• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 3

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
19
அத்தியாயம் - 3
இரவு நேர வேலை வேண்டாமெனத் தெய்வானை விடாப் பிடியாக நிற்க, உடனே மாற்ற முடியாது. ஒரு மாதம் கழித்து மாற்றிக் கொள்கிறேன் என்று வினோத் கூற, ஒன்று பகலில் மாற்று அல்லது வேலையை விடு எனத் தெய்வானையும் உடும்பு பிடியாக நின்றார்.

இருவருக்கும் இடையில் மாட்டிய சந்திரன் திருதிருவென முழிக்க, அவர் முழியைக் கண்டு கேலி செய்து கொண்டிருந்தான் சந்துரு. இருவரிடமும் பேசிப் பார்த்த சந்திரன் பலன் இல்லாமல் மூலையில் அமர்ந்து விட்டார்.

“அம்மா, ஏன் இப்படிப் பிடிவாதமா இருக்கீங்க? வேலையை விட்டா சுலபமா உடனே வேற வேலை கிடைக்காது. வினோத் வேலை இல்லாம வெட்டியா இருந்தா, உங்க அண்ணன் அவர் பொண்ணைத் தரமாட்டார். நடைமுறையைப் புரிந்து பேசுங்கம்மா. இந்தக் காலத்தில் போய்ப் பேய் பிசாசுன்னு சாமியார் பயமுறுத்தறதை நம்பிட்டு இருக்கீங்க” சந்துரு இடையில் வர,

தெய்வானை அண்ணன் பொண்ணு தரமாட்டார் என்றதும் யோசிக்க ஆரம்பிக்க, சிறிது நேரம் கழித்து, “சாமி சொல்றதில் ஏதாவது இருக்கும். அவர் எதையோ மறைத்து நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார். நாமதான் உஷாரா இருக்கனும். ஏதாவது நடந்தால் என்னால் இன்னொரு சம்பவத்தைத் தாங்க முடியாது” எனக் கண்ணைக் கசக்கினார்.

“ஐயோ அம்மா! யாருக்கும் எதுவும் ஆகாது” எனத் தெய்வானையின் இரு பக்கமும் வினோத்தும் சந்துருவும் நின்று சமாதானம் செய்தார்கள்.

தெய்வானை முன் நின்ற சந்திரன், “தெய்வா, தினமும் சந்துரு கூட நானும் போறேன். நீ பயப்படமா நிம்மதியா இரு. தேவையில்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்காதே” என்றார்.

நிம்மதி பெருமூச்சு விட்ட தெய்வானை வேறு வழி இல்லாமல் தன் பிடியிலிருந்து கீழே இறங்கி வந்தார். அதற்குப் பிறகே வழக்கம் போல் அலுவலகம் கிளம்பிச் சென்றான் வினோத்.

வினோத் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடம் திவ்யாவை அழைத்து நடந்த அனைத்தையும் தெய்வானை ஒன்றுவிடாமல் கூற, அவர் சொன்னதைக் கேட்டுத் திவ்யாவிற்குச் சிரிப்பு வர, அதை அடக்கிக் கொண்டு ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு, வினோத்தைக் கைப்பேசியில் கூப்பிட்டாள்.

வினோத் அவள் அழைப்பை ஏற்றதும் களகளவெனத் திவ்யா சிரிக்கும் சத்தத்தைக் கேட்டதும் அம்மா எல்லாத்தையும் உளறிட்டாங்க என்று புரிந்து கொண்டான்.

“என்ன மாமோய் நாய்க்குப் பயந்து சாமியாரை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கீங்க. நாய்க்கே பயந்தா எப்படி? என்னைக் கல்யாணம் கட்டிகிட்டு எப்படிச் சமாளிக்கப் போறீங்க?” எனத் திரும்பவும் சிரித்தாள்.

“அப்ப நாய்க்கு மட்டுமில்லை பேயே வந்தாலும் பயம் இருக்காது. ஏன்னா, உன்னைத் தினமும் பார்த்துட்டு இருக்கிறப்போ ஏன் பயப்படப் போறேன்.”

“யோவ் மாமா! உங்களை நேரில் பார்க்கிறப்ப வச்சிக்கிறேன்” எனத் தன் கையில் இருந்த கைப்பேசியில் குத்துவிட்டாள்.

“வச்சிக்கிறியா! அப்பக் கல்யாணம் பண்ற ஐடியா இல்லையா?”

