- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
19
சென்னையிலேயே பெரிய மண்டபங்களில் அதுவும் ஒன்று. மண்டபம் முழுக்க சென்ட்ரலைஸ் ஏசி. வாகனம் நிறுத்தும் இடம் மட்டுமே ஏக்கர் கணக்கில். ‘அரிச்சந்திரன் எம்.ஏ பி.எல். நட்சத்திரா எம்.சி.ஏ. வாசலிலுள்ள பெயர்ப் பலகையில் இரண்டு பெயர்களும மின்னிக் கொண்டிருந்தது.
காலையில் திருமணம் என்பதால் இரவிலேயே மண்டபம் செல்ல மனைவி, மகளை சீக்கிரம் கிளம்பச் சொல்லி விரட்டியபடி இருந்தார் நந்தகுமார்.
“நான் எப்பவோ ரெடி. உங்க பொண்ணுதான் ரொம்ப லேட் பண்றா. அவளை என்னன்னு கேளுங்க” என்றார் யசோதா.
“நதிமா இன்னும் கிளம்பலையா? டைமாச்சிது பாரு.”
“நா...நான் வரலைப்பா. நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க” என்றவளுக்கு ஏனோ அங்கு செல்ல கால் எழவில்லை. என்னதான் அவனுக்காக, அவன் காதலுக்காக தோழியிடம் பேசினாலும் நிஜம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா! அதுவும் அவளின் மனதிற்குள் மட்டுமே இருக்கும் அவனின் நினைவை எப்படி அழிப்பது. அவளைப் பொருத்தவரை அவன் நினைவு என்பது பென்சிலால் வரைந்த ஓவியமல்ல! கல்வெட்டாய் மனதில் பதிந்த காவியம்.
‘இப்ப, இந்த நிமிஷம் இது ரொம்ப முக்கியம்’ என மனசாட்சி எகத்தாளம் பேச, ‘ஸ்ஸ்... சீரியஸ் டைம் அமைதி’ என்றது மூளை!
“நாங்க மட்டும் போகவா? என்ன பேசுற நதிமா? உன் தோழியானதாலதான் எங்களுக்கு கொடி அறிமுகம். உனக்கே போகப் பிடிக்கலைன்னும் போது அங்க நாங்க எதுக்கு? விடு யசோ. நாம எங்கேயும் போகவேண்டாம்” என்றார் வேகமாக.
“அப்பா என்ன பேசுறீங்க? கொடி யாரோவா? அவ நம்ம வீட்ல ஒருத்திப்பா. அவளை எப்படி பிரிச்சிப் பார்க்கப் போச்சி. நீங்க மேரேஜ்கு போயிட்டு வாங்கப்பா.”
“இல்லமா. நீ என்ன சொன்னாலும் நீயில்லாம நாங்க அங்க போறதாயில்லை” என்றார் முடிவாக.
“அப்பா ப்ளீஸ்” என்று கெஞ்சிப் பரிதவிக்கும் மகளைக் காண்கையில் வருத்தமளித்தாலும், உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை அவருக்கு. அப்படியே சொன்னாலும் நதீரா தான்தான் என்பது தெரியாததால், அரிச்சந்திரன் நலன் கருதி மறுத்தாலோ இல்லை தான்தான் நதீரா என்றாலுமே அவளின் மனம் எப்படி யோசிக்கும் என்பதை கணிக்க முடியாதே! அன்று சஞ்சித் பேசியது நினைவில் வந்தது.
தூரத்தில் இருந்தவர்களைக் காண்பித்து, “அதுதான் மாமா ஜோடி! அதுதான் மாமா நதியோட குடும்பம்!” என்றிருந்தான்.
நட்சத்திராவின் மெசேஜ் படித்த சஞ்சித் திருமணத்தை நிறுத்தச் சொன்னதோடு, அடுத்தடுத்து நடந்ததைப் பார்த்த நந்தகுமாருக்கு, மின்னல் வேகம் என்பது இதுதானோ! என்றிருந்தது.
மாலையில் மாமனுடன் கல்யாணத்தை விமரிசையாகச் செய்வது பற்றிப் பேசுவதற்காக பூங்காவிற்கு வந்திருந்தான் சஞ்சித்.
“உனக்குக் கஷ்டமா இல்லையா சஞ்சித்?” எனக்கேட்டார் நந்தகுமார்.
