• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
பகுதி 8

"என்ன ரோஜா அப்படி பாக்குற?" என்று கனகா ரோஜாவை கேள்வி கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தாள்.
"இவன் இங்க என்ன பண்ணுறான்னு ரோஸ்க்கு சந்தேகம் போல" என்று துர்வா கனகாவுக்கு பதில் தந்தவனின் கண்கள் ரோஜாவை பார்த்து கொண்டு இருந்தது.
"அப்படியா ரோஜா? அதுதான் உன் பார்வைக்கு அர்த்தமா?" என்று கனகா கேட்டாள்.
"துர்கா நீங்க எப்படி இங்க?" என்று ரோஜா கேட்க,
"ம்.... உன்னை பாக்க தான் வந்தேன். ஏன் நான் வர கூடாதா?" என்றான் துர்வா.
"நான் இங்க இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும்?”
"ரோஜா மேடம். உன் துர்கா என் மோகனோட நண்பன்" என்றாள் கனகா.

"என்ன கனகா சொல்ற?”
துர்வா, "ஆமா ரோஸ். மோகன் என் நண்பன்."
"அது மட்டும் இல்ல ரோஜா. எங்க கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டதே துர்வா தான்" என்றாள் கனகா.
"ஆனா...” மேலே கேட்காது நிறுத்தினாள்.
"என்ன ஆனா? இப்போ எப்படி துர்வா இங்க வந்தான்னு கேக்க போறியா?"
"ம்..." என்றாள் ரோஜா.
"உனக்கு தலையில அடிபட்டு நீ துர்வா வீட்டுக்கு போன கதையை சொன்ன பாரு. அப்போவே நீ இவனை பற்றி தான் சொல்றேன்னு நான் தெரிஞ்சிகிட்டேன். நேத்து தான் துர்வாக்கு போன் பண்ணி நீ என்கூட தான் இருக்கன்னு சொன்னேன்."
"ஆனா.” என்றாள் திரும்பவும்.
"இரு இரு. ஏன் இந்த விஷயத்தை இவன்கிட்ட சொன்னேன்னு எல்லாம் கேக்காத. துர்வாவோட குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு நீ அன்னைக்கு சொன்ன இல்ல. அத விசாரிக்க தான் இவனுக்கு கால் பண்ணேன். எனக்கு எப்படி விஷயம் தெரியும்னு கேட்டான். அதான் நீ இங்க இருக்குற எல்லா விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு."
"எல்லாம்னா?" என்றாள் புரியாது.
“எல்லாம் தான் ரோஸ்" என்றான் துர்வா.
"இல்ல துர்கா நான்..."
“லீவ் இட் ரோஸ். பாஸ்ட் பற்றி பேச வேணாம்.”
"அம்மா... இந்த ரூம்ல விளையாட்டு எல்லாம் இல்லையா?” என்று குழந்தை கேட்க,
"திக்ஷி பாப்பாவுக்கு விளையாட என்ன வேணும்?”
"அவளுக்கு இப்போ நீ மட்டும் போதும். அதனால அவளை தூக்கிகிட்டு கீழே வா." என்று ரோஜாவை அழைத்த கனகா கீழே இறங்கி செல்ல, துர்வா ரோஜாவிடம் இருந்து குழந்தையை தன் வசம் வாங்கி கொண்டவன்
"என்ன ரோஸ். உனக்கு நான் இங்க வந்தது பிடிக்கலையா?” என்றான்.
“சாரி துர்கா."
"எதுக்கு இந்த சாரி?”
"என் பாஸ்ட் உங்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல. ஆனா, நான் என் விஷயத்தைச் சொல்லி உங்கள சங்கடப்படுத்த விரும்பல" என்றாள் ரோஜா.
"ம்... புரியுது" என்றான் அவனும்.
"என் மேல கோவம் இல்லையே?"
"இந்த விஷயத்துக்கு இல்ல தான். ஆனா...” என்று இழுத்தான்.
"வேற என்ன கோவம்?" என்றாள் புரியாது.
"கோவம் இல்ல ரோஸ். ஆனா, என்னைக்காவது உன்னைப் பார்த்தா உன்கிட்ட கேக்கணும்ன்னு நினைச்ச ஒரு கேள்வி இருக்கு."
இப்பொழுதும் புரியாது, "என்ன? என்ன கேள்வி துர்கா?" என்றாள்.
"ஏன் ரோஸ், ஆறு வருஷதுக்கு முன்னாடி, என்கிட்ட ஒரு குட் பை கூட சொல்லாம சொல்லாம போன?"
