• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Feb 17, 2025
Messages
4
காதலென்பது!


"ஏய் சுஜிக்கா! எப்போ வந்த? நேத்து தான் காதலர் தினம் முடிஞ்சிது இன்னும் ஒரு வாரம் இந்த பக்கம் வரமாட்டே, ஏன் போன் கூட எடுக்காம பறந்துட்டு இருப்பனுல நினைச்சேன்" என்ற அனுஷா தொடர்ந்து,

"உன் கூட சுத்துற அக்காங்க இன்ஸ்டாகிராம் ஸ்டோரிலாம் சும்மா அல்லுது. திரும்புர பக்கம்லாம் கன்னி வெடி மாதிரி யார் ஸ்டோரியை திறந்தாலும் காதலர் தினம் ஸ்பெஷலால இருக்கு"

கண்ணடித்தபடி வாசல் படிகட்டில் தன்னை இடித்துக் கொண்டு அமர்ந்த தங்கை அனுஷாவை கண்டு பல்லை கடித்தாள் சுஜிதா.

"என்ன சுஜிக்கா! எதுக்கு முறைச்சுவையிங்? சரிசரி அத்தான் உனக்கு என்ன கிப்ட் கொடுத்தாருனு காட்டு? நானும் நீ ஸ்டேடஸ் இல்லனா ஸ்டோரி போடுவனு நேத்துல இருந்து பார்த்திட்டிருக்கேன்" அவள் முறைப்பதை பொருட்படுத்தாமல் ஆவலாய் கேட்டாள் அனுஷா.

அதில் மேலும் கண்கள் சிவக்க, "ஏற்கனவே செம காண்டுல இருக்கேன் கடுப்பேத்தாம எழுந்து போடி. கிப்டாம் கிப்ட்டு நல்லா கொடுத்தாரு உங்க அத்தான்" என தங்கையை அதட்டியவளுக்கு வார்த்தையின் முடிவில் அழுகை எட்டி பார்த்தது.

பதறிய அனுஷா, "ஏய் சுஜிக்கா! என்னாச்சு?" என தோளோடு சேர்த்து அணைத்தாள்.

"உன் மாமாக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சு எத்தனை மாசம்டி இருக்கும். முழுசா ஆறு மாசம் கூட ஆகலை. எங்களுக்கு இது முதல் காதலர் தினம்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா"

என மூக்கை உறிஞ்சியவள்,

"நான் என்ன காதலர் வாரம்னு சாக்லேட், டெடினு வாரம் முழுக்கவா கொண்டாட கூப்பிட்டேன்? வெறும் ஒரேஒரு நாள் காதலர் தினத்தன்னிக்கு மட்டும் தான் என்னனு சொல்லாம கொஞ்சம் லீவ் போடுங்களேனு சொன்னேன். அதுக்கு அந்த மனுஷன் முக்கியமான மீட்டிங்னு சொல்லி வேலைக்கு கிளம்பி போய்ட்டாரு. அந்த நாளே அவருக்கு தெரியலை" என கண்ணை கசக்கினாள்.

"அக்கா! இதெல்லாம் ஒரு விஷயமா எதோ வேலை டென்ஷன்ல மறந்திருப்பாரு. நீயாச்சும் சொல்லிருக்கலாம் சரி விடு" என தேற்ற,

"என்ன டென்ஷன்? எனக்கும் தான் எத்தனை வேலை தெரியுமா? வேலைக்கு போனா காலையில் இருந்து நின்னுநின்னு உடம்பெல்லாம் ஒரே வலி. அப்போ கூட நேத்து சாய்ந்திரம் அவர் வந்தவுடனே ஆசையா இன்னிக்கு சாப்பிடவாச்சு வெளியே போலாமானு கேட்டேன்.
அதுக்கு அவர் அதெல்லாம் வேண்டாம் உனக்கு முடியலைனா அம்மா சமைப்பாங்கனு சொல்றாரு"

என கடுப்பாய் உதட்டை சுளித்தவளிடம், "அக்கா! அப்போ அத்தான்கிட்ட கோச்சிகிட்டா இப்போ இங்க வந்திருக்க?" என சந்தேகமாய் கேட்க,

"போடி பயித்தியகாரி! இதுக்கெல்லாம் கோச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு வந்தா வருஷம் முழுக்க இங்க தான் இருக்கனும். ப்ச்! நான் ரொம்ப எதிர்பார்த்திட்டனா அது நடக்கலைனு கொஞ்சம் வருத்தமாகிடுச்சு அவ்வளவு தான். இன்னிக்கு எனக்கு லீவ் அதான் உங்களை பார்த்துட்டு போலாம்னு காலைலயே வந்துட்டேன்" என்றாள்.

