- Joined
- Aug 31, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
அத்தியாயம் - 13
நகுல் வீட்டிற்கு வந்த காவலர்கள் ‘ஆ’வெனப் பார்த்திருக்க, வீட்டின் சன்னல்கள் அனைதந்தையும் பூட்டிக் கருப்பு திரைச் சீலைகளால் மூடி, வீட்டைச் சுற்றி சிசிடிவி புதிதாக மாட்டியிருந்தான்.
எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, காவலர்களிடமிருந்து தப்புவதற்காக அவன் செய்த வேலைகள் எல்லாம் அவன் உள்ளே இருக்கிறான் என்பதைக் காட்டிக் கொடுத்தது.
“சார், இவன் என்ன லூஸா? கருப்பு திரைச் சீலை போட்டு மறைச்சா உள்ள எரியுற மின் விளக்கு வெளிச்சம் வெளியில் தெரியாதா? என்ன நினைப்புல கருப்பு துணியைப் போட்டு மூடியிருக்கான். கதவை உடைத்து உள்ள போயிரலாமா?” முகிலன் கிண்டலாகக் கேட்க.
“அவனைப் பிடிச்சதும் முதல்ல அவனுக்குள்ள அறிவை நாம வாங்கிக்கலாம்” என்று முகிலனைப் பார்த்துச் சிரித்தவன், |”கதவை உடைச்சிதான் உள்ள போகனும். ஆனால், நாம பக்கத்தில் போனால் சிசிடிவியில் பார்த்துட்டு ஒன்னு நம்மைத் தாக்க முயற்சிப்பான் இல்லை, அவனை அவனே முடிச்சிக்க நினைப்பான். இது எதுவும் நடக்காம அவனை வெளிய கொண்டு வரனும்” என்ற கண்ணன் சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தான்.
நேரம் செல்லச் செல்ல முகிலன் பதற்றமானான். ஆனால், கண்ணன் பொறுமையாக யோசித்தவன் வீட்டைச் சுற்றியிருக்கிற மற்ற காவலர்களைத் தொடர்பு கொண்டு சில விபரங்களைக் கேட்டான். அவர்கள் சொன்ன பதிலில் சில உத்தரவுகளைப் பிறப்பித்தான்.
கண்ணன் சொன்னதைக் கேட்டதும் வீட்டின் முன் இருந்த இரு காவலர்கள் அருகில் கிடந்த கற்களை எடுத்துக் கதவில் எறிந்தனர். வீட்டின் பின்னாடி இருந்த காவலர்கள் குளிரூட்டி ஓடிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினர்.
கல்லெறிந்த சத்தம் கேட்டதும் நகுல் கணினியில் யாரென்று பார்க்க, யாருமில்லாததைக் கண்டு, சாலைப் பக்க உள்ள சிசிடிவி பதிவுகளைப் பார்க்க, யாரும் இல்லாததைக் கண்டு, யோசித்தவன் எழுந்து முன் பக்கம் உள்ள சன்னல் திரைச் சீலையை மெல்ல நகர்த்திவிட்டு வெளியில் பார்க்க, தள்ளிச் ற்று தூரத்தில் சிறுவர்கள் விளையாடும் சத்தம் கேட்க, அந்தச் சத்தம் என நினைத்துத் திரைச் சீலையைச் சரி செய்துவிட்டுச் சென்றான்.
குளிரூட்டி ஓடிக் கொண்டிருப்பதும், திரைச் சீலை விலகியதும் அவன் உள்ளே இருப்பதை உறுதிப்படுத்தி விட்டது.
ஒரு நொடியும் தாமதிக்காது சுற்றிப் பதுங்கியிருக்கும் எல்லாக் காவலர்களுக்கும் அதிரடியாக உள்ளே நுழைய உத்தவு கொடுக்க, காருக்குள் மறைந்திருந்த கண்ணனும் முகிலனும் மற்ற காவலர்களுடன் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்த வேகத்தில் துப்பாக்கியால் கதவின் பூட்டை உடைத்து செல்ல, அதே நேரம் பின் பக்க வாசல் வழியாக மற்ற காவலர்கள் வர, நகுல் சுற்றி வளைக்கப்பட்டான்.
