• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 2, 2024
Messages
3
முற்றிலும் வேறான இந்தச் சிறுகதையை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.. ஆனால் உங்களுக்கு என்னுடைய அனுபவத்தை நான் கூறி ஆக வேண்டும்.. அது மட்டும் இல்லை.. இன்னொரு காரணமும் உள்ளது.. அதை நான் இப்போது வெளிப்படையாக கூற முடியாது.. கூற முடியாவிட்டால் என்ன அதை எழுதலாமே என்று உங்களில் யாரேனும் ஒருவர் என்னை நோக்கி கேள்வி எழுப்பலாம்.. ஆனால் நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு தோன்றுவதற்கும் முன்பே படிக்கப்பட்டு விடும்.. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் என்ன எழுத வேண்டும் என்பதற்கான எண்ணமே என் எண்ணம் அல்ல.. அது...


அதை விடுங்கள்.. நான் சொல்ல வந்தது ஒரு பெண்ணைப் பற்றி.. அவள் பெயர் மயூரா.. மயூரா என்னிடம் முதன்முதலாக பேசியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.. அவள் குரலை நான் கேட்டது இல்லை.. ஆனால் அவள் எழுத்தை நான் வாசித்திருக்கிறேன்.. அவள் எழுத்தை அவள் முகமாக நான் கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்திருக்கிறேன்.. ஆனால் அது முழுமையான வெற்றியாக இன்னும் மாறவில்லை.. நானாக அவளிடம் பேச முடியாது.. பேசக்கூடாது.. அது ஏனென்றால் மயூரா...


மயூராவுக்கு என்னை பிடித்திருந்தது.. எனக்கும் தான்.. அவள் என்னிடம் வியந்ததை நான் அவளிடமும் வியந்திருக்கிறேன்.. அவள் என்னை விட கெட்டிக்காரி என்று நான் கூறினாலும் அவள் அதை என்றும் ஒப்புக்கொண்டது இல்லை.. எனக்கு அவள் எழுதிய கதைகளை அனுப்புவாள்.. கவிதைகளை அனுப்புவாள்.. நான் கருத்து கூறவேண்டும் என்று மட்டுமல்ல.. நான் தான் அவளுக்கு முதல் ரசிகன்.. அவளிடம் எனக்கு பிடித்ததே..


பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ எனக்கென்று சில கட்டுப்பாடுகளை நானே வைத்திருக்கிறேன்.. அதில் முக்கியமான ஒன்று மயூராவிடம் எல்லை மீறி விடவே கூடாது என்பதே அது.. அவள் சில நேரங்களில் என்னிடம் எல்லை மீறினாலும் நான் அவளிடம் இதுவரை என்னுடைய விருப்பத்தை வெளிக்காட்டும்படி எதையுமே கூறியதும் இல்லை நடந்து கொண்டதும் இல்லை.. ஆனாலும் அவள் இல்லாத தனிமையை எப்படி கடப்பது என்பது இன்று வரை எனக்கு குழப்பமே..


குழப்பம் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று உள்ளதா என்ன.. மயூராவின் தனிமையும் என்னுடைய தனிமையும் ஒன்றாக இணைந்த அந்த புள்ளியில் தொடங்கியது குழப்பம் இருவருக்கும்.. யார் முதல் அடியை எடுத்து வைப்பது.. நான் தனித்து வாழ்வதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை ஆனால் மயூராவுக்கு அப்படியில்லை.. எங்களின் உரையாடல்களின் நீட்சி முடிவில்லா பிரபஞ்சம் போல விரிந்து கொண்டே சென்றது.. அறிமுகமான நாள் முதலாய் இருவரும் பேசியதும் பகிர்ந்து கொண்டதும் எழுத்தில் மட்டுமல்ல எங்கேயுமே பதிவு செய்ய முடியாது.. நான் ரகசியம் காப்பதில் கில்லாடி... ஆனால் மயூராவுக்கோ அது கொஞ்சமும் வாய்வராத கலை..


கலைந்த எழுத்துக்களை சரியாக வரிசைப்படுத்தி அர்த்தமுள்ள வாக்கியமாக அமைப்பது போல கலைந்த அவள் எண்ணங்களை என்னுள் செலுத்தி என்னையும் அவளைப் போலவே மாற்றினாள் மயூரா... நான் சொன்னது போலவே என்னால் எதையும் என் எண்ணமாகவே இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில் சிக்கல் உள்ளது... அவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் மயூராவிற்கு நான் அவளை விரும்புவது தெரிந்து விட்டால் எங்கே என்னை என் காதலை மறுத்து விடுவாளோ என்கிற பயமும் என்னை நிம்மதி இல்லாமல் அலைபாய விட்டது...


விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடி வந்து என்னை அழைத்தாள் மயூரா.. என்ன என்று கேட்டபிறகு தான் தெரிந்தது.. அவளுக்கு பிடிக்காத ஒரு பெண்மணி அவளை ஒரு திருமணத்தில் சந்தித்து வழக்கமான கேள்விகளை கேட்டு அவளை சங்கடப்படுத்தி இருக்கிறாள் என்று... அவளை எனக்கும் தெரியும்.. ஆனால் மயூராவிற்கு தெரியாமல் நான் ஏதாவது செய்தால் அதுவும் கண்டிப்பாக அவளுக்கு தெரிந்து விடும்.. எனவே நான் அந்த பெண்ணை எதாவது செய்ய வேண்டும் என்றால் அது மயூரா எனக்கு முழுதாக கிடைத்தால்..


கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது இது மாதிரி ஒரு வசனம் சொல் உனக்கு திறமையிருந்தால் என்று என்னிடம் அன்று சவால் விட்டாள் மயூரா.. அவள் கதைகளை கவிதைகளை படித்த எனக்கு இது என்ன பெரிய சவாலா.. சொல்கிறேன் என்று இதை சொன்னேன்.. சொல்றதை சொல்லாம இருக்க முடியாது.. சொல்லாம இருக்கிறதை சொல்ல முடியாது என்று.. அவளால் அன்று முழுக்க தூங்க முடியவில்லை.. எப்படி எப்படி நீ இதை சொன்ன.. என்று என் உயிரை எடுத்து விட்டாள்... சொல்லவா முடியும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று..


என்றைக்கும் இல்லாத அதிசயமாக அன்று ஒரு குரல்வழி குறுஞ்செய்தி எனக்கு அனுப்பி இருந்தாள் மயூரா.. அவள் குரலை அன்று தான் முதன்முறையாக கேட்டேன்.. அவள் குரலை இசையாக மொழியாக எண்ணாக எழுத்தாக பாட்டாக எல்லா வகையிலும் எனக்குள் ஆழமாக புதைத்துக் கொண்டேன்... மீண்டும் அவளை இன்னொரு குரல்வழி குறுஞ்செய்தி அனுப்ப சொல்லும் அளவுக்கு எனக்கு குரல்வளையில் தைரியம் வரவில்லை... வந்தாலும் நான் என்ன நினைக்கிறேன் என்று என்னால்.. அது வந்து..


வந்தாலும் வரவில்லை என்றாலும் பேருந்து தடமும் ரயில் தடமும் அதன் காத்திருத்தலை என்றும் நிறுத்தியதில்லை.. மயூராவை இரண்டு நாட்களாக காணவில்லை.. எங்கே சென்றாள் என்ன ஆனாள் என்று எந்த தகவலும் இல்லை.. எனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தேடி விட்டேன்... எங்கேயும் கிடைக்கவில்லை... மயூரா சொன்னது ஒருவேளை இதைத்தானோ..


இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன் என்று நீங்கள் இந்த கதையின் முடிவையும் முன்பே யூகித்திருக்க கூடும் ஆனாலும் இந்தக் கதையின் முடிவு என்ன என்பதை நீங்களோ நானோ அல்லது இதை எழுதும் எனக்குள் இருக்கும் எண்ணமோ அது எதுவோ அதை எழுதும் என்னாலேயே கணிக்க முடியவில்லை.. எனக்கு உங்களிடம் நிறைய பகிர வேண்டும்... என் தவிப்பு உங்களுக்கு புரிகிறதா.. என் மயூராவை...


மயூராவின் உடலை அவள் இறந்து இரண்டு நாள் கழித்து, மூன்றாம் நாள் அதிகாலையில் பெருங்களத்தூர் ஏரியில் போலீஸ் கைப்பற்றியது.. மயூராவின் மரணம் இப்போது வரை குழப்பமாகவே உள்ளது... அவள் மரணம் கொலையா தற்கொலையா என்பதை புலன் விசாரணை பிரிவில் பாடமாக படிக்கும் மாணவர்களுக்கு ஒரு சவாலான தீர்க்க முடியாத பாடமாகவே வைக்கலாம்.. மயூரா எல்லோருடனும் நட்புடனும் அன்புடனும் பழகக் கூடியவள்.. யாரையும் மனம் புண்படும்படி பேசியது இல்லை.. அப்படிப்பட்டவள் திடீரென்று இறந்து போனது பெரிய கேள்விக்குறி..