"சரிசரி வா க்கா! உள்ள போவோம். எனக்கும் இன்னிக்கு கொஞ்சம் தலை வலியா இருந்துச்சு அதான் சீக்கிரம் வந்துட்டேன்" என்ற அனுஷா,

'இதுக்கு தான் நான் கல்யாணமே வேணாம்னு சொல்றேன். தேவையில்லாத எதிர்பார்ப்புகள் அப்றம் அது நடக்கலைனு வருத்தம், அழுகை, கோபம்னு' மனதினுள் நினைத்தபடி சுஜிதாவுடன் வீட்டிற்குள் வர அங்கு அவர்களின் தந்தையும், தாயும் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

"சொப்பா... ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க" என சின்னவள் சொல்ல பெரியவள் சிரித்துவிட்டாள்.

"விடு அனு! அவங்களை பத்தி தெரியாதா? ஒருநாள்ல இருபத்திநாலு மணிநேரம் போதாது இவங்க போடுற சண்டையை எண்ணுறதுக்கு" என கிண்டலடித்தாள்.

"என்னை தேடி வரதுக்கு முன்னாடி இதை யோசிச்சிருக்கனும்" என தந்தையின் குரல் உயர,

"உன்னை நம்பி தான் வந்தேன் இல்லனு சொல்லலையே ஆனா இப்போ உன்னையே நான்தான் பார்த்துட்டு இருக்கேன்" என தாயின் குரல் பதிலுக்கு பலமடங்கு எகிறியது.

அதில் சகோதரிகள் இருவரும், "கல்யாணம் ஆகி முப்பது வருஷம் ஆச்சு இன்னும் இவங்க கல்யாண பேச்சு தீரல" என பொய்யாய் சலித்தனர்.

அந்நேரம், "என்ன அங்க அக்காளும் தங்கச்சியும் குசுகுசுனு ரகசியம் பேசுறீங்க. அனு! நீ என்ன அரை நாள்ல வேலைல இருந்து வந்துட்ட? சரி போங்க போய் கிளம்புங்க ஆயாவை போய் பார்த்திட்டு வருவோம்" என்ற அம்சா சின்ன மகளிடம் மெதுவாய்,

"தாத்தாக்கு சாப்பாடு கட்டு அனு! ஆயா சண்டை போட்டதுல சாப்பாடு வேணாம்னு தாத்தா கோச்சுகிட்டு கடைக்கு போய்ட்டாராம். இப்போ தான் ஆயா போன் பண்ணாங்க" என்றவர் பெரியவளிடம் சத்தமாய்,

"பெரியவளே! கல்யாணம் ஆகி மொத முறை ஆயா வீட்டுக்கு போக போற உன்ற அப்பாகிட்ட சொல்லிட்டு வா. நான் ஒருநாள் தான் வர வீட்ல இருனா எங்க கேக்குற" என பொய்யாய் சத்தமிட்டார்.

"ம்க்கும்! இந்த அம்மா இன்னுமா இவங்க அப்பாக்கு சோறு கொண்டு போறதும், அடிகடி ஆயா வீட்டுக்கு போறதும் நம்ப அப்பாக்கு தெரியாதுனு நினைக்கிறாங்க" என சின்னவள் அக்காவிடம் முனங்கியபடி உணவை டப்பாவினுள் வைத்தாள்.

"அதெல்லாம் அப்பாக்கு தெரியும் டி. அப்பாக்கு தெரியும்னு அம்மாக்கும் தெரியும் ஆனா இப்படி தான் தெரியாத மாதிரியே இருப்பாங்க. இந்த தாத்தாவும் ஆயாவும் தான் ஏன் சும்மா சும்மா சண்டை போடுறாங்க தெரியலை. சரி வா வா.. போவோம்" என தங்கையை அழைத்துக் கொண்டு அன்னையின் பின் சென்றாள்.