“நம்ம நதி நல்லாயிருக்கணும் மாமா. அது போதும் எனக்கு. இதுல கஷ்டம் எங்கயிருந்து வந்தது?”
“நீ வெளியில் சொல்லலன்னாலும், என் பொண்ணு மேல உனக்குள்ள இருக்கிற தனிப்பட்ட விருப்பம் தெரியாதுன்னு நினைச்சியா?” என்றார் மருமகனை அறிந்தவராய்.
“மாமா!” தன் மனம் எப்படித் தெரியுமென்று அதிரத்தான் செய்தானோ!
“உன்னோட சூழ்நிலை சொல்லவிடாம தடுத்திருச்சின்னு வேணும்னா சொல்லு ஒத்துக்குறேன். உனக்கு அவளைப் பிடிக்கலைன்னு சொல்றதை ஒத்துக்க முடியாது.”
மனம் படபடக்க, “என்ன மாமா என்னெல்லாமோ சொல்றீங்க?” என்றான்.
மெல்லிய புன்னகையுடன், “தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாதுடா மருமகனே! என் பொண்ணை விட உன்னை நல்லாத் தெரியும். யசோ அன்னைக்கு உனக்குப் பேசினப்ப, நான் ஏன் அமைதியா இருந்தேன்னு யோசிச்சியா? உன்னைத் தெரிந்ததால்தான்” என்றதும் அவன் தலை கவிழ, “என் பொண்ணுக்கு டைம் கூடக் கொடுக்கலை நாங்க. நீ அவளுக்கு எவ்வளவோ செய்திருக்கடா. நீ அவளை நல்லா பார்த்துக்குவன்றது தெரியும் சஞ்சித்” என்றார் நந்தகுமார்.
“அவளைப் பொருத்தவரை ஆர்த்தி அண்ணி மாதிரி நானும் ஒரு நல்ல நண்பன்தான் மாமா. அதை நான் கெடுத்துக்க விரும்பல. என் நோயும் ஒரு காரணம்தான். அதையும் மீறி அவளோட மனசுதான் மாமா முக்கியம். அந்த சித்தார்த்தை...” ‘அவளோட வாழ்க்கையில நுழைய விட்ரக்கூடாது மாமா’ என்று சொல்ல வந்தவன், அங்கு வந்த நட்சத்திராவைக் கண்டு பேச்சை நிறுத்தி அவள்புறம் கைநீட்டினான்.
சஞ்சித் கை நீட்டிய திசை பார்த்தவர் அங்கு வந்து அமர்ந்த மகளை யோசனையுடன் கண்டார்.
“எவ்வளவு பிரச்சனை வந்தாலும், வரும்போது பார்த்துக்கலாம்னு அசால்ட்டா இருக்கிறவள் மாமா. என்னோட கல்யாணம் பேசாம இருந்திருந்தாலாவது, இரண்டொரு நாள் வருத்தபட்டுட்டு தன் வேதனையை மறைச்சி, பின்னாடி நார்மல் லைஃப்கு வந்திருப்பா. இப்பப் பாருங்க சந்தோஷம்னா என்னன்னு கேட்கிற நிலையில் இருக்கா. அவளோட சந்தோஷம் எல்லாம் அவளோட சந்துரு மட்டும்தான் மாமா. ஏதோ மிஸ் அண்டர்ஸ்டான்டிங்னால பிரச்சனையாகிப் போச்சி. அர்ஸ்க்குப் பிடிச்ச பொண்ணு நம்ம நதின்றப்ப சேர்த்து வச்சிரலாம் மாமா” என்று மாமனிடம் அவரின் மகளுக்காக பேசிக் கொண்டிருக்கும் போதே, சோகச் சித்திரமாய் அமர்ந்திருந்தவள் அருகில், எந்தவித சங்கோஜமும் இல்லாமல் வந்தமர்ந்தவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தான் சஞ்சித்.
சில நிமிடங்கள் இருவரும் பேசியதில், மாமன் மகள் வெளியே செல்வது தெரிந்தது. அடுத்த சில நிமிடத்தில் ஒரு பார்சலோடு வந்து அவனை உண்ண வைக்க, அதன்பின் அரிச்சந்திரனும் அதையே செய்ய, அவர்கள் இருவரின் இயல்பான, யதார்த்தமான செய்கைகள், ஆண்கள் இருவருக்கும் தாங்கள் எடுத்த முடிவு சரியே என்ற எண்ணத்தை வரவைத்தது.
