• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 5

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
21
அத்தியாயம் - 5
சரவணன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்க, வினோத்தும் சந்துருவும் கன்னத்தில் கை வைத்துத் தலையைத் தொங்க போட்டு உட்கார்ந்திருந்தனர்.

“நீங்க எல்லோரும் ஊருக்கு வந்து எத்தனை வருஷமாச்சு. அன்னைக்கு இருந்த மாதிரியா இன்னும் இருக்கும்? என்னென்ன மாறியிருக்குனு இங்க இருக்கிறவங்களுக்குதானே தெரியும். போறதுக்கு முன்னாடி என்னிடம் கேட்டுட்டு போயிருக்கலாமில்ல” கோபத்தில் மலை உச்சியில் நின்று கொண்டிருந்தார்.

“அப்பா, எதுக்கு இப்ப கத்திட்டு இருக்கீங்க? அதான் மச்சான் ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகலையே” பரிந்து கொண்டு வந்தாள் திவ்யா.

“கடவுள் புண்ணியத்தில் அவங்களுக்கு ஒன்னும் ஆகலை. மகேஷை நினைச்சுப் பார்த்தியா? உயிர் பிழைத்ததே மறு பிழைப்புன்னு டாக்டர் சொல்லியிருக்கார். அவனால்தான் அந்தக் குடும்பமே நல்லா இருக்கு. அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தா அவன் தங்கச்சிங்க நிலைமை என்ன ஆகியிருக்கும்!”

“ஏன்பா அவரை மச்சானா கூப்பிட்டாங்க. அவராத்தானே போயிருக்கார். மேலே பார்க்காதீங்கன்னு தாத்தா சொல்லியும் மேல பார்த்தது அவர் தப்பு. அதுக்கு இவங்க ரெண்டு பேரையும் திட்டி என்ன ஆகப் போகுது?” அடுத்து இலக்கியாவும் ஆதரவுக்கு வர, ‘ஆ’ வென்று சந்துரு பார்த்திருக்க, வினோத் அவன் வாயை மூட, சந்துரு முறைப்புக்கு ஆளானான்.

“மாமா, கேட்காம போனது தப்புதான். பழைய ஃப்ரெண்ட்ஸ் வருவாங்கன்னு நினைச்சு ஆசையில் போயிட்டோம் மன்னிச்சிருங்க” வினோத் சொல்ல, சற்றென்று கோபம் தணிந்து அமைதியாகப் பேசினார்.

“மாமா, சங்கவி பற்றி இங்க யாருக்கும் எதுவும் சொல்லலையா?” சந்துரு கேட்க,

“சொல்லலை. சொல்ற மாதிரியா அவ பண்ணிட்டுப் போயிருக்கா. காதலிச்சது தப்பில்லை. படிச்சு முடி. அதுக்குப் பிறகு மற்றதை பேசிக்கலாம்னு சொல்லியும் நம்மை நம்பாம ஓடிப் போனவளைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும். இது கிராமம் சின்ன விஷயம்னாலே பெரிசா பேசுவாங்க. இந்த மாதிரி விஷயமெல்லாம் அவங்களுக்கு அல்வா கொடுக்கிற மாதிரி. கல்யாணம் பண்ணிட்டு வெளிநாடு போயிட்டான்னு சொல்லி வச்சிருக்கேன். ஆமா நீ ஏன் கேட்ட?”

“சங்கவி ஃப்ரெண்ட்ஸ் எங்களைப் பார்த்ததும் அவளைப் பற்றிக் கேட்டாங்க.”

“ம்ம்ம்… மாப்ள உங்க வீட்ல என் பொண்ணுங்களைக் கட்டிக் கொடுக்கப் போறேன். அதனால், எங்க குடும்பக் கௌரவமும் இதில் அடங்கி இருக்கு. அதான் அப்படிச் சொன்னேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க” சந்திரனிடம் பணிவாகச் சொன்னார் சரவணன்.

“அப்படி ஒருத்தி எனக்கும் மகளா பிறந்ததாவே எனக்கு ஞாபகம் இல்லை மச்சான்” என்று ஒரே வார்த்தையில் பட்டென்று முடித்தார் சந்திரன்.

