- Joined
- Aug 31, 2024
- Messages
- 19
- Thread Author
- #1
அத்தியாயம் - 4
"இராத்திரி படுக்கும்போது கிரைம், திரில்லர், ஹாரர் படமெல்லாம் பார்க்காதன்னு சொன்னா கேட்கியா? கண்டதையும் பார்த்தா கனவு கண்டபடிதான் வரும்” என தெய்வானை காலையில் எழுந்ததும் வினோத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.
வினோ திட்டு வாங்குவதைக் கண்டு வாயில் கையை வைத்து மூடிக் கேலியாகச் சிரித்தபடி இருந்தான் சந்துரு. அதில் இன்னும் அதிகமான கோபம் வினோத்துக்கு ஏறியது.
“ஆமாம்மா, இவன் கனவு கண்டதும் இல்லாம என்னையும் அப்பாவையும் கொலைகாரனா ஆக்கிட்டான். ஆனால், உண்மையிலே இவன் அடித்த அடியில் நான்தான் பரலோகம் போயிருப்பேன். நல்ல வேளை தப்பித்தேன்” என தெய்வானைக்கு மேலும் சந்துரு எடுத்துக் கொடுக்க, சந்திரன் அவன் தலையில் தட்டிச் சாப்பிடு என்று தட்டின் பக்கம் கையை நீட்டினார்.
“அம்மா, நான் கனவு இல்லைன்னு சொல்றேன். நீங்க திரும்பத் திரும்பக் கனவுன்னே சொல்லிட்டு இருக்கீங்க. என்னால் ரொம்ப நேரம் கை, கால் எதையும் அசைக்க முடியலை. நீங்க நம்புனா நம்புங்க” என்று கோபத்தில் சாப்பிட்ட தட்டைப் பாத்திரம் கழுவும் தொட்டியில் வீசிவிட்டு தன் பையைத் தோளில் மாட்டியபடி வெளியேறினான்.
வினோத்தின் கோபம் கண்டு தெய்வானை அமைதியாக, சந்துருவின் தலையில் அடித்த சந்திரன், “ஏத்திவிட்டல்ல! போய்ச் சாமாதானம் செய் போ” என்றதும் தன் இருசக்கர வாகனத்தில் சென்று வினோத்தின் முன் நிறுத்தினான்.
“வண்டியில் ஏறு. நான் கொண்டு போய் விடுறேன்.”
“நான் உன்னைக் கொலை பண்ண பார்த்தவன். போற வழியில் ஏதாவது உன்னைப் பண்ணிடுவேன்” என விடுவிடுவென நடந்தான்.
சந்துரு அவன் பின்னாடியே சென்று, “பைத்தியம் மாதிரி பேசாத கிணடலுக்குப் பேசினதை எதுக்குச் சீரியஸா எடுத்துட்டுப் பேசுற? சரி அதைச் சாயங்காலம் பேசிக்கலாம். இப்ப வண்டியில் ஏறு.”
“ஆமா நான் பைத்தியம்தான். பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணு” என்று நடையின் வேகத்தைக் கூட்டினான்.
வண்டியில் அமர்ந்தபடியே இரு கைகளையும் கட்டிக் கொண்டு வினோத் செல்வதையே பார்த்திருந்தான் சந்துரு. இருவரையும் பார்த்திருந்த தெய்வாணையும் சந்திரனும் ஒருவர் ஒருவரைப் பார்த்துப் பெருமூச்சு விட்டனர்.
வீட்டிலிருந்து கோபத்தில் சென்ற வினோத் அலுவலகக் காரில் செல்லும் போதும் முகத்தை, ‘உர்ரென்று’ வைத்தபடியே வந்தான். அவனைக் கண்ணாடியில் பார்த்தபடியே வந்தான் கண்ணன்.
“என்ன வினோ தம்பி முகம் ரொம்ப அஷ்ட கோணலா இருக்கு. பின்னாடி வர்ற வண்டியைக் கண்ணாடியில் பார்த்தா உன் முகம்தான் தெரியுது.”
“சும்மா இருங்கண்ணா நீங்களும் என்னைக் கிண்டல் பண்ணாதீங்க. நான் ரொம்பக் கோபத்தில் இருக்கேன்” என்றவன் பார்வையைச் சன்னல் பக்கம் திருப்பினான்.
