• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 1

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
14
அத்தியாயம் - 1
சாலையின் இருபக்கமும் மின் விளக்குகள் மிளிர, கொட்டும் மழையில் ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருக்கும் சாலையில் மரங்கள் பின்னோக்கி ஓட, காரின் சத்தம் மட்டும் கேட்டபடி கண்களை மூடி பயணித்துக் கொண்டிருந்தான் வினோத்.

உடலில் குளிர் அதிகம் உணரவும் கண் விழித்தவன், “அண்ணா, கொஞ்சம் ஏசியைக் குறைக்கீங்களா? ரொம்பக் குளிருது” எனக் கரங்களை இறுக கட்டியபடி கூறினான்.

“மழை பெய்யுதுள்ள அதான் குளிருது” என்றபடி பொத்தானைத் திருப்பிக் குளிரூட்டியைக் குறைத்தான் ஓட்டுநர் கண்ணன்.

“என்ன மழை பெய்யுதா!” என அதிர்ந்து கேட்டவன் சன்னல் வழியாக வெளியில் பார்த்தான்.

“சரியா போச்சு… இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குக் கையில் மொபைல் இருந்தா போதும் அணுகுண்டே விழுந்தாலும் தெரியாது நாம கிளம்பின கொஞ்ச நேரத்தில் மழை ஆரம்பிச்சிட்டு தம்பி.”

“அண்ணா, கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதுக்கும் என்னனென்னமோ சொல்றீங்க.”

“தூங்கிட்டியா? சரிதான். உனக்கு எத்தனை மெஸேஜ் வந்திருக்குன்னு பாரு. எல்லாத்துக்கும் பதில் சொல்லு. இல்லை, உன்னைக் கடத்திட்டுப் போறதா நினைச்சுப் புகார் கொடுத்திடப் போறாங்க.”

மெல்ல சிரித்த வினோத், “காரை விட்டு இறங்கும் போதுதான் கேட்பாங்க. இப்ப எதுவும் வராது. பயப்படாம வண்டியை ஓட்டுங்கண்ணா” கண்ணன் சிரித்தபடியே தன் வேலையில் கவனமாக இருந்தான்.

வினோத் மழை விழும் சிறு துளிகளை ரசித்தபடியே வந்தான். சிறிது நேரத்தில் அவன் இறங்கும் இடம் வர, தன் பையைத் தோளில் போட்டபடி கீழே இறங்கி நிற்கவும் அவன் கைப்பேசி சிணுங்கியது.

“அண்ணா, நீங்க கடத்திட்டு போனீங்களா? இல்லையான்னு கேட்க மணி அடிச்சிட்டாங்க” எனச் சொல்லிச் சிரித்தபடி காதில் கைப்பேசியை வைத்தவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல, “அண்ணா, நீங்க கடத்தலைன்னு சொல்லிட்டேன். நீங்க கிளம்பலாம்.”

“வர வர உனக்குக் குறும்பு அதிகமாயிட்டே போகுது. ஆபிஸில் சொல்லிக் கவனிக்கச் சொல்றேன்.”

“தாராளமா சொல்லுங்க நடு இராத்திரி என் வீட்டு வாசலில்தான் இறக்கி விடனும். ஆனால், தினமும் ஒரு கிலோ மீட்டர் முன்னாடியே இறக்கி விடுறீங்க. அதை நானும் சொல்வேன்.”

“அடப்பாவி! சைக்கிள் கூட நுழைய முடியாத இடத்தில் வீட்டைக் கட்டி வச்சிட்டு நீ என்னைச் சொல்றீயா? நான் காரைத் தலையில் தூக்கி வைத்து வந்தாக் கூட வர முடியாதே! ஆண்டவா என்னைக் காப்பாற்றக் கூடாதா?” என இரு கைகளையும் கண்ணன் மேலே விரித்துக் காட்ட,

களகளவெனெ சிரித்த வினோத், “கிளம்புங்கண்ணா, நேரம் ஆயிட்டு நீங்க வீட்டுக்குப் போக ஒரு மணி நேரம் ஆகும்.” என்றவன் தானும் விடை பெற்று, தன் தோளில் கிடந்த பையைப் பிடித்தபடி, தன் தம்பி சந்துருவை சுற்றிச் சுற்றித் தேடியபடி, அவனைக் காணாது தன் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினான்.

