- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
16
கணவரின் கோவத்தில் மனம் சுணங்கினாலும், “நாம திரும்ப நட்சத்திரா வீட்டுல பேசலாமாங்க?” என்றார் சகுந்தலா.
“புரிஞ்சிதான் பேசுறியா நீ? இப்பப் போயி என்னன்னு கேட்ப? என் பையன் ஆசைப்பட்டது வேற யாரையும் இல்ல, உங்க பொண்ணைத்தான். அந்த நதீரா உங்க பொண்ணுதான்னு சொன்னா, காரித் துப்புவாங்கடி நம்மளை. என் பொண்ணு எவ்வளவு கெஞ்சினா அவனை. ஒரு செகண்ட் அந்த போட்டோவைப் பார்த்தானா? அவரோட காவியக் காதல், போட்டோ பார்த்தா சிதைஞ்சிரும்னுதான பார்க்கலை. உன் பையனைப் பார்க்கப் பார்க்க கோவமா வருது” என்று பல்லைக்கடித்தார் ரவிச்சந்திரன்.
“இவன் சொன்னதுக்காகத்தான எல்லாத்துக்கும் தலையாட்டினேன். படிப்புல இருந்து வேலைவரை எதுக்காகவாவது வற்புறுத்தினேனா? பணம் வேண்டாம் புகழ் வேண்டாம்னு அசிஸ்டெண்டாவே இருக்கான். அவனவன் வக்கீலுக்குப் படிச்சிட்டு, பணம், புகழுக்காக அலையுறான். இவன் நினைச்சா புகழின் உச்சாணிக் கொம்புல இருக்கலாம். அவ்வளவு திறமையிருக்கு இவன்கிட்ட. அந்த தன்யா பொண்ணுகிட்டதான் ஜுனியரா போவேன்னு அடம் பிடிச்சான். சரின்னு அவன் இஷ்டத்துக்கு விட்டு வருஷமும் ஆகிருச்சி. இன்னும் தனி கேஸ் எடுத்து நடத்தினபாடில்லை.”
“உங்க பையன் என்ன பண்றான்னு கேட்கிறவங்ககிட்ட, சென்னையில ஜுனியரா இருக்கான்னு சொன்னா, என்னை ஒரு மாதிரி பார்க்கிறானுங்க. இதுக்கும் மேல சுதந்திரம் யார் கொடுப்பாங்க. ஜுனியரா போனதுக்கு காலேஜ் லெக்சரரா போயிருக்கலாம். பேர் புகழ்னு எதுவும் இல்லாத அமைதியான வேலை. இதுல என் பொண்ணையும் கூடவே கூட்டிக்கிட்டு வந்துட்டான்” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.
“அவள் என் தங்கச்சியும்தான்பா. எதுக்கு இத்தனை கோவம்? நீங்க சொல்ற மாதிரி பேசாம காலேஜ் லெக்சரராவே சேர்ந்திடுறேன்” என்றான் அரிச்சந்திரன்.
“பாருடி நான் என்ன சொன்னா இவன் என்ன புரிஞ்சிக்கிறான்னு.”
“நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன். அப்பா சொன்னதால டீச்சிங் போறேன்னு சொன்னேன்.”
“உனக்கெல்லாம் கோவம் ஒரு கேடாடா?” என்றார் கோவத்தில்.
“வார்த்தை விடுறீங்கப்பா.”
“வார்த்தையை விடு. நீ வாழ்க்கையை விட்டுட்டு வந்து நிற்கிறியேடா. அதை எப்படி சரி செய்றது? சொல்லுடா?” என்றார் மனம் தாளாது.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன் ஏதோ பேச வருகையில், “அண்ணன் வாழ்க்கை எங்கேயும் போகாதுப்பா. நீங்க டென்சனாகாதீங்க.” ரவிச்சந்திரன் மகளை புரியாத பார்வை பார்க்க, “நதிதான் எனக்கு அண்ணியா வரணும்னு இருந்தா அதை யாராலப்பா மாத்த முடியும்?”
“யாரும் எதுவும் கேட்க வேண்டாம்பா. நானே பார்த்துக்கறேன்” என இடையிட்டான் அரிச்சந்திரன்.
“டேய்! நீ பேசாம இரு. பேசி கெடுத்ததுவரை போதும். இனி பெரியவங்க நாங்க பேசிக்கிறோம்” என்றார் பல்லைக்கடித்தபடி.
“அண்ணா நல்லா கேட்டுக்கோ, பெரியவங்க நாங்க” என்று தன்னையும் சேர்த்துக் காண்பித்து, ‘எதற்கும் கவலைப்படாதே’ என்று கண்மூடித் திறக்க, திருப்தியான புன்னகை அவனிடம்.