பல்லை நறநறவெனக் கடித்தவள், “மாமா, நீங்க மட்டும் நேரில் பேசியிருந்தீங்க… என்னைப் பத்ர காளியாத்தான் பார்த்திருப்பீங்க.”

“ஆஹா! இப்ப மட்டும் சாந்த சொரூபமாவா இருக்க. சரி! சரி! இப்ப எதுக்குக் கால் பண்ண அதைச் சொல்லு.”

“எதுக்கு அத்தைகிட்ட எல்லாத்தையும் சொல்லிக் கவலைப்பட வைக்கீங்க? பாவம் அத்தை அவங்க பேசுறதை கேட்கவே கஷ்டமா இருக்கு. சங்கவியை நினைச்சு வேற புலம்பறாங்க.”

“எனக்கே என்ன நடந்தது என்னென்னு புரியலை. அதான் அம்மாவிடம் சொன்னேன். அவங்க இந்த அளவுக்குக் கவலைப்படப் பெரிசா ஒன்னும் நடக்கலை. இதில் சங்கரியைப் பற்றிப் பேச என்ன இருக்கு? யாரும் வேண்டாம்னு போனவளை நினைச்சு என்ன பண்ண போறாங்க? சரி விடு நான் பார்த்துக்கிறேன். ஆபீஸ் வந்துட்டுச் சாயங்காலம் பேசுறேன்” என்று கைப்பேசியை அணைத்து தன் முழுக் கால் சட்டைப் பையில் போட்டான்.

தெய்வானையின் உடன் பிறந்த ஒரே அண்ணன் சரவணின் இரு மகள்களில் மூத்தவள் திவ்யா. சிறு வயதிலிருந்தே வினோத்துக்கும் திவ்யாவுக்கும் வீட்டுப் பெரியவர்கள் முடிச்சுப் போட்டுவிட்டார்கள்.

வினோத் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருந்தால் மட்டுமே என் மகளைக் கட்டிக் கொடுப்பேன். தேவை இல்லாத எந்தப் பழக்கம் இருந்தாலும் திவ்யாவை மறந்துட வேண்டியதுதான் என்று சரவணன் கறாராகவே சொல்லியிருந்தார்.

வினோத்துக்கும் திவ்யாவுக்கும் பெரியவர்கள் பேசி முடிவு செய்ததில் அவ்வளவாக உடன்பாடில்லை. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவர்களுக்குள்ளும் பிடித்தம் ஏற்பட அது காதலாக மாறித் திருமணம் வரை வந்துவிட்டது.

இளையவர்கள் இருவருக்கும் முடிச்சு போட்டு விடாலாமெனப் பெரியவர்கள் எடுத்த முடிவிற்கு சந்துருவுக்கு சம்மதம் என்றாலும் காததூரம் ஓடும் இலக்கியாவைக் கண்டு தன் ஆசையை தனக்குள்ளே மறைத்து அவனும் வேண்டாமென்றுவிட்டான்.

வாழப் போறவர்கள் வேண்டாமென்று செல்லும்போது நாம் தடைக் கல்லாக இருக்கக் கூடாதென்று அவர்கள் விருப்பம் என்று விட்டுவிட்டனர்.

திவ்யாவுடன் வினோத் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஓட்டுநர் கண்ணன், “என்ன ஆச்சு தம்பி? எதுவும் பிரச்சனையா? அதான் நேற்று லீவா?” எனக் கேட்க, வினோத் நடந்த அனைத்தையும் சொன்னான்.

வினோத் சொன்னதைக் கேட்டு உடன் இருந்த நண்பர்கள் அனைவரும் சிரிக்க, “அதான் கழுத்திலும் கையிலும் இத்தனை கயிறுக் கட்டி இருக்கியா?” சக நண்பன் கேலி செய்ய.

“சும்மா இருடா நீ வேற, ஆபீஸ்க்குள்ள இப்படியே வந்தா என்ன நடக்குமோன்னு இருக்கேன். நீ இங்கயே ஆரம்பிச்சிராத” என்றான் சலிப்பாக,

“வினோ, உனக்கு நம்பிக்கை இருக்கோ, இல்லையோ, உன் அம்மாவுக்கு முழு நம்பிக்கை இருக்கு. நீ கிண்டலுக்கும் கேலிக்கும் பயந்துகிட்டு அவங்க மனசை கஷ்டப்படுத்தாத. நம்ம நல்லா இருக்கனும்னு நினைக்கிற ஆன்மா அம்மா மட்டும்தான்” சக தோழி சொல்ல, சிறு புன்னகையுடன் தலையை ஆட்டினான் வினோத்.

