- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
18
வீட்டில் திருமணத்திற்குச் சம்மதம் கேட்டால் சம்மதம் சொல்வாயா என்று கேட்டதற்கு, நட்சத்திரா சந்தேகம்தான் என்றதும், “என்னடி சொல்ற? லூசு மாதிரி உளறாத” என்றாள் மின்னல் பெண்.
“இதுல எங்க லூசுத்தனம் வந்திச்சி? மனசுல பட்டதைச் சொன்னேன். ஹேய் கொடி! இன்னைக்கு உன் அண்ணா ஸ்மார்ட்டா இருக்காங்க. நான் கண்ணு வச்சிட்டேன். சோ, வீட்டுக்குப் போனதும் மறக்காம சுத்திப்போடு” என்றாள்.
“என் அண்ணனையா?”
“நக்கலு. அவங்களை உன்னால தூக்க முடியுமா சொல்லு? எங்க முடிஞ்சா தூக்கிச் சுத்திப்போடு” என அலட்சியமாகச் சொல்ல,
“நிஜமாவே என் அண்ணனைக் கண்ணு வச்சிட்டியா?”
“அட ஆமான்றேன்” என பட்டென சொல்ல, ரவிச்சந்திரன் சகுந்தலா இருவருக்கும் முகமெல்லாம் புன்னகை.
“ஹா...ஹா நட்டுமா. உண்மையிலேயே நட்டு கழண்டு போச்சிது நினைக்கிறேன்.”
“ம்ம்... அதெல்லாம் மார்கழி ஒண்ணாம் தேதி அன்னைக்கு, எப்ப உன் அண்ணனைப் பார்த்தேனோ அப்பவே கழண்டுருச்சி. மாட்ட ட்ரை பண்ணிதான் பார்க்கிறேன். சுத்தமா முடியலடி. அதைப்பற்றி நீ என்ன நினைக்கிற மயிலு?” என்றாள் தோழியை வம்பிழுக்கும் குரலில்.
“எங்கம்மா அப்பவே சொன்னிச்சி. நட்டு கழண்ட கேசுங்களோட பேசாத மின்னலு. பேசுனா உனக்கும் பைத்தியம் புச்சிரும்னு. கேட்டனா நானு. இதோ வகைதொகையில்லாம வான்டடா வந்த சிக்கிட்டேன்ல.” காமெடியை வார்த்தையில் அள்ளித் தெளிக்க...
“ஹா...ஹா நாட்டி கேர்ள்” என்று மின்னலின் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள்.
“ஸ்ஸ்... ஏன்டி எருமை வலிக்குற மாதிரி கிள்ளுற?”
“வலியைப் பார்க்காத மயிலு. நான் கொடுத்த முத்தத்தைப் பார். அதோட வேல்யூ தெரியலை உனக்கு” என்றாள் கண்ணடித்து.
“இந்த வன்முறை முத்தம் எனக்கு வேண்டாம் தாயே! எதுவாயிருந்தாலும் உன்னைக் கட்டிக்கப் போறவனுக்குக் கொடுத்து அவனை அழவிடு” என்றாள் மின்னல்கொடி.
“அதற்கு சந்தர்ப்பம் கம்மிதான்.”
“சரி கம்மின்னே வச்சிப்போம். அதையும் மீறி எவனாவது வந்தா?”
“வெறும் வன்முறையை மட்டும் எடுத்துக்குவோம் மயிலு. சென்னைத் தமிழ் பைட் ஒண்ணு போட்டா பத்தாதா, அவனை ஓடவிடுறதுக்கு.”
“அஹான் ஜி! பார்க்கலாமே எப்படி ஓடவிடுறன்னு?”
“ப்ச்... வேற பேசலாம்” என்று மின்னலை முழங்கையால் இடிக்க, அதற்குள் பூஜைக்கு அழைக்கவும் எழுந்து சென்றார்கள்.
இரு குடும்பத்தின் சார்பாக ரவிச்சந்திரன்-நந்தகுமார் சன்னிதானத்திற்குள் செல்ல, மணமக்களின் ராசி, நட்சத்திரம் சொல்லி வெளியே வந்தவர்களை, அரிச்சந்திரன், நட்சத்திரா இருவரும் ஆச்சர்யமாகப் பார்க்க, அவர்களுக்கு பெரிய அளவில் சந்தேகம் வருமுன் அவர்களின் கவனத்தை தங்கள் புறம் திருப்பினாள் மின்னல் கொடி.