"அது வந்து...” என்று வார்த்தைகள் இல்லாது திணற,
"இல்ல ரோஸ். ஜஸ்ட் ஒரு பை சொல்லிட்டுப் போய் இருக்கலாம்ல?"
"துர்கா! உங்கிட்டன்னு இல்ல. என் நண்பர்கள் நிறைய பேருக்கு நான் காலேஜ் விட்டு ஏன் நின்னுட்டேன்னு தெரியாது. ஏன்னா சொல்லிட்டு போறதுக்கு உண்டான சூழ்நிலையில அன்னைக்கு நான் இல்ல. எப்பவும் போல காலேஜ் முடிச்சிட்டு வீட்டுக்கு போன என்னைப் பெண் பார்க்க வந்துருக்காங்கன்னு என் அப்பா ஒரு குடும்பத்தை அறிமுகப்படுத்தி வச்சாரு. வந்தவங்களும் ஜாதகம் பொருந்தி இருக்கு, அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு சொல்லிட்டாங்க. எல்லாமே கனவு போல நடந்து முடிஞ்சிடுச்சி. என்னை என்ன பண்ண சொல்றிங்க?” என்று ரோஜா தன் நியாயத்தை விளக்கிச் சொன்னாள்.
"ம்... சரி. நான் கீழே போறேன். இல்லனா கனகா கட்டையில அடிப்பாங்க." என்று கிண்டலாக சிரித்த துர்வா, ரோஜாவின் அறையில் இருந்து தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்க, துர்வாவைப் பின் தொடர்ந்து ரோஜாவும் கீழே இறங்கினாள்.
"அப்பா நான் அம்மாகிட்ட போறேன்." என்று துர்வா தோளில் இருந்து இறங்கிய குழந்தை ரோஜாவின் கையில் சேர்ந்தது.
"காபி எடுத்துக்கோங்க" என்று சொன்ன கனகா மேசை மேல் நான்கு கோப்பையை வைத்தவள், குழந்தை திக்ஷிக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வந்து தந்தாள்.
"ரோஜா! நான் இன்னைக்கு துர்வாவை இங்க வர சொன்னதுக்கு வேற ஒரு முக்கியமான காரணமும் இருக்கு" என்று கனகா தன் பேச்சில் பீடிகை போட்டாள்.
‘என்ன?’ என்று தன் பார்வையால் கேட்டாள் ரோஜா.
“அடுத்த வாரம் நான் கேரளா போறேன். அப்போ உன்னால இங்க தனியா இருக்க முடியாது. அதான் நீ துர்வா வீட்டுல... இல்ல இல்ல திக்ஷிதா வீட்ல இருக்க உனக்கு சம்மதமான்னு கேக்க தான் இவனை வர சொன்னேன்" என்று கனகா சொன்னதும், துர்வா முகமும், ரோஜா முகமும் ஒன்று சேர்ந்தது போல மாறியது.
"ஐயோ ரோஸ்! எனக்கும், இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீ மோகன் வீட்டுல இருக்கன்னு கனகா சொன்னதால தான் நான் குழந்தையைத் தூக்கிகிட்டு, உனக்கு ஒரு ஷாக் டிரீட்மென்ட் தரலாம்னு வந்தேன். மத்தபடி கனகா சொல்றதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று துர்வா பதறினான்.
"ஆமா ரோஜா. துர்வாக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது. எனக்கே இன்னைக்கு ஈவினிங் தான் மெசேஜ் வந்துச்சு. இந்த மீட்டிங்க்கு நான் கண்டிப்பா போய் ஆகணும். அதான் உன்னை எப்படி இங்க தனியே விட்டுட்டு போறதுன்னு யோசனையா இருந்துச்சு" என்று கனகா யோசித்தாள்.
"இதுல என்ன இருக்கு. நான் என்ன சின்ன பிள்ளையா? அதெல்லாம் நான் தனியா இருந்துப்பேன். நீ உன் மீட்டிங்கை வெற்றிகரமா முடிச்சிட்டு வா" என்று ரோஜா நாசூக்காக துர்வாவின் வீட்டுக்கு செல்ல மறுத்து விட்டாள்.
"இந்த ஊரு உனக்கு பழக்கம் இல்லையே ரோஜா. அதான் சொன்னேன் அங்க போகச் சொன்னேன். சரி அப்புறம் உன் இஷ்டம்" என்று சொன்ன கனகா இவர்கள் குடித்து வைத்த காபி கப்பை எடுத்து கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள்.