‘தேங்க்ஸ் டாட். நான் விட்டேத்தியா பேசினா நீங்க இப்படி ஒரு முடிவெடுப்பீங்க தெரியும்.’ தந்தைக்கும், தங்கைக்கும் ஆயிரம் நன்றிகள் சொன்னான் மனதிற்குள். “என்னவோ போங்க” என்பதாய் சலிப்புடன் சொல்லி, “அம்மா டிபன் எடுத்து வைங்க. காலையில சீக்கிரம் எழுந்து கிளம்பணும்” என்றான்.
“எங்கண்ணா?”
“ஒரு புது கேஸ்மா. சுஜய் சாரோட ஆப்போசிட் பார்ட்டி கேஸ் எங்ககிட்ட வந்திருக்கு. சின்ன க்ளாரிபிகேஷனுக்காக சாத்தூர் வரை போக வேண்டியிருக்கு.”
“சாத்தூர் எங்க இருக்குண்ணா?”
“விருதுநகர் மாவட்டத்துல இருக்கு.”
“அவ்வளவு தூரமா? வேற யாரையாவது போகச் சொல்லலாம்லடா” என்றார் தாய்.
“அம்மா... மேம்கு ஜுனியர்னாலும் இந்த கேஸ் முழுக்க முழுக்க நான்தான் பார்க்கப்போறேன். தனியா வாதாடத் தெரியாமல்லாம் கிடையாது. ஒன்ஸ் பேர் புகழ்னு இறங்கிட்டா வெளியில வரமுடியாது. அதனாலதான் கொஞ்ச நாள் ஜுனியராவே இருக்கலாம் நினைச்சேன். அப்பாகிட்ட சொல்லுங்க, சீக்கிரமே தனியா பண்றேன்னு.”
“அப்பா அவங்க ஆதங்கத்தைச் சொன்னாங்கடா. இருந்தாலும் அவ்வளவு தொலைவுக்கு போகணுமா?”
“அம்மா இது ரொம்ப சிக்கலான கேஸ். கொலை கேஸ்களைக் கூட ஈஸியா சால்வ் பண்ணிரலாம். இந்த சொத்து கேஸ் இருக்கு பாருங்க, அதுலதான் இல்லாத சிக்கலே வரும்.”
“நைட் வந்திருவதான?”
“முடிஞ்சா லேட் நைட்னாலும் வந்திருவேன்மா. இல்லன்னா மறுநாளாகிரும்.”
“இதுக்கு நீ லெக்சரராகவே ஆகிருக்கலாம்டா” என்றார் சகுந்தலா.
“ஹா...ஹா மாம் இஸ் ஆல்வேஸ் ஸ்பெஷல்” என்று கன்னத்தில் முத்தமிட இப்பொழுது பொறாமை ரவிச்சந்திரனிடம்.
“டாட் இதுக்கெல்லாம் நாம அசரக்கூடாது. நாமெல்லாம் கெத்து பசங்க” என்றாள் மின்னல்கொடி தந்தையிடம்.
“அது கெத்து இல்லடா மின்னல். வெத்து” என்று அவள் அடிக்க வருமுன் ஓடினான்.
மதுரையில் விமானத்தில் வந்திறங்கிய அரிச்சந்திரன், அங்கிருந்து வாடகைக்கார் பிடித்து முகவரி சொல்லி, விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருக்கும் அந்த பெரிய வீட்டின் முன் இறங்கினான்.
“வாங்க தம்பி. பையன் போன் பண்ணியிருந்தான்” என்று இன்முகத்துடன் வரவேற்றவர், “ஏய் செல்லா இங்க வா லாயர் தம்பி வந்தாச்சி” என்றதும் ரங்கசாமியை விட இரண்டு அங்குலம் அதிக உயரத்தில், வயதுக்கேற்ற உடல்வாகுடன் புன்னகை முகத்துடன் வந்தார் செல்லம்மா.
“விட்டா வெளிய நின்னே பேசி அனுப்பிருவீங்க. நீங்க உள்ள வாங்க லாயர் தம்பி.” உள்ளே வருகையிலேயே ஒவ்வொன்றாக ஆராய்ந்தபடி வந்தவனிடம், “பாத்ரூம் எதுவும் போகணும்னா அந்த ரூம் போங்க. சாப்பிட்டு அப்படியே கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பேசிக்கலாம்” என்றதும் நன்றி சொல்லி அந்த அறைக்குச் சென்று தயாராகி வந்தவன் கண்ணில் பட்டவை அனைத்தும், நல்லவை மட்டுமே!