“பேய் இருக்குன்னு நம்புறவங்களுக்கு இருக்கு. இல்லைன்னு சொல்றவங்களுக்கு இல்லை. இருக்கா, இல்லையான்றது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அம்மாவோட திருப்திக்காக அவங்க சொல்றதைக் கேளு. எனக்கு நம்பிக்கை இல்லை. நம் மனதின் அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் சில விஷயங்கள் சில நேரங்களில் நம் கண் முன் நிழலாடும். அதுபோல் இது நடந்திருக்கலாம்” என்றான் கண்ணன்.

“என்ன அண்ணா, மனத் தத்துவச் சாஸ்திரம் படிச்சீங்களா?” பெண்ணவள் கேட்க,

“எம் எஸ்சி சைக்காலஜி முடிச்சிருக்கேன். அதனால், ஏதோ கொஞ்சம் தெரியும்” சாதாரணமாகச் சொல்ல மற்றவர்கள், ‘ஆ’ வென்று வாயைப் பிளந்திருந்தனர்.

“நீங்க முதுநிலை பட்டதாரியா? டிரைவர் வேலை பார்த்துட்டு இருக்கீங்க?” காரில் இருந்த நால்வரும் ஒரு சேர கேட்க,

களகளவென்று சிரித்த கண்ணன், “மனநல ஆலோசகரா கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். என்னிடம் வந்தவங்க எல்லாம் விவாகரத்துக்காகக் கவுன்சிலிங் வந்தவங்கதான். எப்படியாவது பேசி அவங்களைச் சேர்த்து வைக்கலாம்னு நினைச்சு பேசினா, நாங்களே சேர்ந்து வாழ நினைக்கலை. நீங்க எதுக்குத் தேவையில்லாத வேலை பார்த்துட்டு இருக்கீங்கன்னு எனக்கே கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க கொடுத்த கவுன்சிலிங் இப்ப டிரைவர் வேலை பார்த்துட்டு இருக்கேன்” எனப் புன்னகைத்தான்.

கண்ணன் எதையோ மறைக்கிறானெனப் புரிந்தாலும், அலுவலகம் வந்துவிட்டாதால் மேற்கொண்டு பேச முடியாமல் ஒவ்வொருவராக இறங்கிச் சென்றனர்.

வினோத் மட்டும் இறங்கி கண்ணனை கூர்ந்து பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் புரிந்த கண்ணன் இதழில் சிந்திய மென்னகையோடு காரைத் திருப்பிச் சென்றான்.

******
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
19
இரவு மூன்று மணி குளிரூட்டி சத்தம் மட்டுமே மெல்ல கேட்க, எங்கோ நாய் உளையிடும் சத்தம் தெளிவாகக் கேட்டும், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களுக்கு எந்தச் சத்தமும் கேட்டதாகத் தெரியவில்லை.

சுற்றுச் சுவரின் கதவின் முன் நின்ற உருவம் மெல்ல உள்ளே வர வரக் காற்று தென்றலாக வீசியது. முன்னறையில் நின்று ஒவ்வொரு பக்கமாக நின்று பார்த்தபின் மெல்ல ஒரு அறையை நோக்கிச் சென்றது.

தானாகத் திறந்த கதவு தானாகவே மூடிக் கொண்டது. அறையினுள் நின்ற உருவம் சுற்றி சுற்றிப் பார்த்துவிட்டுக் கண்ணீர் விட்டு அழுதது. சிறிது நேரம் கழித்து அதன் முகம் மாறத் தொடங்கியது. நெருப்பை அள்ளிக் கொட்டும் தணலாக முகம் சிவந்திருந்தது.

வினோத், சந்துரு படுத்திருந்த அறைக்குள் சென்று வினோத்தை குரோத பார்வை பார்த்துக் கொண்டே இருந்தது. மெல்ல வலம் இடமாகத் தூக்கத்தில் தலையைத் திருப்பிய வினோத் வலப்பக்கமாகத் திரும்பிப் படுத்தான்.