நடக்கும் தூரமே இருக்கும் வீட்டிற்கு போகும் வழியில், "ம்மா! நீயும் அப்பாவும் தான் கல்யாணம் ஆகி முப்பது வருஷம் கழிச்சு கூட சண்டை போடுறீங்கனா ஆயாக்கும், தாத்தாக்கும் எத்தனை வயசாகுது இன்னமும் ஆயா சண்டை போடுறதும், தாத்தா கோச்சிட்டு சாப்பிடாம போறதும் நல்லாவா இருக்கு?" என அனுஷா அன்னையிடம் கேட்க,

"உங்க தாத்தாக்கும் ஆயாக்கும் வேற வேலை இல்லை. சரி! சீக்கிரம் வாங்கடி, நேரம் ஆனா உங்க அப்பா தேட போறாங்க. நேரா சாப்பாட்டை எங்க அப்பாகிட்ட கொடுக்கலாம்னா உங்க ஆயா வீட்டுக்கு வந்துட்டு போங்கன்றாங்க" என புலம்பியபடி முன்னால் சென்றார்.

அனுஷா அன்னையுடன் பேசியபடி நடக்க, சுஜிதாவோ தன்னவன் தன் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளாததில் இனியும் இதேபோல் அவன் இருந்தால் தன் வருத்தங்கள் கோவமாய் உருமாறி தானும் அன்னை மற்றும் பாட்டியை போல் 'சண்டையிலே வாழ்வை கழிக்க வேண்டி வருமோ?' என சிந்தித்தபடி நடந்தாள்.

"ம்மா!" என அழைத்தபடி அவர்களின் அன்னை தன் பிறந்த வீட்டினுள் நுழைய,

"வா அம்சா.. வாங்கடி! இப்போ தான் இந்த ஆயா வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா" என வீட்டினுள் நுழைந்த பேத்திகளை வரவேற்ற கமலா இரு பெண்களையும் நலம் விசாரித்தார்.

பின், "என்னடி சமைச்சீங்க. தாத்தாக்கு என்ன வச்சிருக்கீங்க?" என கேட்க,

"என்ன செஞ்சா என்ன? உன் புருஷன் எது கொடுத்தாலும் சாப்பிட மாட்டாரா?" என அம்சா அன்னையை வம்பிழுக்க அனுஷா தான், "சிக்கன் தான் பாட்டி" என்றாள்.

"கோழியா? சதையா போட்டிங்களாடி தாத்தாக்கு, அப்றம் உங்க தாத்தா கடிக்க முடியலைனு வச்சிபுடுவாறு" என சிரமபட்டு எழுந்து சமையலறைக்கு சென்றவர்,

"அந்த டிபன் டப்பாவை கொண்டாடி" என்க அனுஷா கொண்டு சென்றாள்.

அதில் கறி குழம்பில் பிசைந்த சாதம் இருக்க, சாதத்தில் சிறிதளவு எடுத்து வேறு தட்டில் மாற்றியவர் தான் சமைத்திருந்த ஆட்டு கறியை அள்ளி டிபன் பாக்ஸில் வைத்தார்.

"உங்க தாத்தா சோத்தை தின்ன சொன்னா வெறும் கறிய மட்டும் பொறுக்கி வக்கனையா சாப்பிடுவாரு அதான் சோற கம்மியா வச்சு கறியை அள்ளி வச்சேன்" என்றவர் அந்த டப்பாவை மூடி கொடுத்தார்.

பின் அவரிடம் விடைபெற்றவர்கள் தங்கள் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் தாத்தாவிடம் சென்று உணவை கொடுக்க அதை வாங்கி ஓரமாய் வைத்தவர் பேத்திகளை நலம் விசாரித்தார்.

"ஏம்பா எப்போபாரு அம்மாகிட்ட சண்டை போடுற உனக்கு வேற வேலையே இல்லையா?" என அம்சா தந்தையிடம் சண்டையிட,

"கம்முனு இரு நீ! இங்க பேசுறத உங்க அம்மாகிட்ட பேசேன்.. சும்மா சும்மா கத்திட்டே இருந்தா மனுஷனுக்கு கோபம் வராதா" என மகளை பொறிந்தார்.

தந்தை அதட்ட தனக்கே தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருந்தும் அமைதியாய் கேட்டு நின்றார் அம்சா.

