• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

காதல் - நிறைவுப்பகுதி.

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
960
33

‘ஃப்ராடு’ என்ற மனைவியின் வார்த்தையில், “உனக்கு மட்டும் நான் ஃப்ராடா இருந்துக்குறேன். சரி வா இந்த நேரத்தை ரசிக்கலாம்” என்றவன் கத்தியை எடுத்துக் கொடுத்து அங்கிருந்த கேக்கை வெட்டச் சொல்ல, வெட்டச் சென்றவள் நிமிர்ந்து கணவன் கண்பார்த்து, “சேர்ந்தே வெட்டலாமா?” என்றாள் ஒருவித எதிர்பார்ப்பில்.

“என் ரதிப்பொண்ணு சொன்னா மறுவார்த்தை ஏது” என்று மூக்கோடு மூக்கை உரசி, அவளின் பின்னால் சென்று தன் இடக்கை கொண்டு அவளின் இடக்கையோடு அவள் இடைவளைத்துப் பற்றிக்கொள்ள, இடையோடு சேர்த்து மனமும் பற்றிக்கொண்டதோ! வலக்கை கொண்டு மனைவியுடன் சேர்த்து கத்தியைப் பிடிக்க, வயிற்றில் கைபட்டதுமே உறை நிலைக்குச் சென்றவள், கணவனின் நெருக்கத்தில் உடல் சிலிர்க்க, முன்பு இருந்த பயம் போய் சிறிது நடுக்கம் மட்டுமே அவளிடம்.

இருவரும் கேக் வெட்டிட, அதிலிருந்து ஒரு துண்டெடுத்து பின்னிருந்தே அவளுக்கு ஊட்டிவிட வர, கணவனுக்கு வாகாக தானும் முகத்தைக் காட்ட, “என் ரதிப்பொண்ணுக்கு எல்லா நாளும் சிறந்த நாளாக அமைய என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து மிகமிக மெல்லிய முத்தமொன்றை நெற்றியில் கொடுக்க, கணவனின் வாழ்த்திலும், அணைப்பிலும், அம்மென்முத்தத்திலும் கட்டுண்டு கண்மூடி சில நொடிகள் அதை உளப்பூர்வமாக உள்வாங்கினாள்.

தொடர்ந்து கண்களில் கணவனிட்ட முத்தத்தில் கண்திறக்க, “காதலின் முழு வார்த்தை என்ன தெரியுமா ரதிமா?” என்றதும் அவள் புரியாது புருவம் சுருக்கி விழிக்க, “காமுறுதல்! காமுறுதல்ன்ற வார்த்தையின் சுருக்கம்தான் காதலாம். கேட்க ஒருமாதிரி இருக்குதான?” என்றதும் அவளது முகம் சற்றே சுருங்க “ம்...” என்றாள்.

“கற்றாரைக் கற்றாரே காமுறுதல், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி. அதில் வரும் காமம் என்ற வார்த்தை கூட, இச்சையை மட்டும் குறிக்காது, நேசத்தை முன் நிறுத்தி, அன்பை அடிப்படையா வச்சி, பாசம், நேசத்தைப் பிணைக்குது. வெறும் ஈர்ப்பை மட்டும் காட்டுறது காதலில்லை.”

“ஓஹ்... இலக்கணமெல்லாம் சாதாரணமா வருது. கூகுள் உதவியா?”

“கூகுளைத் தவிர வேற வழியில்லையே. காதல், காமம் இரண்டும் சேர்ந்ததுதான் காமுறுதலாம். இதில் இருந்து என்ன தெரியுது?”

“உங்களுக்கு ஏற்றமாதிரி வார்த்தையைப் பிடிச்சிருக்கீங்கன்னு தெரியுது” என்றாள் செல்லமாக முறைத்தபடி.

