- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
17
இரவோடு இரவாக வீடு வந்தவன் பால் மட்டும் போதுமென்று தாயிடம் கேட்டு வாங்கி குடித்துப் படுக்க, ஏனோ இன்று பார்த்த மனிதர்கள் அனைவரும் அவனுள் உலா வந்தார்கள். வெண்மதி! அவளைக் கண்டதும் முதலில் அதிர்வுதான். அதற்கான விளக்கம் கேட்கவோ, கொடுக்கவோ வேண்டிய சூழல் இல்லாமல் போக, பேச வேண்டியதைப் பேசி வந்துவிட்டான்.
‘கருங்குரங்கை யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா சார்?’ நினைத்ததுமே சட்டென சிரிப்பு வந்தது. ‘சித்தார்த் கருப்புதான் அதுக்காக அவன் மேலுள்ள கடுப்பில் அவள் சொன்ன கருங்குரங்கு, அதை அந்த சித்தார்த் கேட்டபொழுது, அவன் முகம் அப்படித்தான் இருந்திருக்குமோ! ஹா...ஹா கேஸ் செம இன்ட்ரெஸ்டிங்கா போகும்போல.’
ஏனோ நட்சத்திராவின் நினைவு வர, கைபேசியை எடுத்து மெசேஜ் அனுப்ப நேரம் பார்க்க பனிரெண்டு முப்பதைத் தொட்டிருந்தது. வாட்சப்பில் அவள் போட்டோ தேடிப்பார்க்க வெள்ளை நிற புசுபுசு பூனைக்குட்டிகள் இரண்டு கொஞ்சிக் கொண்டிருந்தது.
“ஹ்ம்.. நேர்லயே பர்தா போட்டு சுத்துறவ வாட்சப்ல போட்டோ வைப்பாளான்னு யோசிக்கவேண்டாம். இந்த மின்னல்கிட்ட போட்டோ சுட்டுருக்கணும். மிஸ் பண்ணிட்டேன். என்ன செய்யலாம்?” என யோசித்தவன் எஸ்எம்எஸ்ஸில் ‘ஹாய்’ அனுப்ப பதிலில்லை. சில நிமிடங்கள் கழித்து போட்டோ ப்ளீஸ் என்றனுப்பினான்.
அடுத்த பத்து வினாடிக்குள் பத்து கத்தி எமோஜி வந்து, ‘உன்னை வெட்டுறேன் பார்’ என்றது.
‘ஐயோ!’ எமோஜியை பதிலுக்கு அனுப்பி சிரித்திருப்பாளோ! நினைத்தபடி ‘தேங்க்ஸ்’ என்றனுப்பினான்.
‘தூங்குங்க சந்துரு’ என்று வர,
‘குட் நைட்’ என்றனுப்பி புன்னகையுடன் படுத்தவன் அடுத்த சில நிமிடங்களில் உறங்கினான்.
தன்னைத்தானே தலையில் கொட்டிக் கொண்டிருந்தாள் நட்சத்திரா. ‘அவங்க மெசேஜ் பண்ணினா உடனே ரிப்ளை பண்ணணும்னு இருக்கா என்ன. அவங்களை அவாய்ட் பண்ணு சொன்னா கேட்கறியா?’ என்று மனம் அதட்டியது. ‘ஆனாலும், ஏன் எனக்கு மெசேஜ்? அதுவும் இந்த நேரம். அவங்க காதலி நானில்லையே’ என்பதில் குழம்பித்தான் போனாள்.
‘என்மேல் சிம்பதியா? அது வரக்கூடாதே. அப்படி வர்ற உறவு நமக்கு சரிவராதே’ என்று தன் யோசனைக்கு தீனி போடக் காரணம் தேடிக்கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை தாயின் பின்னேயும், பாட்டியின் பின்னேயும் மாற்றி மாற்றி சுத்திய பேரனிடம், “அது என்ன அரி, இப்பதான் தவழுற குழந்தை மாதிரி எங்க பின்னாடியே அலையுற?” என்றார் பாக்கியவதி.
“என்னடா எதாவது தெரியணுமா? என்னன்னு சொன்னால்தான தெரியும்” என்றார் சகுந்தலா.
“அம்மா உங்க பையனுக்குக் கல்யாணக்களை வந்திருச்சி. அதான் பொண்ணு பார்க்கச் சொல்லத் தயங்கிகிட்டு நிற்கிறான்” என்று அண்ணனவனை மாட்டிவிட, மகளை முறைத்த மகனிடம், “அவ கிடக்கிறா குட்டி நாய். நீ சொல்லு என்ன விஷயம்?”
“அ...அது...”
“அப்ப அதேதான்” என்றார் பாட்டி.
“க்ரேன்மா வந்தேன் நீ காலி” என மிரட்டி, “முந்தா நாள் பொண்ணு பார்க்கப் போறேன் சொன்னீங்களே அது என்னாச்சி?” மனதில் நினைத்ததைப் பட்டென்று கேட்டுவிட்டான்.
“அதெல்லாம் வேண்டாம்னு விட்டாச்சிடா. நீ வேற வேண்டா வெறுப்பா என்னவோ செய்யுங்க சொன்னியா. கோவத்தோட உன்கிட்ட சவால் விட்டாலும் நிதானமா யோசிச்சப்ப, உன்னோட இஷ்டம் இல்லாம செய்யக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம். அதனால வேற பொண்ண பார்க்கலாம்னு அப்பா சொல்லிட்டாங்க” என்று அலட்டாது சொன்னார்.
“அம்மா! நான் எப்பம்மா அப்படிச் சொன்னேன்?” என்றான் அழுது விடுபவன்போல்.
“போடா போய் சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பு.”
“ம்மா... இப்ப சாப்பாடா முக்கியம்?” என்றான் சூடாக.
அதை கூல் செய்ய மின்னல் போட்டாள் அந்தப் பாடலை.
நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பைச் சேர்த்துச் சேர்த்து
மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்துப் பார்த்து
நானும் செர்ரி தோட்டம் போட்டேன்
“னானனானானனனனா னானனானானனா” என வாய் இசையை வெளியிட, தங்கையின் செய்கையில் பல்லைக் கடித்தபடி அவள் தலையில் ஒன்று போட்டு அலுவலகம் கிளம்பினான்.
மாமியாரும் மருமகளும் மின்னல்கொடியைத் திட்ட, மகளுக்கு ஆதரவாய் வந்து நின்றார் ரவிச்சந்திரன்.
“முன்னல்லாம் கோவில்லயும், விசேஷ வீடுகள்லயும்தான் கூட்டம் அதிகமிருக்கும். இப்ப ஷாப்பிங் மால், துணிக்கடை, நகைக்கடைன்னு கூட்டம் குறையாம இருக்கு. நகை இன்னும் பத்து மடங்கு விலை ஏறினாலும் கூட்டம் குறையுற மாதிரியில்ல.” யசோதா மகளிடம் அங்கலாய்த்தபடி வந்தார்.
“இப்ப எதுக்கும்மா ஷாப்பிங் பண்றோம்?” என்று நட்சத்திரா கேட்க,
“உனக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். அதுக்கான ஷாப்பிங்தான் இது.”
“ம்மா... விளையாடாம என்னன்னு சொல்லுங்க?”
“நான் ஏன்டி விளையாடப் போறேன். எப்படியும் உனக்கு கல்யாணம் பண்ணத்தான போறோம். சும்மாவே அனுப்பிட முடியுமா?”
“என்னவோ இப்பவே கல்யாணம் பண்ற மாதிரி பேசுறீங்க. ஏதோ முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கு.” யோசனையாய் தாயைப் பார்க்க,
“அப்படித்தான் வச்சிக்கோ. அந்தக் கொடி அண்ணன் உன்னை வேண்டாம் சொன்னான்ல. அவனுக்கு சித்திரை முதல் வாரத்துல கல்யாணமாம். அவன் கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடியாவது உன் கல்யாணத்தை முடிக்க வேண்டாமா?”
“ச...சந்துருவுக்கு கல்யாணமா? எப்ப? கொடி என்கிட்ட எதுவும் சொல்லலையேம்மா?” என்றாள் என்னவென்று பிரிக்க முடியா உணர்வுடன்.
“அவனுக்குக் கல்யாணம்னு உன்கிட்ட சொல்றதுக்குக் குற்றவுணர்ச்சி தடுத்திருக்கும்.”
“அம்மா! ஏன் அவன் இவன்னு சொல்றீங்க. கொஞ்சம் மரியாதையா பேசலாம்ல?” தாய் அரிச்சந்திரனை மரியாதையில்லாமல் பேசுவதைப் பொறுக்காது கேட்டுவிட்டாள்.