இருவரின் பேச்சைக் கேட்டு தெய்வாணையின் முகம் மாறிக் கண்களில் நீர் திரண்டது. தன்னால் எதையும் வெளியில் பேச முடியாத சூழ்நிலை என்பதால் திரண்ட கண்ணீரை சிந்தாமல் அடக்கி வைத்தார்.

பேசுவது எல்லாம் வினோத்தின் காதுகளில் விழுந்தாலும், எதையும் கவனிக்காமல் தான் மட்டும் பலத்த யோசனையில் இருக்க, அதைக் கண்ட திவ்யா உறித்துக் கொண்டிருந்த வெங்காயத்தை அவன்மீது எறிந்தாள்.

சட்டென்று திரும்பியவனிடம் கண்ணால் என்ன யோசனையெனக் கேட்க, “ம்ப்ச்” ஒன்னுமில்லையெனத் தலையை அசைத்து வெங்காயத்தை அவள் மீதே வீசினான். இருவரின் விளையாட்டைக் கண்டும் காணாமலும் சந்திரனும் சரவணனும் வெளியில் புறப்பட்டனர்.

சரவணன் செல்லும் வரை காத்திருந்த இலக்கியா, “அம்மா, நான் எப்போ சந்துருவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அப்பா என்னையும் சேர்த்து கட்டிக் கொடுக்கிற மாதிரி சொல்றார்” யாருக்கும் எதுவும் தெரியாது என நினைத்து இலக்கியா வள்ளியிடம் கேட்க.

“ஆமா உனக்குன்னு ஊர் ஊரா தேடிட்டு அலைய முடியாது. பக்கத்திலையே ஈசியா கிடைக்கிற சந்துருவுக்கே கட்டிக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். சந்துரு, உனக்குக் காவ்யாவை கட்டிக்க இஷ்டமில்லையா?” வள்ளியம்மை திடீரென்று எல்லோர் முன்னாடியும் கேட்கவும் பதில் சொல்லத் தடுமாறியவன், ‘ஆமா’, ‘இல்லை’ என இரு பக்கமும் தலையை ஆட்டினான்.

வினோத்தும் திவ்யாவும் இருவரையும் கேலியாகப் பார்த்துச் சிரிக்க இரண்டு பேரையும் பார்த்த இலக்கியா ஏதோ வில்லங்கம் இருக்கெனப் புரிந்தவள் என்னவாக இருக்குமென யோசனையில் ஆழ்ந்தாள்.

“திவ்யா, நேத்து ஆன்லைனில் மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன்னு சொன்னியே, அதை டிவியில் போட்டுக்காட்டு இலக்கியா பார்த்துட்டு யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லட்டும். அதுக்கு முன்னாடி அந்த வீடியோவில் இருக்கிற மாப்பிள்ளையையும் போட்டுக்காட்டிடு” என வள்ளி தெய்வானையைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.

சந்துருவின் முகம் மாறினாலும் காட்டிக் கொள்ளாமல் இருந்தான். வீடியோ என்றதும் மூளை வேகமாக வேலை செய்ய, கண்டிப்பா இதில் ஏதோ இருக்கு. நாம இங்கிருந்து போறதுதான் நல்லதென எண்ணியவன் மகேஷைப் பார்க்கப் போவதாகச் சொல்லி எழுந்தவனை இழுத்து உட்கார வைத்தான் வினோத்.

“இலக்கியாவுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறோம். நீ மட்டும் மகேஷைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்க. ரெண்டு பேரும் சேர்ந்தே போலாம். முதல்ல இலக்கியா மாப்பிள்ளையைப் பார்க்கலாம்” என்ற வினோத்திடம் மறுப்பு சொல்ல முடியாமல் அமர்ந்தான்.

திவ்யா வீடியோவை ஓட விடச் சட்டென்று சுதாரித்த இலக்கியா எழுந்து ஓட எத்தனிக்க அவள் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தாள் திவ்யா.

