- Joined
- Aug 31, 2024
- Messages
- 34
- Thread Author
- #1
அத்தியாயம் - 8
பழைய நினைவுகளிலிருந்து திரும்பியவர்கள் ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடியே இருந்தனர். இதுவரை மறந்து போயிருந்த சங்கவிக்கு என்னவானது என்ற கலக்கம் ஒவ்வொருக்குள்ளும் இருந்தது.
“என்னைக்கோ செத்துட்டான்னு முடிவு பண்ணியாச்சு. இப்ப அவ உயிரோட இருந்தா என்ன? செத்தா என்ன?” விரக்தியில் வார்த்தைகளை விட்டார் சந்திரன்.
பெற்ற தாயின் மனமோ சொல்ல முடியா வேதனையில் ஓலமிட்டது. ஒவ்வொரு அசைவிலும் தெய்வானையைப் புரிந்து கொள்ளும் வினோத், இந்த நேரத்தில் தன் தாயை புரிந்து கொள்வது கடினமா? அவர் கண்களின் கண்ணீரே அனைத்தையும் வினோத்துக்கு உணர்த்திவிட்டது.
“அப்பா, அவ செஞ்ச காரியம் நமக்குப் பிடிக்கலைதான். அதுக்காக அவளுக்குப் பிரச்சனைன்னு வரப்போ நாம கூட இருக்க வேண்டாமா? அதுவும் அவ உயிரோட இருக்காளான்னு சந்தேகமா இருக்கு. இந்த நேரத்திலும் நாம அவளைத் தேடிப் போகலைன்னா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்தப் பாவம் தீராது, என்னால் கல்லாக இருக்க முடியாது” என்று தீர்மானமாகச் சொன்னான் வினோத்.
சந்திரன் அவனிடம் வேண்டாமெனச் சொல்ல வர, சரவணன் அவரைத் தடுத்து அமைதியாக இருக்கச் சொல்ல, மச்சானின் பேச்சுக்கு மறு பேச்சில்லை என்று வாயை மூடிக் கொண்டார்.
“வினோ, நீ என்ன செய்யனுமோ செய். உன் கூட நான் இருக்கேன். சங்கவி நிஜமாவே இறந்துட்டான்னா, அதுக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு சம்பந்தப் பட்டவங்களை ஜெயிலுக்கு அனுப்பாம விடக் கூடாது” சந்துரு வினோத்தின் தோளில் கைபோட்டுச் சொல்ல, திவ்யாவும் இலக்கியாவும் நாங்களும் வருவோம் எனப் பிடிவாதமாக நின்றனர்.
முழுப் பலம் கிடைத்த எண்ணத்தில் உடனே தன் காவல்துறை நண்பன் முகிலனைத் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொன்னான் வினோத்.
பொறுமையாக முழு விபரங்களையும் கேட்ட முகிலன் உடனே சென்னை வந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூற, மறுநாளே எல்லோரும் சென்னைக்குப் புறப்பட முடிவு செய்தனர்.
சங்கவியின் கைப்பேசிக்கும் நகுலுக்கும் தொடர்பு கொள்ளப் பலமுறை முயற்சித்தும் உபயோகத்தில் இல்லை என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் வரவில்லை.
இரவு வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டு வானத்தைப் பார்த்தவாறே தீவிர யோசனையில் இருந்த வினோத் அப்படியே கண்ணயர்ந்து தூங்கிப் போனான்.
வினோத் தனியாக உறங்குவதால் சந்துருவும் வாசலைத் திறந்து வைத்து, வாசலிலே பாய் விரித்து அவனுக்குத் துணையாகப் படுத்துவிட்டான்.
நடுநிசி நேரம் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்க, அதனுடன் நாய்களின் ஓலங்களும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வினோத்துக்கு எதுவும் கேட்கவில்லை.
நேரம் செல்லச் செல்ல நாய்கள் விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது. தூக்கமின்றிப் படுத்திருந்த தெய்வானைக்கு ஏதோ சரியில்லை என்ற உணர்வு தட்ட, பட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து வெளியில் வந்து சந்துருவையும் வினோத்தையும் பார்த்துவிட்டுச் சென்றார்.
தெய்வானை வெளியில் வந்தவுடன் விடாமல் கேட்ட நாய்களின் சத்தமும் நின்று போயிருந்தது. அவர் வந்து சென்ற சில நிமிடங்களில் திரும்பவும் பழையபடி ஆரம்பித்தது.