“இல்ல ரதிப்பொண்ணு காதல், காமம் இரண்டும் வேறு இல்லைன்னு இலக்கணம் சொல்லுது. காதலிக்கிறேன்னு சொல்லக்கூடாதுன்னு நீ சொன்னதால, உன்னை நான் காமுறுதல் செய்கிறேன்னு சொல்ல ஆசைதான்” என்றதில் அவள் இன்னும் முறைக்க, “ஓய்! காமுறுதல்னு சொல்லலை சொல்லிட்டேன்ல.”

‘சொல்லலை... சொல்லலை’ என்று அதையே திரும்பத்திரும்ப சொல்பவனை என்ன செய்வதென்பதாய் கணவனைக் கண்டாள்.

அவளின் பார்வை புரிந்தவனோ, தன் விளையாட்டுத்தனத்தைக் கைவிட்டு, “அதைச் சொல்ல எனக்கு வெட்கமா இருக்கிறதால, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ரதிப்பொண்ணு. உன்னை அதிகமா நேசிக்குறேன். வாழ்வின் எல்லைவரை நாம் சேர்ந்தே பயணம் செய்ய ஆசைப்படுறேன். உன்னளவில் என் விருப்பங்களின் எண்ணிக்கையும், பிரியங்களின் எல்லையும் வானளவில் இருக்கு. காதல், காமம் இவ்விரண்டும் மனைவியான உன்னிடம் மட்டுமே! உன்னில் நிறைய மயங்குறேன். நிறைய நிறைய மையல் கொள்கிறேன். நம்மில் சண்டைச் சச்சரவுகள் வந்தாலும், விட்டுக்கொடுத்து கடைசிவரை குழந்தை குட்டியோட ஒற்றுமையா இருக்கணும். உனக்கு நான்! எனக்கு நீ! நமக்கு நம் குழந்தைங்க! சம்மதமா?” என்றான் மயக்கும் குரலில்.

அக்குரலில், கணவனின் வார்த்தைப் பிரயோகங்களில் கண்களில் சிறு போதையேற, முற்றிலும் மயங்கிதான் போனாளோ! ஏற்கனவே தன் மனமாற்றத்தை உணர்ந்தவள்தான் என்றாலும், இத்தனை நாட்கள் எதோவொரு தயக்கம்.

சில மாதங்கள் முன்பு கூட, சீண்டல் தீண்டலாகி, தீண்டல் படுக்கை வரை செல்ல அடுத்த சில நிமிடங்களில் கணவனிடம் எதிர்ப்பைக் காட்ட, புரிந்து விலகியவனிடம் கண்களால் மன்னிப்பு கேட்டவள், “பேசாம எனக்கு மெமரி லாஸ் பண்ணிருறீங்களா? எனக்கு உங்ககூட வாழணும் போல இருக்குங்க. அதுக்குப் பழைய நினைவுகள் வரக்கூடாது. என் நினைவுகளில் முழுக்க நீங்க... நீங்க மட்டும்தான் இருக்கணும். வேற எதுவும் வேண்டாம்” என்றாள் இயலாமையுடன் கூடிய ஏக்கத்தில்.

“மெமரி லாஸ் பண்ணினா, அந்தப் பழைய நினைவில் நானும் ஒருவனா ஆகிருவேன் ரதிமா. நீ என்னை யாரோவா பார்க்கிறதைப் பார்த்துட்டு நான் உ...”

சட்டென கணவன் வாய்மூடி மறுப்பாக தலையசைத்தவள், “எதுவும் சொல்லாதீங்களேன் ப்ளீஸ். ஏற்கனவே உங்களோட வாழ முடியாத குற்றவுணர்ச்சியில் இருக்கேன். இதில் உங்களை மறந்து... என்னாலயும் முடியாதுங்க.” என்றாள் குரல் தளுதளுக்க.

“அப்ப நீயும் கண்டதையும் யோசிக்காத.”