“ம்ம்… அப்போ வீட்டில் கேலி பண்ணதுக்குத்தான் இவ்வளவு கோபமா? இப்படியே ஆபீஸ் போனா எல்லாம் தப்பும் தவறுமாத்தான் இருக்கும். அதனால், என்ன நடந்ததுன்னு வெளிய அவிழ்த்துவிடு” மூச்சை உள்ளிழுத்து வெளியில் விட்டபிறகு இரவு முதல் காலை வரை நடந்ததைச் சொன்னான்.
“அட! எங்கப்பா கூட அடிக்கடிச் சொல்வாங்க. யாரோ என் மேல படுத்து அசையவிடாம அழுத்திப் பிடிச்சிட்டு கொல்ல முயற்சி பண்றதா சொல்வாங்க. அப்பெல்லாம் அடிக்கடி இராத்திரி தூக்கத்தில் புலம்புவாங்க, கத்துவாங்க. வேற வீடு மாறிப் பார்க்கலாம்னு அம்மா சொன்னாங்கன்னு வேற வீடு வந்தோம். அதிலிருந்து அப்பா நல்லா இருக்காங்க” என்றாள் சக தோழி.
“ஓ! இராசி இல்லைன்னு சொல்றியா? இல்லை, அந்த வீட்டில் பேய் இருந்ததுன்னு சொல்றியா? எனக்கென்னமோ உன் அப்பாக்கு வீடு பிடிக்கலைன்னு காலி பண்ண இப்படியொரு நாடகம் போட்டிருப்பாரோன்னு தோனுது” கண்ணன் சிரித்தபடியே சொல்ல.
“எதுனாலும் இருக்கலாம். உங்க மனோ தத்துவப்படி மனதில் உள்ள ஏதோ ஒரு பயம் எங்க அப்பாவை ஆட்டி வைத்திருக்கலாம்.”
“ஹா! ஹா!” எனச் சிரித்த கண்ணன், “நூறு சதவீதம் அதுதான் உண்மை. பேய், இராசி இல்லை என்பதெல்லாம் சும்மா. வினோ உன் அடி ஆழ மனதில் ஏதோ ஒரு குழப்பம் உன்னை ஆட்டுது. நீ எதுக்கும் டாக்டரைப் பாரேன்.”
நீங்களும் என்னைப் பைத்தியம்னு சொல்றீங்களா?” என வினோத்தின் முகம் வெளிறியது.
“நான் உன்னைப் பைத்தியம்னு சொல்லலை. உன் பிரச்சனைக்குத் தீர்வு காணச் சொல்றேன். நீ பைத்தியமா இருந்தா இராத்திரி மட்டும் இருக்கமாட்ட. பகலிலும் லூசாத்தான் இருப்ப. நீ மனசில் குழப்பிக்கிற ஏதோ ஒன்னு இராத்திரியில் பிரதிபலிக்குது. நீ பத்து நாள் லீவு போட்டு ஏதாவது ஊருக்குப் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாயேன். இடமாற்றம் உன் பிரச்சனைக்கு வழி காட்டலாம் இல்லையா?”
கண்ணன் சொல்வதைக் கேட்ட வினோத் கண்களை மூடிச் சாய்ந்து யோசனையில் ஆழ்ந்தான். பத்து நாள் ஊருக்குப் போயிட்டு வந்தா என்ன? என்ற யோசனையில் ஆழ்ந்தவன் அலுவலகம் உள்ளே சென்றதும் தன் தந்தை சந்திரனை அழைத்து ஊருக்குச் செல்வதைப் பற்றிச் சொன்னான் வினோத். மாலை வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம் என்றார்.
மாலை வீட்டில் தெய்வானை குட்டிப் போட்ட பூனைபோல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட வினோத் புன்னகை ததும்ப உள்ளே நுழைந்தான்.
வினோத்தைக் கண்டதும் தெய்வானை, “நானே உன்னிடம் கேட்கனும்னு நினைச்சேன். நீயும் சந்துருவும் லீவு கிடைக்கலை கம்பெனியே உங்க தலையில் நடக்கிற மாதிரி சீன் போடுவீங்க. அதான் கேட்கலை. இப்ப நீயே கேட்டதால் உன் புத்தி மாறிடக் கூடாதுன்னு நாளைக்கே கிளம்ப டிக்கெட் போட்டாச்சு. ஊருக்குப் போய் அஞ்சு வருஷத்துக்கு மேலாச்சு” கூதுகுலமாகச் சொன்னார்.
அம்மா இப்படி ஏதாவது செய்து வைப்பார் என்று பத்து நாட்கள் விடுமுறை எடுத்ததும் இல்லாமல், சந்துருவையும் விடுமுறைக்குக் கேட்கச் சொல்லிக் கிடைத்துவிட்டதா என்பதையும் உறுதி செய்து கொண்டான் வினோத்.