யாரும் இல்லையெனப் பெருமூச்சுவிட்ட நகுல், அடுத்து யோசிக்க இடம் கொடுக்காமல் அதிரடியாக உள்ளே வந்த காவலர்களைக் கண்டு மிரண்டு போயிருந்தான்.
நகுலின் கையைப் பின்பக்கமாக மடக்கி விலங்கிட்ட முகிலன் கழுத்தில் கைவைத்து தரதரவென வெளியே தள்ளிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினான்.
கண்ணன் கார் முன்னே செல்ல, முகிலன் இரு காவலர்களுடன் நகுலை அழைத்துக் கொண்டு பின் வர, மற்ற காவலர்கள் அதற்குப் பின் வர, மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க, காவல் நிலையம் அழைத்து வரப்பட்டான் நகுல்.
முகிலன் வரும் வழியிலே வினோத்துக்குத் தகவல் கொடுத்திருந்தான். இவர்கள் வந்து சேருவதற்குள் வினோத்தும் சந்துருவும் ஆத்திரம் தலைக்கேற காவல் நிலையம் முன்னாடி நின்றிருந்தனர்.
இருவரையும் கண்ட கண்ணன், “உங்களை ஹாஸ்பிட்டலை விட்டு வெளிய வரக்கூடாதுன்னு சொல்லியிருந்தோம்லம, இங்க ஏன் வந்தீங்க?” எனக் கோபத்தில் கேட்க.
“நகுல் எங்க? அவனால்தான் அம்மா உயிருக்குப் போராடிட்டு இருக்காங்க. சங்கவி உயிரை விட்டிருக்கா, அவனைக் கொல்ற வெறியில் வந்திருக்கோம்”
நகுல் இறங்கியதைப் பார்த்ததும், தாக்கும் வெறியுடன் அவனை நோக்கி ஓடினர். கண்ணன், இருவரையும் தன் கைப்பிடிக்குள் பிடித்து வைத்துக் கொண்டான்.
மல்லுகட்டும் இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த கண்ணனுடன் முகிலனும் சேர்ந்து இருவரையும் பிடித்து நிறுத்திவிட்டு, நகுலை உள்ளே அழைத்துச் செல்லுமாறு காவலர்களிடம் கத்தினான்.
“ரெண்டு பேரும் படிச்சவங்கதானே? இல்லை, படிச்ச முட்டாளா? அவனைக் கொலை பண்ணிட்டு நீங்க உள்ள போகப் போறீங்களா? சங்கவி ஆவியா இருக்கிறது உண்மைன்னா நகுல் வாயைத் திறந்து உண்மையைச் சொன்னால்தான் அவ நம்புவா. கொலைகாரனிடமிருந்து உங்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், ஆக்ரோஷமா பேயா சுற்றித் திரியும் ஆவியிடமிருந்து உங்களைக் காப்பாற்ற எங்க யாராலும் முடியாது. சங்கவியோட ஆன்மா சாந்தியடையனுமா? இல்லை, இவனைக் கொலை பண்ணனுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க”
கண்ணனின் பேச்சில் அமைதியான வினோத்தும் சந்துருவும் கண் கலங்க நிற்க, “நகுலை பிடிச்சிட்டோம். இனிமே அவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியது எங்க பொறுப்பு” என்றான் முகிலன்.
“முகிலா, சங்கவியைக் கல்யாணம் பண்றேன்னு கூட்டிட்டு போயிட்டு ஏன் கொன்னான்?” பதில் தெரிந்தும் சொல்ல முடியாமல் தவிக்க, “என்ன, நான் கேட்கிறேன் நீ பதில் சொல்லாம இருக்க.”
“இப்ப ரெண்டு பேரும் ஹாஸ்பிடலுக்குப் போங்க நான் அங்க வந்து சொல்றேன்” எனச் சாமாளித்து அனுப்ப நினைத்தான்.
“சார், நீங்க சொல்லுங்க என்ன நடந்துச்சு? எதுக்குக் கொன்னான். என்னவா இருந்தாலும் அவனை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து சொல்லச் சொல்லுங்க. ஏன்னா, சங்கவி அங்கதான் இருக்கா. பொது இடத்தில் எங்களுக்கு எந்தத் தொல்லையும் தந்ததில்லை” எனச் சந்துரு சொல்ல.