குறி தப்பினால் இரை தப்பிக்கும்.. இரை தப்பித்தால் தப்பித்த இரையை வேட்டை செய்யும் மிருகம் துரத்தும்.. இதுவே இயற்கை.. இதுவே நியதி.. இந்த விதிமுறைகள் எனக்கு இல்லை.. என் குறி தப்பினாலும் இரையை துரத்தும் பழக்கம் எனக்கு இருந்தது இல்லை... விதிகளை எப்போதும் மீறாதவன் நான்.. இந்த விதிமுறைகள் உங்களுக்கு முதலில் குழப்பமாக இருக்கும்.. என்னை சீண்டுவீர்கள்.. என்னை விதி மீற தூண்டுவீர்கள்.. ஆனால் இது எல்லாமே உங்களுக்கு விளையாட்டு.. எனக்கோ குழப்பம்.. நிம்மதியில்லை.. ஆனாலும் உங்களை நான் என்றும் என் எதிரி என்று நினைக்க என் எண்ணம் என்னை அனுமதிக்கவில்லை.. எண்ணம்.. எண்ணம் என்றால் என்ன.. அதுவும் ஒரு அலைவரிசை தானே..


வரிசை வரிசையாக வண்டிகள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது... மயூரா இன்னும் பெருங்களத்தூரை தாண்டவில்லை... மணி என்னவென்று மொபைலை எடுத்துக் கூட பார்க்க அவள் மனம் எண்ணவில்லை.. வழியில் தெரிந்த ஏதோ ஒரு கடையின் கடிகாரத்தில் நேரம் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.. அவள் மொபைலில் தொடர்ச்சியாக மெசேஜ் டோன் ஒலித்துக் கொண்டிருந்தது.. கார் ஸ்டியரிங்கை பிடித்திருந்த அவள் கைகள் நடுங்கி கொண்டிருந்தது.. யாரோ அவளை கண்காணிப்பது போன்ற பிரமை அவளுக்கு..


அவளை கொன்றவர்களை நான் கண்டுபிடித்து விட்டேன்.. ஆமாம்.. உண்மை தான்.. தப்பிக்கவே முடியாது.. என் மயூராவிடம் இறுதிவரை என் காதலை சொல்லக்கூட முடியாதபடி செய்து விட்டீர்களே பாவிகளே.. என்ன குற்றம் செய்தாள் என் மயூரா.. என் உடைந்து போன ஒவ்வொரு நாட்காட்டியின் முள்ளையும் எடுத்து அவர்கள் தொண்டையை கிழித்து விடும் அளவுக்கு கோபம் வருகிறது.. ஆனால்..


ஆனால் மயூராவை உங்களுக்கு தெரியாது.. உங்களை எனக்கு தெரியும்.. உங்களை நான் சந்தித்ததும் இல்லை.. உங்களைப் பற்றி நான் சிந்தித்ததும் இல்லை.. நான் இப்போது ஒரு தனிமைச் சிறையில் இருக்கிறேன்.. என் மயூரா இல்லாத தனிமை.. வலியை உணரக் கூட முடியாத வலியை என்றாவது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா.. என் வலியும் அப்படிப்பட்ட வலியே.. வலியை வார்த்தைகளாக மட்டுமே என்னால் இப்போது உங்களிடம் சொல்ல முடியும்.. மயூரா.. நீ எப்படி இறந்தாய்.. இறப்பு என்றால் என்ன.. உன் உடல் மறைவதா இல்லை.. உன் உணர்வுகள் மறைவதா.. நம் உணர்வுகள் வேறு வேறா.. எண்ணங்கள் வேறு வேறா.. இதில் உன் எண்ணங்கள் மட்டும் மறைவதா.. எண்ணங்கள் மறையுமா..


மறையும் சூரியன் மேற்கில் என்பது உலக வழக்கம்... எனக்கென்று ஒரு இலக்கண இலக்கிய சொற்றொடர் கோர்வையாக பேசுவது என்பதெல்லாம் இல்லை என்பது என் பழக்கம்.. என் எண்ணங்கள் மிகவும் வேகமானவை.. புல்லட் ரயிலில் உள்ளே இருக்கும் ஈயை உங்களால் பார்க்க முடியும் ஆனால் வெளியே தெரியும் மரத்தையோ மனிதனையோ உங்களால் பார்க்க முடியாது என் எண்ணமானது எப்படிப்பட்டது என்பதை என்னாலேயே கணிக்க முடியாது.. உங்களால் மட்டும் முடியுமா என்ன..