“அண்ணா நீ எனக்கு தம்பியா பிறந்திருக்கலாம்” என்றாள் சிறு ஏக்கத்தோடு.
“ஏன்டா மின்னல்?”
“தம்பியா இருந்தா அதட்டி மிரட்டி கூடவே வச்சிக்கலாம்.”
“இப்ப என்ன குறைஞ்சி போச்சிது. அதைத்தான நிதமும் செய்திட்டிருக்க?”
“இருந்தாலும் முழு சுவாரசியம் இல்லண்ணா.”
தங்கை தன் கவனத்தை மாற்றுகிறாள் என்று புரிய, “எனக்கு ஒரு விஷயம் சொல்லு? ஏன் ரெண்டு குடும்பமும் காலையிலேயே வந்திருக்கு? எனக்குத் தெரியாம எதாவது கேம் ஆடுறீங்களா?” என்றான்.
‘ஐயோ அதுக்குள்ள கண்டுபிடிச்சாச்சா? இது தப்பாச்சே!’ என்ற மின்னலின் மனம் தடுமாற,
“அப்பா டெல்லியிலேயே குப்பை கொட்டுற ஆள். ஒரு மாசமா போயிட்டு வந்துட்டுன்னு இருக்காங்க. வீட்டுலயும் எப்பவும் ஒரு பரபரப்பு தெரியுது. வீட்டை விட்டா எதுவுமே தெரியாத க்ரேன்மா, இப்ப வீட்லயே இருக்கிறதில்லை. என்ன மின்னல் எனக்கேத் தெரியாம கல்யாணம் எதுவும் ரெடி செய்துட்டீங்களா என்ன?”
மின்னலின் மனம் பக்கென்றாக, “அச்சோ அண்ணா! நீ வக்கீல்தான் ஒத்துக்கறேன். அதுக்காக ஓவரா சந்தேகப்படாத. நந்தப்பாகிட்ட நீ பேசிட்டிருந்தல்ல? அவர்கிட்ட கேட்காமலா இருந்த? உண்மையைச் சொல்லு?” என்றாள்.
“ம்... வருடா வருடம் பொண்ணு பிறந்தநாளுக்கு கோவிலுக்கு வர்றதா சொன்னார். நாம ஏன் இந்தக் கோவில் வந்தோம்? அது சரி உன் ஃப்ரண்ட் இன்னைக்கு முக்காடு போடலையா?” என்று தொடர் கேள்வியாய் கேட்க,
“நாம மட்டும் இருக்கிறதால போடலை. அதை ஏன் நீ கேட்கிற?”
“அது நதீராவா பார்த்தவளை, இப்பதான் நட்சத்திராவா பார்க்கிறேன்” என்றான் அவனவளைக் கண்டபடி.
ஆம் பார்க்கிறான்! பார்த்துக்கொண்டே இருக்கிறான்! பார்த்த முதல் நாளிலிருந்து முகத்தில் அதே நட்சத்திர ஜொலிப்பு! மூக்கில் இருப்பதே தெரியாதது போல் பளிச் மின்னலுடன் வெள்ளைக்கல் பதித்த மூக்குத்தியின் நட்சத்திர மின்னல்! அவள் கட்டியிருந்த புடவைக் கலரில் நெற்றியில் சின்ன நட்சத்திரப் பொட்டு! கழுத்தில் நீளமாக சற்று மெல்லியதாகத் தொங்கிக் கொண்டிருந்த செயினில் நட்சத்திர டாலர்! அனைத்தையும் மிஞ்சும் தன்னைக் காண்கையில் அவள் கண்களில் தோன்றும் நட்சத்திர மின்னல்கள்! அதற்குப் போட்டியாய் சிரிக்கும் பற்களின் நட்சத்திரப் புன்னகை!
‘உனக்கு எல்லாம் நட்சத்திராவாடா? வர வர நீ கவிஞனாகிட்டிருக்க அர்ஸ்.’ மனம் சொல்ல, ‘வர்ணனைக்குப் பெயர் கவியா? காலக்கொடுமைடா அர்ஸ் பையா!’ மனசாட்சி மல்லுக்கு நின்றது. கண்கள் மட்டும் சாமியையும், எதிரில் நிற்கும் நட்சத்திரப் பெண்ணவளையுமே வட்டமிட, சாவின் விளிம்பில் சஞ்சித் தன்னிடம் வாங்கிய சத்தியமும் நினைவில் வந்தது.