“என்னப்பா தம்பி வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு ரொமான்ஸ் எல்லாம் வேற லெவல்ல இருக்கு. இப்ப சொல்லு இலக்கியாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கலாமா?” கிண்டலாக வினோத் கேட்க,

“நான் எப்பவுமே அவளை வேண்டாம்னு சொல்லலை. அவதான் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கா. இப்பவும் மாமா சொன்னதுக்கு அத்தையிடம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கா. அவளுக்கு என்ன இஷ்டமோ அதையே எல்லோரும் செய்ங்க” என்றவன் எழுந்து திரும்பவும் வெளியில் செல்ல எழ,

“என்ன அவசரம் வீடியோவை முழுசா பாரு. அவளுக்கு இஷ்டமா இல்லையான்னு தெரியும்.”

இலக்கியா ஒளிந்திருந்து பார்த்ததையும் அவள் வெட்கப்பட்டுச் சென்றதையும் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி என்றாலும் அவள் வாயிலிருந்து சம்மதம் என்ற வார்த்தை வரலையே என்ற ஆதங்க முண்டியடித்து நின்றது.

“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதை வைத்து அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு எப்படிச் சொல்றீங்க? காதல் மனசிலிருந்து வரனும். பார்த்ததும் வரது காதல் இல்லை. அந்த நேரத்தில் வினோத் அங்க இருந்தாலும் நான் செய்ததைதான் செய்திருப்பான். அதுக்காகத் திவ்யாவிடம் இருக்கிற காதல் இலக்கியாவிடம் மாறிட்டுன்னு சொல்வீங்களா? அது ஒரு உதவி அவ்ளோதான்” படபடவெனப் பேசியவன் எழுந்து வெளியில் செல்ல, திரும்பி இலக்கியாவை ஒரு பார்வைப் பார்த்துச் சென்றான்.

“ஏன் திவ்யா இப்ப நாம லூஸா? இல்லை, அவன் லூஸா? இப்படி வேதாந்தம் பேசிட்டுப் போறான்” என வினோ திவ்யா முகம் பார்க்க,

“வீட்டில் ஒன்னுன்னா பரவாயில்லை. ரெண்டு லூஸை வச்சிகிட்டு நாங்க எப்படித்தான் குப்பைக் கொட்ட போறோமே தெரியலையே கடவுளே காப்பாத்தப்பா” திவ்யா கைகளை மேலே தூக்கி விரல்களை விரிக்க,

“ம்ம்… கல்யாணம் பண்ணிட்டு வந்ததும் எப்படிக் குப்பை கொட்டுறதுன்னு தெரிஞ்சிப்ப. அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒன்னுமே இல்லையாம். நீ மற்ற மாப்ளை போட்டோவைப் போடு. இலக்கியா பார்த்து யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லட்டும். இலக்கியா, பார்த்துச் சட்டுன்னு சொல்லுமா. நீ இழுத்துட்டே போனா எங்க கல்யாணத்தையும் உங்க அப்பா இழுத்துட்டுப் போவார்” ஆதங்கத்தில் வினோத் சொல்ல.

சந்துருவின் மனதில் என்ன இருக்கு என்பதைத் தெரிந்து கொள்ளத்தானே தாயிடம் பீடிகைப் போட்டாள். தன்னையே சொல்லச் சொல்றானே, அவனுக்குக் காதல் இருக்கா? இல்லையா? இருதலைக் கொள்ளியாகத் தவித்த இலக்கியா வினோத் கேட்டதைக் காதில் வாங்காமல் அறைக்குள் சென்றாள்.


“ரெண்டும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிட்டு இருக்குங்க. இன்னும் எத்தனை நாளைக்குன்னு பார்க்கலாம்” திவ்யா சொல்ல, மற்ற மூவரும் சிரித்தனர்.

******
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
21
கிராமம் என்பதால் அடிக்கடி மின்சாரம் தடைபடும். இன்றும் அதே போல் சரியாக இரவு ஒன்பது மணிக்கு நின்று போக, வீட்டிற்குள் இருக்க முடியாமல் பாய், தலையணையோடு மொட்டை மாடிக்குப் படை எடுத்துவிட்டார்கள்.

