- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
15
காரியம் முடிந்து இரவு வீட்டிற்கு வந்ததும் “ஏன்மா? பொதுவா இந்தமாதிரி இடங்கள்ல பொண்ணு ராசி சரியில்லை. அதான் பையன் போயிட்டான்னு சட்டுன்னு பழி போடுவாங்க. நான் நிறைய கேஸ்ல நேரடியா பார்த்திருக்கேன். இவங்க ஒரு வார்த்தை கூட தவறா பேசலை. இவங்க பேமிலி க்ரேட்லம்மா” என தான் நினைத்தை தாயிடம் கேட்டான். அதாவது அவனது பாணியில் போட்டு வாங்கினான்.
“காரணம் அது கிடையாது அரி. கேட்டா உனக்கே கோவம் வரும்” என்றார்.
“என்னம்மா சொல்றீங்க? வேற எதுவும்...”
“ம்... அந்தப் பையனுக்கு சின்ன வயசுல ஹார்ட் ப்ராப்ளம் இருந்திருக்கு. அப்பவே ஆபரேஷன் செய்து சரி பண்ணிட்டாங்க. இனி நைன்ட்டி பர்சன்டேஜ் எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லியிருக்காங்க. அதே மாதிரி இத்தனை வருஷத்துல எந்த பிரச்சனையும் வந்ததில்லையாம். அந்த தைரியத்துலதான் நாம பொண்ணு வேண்டாம்னு சொன்னதும், யோசிக்காம அந்தப் பையனைப் பேசிட்டாங்க.”
“நிஜமாவாம்மா?” என்றவனுக்குள் ஆத்திரம் ஒருபுறம் என்றால் குற்றவுணர்ச்சி இன்னொருபுறம்.
“நான் ஏன்டா பொய் சொல்லப்போறேன். பாவம் அந்தப் பொண்ணு. நம்ம செலக்ஷன்தான் தப்பாகிருச்சி. இனி அம்மா சொல்றதைக் கேட்கலாம்னு சம்மதிச்சிட்டா. கடைசியில அதுவும் இப்படி...” என்று எழுந்து சென்றுவிட்டார்.
“ஷிட்! நான் வேண்டாம்னு சொன்னா அந்தப் பொண்ணுக்கு என்னைவிட நல்ல பையனா பார்த்திருக்கலாம்ல. அதை விட்டுட்டு...”
நடந்து கொண்டிருந்த சகுந்தலா திரும்பி, “முடிஞ்சதைப் பேசி ஆகப்போறதில்லை. போய்ப் படுடா” என்றபடி சென்றார்.
‘அதெப்படி பேசாம இருக்கிறது?’ அவனுக்குள் கோவம் சுழன்றது. ‘தாலி கட்டி முடித்ததும் அவன் இறந்திருந்தால் அவளின் நிலை? பெற்றவர்களாக இருந்தும் எப்படி இதை செய்யத் துணிந்தார்கள். இதிலும் ஒரே பெண் அவள். அவளுக்கு என்ன குறைன்னு இப்படி ஒரு அவசரத் திருமணம்?’ மனம் தீயாய் கனன்று கோவம் தலைக்கேற நந்தகுமாருக்கு அழைத்துவிட்டான்.
அரிச்சந்திரனின் எண்ணைப் பார்த்து, ‘இப்ப கொஞ்சம் முன்னாடிதான போனாப்ல. அதுக்குள்ள என்ன?’ யோசனையாய் அழைப்பை ஏற்று ஹலோ சொல்லும் முன், “ஏன் சார் இப்படிப் பண்ணுனீங்க? நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை. எப்படி சார் மனசு வந்தது? அதைக் கேட்டதிலிருந்து மனசு ஆறல சார். உங்க மேல எவ்வளவு மதிப்பு வச்சிருந்தேன். நீங்க போய் இப்படி...” தலையும் இல்லாமல் வாழும் இல்லாமல் அவன் சொல்ல,
யசோதா யாரென்று சைகையில் கணவனிடம் கேட்க, மனைவியை கையமர்த்தி ஸ்பீக்கரில் போட்டு, “என் மதிப்புல என்ன பிரச்சனை வந்திச்சி லாயர் சார்?” என்றார்.
‘லாயர்’ என்றதும் “அரிச்சந்திரனா?” என வாயசைப்பில் யசோதா கேட்க, ஆமென்று தலையசைத்து, “சொல்லுங்க லாயர் சார்? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்?”
“நட்சத்திரா நீங்க பெத்த பொண்ணுதான?” என்றான் காட்டமாய்.
சற்றே கோவம் வந்தபோதும் அடக்கி, “உங்களுக்கு ஏன் லாயர் சார் இந்த சந்தேகம்? யார் வந்து நாங்க அவளைப் பெத்தவங்க இல்லை சொன்னது?”
