• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
“நீ வாசலுக்கும், வீட்டுக்கும் நடக்காமல் உள்ளே வந்து உட்காரு. அவங்க பஸ்ஸை விட்டு இறங்கினதும் உங்க அக்கா நமக்குக் கால் பண்ணுவா” என்று தன் சின்ன மகளைக் கடிந்து கொண்டார் கலைவிழி.

“சரி ம்மா” என்று அவரது அதட்டலுக்குப் பிறகு வாசலுக்குச் செல்லவில்லை. ஆனால், அங்கே தன் பார்வையைப் பதித்திருந்தாள் விதுலா.

இரண்டு வருடத்திற்கு முன் நிகழ்ந்த, அவர்களது குடும்பத் தலைவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது ஓய்வூதியப் பணத்தை வைத்து, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அன்னை கலைவிழி மற்றும் அவரது இரண்டு மகள்களான, விஷாகா மற்றும் விதுலா.

அதேபோல், தன்னுடைய முதுகலைப் படிப்பை முடித்தவுடன், வேலை தேடிக் கொண்ட விஷாகா, தனது சம்பளத்தைத் தங்கையின் படிப்பிற்குச் செலவழித்தாள்.

இப்படியாக சில வருடங்கள் கடந்த பின்னர், தன் மூத்த மகள் அவளது வேலையில் அடுத்த நிலைக்கு உயரவும், அவளுக்கு வரன் பார்க்க முடிவெடுத்து இருப்பதாக மகள்கள் இருவரிடமும் மொழிந்தார் கலைவிழி.

அதைக் கேட்ட விஷாகா,”விதுவோட படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் தானே இருக்கு ம்மா. அதுக்கு அடுத்த வருஷம் எனக்குக் கல்யாணத்துக்குப் பாருங்க” என்று அன்னையிடம் உரைத்தாள்.

“இப்போ இருந்து பார்த்தால் தான் ஒரு வருஷத்தில் உனக்குக் கல்யாணத்தை முடிக்க முடியும் விஷூ. நீ அவளோட படிப்புச் செலவைப் பார்த்த வரைக்கும் போதும். இதுக்கு அப்பறம் நான் பார்த்துக்கிறேன். நீ கல்யாணம் செய்துக்கறதுக்குத் தயாரா இருக்கியான்னு மட்டும் சொல்லு?” என்று வினவிய தாயிடம்,

“நான் தயார் தான் ம்மா. நீங்க எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வச்சாலும் ஓகே தான். ஆனால்…” என்றவளிடம்,

“உனக்குச் சம்மதம் தானே க்கா? அப்பறம் எதுக்கு என் படிப்பைப் பத்திக் கவலைப்பட்ற? எனக்கும் நீ கல்யாணம் செஞ்சுக்கனும்னு ஆசையாக இருக்கு” என்று தன் விருப்பத்தையும் தமக்கையிடம் கூறினாள் விதுலா.

விஷாகா,“சரி. நீங்க அதைப் பார்த்துப்பீங்கன்னு வச்சுக்கோ. உங்க ரெண்டு பேரைத் தனியாக விட்டுட்டு நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணிட்டுப் போக முடியும்?”

“நாங்க ஏன் தனியாக இருக்கப் போறோம். அம்மாவும், பொண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருந்துப்போம்” என்றார் கலைவிழி.

“ஆமா க்கா. இதான் உன்னைக் கல்யாணம் செய்துக்க முடியாமல் தடுக்குதுன்னா, இப்போ சொல்றேன் கேட்டுக்கோ… அப்பா இறந்ததுக்கு அப்பறம் நாம மூனு பேருமாகச் சேர்ந்து எத்தனையோ விஷயங்களை கடந்து வந்திருக்கோம். அது கொடுத்த தைரியம் நிறையவே இருக்கு! அப்படியிருக்கும் போது, நீ எங்களை நினைச்சுக் கவலைப்படாமல் சந்தோஷமாக மேரேஜ் செய்துக்கோ விஷூ க்கா” என்று தன்னிடம் உறுதியாக எடுத்துரைத்த தங்கையைப் பெருமையாகப் பார்த்தாள் விஷாகா.