நின்ற மழை மீண்டும் சாரலாகப் பொழியத் தொடங்க, வானத்தைப் பார்த்துவிட்டுத் தன் தலைமுடியை கோதினான். தன் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டே நடக்க, சிறிது தூரத்தில் இரண்டு சிவப்புப் புள்ளிகள் தெரிய, தன்னை அழைக்கச் சந்துரு வருகிறானென நினைத்து நடையை வேகமாக்கினான்.

திடீரென்று ஞாபகம் வந்தவன் போல், ‘சந்துரு வண்டியில் வந்தால் ஹெட்லைட் வெளிச்சம்தானே தெரியனும் இதென்ன சிவப்பு வெளிச்சம் தெரியுது. அதுவும் இரண்டாகத் தெரியுது’ என யோசனையில் ஆழ்ந்தபடி முன்னோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.

வினோத் முன்னோக்கிச் செல்லச் செல்ல அந்த வெளிச்சமும் நகர்ந்து செல்வது போல் இருக்க, ‘ஏதோ தூரத்தில் கார் போகுது போல…’ என எண்ணிய அடுத்த நொடி சுதாரித்தவன், ‘கார் போக முடியும்னா நான் ஏன் நடந்து வரனும்?’ எனத் தலையில் அடித்துக் கொண்டான்.

முன் சென்று கொண்டிருந்த சிவப்பு வெளிச்சம் இப்போது அவனுக்கு எதிராக வரத் தொடங்கியது. வினோத் குழப்பத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துச் செல்ல, வெளிச்சம் அருகில் வர வரப் பளபளவென்ற சிவப்பு வெளிச்சம் மட்டும் தெரிய அதற்குப் பின் என்ன இருக்கிறது என்று வினோத்தின் கண்களுக்குத் தெரியவில்லை.

வினோத்துக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்கத் தொடங்க, மிரட்சியில் பயந்து நிற்க, “வினோத், இப்பத்தான் வரீயா? நானும் இப்பத்தான் வேலை முடிச்சிட்டு வரேன். வா போற வழியில் இறக்கிவிட்டுட்டு போறேன்” என்ற குரலைக் கேட்டு அதிர்ந்து திரும்பிப் பதில் சொல்லத் திணறி நின்றான்.

அதே தெருவில் வசிக்கும் இராமசாமி வேலைலிருந்து ஓய்வு பெற்றதும் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை செய்கிறார். அவரின் குரல் கேட்டு அதிர்ச்சியில் நின்றவனிடம். “என்னப்பா பயந்துட்டியா? நான் அர்த்த இராத்திரியில் பின்னாடி இருந்து குரல் கொடுத்தா நீ பயப்படமா என்ன செய்வ?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை மாமா. தம்பி வரேன்னு சொன்னான். அவன் வரானான்னு பார்த்துட்டே போனேன். நீங்க வந்ததைக் கவனிக்கலை மாமா. நீங்க போங்க நான் தம்பி கூட வரேன். அத்தை தனியா இருப்பாங்க” என்றவன் திரும்பி முன்னால் பார்க்க, அங்குச் சிவப்பு வெளிச்சம் தெரியாமல் கருமை பூசியிருந்தது.

உள்ளுக்குள் மீண்டு உதறல் எடுக்க, “மாமா!” என்றவனின் குரல் காற்றில் பறந்து செல்வது போல் இராமசாமியும் காணாமல் போயிருந்தார்.

தன்னையே நொந்து கொண்டு, ‘மாமா கூப்பிட்டப்பவே போயிருக்கனும்’ என ஒவ்வொரு அடியாக வேகமாக எடுத்து வைத்தவன் மீண்டும் சிவப்பு வெளிச்சம் தெரியவும் வேகத்தைக் குறைத்து, நத்தை ஊர்வது போல் மெல்ல மெல்ல நகர வெளிச்சமும் அவன் எதிரே மெல்ல மெல்ல நகர்ந்து வர, தன் உயிரைக் கையில் பிடித்தபடி பயத்தில் முன்னே சென்றான்.