பின், "போப்பா நீயாச்சு அம்மாவாச்சு. சரி சீக்கிரம் சாப்பிடு நேரமாச்சு" என மகள்களுடன் விடைபெற,

"நான் சாப்பிடுறேன் சாப்பிடுறேன்.. நீ வீட்டுக்கு போய்ட்டு உங்க அம்மாக்கு போன்ல கூப்ட்டு அப்பா சாப்பிட்டாருனு சொல்லு இல்லனா உங்க அம்மா திங்காமலே உட்கார்ந்து கிடப்பா" என்றபடி தன் வியாபாரத்தை பார்க்க தொடங்கினார்.

"சரி சரி" என தலையாட்டியபடி நடையை எட்டி போட்ட அம்சா வழியில் ஒரு மளிகை கடையில் நின்றார். அப்பொழுது அனுஷாவிடம் சுஜிதா, "ஏன்டி அனுஷா! எப்போ பாரு தாத்தாவும் ஆயாவும் சண்டை போடுறாங்கனு சொன்னோமே இப்போ பார்த்தியா இவங்களை" என யோசனையுடன் கேட்க,

"அதான! ஆயா என்னனா தாத்தா கறியா தான் சாப்பிடுவாறுனு கோழி குழம்புல ஆட்டு கறியை அள்ளி வைக்கிறாங்க. தாத்தா என்னனா நான் சாப்பிடலைனு அவ பார்த்திருப்பா சாப்பிட்டேனு சொல்ல சொல்றாரு. இப்போ இவங்க இரண்டு பேரும் சண்டை போட்டிருக்காங்களா இல்லையா?"

என இருவரும் கிசுகிசுத்த வேளை தந்தையின் எண்ணில் இருந்து சுஜிதாவிற்கு அழைப்பு வந்தது.

"ப்பா! இதோ வந்திருவோம் பா. என்னாச்சு?" என விசாரித்தாள்.

"சரி.. சரித்தா.. உங்க அம்மா சாப்பிட்டு கொஞ்ச நேரம் கூட படுக்காம அவங்க ஆத்தாள பார்க்க ஓடிட்டா. காலைல சீக்கிரம் எழுந்தாளே அப்றம் தலை வலிக்குது கண்ணு வலிக்குதுனு சொல்லுவா அதான் சீக்கரம் இட்டார சொல்லி போன் பண்ணேன் த்தா" என்ற தந்தையின் வார்த்தைகளில் சகோதரிகள் இருவரும் ஒருவரைஒருவர் பார்த்து கொண்டனர்.

அதற்குள் அம்சா கையில் பொட்டலங்களுடன் வந்தார்.

"என்னமா இது?" அனுஷாவின் கேள்விக்கு,

"வேர்கடலை, உப்புகடலை ஒருஒரு பொட்டலம் வாங்குனேன் டி"

"ம்மா! அதான் நான் காலைல வரும்போது சாப்பிட எல்லாம் வாங்கிட்டு வந்தேன்ல" என சுஜிதா அன்னையை கடிய,

"அடியே! நீ வாங்கிட்டு வந்தது பிஸ்கெட்டும் இனிப்பும் டி. உங்க அப்பா சும்மாவே சுகர் ஏறி போய் கிடக்குறாரு அதை திங்கவா" என நொடித்தார்.
 
New member
Joined
Feb 17, 2025
Messages
4
"ம்மா! இதெல்லாம் அநியாயம் அந்த மனுஷர் வேணாம்னு சொன்னாகூட ஒன்னு சாப்டா ஒண்ணும் ஆகாதுனு கொடுக்குறதே நீதான" சுஜிதா அன்னையை முறைத்தாள்.

"அடியே! இப்பவும் அதான் சொல்றேன். அதை ஒன்னு தான் சாப்பிடுவாரு அப்றம் வெரக்கு வெரக்குனு அந்த டிவி பொட்டிய தான் பார்த்துட்டு உட்காருவாரு. அதான் இதை தந்தோம்னா நாலு வாய் கூட சாப்பிடுவாருல அதோட இது உங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் டி" என வேகமாய் நடையை எட்டி போட்டார்.

