- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
13
“என்ன மேம் இன்னும் யோசனை? சார் நீங்க சொல்லுங்க? நீங்க கேஸ் எடுத்தா வின்னிங் கன்பார்ம்னு சொன்னாங்க. அதோ போர்டுல எழுதியிருக்கே பொய்மையும் வாய்மையிடத்தன்னு அதுமாதிரி நல்லதுக்காக சில பொய் சொல்லலாம்.”
‘எங்க குறள் எங்களுக்கேவா! ஒரு குடும்ப சொத்தை சும்மாவே சுவாகா பண்ணிட்டு, எந்த குற்றவுணர்வும் இல்லாம எப்படிப் பேசுறான். இவனைப்போய் வர்ணிச்சேனே! டேய் அர்ஸ் அந்த முறுக்கு மீசை கட்’ என்றான் மனதினுள்.
“ஒரு டென் மினிட்ஸ் வெளில இருக்கீங்களா? நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு உங்களுக்கு முடிவை சொல்றோம்.”
“யா ஸ்யூர்” என்று வெளியே செல்ல, வாதி பிரதிவாதியின் பலம் பலவீனம் தெரிந்திருந்ததால் தங்களுக்குள் விவாதிக்காமலே சித்தார்த் வந்ததும் தங்கள் முடிவைச் சொன்னார்கள்.
“கேஸ் இல்லாமல் ஆக்கணும்னா, நிறைய வேலை செய்யணும் மிஸ்டர்.சித்தார்த். நைன்ட்டி ஃபைவ் பெர்சன்ட் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறோம். மீதி ஃபைவ் பெர்சன்ட் எதாவதுன்னா, நம்ம பேட் லக் சித்தார்த். அது உங்ககிட்ட உள்ள ஃபால்ட்லதான்னாலும் அதை உங்களால ஏத்துக்க முடியுமா? எங்க கேஸ்ல எல்லாமே அப்டேட்டா யாரை எங்க விசாரிக்கிறோம்னு உங்களுக்கு வந்திரும். உங்களுக்குத் தெரியாம எதையும் நாங்க செய்யமாட்டோம். இந்த நம்பிக்கை இருந்தா நான் இந்த கேஸை எடுத்துக்கறேன். அரிச்சந்திரன்தான் உங்க கேஸ்காக வேலை செய்யப்போறது. இவர் எப்பவும் உங்க கான்டாக்ட்லயே இருப்பார். இப்ப உங்க முடிவை சொல்லுங்க?” என்று முடிவை அவனிடம் விட்டாள் தன்யா.
“நான் உங்களை நம்புறேன். கேஸ் எடுப்பீங்களான்னு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்தது. இப்ப க்ளியர். தேங்க்யூ” என்று புன்னகைத்தான்.
“மிஸ்டர்.சித்தார்த் ஒண்ணு கேட்கலாமா?”
‘கேளுங்க’ என்பதாய் அவன் பார்வையிருக்க, “பேசாம உங்க அத்தை மகளை கல்யாணம் பண்ணிட்டு சுமூகமா போகலாமே?”
“அது முடியாது மேம். எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிருச்சி. என் ஒய்ஃப் என்னோட சண்டை போட்டுட்டு ஊரைவிட்டே போயிட்டா. வருஷக்கணக்கா அவளைத்தான் தேடி அலையுறேன். இதுக்கிடையில் இந்த மங்கம்மாவோ மாரியாத்தா டான்ஸ் ஆடுறா” என்றான் கோவத்தில்.
“மங்கம்மாவா? ஹூ இஸ் ஷி?”
“ஷி இஸ் வெண்மதி. திலகவதி அத்தை பொண்ணு. பெரிய ஐபிஎஸ்னு நினைப்பு அந்த மங்கம்மாளுக்கு. எதையாவது சாதிக்கணுமாம். அதனாலதான் கேஸ் அது இதுன்னு என்னை இழுத்தடிச்சிட்டிருக்கா” என்றான் சற்றே கோவமாக.
“இன்ட்ரெஸ்டிங்” என்றான் அரிச்சந்திரன்.