“ப்ச்... நீங்க மட்டும் மத்த ஆண்களிடம் இருந்து எப்படிதான் வித்தியாசப்படுறீங்களோ? உடல், உணர்ச்சின்றது இருபாலருக்கும் பொதுதான்னு பேசினாலும், அதில் ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகம். பெண்களின் உணர்வுக்கோ, உள்ளத்திற்கோ மதிப்பளிக்காத ஆண்கள் தான் இங்க நிறைய. உங்களால மட்டும் எப்படி என்கிட்ட இவ்வளவு கட்டுப்பாடோட இருக்க முடியுது?” என்று கேள்வியாக நிறுத்தினாள்.

“ஏன்னா? இந்த ரதிப்பொண்ணை ரொம்பவே பிடிக்கும்” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி, “ரதிப்பொண்ணுன்னா, உடல் மட்டும் இல்லையே. அதையும் தாண்டி அவளுடைய மனசு! அதில் எனக்காக மட்டுமே காத்திருக்கும் காதல்! இதுவும் ஒருவகையான சுயநலம்தான் ரதிமா. இதுவரை யாரும் குடியிருக்காத உன் உள்ளத்தில், நான் மட்டுமே இருக்கணும் என்ற பேராசையின் அங்கம் இந்த சுயநலம். அதோட சேர்ந்த சுயஒழுக்கமும் என்னை கட்டுப்பாட்டோட வச்சிருக்கு” என்றான்.

கணவனின் அக்குணத்திற்காகவே மாற எண்ணி, அதற்கான முயற்சியையும் எடுத்திருந்தாள்.

இப்பொழுது கணவன் கேட்ட சம்மதத்திற்கு, “ம்...” என்று வெட்கத்தில் தலையசைக்கவும், கண்ணில் முத்தமிட இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டாள் அனுரதி.

“நான் சொல்லும்போதுதான் கண்ணைத் திறக்கணும் ரதிமா” என்றவன் சட்டென இரு கைகளால் அவளைத் தூக்கித் தங்கள் அறைக்குச் சென்றதும், அணைத்தவாக்கில் கீழே நிற்க வைத்து, “இப்ப கண்ணைத் திற” என்றான் மெல்லிய குரலில்.

சில நொடிகளாக கணவனவன் நெருக்கத்திலான வாசம் தாண்டி, எதோவொரு நறுமணம் கமழ, கண்திறந்து பார்த்தவளுக்கு அந்த அறையே தேவலோகம்தான். வியப்பின் விளிம்பில் நிற்கிறாளென்றால் சரியாக இருக்குமோ! ஆம். மேகக் கூட்டங்கள் நடுவே, நட்சத்திரங்கள் ஜொலிக்க, அதை செயற்கையென்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. அந்தளவு வானத்தின் கோள்களும் அந்தரத்தில் சுற்றி வர, அனுரதியின் கண் இமைக்கா நொடிகள் அவை!

பிரமிப்பின் உச்சத்தில் இருந்தவளிடம், “என்னால் நீர், நிலம், நெருப்பு, காற்றை உணரவைக்க முடியும். விமானத்துல போயி வானத்துல உள்ள மேகத்தை மட்டும் காட்டுறதுல என்ன பயன். அதான் என் மனைவியின் ஆசையை அவளின் பிறந்தநாள் பரிசா கொடுக்கணும்னு நினைத்தேன்” என்றான் மென்மையாக.

கணவன் முகம் பார்த்து, “உண்மையிலேயே விண்ணுலகில் இருக்கிற உணர்வு வருது. இதுக்கெல்லாம் காரணமான என் கணவனை ரொம்பவே நேசிக்கிறேன். இதை எனக்காக செய்யலைனாலும், என் அழகனை உயிர்வரை காதலிக்குறேன்” என்று சற்று எக்கி நெற்றியில் முத்தமிட்டாள்.

மனைவியை ஆச்சர்யமாகப் பார்த்தவன், “நீ காதலிக்குறேன்னு சொல்லியிருக்க ரதிமா” என்று சந்தோசக் கூச்சலிட்டவன், இதயம் நின்று துடிக்க கண்களில் சிறுதுளி கண்ணீர்.

