- Joined
- Aug 31, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
அத்தியாயம் - 14
கல்லூரியின் மற்றொரு வாசல் வழியாகக் காரில் ஏறிச் சென்றவளை நகரத்தைத் தாண்டி அழைத்துச் சென்றான் நகுல்.
“இப்ப எங்க போறோம் நகுல்? நாம சிட்டியை விட்டு வெளிய போயிட்டு இருக்கோம். உங்க வீட்டுக்குப் போகலையா?“
“இல்லை சங்கவி, இப்ப எப்படி உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியும்? போனா பெரிய பிரச்சனையாகும். விவாகரத்து வாங்குற வரைக்கும் உன்னை வேற இடத்தில் தங்க வைக்கனும். ஹோட்டல் ரூம் சரிபட்டு வராது. அதான் நாங்க எப்பவாது வந்து போற தோட்டத்து வீட்டைத் தயார் பண்ணி வச்சிருக்கேன்” சங்கவிக்குச் சந்தேகம் வராதபடி யோசித்துப் பதில் சொன்னான்.
“நீங்க என் கூட இருப்பீங்களா? அவ வீட்டுக்குப் போயிருவீங்களா? அப்படின்னா நான் தனியா இருக்கனுமா? இல்லை என் கூட யாரும் இருப்பாங்களா?”
“அங்க யாருமில்லை. நான்தான் அப்பப்ப வந்து சுத்தம் பண்ணிட்டுப் போவேன். மூனு மாசம் ஆபீஸ் விஷயமா வெளியூர் போறேன்னு சொல்லியிருக்கேன். அதனால் அவ அம்மா வீட்டுக்குக் குழந்தைகளைக் கூட்டிட்டுப் போயிட்டா.”
‘ஓ!’ என்றவள் வெளியில் வேடிக்கை பார்த்தபடி வந்தாள். ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் ஒற்றையடிப் பாதையில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த, ஆள் நடமாட்டமே இல்லாத சின்னக் கோயில் முன் காரை நிறுத்தினான்.
கோயிலுக்குள் அழைத்துச் செல்ல, தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மாலையை அவள் கழுத்தில் போட, அதிர்ந்த சங்கவி, “நகுல், எதுக்கு இப்படித் திருட்டுத் தனமா கல்யாணம் பண்ணிக்கனும்? உங்களுக்கு விவாகரத்து ஆனதும் அம்மா, அப்பா, அண்ணா எல்லோரையும் கூப்பிட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாமே, எதுக்கு அவசரம்?”
“நானும் அப்படித்தான் நினைச்சிருந்தேன். அதுக்குள்ள உங்க வீட்டில் வேற பிளான் பண்ணதால், உன்னை வீட்டை விட்டு வர வைக்க வேண்டியதா போச்சு. என் வீட்டுக்கு உன்னைக் கூட்டிட்டு போறப்ப என் மனைவியா கூட்டிட்டு போகனும்னு ஆசைப்படுறேன். அதான் இந்த அவசர கல்யாணம். இது செல்லாதுதான். விவாகரத்து ஆனதும் பதிவுத் திருமணம் செய்துக்கலாம். அப்ப உன் வீட்டு ஆள்கள் எல்லோரையும் கூப்பிடலாம். சரியா” அவளை நம்ப வைக்க ஒவ்வொரு நாடகத்தையும் அரங்கேற்றினான்.
சங்கவி பதில் சொல்லும் முன் அவள் கழுத்தில் தங்கத் தாலியும் கட்டிவிட்டான். தன் மீது எந்தச் சந்தேகமும் வராதபடி அவளிடம் நல்லவனாகவே காட்டிக் கொண்டான்.
விழிகளில் நீர் திரள அவன் நெஞ்சில் சாய்ந்து, “நீங்க எது செய்தாலும் சரியாதான் இருக்கும். உங்க கூட வாழ அவளுக்குக் கொடுத்து வைக்கலை. எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கனும்னு கடவுள் முடிவு பண்ணியிருக்கார்” நகுலின் நயவஞ்சக பேச்சுப் புரியாமல் வெளுத்ததெல்லாம் பாலென நினைத்தாள்.
கோயிலிருந்து புறப்பட்டுக் கொடிகள் சூழ்ந்து புதர் மண்டியிருந்த ஒரு இடத்தில் காரை நிறுத்தினான். இறங்கி கொடிகளை நகர்த்திவிட்டு கதவைத் திறந்ததும் இரு பக்கமும் தென்னை மரங்கள் உயர்ந்து நிற்க, நடுவே அகல பாதை செல்ல, அதைக் கண்டு வியந்தபடி வந்தவளுக்கு உள்ளே இருக்கும் வீட்டைக் கண்டதும் கண்களை இன்னும் அகல விரித்தாள்.