சிவப்பு வெளிச்சம் அருகில் வர வர ஏதோ உருவம் வருவது போல் இருளில் தெரிய, கண்ணைக் கசக்கிவிட்டு மீண்டும் பார்க்கவும் ஏதோ ஒரு உருவம் தெரிய அதன் கண்கள் சிவப்பு நிறத்தில் பளபளக்கிறது என யூகித்தவனுக்கு மனம், ‘திக்திக்திக்’ என்று அடித்துக் கொண்டது.

வினோத்துக்குக் கால்கள் சட்டென்று நிற்க, ஒரு அடி கூட முன் எடுத்து வைக்கத் தைரியம் வராமல் கால்கள் தானாகப் பின்னோக்கிச் செல்ல ஆரம்பிக்க, அந்த உருவமும் அவனைப் பார்த்தபடி அவன் அருகில் வர, ‘இராமசாமி அண்ணன் வந்தப்போ தெரியாத உருவம், அவர் சென்றதும் எப்படித் தெரியுது! அம்மா சொன்ன மாதிரி அதுவா இருக்குமோ…’ என்ற சந்தேகம் மூளையைக் கசக்கிப் பிழிய, இனிமேலும் நிற்பது சரியில்லை என்று திரும்பித் தலைதெறிக்க ஓடினான்.

வினோத் ஓட ஓட அந்த உருவமும் அவனைப் பின் தொடர ஆரம்பிக்க, தான் காரிலிருந்து இறங்கிய அதே இடத்திற்கு வந்து நின்று சுற்று முற்றும் மூச்சு வாங்க பார்த்துவிட்டு ஓடி வந்த திசையை மெல்ல திரும்பி அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

தன் முன் கருகருவென்று நான்கு அடி உயரத்தில் சிவப்பு நிற கண்களுடன் நாய் தன் அருகில் நிற்பதைக் கண்டு ஆடாமல் அசையாமல் சிலையாக நின்றான். மெதுவாக அவன் அருகில் வந்து நின்று அவனைச் சுற்றி சுற்றி வந்தது. மூச்சுவிடக் கூட மறந்து இழுத்து பிடித்து நின்றவன் தூரத்தில் வாகனம் வருவது போல் தெரியவும் கொஞ்சம் தைரியம் வர, வாகனத்தில் வருபவர்கள் தனக்கு உதவுவார்கள் என்ற எண்ணத்தில் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தான்.

வாகனம் அருகில் வர வரத் தன்னைச் சுற்றி வந்த நாயைக் காணாமல் மிரண்டு குழம்பி போய் நாயைத் தேட தன் அருகில் வந்து வாகனம் கடந்து செல்வதைக் கவனிக்காமல் விட்டுவிட்டான்.

சுயநினைவிற்கு வந்தவன் வாகனம் தன்னைக் கடந்து செல்வதைக் கண்டு நொந்து போனவன், வீட்டிற்குச் செல்ல வேறு பாதையும் இல்லாமல் தவித்தபடி இருக்க, நாய் இல்லாததைக் கண்டு மனம் இளகுவாக, தாமதிக்காமல் வீட்டை நோக்கி ஓட வேண்டியதுதான் என்று பலம் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

மூச்சிரைக்க ஓடியவன் ஏற்கனவே நாயைக் கண்ட இடம் அருகில் வர வரத் தன் வேகத்தை மேலும் கூட்டி ஓடினான். அந்த இடத்தைக் கடந்ததும் மெல்ல திரும்பியவன் பின்னந்தலையில் அடி வாங்கியது போல் சட்டென்று நின்றான்.

நாய் இருந்த இடத்தைக் கடந்து விட்டோம் என்ற நிம்மதியில் திரும்பியவனுக்கு, அது தன்னுடனே ஓடி வருவதைக் கண்டதும் பாறாங்கல்லாக மாறியிருந்தான். அவனைச் சுற்றிச் சுற்றி வந்து அசையவிடாமல் உறுமியபடியே அவன் முன் அமர்ந்தது.

தன் நினைவுக்கு வந்த அத்தனை தெய்வங்களையும் மனதில் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தான். ஓடினால் கண்டிப்பாக ஒரு கிலோ சதையை எடுத்துவிடுமே என்று மனம் ஓலமிட்டது.