“ஆமா சார், ஊரில் கிணத்துல குளிக்கும்போது வந்தது கூட, அது எங்க தோட்டம்னுதான். அவளோட ஆன்மா எங்க வீட்டைச் சுற்றிதான் இருக்கு. நகுலை அங்க கூட்டிட்டு வந்து சொல்லச் சொல்லுங்க” வினோத்தும் சொல்ல.
“விசாரணைக் கைதிகளை அப்படிக் கூட்டிட்டு வர முடியாது வினோ. அப்படியே அங்க கூட்டிட்டு வந்து அவனுக்கோ இல்லை, அவனால் உங்களுக்கோ ஏதாவது ஆச்சுன்னா அது பெரிய பிரச்சனையாகிடும்” கண்ணன் சூழ்நிலையை எடுத்துச் சொல்ல.
“ஆமா வினோ, பேய், பிசாசு, ஆவின்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. உண்மையிலும் சங்கவி பேயா இருக்கான்னா நகுல் பற்றிய உண்மை தெரியும்போது அவளோட ஆவி வெறியாட்டம் ஆடும். அதை எதிர்கொள்றது ரொம்பக் கஷ்டம். அங்க பாரு விஷயம் என்னன்னு தெரியாம அவனுங்க பொண்டாட்டிங்க வக்கீலோட வந்து நிற்காங்க புரிஞ்சிக்கோ” என்றான் முகிலன். இருவரும் வேறு வழியின்றித் தலையை அசைத்தனர்.
“ரெண்டு பேரும் எங்க கூட உள்ள வாங்க. அங்க வந்து எந்தப் பிரச்சனையும் பண்ணக் கூடாது” என்ற கண்ணன் காவல் நிலையம் உள்ளே நுழைய அவனைச் சூழ்ந்த வக்கீல்கள் சாரமாரியாகக் கேள்வி கேட்டனர். அதே நேரம் தேவனும் வந்தார்.
தேவனைக் கண்டதும் அவரைச் சூழ்ந்து கொள்ள, “கண்ணன், இவங்கெல்லாம் கைதிகளோட சொந்தங்களா?” எனக் கேட்க.
“ஆமா சார். எல்லோரும் அவனுங்க ஒவ்வொருத்தரின் மனைவி”
“அவங்களை மட்டும் உள்ள வரச் சொல்லுங்க. லாயர்ஸ் எல்லோரையும் கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்ணச் சொல்லுங்க” என்று உள்ளே சென்றார்.
தேவன் சொன்னதும் ஒன்பது பேரின் மனைவிகளும் உள்ளே வர, “சார், இவனுங்க பண்ணது இவங்களுக்குத் தெரியனுமா? லாயார்ஸ் கூப்பிட்டு சொல்லிட்டா. அவங்க புரிய வைக்கப் போறாங்க” கண்ணன் சொல்ல.
காதைக் குடைந்து கொண்டே சிரித்த தேவன், “முதல்ல இவங்களுக்குத்தான் தெரியனும் கண்ணா. நாம கஷ்டப்பட்டு உயிரைப் பணயம் வைத்துப் பிடிச்சா, கீழ் கோர்ட் இல்லைன்னா, மேல் கோர்ட் போயாவது விடுதலை வாங்கிக் கொடுத்திருவாங்க லாயர்ஸ். ஒரு பெண்ணா சங்கவி பட்ட கஷ்டம் என்னன்னு இவங்களுக்குத் தெரியனும். அதுக்குப் பிறகு வக்கீல்கிட்ட பேசுறது அவங்க இஷ்டம்” என்றார்.
“அதுவும் சரிதான் சார்” என்றான் கண்ணன்.
“சார், நகுலோட மனைவி ஊருக்குப் போயாச்சு” முகிலன் சொல்ல.
“ஒன்னும் பிரச்சனையில்லை. அவனிடம் நம்பர் வாங்கி வீடியோ கால் பண்ணு” என்ற தேவன், திரும்பிப் பத்து பேரிடமும், “உங்க எல்லோரையும் எதுக்குக் கைது பண்ணியிருக்கோம்னு உங்க மனைவிக்கிட்ட நீங்களே சொல்லுங்க. யாரும் பொய் சொல்ல முடியாது. ஏன்னா, ஏற்கனவே நீங்க எல்லோரும் சொன்னதை வீடியோ பதிவு பண்ணி வச்சிருக்கோம்” என்றார்.