“நகுல், வெளிய கதவு இருக்கிறதே தெரியாம புதர் மண்டி கிடக்கு உள்ள வந்தா குட்டி சொர்க்கமே இருக்கு” எனத் துள்ளிக் குதித்து இறங்கினாள்.
சிரித்தபடி வந்த நகுல், “எப்பவாது இங்க வருவதால் கவனிக்க முடியலை. வரப்போ ஆள் வைத்துச் சுத்தம் பண்ணிடுவேன். இப்ப அவசரமா வந்ததால் ஆள் கூட்டிட்டு வர முடியலை. வீட்டை நானே சுத்தம் பண்ணிட்டேன்” என்றான்.
வீட்டிற்குள் சென்று ஓவ்வொரு அறையாகப் பார்த்திருந்தவளை பின்னிருந்து அணைத்தான். அவன் பிடியிலிருந்து விலகித் தள்ளி நின்றவளை ஏன்? எனக் கைகளை விரித்துக் கேள்வியாகப் பார்த்திருந்தான் நகுல்.
“நகுல், ஏற்கனவே நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. அது வீட்டில் எல்லோருக்கும் தெரிஞ்சதுமே என் மேல வெறுப்பாயிட்டாங்க. நான் செஞ்சது தப்புதான். வினோ அண்ணா என்னைக் கையில் வைத்துத் தாங்குவான். அவன் இன்னொரு அப்பா மாதிரி அவ்வளவு பாசம் வைத்திருந்தான். அவனிடம் முதல்ல சொல்லிட்டுத்தான் அம்மா, அப்பாவிடம் சம்மதம் வாங்க நினைச்சேன். அதுக்குள்ள எல்லாம் வேற மாதிரி போயிட்டு. அவங்க எல்லோரும் நம்மை மன்னிச்சு ஏத்துக்கற வரைக்கும் நமக்குள்ள எதுவும் வேண்டாம்”
“கண்டிப்பா அவங்க நம்மைப் புரிஞ்சிப்பாங்க. அதுக்கு நம்ம சந்தோஷத்தை ஏன் வேண்டாங்கிற” அவன் எதற்காக அவளைத் திட்டம் போட்டு அழைத்து வந்தானோ அந்தக் காரியம் கெட்டுவிடுமோ என்று உள்ளுக்குள் பதறினான்.
சங்கவியைத் தன் வழிக்குக் கொண்டு வரப் பல வழிகளில் முயற்சித்தும் பலன் இல்லாமல், செய்வதறியாது முழித்தான். அவனின் திட்டம் தவிடு பொடியாக மண்டை காய, உதடுகளில் கடினப் புன்னகையைத் தவழவிட்டு, கண்களில் வெறுப்பைச் சுமந்திருந்தான்.
“சரி சங்கவி உன் விருப்பம்தான். அவங்க யாரும் நம்மை ஏத்துக்கலைன்னா நாம இப்படியே இருக்க முடியுமா?”
“கண்டிப்பா முடியாது. எனக்கு நம்பிக்கை இருக்கு. யார் வந்தாலும் வரலைன்னாலும், வினோ அண்ணா கண்டிப்பா என்னைத் தேடி வருவான். நம்மைக் கூட்டிட்டுப் போவான்” சங்கவி நம்பிக்கையோடு சொன்னது நகுலின் வயிற்றில் புளியை கரைத்தது.
தன்னோட பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன் என்று வெளியேறினான். பூச்சிகள் அதிகம் நடமாடும் இடம் அதனால் வீட்டைவிட்டு வெளியில் வராதேயெனச் சொல்லிச் சென்றிருந்தான். அதனால், கீழே இருந்த அறையைப் பார்த்துவிட்டு, மேலிருக்கும் அறையைப் பார்க்கப் படியேறி, அவன் வருகைக்காகக் காத்திருந்தாள்.
நகுலுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யூகமாகக் கடந்தது. ருசி கண்ட பூனை பாலை அருகில் வைத்துக் கொண்டு ருசிக்கவும் முடியாமல் பகிரவும் முடியாமல் எவ்வளவு நாள்கள் நல்லவன் வேஷம் போடுவதென, அவளைப் பணிய வைக்கப் பத்து நாள்களாகப் பல முயற்சிகள் எடுத்தும் எதுவும் எடுபடவில்லை.