அதை தானும் உணர்ந்தாளோ! வெட்கம் விட்டு கணவனின் உதடுடன் லேசாக உதடு உரசி, அவனுள் ஆசைத்தீயைப் பற்றவைத்து, “ஆமாங்க. மேனேஜர் சார். நீங்க சொல்லவும், கேட்கவும் ஆசைப்பட்ட வார்த்தையை நான் சொல்லிட்டேன். காதலுக்கு அவனவன் ஒரு அர்த்தம் வச்சிருப்பான். அதெதுக்கு நமக்கு. நான் எனக்கான... இல்ல நமக்கான அர்த்தத்தைத்தான எடுத்துக்கணும். அதனால,”

“அதனால?” என்றான் ஆர்வம் மிகுதியில். அவளின் காதலைச் சொன்னதில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறானல்லவா!

“நான் இந்த என் அழகனைக் காதலிக்குறேன். உனக்கான என் காதல் நம் ஒவ்வொரு ஜென்மத்திலும் தொடரும். உனக்கு விருப்பம் இல்லைனாலும்” என்று அவன் கண்பார்த்து புருவம் உயர்த்தி கேலிபோல் சொல்ல,

“எனக்கு விருப்பம் இல்லைனாலுமா? என் விருப்பத்தை இப்ப இருந்தே காண்பிக்குறேன்” என்று முத்தத்தில் ஆரம்பித்த உறவு கட்டில்வரை செல்ல, பள்ளியறைப் பாடங்களை ஆரம்பிக்கையில் அறிவழகன் தடுமாற, கணவன் தனக்காகப் பார்ப்பது புரிந்து, அவன் கேசத்துள் ஒரு கை நுழைத்து கவனத்தைத் தன்புறம் திருப்பினாள்.

இருவர் கண்களும் நேருக்கு நேர் இணைந்த நொடி, “என்னைத் தொடலை. கட்டிக்கலை, ஒட்டிக்கலை, ஆனா, நமக்கொரு குழந்தை. தொட்டு, கட்டி, ஒட்டி ஒரு குழந்தை பெத்துக்கலாமா?” என்றாள் மயக்கும் குரலில்.

“எல்லாம் செய்யலாம். ஆனா, சில இடங்களைக் கடக்கணும் ரதிமா. அதான்...” என தவிப்புடன் நிறுத்த,

“ஏன்? என்னை மயக்கி, கிறக்கி அந்த இடத்தைக் கடந்துவிட வழிசெய்ய மாட்டீங்களா?” என்றாள் குரல் மாறாது.

அதில் தன் தவிப்புகள் அனைத்தையும் விட்டவன் இதழோ, “ம்... கடக்கலாமே!” என்று புன்னகைத்து பாவையவளை மயக்கும் வேலையைத் தொடர, மயக்கினார்களோ! மயங்கினார்களோ! அவளின் தயக்கம், நடுக்கம், பயம் தாண்டி, மாயவனின் வசம் சென்று தங்களின் தாம்பத்திய பந்தத்தை இனிதே ஆரம்பித்தார்கள்.

கணவன் கையில் தலைவைத்துப் படுத்திருந்தவள், “ஓய் அழகா! இன்னும் பத்து மாசத்துல வந்திருமா?” என்றவள் குரலில் அப்படியொரு குழைவு.

“என்ன வந்திருமா?” என்று கன்னத்தில் தன்னிதழை ஒற்றியெடுத்தபடி மென்குரலில் கேட்க,

“ம்... தள்ளிப்போங்க. இந்த மயக்குற வேலையெல்லாம் வேண்டாம்” என்று சிணுங்கினாள்.

“என் ரதிப்பொண்ணை இனிமேல்தான் மயக்கணுமா?” என்று முகமெங்கும் முத்தமிட, அவனைத் தடுத்து, “நான் குழந்தையைச் சொன்னேன்” என்றாள்.