“அவ சொன்னதைத் தான் சொல்ல வந்தேன். நீ உன்னோட சம்மதத்தை மட்டும் சொல்லு. போதும்” என்று மூத்த மகளுக்கு அறிவுறுத்தினார் கலைவிழி.

தங்கையின் பேச்சில் இருந்த தெளிவும், தாயின் உறுதியும் விஷாகாவைத் திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல வைத்தது.

சரியாக அவளது தங்கையின் படிப்பு இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது அவளுக்குத் திருமணத்திற்குக் கூடி வந்தது.

விஷாகாவிற்குப் பார்த்த மாப்பிள்ளையான பரணி, ஒரு வேதியியல் பேராசிரியர் ஆவான்.

அவனது பெற்றோரும் மகிழ்ச்சியாக விஷாகாவைத் தங்களது மருமகளாக ஏற்றுக் கொண்டார்கள்.

அதேபோல், பரணியின் அணுகுமுறையை அவ்வப்போது அவதானித்த கலைவிழியும், விதுலாவும் மூத்தவளின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு மணமுடித்து வைத்தனர்.


தன்னுடைய மாமியார் வீடு இருக்கும் கோயம்புத்தூருக்குச் செல்லும் போது தன் தாய் மற்றும் தங்கையின் பிரிவைத் தாளாமல் கண்ணீர் உகுத்த விஷாகாவிற்கு, பல அறிவுரைகளைக் கூறிச் சமாதானம் செய்து கணவனுடன் அனுப்பி வைத்தார்கள் கலைவிழி மற்றும் விதுலா.

அவர்களுக்கு உறுதி அளித்ததைப் போலவே விஷாகாவை நன்முறையில் பார்த்துக் கொண்டார்கள் பரணியும், அவனது பெற்றோரும்.

இவ்வாறாக, அவர்கள் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடக்கப் போகும் நிலையில், இளைய மகளுடன் புகுந்த வீட்டிற்குச் சென்று மூத்தவளையும், அவளது கணவனையும் தங்கள் இல்லத்திற்கு மறு வீட்டிற்கு வருமாறு அழைத்து விட்டு வந்தார் கலைவிழி.

அதற்கு இணங்கி, பரணியும், விஷாகாவும் அங்கே பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.

அதற்கு முதல் நாளே, தன் தாயிடம்,”அக்காவுக்குப் பிடிச்ச சாப்பாடு தான் செய்யனும் ம்மா!” என்று அவரிடம் கறாராக கூறி விட்டாள் விதுலா.

அதனால், அதற்கு மறுநாள் காலையில் துரிதமாகவே சமையல் வேலையைத் தொடங்கி விட்ட கலைவிழியோ,

இப்போது, அவர்கள் தங்கள் வீட்டை அடைய இன்னும் சில நிமிடங்களே உள்ளதால் வாசலுக்கும், வீட்டிற்கும் நடை போட்டுக் கொண்டிருந்த சின்ன மகளைத் தான் அதட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்தார்.

அப்போது, விதுலாவின் செல்பேசிக்குக் கால் செய்து, ஆட்டோவில் வந்து கொண்டிருப்பதாக கூறி விட்டு வருவதாக கூறி விட்டு வைத்தாள் விஷாகா.

“ம்மா! அக்காவும், மாமாவும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவாங்க” என்று அறிவிப்பு கொடுக்க,

“நல்லவேளை அவங்க வர்ற நேரத்துக்கு முன்னதாகவே சமையலை முடிச்சிட்டேன்” என்று ஆசுவாசமாக கூறினார் கலைவிழி.
 
Last edited:
சில நிமிடங்கள் கழிந்த பிறகு, தங்கள் வீட்டிற்கு முன் வந்து நின்ற ஆட்டோவைக் கண்டதும் உடனே வெளியே சென்ற விதுலா, அதிலிருந்து இறங்கியவர்களிடம்,”ஹாய் அக்கா! வாங்க மாமா!” என்று குதூகலமாக உரைத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்லவும்,

தன் மகளையும், மாப்பிள்ளையையும் பார்த்தவுடன்,”வா விஷூ, வாங்க மாப்பிள்ளை!” என்று அவர்களை அமர வசதி செய்து கொடுத்ததும்,

விஷாகா,“நல்லா இருக்கீங்களா ம்மா? விது! எப்படி இருக்கே?”, என அவளும்,

பரணி,”எப்படி இருக்கீங்க அத்தை? நல்லா இருக்கியா ம்மா?”, என அவனும் விசாரித்தான்.

“நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம்!” என்று பதிலளித்தார்கள் இருவரும்.

அவர்களுக்குக் குடிநீரைக் கொண்டு வந்து தந்தாள் விதுலா.

அதை வாங்கிப் பருகிய விஷாகா மற்றும் பரணியிடம்,”இவ காலு ரெண்டும் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கே இங்கே சுத்திட்டே இருந்துச்சு. நீங்க வந்ததுக்கு அப்பறம் தான் நிலையாக நிற்கிறா!” என்றார் கலைவிழி.

அதைக் கேட்டதும், எப்போதும் போல் தங்கையின் அன்பில் நெகிழ்ந்து அவளைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டாள் விஷாகா.

பரணியும் புன்னகை புரியத் தவறவில்லை.

“டிரஸ் மாத்திட்டு வாங்க. சாப்பிடலாம்” என அவர்களை அனுப்பி வைத்து விட்டு உணவுகளைப் பரிமாறும் விதமாக வேறு பாத்திரங்களில் மாற்றினார் கலைவிழி.

உடை மாற்றி வந்ததும், அவருக்கு உதவி செய்த விதுலாவிடம்,”நீயும், அத்தையும் எங்க கூடவே சேர்ந்து சாப்பிடுங்க ம்மா” என்றான் பரணி.

உடனே அதற்குச் சரியென்று கூறி விட்டு, அவர்களுடன் சேர்ந்து தங்களுக்கும் உணவைப் பரிமாறிக் கொண்டார்கள் கலைவிழி மற்றும் விதுலா.

அதன் பின்னர், தன் மற்றும் தனது கணவனின் தேவையறிந்து உணவை வைத்து, தாயையும், தங்கையையும் கவனித்துக் கொண்டே தன் சாப்பாட்டையும் உண்டு முடித்தாள் விஷாகா.

தங்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து தமக்கையின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் விதுலா.

இந்த வீட்டில் இருந்த வரையில் எப்படி இருந்தாளோ, அதே போலத் தான் இப்போதும் நடந்து கொண்டாள் விஷாகா.

அதே மாதிரி, தன் மாப்பிள்ளைப் பவிசைக் காட்டாமல் இயல்பாக வளைய வந்தான் அவளது கணவன் பரணி.

மதிய உணவை முடித்து விட்டு அலுப்பில் உறங்கி எழுந்ததும், தங்களது மாலை நேரத் தேநீரை, விஷாகாவும், அவளது கணவரும் எழுவதற்கு முன்னரே குடித்திருந்தார்கள் விதுலா மற்றும் கலைவிழி.

தங்கள் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த விஷாகாவிடம்,”டீ போடவா?” என்று எழுந்தார் அன்னை.

“இல்லை ம்மா. நான் தானே எப்பவும் எனக்குப் போட்டுக்குவேன்? அப்பறம் என்ன? நீங்க உட்காருங்க”என்று சமையலறைக்குப் போய்த் தேநீர்த் தயாரித்தாள்.

அவளது இயல்பு விதுலாவிற்கும், கலைவிழிக்கும் சிறிய ஆச்சரியத்தைக் கொடுத்தது.

