• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
2௦


“என்ன சொல்லச் சொல்ற நதி?”

“ப்ச்... விளையாடுற நேரம் கிடையாதுங்க. எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க. இந்த டைம் நம்மளை யாராவது தனியா பார்த்தா தப்பாகிரும்.”

“என்ன தப்பாகும் நட்சத்திரா? நமக்குள்ள குறைஞ்சது ஐந்தடி இடைவெளியிருக்கு. காதல் கீதல்னு சொல்லி கட்டிப்பிடிச்சிட்டு நிற்கலையே” என்றதும் நட்சத்திரா அவனை முறைக்க, “என்ன முறைப்பு உண்மையைத்தான சொன்னேன்.”

“ஷப்பா! எது எப்படியோ, பேச வந்ததைச் சொல்லுங்க? கீழ என்னைத் தேடப்போறாங்க.”

“முதல்ல இந்த தண்ணீரைக் குடி. அப்பதான் டென்ஷன் குறைஞ்சி நீ நிதானமாவ.”

“சந்துரு ப்ளீஸ். உங்க நேம் ஸ்பாய்ல் ஆகும். அது உங்களுக்கு நல்லதில்ல. காலையில் கல்யாணத்தை வச்சிட்டு இப்படிலாம் பண்ணிக்காதீங்க.”

‘சந்துரு’ என்ற பெயர் அவள் வாயிலிருந்த வந்ததில் எழுந்த சந்தோஷத்தை மறைத்து, “அப்ப உன் நேம் ஸ்பாய்ல் ஆகாதா?” என்றான்.

“நீங்க வேணும்னே பேச்சை வளர்க்கிற மாதிரி இருக்கு. பேசுறதுக்கு எதவும் இல்லன்னா நான் கிளம்புறேன்” என்று நடக்க ஆரம்பிக்க, “ஆ” என்ற அலறலில் வேகமாகத் திரும்பியவள் அவனருகில் வர, கையில் இரத்தம் வழிய வலியைப் பொறுத்து நின்றிருந்தான் அரிச்சந்திரன்.

அதனைக் கண்டதும் பயந்து பதற்றத்தில் கண்கள் நீரைச் சுமக்க, “என்னாச்சிங்க? ஐயோ! ஏன் இப்படி?” அவன் வலிதனை தான் சுமக்கப் போராடினாளோ!

அமைதியாய் அவளை! அவளின் பரிதவிப்பை! அவளறியாமல் வெளிப்படுத்தும் காதலை! என முழுதாக தனக்குள் அவளை சுவாசித்தான்.

சில நொடி தடுமாற்றத்திற்குப் பின் அவளுக்குக் கொடுத்த மீதி தண்ணீரை எடுத்து இரத்தத்தைக் கழுவி, தன்னிடமிருந்த கைக்குட்டையை வைத்துக் கட்ட, “என்மேல் ஏன் இத்தனை கரிசனம் நதி?” ஆழ்ந்து ஒலித்தது அவனின் குரல்.

“ஏன்னா, நீங்க என் சந்துரு. நான் கரிசனம் காட்டாம யார் காட்டுவாங்க” என்று அவன் முகம் காணாது வேகத்துடன் உரைத்தாள்.

அவள் பேசும் உண்மையை அவளே உணராமல் போக, அதை முழுதாக உணர்ந்தவனோ, அவள் தலையை வருட எழுந்த கையை அடக்கி நின்று கொண்டிருந்தான்.

கட்டு போட்டு நிமிர்ந்து அவனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவள், அவன் கண்கள் காட்டிய காதல்தனில் சற்று தடுமாறித்தான் போனாளோ! பிடித்த அவன் கைகள் தன்னுள்ளிருக்க, இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் தழுவித் தடுமாறி மாறாதிருந்தது.

“வாவ்! செம ரொமாண்டிக் சீன்” என்ற கை தட்டலுடன் கேட்ட குரலில் இருவரும் திரும்ப, அங்கு நதீரா என்று தன்னை அறிமுகப்படுத்தியவள் நின்றிருந்தாள்.

“வெல் மிஸ்டர்.அர்ஸ் தேங்க்யூ சோ மச். உங்க சர்ப்ரைஸ் திருமணம் சூப்பர். என்னோடன்னு சொன்னாங்களே அதெல்லாம் பொய்யா?”