தன் கால்களை மெல்ல வினோத் பின்னாடி எடுத்து வைத்த அடுத்த நொடி நாய் எழுந்து நிற்க, எடுத்து வைத்த கால்களைப் பழைய இடத்திற்கே கொண்டு வர, ‘இத்தனை தெய்வத்தைக் கூப்பிட்டும் ஒருத்தரும் உதவிக்கு வரலையே’ எனத் தெய்வங்களை மனதில் வசை பாடத் தொடங்கினான்.

திடீரென்று தன் முன்னங்கால்களைத் தூக்கி வினோத்தின் தோள்களில் வைத்து நிற்கவும் தன் கண்களை இறுக மூடி, “என்னை ஒன்னும் செய்துடாதே! விட்ரு!” எனக் கத்தினான்.

“வினோத்! வினோத்! ஏய் வினோத்! கண்ணைத் திற. நான்தான் வந்திருக்கேன். எதுக்கு விட்ருன்னு விட்ருன்னு கத்திட்டு இருக்க?” என வினோத்தின் தோள்களைப் பிடித்து உலுக்கினான் சந்துரு.

சந்துரு குலுக்கிய குலுக்கலில் கண்களைத் திறந்த வினோத், ‘ஆ’ வென்று அலறினான். அவன் அலறல் சத்தம் கேட்டுச் சந்துரு பத்தடி தள்ளி ஓடியவன், மெல்ல திரும்பி வினோத்தை வினோதமாகப் பார்க்க, அலறிய வினோத் சந்துருவைக் கண்டதும் சுயநினைவுக்கு வந்து, “சந்துரு!” எனக் கூப்பிட்டான்.

“அப்பாட! இவனுக்கு ஒன்னும் ஆகலை” என வினோத்தின் அருகில் வந்த சந்துரு, “என்ன ஆச்சு? எதுக்கு நடு ரோட்டில் நின்னு நீ கத்துறதும் இல்லாம என்னையும் சேர்த்து பயமுறுத்திகிட்டு இருக்க? தூங்குற எல்லோரையும் எழுப்பிருவ போல” எனத் தமயனை முறைத்தான்.

“சும்மா முறைக்காத. நான் ஒன்னும் சும்மா கத்தலை” என நடந்த அனைத்தையும் சொன்னான்.

“என்ன உளர்ற? நான் வரும்போது நீ கண்ணை மூடி என்னை விட்ருன்னு கத்திட்டு இருந்த, ஆனால் நாய் எதுவும் இல்லையே. நீ தனியாதானே புலம்பிட்டு இருந்த” என்றான் சந்துரு.

“என்ன சொல்ற! நாய் இல்லையா! ம்கூம் இங்க என்னமோ இருக்கு. முதல்ல வண்டியை எடு இங்கிருந்து போலாம்” எனச் சந்துருவை அவசரப்படுத்தினான்.

சந்துருவும் வேகமாக வண்டியை எடுக்க, வினோத் பின்னாடி அமர, இரு சக்கர வாகனமும் வேகமெடுத்து ஓட, “ஆமா நீ எப்பவும் முன்னாடியே வந்து எனக்காக நின்னுட்டு இருப்ப, இன்னைக்கு ஏன் லேட்டா வந்த?” வினோத் கேட்க.

“இராமசாமி மாமா மதியம் சாப்பிட்டுட்டு படுத்தவர் திரும்ப எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்திலேயே நெஞ்சு வலி வந்து உயிர் போயிருச்சு. அத்தை மட்டும் தனியா என்ன செய்வாங்க? அவங்க பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்துட்டு மற்ற காரியங்களை நானும் அப்பாவும் செய்தோம். அங்க இருந்ததால் நீ வர நேரத்தை மறந்துட்டேன்.”

“என்ன உளர்ற? இராமசாமி மாமா நைட் டியூட்டி முடிச்சிட்டு வரப்ப நான் பார்த்தேனே. என்னைக் கூட வரீயான்னு கேட்டாரே. சந்துரு வரான்னு சொன்னதும் போயிட்டார். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தவர் எப்படி மதியம் இறந்திருக்க முடியும்?” என்று வினோத் கேட்க,

சட்டென்று இரு சக்கர வாகனத்தை நிறுத்திய சந்துரு திரும்பி, ‘இவனுக்கு மூளை எதுவும் குழம்பி போயிருச்சா? இல்லை, எனக்கு எதுவும் ஆயிருச்சா? என வினோத்தை மேலும் கீழும் வினோதமாகப் பார்த்திருந்தான்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top