ஏனெனில், அவள் விருந்திற்கு வருவதற்கு முன்பு ஒருநாள், பக்கத்து வீட்டுப் பெண்ணோ,”கல்யாணம் ஆகுற வரைக்கும் தான் என் வீடு, என் அம்மா, தங்கச்சி, தம்பின்னு நம்ம பின்னால் சுத்திட்டுத் திரிவாங்க! ஆனால், கழுத்தில் தாலி ஏறிட்டா, அடுத்த நிமிஷத்தில் இருந்து புருஷனும், அவன் வீட்டாளுங்க மட்டும் தான் கண்ணுக்குத் தெரிவாங்க! ஒவ்வொரு விசேஷத்துக்கும் வா, வா - ன்னு இவளைக் கூப்பிட்டே எனக்குத் தாவு தீர்ந்திடும் கலை! உடம்பு சரியில்லைன்னா கூட எட்டிப் பார்க்க மாட்டா! அப்படியே வந்தாலும் கூட எந்த வேலையும் பார்க்காமல் தான் இருப்பா. உன்னோட பொண்ணு கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் சொல்லி அனுப்பிரு. அப்போ தான், எப்போதாவது கூட வந்து போயிட்டு இருப்பாங்க!”என்று அவர் தன் தாயிடம் பேசியதை தானும் கேட்டிருந்தாள் விதுலா.

அதற்கு,”கல்யாணம் பண்ணி வச்சிட்டா அவங்க வாழ்க்கையைப் பார்க்க விட்ரனும் க்கா. உடனே நம்ம வீட்டுக்கு வந்து, போகனும்ன்னு கட்டாயப்படுத்தவோ, எதிர்பார்க்கவோ கூடாது!” என அவருக்கு அறிவுரை கூறினார் கலைவிழி.

“அவ தானே க்கா எல்லாத்தையும் எடுத்துச் செய்யனும்? அப்போ வந்து, போனால் தானே முடியும்?” எனவும்,

“நீங்க அப்படி எதிர்பார்க்கிறது தான் தப்பு” என்றவரிடம்,

“என் பொண்ணு கிட்ட நான் எதிர்பார்க்கக் கூடாதா கலை?”

“தாராளமாக எதிர்பாருங்க க்கா” என்று அதற்கு மேல் பேசாமல் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்குள் வந்தார்.

அவர்கள் பேசியதை தானும் கேட்டு விட்டதை தாயிடம் காட்டிக் கொள்ளவில்லை விதுலா.

ஆனால், தற்போது, தமக்கையையும், அவளது கணவனையும் கவனித்துக் கொண்டு இருந்தவளுக்கு, அந்தப் பக்கத்து வீட்டு அக்காவின் வார்த்தைகள் மனக்கண்ணில் வந்து போனது.

அதற்கு நேர்மாறாகத் தான், விஷாகாவும், பரணியும் நடந்து கொண்டிருந்தனர்.

அன்றிரவு உணவை முடித்து, உறங்கி எழுந்ததும், காலையில்”நாங்க குளிச்சிட்டுக் கடைக்குப் போயிட்டு வர்றோம்” என்றவர்கள்,

விஷாகா,“உனக்கு என்ன வேணும் விது?”

“எனக்குச் சாக்லேட் போதும் க்கா” என்றாள் தங்கை.

“சரி. வாங்கிட்டு வர்றோம்” என்று கூறிக் கடைக்குப் போனார்கள்.

அவர்கள் திரும்பி வருவதற்கு வெகு நேரம் ஆகியது.

வீட்டிற்கு வந்தவர்கள், விதுலாவிடம் ஒரு பெரிய சாக்லேட்டைக் கொடுத்து விட்டுக் கலைவிழியிடம் பை நிறைய பழங்களைக் கொடுத்தனர்.

“உனக்குப் பிடிச்ச சாக்லேட்டைத் தேடுனோம்! கிடைக்கவே இல்லை விது. அதான், லேட் ஆயிடுச்சு” என்றாள் விஷாகா.

அதை ஆமோதித்து,”ஆமாம் மா. அதான் வேற வாங்கிட்டு வர வேண்டியதாகப் போச்சு” என்று கூறினான் பரணி.

“பரவாயில்லை விடுங்க. எனக்கு இதுவே போதும்” என்றவள், அப்போதே அந்தச் சாக்லேட்டை உண்ண ஆரம்பித்தாள் விதுலா.

கலைவிழி,“எதுக்கு இவ்வளவு பழம் வாங்கிட்டு வந்தீங்க?”

“இவளுக்கு ஹீமோகுளோபின் கம்மியா இருக்குன்னுக் கால் பேசினப்போ சொன்னீங்கள்ல? அதான், வாங்கிட்டு வந்தோம். ஒழுங்காக சாப்பிட வைங்க” என அவரிடம் உரைத்தாள் விஷாகா.