"அப்புறம் ரோஸ். உனக்கு எங்க தாத்தா லைப்ரரில ஒர்க் பண்றது பிடிச்சிருக்கா? என்று துர்வா கேட்டதும், “ரோஜா அவனை முறைத்தவள்,
"நான் அங்க வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆச்சு. நீங்க இப்போ தான் இந்த கேள்வியை கேக்குறீங்களா" என்றாள் ரோஜா.
"ஒரு வாரமோ ஒரு யுகமோ, கேள்வி கேட்டா பதில் சொல்லணும்" என்றான் துர்வா.
"ரொம்ப மனநிறைவா இருக்கு துர்கா. நமக்குப் பிடிச்சப் புத்தகங்கள் நடுவில் வாழும் போது அப்படி ஒரு சந்தோசமா இருக்கு. நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்று முகம் மலர்ந்து சிரித்தாள் ரோஜா.
"என்ன மகிழ்ச்சி? யாருக்கு மகிழ்ச்சி?” என்று கேள்வி எழுப்பி கொண்டே கையில் காய்கறிகளுடன் வந்தாள் கனகா.
"தாங்க நான் கட் பண்றேன்" என்று துர்வா கனகா அருகில் அமர்ந்தவன் முதலில் வெங்காயத்தை வெட்ட ஆரம்பிக்க, அவன் செயலை ஆச்சிரியமாக பார்த்து கொண்டு இருந்தாள் ரோஜா.
"என்ன ரோஜா அப்படி பாக்குற? இந்த முரளிக்கும், என் மோகனுக்கும் இது தான் வேலை. மாசத்துல ஒரு முறை கண்டிப்பா இந்த முரளி எங்க வீட்டுக்கு வந்துடுவான். வந்தவன் சும்மா இல்லாம என் மோகன் கூட சேர்ந்து சமையல் அறையை ஒரு வழி பண்ணிடுவான். ஆனா, சும்மா சொல்லக்கூடாது, சாப்பாடு எல்லாம் நல்லாவே பண்ணுவான்" என்று சொல்லி கொண்டே கனகா அவள் அருகில் இருந்த கேரட்டைக் கடித்தாள்..
"ஆமா யார் அது முரளி?" என்று ரோஜா கேள்வி கேட்டவள் திக்ஷியை தூக்கி கொண்டு மேசையின் அருகில் வந்தாள்.
"வேற யாரு. இதோ இந்தப் பையன் தான் முரளி" என்று கனகா தன் கரங்களைத் துர்வாவை நோக்கி நீட்ட, துர்வா தன் கையில் இருந்த கத்தியை கொண்டு கனகாவை குத்துவதை போல பாவனை செய்தான்.

"ரோஜா இந்த துர்வா பையன் காலேஜ் டைம்ல ஒரு பெண்ணை லவ் பண்ணிருக்கான். அந்தப் பொண்ணுகிட்ட இவன் காதலைச் சொல்ல எண்ணும் போதெல்லாம், ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டு தன் காதலைச் சொல்லாமலேயே தனக்குள்ள மறச்சு வச்சி இந்த இதயம் படத்துல முரளி வருவாரு இல்ல அப்படி இருந்துக்குறான் பயபுள்ள.”
 
Joined
Feb 6, 2025
Messages
111

“சரி எப்படியோ இது கடைசி வருஷத்தோடு நம்மளே நினைச்சாலும் நம்ம இந்த காலேஜ் குள்ள வர முடியாது. அதனால இன்னைக்கு எப்படியாவது அவ பிறந்தநாள் பரிசா அவளுக்கு பிடிச்ச புத்தகத்தை அவ கையில தந்து, அவகிட்ட தன் காதலையும் சொல்லிடணும்னு முடிவு பண்ணி, இவன் காலேஜ்க்கு போனா, அங்க அந்தப் பொண்ணு இல்ல." என்று கனகா சுவரசியமாக கடந்த கால நிகழ்வை ரோஜாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தவள் சட்டென்று எழுந்து சமையல் அறைக்குள் ஓட,
"என்ன அந்த பொண்ணு காலேஜ்ல இல்லையா? ஏன் அந்தப் பொண்ணுக்கு என்னாச்சு?" என்று ஆர்வமாக ரோஜா ஹாலில் அமர்ந்து இருந்தப்படி கனகாவை கேள்வி கேக்க,
"அதை நீ உன் எதிர்ல உக்காந்து இருக்கானே இதயம் முரளி, அவனையே கேளு" என்று கனகா சமையல் அறையில் இருந்து பதில் சொல்ல,
"என்ன துர்கா... நீங்க காதலிச்ச பொண்ணு நம்ம காலேஜ் பொண்ணா? ஏன் நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல. ஆமா இப்போ அந்த பொண்ணு எங்க இருக்காங்க?" என்று ஆர்வம் குறையாமல் ரோஜா கேட்டாள்.