மேற்கொண்டு என்ன செய்வதென்று உணவகம் ஒன்றில் கூட்டாளிகளுடன் கூடிவிட்டான். அதே உணவகத்திற்கு வினோத்தும் முகிலனுடன் காவல் ஆய்வாளருடன் வந்தமர்ந்தான்.
சங்கவி வினோத்தின் புகைப்படத்தைக் காட்டியிருப்பாதால் அவன் முகம் நன்றாகவே ஞாபக இருக்க அவனை அடையாளம் கண்டு கொண்டான் நகுல்.
சங்கவியைத் தேடுகிறானா? இல்லை, வேறு எதுவும் பிரச்சனையா எனத் தெரிந்து கொள்ள, வினோத் அமர்ந்திருந்த மேசையின் அருகில் அமர்ந்தான்.
வினோத் அவனைப் பார்த்தாலும் சங்கவியின் கைப்பேசியில் சில நொடிகளே நகுலை பார்த்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை.
“சார் சொல்றதும் சரிதானே. அவளா இஷ்டப்பட்டுப் போயிருக்கா. அதுவும் மேஜர் நாம புகார் கொடுத்தாலும் எடுபடாது. அவளைத் தேடுறதை விட்டு அவளா வரட்டும்னு இரு” என்றான் முகிலன்.
“ஏற்கவனே கல்யாணம் ஆனவன்னு சொல்ற. அவ பொண்டாட்டி புகார் கொடுத்தா ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதுக்கும் வழியில்லை. அவ விவாகரத்து வாங்கப் போறான்னு சொல்ற. நாம தேடிப் போனாலும் உன் தங்கை வரனும், வரலைன்னா போறதில் எந்தப் பயனும் இல்லை” வினோத்தின் கவலை அதிகமாக, பயத்தில் சூடேறிய நகுலுக்கு ஒரு கிலோ அல்வாவை வாய்க்குள் திணித்தது போலிருந்தது.
கூட்டாளிகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி, வினோத் காவலர்களுடன் பேசுவதைக் காணொளி பதிவாகப் பதிவு செய்யும்படி கூறினான். அவர்களும் அவன் சொன்னதைப் பிசிராது செய்து கொண்டிருந்தனர்.
“உங்க தங்கச்சி போனது யாருக்கும் தெரியாதுதானே? நீ புகார் கொடுத்தா ஊருக்கே தெரியும். கேட்பவர்களிடம் வெளிநாட்டுக்குப் படிக்கப் போயிருக்கான்னு சொல்லு” காவல் ஆய்வாளர் கூற.
“ஆமா வினோ, எல்லோர் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிற்கனுமா? போனவ போயிட்டான்னு விடு” என முகிலனும் சொல்ல, வினோத் யோசித்துச் சரியெனப் புகார் கொடுக்காமல் புறப்பட்டுவிட்டான்.
வினோத் செல்வதையே பாத்திருந்த முகிலன் மூச்சை இழுத்துவிட, “நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸா? தங்கச்சி மேல ரொம்பப் பாசம் போல. ஆனால், என்ன செய்ய இந்தக் காலத்துப் பிள்ளைங்களை ஒன்னும் சொல்றதுக்கில்லை. கண்டதையும் சமூகத் தளங்களில் பார்த்துட்டு தப்பான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துட்டுக் கடைசியில் எதுக்கும் வழியில்லாம, உயிரை விட்ட கதையும், எடுத்த கதையும் இருக்கு. எத்தனை கேஸை இது மாதிரி பார்த்தாச்சு” எனச் சலித்துக் கொண்ட காவல் ஆய்வாளரும் அப்படியொரு தப்பானவனிடம் மாட்டியிருந்தால் என்று கொஞ்சம் யோசித்திருந்தால் சங்கவி காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
தருணம் எப்போது எனக் காத்திருக்கும் கழுகுகளுக்கு இது ஒன்று போதாதா? மயிலே மயிலே என்றால் இறகு போடமாட்டாள். ஒவ்வொரு இறகாக நாமளே எடுத்துக்க வேண்டியதுதான். அவளைத் தேடி யாரும் வரப் போறதில்லை என்பது உறுதியானதும், எதிர்பார்த்திருந்த காரியத்தை முடிக்கத் தன் திட்டத்தைக் கூட்டாளிகளிடம் கூறிய நகுல், வேண்டாமென்று சென்ற வினோத் திரும்ப வந்தால் தங்கள் காரியம் நடக்காதென்று உடனே அதைச் செயல்படுத்தவும் திட்டமிட்டனர்.
******