"ஏன் க்கா! எனக்கு ஒன்னு தோணுது.. அம்மா அப்பா, தாத்தா பாட்டி இவங்க எல்லாம் சண்டை போடுறதை மட்டும் தான் நம்ப தினம் பார்க்குறோமோ இதை பார்த்து தான் கல்யாணம்னாலே கடுப்புனு தான், சண்டை தான்னு நினைச்சோமோ?" என அனுஷா கேட்க,

"அதான்டி. இவங்க பெருசா போடுற சண்டையை தான் நம்ப இத்தனை நாள் பார்த்திருக்கோம். எத்தனை தடவை 'இவங்களாம் எப்படி டா டைவர்ஸ் கேட்டு கோர்ட் கேஸ்னு போகாம இருக்காங்க' னு நம்ப எவ்வளவு ஆச்சரியபடுவோம். இப்போ தான தெரியுது கண்ணு முன்னாடி கடுப்பா சண்டை போட்டாலும் காதலை கமுக்கமா மனசார இப்படி மறைமுகமா காட்டிக்கிறதால தான் பிரியாம இருக்காங்கனு"

என ஆச்சரியமாய் சொன்னாள் சுஜிதா.

இவளின் ஆச்சரியத்தை ஆனந்தமாய் மாற்றவே இவர்கள் வீட்டினுள் நுழையும் நேரம் தன் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்து இறங்கினான் நகுலன், சுஜிதாவின் கணவன்.

அவனை பார்த்து சந்தோஷம் பூத்தாலும் அதை மறைத்து அவன் காதலர் தினத்தை மறந்ததுமல்லாமல், தன் உணர்வுகளை புரிந்து கொள்ளாத வருத்தத்தில் ஒற்றை தலையசைப்புடன் வீட்டினுள் நுழைந்தாள் சுஜிதா.

வண்டி சத்தத்தில் திரும்பிய அம்சா, "வாங்க மாப்பிள்ளை வாங்க... ஏங்க மாப்பிள்ளை வந்திருக்காரு பாருங்க" என வரவேற்றவர் கணவருக்கும் குரல் கொடுத்தார்.

அனுஷா வரவேற்பாய் புன்னகைக்க பதிலுக்கு தலையசைத்து உள்ளே வந்தவனை பார்த்த நாகராஜ் தன் பங்குக்கு அவனை வரவேற்றவர், "சின்ன குட்டி! அத்தானுக்கு ஓடி போய் ஜூஸ் எதாவது வாங்கிட்டுவா த்தா" என மகளை பணித்தார்.

அம்சா, "ஏங்க! என்னத்துக்கு இப்போ ஜூஸு? மாப்பிள்ளை முகத்தை பார்த்தா சாப்பிட்ட மாதிரி தெரியலை. நீங்க போய் பிரியாணி வாங்கிட்டு வந்திருங்க" என்றார்.

"அய்யோ அத்தை அதெல்லாம் வேண்டாம். வீட்ல நீங்க சமைச்சதே போதும் எப்படியும் நீங்க எப்பவும் ராத்திரிக்கும் சேர்த்து தான சாப்பாடு செஞ்சிருப்பீங்க அதே போதும். மாமா அலைய வேணாம்" என தடுத்தான்.

"ஏன் அத்தான்! பிரியாணியே வாங்குவோமே. நான் வேணும்னா ஆர்டர் பண்றேன்" என அனுஷா முன் வர,

"இல்ல அனு! உங்க அக்காக்கு ஒரு மாசமா ஹாஸ்பிடல்ல அதிகமான வேலை. சரியான நேரத்துக்கு அங்க அவ சாப்பிடுறதும் இல்ல நாள் முழுக்க நிக்கிறா வேற, அவளுக்கு கடை சாப்பாடு உடம்புக்கு நல்லதில்லை. அதான் முடிஞ்சளவு நாங்க இப்போலாம் கடைல வாங்கி சாப்பிடாம இருக்கோம்டா. வீட்லயும் அவளுக்கு முடியாதப்போ அம்மா இல்லனா நான் சமைச்சி பழகிட்டோம்"

என்றவனின் வார்த்தைகளை உள்ளறையில் இருந்து கேட்டு கொண்டிருந்த சுஜிதாவிற்கு கணவனின் அக்கறையில் காதலர் தினம் எல்லாம் எங்கோ பறந்து காணாமல் போனது.

அதில் அவள் வேகமாய் அறை விட்டு வெளியில் வர அவளை பார்த்து முகம் பளிச்சிட்டது நகுலனுக்கு.