ஊரிலிருந்து போன கதையிலிருந்து தற்போது ஊருக்கு வந்த கதைவரை பேசிக் கொண்டிருக்க, போன மின்சாரம் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

தூக்கம் கண்களைச் சுழற்ற பெரியவர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே செல்ல, மற்றவர்கள் மாடியில் ஐக்கியம் ஆகிவிட்டார்கள்.

திவ்யாவும் காவ்யாவும் அருகருகில் படுத்திருக்க, அவர்கள் தலைப் பக்கத்தில் வினோத், சந்துரு படுத்திருந்தனர்.

ஒருவரையொருவர் கேலியும் கிண்டலும் செய்து பேசிக் கொண்டிருந்தவர்களுக்கும் கண்களைச் சுழற்ற தானக விழிகள் மூடிக் கொண்டது.

நடுநிசி நேரம் குளிர்ந்த காற்று மெல்ல வீச மல்லிகை மணம் நால்வரின் நாசிகளைத் துளைக்க, அதில் தூக்கம் கலைந்தும் கலையாமலும் இருந்தவர்களின் காதில், ‘ஜல்! ஜல்!’ என்ற கொலுசின் ஒலியும், அதனுடன் பெண்ணின் சிரிப்பு சத்தமும் காதுகளில் கணீரென்று ஊடுருவியது.

அரைகுறை தூக்கமும் கலைந்து உடல் தூக்கிப் போட ஒருவரின் அருகில் ஒருவர் நெருங்கிப் படுத்தவர்களால் போர்வையை விலக்கிப் பார்க்கத் தைரியமின்றிப் பயத்தில் பனியாக உறைந்திருந்தனர்.

தனக்கு மட்டுமே கேட்பதாக ஒவ்வொருவரும் நினைத்து யாரை எழுப்பலாமென நினைத்திருக்க, “நிம்மதியா தூங்குறீங்களா? விடமாட்டேன் உங்களை நிம்மதியா தூங்க விடமாட்டேன்” என்ற குரலும் அதனுடன், ‘டங் டங்’ என்று வீடே அதிரும்படி நடக்கும் சத்தமும் சேர்ந்து கேட்க, பயத்தில் இலக்கியா எழுந்து அமர்ந்தாள்.

சட்டெனச் சுதாரித்த சந்துரு அவளை இழுத்து படுக்க வைத்துவிட்டு போர்வையை மூடி, “சத்தம் போடாம அசையாம அப்படியே இரு” என அவள் காதில் கிசுகிசுத்தான். உடல் நடுங்க கண்களை மூடியவள் அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்திருந்தாள்.

திவ்யாவையும் எழவிடாமல் அவளை அழுத்திப் பிடித்திருந்தான் வினோத். அவர்களைச் சுற்றிக் கேட்ட சத்தம், மெல்ல அடங்கி நடந்து செல்லும் காலடி ஓசை கேட்டு அதுவும் குறைந்து போனது.

நால்வரும் உடனே எழாமல் காத்திருக்க, வினோத் மட்டும் போர்வையை விலக்கிப் பார்க்க, வெள்ளையான உருவம் படிகளில் இறங்குவதைக் கண்டான்.

தன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்தவன், பூனையைப் போல் தவழ்ந்து படியின் அருகில் சென்று எட்டிப் பார்க்க, வள்ளியம்மையின் முகம் அருகில் தெரியவும், ‘ஆ’ வென்று வினோத் அலற, அவன் அலறல் சத்தம் கேட்டு, மற்றவர்களும் கத்த, என்ன நடக்கு எனத் தெரியாமல், நால்வரும் அலறியதைக் கேட்டு வள்ளியம்மையும் கூப்பாடு போட்டார்.

கீழே தூங்கிக் கொண்டிருந்த தெய்வானை, சந்திரன், சரவணன் அடித்துப் பிடித்து ஓடி மேலே வர, இலக்கியா, சந்துரு, வினோத், திவ்யா ஆளுக்கொரு மூலையில் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்க, இரு கன்னத்திலும் கைவைத்தபடி, ‘ஆ’ வென்று பார்த்திருந்தார் வள்ளியம்மை.