சித்தார்த் அவனை முறைக்க,
“ஓகே மிஸ்டர்.சித்தார்த் எதிர் பார்ட்டிகிட்ட இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்ததும் சொல்லுங்க. அதுக்குள்ள தேவையான டீடெய்ல்ஸ் கலக்ட் பண்ணி நாமளும் கேஸ் பைல் பண்ணிரலாம். சொத்து வழக்குன்றதால இன்னைக்கு ஆரம்பிச்சி நாளைக்கே முடிஞ்சிரணும்னு எதிர்பார்க்க முடியாது. பொறுமை முக்கியம். ஏன்னா சிலபல மாதங்கள் ஆகலாம். நிறைய கேஸ் வருடக்கணக்கா போயிட்டிருக்கிறதைக் கேள்விப்பட்டிருப்பீங்க. ஆமா இப்ப எங்க தங்கியிருக்கீங்க?”
“என் ஒய்ஃப் இங்க சென்னையிலதான் இருக்கா. அவளைத் தேடிக் கண்டுபிடிக்கிறது வரை ஹோட்டல் செட்டாகாதுன்னு, சைதாப்பேட்டையில் ஒரு ப்ளாட் வாங்கிட்டேன்.”
“அவங்களைக் கண்டுபிடிக்க எதாவது ஹெல்ப் வேணுமா?”
“நோ லாயர் சார் தேங்க்ஸ். அது என் பெர்சனல். நானே பார்த்துக்கறேன்” என்றான் வேகமாக.
அவனின் பதற்றம் ஏதோ சரியில்லையென்றதோ! அவனை எப்படி கணிப்பதென்று புரியவில்லை. குரலில் அத்தனை கடினமில்லை. அனைவருக்கும் மரியாதையை அள்ளித் தெளிக்கிறான். செய்யச் சொல்வதோ கிரிமினல்தனம்.
‘கடவுள் பாதி! மிருகம் பாதியோ!’ புன்னகைதான் வந்தது அரிச்சந்திரனுக்கு.
‘உன் லவரைக் கூட இந்தளவு ஆராயலைடா அர்ஸ். அப்படி ஆராய்ந்து அறிந்திருந்தால் இரண்டு நாள்ல அவளுக்கு மட்டுமா திருமணம் நடக்கும்? ஹ்ம்...’ ஏக்கப்பெருமூச்சு அவனிடம்.
மனது சரியில்லாததால் சீக்கிரமே வேலையை முடித்து வீடு திரும்பிய அரிச்சந்திரன். ஏதோ ஒரு உந்துதலில் அந்த பூங்காவினுள் நுழைந்துவிட்டான். சில நிமிடங்கள் அமைதியாக அமர இடம் பார்க்க, அன்று அவன் எந்நிலையில் இருந்தானோ, அதேபோல் நட்சத்திரா அமர்ந்திருந்தாள்.
திருமணமாகப் போகும் பெண் இப்படி அமர்ந்திருந்தால் தப்பாகிற்றே! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற கீதாசாரம் படி அவள் வாழ்வில் நல்லதே நடக்க வேண்டுமென்று மனதார வேண்டி, அவள் இருந்த இருக்கையில் ஒரு ஆள் இடைவெளி விட்டு அமர்ந்தான்.
“என்னாச்சி? எதாவது பிரச்சனையா?”
அவன் வந்தமர்ந்ததுமே அவனை உணர்ந்திருந்தவள் திரும்பிப் பார்க்காமலேயே, “பிரச்சனைன்னாதான் பார்க் வரணுமா? நீங்க கூடதான் இங்க வந்திருக்கீங்க. அப்ப உங்களுக்கும் பிரச்சனையா என்ன?”
“கேள்வி வாபஸ் மேடம்ஜி” என்றான் புன்னகையுடன்.
“வேலைக்குப் போகலையா?” என்று கேட்டபடி கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், “மணி இரண்டரை ஆகுது சாப்பிட்டீங்களா?” என்றாள்.
“பசியில்லமா. அப்புறமா சாப்பிட்டுக்கலாம்” என்றான்.
ஏனென்பதாய் நேரே உட்கார்ந்து அவன் முகம் பார்க்க களைத்துப்போய் உடல் சோர்ந்திருந்தான். “ஒரு நிமிஷம்” என்று வேகமாக சென்றவள் சிறிது நேரம் கழித்து கையில் சின்ன பையுடன் வந்து அதை அவனருகில் வைத்து, “சாப்பிடுங்க” என்று அருகிலேயே அமர்ந்தாள்.
புரியாமல் இருந்தவன் அவள் செயலில் ஆச்சர்யப்பட்டுப் போனான். ‘இந்த அன்பு தனக்கில்லை’ எனும்போது கண்ணைக் கரித்தது அவனுக்கு.
“என்ன பார்த்துட்டு இருக்கீங்க? சாப்பிடுங்க?” என்றாள் மறுபடியும்.