உறக்கம் வராமல் இடப் பக்கம் திரும்பினான். தன் தூக்கத்தை ஏதோ ஒன்று தொந்தரவு செய்வதாக நினைத்து, ‘ம்ப்ச்’ என்று சலித்தபடி எழுந்து உட்கார்ந்தான். தன் முன் நின்றிருக்கும் உருவம் அவன் கண்களிலிருந்து மறைந்து தலைக்கு மேல் செவ்வானமாகச் சிவந்த கண்களுடன் அவனைக் குரோதமாகப் பார்த்திருந்தது.

தன் தலைக்கு மேல் ஆபத்து இருக்கிறது என்பது தெரியாமல் தண்ணீர் குடித்ததும் ஆசுவாசமாக உணர்ந்தவன் பால்கனி கதவைத் திறந்து சில்லென்று வீசிய காற்றின் குளுமையைச் சுகமாகச் சிறிது நேரம் அனுபவித்துவிட்டு கதவை மூடியபிறகு மீண்டும் படுக்கையில் சரிந்த அடுத்த நொடி கண்கள் தானாகத் தூக்கத்தைத் தழுவியிருந்தது.

வினோத்தை மேலிருந்து கொலை வெறியோடு பார்த்திருந்த உருவம் வினோத்தின் கண் முன் வரத் தயக்கம் காட்டிவிட்டு, படுக்கையின் அருகில் சென்று வினோத்தின் அருகில் அமர, தன் மீது சுமை ஏறுவது போல் உணர்ந்த வினோத்தின் கண்கள் இறுக மூடியிருப்பதைத் திறக்க நினைத்தும் திறக்க முடியாமல், கைகளை அசைக்க முடியாமல், கால்களைக் கீழே ஊன்றி எழுந்து நிற்க முயற்சித்தும் முடியாமல், ‘அம்மா, அப்பா, சந்துரு’ எனக் கூப்பிடுவதாக நினைத்தவனுக்குத் தன் சத்தம் வெளியில் வராமல் இருப்பதைக் கண்டு பயத்தில் கை, கால்களை அடிக்க ஆரம்பித்தான்.

ஆனால், தன்னை யோரோ அழுத்திப் பிடித்திருப்பது போல் இருக்க, மூச்சு விட முடியாமல் தன் குரல்வலையை யாரோ நெறிக்கிறார்கள் என்று சந்துருவை அடித்து எழுப்பக் கைகளைத் தூக்க முயற்சித்து அது இம்மியளவு கூட அசையாமல் இருந்ததைக் கண்டு கண்கள் மேலே சொருகத் தொடங்கியது.

மேலும் நெஞ்சுக் கூடு ஏறி இறங்க சுவாசிக்க முடியாமல் தன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிவதை உணர்ந்தவன் தன் பலம் கொண்டு கைகளையும் கால்களையும் படபடவென அடிக்க ஆரம்பித்தான்.

தன் உடல் முழுவதும் விழுந்த அடியின் வலி தெரிய ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சந்துருவின் தூக்கம் கலையவும் தன்னை முழுப் பலத்தோடு வினோத் அடிப்பதைக் கண்டவன் திடுக்கிட்டு அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.

கண் திறக்காமல் தன்னை அடிப்பதைக் கண்ட சந்துரு, இறுக்கமாக வினோத்தின் கைகளைப் பிடித்தும் அவனைத் தடுக்க முடியாமல் சந்துரு திணற, கட்டிலைவிட்டு கீழே குதித்தவன் வினோத்தைப் பார்த்துப் பயந்து போனான்.

பஞ்சு மெத்தை கிழியும் அளவுக்குத் தன் பலத்தை மெத்தையில் காட்ட, “அப்பா! அம்மா!” என்று சந்துரு கத்திக் கூச்சலிட, அவர்கள் அறைக் கதவைப் படபடவெனத் தட்ட, வேகமாகக் கதவைத் திறந்தான் சந்துரு.

சந்துருவின் சத்தம் கேட்டு அலறியடித்துக் கதவைத் திறந்து ஓடி வந்த தெய்வானையும், சந்திரனும் வினோத்தின் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

சற்று சுதாரித்த சந்திரன், “சந்துரு, நீ கையைப்படி, நான் காலைப் பிடிக்கிறேன். தெய்வா நீ அவன் முகத்தில் தண்ணித் தெளி” என்றார் பதற்றமாக.

சந்திரன் சொன்ன அடுத்த நொடி சந்துரு வினோத்தின் நெஞ்சோடு கைகளை மடக்கிப் பிடித்து ஆடாமல் அசையாமல் தன் காலை மடக்கி அழுத்திப் பிடிக்க, சந்திரனும் அவன் கால்களில் அழுத்தமாக உட்கார்ந்துவிட்டார்.