ஆக்சிடெண்டான காரைப் பார்த்து அதன்பின் சஞ்சித்தைக் காண அவன் தன்னை அழைப்பது போலிருந்தது. தன் காலில் ஏற்பட்ட வலியைப் பொருட்படுத்தாது அவனருகில் செல்ல, தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் தெரிந்த ஆர்வம் வித்தியாசமாய் பட்டது. அவனுக்கு தன்னைத் தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தான். ‘ஆனால் எப்படி?’ என எண்ணுகையில் சஞ்சித் தன் கைபேசியையும், தன் அருகில் இருந்த பத்திரிக்கையையும் அவனிடம் கொடுத்து, “ந...நதி... நதீ...ரா... நதி ரொம்ப நல்லவ. வெகுளிப் பொண்ணு. அவள் எப்பவும் உங்க நதீராதான். அவளை... உங்க நதியைக் கல்யாணம் பண்ணிக்கோங்க அர்ஸ்.”
‘நதி... நட்சத்திரா’ என திணறி குழப்பத்துடன் பத்திரிக்கையைப் பார்க்க, அப்பொழுதுதான் புரிந்தது நட்சத்திராவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை இவன் என்று.
“ந...தியை கல்யாணம்... ப்ராமிஸ் பண்ணுங்க அர்ஸ். அவளை கடைசிவரை கணவனா நீங்கதான் பார்த்துக்கணும். அவள் தொலைத்த எல்லா சந்தோஷமும் அவளுக்குக் கிடைக்கணும். அதை உங்களால மட்டும்தான் அவளுக்குத் தர முடியும். ப்ளீஸ்” என்ற பொழுது சஞ்சித்தின் உடல் வெட்டி இழுத்தது.
சட்டென்று அவன் கைபிடித்து, “சத்தியமா அவள்தான்... அவள் மட்டும்தான் என் மனைவி. கடைசிவரை சந்தோஷமா பார்த்துக்குவேன். வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று கைநீட்டினான்.
“நன்றி” என்ற வார்த்தை முடிய சஞ்சித்தின் உயிர் பிரிந்திருந்தது.
சஞ்சித்திற்காக நட்சத்திராவைத் திருமணம் செய்யக்கூடாது என்பதால் தான், அன்று நடந்ததை இதுவரை யாரிடமும் பகிரவில்லை. அனைத்தையும் தாண்டி தன் ஆசை வீட்டினருக்குத் தெரியும் என்பதாலும், தங்கையின் ஆசையும் தெரியுமாதலால், தங்கள் திருமணத்திற்குத் தடை வராதென்ற தைரியத்தில் இருக்கிறான்.
மாலை ஐந்தரை மணியளவில் பூங்காவில் யோசனையுடன் அமர்ந்திருந்தாள் நட்சத்திரா. காலையில் கட்டியிருந்த புடவையை மாற்றி சுடிதார் அணிந்திருந்தாள். அதே பர்தா மாடல் துப்பட்டா. மதியம் கொளுத்திய வெயிலுக்கு மாலை வெயில் சற்று இதமாக இருந்தது.
சில நிமிடங்களில் லேசாக மழைக்காற்று அடித்து, சட்டென்று மேகங்கள் திரண்டு மழை சிறு சிறு துளிகளாய் இறங்க, ஏதோ ஒரு உறுத்தலில் நிமிர்ந்தவள் உடல் சர்வாங்கமும் ஆட, மூளை வேலை நிறுத்தம் செய்ததோ! சற்று தள்ளி நின்றிருந்தவனை வெறித்திருந்தது அவளின் கண்கள்.
‘கடவுளே! என் இருப்பிடம் தெரிந்துவிட்டதா? என்னை நிம்மதியாக வாழவிட மாட்டானாமா? நதி கெட் அவுட் ஆப் ஹியர் சூன்.” சட்டென்று எழுந்து பார்க்கின் வாசல் நோக்கி ஓடினாள்.
