• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
"ஒருமுறைதான் அவனைப் பார்த்திருக்கிறேன். அப்படி என்ன மாயம் செய்து விட்டு போனான்? அவனது நினைவாகவே இருக்கிறது." என்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் நாட்டமும் இல்லாமல் அமர்ந்திருந்தாள் காதம்பரி.

வருணன், "அக்கா வகுள ஆரண்ய தேசத்திலிருந்து அரண்மனை வாசிகள் அனைவரும் வந்து விட்டனர். நீ எதற்காக இன்னும் தயாராகாமல் இருக்கிறாய்?"

காதம்பரி, "சரி நீ செல். நான் தயாராகி கொள்கிறேன்." என்று விருப்பமே இல்லாமல் தன்னை அலங்கரித்துக் கொண்டு. "இனி எப்போதும் என் வாழ்வில் அவன் வரப்போவதில்லை. வருகின்ற மன்னன், என்னை வேண்டாம் என்று உதாசீனம் செய்தால் மட்டுமே அடுத்த வாய்ப்பு கிட்டும்." என்ற எண்ணத்தில் மாடத்தில் இருந்து வேடிக்கை பார்த்தாள். அரண்மனை வாசிகள் அனைவரது தலையும், பூக்களும், முண்டாசுகளும், தெரிந்ததே தவிர, யாருடைய முகமும் தெளிவாக தெரியவில்லை. வேதனையோடு சென்று தனது அறையில் அமர்ந்து கொண்டாள்.

"வந்திருப்பவனை, பிடிக்கவில்லை என்று. முகத்தில் அறைந்தால் போல் சொல்லி விடலாமா? அதனால் தந்தையின் கௌரவத்திற்கு ஏதாவது இழுக்கு ஏற்படுமா? நேருமா?" என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் யோசனையை கலைக்கும் விதமாக, அறையின் கதவு தட்டப்பட்டது.

கதவை திறந்தவுடன், வகுள தேசத்து பெண்கள் இருவர், காதம்பரியை மேலும் கீழும் ஆக பார்த்துவிட்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த பூக்களை எடுத்து அவள் தலையில் சூட்டி விட்டனர். திகைத்து நின்று கொண்டிருந்த காதம்பரியை இருவரும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, அரண்மனை சபை கூட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மன்னவன் முன்பாக காதம்பரியை நிறுத்தி, கவிழ்ந்திருந்த முகத்தை நிமிர்த்திக் காண்பித்தாள் ஒரு பெண்.

"யார் இவன்? அன்று பார்த்தவனைப் போலவே இருக்கிறானே? ஒரு வேளை! அவனது நினைவிலேயே இருப்போர் அனைவரின் முகமும், அவனது முகமாக தெரிகிறதோ?." என்று ஆச்சரியத்தோடு சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள் காதம்பரி.

காதம்பரியின் பிரமிப்பை கவனித்த வல்லாளன், அவளுக்கும் தன்னைப்போல் காதல் நோவு வந்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டான். அன்று வந்தது நான் தானா என்ற தேடலில், திகைத்து நிற்கிறாள் என்று உணர்ந்தவன், அன்று வந்ததும் தான் என்று உணர்த்துவதற்காக, "இளவரசியாரே... பாட்டியார் சௌக்கியமாக இருக்கிறார்களா?" என்று நலம் விசாரித்தான்.

அவன் தான் என்று உணர்ந்து கொண்ட கணத்தில், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? அவளது அன்பை, அவளால் மறைக்க முடியுமா?

மடைத்திறந்த வெள்ளமாக, காதம்பரியின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

அதைக் கண்ட வல்லாளன், மனது பதறியது. அவளது காதலை எண்ணி சிறகடித்தாலும் அவள் கண்ணீர் சிந்துவதை கண்டு கலங்கி விட்டான்.
எழுந்து சென்று, இதயத்தோடு சேர்த்து அனைத்து கொள்ள ஆசைதான். என்றாலும் அதற்கான நேரம் இதுவல்ல என்று அமைதி காத்து அமர்ந்திருந்தான்.

மகாராணி கமலி, "ஏன் மணமகனை பார்த்ததும் கலங்குகிறாள் இந்தப் பெண்? வேறு யாரையாவது மனதில் எண்ணிக்கொண்டு இருக்கிறாளா?"

கந்தவேலருக்கு, தன்னுடைய மகளை குற்றம் சொல்லும் கமலையின் நாக்கை துண்டுத்து விடுவோமா? என்ற அளவுக்கு கோபம் மூண்டு வந்தது.