“நான் வீட்லபோயி சாப்பிட்டிருப்பேன். நீ ஏன் கடைக்குப் போன?” என்று கடிய,
அழகாய் புன்னகைத்தவள் முக்காடிட்ட துப்பட்டாவை தோளில் சரியாகப்போட்டு, “நீங்க பசியில இருப்பீங்க தோணிச்சி. கடை எங்க தெரு லைன்ல உள்ளதுதான். சோ, நோ ப்ராப்ளம். நீங்க சாப்பிடுங்க” என்று பையில் இருந்த பர்கரை எடுத்துக் கொடுத்தாள்.
“ரெண்டு பன்னுக்குள்ள பச்சைக் காயை வச்சி சாப்பிட்டா பர்கர். அதுக்குள்ளே வெண்ணெய் வச்சா பட்டர் பண்” என்று சிரித்து ஒரு வாய் கடித்தபடியே “நீ சாப்தியா?” எனக்கேட்டான்.
“புரியல? தெளிவா சொல்லுங்க?”
‘வெய்ட்’ என கை காண்பித்து வாயில் உள்ளதை வேகமாக மென்று, அவள் தண்ணீர் பாட்டில் திறந்து தர, வேகமாக ஒரு மடக்குக் குடித்து, “நீ சாப்பிட்டியா கேட்டேன்?” என்றான்.
“இல்லங்க. போய்தான் சாப்பிடணும்” என்றதும் அவளை முறைத்து, வேகவேகமாக பர்கரை உள்ளே தள்ளி, தண்ணீர் குடித்து, எழுந்து சென்று ஓரமாக கைகழுவி தண்ணீர் கேனை அவளிடத்தில் வைத்து, எதுவும் பேசாமல் வெளியே சென்றான்.
“ஏன் இந்த வேகம்? எங்க போறீங்க?” என்ற வார்த்தைகள் காற்றோடு கலக்க, அவன் குடித்து வைத்த தண்ணீரை எடுத்தவள் சிறு புன்னகையுடனே தொண்டைக்குள் சரிக்க, இதமாய், சுகமாய் இறங்கியதோ! சிறு சிறு பைத்தியக்காரத்தனம்தானே காதல்!
சில நிமிடங்களில் வேகமாக வந்தவன் கையிலிருந்ததை அவளிடம் நீட்ட, “பதிலுக்குப் பதிலா?” என கேட்டு அவனை முறைத்தாள்.
“இல்லமா பசிக்குப் பசி. பர்கர் சாப்பிடற அவஸ்தை உனக்கு வேண்டாம்னுதான், ப்ரட் ஜாம் வாங்கிட்டு வந்தேன்” என்றான் மென்மையாக.
“இது தப்பில்லையா?”
“ஹோ! நீங்க செய்தா சரி. அதையே நான் செய்தா தப்பா? முதல்ல சாப்பிடு. அன்னைக்குப் பார்த்ததுக்கு கண்ணு உள்ள போய், ரொம்ப டல்லாயிருக்க. உடம்பைப் பார்த்துக்க மாட்டியா நீ?” கொஞ்சம் கண்டிப்புடன் கேட்டான்.
‘இந்த அன்பு தனக்கில்லை’ என்று கண்ணைக் கரிப்பது அவள் முறையானது. ‘என்னை அவ்வளவு கவனித்தாயா நீ? பின் ஏனடா என்னை...?’ உள்ளக் குமுறல்கள் முற்றுப்பெறாது கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்ய, அதை அடக்க பிரட்டை எடுத்து ஜாம் வைத்து கடித்தாள்.
அடுத்தடுத்து சாப்பிட அவனே ஜாம் தடவிக்கொடுத்தான்.
கண்கள் விரியப் பார்த்தவளைக் கண்டுகொள்ளாது, “பிரட் நான் கிடையாது. உன் கையில இருக்குது பார் அதுதான். அதைப் பார்த்து சாப்பிடு. என்னையெல்லாம் சாப்பிட முடியாது” என கேலியாக அவன் பேசிய வார்த்தையில் சட்டென்று புரையேறியது நட்சத்திராவிற்கு.
வேகமாய் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, அவள் தலையில் லேசாகத் தட்டி, “சாரிமா சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். இப்படியாகும்னு நினைக்கலை. ரியலி சாரி” என்றான்.
சில நிமிட இடைவேளைக்குப் பின், மீண்டும் பிரட்டை நீட்ட, வேண்டாமென மறுத்தவளை மறுக்க வழியில்லாது கையில் திணித்து சாப்பிடச் சொல்ல, சின்னச் சிணுங்கலுடன் வாங்கி வேடிக்கை பார்த்தபடி சாப்பிட, அவனோ அவளைக் காதலுடன் பார்த்திருந்தான்.