ஒரே இடத்தைப் பார்த்தபடி கத்திக் கொண்டிருந்த நாய்களை, கருப்பு நாய் ஒன்று சிவந்த விழிகளுடன் ஓய்யாரமாகப் பார்த்து நின்றிருந்தது.
மற்ற நாய்களை ஏளனமாகப் பார்த்த கருப்பு நாய், மெல்ல வினோத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வந்து, தன் முன்னங்கால்களை வினோத்தின் நெஞ்சின் மீது வைத்து நின்று, அவனைக் குதறி எடுக்கத் தயாரானது.
வினோத்தின் மீது கால் வைத்ததும் மற்ற நாய்கள் தொண்டை கிழிய கத்தி அவனை எழுப்ப முயற்சிக்க, அதில் கோபம் கொண்ட கருப்பு நாய் திரும்பி மற்ற நாய்களை நோக்கி வெறியுடன் பாய, தப்பித்தோம் பிழைத்தோம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்குப் பாய்ந்தது.
மீண்டும் கட்டிலின் மேல் ஏறி வினோத்தின் நெஞ்சில் அழுத்த ஆரம்பித்தது. அதன் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க வினோத் மூச்சு விடத் திணறினான்.
‘ஆவ்! ஆவ்!’ என வாயைத் திறந்து திறந்து மூட, கண்களைத் திறந்து கருப்பு நாய் நிற்பதைக் கண்டு அதிர்ந்தவன், “ச…ந்…து…ரு.., ச…ந்…து…ரு..,”
கிணற்றுக்குள்ளிருந்து கூப்பிடுவது போல் அவன் குரல் இருக்க, கண்டிப்பாகச் சந்துருவுக்குக் கேட்காது எனப் புரிந்தவன் கைகளால் துலாவ, தண்ணீர் சொம்பு கையில் மாட்டியதும், அதைத் தூக்கி சந்துருவின் அருகில் தரையில் எறிந்தான். பதறியடித்து எழுந்த சந்துரு வினோத் வாயைத் திறந்து மூடுவதைக் கண்டு எழுந்து அவன் அருகில் ஓடி வந்தான்.
தன் இதயத் துடிப்பை நிறுத்த முயற்சி செய்யும் நாயைக் கண்ணசைத்து சந்துருவுக்குக் காட்டினான் வினோத். அவன் கருவிழி சென்ற இடத்தில் எதுவும் இல்லாதைக் கண்டு விழித்த சந்துரு, “என்ன சொல்ற? என்ன ஆச்சு உனக்கு? ஏன் வாயைத் திறந்து திறந்து மூடுற? உடம்பு எதுவும் சரியில்லையா?” என அவன்மேல் கை வைத்துப் பார்த்தான்.
வினோத் பேச வர, அவன் கழுத்தில் ஒரு காலை வைத்து நெறுக்க, வார்த்தைகள் வரமால், கண்கள் மேலே சொருக ஆரம்பிக்க, பதற்றமான சந்துரு, “வினோ! வினோ!” என அவனை உலுக்க, “அம்மா! அப்பா! மாமா! அத்தை! திவ்யா! இலக்கியா” காது கிழிய கத்தினான்.
திடீரென்று ஞாபகம் வந்தவன், “வினோ, சங்கவி உன்னைக் கொல்ல பார்க்காளா?” சந்துரு கேட்ட அடுத்த நொடி, கையைக் கட்டிலில் தட்டி, ‘ஆமா’ என்றான்.
உடனே சுதாரித்த சந்துரு, “சங்கவி, நீ உயிரோட இருக்கியா? இல்லையான்னே எங்களுக்குத் தெரியலை. என்ன நடந்துச்சுன்னும் தெரியலை. நாங்க சொன்னதைக் கேட்காம போனது நீ. ஆனால், வினோவை எதுக்குப் பழி வாங்க நினைக்க? நாங்க தப்பு செய்திருந்தா முதல்ல அதை என்னனென்னு தெரிஞ்சிக்க விடு. நிஜமாவே தப்பு எங்க மேல இருக்குன்னா, நாங்களே சாவுறோம்”
கண்களில் அக்னி எரிய நின்றிருந்த நாய், மெல்ல கால்களை எடுத்துவிட்டு சந்துருவை தாண்டிச் சென்று சுற்றுச் சுவரில் நின்று திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றது.
சந்துரு கத்திய சத்தம் கேட்டு வெளியில் வந்தவர்கள், அவன் சங்கவியிடம் பேச்சு வார்த்தை நடத்துவதைக் கண்டு அமைதியாக நின்றனர்.