******
மறுநாள் திட்டமிட்டபடியே நால்வரும் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள வெள்ளாங்குழிக்குப் பயணமானார்கள்.
ஊருக்கு வருவதை முன்னாடியே கூறி இருந்ததால் ஆட்களை வைத்துச் சரவணனும் வள்ளியம்மையும் வீட்டைச் சுத்தம் செய்து வைத்திருந்தனர். காலை உணவையும் தயார் செய்து வைத்திருந்தார்.
வினோத் வருகிறான் என்றதும் இருப்புக் கொள்ளாமல் வாசலுக்கும் அறைக்கும் நடந்து கொண்டிருந்தாள் திவ்யா. அவள் செய்வதை எல்லாம் காணொளியாகப் பதிவு செய்து வினோத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள் இலக்கியா.
ஒவ்வொரு காணொளி காட்சிகளையும் கண்டு ரசித்தவன் அவளுடன் விளையாட நினைத்து வரும் வழியில் தோட்டத்தில் இறங்கிவிட்டு தான் வரவில்லை என்று திவ்யாவிடம் கூறுமாறு மற்றவர்களை அனுப்பி வைத்தான்.
வீட்டிற்கு வந்ததும் திவ்யாவின் கண்கள் வினோத்தை தேடி கலைத்துப் போய்த் தொட்டாச் சிணுங்கியாக முகம் மாறியது.
“மச்சான் வரலையா அத்தை?” என்றவளின் முகம் வாடிய மலராகச் சுருங்கியிருந்தது.
“இவ்வளவு பெரிய உருவம் முன்னாடி நிற்கிறேன் கண்ணுக்குத் தெரியலையா?” என்ற சந்துருவை திவ்யா அடிக்கப் போக, “உன் ஆளுக்கு நேற்று லீவு கொடுத்தாங்க. கிளம்புற நேரத்தில் லீவ் இல்லை ஆபீஸ்க்கு கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டாங்க. கடைசி நேரத்தில் ஒன்னும் செய்ய முடியலை. அதான் நாங்க மட்டும் வந்தோம்” என்று அவள் அடியிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டே சொன்னான் சந்துரு.
மூச்சு வாங்க நின்றவளுக்கு அவன் வரவில்லை என்றது ஏமாற்றமாக இருக்க, கண்களில் நீர் தேங்கியது. மற்றவர்கள் முன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கடினப் புன்னகையை உதிர்த்தாள். அதற்கு மேல் தன் முகத்தை மறைக்க முடியாமல் தன் வீட்டிற்குச் செல்ல வாசலுக்குச் சென்றாள்.
“அழறதுன்னு முடிவு பண்ணிட்ட. அதை இங்கயே அழ வேண்டியதுதானே. வீட்ல போய்த் தலைவாணியை நனைக்கனுமா? அது காயப் பத்து நாளாகும், இது தேவையா? உன் ஆளு வந்திருக்கான். தோட்டத்தைப் பார்க்கப் போயிருக்கான். இங்க நீ பண்றதை எல்லாம் அந்தக் குட்டிச் சாத்தான் வீடியோ எடுத்து அனுப்பிட்டு இருக்கா. அதான் ஐயா உன்னிடம் விளையாட நினைச்சிட்டார்” என்றான் சந்துரு.
இலக்கியாவின் பக்கம் திரும்பிய திவ்யா தன் அருகில் இருந்த கிண்ணத்தை எடுத்து அவள் மீது வீச, சரியாக அதைப் பிடித்த இலக்கியா அதே வேகத்தில் சந்துரு மீது வீசினாள்.
இதைச் சற்றும் எதிர்பாராத சந்துரு சுதாரிப்பதற்குள் அவன் தலையில், ‘நங்’ என்று விழுந்தது. சிரித்தவாறே திவ்யா தோட்டத்திற்கு ஓட, “வாவ்! சூப்பர் ஷாட்!” என்று கைதட்டிய இலக்கியாவை பிடிக்கத் தலையைத் தடவி கொண்டே எட்டெடுத்து வைத்த சந்துருவிடமிருந்து தப்பிக்க இலக்கியாவும் ஓட்டமெடுத்தாள்.
பிள்ளைகளின் குறும்புகளைக் கண்டு ரசித்தபடி இருந்த பெரியவர்கள் அதே மகிழ்ச்சியோடு தங்கள் கதையைப் பேசத் தொடங்கினார்கள்.
******