அன்றைய மாலையே அவளும், பரணியும் ஊருக்குக் கிளம்ப உள்ளதால் வேறு எந்த வெளியே செல்லும் திட்டமும் போடவில்லை அவர்கள்.

மாலை நேரம் ஐந்து மணியளவில் கிளம்பிய தமக்கையிடம்,”சாரி க்கா” என்றாள் விதுலா.

அவளைக் குழப்பமாகப் பார்த்து,”ஏய் என்ன விது? எதுக்கு சாரி கேட்கிற?” என்று வினவ,

“இல்லை க்கா. சொல்லனும்னு தோனுச்சு!” என்றவுடன்,

அவளிடம் மேலும் எதையும் துருவிக் கேட்காமல்,”அதெல்லாம் எதுவும் இல்லை. நீ நல்லா படி. அம்மாவை நல்லா பார்த்துக்கோ” என்று கூறியவள், அவளது தலையைத் தடவிக் கொடுத்து விட்டுத்,

தாயிடம்,”நாங்கப் போயிட்டு வர்றோம் மா” என்று கூறி கணவனுடன் சேர்ந்து அவரின் பாதம் பணிந்து எழுந்தாள் விஷாகா.

“இதே போல எப்பவும் சந்தோஷமாகவும், அன்னியோன்யமாகவும் இருக்கனும்” என்று அவர்களை ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்த கலைவிழி,

“நீ எதுக்குடி அவகிட்டே சாரி கேட்ட?” என்று மகளிடம் கேட்க,

விதுலா,”நம்மப் பக்கத்து வீட்டு அக்கா உங்ககிட்ட பேசியதை நானும் கேட்டேன் ம்மா” என்றவுடனேயே அந்த மன்னிப்பு எதற்காக என்று அவருக்குப் புரிந்து விட்டது.

“அவங்க இப்படித் தான் எதையாவது புலம்பிட்டு இருப்பாங்க. அதை வச்சு உன் அக்காவைப் பத்தி நீ இப்படி நினைப்பியா? இனிமேல் இந்த மாதிரி மனசைப் போட்டுக் குழப்பி, சஞ்சலப்பட்டுட்டு இருக்காதே! அவசரப்பட்டு அவ கிட்டேயும் எதையும் உளறிடாதே!” என்று மகளுக்கு அறிவுறுத்தினார் கலைவிழி.

தாங்கள் மூவரும் ஒன்றாக இருந்த போது ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துப் புரிந்து கொண்டு சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொண்டு இருந்ததைப் போல இப்போதும் நிச்சயமாக இருப்போம் என்றும்,

அதே மாதிரி, மற்றவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் இவ்வாறாக சந்தேகப்படுவது முற்றிலும் தவறு என்றும், தமக்கை ஒருபோதும் மாறவில்லை.

ஆனாலும், மாற்றம் ஒன்றே மாறாதது தானே! அது நல்ல மாற்றங்களாக இருப்பதிலும் தவறு இல்லையே?

தன் அக்காவின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழும் போது அதை எண்ணி மகிழ்ச்சி தான் அடைய வேண்டும் என்ற தெளிவிற்கு வந்தவள், தன் அக்காவிடம் மற்றுமொரு முறை மானசீகமாகவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் விதுலா.

மனதில் தோன்றிய சிறு சஞ்சலம், எப்படிப்பட்ட எதிர்மறையான மாற்றத்தைக் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும், அதை வாய் விட்டுச் சொல்லி இருந்தால் இன்னும் மோசமாகிப் போயிருக்கும் என்பதையும் உணர்ந்து, எதையும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்!


- சுபம்
 

Attachments

  • IMG_20241220_113713.jpg
    IMG_20241220_113713.jpg
    441.7 KB · Views: 0
Last edited:
மாற்றம் ஒன்றே மாறாதது! சிறு பொறிதான் குடும்பத்தை பிளவுபடுத்தும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ஷாலினி 💐 💐 💐
தங்களது அருமையான வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள் சகி 🤩🙏
 
Top