துர்வா இதழில் புன்னகையோடு, "அவங்களுக்கு நான் அவங்களை காதலிச்சதே தெரியாது ரோஸ். அதான் அவங்க எப்போவோ இன்னொருவன் மனைவியா மாறிட்டாங்க" என்று சொல்லி வெட்டி முடித்த காய்கறிகளை எடுத்து கொண்டு சமையல் அறைக்குள் சென்றான் .
"ஆமா ஆமா. இவன் காதலி இன்னோருவன் மனைவியாகிட்டான்னு தெரிந்து தான் பயபுள்ள அவளை மறக்க முடியாம, இந்த ஊரை விட்டே ஓடிப் போய் ஒரு வருஷம் தலை மறைவா, பைத்தியம் பிடிச்சது போல சுத்திகிட்டு இருந்தான். அப்புறமா இவன் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லன்னு பொய் சொல்லி இவன் அண்ணன் இவனை இந்த ஊருக்கு திரும்ப வர வச்சாரு" என்று கனகா கடந்த கால நிகழ்வுகளை சொல்லி கொண்டு இருந்தாள்.
அதே நேரம் சமையல் அறையில் காய்கறிகளை வதக்கி கொண்டு இருந்த துர்வா, "இப்போ ஏன் என் கதையை விளம்பரமே இல்லாம இந்த ஓட்டு ஓட்டுறீங்க" என்று கனகாவின் பேச்சை பாதியில் இடை மறித்தான்.
"ஆமா ஆமா ஓட்டுறாங்க. சரி தான் போடா. ரோஜா இவன் என்ன காரியம் பண்ணான் தெரியுமா?" என்று கனகா மீண்டும் பழைய கதையை தொடங்க, ஏனோ ரோஜாவிற்கும் துர்வாவின் காதல் கதையை கேட்க ஆசை தானாக மனதில் துளிர்விட்டது.
"இவங்க தாத்தா இவனுக்குப் பெண் பார்க்க போறேன். அதனால நீ கல்யாணம் பண்ணியே தீரணும்ன்னு சொல்லிட்டாரு. அப்போ தான் சார் இவரோட காதல் கதையை சொன்னாரு. அதுக்கு அவங்க தாத்தா, அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் முடியலைன்னா கூட நான் வீடு ஏறி போய் பெண் கேட்டு உனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைப்பேன். ஆனா, இன்னோரு வீட்டுக்கு வாழ போன பெண்ணை நீ மனசுல நினைச்சிட்டு வாழறது மடத்தனம். அதனால நீ வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாரு. இவனும் வேற வழி இல்லாம அவரு பார்த்த பெண்ணையே கல்யாணமும் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணு கூட வேற யாரும் இல்ல. என் மோகன் கூட அனாதை ஆஸ்ரமத்துல வளர்ந்த பெண் தான் அவள். ம்... ஆனா விதி யார் வாழ்க்கையில விளையாடல சொல்லு? அந்த பொண்ணுக்கும் என் மோகன் தலையெழுத்து போல. அவளும் அல்பாயுசுல போய் சேர்ந்துட்டாள். ஆனா, ரோஜா துர்வா மனைவி ரொம்ப நல்ல பொண்ணு. அவ கூட அப்படியே உன்னை போல தான் இருப்பாள். நான் உன்னை ரயில்வே ஸ்டேஷன்ல பாக்கும் போதே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன். என்னடா இது துர்வா பொண்டாட்டி மீண்டும் எப்படி உசுரோடுன்னு. ஆனா, என்ன ஒன்னு, அந்தக் கடவுள் இந்த குழந்தைக்காக கொஞ்சம் கருணை காட்டி, இவளோட அம்மாவை இந்த உலகத்துல இருந்து அவர்கூட அழைச்சிட்டு போகாம இருந்து இருக்கலாம்." என்று கனகா கவலையுடன் சொன்னவள் சமையல் அறைக்குள் எழுந்து சென்றாள்.
