர். நான் செத்ததுக்குக் காரணம் அவர் இல்லை. அவர் கூட வாழவிடாம செஞ்சு, என்னைக் கொன்னது நீங்க எல்லோரும்தான்.”

“பைத்தியக்காரி மாதிரி பேசாத. நீ எப்படிச் செத்தன்னு கூட எங்களுக்குத் தெரியாது. அப்போ எப்படி நாங்க காரணமா இருக்க முடியும்” என்ற சந்துருவைச் கண்கள் சிவக்க பார்த்தாள் சங்கவி.

“ஏய்! சும்மா கத்தாத. நகுல் கூட வாழவிடாம செஞ்ச உங்களை ஒவ்வொருத்தரா கொல்லுவேன்” எனச் சீறியவள் தென்னை மட்டைகளை இருவர் மீதும் சுழல விட்டாள்.

ஒவ்வொரு மட்டையும் இருவரின் மீதும் கீறல்கள் போட, மட்டைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட இருவரும் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.

சந்திரனும் சரவணனும் இருவரையும் காப்பாற்ற வந்து முடியாமல் மட்டைகளால் காயம்பட்டுப் போனார்கள். அருகில் நெருங்கக் கூட முடியவில்லை.

தெய்வானை இருகரம் குவித்து மண்டியிட்டு, “ரெண்டு பேரையும் விட்ரு. நாங்க யாரும் உனக்கு எந்தக் கெடுதலும் பண்ணலை. எங்களை நம்புமா. உன்னை இழந்து நான் படுற வேதனை போதும்” கண்ணீர் மல்க நின்ற தாயைக் காண முடியாமல் ஆடிய ஆட்டத்தை நிறுத்திப் பறந்து சென்றது.

வாகனங்களை நிறுத்துவதற்குப் போடப்பட்டிருந்த சிமெண்ட் கூரையைப் போகிற போக்கில் தட்டிச் செல்ல, கூரை சரிந்து வினோத், சந்துரு மீது விழும் நேரத்தில் சுதாரித்த சந்திரனும் சரவணனும் இருவரையும் இழுக்கவும் கூரை விழவும் சரியாக இருந்தது.

இடிந்து விழும் சத்தம் கேட்டு என்னமோ ஏதோவென்று அக்கம் பக்கத்தினர் விழித்துக் கொண்டு பதறியடித்து வெளியில் வந்து சுற்றி சுற்றிப் பார்க்க, வினோத் வீட்டின் கூரை சரிந்து கிடப்பதைக் கண்டு சுற்றுச் சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்து கதவைப் படபடவெனத் தட்டினர்.

கதவு தட்டும் சத்தமும் பலரின் குரலும் கேட்க, மிரண்டு நின்றிருந்த இலக்கியா ஓடிப் போய்க் கதவைத் திறந்ததும், இரத்த வெள்ளத்தில் இருந்த வினோத்தும், சந்துருவும், மயங்கியிருந்த திவ்யாவும் கண்களுக்குத் தெரிய மூவரையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். சந்திரனும் சரவணனும் பின்னாடியே இன்னொரு வண்டியில் சென்றனர்.

தெய்வானை, வள்ளியம்மை இருவரும் புறப்பட, பக்கத்து வீட்டினர் நீங்க போக வேண்டாம். கூடப் போயிருக்கிறவங்க கவனித்துக் கொள்வார்கள் எனத் தடுத்துவிட்டனர்.

காலை விடிந்ததும் ஐவரும் பெரிய கட்டுகளுடன் வீட்டிற்கு வர, அவர்களுடன் முகிலனும் உள்ளே நுழைந்தான். பக்கத்து வீட்டினர் கூரை சரிந்ததால் நடந்த விபத்து என்று நினைத்து ஆறுதல் கூறிவிட்டுச் சென்றனர்.

“என்ன ஆச்சு வினோ, ஏன் எல்லோருக்கும் அடிப்பட்டிருக்கு? அப்பா அவசரமா வரச் சொல்லி கால் பண்ணாங்க” முகிலன் கேட்க, திவ்யா ஆரம்பிக்க ஒவ்வொருவராகச் சொல்லி முடித்தனர்.