“ஏய் நட்சத்திரா ஓடாத நில்லு. உன்கிட்ட பேசணும். பேசாம எங்க போனாலும் விடமாட்டேன். ஏய் நில்லு சொல்றேன்ல.”
நிற்கவில்லை அவள்! அவளின் ஓட்டம் தொடர, தூரமும் அதிகமானதோ! மழை வந்ததும் அங்கிருந்த ஒரு சிலரும் சென்றிருக்க, அக்கம்பக்கம் திரும்பிப் பார்க்காமல் ஓடியவளை தடுத்து நிறுத்தினான் அவன்.
“வேண்டாம் என்னை விட்டுரு. நா...நான் நீ நினைக்கிற ஆள் கிடையாது. நான் உன்னோட வரமாட்டேன்” என்று கையை அவனிடமிருந்து விடுவிக்கப் போராடினாள்.
“நான் எப்ப என்னோட வரச்சொல்லிக் கூப்பிட்டேன். அப்ப உன்னைக் கூப்பிடணும் சொல்றியா?” என்ற கேலிக்குரலில் சடாரென நிமிர்ந்து பார்த்தவள் முகம் மலர கண்கள் மட்டுமே கண்ணீரைக் கொட்டியதோ!
“என்னமா? எதாவது பிரச்சனையா? ஏன் அழுற? எதுக்காக இப்படி கண்மண் தெரியாம ஓடி வர்ற?” அவள் பார்வையின் அலைப்புறுதலில் “மகாபலிபுரத்துல விரட்டிட்டு வந்தானே. அவனா?” என்றான்.
பேச வாயெழாமல் ஆமென்று தலையசைத்தாள்.
“அன்னைக்கே யார்னு சொல்லச் சொன்னேன்ல? முதல்ல அழுறதை நிறுத்து” என்று அவளின் கண்ணீர் துடைத்து, “வந்து யார்னு மட்டும் சொல்லு. நான் பார்த்துக்கறேன்” எனும்போது வானமும் சற்று தெளிவாயிருந்தது.
தன்னைப் பிடித்திருந்த அவனின் கையை மறுகரத்தால் பிடித்து, “வே...வேண்டாம். நீங்க வாங்க போகலாம்” என்றவளின் வார்த்தை குழறியபடி வந்தது.
“என்ன நினைச்சிட்டிருக்க என்னைப்பற்றி? ஒரு பொண்ணைக் காப்பாத்த முடியாத கோழைன்னு நினைச்சியா? எத்தனை நாள் ஒருத்தனுக்கு பயந்து இப்படி முக்காடு போட்டுட்டு அலைவ? கேட்க யாரும் இல்லைன்றதாலதான உன்னை விரட்டிருக்கான். நான் கேட்கிறேன் வா” என்றான் கோவமாக.
அவனின் கோவத்தை முதல்முறை பார்க்கிறாள். சற்று பயம் வந்த போதிலும் அவனை அவன் கோபத்தை நிறைய பிடித்திருந்தது நட்சத்திராவிற்கு. சுற்றிலும் பார்த்து அவன் இல்லை என்றவுடன் ஆசுவாச மூச்சு அவளுள். தன் பயம் நீங்கி, “அவன் போயிட்டான் போல. இங்க இல்லை” என்றாள்.
“ப்ச்... நீ அவனைக் காண்பித்திருக்கலாம்?” கோவமாகக் கேட்டபடி அவளைக் காண, அந்த முக்காடு அவனுள் எரிச்சலை உண்டாக்க, “முதல்ல தலையைச் சுற்றி துப்பட்டாவால மூடுற பழக்கத்தை விடு” என்று அதை அவனே எடுத்தும் விட்டு, “இதாலதான் நீ என்னைவிட்டுப் போயிட்ட” என்று முணுமுணுக்க, அவள் காதிலும் கடைசி வாக்கியங்கள் மெல்லியதாகக் கேட்டதோ!
‘நிஜம்தான். ஆனா விட்டுட்டுப் போனது நானில்லை. இன்னும் ஐந்து நாள்ல கல்யாணம் உங்களுக்குத் தானே தவிர எனக்கில்லை.’ மனதில் எண்ணியதை அவனைப்போல் வெளியே கொட்டிவிடவில்லை.
கொட்டியிருக்கலாம் அனைத்தும் சரியாகியிருக்கும்.