“ந...நதீரா நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்ல. சந்துருக்கு கையில அடிபட்டிருக்கு. அதான்...” என்று நட்சத்திரா தடுமாற,

“சந்துரு! ம்... குட். அப்புறம் ம்... எல்லாத்துக்கும் குட் பை அர்ஸ்” என்றாளவள்.

“அச்சோ! ஏன்ங்க. நீங்க தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க. சந்துரு சொல்லுங்களேன்.” தன்னால் அவனின் வாழ்க்கை கேள்விக்குறியாவதில் விருப்பமில்லை அவளுக்கு. அவனுக்காகத் தன் காதலையே விட்டுக் கொடுத்தவளாயிற்றே!

நட்சத்திராவின் தவிப்பைக் குறைக்கும் பொருட்டு அவன் பேச வாய் திறக்க, “எதுவும் பேசாதீங்க அர்ஸ். யா அல்லாஹ்! இப்பவே உங்களைத் தெரிஞ்சதே. என்னைப் பேசி கன்வின்ஸ் பண்ண நினைக்காதீங்க அர்ஸ். அப்புறம் நான் பொல்லாதவளாகிருவேன்.”

“நதீரா ஏன் சின்ன விஷயத்தைப் பெருசாக்குறீங்க? சந்துரு உங்களை... உங்களை மட்டும்தான் காதலிக்கிறார். நீங்கத் தப்பா...”

“நீ அடிக்கடி நாங்க தப்பு பண்ணலன்னு சொல்றப்பதான் இன்னுமே சந்தேகம் வருது” என்றதும் இடையிட வந்த அரிச்சந்திரனை கை நீட்டித் தடுத்து, “நீங்க பேசக்கூடாது சொன்னேன் அர்ஸ். நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது. நான் கிளம்புறேன்” என்றதும் இருவரும் அழைக்க நிற்காமல் சென்றுவிட்டாள்.

நட்சத்திரா தொய்ந்து போய் சுவற்றில் சாய, அரிச்சந்திரன் அருகிலிருக்கும் நட்சத்திராவைத் தேற்ற முடியாமல் வானத்து நட்சத்திரத்தைக் காண, அந்தோ பரிதாபம் அந்நேரம் ஜில்லென லேசான மழைத்துளிகள் விழுந்து வானம் வெற்றிடமாய் காட்சியளிக்க, வானில் இடியும் மின்னலும் இலவச இணைப்பானதோ!

எதையும் உணராமல், “சாரிங்க” என்றாள்.

“நீ எதுக்கு சாரி சொல்ற?”

“இல்ல இப்படி நடக்கும்னு தெரியாது. நீங்க அவங்க மேல எவ்வளவு உயிரா இருக்கீங்க. அதைப் புரிஞ்சிக்காம போயிட்டாங்க. எனக்கு அழுகை அழுகையா வருது. எல்லாம் என்னால்தான். நான் இங்க வந்திருக்கவே கூடாது.”

“நதி உன்னாலன்னு ஏன் பழியை உன்மேல தூக்கிப் போட்டுக்கற? காதல் எதையும் சந்தேகப்படாது. கையைப் பிடிச்சதுக்கே சந்தேகப்பட்டா அது காதல் இல்லை.”

“ஓவர் பொஸஸிவ் இருந்தால்கூட அப்படிதான் பிஹேவ் பண்ணுவாங்க.”

‘அப்ப நீ ஏன்டி என்மேல பொஸஸிவா இல்ல. அப்படி இருந்திருந்தா என்னை விட்டுக்கொடுத்திருக்க மாட்ட. கொஞ்சம் லேட்டானாலும் நானும் உன்னை... உன் அன்பைப் புரிஞ்சிருந்திருப்பேன். நீ என்னடான்னா, என்னை என் காதலியோட சேர்த்து வைக்கச் சொல்லி சத்தியமெல்லாம் வாங்குற. போ உன் தியாகத்துக்கு மெரினாவுல சிலை வைக்கிறாங்களாம்! ப்ச்.. போடி!’ சத்தமாகக் கத்தித் தன்னை அவளுக்கு புரியவைக்கத் தோன்றிய மனதை அடக்கி,

“அதிகமான பொஸஸிவ் குணம் கூட ஒரு வகையில் சந்தேகம்தான் நதி. அதனால் எத்தனை பேர் கோர்ட் படியேறி வாழ்க்கையை இழந்திருக்காங்க தெரியுமா?”