“விஷயம் சீரியஸா போகுது. ஏதாவது அசாம்பாவிதம் நடக்கிறதுக்கு முன்னாடி உண்மையைக் கண்டுபிடிக்கனும். இந்தக் காலத்தில் போய்ப் பேய், பிசாசுன்றதை நம்ப முடியலை. சங்கவி பேயா இருந்தாலும் உண்மை தெரிஞ்சா அவ ஆன்மா சாந்தியடையும்” தனி ஆளாகக் கண்டுபிடிப்பது கடினமென மேலதிகாரிகளைச் சந்திக்கச் சென்றான் முகிலன்.

******
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
“போலீஸ் வேலையில் இருக்கிற நீ, பேய் பிசாசுன்னு வந்து நிற்கிற. கொலைகாரன் தப்பிக்க வழி கண்டுபிடிப்பான். குற்றவாளி தப்பிக்காம இருக்கப் பத்தாயிரம் வழியை நாம கண்டுபிடிக்கனும். பொண்ணு வீட்டை விட்டுப் போனாலும் எங்க, எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்காம இருக்காங்கன்னா, சந்தேகமா இருக்கே. ஏன் அவங்களே கொலை பண்ணிட்டு பேய் பிசாசுன்னு நாடகம் ஆடலாம் இல்லையா?” என்ற சந்தேகத்தைக் காவல் ஆய்வாளர் எழுப்ப, பதில் சொல்லத் திணறினான் முகிலன்.

“சார், உங்க சந்தேகத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியலை. ஆனால், ஒன்னு மட்டும் சொல்ல முடியும். வினோத்தும் அவங்க குடும்பமும் அப்படிப்பட்ட காரியத்தைப் பண்றவங்க இல்லை. ஏன்னா, ஈ, எறும்புக்குக் கூடக் கெடுதல் நினைக்கமாட்டாங்க. சங்கவி மேல கோபம் இருக்கு. அதுக்காகக் கொலை பண்ற அளவுக்குப் போறவங்க இல்லை. இதை என்னால் உறுதியா சொல்வேன்.”

முகிலனைக் கேட்டுத் தன் எதிரில் இருந்த கண்ணனைப் பார்த்த கமிஷனர், அவன் தலை அசைப்பைப் புரிந்து கொண்டு, “இவர் கண்ணன் எஸ்பி சிபி-சிஐடி டிபார்ட்மெண்ட்” என்றதும் சட்டென்று எழுந்த முகிலன் வேகமாகச் சல்யூட் வைத்தான்.

பதிலுக்குச் சல்யூட் வைத்த கண்ணன், “உட்காரு முகிலன். ஹெட்கான்ஸ்டபிள் வேந்தன் ஒரு கேஸ் விஷயமா விசாரிக்கப் போறப்ப, கீழே கிடந்த மொபைல் எடுத்து, யாருதுன்னு பார்க்கிறதுக்காக மொபைல் ஆன் பண்ணி பார்த்திருக்கார். அதில் சங்கவி சாகுறதுக்கு முன்னாடி எடுத்த வீடியோவில் பல விஷயங்களைச் சொல்லிட்டு, நான் சாகுறதுக்கு முழுக் காரணம் வினோத்தும் சில காவலர்களும் அவங்களுக்கு உடந்தையா அம்மா, அப்பா, சந்துரு இருந்திருக்கலாம்னு பதிவு பண்ணியிருக்கா. அவளோட பாடி மொபைல் கிடந்த ஏரியாவில்தான் இருக்கனும்னு. அதைச் சல்லடைப் போட்டுத் தேடியாச்சு. எந்தப் பயனும் இல்லை.” என்றான்.

“சார், வீடியோவில் அவ சொன்ன விஷயம்…” என இழுத்தான் முகிலன்.

காக்கிக் சட்டையைப் போட்டுட்டா மனதில் ஈரம் என்பது இருக்காது என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் கண்ணன் சொன்னதைக் கேட்ட முகிலனின் கண்களிலிருந்து துளித் துளியாக நீர் விழுந்தது.

“போலீஸ் வேலைக்கு வந்துட்டா, மனசை இரும்பா ஆகிடனும் முகிலன். நாம கலங்கி நின்னா குற்றவாளி தப்பிச்சிருவான். உண்மை குற்றவாளியைக் கண்டுபிடிக்கிற வரை இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது. ஏன்னா, தன்னோட இந்த நிலைமைக்குக் காவல்துறையும் காரணம்னு சொல்லியிருக்கா. கருப்பு ஆடு உள்ளயே இருக்குன்னா, தடயங்களை அழிக்க முயற்சி செய்யும்.” எனக் கண்ணன் சொல்ல,

“வினோத், காவல்துறை ரெண்டு பேரையும் குற்றம் சாட்டியிருக்கா. வினோத்திடமிருந்து ஆரம்பிக்கலாம்னு எஸ்பி கண்ணன் வினோத்துக்குக் கார் டிரைவர் கண்ணனா இருக்கார்.” என்றார் காவல் ஆய்வாளர் தேவன்.

“வினோத்தைப் பற்றி விசாரித்தப்போ என்னுடைய சந்தேக வட்டத்துக்குள் நீயும் வந்தாச்சு. அந்தப் போலீஸ் நீயா இருக்குமோன்னு…” கண்ணன் சொன்னதும்,

அதிர்ந்த முகிலன், “சார்!” என எழுந்தேவிட்டான்.

தேவனும், கண்ணனும் சிரிக்க, “உட்காரு முகிலன் பதறாத. போலீஸ் கண்ணீர் வடிக்கிறது எனக்குப் பிடிக்காது. சங்கவி இறந்ததைப் பற்றிச் சொன்னதும் உன் கண்ணீரே உனக்கு இதில் சம்பந்தம் இல்லைன்னு பதில் சொல்லிற்று. ஆனால், உன்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் நாங்க என்னைக்கோ திரட்டியாச்சு” என்றான் கண்ணன்.

தன் மடிக் கணினியை முகிலன் பக்கம் திருப்பிய தேவன், “இந்த வீடியோ பாரு” என்றார். தோட்டத்துக் கிணற்றில் நடந்த சம்பவத்திலிருந்து முந்தின நாள் இரவுவரை நடந்த சம்பவம் வரை பதிவாகியிருந்தது.

“எதுவுமே இல்லை, இவங்க எதைப் பார்த்துப் பயப்படுறாங்க. வினோத் தானாவே கழுத்தை நெறிச்சிக்கிற மாதிரி இருக்கு. தென்னை மட்டைகள் எப்படித் தானா சுத்துது”

“அதான் நீங்க பேய் பிசாசுன்னு சொன்னீங்களே அதோட வேலையா இருக்குமோ?” கண்ணன் கிண்டலாகக் கேட்க,

“சார், நீங்க நிஜமா சொல்றீங்களா? இல்லை, கிண்டல் பண்றீங்களா?

“இப்படி யோசி முகிலன். செஞ்ச கொலையை மறைக்க இவங்க எல்லோரும் சேர்ந்து ஆடுற நாடகமா ஏன் இருக்கக் கூடாது?” வினோத் செய்திருக்கமாட்டானெனத் திடமாகச் சொன்ன முகிலனும் தடுமாறினான்.

“வினோத், சந்துரு நகுல் பற்றி விசாரிக்கப் போயிருக்காங்க. இனிமே அவங்க கூட நீயும் போ. அவங்களைப் பக்கத்திலிருந்து கவனி. அவங்களைப் பற்றி நொடிக்கு ஒரு தரம் தகவல் கொடுத்துட்டே இருக்கனும். குற்றவாளி வினோத்தா நகுலா யாரா இருந்தாலும் அவங்களைப் பிடிக்கச் சரியான வழி இதுதான் புரியுதா?”

“நல்லா புரியுது சார். அவங்க ஏற்கனவே விசாரிச்சப்ப நகுல் அந்த வீட்டில் இல்லை. வீட்டை வித்துட்டுப் போயிருக்கான். இப்ப இருக்கிறவங்களிடம் அவனைப் பற்றிய விபரம் கேட்டதுக்குத் தெரியாதுன்னு சொல்லியிருக்காங்க.”

“ஓ! ஓகே முகிலன் நீ திரும்ப வினோத்தைக் கூட்டிட்டுப் போய் விசாரி. வினோத்தோட பார்வையில் தெரியாதது. போலீஸ் பார்வையில் மாட்டும். நீ கிளம்பு. எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் கவனமா ஜாக்கிரதையா இருக்கனும்” என்ற கண்ணனுக்கும் தேவனுக்கும் சல்யூட் வைத்துவிட்டுச் சென்றான்.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top