“யார், யார் சார் சொல்லணும் உங்களுக்கு? நான் சொல்றேன்” என்றதும் நந்தகுமாருக்கு சிரிப்பு வர, “ஹ்ம்... அப்புறம்” என்றார் ஆர்வமாய்.
கணவனையே பார்த்திருந்த யசோதா முறைக்க, கண்சிமிட்டி ‘பேசுறதை மட்டும் கேள்’ என்றார் சைகையில்.
எதையும் கவனிக்கும் நிலையில் அவனில்லாமல் போக, “எப்படி சார் உங்க பொண்ணுக்கு அப்படி ஒரு பையன் பார்த்தீங்க? நான் வேண்டாம் சொன்னா என்னைவிட சிறந்தவனாதான பார்த்திருக்கணும். அதை விட்டுட்டு...”
“சஞ்சித் உ...” ‘உங்களை விட’ என்பதை முழுங்கி, “ரொம்ப நல்லவன் லாயர் சார்” என்றார்.
“ஊர் உலகத்துல அந்த நல்லவன் மட்டும் கிடையாது. நல்லா தேடினா ஏகப்பட்ட பசங்க கிடைப்பாங்க.”
“எனக்குத் தெரிந்து பக்கத்துல இருக்கிற இந்த நல்லவன் போதும்னு தோணிச்சி லாயர் சார். அதான் பேசி முடிச்சிட்டேன்.”
அவரின் பதிலில் பல்லைக்கடித்து வந்த ஆத்திரத்தை நட்சத்திராவின் அப்பா என்பதால் அடக்கியபடி, “அந்த நல்லவர் செத்தது எதனால் தெரியுமா?” என்றான்.
“ஆக்சிடெண்ட்னுதான் எல்லாருக்கும் தெரியுமே லாயர் சார்.” சொல்லும்போதே ‘வேறெதோ இருக்குதோ’ என்று தோன்றாமலும் இல்லை.
“அக்சிடெண்ட் கிடையாது சார், ஹார்ட் அட்டாக். நல்லா கேளுங்க ஹா...ர்...ட் அட்டாக். இதான் உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்த லட்சணமா?” என்றான் மனம் தாங்காது.
இந்தச் செய்தி அவர்களுக்குப் புதிது. நடந்த உண்மையை நட்சத்திரா இன்னும் வீட்டில் சொல்லயிருக்கவில்லை.
“உங்க பொண்ணுக்கு என்ன குறைன்னு, இதய நோய் இருக்குன்னு தெரிஞ்சே அந்த பையனுக்கு பேசுனீங்க? இதுதான் உங்க பெத்த பாசமா?” என்றான் காட்டமாக.
“அதுக்கு வேற ஒரு காரணம் இருக்கு லாயர் சார்” என்றபடி மனைவியை அனைத்தும் உன்னால்தான் என்பதாய் முறைக்க, யசோதாவிற்குமே தன் அவசரம் புரிந்தது. தான் ஒன்று நினைக்க கடவுள் வேறு நினைத்ததை என்னவென்று சொல்வார் அவரும்.
“என்ன காரணம் இருந்தா என்ன சார். தேவதை மாதிரி பொண்ணைப் பெத்து வளர்த்து, இப்படி வாழ்க்கையைச் சீரழிக்கப் பார்த்திருக்கீங்களே? இது எந்த வகையில் சரின்னு நினைச்சீங்க?” மனதில் உள்ள கோவங்கள் அனைத்தும் வெடிக்க, யாரிடம் பேசுகிறோம் என்பதை மறந்து நட்சத்திராவின் வாழ்வை மட்டும் மனதில் கொண்டு பேசினான் அரிச்சந்திரன்.
“லாயர் சார் நீங்க ஓவரா பேசுறீங்க. எங்க பொண்ணுக்கு எது நல்லதுன்னு நாங்க பார்த்துப்போம். இதுல உங்க கருத்து தேவையில்லை” என்றார் அவரும் கோவமாக.
‘நல்லா பேத்தீங்க...’ வாய் வரை வந்த வார்த்தையை முழுங்கி, ‘பொண்ணு வாழ்க்கை போகப்போனது தெரியலை. பார்த்துப்பாங்களாம் பார்த்து.’ மனதிற்குள் கோவத்தில் வார்த்தைகளைக் கொட்டியவன், தன் கோவத்தை அடக்கி, “சப்போஸ் கல்யாணத்துக்குப் பிறகு இது நடந்திருந்தா, அப்பப் பரவாயில்லையா உங்களுக்கு?” என்றான்.