யசோதா மகளை ஒரு பார்வை பார்க்க, அவரின் பார்வை தாளாது அவளோ வேறுபுறம் திரும்ப, “அரிச்சந்திரன் என்னோட இளையவன்தான? மாப்பிள்ளையா வந்திருந்தா அதுக்கான மரியாதையை கொடுக்கலாம். இப்ப யாரோ ஒரு மூணாவது மனுஷன்தான். இந்த மரியாதை போதும்” என்றார் யசோதா.
“ம்மா... அதுக்காக...”
“அதுக்காகத்தான் உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் சொல்றேன்.”
“ப்ச்... அதை விடுங்கம்மா. கொடி அண்ணன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு யாரு?”
“நதீரா!” என்றார்.
“நதீராவா? அ...அம்மா அ...அது அவர் லவ் பண்ணின பெண்தானே. வேற இடத்தில் கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டதா சந்துரு சொன்னாங்க.” தன்னையும் அறியாத ஒருவித கலக்கம் அவளுள் எழ குரலும் கலங்கியது.
‘சந்துரு! என்று அரிச்சந்திரன் பெயரை வெகு உரிமையாய் வெகு சாதாரணமாய் அழைக்கும் தன் பெண்ணை எப்படி சஞ்சித்திற்கு பேசினோம்’ என்று தன்னையே நொந்து கொண்டார். ‘தான் அவசரப்படாமல் இருந்திருந்தால் எல்லாம் சரியாகவே நடந்திருக்குமோ! இப்பொழுது எல்லாம் மாறி...’ எதையும் யோசிக்காதே மனமே! நடந்தவை நடந்தவையாகவே போகட்டும். நடக்கப்போவதை கவனி என்றது மனது.
“அந்தக் கல்யாணம் நடக்கலையாம். அதனால, இப்ப கொடி அண்ணனுக்கே பேசி முடிச்சிட்டாங்க” என்றார் மகளிடம்.
“அந்தப் பொண்ணு முஸ்லீமாச்சேம்மா. எப்படி சம்மதிச்சாங்க?”
“நல்ல வரன் வந்தா ஜாதியாவது, மதமாவது. பையன் நல்லவன்னு தெரிஞ்சிருச்சி. அப்புறம் அவனை விட கசக்குமா என்ன? ஏன் பொண்ணுக்காக பையன் மதம் மாறமாட்டானா?”
‘அவளுக்கும் இன்ட்ரெஸ்ட் இருந்திருக்கும் போல!’ அர்ஸ் சொன்னது நினைவில் வர ‘ஓ..’ என்ற வார்த்தை மட்டும் வடிவில்லாமல் ஒலித்து “எப்ப கல்யாணம்?” என கேட்க வைத்தது.
“இன்னும் பத்து நாள்தான் இருக்கு. அவங்க வீட்டு கல்யாணத்துக்கும் சேர்த்து நல்லதா இரண்டு சேலை எடுத்துக்கோ நதிமா.”
“அவங்க கல்யாணத்துக்கு எனக்கெதுக்குமா சேலை?”
“கொடி உன்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். அவள் அண்ணன் கல்யாணத்துக்கு நீ போக வேண்டாமா?”
“நான் வரலம்மா” என்றாள் வேகமாக.
“நதி! அவங்ககிட்ட சம்பந்தம் வச்சிக்க பேசினோம், வேண்டாம் சொல்லிட்டாங்க. உன்னைப் பிடிக்காம சொல்லலையே! வேறொரு பெண்ணைப் பிடிச்சதாலதான அப்படி சொன்னாங்க. அதனால, மறப்போம் மன்னிப்போம். உன்னைக் கூட்டிட்டு வர்றதா சொல்லிட்டேன். வா ஜவுளிக்கடை போகலாம்.”
“ம்மா... நான் வரல” என்றாள் பலகீனமான குரலில்.
“நதிமா எதையும் பாசிட்டிவா எடுத்துக்கணும். நீ ஏன் கொடி அண்ணனை உனக்குப் பேசின பையனா பார்க்கிற. ஃப்ரண்டோட அண்ணனா மட்டும் பாரு. பிரச்சனையே இல்லாமல் போயிரும்.”
‘ம்...’ என தலையசைத்தவள் அதன்பின் தாய் சொன்ன எல்லாவற்றிற்கும் தலையாட்டி அச்சுபிசகாமல் அக்கம் பக்கம் பார்க்காமல் செய்து முடித்தாள்.