“இவங்களுக்குள்ள எவ்வளவு புரிதல்னு பார்த்தீங்களா மாமா. அதுதான் மாமா ஜோடி! அதுதான் மாமா நதி குடும்பம். அதிலிருந்து அவளைப் பிரிச்சா உயிரில்லா பொம்மை மாமா அவள். அவங்க காதல் ஒவ்வொரு செய்கையிலும் தெரியுறதை என்னால உணர முடியுது. இதுக்குமேல என்ன மாமா வேணும்?” என்றான் மனதார.
“உன்னோட இருந்தாலும் நல்லாதான் இருப்பா சஞ்சித்.”
“ப்ச்... ப்ச்... கிடையாது மாமா. என்னோட கல்யாணம் நடந்தா... நடந்தா என்ன, மணமகளா என் பக்கத்துல கூட அவளால உட்கார முடியாது மாமா. இதுதான் மாமா அப்பட்டமான உண்மை. வேணும்னா அர்ஸ் போனதும் உங்களுக்கு அதைப் புரிய வைக்கிறேன் பாருங்க” என்றான்.
அரிச்சந்திரன் செல்லும்வரைக் காத்திருந்து நட்சத்திராவின் அருகில் சென்று, “ஹாய் நதி” என்றதும் அவள் முகத்தில் ஒருவித பயம் ஒட்டிக்கொண்டதைப் பார்த்தவன், ‘சிறு வயதிலிருந்து உடன் வளர்ந்த மாமன் மகள் என்னைக் கண்டு பயப்படுகிறாளா!’ ஏனோ வேதனையுடன் சேர்த்து சிரிப்புதான் வந்தது சஞ்சித்திற்கு.
“பக்கத்தில் உட்கார்” என்று அவன் சொல்லவும், அவள் வேகமாக மறுத்ததும் தன் மாமனைப் பார்த்தான். அரிச்சந்திரனுடன் உரிமையாகப் பேசியவள், தன்முன் தன் இயல்பைத் தொலைத்து நின்றிருப்பதை உணர்கையில், அவளின் செயல் மனதில் வலியைத் தோற்றுவித்தாலும் “திருமணத்தைப் பற்றி எதாவது சொல்லணுமா?” என்று கேட்டான். இல்லையென்று மறுத்ததும் அவளை வீட்டிற்கு அனுப்ப, அவள் சென்றதும் நந்தகுமார் அவ்விடம் வந்தார்.
“நான் சொன்னது சரின்னு இப்ப உணர்றீங்களா மாமா?”
“உண்மைதான் சஞ்சித். லாயரைப் பார்த்ததும் அவள் முகத்துல வந்த சந்தோஷம்! உன்னைக் கண்டதும் குற்றவுணர்வா, பயமான்னு தெரியாத ஒன்றை என் பொண்ணுகிட்டப் பார்த்தேன்” என்றார்.
“அர்ஸ்கு முழு மனசோட கல்யாணம் பண்ணிவைங்க மாமா. எத்தனை சித்தார்த் வந்தாலும் நம்ம நதியை விட்டுரமாட்டார்.”
“கண்டிப்பா மருமகனே! உன் மனசு போல எல்லாம் நடக்கும்” என்றார்.
“இப்பதான் மாமா மனசு லேசான மாதிரியிருக்கு. அப்புறம் மாமா, கல்யாணம் வரை நதிக்கு எதுவும் தெரிய வேண்டாம். ஆனந்த அதிர்ச்சிதான் அவளுக்கான அவளின் சந்துரு. அப்புறம் நான் போறேன் மாமா” என்று சென்றவன்தான் ஒரேயடியாகப் போய்விட்டான்.
கடவுளின் விதியோ என்னவோ! ஒரே நாளில் தன் பெண்ணின் தலையெழுத்தைச் சரியாக்கி, அதே வேகத்தில் அவனும் சென்றுவிட்டான். இதோ தனக்குத் திருமணம் என்றறியாமல் வரமாட்டேன் என அடம்பிடிக்கும் பெண்.
“யசோ அப்ப நீயும் இங்கேயே இரு. நான் என் நண்பனைப் பார்த்துட்டு வர்றேன்” என்று கிளம்ப யத்தனிக்க,
“அப்பா, அப்ப கொடி அண்ணன் கல்யாணம்?”