"சரி சரி இப்போ போன கதையை பேசாம சாம்பார் ஓகேவான்னு பாருங்க" என்று சொன்ன துர்வாவின் கண்கள் கலங்கி இருந்ததை யாரும் பார்க்கும் முன்பே துடைத்தவன், ஹாலில் இருக்கும் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.
தன் மடியில் விளையாடி கொண்டு இருந்த குழந்தை தூங்கியதை கூட கவனிக்காமல் ரோஜா துர்வாவை பற்றிய யோசனையில் முழுகி இருந்தாள்.
"ரோஸ் திக்ஷி தூங்கிட்டாள்" என்று துர்வா சொன்னதும், குழந்தையை சோபாவில் படுக்க வைத்தவள் தானும் பிள்ளையின் அருகில் குழந்தைக்கு பாதுகாப்பாக அமர்ந்து கொண்டாள்.
"என்ன ரோஜா? ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பது போல தெரியுது?" என்று சொல்லிக்கொண்டே கையில் சின்ன பையை எடுத்து கொண்டு கண்ணாடியை பார்த்து தன் திலகத்தை சரி செய்து கொண்ட கனகா வாசலை நோக்கி சென்றவள், "குக்கர் ரெண்டு விசில் அடிக்கிறதுக்குள்ள நான் முட்டை வாங்கிட்டு வந்துடுறேன்" என்று வாசல் கதவை இழுத்து சாத்திக்கொண்டு வெளியேறினாள்.
சில நொடி மௌனத்திற்கு பின்பு, "இங்க படிக்க புத்தகம் எல்லாம் இல்லையோ?" என்று துர்வா கனகாவின் வீட்டை கண்களால் ஆராய்ந்துக்கொண்டு இருந்தான்.
"ம்... நீங்களே பல பரிமானம் நிறைந்த புத்தகம் தான் துர்கா. உங்களை வாசிக்கத் தெரியாத உங்கள் காதலி துரதிஷ்டசாலி தான்" என்றாள் ரோஜா.
அவள் வார்த்தையின் வலியை அவள் விழிகளின் வழியே உணர்ந்த துர்வா அவள் அருகில் வந்தவன், "என் காதலிக்கு என்னை வாசிக்கத் தெரியாமல் இல்லை. அவள் என்னை வாசிக்கும் முன்பே அவள் தந்தையின் நிர்பந்தத்தால் போதுமென பாதியிலேயே தூக்கி வீசபட்ட காகிதம் தான் நான்" என்று சொன்ன துர்வாவின் வார்த்தையில் உள்ள வெறுமையை உணர்ந்திருந்தாள் ரோஜா.
மீண்டும் சில நொடி மௌனத்தை குக்கரின் விசில் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் குழந்தை சிணுங்கினாள்.
"நீங்க பாப்பாகிட்ட உக்காருங்க. நான் போய் அடுப்பை நிறுத்துறேன்." என்று சொல்லிக்கொண்டே ரோஜா சமையல் அறைக்குள் நுழைந்து அடுப்பை நிறுத்தியவள், அங்கே இருந்த சில பாத்திரங்களை துலக்க ஆரம்பித்தாள். சோபாவில் குழந்தையின் கூந்தலை வருடியப்படி துர்வா அமர்ந்து இருந்தான். "முட்டை விக்குற காசுக்கு கோழியே வாங்கிடலாம் போல" என்று முணங்கி கொண்டே வாசல் கதவை தட்டிக்கொண்டு வந்தாள் கனகா.
"நீ என்னடா. தூங்குற குழந்தை தலையை சொறிஞ்சிகிட்டு உக்காந்து இருக்க. ஆமா இந்த ரோஜா எங்க?" என்று கனகா கேட்டதும், சமையல் அறையில் இருந்து வந்த பாத்திரத்தின் சத்தம் அவள் செய்து கொண்டு இருந்த வேலையை கனகாவுக்கு புரிய வைத்தது.
"இப்போ ஏன் முட்டை வாங்க போனீங்க? இத வச்சி இப்போ என்ன ஆம்ப்லேட் போட போறிங்களா? நான் வேணா மறுபடியும் வெங்காயம் பச்சை மிளகாய் எல்லாம் கட் பண்ணி தரவா" என்று துர்வா கேட்டதும்,
"என்ன பச்சை மிளகாயா? ஐயோ வேணாம் சாமி" என்று கனகா அலறியவளை பார்த்து துர்வா சிரித்தான்.