அடித்துப் பிடித்து மேலே ஓடி வந்தவர்கள் ஐவரின் நிலை கண்டு விழிக்க, சரவணன் வள்ளியம்மை முதுகில் அடி போட, சுய நினைவுக்கு வந்த வள்ளியம்மை சந்துரு, இலக்கியாவைச் சுற்றி சுற்றி வந்தார்.

என்ன நடந்தது? எல்லோரும் எதுக்குக் கத்தினாங்க? வள்ளியம்மை ஏன் இருவரையும் சுற்றி வருகிறாரெனப் புரியாமல் விழி பிதுங்கி நிற்க, “அண்ணி, ஒன்னுமே இல்லைன்னு சொன்னாங்க. இப்ப கட்டிப் பிடிச்சிட்டு நிற்காங்க. இதுக்கு என்ன அர்த்தமாம்?” எனக் கேட்க, ‘ஙே’ என மற்றவர்கள் முழிக்க,

வள்ளியம்மை முன் பேய் அவதாரம் எடுத்து நின்ற இலக்கியா, “இப்ப அதுவா முக்கியம்! எங்களைப் பேய் ஒன்னு கொல்வேன்னு சொல்லிட்டுப் போயிருக்கு. அதை என்னன்னு கேட்காம…” என முறைத்து நிற்க, வினோத் நடந்ததைச் சொன்னான்.

“அதுக்கு எதுக்கு இலக்கியா என்னை முறைக்க? நீ உன் முகத்தைக் காட்டியிருந்தா, இவளைவிட நம்மலே பரவாயில்லைன்னு அது ஆத்மா தன்னால சாந்தி அடைஞ்சிருக்கும். அதைச் செய்யாம என்கிட்ட மோதி என்ன செய்ய? இப்ப என்ன கொல்றேன்னு சொல்லியிருக்கு அவ்ளோதானே, இங்க பாடுற டூயட்டை அங்க போய்ப் பாடுங்க” என மேலே கையைக் காட்டினார்.

இலக்கியா கோபத்தில் விருட்டென்று படியிறங்கச் செல்ல, “போ! போ! அந்த வழியாத்தான் போச்சுன்னு வினோ தம்பி சொன்னாப்ள” வள்ளியம்மை சொன்ன அடுத்த நொடி அவரைத் தள்ளிவிட்டு சந்துருவின் மீது பாய்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள் இலக்கியா.

சரவணன் மீது விழுந்த வள்ளியம்மை “ம்க்கூம்… ஏன் இங்க நானும் உன் அப்பாவும் இருக்கோமே எங்களைக் கண்ணுக்குத் தெரியலையாக்கும், எங்களைத் தள்ளி விட்டுட்டு சந்துரு தம்பிகிட்டத்தான் போகனுமா?” எனக் கேட்டதும் மற்றவர்கள் சிரிக்க, வெட்கம் மேலிடச் சந்துருவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள் இலக்கியா.

பயத்தில் உறைந்திருந்தவர்களின் மனம் இளகுவாக இதழ்களில் புன்னகை அரும்ப, “நடக்காது நீங்க நினைச்சது நடக்காது. என்னோட வாழ்க்கையைக் கெடுத்த உங்க யாரையும் விடமாட்டேன்” என்ற குரல் மீண்டும் மேலிருந்து கத்தியது. ஆனால் கீழிருந்தவர்களில் வினோத்தைத் தவிர மற்ற யாரின் காதிலும் எந்தச் சத்தமும் கேட்டதாகத் தெரியவில்லை.

தங்களை நிழல் ஒன்று சுற்றிச் சுற்றி வருவது வினோத்திற்கு மட்டும் தெரிய மேலே பார்த்தவன் கண்களுக்கு வெள்ளையான உருவம் தலைக்கு மேல் பறந்தபடி நிற்பது தெரிய சட்டென்று பார்வையை விலக்கியவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு வேகமாகக் கீழே இறங்கினான்.

கீழே சென்று படுத்த வினோத் தனக்கு தெரிந்தது நிஜமா? கனவா? எப்படி இது சாத்தியமாகும்? மிகுந்த குழப்பத்தில் இருந்தவனின் கண்களில் தூக்கம் மறைந்து தான் கண்ட உருவத்தின் முகமே வந்து வந்து போனது.

தொடரும்...
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top