"நான் கைகால் அலம்பிட்டு வரேன் அத்தை" மனைவியை பார்த்தபடி அவள் நின்றிருந்த அறைக்குள் நுழைந்தவனின் பின் வால் பிடித்து சென்றாள் சுஜிதா.

"சுஜிமா! காலைல உன் முகமே சரியில்லையே என்னாச்சுடா? ஒரு வாரமா எனக்கு சரியான வேலைடா, அதுல நான் என்னவோ தப்பா செஞ்சு உன்னை கஷ்டபடுத்திட்டேனு நினைக்கிறேன். இன்னிக்கு காலையில நீ அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேனு சொல்லும் போது அனுப்ப எனக்கு மனசே வரல. உன் முகம் பார்த்தாலே என்னவோ சரியில்லைனு தோணுச்சு. ஆனாலும் உனக்கு ஓய்வே இல்லையே அதான் இங்க வந்தா கொஞ்சம் இலகுவா இருப்பேனு அனுப்பிவிட்டேன்"

அவள் முகத்தை முகத்தை பார்த்தபடி தயக்கமாய் பேசியவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் அவள் அமைதியாய் அவனை அணைத்து கொள்ள,

"என்னடா? நீ வருத்தபடுறனு புரிஞ்சப்றம் என் மனசு சரியில்ல அதான் அறை நாள்ல வேலைல இருந்து கிளம்பி நேரா இங்க வந்துட்டேன். சொல்லுமா நான் என்ன பண்ணேன்?"

பேசியபடி நகுலன் தன்னை அணைத்திருந்த மனைவியின் முகத்தை நிமிர்த்த முயல, 'முடியாது' என இடவலமாய் தலையசைத்தாள் சுஜிதா.

'என்னை, என் உணர்வுகளை இவரால புரிஞ்சிக்க முடியுதுன்றதை விட பெருசா வேறு என்ன எனக்கு வேணும். இதை விட சந்தோஷமான ஒரு பரிசை யாராலையும் கொடுத்திட முடியுமா? இல்ல இதை கொடுக்க தான் தனியா காதலர் தினம்னு ஒன்னு அவசியமா? இல்ல.. இல்லவே இல்ல எனக்கு இதுவே போதும்' என எண்ணியவள் சிலிர்த்தபடி அவனின் நெஞ்சில் முத்தமிட அதன் ஈர்ப்பில் அவன் நெஞ்சம் சிலிர்த்தது.

மாலையில், மதியம் இருந்த சுணக்கம் நீங்கி முகம் விகசிக்க கணவனின் கரம் கோர்த்து விடைபெற்று செல்லும் சகோதரியை கண்டும், தாய் வாங்கி தந்த கடலையை கொறித்தபடி தொலைகாட்சியில் அன்னைக்கு பிடித்த நாடகத்தை அமைதியாய் உடன் பார்த்து கொண்டிருந்த தந்தையை கண்டும் திருமணம் ஒன்றும் அத்தனை கடினமானது இல்லையோ? என்று சிந்திக்க தொடங்கினாள் அனுஷா.

"காதலென்பது" பரிசுகளாலும், வாழ்த்துகளாலும் கொண்டாடபட வேண்டிய ஒன்று தான். ஆனால் அந்த பரிசு, விலைகளை கொண்டல்ல உணர்வுகளை கொண்டிருக்க வேண்டும். பரிசுகளின் வெகுமதியை விட இருவருக்கும் இடையே உள்ள புரிதல்களே காதலென்றாகும்.

புரிதலாய் காதல் கொள்வோம்.. பிரியாமல் காதலித்து, வாழ்வை வாழ்வாங்கு வாழ்வோம்!


- நன்றி
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
628
ரொம்ப யதார்த்தமான உண்மை. கட்டிப்பிடிச்சிட்டே இருந்தால்தான் காதல் கிடையாது. அன்பு உணர்வுகளால் உணரப்பட வேண்டும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் யமுனா💐💐💐
 
New member
Joined
Feb 17, 2025
Messages
4
ரொம்ப யதார்த்தமான உண்மை. கட்டிப்பிடிச்சிட்டே இருந்தால்தான் காதல் கிடையாது. அன்பு உணர்வுகளால் உணரப்பட வேண்டும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் யமுனா💐💐💐
😍🙏நன்றி அக்கா
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top