“நீ வர்றதா இருந்தா குடும்பமா போகலாம். இல்லையா வீட்லயே இருப்போம்” என்று வெளியே நடக்க ஆரம்பித்தார்.
“நா...நான் வர்றேன்பா” என்றாள் வேகமாக.
“எங்கமா? என் ஃப்ரண்டைப் பார்க்கவா?” கேலியைக் கூட அப்பாவி முகபாவனையில் கேட்டார்.
“அப்பா” என முறைத்து, “சந்துரு கல்யாணத்துக்குப் போகலாம்.”
“இப்படியேவா வரப்போற?” என்ற தாயிடம்,
“ஏன் எனக்கென்ன? சுடிதார் நல்லாத்தான் இருக்கு.”
“ப்ச்... நான் சுடிதாரைச் சொல்லலை. போய் சேலை கட்டிட்டு வான்னு சொல்றேன்.”
“ம்மா... எதுக்கும்மா?”
“உன் ஃப்ரண்ட் வீட்டுக் கல்யாணத்துல, நீ இப்படி இருந்தா நல்லாவா இருக்கும். இப்படி வர்றதாயிருந்தா நீயும், உன் அப்பாவும் மட்டும் கிளம்புங்க. அங்க வந்து மத்தவங்க கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது” என முறுக்கிக் கொண்டார் யசோதா.
“ம்மா... ரொம்பப் படுத்துறீங்க” என பல்லைக்கடித்து, “சரி நீங்க சொன்னபடி செய்றேன்” என்றதும் வந்த புன்னகையை மறைத்துத் தான் மகளுக்கு என்ன செய்ய நினைத்தாரோ அவ்வாறாக அவளை தயார்படுத்திக் கண்ணாடி முன் நிறுத்த, “நானாம்மா இது?” என்றாள் நம்பமாட்டாமல்.
“நீயேதான்டா நதிமா” என கையால் திருஷ்டி சுற்றி, “ஹப்பா என் பொண்ணுக்கு எவ்ளோ திருஷ்டி. கைவிரல்லாம் பட்பட்டுன்னு முறியுது” என்று புன்னகைத்தார்.
“ஆனாலும், ஒரு மேரேஜ்கு போயிட்டு வர இதெல்லாம் அதிகம்மா.”
“உன்னை எந்த விசேஷத்துக்கும் கூட்டிட்டுப் போனதில்லையேடா. உன்னை இப்படி அலங்கரிச்சிப் பார்க்க ஆசையிருந்தும், அவனால வந்த பயத்துலயே, எங்களுக்கு மட்டும் அழகா தெரிஞ்சா போதும்னு விட்டுட்டோம்.”
“இப்பவும் அவனுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கும்மா” என்று உளறி சட்டென்று நாக்கைக் கடித்தாள்.
“புரியலைமா?” என்ற தாயிடம், “ஒண்ணுமில்லம்மா. எத்தனை காலத்துக்கு பயந்துட்டிருக்கிறது? நம்மளை மீறி யாரும் எதுவும் செய்திட முடியாதும்மா” என்றாள்.
“ம்ம்... அதுவும் சரிதான். கிளம்பு கார் வெய்ட்டிங்ல இருக்கு” என்றார் யசோதா.
அவர்களுடன் ஏதேதோ காரணம் சொல்லி சஞ்சித்தின் குடும்பமும் சேர்ந்து மண்டபம் வர, இரவு எட்டு மணியானது. வாசலில் இருந்த பெயர்ப்பலகையைப் பார்க்க விடாமல் மறைத்தவாறு, மகளை மண்டப வாசல் கூட்டிச் சென்றார் நந்தகுமார்.
தங்களுடன் இன்னொரு குடும்பமும் வந்து நிற்க, வேகமாக வந்த அரிச்சந்திரன் குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்று, திருஷ்டி கழிக்க ஆரத்தியுடன் வர, தனக்கோ என ஒரு வினாடி தடுமாறிய நட்சத்திராவிற்கு, தன்னருகில் இன்னொரு பெண் நிற்பது தெரிய சற்று ஆசுவாச மூச்சுவிட்டாள். இவள்தான் நதீராவோ என்று அவளின் முகம் பார்க்க நினைக்க, நினைக்க மட்டுமே முடிந்தது. அவளைப் பார்க்கும் தைரியம் ஏனோ இருக்கவில்லை.