வள்ளி அரண்டு விழித்தார்.

பூரணம் அம்மையார் நிலைமையை உணர்ந்து கொண்டு. தானாகவே முன்வந்து, "வணக்கம் அரசே. நான் நலமாக இருக்கிறேன். எனக்கு எந்த உடல் உபாதையும் இல்லை. ஆனால் என்னுடைய பேத்தி, என்னைப்பற்றி, சிந்தித்துக் கொண்டிருப்பதால், எவரேனும் நலம் விசாரித்தாள். அழுது விடுகிறார். வயதானால் மூப்பு வருவது, மூப்பு வந்தால், உயிர் பிரிவது இயல்பு. இன்னும் அவள் உணராமல் இருக்கிறாள்."

மகாராணி கமலி, "ஆமாம் இவர்களை எங்கே சந்தித்தாய்? இவர்களது நலத்தைப் பற்றி எதற்காக இப்படி விசாரித்தாய்? என்று வல்லாளனிடம் கேட்க.

ஒளிவு மறைவு இல்லாமல் வல்லாளன்," அவர்களை சந்தித்ததால் தான், இந்த பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது. அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களிடம் கேட்டேன். அவளும் என்னை அரசகுமாரன் என்று அறியாமல் பார்த்திருந்தாள். தற்போது அரசனாக காண்பதால் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறாள். எனக்கு இருந்த அதே அன்பு, அவளது உள்ளத்திலும் இருந்ததால், அது கண்ணீராக வெளிப்பட்டது. அந்த கண்ணீருக்கான காரணத்தை தான் இத்தனை விதமாக எல்லோரும் பேசியிருக்கிறோம்."

கந்தவேலருக்கும் வள்ளிக்கும் உண்மையில் இது அதிர்ச்சியான தகவல். ஆனாலும் மகிழ்ச்சியான தகவலாய் போனது. மகளின் மனதிற்கு பிடித்த மணவாளனே வந்து சேர்ந்திருக்கிறான். நல்ல வேளை, என் குழந்தையின் மனம் நோகாமல் காத்தாய் கடவுளே! என்று இருவரும் மனதால் வேண்டிக் கொண்டார்கள்.

மகாராணி கமலி,"சரி தொடர்ந்து நடக்க வேண்டிய காரியங்களை கவனிப்போம். ராஜகுருவே மணமக்கள் இருவருக்கும் சம்மதம். அதனால் காலம் தாழ்த்தாமல் நெருங்கி வரும் தாங்களே கண்டு இச்சபையில் அறிவித்து விடுங்கள்."

ராஜகுரு, "அப்படியே ஆகட்டும் மகாராணி. என்று சொன்னவர் தான் கையோடு கொண்டு வந்திருந்த ஓலைச்சுவடிகளை பிரித்து பார்த்து கணக்கிட்டு "நிகழும் விஜயை ஆண்டு, ஐப்பசி தினங்கள், அனுச நன்னாளில், வெள்ளி வாரத்தில் சூரிய உதயத்தில் மூன்றாவது நாளில், இவர்களது விவாகத்தை வைத்துக் கொள்வது நலமாக இருக்கும் அரசியாரே"

மகாராணி கமலி, ''நல்லது. உடனடியாக நமது தேசத்தில் அனைத்து வீதிகளிலும், அரசனது திருமணத்தை முரசறைந்து சொல்லிவிடுங்கள். கந்தவேலரே தங்களுக்கும் இதில் சம்மதம் தானே?" என்று கேட்க கந்தவேலரும் வள்ளியும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார்கள்.

நடந்து கொண்டிருந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் வருணன், கதம்ப வன தேசத்தில் அனைத்து வீதிகளிலும் முரசறைந்து அக்காவின் திருமணத்தை அறிவிப்பு செய்ய ஆயத்தமானான்.

வகுள ஆரண்ய தேசத்தில் இருந்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும். ஒன்றாக அமர்ந்து பந்தி போஜனத்தை முடித்தார்கள்.

அவர்கள் அனைவரும் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் அரண்மனையின் மாடத்தில் முரசரையும் சத்தம் கேட்டது.

இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நமது கதம்பவன தேசத்தின் இளவரசி காதம்பரியை வகுள ஆரண்ய தேசத்தின் அரசர் வல்லாளருக்கு திருமணம் முடித்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஐப்பசி மாதத்தில் அனுஷ நட்சத்திர நன்னாளில் வெள்ளி கிழமை அதிகாலை சுக்கிர ஹோரையில் வகுள ஆரண்ய தேசத்தின் அரண்மனையில் வைத்து திருமணம் நடக்க இருக்கிறது அந்த திருமணத்தை அனைவரும் கலந்து சிறப்பித்து தருமாறு கதம்பவன தேசத்தின் இளவரசர் வருணர் வேண்டுகிறார். என்று சொல்லி முடித்ததை கூர்மையாக கவனித்த கந்தவேலரும் வள்ளியும், காதம்பரியை திருமணம் செய்து கொடுப்பதில் வருணன் அதிகமாக முனைப்பு காட்டுகிறான் பெருமைப்பட்டு கொண்டார்கள்.

பிறகு பூரணம் அம்மையாரை அழைத்து இளவரசரை நீங்கள் எங்கே சந்தித்தீர்கள் என்று வள்ளி கேட்க.

பூரணம், "நாங்கள் எங்கே சென்று இளவரசரை சந்தித்தோம். இளவரசர் தான் எங்களை சந்திப்பதற்காக, காதம்பரியை வைத்திருந்த கன்னிமாடம் நோக்கி வந்திருந்தார். அப்போது நாங்களும் வந்திருப்பது இளவரசர் என்று அறிந்திருக்கவில்லை அவரும் நமது அடிமைகளில் சேவல்களில் ஒருவர் என்று எண்ணி இருந்தோம் அன்றுதான் என்னை அரவம் தீண்டியது. அப்போது எனக்கு சிகிச்சை கொடுத்து என் உயிரை காப்பாற்றியதும் இதே இளவரசர் தான். அதனால என்னுடைய நலத்தையும் விசாரித்தார்."

வள்ளி, கந்தவேலரிடம், "அன்று பார்த்த முதல் பார்வையிலேயே, உங்கள் மகள் மனதை பறிகொடுத்து விட்டாள் போல." என்று கந்தவேலரை செல்ல சீண்டல் செய்தார்.

கந்தவேலர், "அவள் சிறு பெண். இரக்க குணம் கொண்ட இளவரசனை இதயத்தில் ஏற்றி இருப்பாள்."

வள்ளி, "உங்கள் செல்ல மகள் மட்டும் சிறு பெண்." என்று சொல்லிவிட்டு அவரிடம் இருந்து நகர்ந்தார்

காதம்பரி அவளது அறைக்குள் சென்று எதிர்பாராமல் எதிர்பார்த்தவன் கிடைத்தது எண்ணி மகிழ்ந்து போயிருந்தாள். அதே நேரத்தில் தம்பி செய்த அறிவிப்பை பார்த்து பூரித்து விட்டாள்.

வகுள ஆரண்ய தேசம் சென்ற பிறகு வல்லாளன் அவரது தாய் கமலை இடம், "இளவரசி காதம்பரியை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?"

கமலி, "மணந்து கொள்ளப் போகிறவன் நீ. உனக்கு பிடித்திருந்தால் போதுமே. எனக்கு எதற்காகப் பிடித்திருக்க வேண்டும்?"

"என்னம்மா? யார் வீட்டிலோ நடக்கும் நிகழ்வைப் போல, கண்டுகொள்ளாமல் சொல்கிறீர்கள்."

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. உன் மனதிற்கு பிடித்த பிள்ளை. எனக்கு பிடிக்காமல் போகுமா?" என்று நயந்து பதில் சொன்னார்.

"அம்மா... நான், உங்களிடம் ஒன்று கேட்பேன். மறுப்பு சொல்லாமல் கொடுக்க வேண்டும். செய்வீர்களா?"

"எனக்கென்று இருக்கும் ஒரே பந்தம் நீ மட்டுமே. உனக்கு கொடுப்பதற்கு எனக்கு என்ன தயக்கம் இருக்கிறது? என்னால் தர முடிந்ததைக் கேள்."

“இளவரசி காதம்பரிக்கு, நமது அரண்மனையின் சார்பில், அனைத்து விதமான ஆபரணங்களையும். அழைத்து வர வேண்டும். அதற்காக நம்முடைய கருவூலத்தில் இருக்கும் பொன்னை. சிறிது கொடுப்பீர்களா?"