என்ன இருந்தாலும் அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது... அந்த பொண்ணு யாரையோ காதலிச்சு ஓடிப்போக தயாரா இருந்திருக்கு.. அவளை அனுபவிச்சுட்டு அப்படியே ஏரிக்கரைல தண்ணியில அமுக்கிக் கொன்னுட்டான்.. அந்த பொண்ணுக்கு ஏதோ மன நோயாம்.. தனியாவே பேசுமாம்.. அழுவுமாம்.. அவளுக்கு பணப் பிரச்சனை... படிக்கிறதுக்கு லோன் எடுத்து கட்ட முடியல.. ஊரை விட்டு ஓடிப்போக ப்ளான் பண்ணிருக்கு.. அதுக்குள்ளே அந்த பேங்க்காரனுங்களே ஆளை வெச்சு.. என்ன என்னவோ கதைகள் என் மயூராவின் மரணத்தைப் பற்றி.. படிக்கவே அருவெறுப்பாக.. ச்சே.. என்ன ஜென்மங்கள்.. இவர்களா மனிதர்கள்.. எவ்வளவு கீழான எண்ணங்கள்..
 
Last edited:
New member
Joined
Dec 2, 2024
Messages
3
எண்ணங்களுக்கு வலிமை இருப்பது உண்மை.. யாரையாவது நீங்கள் மனதில் நினைத்து உண்மையாக அவர்களை பற்றி சிந்தித்தால் அவர்களிடம் இருந்து உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்போ குறுஞ்செய்தியோ அல்லது அவர்களே நேரிலோ கூட வருவார்கள் என்று நான் படித்திருக்கிறேன்.. மயூராவுக்கும் எனக்கும் அப்படி நிறைய முறை நடந்து இருக்கிறது.. நான் நினைப்பேன் அவள் வருவாள்.. பிரபஞ்சமே ஒரு எண்ணக்குவியல் என்பது உண்மை தானே.. அடுத்த பத்தியை என்ன வார்த்தை கொண்டு ஆரம்பிக்கலாம் என்று நான் நினைப்பதை விட இந்த பத்தியை எந்த வார்த்தை கொண்டு நான் முடிக்கப் போகிறேன் என்பதில் தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா..


இல்லை.. இல்லவே இல்லை.. மயூராவை என் நினைவுகளில் இருந்து அழிப்பது சாத்தியமா இல்லவே இல்லை... அணுவை அழிக்க முடியுமா.. பிளக்க முடியும்.. ஆனால் அழிக்க முடியாது.. என்னை அணு அணுவாய் பிளந்தாலும் அவள் நினைவை என்னை விட்டு அழிக்க முடியாது... எவனாலும் முடியாது..


முடியாது என்று தெரிந்தே இந்த கதையை எழுதத் தொடங்கினேன் ஆனால் என்னாலும் எழுத முடியும் என்று எனக்கு கற்றுக் கொடுத்ததே என் மயூரா தான்.. என் மயூரா என் எண்ணத்தில் விதையாய் விழுந்து என் எழுத்தில் கதையாய் விரிந்தவள்.. அவளை நீங்கள் பார்த்திருக்க முடியாது.. பேசியிருக்க முடியாது.. அவள் எழுத்தின் உருவத்தில் அவளின் உருவத்தை எனக்குள் வரைந்திருக்கிறேன்... அவள் சொற்களை மாலையாய் கோர்த்து கவிதையாய் கொட்டியதை வாரி என்னுள் சேமித்து வைத்திருக்கிறேன்.. அவளை கொன்றது யார் என்று எனக்கு தெரியும்.. என்னை தடுத்து நிறுத்த.....

சார்.. சார்.. திடீர்னு பவர் ஷட் டவுன் ஆய்டுச்சு.. ஜெனரேட்டரும் வேலை செய்யல... என்னன்னே தெரியல.. கொஞ்சம் சீக்கிரம் ஆளுங்களை அனுப்புங்க சார்..