"என்ன நீங்க நான் ஆம்லெட்ல தான பச்சை மிளகா போடனும்ன்னு சொன்னேன். நான் என்னமோ உங்களை பச்சை மிளகாய், பச்சையா சாப்பிட சொன்ன மாதிரி இந்த அலறு அலறுறீங்க" என்று சிரித்து கொண்டே துர்வா கேட்டான்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், உன்னால இந்தப் பச்சை மிளகாவ அந்த ரோஜா பொண்ணு என் வாயில சொருகிட்டாள்" என்று கனகா சொன்னதும் துர்வா ஏதும் புரியாமல் கனகாவை பார்த்தான்.
"ஆமாடா. காலேஜ் டேஸ்ல நீ காதலிச்ச பொண்ணு ரோஜாவா தான் இருந்திருக்கும் என்று நான் சொன்னேன். அதுக்கு அப்படி மட்டும் இருந்திருந்தால் இந்த பச்சை மிளகாவ துர்கா வாயில சொருகிடுவேன்னு சொல்லி, இந்த ரோஜா அந்த பச்சை மிளகாவ என் வாயில சொருகிட்டாள்" என்று கனகா சொல்லும் நேரம் சமையலறையில் இருந்து வெளியே வந்த ரோஜா கனகாவை முறைத்தாள்..
"சரி சரி முறைக்காத. நான் எதுவும் சொல்லல. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் முட்டை ஆம்லெட் ரெடி பண்றேன்." என்று கனகா சொல்ல, அன்றைய தினம் கனகாவும், துர்வாவும், ரோஜாவும் மோகன் ஆத்மாவுடன் சேர்ந்து உணவை சாப்பிட்டு முடித்தார்கள்.
சில நிமிடங்கள் கடந்த நிலையில், துர்வாவின் கைபேசியில் அந்த குறுஞ்செய்தியை பார்த்தவன் சட்டென்று கனகா வீட்டில் இருந்து கிளம்புவதற்காக முடிவு செய்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தையை தூக்க போனான் துர்வா.
"ஏன் தூங்குற பிள்ளையை எழுப்புறீங்க?" என்று தடுத்தாள் ரோஜா.
"ரோஸ் எனக்கு முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. நான் தீக்ஷியை தாத்தா கிட்ட கொண்டு போய் விட்டுட்டு, அந்த அப்பாயின்மென்ட்டை அட்டென்ட் பண்ணனும். நம்ம இன்னொரு நாள் சந்திப்போம்" என்று சொன்னவன் மீண்டும் குழந்தையைத் தூக்கப் போனான்.
"இருக்கட்டும் துர்கா. நீங்க அப்பாயிண்ட்மெண்ட் முடிச்சிட்டு வந்து குழந்தையை தூக்கிட்டு போகலாம். குழந்தை அதுவரை எங்க கூட இருக்கட்டும்" என்று ரோஜா சொல்ல,
துர்வன் சில நொடி யோசித்தவன், "சரி நான் வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு வந்துடறேன்" என்று சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி சென்றவன் தன் காலணிகளை போட்டு கொண்டான்.
துர்வாவை பின் தொடர்ந்த ரோஜா, "துர்கா ஒரு நிமிஷம்" என்று அழைத்தாள்.
"சொல்லு ரோஸ்? என்ன விஷயம்" என்று துர்வா கேட்டதும், சில நொடிகள் யோசித்தவள், "காலேஜ் டேஸ்ல் நீங்க காதலிச்ச பொண்ணு யாருன்னு நீங்க சொல்லவே இல்லையே?" என்று தயக்கத்துடன் கேட்டாள் ரோஜா.
சட்டென்று தன் காலணிகளை கழட்டிய துர்வா சமையல் அறைக்குள் சென்று ஒரு பச்சை மிளகாய் எடுத்து வந்தவன், ரோஜாவின் கண்களைப் பார்த்தபடி, அந்த பச்சை மிளகாயை கடித்து தின்று விழுங்கியவன் அவளைப் பார்த்து சிரித்தப்படி, "குழந்தையை பார்த்துக்கோ ரோஸ். நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன்" என்று சொன்னவன், ரோஜா கண் இமைக்கும் தருணத்தில் மறைந்து போனான்.
✍காரமான பச்சை மிளகாயை துர்வா சாப்பிட, காரணம் இவள் என்று உணர்ந்து கொண்ட ரோஜாவின் கண்கள் கலங்க, அதே சமயம் காரில் பயணம் செய்யும் துர்வாவின் கண்களும் கலங்கியது.
காரணம், காரத்தால் இல்லை. சொல்ல தெரியாத காதலால். சொல்ல மறந்த காதலால்!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top