“உங்களுக்கு ஏன் லாயர் சார் இவ்வளவு அக்கறை? வேண்டாம்னு போயிட்ட உங்களுக்கு என்ன திடீர் பரிவு அவள்மேல?” இன்னும் நிதானமாகவே கேட்டார் நந்தகுமார்.
சில நொடி மௌனம் அவனிடம். பின் குரல் இறங்க “நான் மறுத்ததாலதான அவசர அவசரமா பேசி முடிச்சிருக்கீங்க. என்னாலையோ என்ற குற்றவுணர்வுன்னு வச்சிக்கோங்க. தென் யார் வேணும்னா தவறைத் தட்டிக் கேட்கலாம். இதுக்கு மேல பேசினா உங்களை இன்னும் ஹர்ட் பண்ணிருவேன். இனிமேல் எதிலும் அவசரப்படாதீங்க. பை” என்று போனை வைத்தான்.
“ஷப்பா! மழை பெய்து ஓய்ந்த மாதிரியிருக்கு யசோ. அவர் சொல்றதும் சரிதான. தப்பு நம்மமேல வச்சிக்கிட்டு எப்படி பதில் பேச முடியும். இருந்தாலும் லாயர் சாருக்கு இவ்வளவு கோவம் ஆகாது” என்றார்.
“நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றார் யசோதா.
மெத்திருக்கையில் இருந்தபடியே உடலை முறுக்கி, இரு கைகளையும் தலைக்குப் பின் கொடுத்து நெட்டி முறித்து, “என்னென்னவோ நினைக்கிறேன்! எப்படியெப்படியோ நினைக்கிறேன்!” மந்தகாசப் புன்னகை அவரிடம்.
நந்தகுமாரிடம் பேசிவிட்டுப் படுத்தவன் தூக்கம் வராமல் தவிக்க, நட்சத்திரா அவன் முன் தோன்றி, ‘எல்லாம் உன்னால்தான். நீ போட்டோ பார்த்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? அல்லது என் பெயர்தான் இன்னொருவனுடன் சேர்ந்திருக்குமா? அவனும் இல்லாமல் போயிருப்பானா?’ என்று குற்றம் சாட்டினாள்.
தவறு செய்த பாவம் அரிச்சந்திரனிடம். நிறைய யோசனைக்குப் பிறகு அவளுக்கு, “சாரி” என்று மெசேஜ் அனுப்பினான்.
இரண்டு மூன்று முறை கேட்ட டிடிங் சத்தத்தில் என்னவென்பதாய் வரவேற்பறையில் இருந்த மகளின் கைபேசியை எடுத்துப் பார்த்த நந்தகுமார், அறைக்குள் மகளைப் பார்க்க, அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
‘இந்த டைம் யார் மெசேஜ் அனுப்பறது?’ என்று எடுத்துப் பார்க்க, சந்துரு என்ற பெயரில் தொடர்ந்து வந்திருந்த சாரி மெசேஜ்களை, யோசனையுடன் பார்த்தவர் தூக்கமில்லாமல் தவிக்கும் அரிச்சந்திரனின் நிலை உணர்ந்தாரோ!
“எதுக்கு?” என்று மகளுக்குப் பதிலாக அனுப்பினார்.
“நடந்த, நடக்கிற எல்லாத்துக்கும்” என்று பதில் அனுப்பினான்.
“ஒண்ணும் புரியலை?” என்று கேள்வியனுப்ப,
“புரியாமல் இருக்கிறது பல சமயங்களில் நன்மை பயக்கும்” என்றனுப்பினான்.
“எதையும் யோசிக்காம தூங்குங்க சந்துரு” என்றனுப்பி அவனிடமிருந்து வந்த நன்றியுடன் தான் சாட்டிங் செய்த அனைத்தையும் அழித்தவர் மேலே இருந்த மெசேஜைப் பார்த்தார். பெத்த பெண்ணாக இருந்தாலும் இது தவறென்று தெரியாதவரல்ல. இருப்பினும் தனக்குத் தெரியாத மகளின் மனம் தெரிவதற்காக படித்தார்.
படித்து முடித்தவருக்கு ஏனோ இருவரையும் நினைத்து சிரிப்புதான் வந்தது.
அடுத்த ஒரு வாரத்தில் வேளச்சேரியில் நடந்த பெண்ணின் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள் தன்யா குழுவினர். பெண்ணின் முறைப்பையன் மேல் தவறில்லை. அவளின் கணவனின் சந்தேக புத்தியால் அவனும், அவனின் சித்தப்பா பையன்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்து, அவர்களே நல்லவர்கள் போல வழக்கு கொடுத்திருப்பதை நிரூபித்து, அவர்கள் மூவருக்கும் தண்டனை கொடுக்க வாதாடி, அன்றே தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது.