- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
14
காலை இழுத்தபடி வேகமாக சஞ்சித்தை நெருங்குகையில், தன் கைபேசியை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தான். சஞ்சித்தும் தன் கைபேசியை அவனிடம் கொடுத்து, தன்னருகில் இருந்த திருமணப் பத்திரிக்கையையும் அவனிடம் கொடுத்தான். இதயத்தில் ஏற்பட்ட வலி அவனுள் அதிகரிக்க, வலியுடன் அரிச்சந்திரனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு சுரீரென்று பிடித்த வலிதான் எமனின் கயிறோ! சஞ்சித் என்பவனின் பூவுலக அத்தியாயம் நிறைவுபெற்றது.
அவசர ஊர்திக்கு கூட்டத்தில் இருந்தவர்கள் போன் செய்திருக்க, காரிலிருந்த பெண்ணின் அலறலும், அழுகையும் அதிகரித்ததும் இறந்தவனை விடுத்து காலை இழுத்தபடி சென்றவன் தன் வலியைத் தாங்கி, அப்பெண்ணைப் பின்னால் அமரச்சொல்லி, அவள் கணவனுக்கு தண்ணீர் தெளித்தும் எழாமல் போக, அவனை பக்கத்தில் நகர்த்தி தன் வலியைப் பொறுத்து, தூரத்தில் ஒரு மருத்துவமனையின் பெயர் தெரிய காரை அங்கேவிட்டான்.
இருவரையும் அவசரப்பிரிவில் சேர்த்து தன் முகவரி சொல்லி, சற்று நேரம் அர்ந்திருந்தவன் நினைவுகள் யாவும் சஞ்சித்தைச் சுற்றியே!
பால்கனியில் அமர்ந்து பக்கத்து வீட்டு சிறுவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்திருந்தவளை கைபேசி சத்தமிட்டு அழைத்தது. யாரென்பதாய் பார்த்தவள் சந்துரு பெயரைக் கண்டு ஆச்சர்யப்பட்டாள். ‘இதுவரை அவன் அழைத்ததில்லை. மெசேஜுடன் தங்கள் பேச்சு முடிந்துவிடும். அப்படி இருக்கையில் முதல்முறையாக, அதுவும் ஒரு மணிநேரம் முன்னதான் பார்த்தோம். திடீர்னு எதுக்கு போன் பண்றாங்க? எடுக்கவா? வேண்டாமா? தவறு செய்கிறோமோ’ என்றெண்ணி எடுக்காமல் விட்டாள்.
“பிக்கப் நதி” என திரும்பவும் அவளுக்கு அழைக்க, இம்முறை எடுத்து அவள் ‘ஹலோ’ சொல்வதற்குள், “வீட்டுல பெரியவங்க இருந்தா போனை அவங்ககிட்டக் கொடு” என்றான்.
“ஏ...ஏன் எதாவது பிரச்சனையா?”
“ஆமா. பிரச்சனைதான். வேகமா போய் போனைக் கொடு” என்று விரட்ட,
“இ...இதோ கொடுக்குறேன்” என்று தாயிடம் சென்று கைபேசியை நீட்டினாள்.
“யார் நதிமா?” என யசோதா கேட்டதும், “கொ...கொடி அண்ணன்மா.” தாய் எதாவது சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் எச்சில் விழுங்கியபடி சொன்னாள்.
மகளை அழுத்தமாய் பார்த்து அவளிடம் கேட்க நிறைய இருந்தாலும் “ஆன்ட்டி” என்ற குரலில், “சொல்லுங்க தம்பி. என்ன விஷயமா போன் செய்திருக்கீங்க?” என்றார்.
“நான் சொல்றதைப் பதறாம கேளுங்க. மிஸ்டர்.சஞ்சித்கு ஆக்சிடெண்ட்டாகிருச்சி.”
“என்னது ஆக்சிடெண்டா?” என்ற தாயின் அலறலில், “யாருக்கும்மா?” என்றபடி அவளும் வர, “எ...எப்படிப்பா?” என கேட்டார்.
“அவர் பைக் கார்ல மோதி...”
“உயிருக்கொண்ணும் ஆபத்தில்லையே?” என்று பயந்துபோய் கேட்க, அவனின் சில நொடி அமைதியில் அவர் மனம் கண்டதையும் நினைத்துக் குழம்பியது.
“அ...அது அவர் ஸ்பாட்ல இறந்துட்டார். அந்த ஆக்சிடெண்ட்ல இன்னொரு பொண்ணு பிரசவ வலியில துடிச்சதால, அவங்களையும், அவங்க ஹஸ்பண்டையும் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன். அவரை ஆம்புலன்ஸ்ல ஜி.ஹெச் கொண்டு போயிருப்பாங்க. ஆன்ட்டி எதாவது பேசுங்க...” என்றான் சத்தம் இல்லாததை உணர்ந்து.
கண்ணீருடன் அசையாது நின்றிருந்த தாயிடம் இருந்து கைபேசியை வாங்கி, “யாருக்கு என்னாச்சி சந்துரு?” என்றாள் குரலில் தடுமாற்றத்துடன்.
‘எப்படி சொல்வேனடி பெண்ணே! நாளைய உன் கணவன், இன்று இல்லையென்று. அர்ஸ் நீ வக்கீல். எமோஷனலைக் குறை’ என தன்னைத்தானே அதட்டி, “மிஸ்டர்.சஞ்சித்கு ஆக்சிடெண்ட்” என்றான்.
“சஞ்சித் அத்தானுக்கா? அவருக்கு என்ன?” என்றவளுக்கு தாயின் நிலையே எதையோ உணர்த்தியது.
“ஸ்பாட் அவுட். பாடி இந்நேரம் ஜி.ஹெச் போயிருக்கும். எதுக்கும் நியூஸ் வச்சிப் பாருங்க” என்றதும் வேகமாகத் தொலைக்காட்சியில் செய்தி வைக்க, ஒவ்வொரு சேனலாக மாற்ற, “நதி... நதீரா டென்சனாகாத. பெரியவங்களை நீதான் பார்த்துக்கணும்” என்றது எதுவும் அவள் காதில் விழாமல் போக, தொலைக்காட்சியில் சஞ்சித்தின் உடலைப் பார்த்து அலறி அழ ஆரம்பித்தாள்.
கைபேசியில் எதுவும் செய்ய முடியாதென்று அழைப்பைத் துண்டித்து தங்கையை அழைக்க, “ஆபீஸில் இருக்கேன்” என்றவளை கிளம்பி நட்சத்திராவின் வீட்டிற்கு போகச் சொல்லி அதற்கான காரணமும் சொன்னான். அதிர்ந்தாலும் அனுமதி கேட்டு உடனே கிளம்பியிருந்தாள். அப்படியே தாய்க்கும் சொல்லி காவல்துறைக்கும் தெரிவித்திருந்தான்.
மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கணவன் மனைவி இருவரும் அபாயகட்டத்தில் இருக்க, காரிலிருந்து எடுத்த கைபேசி மூலம் அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தான் அரிச்சந்திரன். அரசு மருத்துவமனையில் விபத்து பற்றி காவல்துறை வந்து விசாரணையைத் துவங்க, விபத்தை நேரில் பார்த்த சாட்சி என்பதால் அரிச்சந்திரனை விசாரணைக்கு வரச்சொன்னார்கள்.
தன் அடையாள அட்டையை அந்த தனியார் மருத்துவமனையின் வரவேற்பறையில் கொடுத்த நேரம், பிரசவ வலி வந்த பெண்ணின் உறவினர்கள் வர பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துஅரசு மருத்துவமனை கிளம்பி நேரே போஸ்ட்மார்ட்டம் நடக்கும் இடம் வந்தான்.
அங்கு சஞ்சித், நட்சத்திரா குடும்பங்கள் அழுதபடி இருக்க, அவர்களிடம் சென்று என்ன பேசுவதென்று தெரியாமல் நின்றிருந்தான். அங்கு நின்றிருந்த நந்தகுமாரைக் கண்டவன், ‘இவர் நதியின் அப்பாவாகத்தான் இருக்கும்’ என்று அவரிடம் சென்று, “எவ்வளவு டைமாகும் சொன்னாங்களா?” எனக்கேட்டான்.
“தெரியலை. டைம் சொல்லலை” என்று யாரென நிமிர்ந்து பார்த்தவர் பேச மறந்து நின்றார். அரிச்சந்திரனை நந்தகுமார் இப்பொழுதுதான் நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார். ஒரே ஏரியாக்கள் என்பதால் அவ்வப்பொழுது கண்ணில் பட்டிருக்கிறான்தான். பெண்ணுக்குப் பேசும் வரை இன்னாரென்று தெரியாதிருந்தது. இப்பொழுது தெரிந்து அருகே பார்க்கிறார்.
அங்கிருந்த காவலரைச் சந்தித்துத் தன்னை அறிமுகப்படுத்தி, விபத்து சம்பந்தமான விளக்கம் கொடுத்து மீண்டும் நந்தகுமாரிடம் வந்தான்.
அப்பொழுதுதான் அவனை நன்றாக கவனித்தார். அவன் வலது காலை இழுத்தபடி நடப்பதைப் பார்த்தவருக்குத் தன்னாலேயே பதற்றம் எழ “கால்ல அடிபட்டிருக்கு போல? வாங்க டாக்டரைப் பார்த்துட்டு வரலாம். இவ்வளவு நேரம் ஹாஸ்பிடல்லதான இருந்தீங்க ஏன் பார்க்கலை?” என்றார்.
“ஆக்சிடெண்ட் மூணு வண்டிக்கும்தான் சார். அவங்களைக் கம்பேர் பண்ணும்போது எனக்குக் கொஞ்சம், இல்ல ரொம்பவேக் கம்மிதான்.”
“பேண்ட் கிழிஞ்சி முழுக்க ரெத்தமாயிருக்கு. முதுகுல ரெத்தம் நின்ன மாதிரித் தெரியல. இதென்ன விளையாட்டு விஷயமா? அடி அதிகம் இல்லன்னு சொல்றீங்க? நீங்க வாங்க எதாவது செப்டிக்கானா பிரச்சனையாகிரும்” என்று அவனை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்து, அடிபட்ட காயத்திற்குக் கட்டுப்போட்டு இரத்தம் கன்றிய இடங்களுக்கு மருந்திட்டு, முதுகில் அடிட்ட இடத்திற்கு நான்கு தையல் போட்டு கட்டுப் போட்டார்கள்.
“அப்பவே பார்த்திருக்கலாமே” என தன் ஆதங்கத்தை நந்தகுமார் வெளியிட,
“சார் அந்த இடத்துல ஒரு உயிர் போயி, மூணு உயிர் துடிச்சிட்டிருந்தது பெருசா தெரிஞ்சதால, என்னோட வலி அந்தளவு தெரியல. நீங்களா பார்த்துச் சொல்றது வரைக்கும் அதைக்கூட நான் உணரலை. கண்முன்னால நடந்த கோரத்துக்கு முன்னால வலியாவது ஒண்ணாவது. ஸ்ஸ்...” என்றவனுக்கு இப்பொழுதுதான் வலியின் சாயல் முகத்தில் தெரிந்ததோ!
“நீங்க வீட்டுக்குப் போங்க லாயர் சார். இங்க உள்ளதை நாங்க பார்த்துக்கறோம்” என்றார்.
“போலீஸ் பற்றி உங்களுக்குத் தெரியலை. கேஸ் முடியுறதுவரை எந்நேரம் வேணும்னா கூப்பிடுவாங்க. அவங்ககிட்ட இதான் ரீசன்னு சொல்ல முடியாது. நான் முடியுறதுவரை இங்கேயே இருக்கேன். அநேகமா மிஸ்டர்.சஞ்சித் உடலை நாளைக்கு காலையிலதான் தருவாங்க நினைக்கிறேன்.”
“எனக்கும் அதுதான் தோணுது” என்றார் நந்தகுமார்.
தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வர, எடுத்து யாரெனக் கேட்டவன் பின், “சொல்லுங்க இன்ஸ்பெக்டர்?” என்றான்.
‘தாயும் சேயும் நலம்! குழந்தையின் அப்பாவும் அபாயகட்டம் தாண்டியாகிற்று’ என்று தெரிவித்தவர் அதன்பின் தன் விசாரணைக்குத் தேவையானதைக் கேட்டார். அவரிடம் பேசி முடித்து நந்தகுமாரிடம் விஷயத்தைச் சொன்னான்.
‘ஒரு இறப்பு! ஒரு பிறப்பு!’ கடவுளின் கணக்கை என்னவென்று சொல்வார்.
சஞ்சித்தின் உடல் காலை பதினோரு மணியளவில் வீடு வர, வாசல் வைத்தே அனைத்து சடங்குகளும் முடித்து, மாலையில் எரியூட்ட எடுத்துச் சென்றார்கள்.
விபத்து என்பது தற்செயலாய் தவிர்க்க இயலாமல் நடப்பது. வேண்டுமென்றே யாரும் செய்வதில்லை. இந்தப் பொன்மொழிக்கிணங்க ‘நல்லதுக்காக சிலவற்றை மறைக்கலாம்’ என்ற வள்ளுவரின் வார்த்தையை மதிக்கும் நம் அரிச்சந்திரன், இன்டிகா காரில் வந்தவர்கள் மேல் எந்தத் தவறும் இல்லையென்று கார் தம்பதிகளை வழக்கில் இருந்து விடுவித்திருந்தான்.
அவனுக்குத் தெரியும் கார் ஓட்டியவன் மேலும் தவறு இருப்பது. வலது பக்கம் போன கார், இடது பக்கம் முட்டி நின்றது போலீஸுக்கும் நெருடல்தான். சிசிடிவி புட்டேஜ் பார்க்க அதுவோ காற்றுக்கு குடை சாய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. எனவே அரிச்சந்திரன் வாக்குமூலம் போலீஸால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சஞ்சித்தின் வழக்கை விபத்து என்று முடித்துவிட்டார்கள்.