“அதுக்காக அப்படியே விடப்போறீங்களா?”

“விடுமா. எங்க போயிரப்போறா. காலையில் வந்திருவா. நான் விரும்பின பொண்ணோட மட்டும்தான் என் கல்யாணம் நடக்கும். உனக்கு நான் ப்ராமிஸ் பண்றேன்” என்று அவள் கைபிடித்து சத்தியம் செய்தான்.

சட்டென்று அவன் மேல் ஏக்கமாக பதிந்த பார்வை ஏமாற்றத்தில் கவிழ்ந்ததோ! அவனைப் பார்க்காமலேயே, “சாரலடிக்குது. நான் கீழ போறேன். நீங்களும் மழையில் நனையாம ரூம்கு போங்க” என நிற்காமல் செல்ல, புன்னகை மட்டுமே அவனிடம்.

தான் இருக்கும் அடுக்குமாடிக் குடியிறுப்பில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான் சித்தார்த். நட்சத்திராவைப் பற்றிய தேடலில் அவள் இருப்பிடம் முதல், அவளின் திருமணம் வரை அறிந்திருந்தான். முதலில் பேசிய திருமணம் மணமகனின் இறப்பால் நின்று போனதால், சற்று அலட்சியமாகவே இருந்தான். ஆனால், மறுபடியும் அவளின் திருமணம் என கேள்விப்பட்டதும் யாருமறியாமல் சில ஏற்பாடுகள் செய்திருந்தான்.

பூங்காவில் அவளுடன் அரிச்சந்திரனைப் பார்த்ததும்தான், மாப்பிள்ளை யாரென்று விசாரிக்கத் தோன்றியது. அரிச்சந்திரன்தான் மாப்பிள்ளை என்று தெரிந்த நிமிடம் என்ன செய்வதென்று புரியாத நிலை சித்தார்த்திற்கு. அவனின் சொத்து வழக்கு அவர்களிடமல்லவா கொடுத்திருக்கிறான். எதாவது செய்துவிட்டால்? என்ற பயம் வந்த போதிலும், அரிச்சந்திரனிடம் ஒருமுறை பேசியதில், ‘தொழில் வேறு. குடும்பம் வேறு. குடும்பப் பிரச்சனையை தொழிலில் காட்டமாட்டேன்’ என்றது நினைவு வர, தான் எடுத்த முடிவு சரியென்று தோன்ற, இதோ திருமணத்தை நிறுத்த அனைத்தும் செய்தாகிவிட்டது.

முகூர்த்தம் ஒன்பதிலிருந்து பத்தரை என்பதால் இரவு நடப்பதாய் இருந்த திட்டத்தைப் பகலுக்கு மாற்றினான்.

“சாரி மிஸ்டர்.அர்ஸ் உங்க வாழ்க்கையில வரணும்ன்றது என் எண்ணம் கிடையாது. ஆனா, நீங்க என் வாழ்க்கையில இடையிடுறது தப்புதான? அவள் என் மனைவி! அவளை உங்களுக்கு விட்டுக் கொடுக்கிற அளவு நான் பெருந்தன்மையானவன் கிடையாது. நட்சத்திரா சித்தார்த்திற்கு மட்டுமே! அவள் இல்லாமல் நான் ஊருக்குப் போறதாயில்ல. நாளை முதல் என்னோட இத்தனை வருஷ காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கும்.”

இடையே வெண்மதியின் குரலும் எட்டிப் பார்த்தது. ‘கௌரவத்துக்காக பொண்ணைத் தேடுறான் சார். காதலால் கிடையாது.’ ஏனோ சித்தார்த்தின் நியாய மனசு அவள் சொன்னதை ஒப்புக் கொண்டாலும், சிறு வயதிலிருந்து கௌரவம் என்ற சொல்லே வேதமாய் வளர்ந்தவனுக்கு அது மட்டுமே முக்கியம் என்றாக, வேறு வழியில்லாமல் போனது.