மதிய உணவு முடித்துக் கணவன், மனைவி இருவரிடமும் பேசியவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. செல்லம்மாள் பெயரில் மட்டுமே. மற்றபடி ஒரு மினி அண்டர்க்ரௌண்ட் தாதா அவர் என்று. சொத்து சேர மூலதனம் அவரின் மூளை செய்த மூளைச்சலவைகளே! தாங்கள் சம்பாதிக்கும், (அப்படித்தான் சொல்லிக் கொள்வார்கள் திடீர் பணக்காரர்கள்.) சொத்தை ஆள சித்தார்த் மட்டுமே போதுமென்று அடுத்து குழந்தை எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை.
மகன் எதை ஆசைப்பட்டாலும், அதை உடனே வாங்கிக் கொடுப்பதை தலையாய கடமையாக வைத்திருப்பவர்கள். அது தரமுள்ளதா? பொன்னா, பொருளா, இல்லை பெண்ணா, எதுவும் கணக்கில்லை மகனுக்குக் கொடுப்பதற்கு.
‘அப்படித்தான் சித்தார்த்தின் திருமணமும் நடந்திருக்குமோ!’ அதெதுக்கு அர்ஸ் நமக்கு. நாம வந்த வேலையை மட்டும் பார்ப்போம். மனசாட்சியைத் தட்டிவிட்டு, “சார் உங்க ஆப்போசிட் பார்ட்டியை பார்க்கலாமா?” என்றான்.
“அவங்களை எதுக்கு லாயர் தம்பி?”
“சார் நமக்குத் தேவையான பாய்ண்ட்ஸ், அவங்க வாய்மொழியாவும் வரலாம். நமக்கு கேஸ் ஜெயிக்கணும். அதுக்கு என்ன வேணுமோ அதைச் செய்யணும்ல.”
“லாயர் தம்பி சொன்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நம்ம மேலதான் தப்புன்னு திருப்பிவிட்டா என்ன செய்யுறது?”
“எங்க மேம் எடுக்கிற கேஸும் தோத்துப் போனதில்லை. போகவும் விடமாட்டாங்க சார். எங்களை நீங்க தாராளமா நம்பலாம். இங்க இருக்கிறதுவரை நான் யாரை மீட் பண்றேன். என்னென்ன பேசுறேன்னு உங்களுக்கு நியூஸ் வந்திரும். இப்பக் கூட உங்க பையனுக்கு நாம பேசுறது போயிட்டுதான் இருக்கு. உங்களுக்குமே நாங்க முழசா இறங்கியிருக்கோம்னு, தெரிஞ்சி நம்பிக்கை வரணும்ல சார்.” தன் வார்த்தையாடலை அழகாய்க் கோர்த்தான்.
“என்ன லாயர் தம்பி நீங்க. உங்களை நம்பாமலா இங்க உள்ள வக்கீலெல்லாம் விட்டுட்டு சென்னை வந்தோம். நாங்க அங்க வரக்காரணம் தங்கச்சி பொண்ணுதான். யாரோ சொந்தக்காரன் மூலமா பெரிய வக்கீல்னு சொல்லி சென்னையில கேஸ் கொடுத்துட்டா. எங்களுக்கும் வேற வழியில்லாமல் போச்சிது.”
‘எதிர் பார்ட்டி புத்திசாலிதான் போல.’ மனதினுள் கணக்கிட்டு “இன்ட்ரெஸ்டிங்! நான் அவங்களை சந்திக்கணுமே? எங்கே இருக்காங்க?”
“பக்கத்துல கொஞ்சம் தள்ளி நடந்துபோற தொலைவுதான் லாயர் தம்பி. டிரைவரோட போங்க” என்றார் ரங்கசாமி.
“நடந்து போற தொலைவுன்னா, கார் எதுக்கு சார்? எனக்கு வீடு காண்பிக்க மட்டும் ஒருத்தரை அனுப்புங்க. நான் போகும்போதே சித்தார்த் சார்கிட்ட பேசிடுறேன்.”
“சரிங்க லாயர் தம்பி. டேய் மாடசாமி! தம்பியை அழைச்சிட்டு திலகா வீட்டுல விட்டுட்டு வா.”
“சரிங்கய்யா. வாங்க தம்பி” என்று முன்னே நடக்க, சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பின் தொடர்ந்தான் அர்ஸ்.
“இதுதான்ங்க தம்பி திலகாம்மா விடு. அங்க இருந்து வந்தேன்னு அவங்ககிட்ட நீங்க சொன்னா, அப்படியே வெளிய அனுப்பிருவாங்க. எதாவது பொய் சொல்லிட்டு போங்க.”
“நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்க” என்று வீட்டைப் பார்த்தவனுக்கு சித்தார்த்தன் வீட்டை ஒப்பிடுகையில் பாதி கூட இல்லாதிருப்பது புரிந்தது.
உரிமைப்பட்டவன் குடிசையில்! ஒட்டிக்கொண்டவன் கோபுரத்தில்! மனிதர்களை நினைக்கையில் ஒரு ஏளனச்சிரிப்பு மட்டுமே அவனுள்.