அதுவரையில் அமைதியாக பேசிக் கொண்டிருந்த கமலி அப்போது மூர்க்கமாக மாறினார், "பெண்ணை கொடுப்பவன், பொன்னையும் சேர்த்து பூட்டி அனுப்பி வைப்பான். கருவூலத்தில் இருக்கும் பொன் உன்னுடைய கண்ணை உறுத்துகிறதோ அதை என்னால் கொடுக்க இயலாது."

“தற்போது தான்... உங்களுக்கு இருக்கும் ஒரே பந்தம் நான். என்று உச்சி முகந்திருப்பீர்கள். அடுத்த சனத்தில் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டீர்களே”

"செல்வமே பெண்ணை பெற்றவர்கள் சீதனமாக பொன்னை கொடுப்பார்களே தவிர. பெண் எடுப்பவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால் சொன்னேன்."

"சரி அம்மா. எப்படியும் திருமாங்கல்யம் மணமகன் விட்டார் தானே கொண்டு போவார்கள். அதனால், நாம் கொண்டு செல்லும் திருமாங்கல்யத்தோடு திருமாங்கல்ய நாணும். பொன்னாள் செய்து கொண்டு செல்லலாம். அதற்காக சிறிது பொன் கொடுக்க வேண்டும்."

வேறு வழி இல்லாமல், கமலி சம்மதம் தெரிவித்துள்ளார். தாலியும், தாலி சரடும் செய்ய தேவையான பொன்னை வல்லாளனிடம் கொடுத்து அனுப்பினார்.

அதே நேரத்தில், கதம்பவன தேசத்துக்குள். மந்தி முகம் கொண்ட மந்தி மகா முனிவர் வந்திருந்தார்.

அவரை கண்ட மக்கள் முதலில் பயந்து ஓடினார்கள். அவர் தேசத்திற்கு ஒதுக்குப்புறத்தில் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார். அதனால் மக்கள் அனைவரும் தேசத்தின் அரசன் கந்தவேலரிடம், மந்தியின் முகம் கொண்ட ஒரு விசித்திரமான மனிதர் வந்திருப்பதாகவும், அவர் தேசத்தின் எல்லையில் ஆசிரமம் அமைத்து தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்கள். இந்த விவரத்தை கேள்விப்பட்டது. கந்தவேலர் மகிழ்வோடு தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஆசிரமத்திற்கு சென்றார்.

கந்தவேலர், மந்தி மகாமுனிவரை கண்டதும், "வணக்கம் குரு தேவரே. என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?"

வயது மூப்பினால், முனிவருக்கு கந்தவேலரை சரியாக அடையாளம் தெரியவில்லை.

"தாங்கள் யார் என்று எனக்கு அடையாளம் தெரியவில்லையே!"

15 ஆண்டுகளுக்கு முன்பு, கந்த மகா பர்வதத்தில், தங்களை, நாங்கள் இருவரும் சந்தித்திருக்கிறோம். இப்போதாவது நாங்கள் யார் என்று நினைவில் தோன்றுகிறதா?"

சிறிது நேரம் யோசித்த முனிவர், "நான் உங்களிடம் ஒரு பெண் குழந்தையை கொடுத்திருந்தேனே"

"அதே தம்பதிகள் தான் நாங்கள். என் பெயர் கந்தவேலன், இவள் என் மனைவி வள்ளி."

"நல்லது. எனக்கு இப்போது தோன்றுகிறது. அப்போது நீங்கள் இருவரும் இளமை தோற்றத்தோடு காணப்பட்டீர்கள். தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு முதிர்ச்சி அடைந்து விட்டீர்கள். அதனால் எனக்கு நினைவுக்கு தோன்றவில்லை. நான் கொடுத்து அனுப்பிய குழந்தை நன்றாக இருக்கிறதா?"

"நன்றாக இருக்கிறாள். அவளுக்கு தற்போது திருமணம் நடைபெற இருக்கிறது."

வள்ளி, "நீங்கள் எங்களது அரண்மனைக்கு வந்து குழந்தைகளை ஆசீர்வதிக்க வேண்டும் சுவாமி"

"என்னால் அங்கே வர இயலாது. நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இங்கே வாருங்கள்."

வள்ளி, "நிச்சயமாக. நாளை குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்."

"நான் கொடுத்த பெண் குழந்தையை பற்றிய ரகசியம் உங்களுக்கு தெரியாது. அந்த ரகசியத்தை இப்போது நான் சொல்லி விடுகிறேன்." என்று சொல்லத் தொடங்கினார் முனிவர்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top