நண்பர்களின், ‘உன் பொண்டாட்டி உன்னை வேண்டாம்னு போயிட்டாளாமே!’ உறவுகளின், ‘என்ன செல்லம் உன் மருமக தாலியைக் கழட்டி தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டாளாமே!’ ஊராரின், ‘உனக்கு இதெல்லாம் தேவைதான். கொஞ்ச நஞ்சமா ஆடுனீங்க’ என்ற அவமானப் பார்வையும் அவனை நிதானமிழக்கச் செய்திருந்தது என்னவோ நிஜம்.

காதலைக் காக்க அரிச்சந்திரனும்! கௌரவம் காக்க சித்தார்த்தும்!

காலை ஐந்து மணிக்கெல்லாம் மண்டபம் பரபரப்பாக. மேளச் சத்தத்துடன் நாதஸ்வர ஓசையும் ஒலித்துக் கொண்டிருந்தது.

சீக்கிரமே குளித்து வந்த மின்னல், நட்சத்திராவையும் குளிக்க அனுப்ப, “அம்மாவைக் கூப்பிடு கொடி” என்றாள்.

“எதுக்குடி முதுகு தேய்ச்சி விடுறதுக்கா? அதுக்கு யசோம்மா எதுக்கு வரணும். நான் எதுக்கு இருக்கேன். வா போகலாம்” என்றாள்.

“தொலைச்சிருவேன்டி. குளின்னு சொன்னா போதுமா, என்னோட ட்ரஸ் வேண்டாமா? அம்மாதான் எல்லாம் எடுத்து வச்சாங்க. போய் வாங்கிட்டு வா.”

“அதுக்கு ஏன் அங்க போகணும்? என்கிட்டதான் உன் ட்ரஸ் இருக்கு. குளிச்சிட்டு வந்து கட்டிக்கோ.” நட்சத்திராவின் தயக்கத்தை உணர்ந்து “யாரும் வராமல் காவல் இருக்கேன் தாயே!” என்றாள்.

குளியலறை சென்று குளித்து வந்தவள் மின்னல் கொடுத்த புடவையைக் கட்டியபடி, “மயிலு புடவை காஸ்ட்லியா தெரியுதே? அம்மாவும் நானும் போனப்ப இந்தப் புடவையை எடுத்ததா நினைவில்லையே?” என்றாள் யோசனையாய்.

“என் அண்ணன் கல்யாணத்துக்கு, நான் உனக்கு வாங்கிய புடவை இது. இல்ல கட்டமாட்டேன் சொன்னா கொன்னுருவேன்.”

“ம்... எதுக்குக் கொல்லணும்? கட்டிட்டுத்தான இருக்கோம்” என்று முனக,

“நாங்களும் பார்த்துக்கிட்டுதான இருக்கோம்” என்று மின்னலும் பதிலளிக்க,

“ஏய்... ச்சீய்... எருமை தள்ளிப்போ” என விரட்டி புடவையைக் கட்டி முடித்ததும், மின்னல் மடிப்பை சரி செய்யும்பொழுது யசோதாவும், சகுந்தலாவும் சேர்ந்தாற்போல் வந்து, “இப்ப ப்யூட்டி பார்லர்ல இருந்து ஆள் வருவாங்க. நீங்க ரெண்டு பேரும் மேக்கப் பண்ணிக்கோங்க” என்றார்கள்.

நட்சத்திரா ‘தனக்கு ஏன்’ என கேட்க வாய் திறக்கப் போக, “உன் ப்ரண்ட்ஸ் யாரும் வரலையா மின்னல்?” என்றார் சகுந்தலா.

“எனக்கு ப்ரண்ட்னா இவள் மட்டும்தான்மா. மத்தபடி யாருக்கும் சொல்லலை. தன்யா மேம், சுஜய் சாரோட சேர்த்து என்னோட ஒர்க் பண்ற ஜுனியர்ஸ்கும் பத்திரிக்கை வச்சேன். அவங்க மட்டும் வரலாம்” என்றாள் மின்னல் பெண்.

அப்பொழுது அங்கு வந்தவரை அடையாளம் கண்ட நட்சத்திரா. “சித்தி” என்றழைத்து அவர் கைகளைப் பிடித்து, “பார்த்து எவ்வளவு வருஷமாச்சி?” என தன் சந்தோஷத்தைக் காட்டினாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“நல்லாயிருக்கியா நதிமா?”

“நல்லா இருக்கேன் சித்தி. வீட்ல சித்தப்பா, அண்ணா, பாப்பு எல்லாரும் எப்படி இருக்காங்க?”

சில நொடி தயக்கம் வந்த போதும், “நல்லாயிருக்காங்கடா” என்றார்.

“என்ன எல்லாரும் சர்ப்ரைஸ் கொடுக்குறீங்க? இந்த கல்யாணத்துக்கு நீங்க எப்படி? இவங்களை உங்களுக்குத் தெரியுமா?”

“உன்னைத் தெரிஞ்சா போதாதா நதிமா? உனக்காகதான் வந்தோம்.”

“நாங்க சென்னையில இருக்கிறது உங்களுக்கு எப்படித் தெரியும்? இதுவரை போன்ல கூட பேசலையே சித்தி? அந்த சித்தார்த் இங்கதான் சித்தி இருக்கான்” என்று பயந்த குரலில் சொன்னாள்.

“கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியாகிடும்மா. எல்லாத்தையும் மருமகன் பார்த்துப்பார்.”

“மருமகனா யாரைச் சொல்றீங்க? பாப்புக்கு கல்யாணமாகிருச்சா?”

“உனக்கு முடிக்காம எப்படி உன் தங்கச்சிக்கு முடிப்போம் சொல்லு?”

பேச்சு போகும் பாதை சரியில்லை என்பதை உணர்ந்த மின்னல், “ஆன்ட்டி போதும். விட்டா இவள் பேசிட்டே இருப்பா. அதோ ப்யூட்டிஷியன் வந்துட்டாங்க. நீங்க அப்புறமா உட்கார்ந்து நிதானமா பேசுங்க” என்று அவரை அனுப்பினாள்.

“கொடி சித்தி எதோ சொல்ல வந்தாங்க. அவங்களை ஏன்டி தடுத்த? அதை விடு. நமக்கெதுக்கு ப்யூட்டிஷியன்? சிம்பிள் மேக்கப் போதாதா?”

“நீ எந்த காலத்துல இருக்க நட்டுமா? இப்பலாம் இது ரொம்ப சர்வசாதாரணம். நீ கொஞ்சம் அமைதியா இரு. ஆமா ராத்திரி எங்க போயிருந்த? நான் வந்தப்ப உன்னைக் காணோம்?”

‘ராத்திரி’ என்றதும்தான் நடந்த அனைத்தும் நினைவு வர. ‘அச்சோ! இதை எப்படி மறந்தேன்’ என்பதாய் கலங்க ஆரம்பித்தாள்.

“என்னடா முகம் டல்லாயிருக்கு?”

“அ...அது கொடி. நைட் நதீரா என்னைப் பார்க்க வந்திருந்தாங்க” என்றதில் மின்னல் அதிர. இரவு நடந்த அனைத்தையும் தோழியிடம் சொல்ல, ‘அண்ணன் ஏதோ ப்ளே பண்ணுகிறான்’ என்பதை உணர்ந்த நிமிடம், ‘எது நடந்தாலும் நல்லதாக நடந்தால் போதும்’ என்று விட்டுவிட்டாள்.

“கொடி நீ போயி நதீரா கிளம்பிட்டாங்களா கேட்டுட்டு வர்றியா?”

“அதெல்லாம் வருவாங்க. வராம எங்க போயிடப்போறாங்க.”

“இல்ல கொடி. அவங்க போனதைப் பார்த்தா அப்படித் தெரியலை. என்னன்னுதான் கேட்டுட்டு வாயேன்.”

“அவங்க வரலன்னா நீ இருக்கிறல்ல விடு. அவனுக்கு நீதான்றது விதி. சோ, நீ சொன்ன மாதிரி மணமேடையில போயி உட்கார்ந்திரு” என்றாள் அசட்டையாக.

“உன் உளறலை நிறுத்துடி. நதீரா இல்லன்னா நட்சத்திரான்னு சாய்ஸ் கொடுக்குறியா கொடி? சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக்கிற செல்ஃபிஷா நான்? இல்ல உன் அண்ணனைப் பிடிச்சிருக்குன்னு நானே சொன்னதால, தரம் தாழ்ந்துட்டேனா? அப்படி நினைச்சிருந்தா இப்ப மணப்பெண்ணா நான்தான்டி இருந்திருப்பேன். என்னைப் பொருத்தவரை சந்துரு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும். அதைத் தாண்டி எதையும் யோசிச்சதில்லை” என்றாள் வருத்தம் நிறைந்த குரலில்.

“நதி! ஏய் என்னடா? நான் ஏதோ கோவத்துல சொன்னேன். உன் தரம் தெரிஞ்சதாலதான் நதி என் அண்ணன் காதல் தோற்றுப்போகணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன். நான் உன்னை அப்படி நினைப்பேனா?” தன்னைப் புரிந்து கொள்ளாமல் பேசும் தோழியை எண்ணி கவலைப்பட்டாள்.

“கொடி! ஏன்டி? உன் அண்ணனைவிட நான் எந்த வகையில் உயர்வா போயிட்டேன். ஏன், எனக்காகன்னு...” கண்கள் கலங்க மின்னலைப் பார்த்து “உன்னை மாதிரி நட்பு கிடைக்க நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கேன்டி. நான் எப்பவும் உன் அண்ணன் காதல் தோற்றுப்போகணும்னு நினைச்சதில்ல. ஆனாலும், எனக்காகன்னு... என்னை ரொம்ப கடன்பட வைக்கிற கொடி” என்று தோழியின் தோள்சாய்ந்தாள்.

“உனக்கென்ன குறை சொல்லு? உன்னை, உன்னைவிட எனக்கு நல்லாத் தெரியும். ஏன்னு சொல்லத் தெரியலை நதி. உன்னை வேறாளா நினைக்கத் தோணினதில்லை. எங்கள்ல ஒருத்தியாதான் பார்க்கத் தோணுது.”

“தேங்க்ஸ்டி” என்றாள் மனப்பூர்வமாக.

“அது ரொம்ப முக்கியம்” எனும்போது அழகுநிலையத்தில் இருந்து ஆள் வர அவர்கள் பேச்சு தடைபட்டது.

“எனக்கு எதுக்கு?” என முணகினாலும் மின்னல் தன்மேல் வைத்திருக்கும் அன்பை உணர்ந்ததால் அமைதியாகிவிட்டாள்.

ஏழு மணிக்கெல்லாம் அலங்காரம் முடிய, அங்கு வந்த அரிச்சந்திரன் நட்சத்திரப் பெண்ணவளைக் கண்டு அசந்து அப்படியே நிற்க, அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் முகத்தை நொடியில் சோகமாக மாற்றிக் கொண்டு, தங்கைக்கு கண்காண்பித்து வெளியே போகச்சொன்னான்.

“நதியை ரொம்ப நோகடிச்ச தொலைச்சிருவேன்” என்ற மிரட்டலோடு, அங்கிருந்த மற்றவர்களையும் அழைத்துச் சென்றாள்.

“ஏய் கொடி” என்று எழுந்த நட்சத்திராவின் அழைப்புக்கு பதில் சொல்ல அவள் அங்கு இல்லை.

“உட்கார் நதி. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

“என்கிட்டயா? என்கிட்ட என்ன பேசணும்? ந...நதீரா என்ன சொன்னாங்க?” என்றவளுக்குள் அவள் வந்திருக்க வேண்டுமென்ற வேண்டுதலே அதிகமிருந்தது.

“உட்கார் பேசலாம்” என்றான் திரும்பவும்.

அங்கிருந்த கட்டிலில் அவள் அமர, எதிரில் அவள்புறம் இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தான். தன் பதிலுக்காய் அவள் காத்திருப்பதை உணர்ந்து, “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்றான் பட்டென்று.

சட்டென்று அதிர்ந்து அவள் எழ, “ஏன் நீயும் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா? உனக்கும் என்னைப் பிடிக்காமல் போயிருச்சா?” என முகம் சுருக்க, என்னவென்று பிரிக்கமுடியா உணர்வில் அமைதியாக அமர்ந்தாள்.

‘சற்று முன்தான் அவள் இல்லைனா நான்னு, சாய்ஸ் கொடுக்குறியா எனக்கேட்ட தான், அதையே இவனிடம் ஏன் கேட்க முடியவில்லை?’ என நினைத்தாள்.

“என்ன நதி? சாய்ஸ்ல செலக்ட் பண்றேன்னு தோணுதா?” அவளின் அமைதியே ‘ஆம்’ என்பதை பிரதிபலிக்க, “அப்படிப் பார்த்தா நீ மட்டும்தான் பொண்ணுன்னு இல்லையே” என்றதும் சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் கண்டாள். காதல் தோல்வியில் உருகவில்லை அவன். வெகு நிதானமாகவே இருந்தான்.

“உன்னையும் என்னையும் சந்தேகப்பட்டதால கேட்கல நதி. நாம நேசிக்கிறவங்களை விட, நம்மளை நேசிக்கிறவங்களோட வாழ்க்கை அமைஞ்சா அதைவிடக் கொடுப்பினை வேற இல்லைன்னு, க்ரேன்மா அடிக்கடி சொல்வாங்க” என்று அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தான்.

அவள் உடலின் அதிர்வு கண்களில் அப்பட்டமாய் தெரிய, உதடுகள் தன்னை மீறி, “சந்துரு” என்றழைத்தது.

“சொல்லு நதி? நான் சொன்னது சரிதான?”

“ஆனா, நதீரா... அவங்க பாவமில்லையா? சின்ன விஷயத்துக்காக காதலைத் தூக்கிப் போடுவீங்களா?” கோவம்தான் வந்தது அவளுக்கும்.

“தூக்கிப் போட்டது நான் இல்ல நதி அவள்தான். நான் வேண்டாம் சொன்னதும் அவள் அம்மா பார்த்த பையனை கல்யாணம் பண்ணிக்கத் தயாராகிட்டா. அதை என்னன்னு சொல்லுவ?” என்று நட்சத்திரா அன்று செய்ததை அவளுக்கே திருப்பினான்.

தான் செய்ததை அவன் நேரில் பார்த்ததைப்போல் கேட்கவும் விக்கித்துப் போனாள். அவன் மறுத்தது தன்னைத்தான் என அவள் யோசிக்கவில்லை. அதற்கு அவனும் அவகாசம் கொடுக்காமல் “அவளுக்கு வேற இடத்துல பேசி முடிச்சிட்டாங்க” என்றான்.

“அ...அதெப்படி முடியும்? பெரியவங்க அப்படியே எப்படி விடுவாங்க? அதுவும் உங்க அப்பா பிரபல வக்கீல். அவருக்கு இது அசிங்கம் இல்லையா?”

“அதனாலதான் உன் முன்னால நிற்கிறேன் நதி. எங்க வீட்டுக் கௌரவம் இப்ப உன்கிட்டதான் இருக்கு. தெரியாத யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ண இஷ்டமில்லை. உன்னை வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும்.”

‘அப்ப உங்களுக்குப் பிடிக்கலையா?’ என்பதை அவள் பார்வையில் உணர்ந்தானோ! ‘நீதான்டி எல்லாமே!’ மனம் நினைத்ததை மறைத்து, “கல்யாணத்துக்குப் பின்னான காதல்ல உனக்கு நம்பிக்கையிருக்கா நதி?” எனக்கேட்டான்.

தன் தாய் தந்தை தாண்டி இன்னும் சிலரை நினைத்து, “ம்...” என்று சொல்ல,

“அதுல எனக்கும் நம்பிக்கையிருக்கு. இதுவரை நடந்ததை மறந்துட்டு புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம்.”

‘மறப்பதா? என் காதலை மறந்து உன் காதலைப் பெறுவதா!’ வேதனையுடன் சிரிப்புதான் வந்தது அவளுக்கு.

சட்டென சம்மதம் சொல்ல யோசித்தவளின் அருகில் சென்று அமர, அனிச்சையாய் அவள் நகர்ந்தாள்.

தானும் அவளை நெருங்கி அவள் கைபிடித்து, “உன்னோட வாழ்க்கையில, உன் மனசுல ஒரு ஓரத்துல நான் உட்கார்ந்துக்குறேனே? ரொம்பல்லாம் ஆசைப்படல நதி” என்று அங்கிருந்த ரோஜா ஒன்றை எடுத்து கட்டிலில் இருந்து இறங்கி, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, “அன்புதான் காதல்னா, நான் உன்னைக் காதலிக்கிறேன் நதி. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோயேன். ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாய்!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top