யதார்த்தமான உரையாடல்கள்! யதார்த்தமான சந்திப்பு! மனப்பெட்டகத்தில் புதைக்கப்போகும் இந்நிமிடங்கள்! சிறு பெருமூச்சு அவனிடம்.
பிரட் உண்டு முடித்ததும், அவள் வாங்கி வந்த வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்து பழச்சாறும் தர, “போதும் சந்துரு. இதுக்குமேல என்னால முடியாது. ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.
“எஸ்கேப்பாக முடியாது. ம்...” என்று வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தான்.
‘ரொம்பப் பண்றடா நீ!’ மனதினுள் கொஞ்சி மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், அவனுக்கும் ஒன்றைக் கொடுத்தாள். இருவரும் சாப்பிட்டு முடித்து கையைக் கழுவி குப்பையை அதற்கான டப்பாவில் போட்டு, திரும்பவும் அதே பெஞ்சில் சிறு இடைவெளியில் அமர, துப்பட்டாவில் கைதுடைத்து அதன் இன்னொரு முனையை அவனிடம் நீட்ட, அதே நேரம் அவனும் தனது கைக்குட்டையை அவளிடம் நீட்டினான்.
அதன் பின்னரே தன் தவறு புரிய, “சா...சாரி” என்றாள் வேகமாக. தன்னைத் தவறாக எண்ணிவிடுவானோ என்ற பயம் மனதினுள். இன்னும் இரண்டு நாளில் தான் யாரோ, இவன் யாரோ என்பது மறந்திருந்தது அவளுக்கு.
“ஹேய் நதி! இட்ஸ் ஓகே. நான் கூடதான் கர்சீப் தர வந்தேன். யதார்த்தமா நடக்கிற விஷயங்களுக்கு ஏன் எமோஷனலாகிட்டிருக்க?”
அவன் எளிதாகச் சொல்லிவிட்டாலும், ஏதோ ஒருவித தவிப்பு அவளுள். பெண்ணவள் தவிப்பை அவள் முகம் காட்டிக்கொடுத்தது. ஆணவனோ அதைத் தனக்குள் புதைத்துக் கொண்டான். ‘தன்னிடம் இருந்தால் மட்டுமே அவளின் இயல்பு மாறாதோ!’ என்றுதான் தோன்றியது அரிச்சந்திரனுக்கு.
“சரிமா நான் கிளம்புறேன்” எனும்போது போன் வர, “எஸ் மேம். வேளச்சேரியில நடந்த கொலைக் கேஸா? அந்தப் பொண்ணோட ஹஸ்பண்ட் மேலதான் மேம் சந்தேகம். அந்தக் கேஸ் நம்மகிட்ட வருதா? ஹா...ஹா செஞ்சிரலாம் மேம். இப்ப அந்தப் பொண்ணோட மாமன் மகன்மேல சந்தேகம்னு கேஸ் போட்டிருக்கு. அப்படியே போகட்டும் நான் பார்த்துக்கறேன். நான் அந்தப் பொண்ணோட அப்பா, அம்மாவைப் பார்த்து பேசிட்டு, இன்னும் இரண்டு மணிநேரத்துல உங்களை மீட் பண்றேன்.”
அவன் பேசுவதை சுவாரசியமாக பார்த்திருந்தவள், அவன் சிரிப்பில் சற்று சிதைந்துதான் போனாளோ! அவளும்தான் என்ன செய்வாள்! அவன் அழைப்பைத் துண்டித்தது தெரிய சட்டென்று முகபாவத்தை மாற்றிக் கொண்டாள்.
“கடமை அழைக்குது. சரி நீ பார்த்துப்போ. அதிக நேரம் இங்க தனியா உட்காராத. எவன் எப்படின்னு தெரியாது.” அவனின் அனைத்திற்கும் ‘ம்..’ என்று தலையசைக்க மட்டுமே செய்தாள்.
அவளைக் கடந்து தூரம் சென்றவன் மனம் தாளாது திரும்பி வந்து, “ஜாக்கிரதையா போ” என்று புன்னகையுடன் திரும்பிச் சென்றான். அவனின் புன்னகை அவளையும் தொற்றியதோ! புன்னகை மாறாது எதையும் யோசித்துக் குழம்பாது, அப்படியே அமர்ந்திருந்தாள் அந்நட்சத்திரப் பெண்!