குரல் வளையை நெறித்ததால் வந்த இருமல் நிற்காமல் இருக்க, திவ்யா தண்ணீர் எடுத்து வந்து வினோத்திடம் கொடுக்க, மடமடவென வாங்கிக் குடித்தான்.
“எங்க கண்ணுக்கு ஒன்னுமே தெரியலை உனக்கு மட்டும் எப்படித் தெரியுது? ஏன் உன்னைக் கொல்ல நினைக்கிறா?” சந்துரு குழப்பமாகக் கேட்க, எனக்கும் புரியலையெனப் பேச முடியாமல் சைகையில் சொன்னான் வினோத்.
“சந்திரன், நாம காலையிலே கிளம்பி, முதல்ல போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்துச் சங்கவிக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்கச் சொல்லனும்” என்றார் சரவணன்.
“ஆமா மாமா, நீங்களும் அப்பாவும் போலீஸ் ஸ்டேஷன் போங்க. நானும் வினோவும் அந்த நகுல் வீட்டில் போய்ப் பார்த்ததுட்டு வரோம்.” சந்துரு சொல்ல.
அனைவரின் கண்களிலும் உறக்கம் இல்லாமல் களைப்பு இருந்தாலும் தலைக்கு மேல் பிரச்சனையே பெரிதாகத் தெரிய, இரண்டு முட்களும் நான்கு மணியைக் காட்டினாலும் சங்கவிக்கு என்ன ஆனது என்பதைத் தெரிந்து கொள்ளும் எண்ணமே மேலோங்கி இருந்தது.
“ஆமா இலக்கியாவை எங்க காணும்? இலக்கியா! இலக்கியா!” எனப் பதற்றத்தில் கத்தினார் தெய்வானை.
“எல்லாத்துக்கும் பயந்தா எப்படி அத்தை? நான் எங்கேயும் போகலை. இங்கதான் இருக்கேன்” தன் வீட்டில் மாட்டியிருந்த சிசிடிவி பதிவுகளைப் பார்த்தவள், அதை எல்லோரும் பார்க்கனும் என்று தெய்வானைக்கு பதில் சொல்லிக் கொண்டே தன் கைப்பேசியைத் தொலைக்காட்சியில் இணைத்து ஓடவிட்டாள்.
காணொளியை முழுவதும் பார்த்த அனைவரும் வினோத்தை வினோதமாகப் பார்க்க, “வினோ, நீயே கழுத்தை நெரிச்சிக்கிற, நெஞ்ச பிடித்து அழுத்திக்கிற. எங்க கண்ணுக்குத் தெரியலை சரி, கேமராவிலும் தெரியலை” தெய்வா குழப்பமாகக் கேட்க.
“அத்தை, மச்சான் சங்கவியையே நினைச்சிட்டு இருக்காங்க போல. அவளைப் பற்றிய கவலையில் அவங்களை அறியாமலே இப்படி நடத்துக்கிறாங்கன்னு நினைக்கிறேன்” இலக்கியா கூற.
கோபத்தில் மூக்கு துடிக்க, “என்னைப் பைத்தியக்காரன்னு சொல்றியா?” என இலக்கியாவிடம் பாய்ந்தான் வினோத்.
முகத்தில் தெரிந்த சிவப்பே வினோத்தின் ஆத்திரத்தைப் பறைசாற்றியது. இதுவரை கண்டிராத வினோத் இன்று புதுமையாகத் தெரிய, சற்று தடுமாறினாள் இலக்கியா. இருவருக்கும் இடையில் நின்ற திவ்யா, “இலக்கியா, அமைதியா இரு. வினோ, எங்க கண்ணுக்கு எதுவும் தெரியலை. உங்களுக்கு மட்டும்தான் தெரியுது. வீடியோ பார்த்தா எல்லாம் நீங்க பண்ற மாதிரிதானே இருக்கு. அப்ப எல்லோருக்கும் வரச் சந்தேகம் நியாம்தானே?”
திவ்யாவின் விளக்கத்தில் சற்று அமைதியான வினோத் கண்களை மூடித் தரையில் உட்கார்ந்தான். சந்திரன் சந்துருவுக்குக் கண்ணசைக்க, “வினோ, அவங்க எல்லாம் ரெடி பண்ணட்டும். நாம கொஞ்ச நேரம் தூங்கலாம்” வரமாட்டேன் என்றவனை விடாப்பிடியாக இழுத்துச் சென்று படுக்க வைத்தான் சந்துரு.
******
ஊரிலிருந்து வந்த மறுநாளே காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, சந்திரனும் சரவணனும் செல்ல, வினோத்தும் சங்கவியைத் தேடி நகுலின் வீட்டிற்குச் சென்றனர்.