“டெஸ்ட் ட்யூப் பேபியே ஒரே டைம்ல சக்சஸாகிருச்சி. இது நேரடி முயற்சி வேறயா. சோ...” என்றவன் தன் முயற்சியைத் தொடர, தொடர்ந்தது அவர்களின் இல்லறம்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
960
கடவுள் இல்லையென்றேன்

தாயைக் காணும் வரை

கனவு இல்லையென்றேன்

ஆசை தோன்றும் வரை

காதல் பொய்யென்று சொன்னேன்

உன்னைக் காணும் வரை

பாடல் வரிகள் அனுரதியின் வாயில் முணுமுணுப்பாக வர, “ஆமாமா. மேடம் இப்பதான் உண்மையைச் சொல்றாங்க” என்று தோழியைக் கேலி செய்த மாலினி, “நீ போயி உட்காரு அனுமா. நான் காஃபி போடுறேன்” என்று அவளை நகர்த்தி வேலையைச் செய்ய,


“எதுக்கு மானி? இந்தச் சின்ன வேலையை நான் பார்த்துக்கமாட்டேனா?”

“அதெல்லாம் செய்வ. நான் இருக்கும்போது செய்யாத. நான் பார்த்துக்குறேன்” என்றாள் மாலினி.

“நீதான் நட்பே, நட்பின் இலக்கணம்? ஐ .... யூ” என்றாள் இடையில் இடைவெளி விட்டு.

தோழியிடம் திரும்பி, “லவ் சொல்லிரக்கூடாது. ஆனா, சொல்லணும். எருமை கேப்பை நானே ஃபில் பண்ணிக்குறேன். உன் புருசருக்காவது சொல்லு” என்று முறைத்தாள்.

“ஹாங்! அதெல்லாம் நாங்க வித்தியாச வித்தியாசமா சொல்லுவோம்” என்று கண்ணடித்துச் சிரித்தாள்.

“ஏய்! டபுள் மீனிங், ட்ரிபிள் மீனிங் இப்படி எதுவுமில்லையே” என்று பதற,

“அதுக்கும் மேல மானிமா. அதெல்லாம் வெளில சொல்லிர முடியாது” என்று மாலினியின் இதயத்துடிப்பை எகிறவைத்தாள்.

“தயவு செய்து சொல்லிராத ஆத்தா. பச்சப்புள்ள பயந்துரப் போறேன்” என்றாள் நெஞ்சில் கைவைத்து.

“இரண்டு பேரும் அரட்டையடிச்சது போதும். நீங்க காஃபி போடுற நேரத்துல நூறு பேருக்கு சமைச்சிரலாம். அரட்டை கேசுகளா” என்று திட்டிய சாரதா, இருவரையும் வெளியே அனுப்பி அவரே வேலையைத் தொடர்ந்தார்.

“ரதீ” என்ற அறிவழகன் குரலில் வேகமாக வந்தவள் கீழே கால் இடறி விழப்போக, அவளைவிட வேகமாக வந்து தாங்கிப் பிடித்தவன், “ஜாக்கிரதையா இருக்குறதில்லையா?” என்று கடிய,

“நீங்க கோவமா இருக்கீங்களா. அதான் கொஞ்சம் பதற்றம்” என்றாள்.

“நான் கோவமா இருக்கேன்னு யார் சொன்னா?”

“யார் சொல்லணும்? அதான் ரதீன்னு இழுத்தீங்களே...” என்று சடைக்க,

“கத்தினா கோவம்னு அர்த்தமா?” என்றான் புரியாது.

“ஆமா. கோவம் வந்தால்தான் கத்தவே தோணும்.”

“ஓ... அப்படியா? அப்படிப் பார்த்தாலும் நான் கத்தலையேடா? கூப்பிடத்தான செய்தேன்.”

“அந்த ரதிதான் காரணம். எதாவது எரிச்சல், கோவம்னாதான் ரதி சொல்லுவீங்க.”

“அப்பறம்?” என்றவன் மனைவியின் பதிலில் சுவாரசியம் எழ, தன்னைப்பறிறி அறிய அவளிடமே கேட்டான்.