இருவரின் பிடியில் திமிறிய வினோத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ‘சலப்! சலப்!’ என்று தெய்வாணை முகத்தில் நீரைத் தெளிக்க, சில்லென்று தண்ணீர் முகத்தில் பட்ட அடுத்த நொடி தன் ஆட்டத்தை நிறுத்தினான் வினோத்.

மெல்ல கண்களைத் திறக்க, கைகளையும் கால்களையும் பிடித்திருந்த சந்துருவும் சந்திரனும் எமனாகத் தெரிய திடுக்கிட்டு, “அடப்பாவிகளா! நீங்களா என்னைக் கொல்ல பார்க்கீங்க! ஏன்ப்பா பெத்த பிள்ளையைக் கொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது. என்னைக் கொல்ற அளவுக்கு அப்படி என்ன பண்ணிட்டேன்?”

பேந்த பேந்த முழித்த சந்திரன் மெல்ல அவன் கால்களிலிலிருந்து எழுந்து நிற்க, “தம்பின்னு உனக்குப் பாசம் காட்டினதுக்கு இப்படி என்னைக் கொல்ல துணிஞ்சிட்டியே, ‘ச்சீ’ நீயெல்லாம்” என்று சொல்லி முடிப்பதற்குள் தெய்வானை மீண்டும் அவன் முகத்தில் தண்ணீரை தெளித்தார்.

முகத்தைத் துடைத்துவிட்டுக் கண்களைத் திறந்த வினோத்தின் முகத்திற்கு நேராகச் சந்துரு தன் விரல்களை மடக்கி நீட்டியிருக்க, “ஒரு குத்துவிட்டேன்னு வச்சுக்க உள்ள இருக்கிற குட்டி மூக்கும் சேர்ந்து உடைஞ்சிரும். தூங்கிட்டு இருந்த என்னை அடிச்சே கொல்லப் பார்த்தது நீ. என்னைக் காப்பாற்ற வந்த அப்பாவையும் சேர்த்து கொலைகாரன் ரேஞ்சுக்கு என்னம்மா பில்டப் கொடுக்கிற!” என்ற சந்துருவை புரியாமல் கண்களை உருட்டியபடி இருந்தான் வினோத்.

“சந்துரு, சும்மா இரு” எனத் தெய்வானை அதட்டல் போட, “கனவு எதுவும் கண்டியா வினோ? எதுக்கு வெறி பிடித்த மாதிரி நடந்துகிட்ட?” எனக் கேட்டார்.

“கனவா! இல்லைம்மா கனவு இல்லை. யாரோ என்னைக் கொல்லப் பார்த்தாங்க” என்று சந்துருவைப் பார்க்க, அவன் முறைக்க, “கழுத்து உடம்பை நெறிக்கிற மாதிரி இருந்தது. என் மேல யாரோ ஏறி உட்கார்ந்து கழுத்தை நெறிச்சாங்க. தப்பிக்கக் கை, காலை உதறினேன்” எனக் குழப்பத்தில் கண்களை மூடி யோசித்தான்.

வினோத் அருகில் அமர்ந்த தெய்வாணை மெதுவாக அவன் முதுகில் தடவிக் கொடுக்க, “அம்மா, கனவு இல்லை. நிஜமா என்னை யாரோ கொல்லப் பார்த்தாங்க” எனப் புலம்பினான்.

தெய்வாணை எழுந்து பூசையறைக்குள் சென்று திருநீற்றை எடுத்து வந்து அவள் நெற்றியில் இட்டு, “இப்ப தூங்கு எதுனாலும் காலையில் பேசிக்கலாம்” என்று படுத்தவனுக்குப் போர்வையைப் போர்த்திச் செல்ல, புரியாத புதிராக வினோத்தைப் பார்த்த சந்துரு தயக்கத்துடன் அவன் அருகில் படுத்தான்.


வினோத்தைக் கொல்ல நல்ல சந்தர்ப்பம் கிடைத்தும் பயன் இல்லாமல் போய்விட்டதேயென மேலே பறந்தவாறு கர்ஜித்துக் கொண்டிருக்க, கண்களிலிருந்து நெருப்பு தகதகவென அனலாகக் கசிந்தது.

தொடரும்...
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top