போனில் பேசி விட்டு வைத்தான் கிஷோர்.. பெருங்களத்தூரில் அந்த ஐடி நிறுவனத்தின் எட்டாவது மாடியில் இருந்து கொண்டு ஜன்னலை திறந்து விட்டான்.. காற்று சிலு சிலுவென்று முகத்தில் அடித்தது.. கீழே ஏரிக்கு அருகில் தூரத்தில் ஒரு கார் வெளிச்சம்..

அவனுடைய லேட்டஸ்ட் சேம்சங் கேமராவை ஜூம் செய்து பார்த்தான் கிஷோர்.. ஒரு பெண்ணை இரண்டு இளைஞர்கள் காரிலிருந்து கீழே தள்ளினர்... கிஷோர் அதை வீடியோ எடுக்க ஆரம்பித்தான்.. அவர்கள் அவளை கொன்று ஏரியில் வீசி விட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்..

கிஷோருக்கு வியர்த்து ஊற்றியது.. அடுத்த நொடி விளக்குகள் எரிந்தது.. பவர் திரும்பியிருந்தது...

எடுத்த வீடியோவை என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தான்.. யாரைக் கேட்பது என்று குழம்பினான். மூன்றாம் நாள் இரவு சிறிது நேரம் யோசித்துவிட்டு அவன் லேப்டாப் முன்பு சென்று அமர்ந்தான்.

கடந்த இரண்டு வருடமாக அவனுக்கு கை கொடுப்பது இந்த புதிய A.I.தொழில்நுட்பம் தான்.. சின்ன சின்ன மெயில் அனுப்புவதிலிருந்து அவனுக்கு assist பண்ணும் புதிய chatbot தான் அது..

ஹாய் கெவின், எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்..

ஹாய் கிஷோர், என்ன பண்ணனும் சொல்லுங்க..

கிஷோர் வீடியோவை அப்லோட் செய்தான்..

இது மாதிரி சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் எனக்கு அனுப்புவது தவறு.. உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.. எச்சரிக்கை..

இல்லை இது சித்தரிக்கப்பட்டது இல்லை.. இந்த வீடியோவை நான்தான் எடுத்தேன்.. ஒரு பொண்ணை என் கண்ணு முன்னாடியே..

பாவம் யார் இந்த பெண்..

யாரோ பெயர் மயூராவோ மந்திராவோ என்னவோ..

சரி விடுங்கள்.. இப்போது நான் என்ன உதவி செய்ய வேண்டும்..

இப்போ நான் என்ன பண்ணனும்.. போலீஸ்கிட்டே போக பயமா இருக்கு.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. மனசுல நிம்மதி இல்லை.. ஒரு மாதிரி வாந்தி வர மாதிரி இருக்கு..

வாந்தி வருவது போல் இருந்தால் சிறிது எலுமிச்சம்பழம் கலந்த சாறை எடுத்து..

ஸ்டாப்.. என் சூழ்நிலையை புரிஞ்சுக்கோ..

உங்களுக்கு நான் ஒரு யோசனை கூறவா..

சொல்லு..

கண்களை மூடி கீழே நான் உங்களுக்காக பிரத்யேகமாக கம்போஸ் செய்து கொடுத்துள்ள ஆடியோவை ப்ளே செய்து கேட்கவும்.. அந்த இசை அலைவரிசை உங்களை அமைதிப்படுத்தும்.. மனதை ஒருநிலைப்படுத்தி 3 நிமிடங்கள் அதை கேட்கவும்..

கிஷோர் கண்களை மூடி கேட்டான்..

மூன்று நிமிடங்கள் கழித்து,

கிஷோரின் மொபைல் சிணுங்கியது.. கண்களை திறந்து மொபைலை எடுத்தான்.

ஹலோ..

சார்.. food delivery வந்திருக்கேன் சார். உங்க அப்பார்ட்மெண்ட் கீழே தான் இருக்கேன்..

சாரி ராங் நம்பர்..

சார்.. நீங்க கிஷோர் தானே..

இல்லை கெவின்..

சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

முற்றும்..
 
Last edited:
Member
Joined
Sep 3, 2024
Messages
31
கதையின் போக்கு என்னவென்றே புரியவில்லை சகி. கெவின் & கிஷோர் யாரு? எதுக்கு எல்லா வரியின் முடிவிலும் இரண்டு புள்ளிகள் (..) வச்சிருக்கீங்க. போட்டியில் வெற வாழ்த்துகள்!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
மயூரா மந்திரமானவள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ராகா 💐 💐 💐
 
Top