“ரதின்னு கூப்பிட்டா... கோவம்! ரதிமான்னா... அக்கறை, அரவணைப்பு! ரதிப்பொண்ணுன்னா... நமக்கான நெருக்கமான நேரங்கள். லவ், ரொமான்ஸ்” என்று கணவனின் சட்டை பட்டனைத் திருகினாள்.

“கா...கா...கா... சே... இந்த காக்கா தொல்லை தாங்கலைடா” என்று மாலினி சொல்ல,

அங்கு நின்றிருந்த அரவிந்த் சிரித்து, “காக்கா இருக்கிற இடத்தில் கழுகுக்கு என்ன வேலை? வெளில வாங்க” என்றான் சிரிப்பை அடக்கி.

“அதோட மூக்கு வேர்த்திருக்கும்டா மாப்பிள்ளை. கூட்டிட்டுப் போ” என்ற அறிவழகன், “அது வேற டிஸ்டர்பென்ஸ்டா. நீ சொல்லு” என்று மனைவியிடம் திரும்பினான்.

அதில் கடுப்பான மாலினி, “டேய் அரவிந்தா! ஷண்மதிக்கா உனக்கு குரங்கு கூட்டத்துல பொண்ணு பார்க்கிறதா சொன்னாங்களாமே. நிஜமா? அதுதான்டா உனக்கு” என்று அறிவழகனைத் திட்ட முடியாது அரவிந்தைத் திட்டினாள்.

“அட விடுங்கக்கா. அது உங்களை மாதிரி வாய் பேசாதுல்ல. அப்ப எனக்கு சம்மதம்தான்” என்று சிரிக்காது நக்கலடித்தவனை, அடிக்கத் துரத்தினாள் மாலினி.

“மானி பேபி பார்த்து” என்ற அனுரதியையும், நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கணவனையும் முறைத்துச் சென்றாள் மாலினி.

“அறிவா, அனு வாங்க” என்று அபிராமி அழைக்க, உள்ளே சென்று ஒரு மாதமேயான தங்கள் மகனைத் தூக்கி வந்தார்கள் அறிவழகன், அனுரதி தம்பதி.

சரியாக மதிமலரின் முதல் பிறந்தநாள் முடிந்த மறுநாளில் பிறந்தான் அவர்கள் மகன். மருத்துவர்.வர்ஷாவிடம் சென்ற அறிவழகன், “சாரி டாக்டர். மதி பிறந்து முதல் வருடத்துல வர்றதுக்குப் பதிலா, இரண்டாவது வருடம் வந்துட்டோம். உங்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ஒரு வருடமாகிருச்சி டாக்டர்” என்ற அறிவழகனைக் கிண்டலாகப் பார்த்தவர்,” மத்தவங்ககிட்ட எப்படியோ, என்கிட்ட வாக்குக் கொடுத்துட்டு தடுமாறுறதே உங்க வேலை அறிவழகன் சார். என்னவோ உங்களால அனு சந்தோசமா இருக்கா. அதனால மன்னிப்பை ஏத்துக்கறேன்” என்று அவன் கால்வாரியிருந்தார் வர்ஷா.

இதோ நெருங்கிய சொந்த பந்தங்கள், நட்புகள் சூழ, அறிவழகன், அனு தம்பதியினர் தங்கள் மகனுக்கு, ”வேந்தன்” என பெயரிட்டார்கள்.

‘அறிவழகன்’ என்ற பெயர் மகனில் சேரக்கூடாதென்பது அனுரதியின் கட்டளை. ‘அழகன்!’ அவளுக்கு மட்டுமேயானவனாக இருக்க வேண்டுமென்ற சுயநலம்தான் அவளுள்ளும்.

இதோ நிறைவான குடும்பம். அதற்கு அழகு சேர்க்க குழந்தை. காதலே இல்லையென்றவள், கணவன் மேல்கொண்ட காதலால், காதல் கொண்டு மகிழ்வுடன் வாழ்கிறாள்.



நட்புடன்


சொர்ணா சந்தனகுமார்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top