இரண்டு வருடத்திற்கு முன் வந்த வீடு எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அழைப்பு மணியை ஒலிக்கவிட்டு, சந்துருவும் வினோத்தும் நகுலின் மனைவி கதவைத் திறக்கும் வரை காத்திருந்தனர்.
நகுலின் மனைவி இல்லாமல் வேறொரு பெண்மணி கதைவைத் திறந்து வர, வினோ திருதிருவென முழித்தான். பின்னாடிக் குழந்தைகள் நிற்கிறதா என உள்ளே வினோத் எட்டிப் பார்க்க, அந்தப் பெண்மணியும் உள்ளே பார்த்துவிட்டு, “என்ன வேணும்?” என்றாள்.
“இது நகுலின் வீடுதானே? அவர் இருக்காரா?” வினோத் கேட்க.
“நகுலா? அவர் இங்க இல்லையே” இருவரையும் மேலும் கீழும் பார்த்தபடிச் சொல்ல.
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த வீட்டில்தான் என் நண்பன் நகுல் இருந்தான்.”
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியா?” என யோசித்தவள், “கரண்!” என உள்பக்கம் திரும்பிக் குரல் கொடுத்தாள்.
மனைவி கொடுத்த குரல் கேட்டு அடுத்த நொடியே ஒருவன் வந்து நிற்க, அவனிடம் விபரங்களைக் கூற, “நீ உள்ள போ மீனு. நான் பேசிக்கிறேன்” என்றவன் சந்துருவையும் வினோத்தையும் பார்த்து, “நகுல் இந்த வீட்டை எங்களுக்கு வித்து ஒன்றரை வருஷமாச்சு. இப்ப எங்க இருக்கார்னு எங்களுக்குத் தெரியாது. எதுக்காவது தேவைப்படும்னு மொபைல் நம்பர் வாங்கி வச்சிருந்தோம். ஆனால், அதுவும் இப்ப உபயோகத்தில் இல்லைன்னு வருது” என்றார்.
அதற்கு மேல் அங்கு நிற்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லையென்று இருவரும் மெல்ல தலையை அசைத்து வெளியில் வந்தனர்.
இருவரும் வெளியில் வந்து யோசித்துக் கொண்டிருந்த நேரம், சந்திரனிடமிருந்து அழைப்பு வர, கைப்பேசியை வைத்த வினோத், “சொல்லுங்கப்பா” என்க.
“புகார் கொடுத்துட்டோம். முகிலன் தம்பி கூட இருந்து எல்லாம் செய்து கொடுத்துட்டாப்ல. நீங்க போன காரியம் என்ன ஆச்சு? அந்த ராஸ்கலைப் பார்த்தீங்களா?”
“இல்லைப்பா, அவன் வீட்டை வித்துட்டு ஓடிட்டான். இப்ப இருக்கிறவங்களுக்கும் அவனைப் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியலை.” சரவணனும் சந்திரனும் அதிர்ச்சியுற, முகிலனும் விபரங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
வினோத்தும் சந்துருவும் சிறிது நேரம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் பேசிக் கொண்டே செல்ல, வீட்டின் சன்னல் வழியாக வினோத்தும் சந்துருவும் பேசுவதைக் கேட்ட மீனு, “நகுல் உங்ககூடத் தானே வேலை பார்க்கிறார். எதுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாதுன்னு சொன்னீங்க.? எனக் கேட்க.
“அவனே கடன் அதிகாமாயிட்டுன்னு இந்த வீட்டையே வித்தான். வித்தும் முழுக் கடனையும் அடைக்க முடியலை. இவங்களும் ஏதாவது கடன்காரனாத்தான் இருப்பானுங்க. இப்பதான் வீட்டை வித்துக் கொஞ்சக் கடனை அடைச்சிருக்கான். இன்னும் நெருக்கடின்னா என்ன செய்வான். அதான் தெரியாதுன்னு சொன்னேன்.”
“அது சரிங்க. ஆனால் இவங்க கடன்காரங்க மாதிரி தெரியலை. ஏன்னா, ஏதோ போலீஸ் கம்ப்ளெய்ண்ட்னு பேசிக்கிட்டாங்க” என்றதும் பதற்றமானான் கரண்.
“என்ன சொல்ற! போலீஸ் கம்ப்ளெய்ண்டா!” அதிர்ந்தவன் மடமடவெனத் தன் கைப்பேசியை எடுத்துத் தட்ட ஆரம்பித்தான்.
தொடரும்...